Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீதாவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீதாவனம்

– ஜி .விஜயபத்மா

சூர்ய அஸ்தமனம் துவங்கி விட்டது… காட்டுக்குள் …இருளுடன் , குளிரும் போட்டி போட்டுக்கொண்டு ….பரவத் துவங்கியிருந்தது . துறவிகளுக்கு வரக்கூடாத கவலை வால்மீகியின் முகத்தில் தென்பட்டது .. அவர் தன்னை தானே சமாதனப்படுத்திகொண்டு , வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார் . அவர் தன் தலையை இருபுறமும் திருப்பி பார்த்தபடி ஆட்டி ,ஆட்டிக்கொண்டு நடக்கும் வேகமும் ,நாலாப்புறமும் துலாவும் கண்களையும் பார்த்தால் காட்டிற்குள் அவர் யாரையோ தேடுகிறார் என்பது புலப்படுகிறது .. கண்களுக்கு எட்டிய வரையில் தூரத்தில் வெயில் விலகிக்கொள்ள ,இருளை விருப்பத்துடன் போர்த்திக் கொள்ளும் பயிர்களின் மங்கலான , கருமஞ்சள் நிறம் தவிர வேறு எதுவும் தெரியவில்லை ..இன்று ஏனோ காட்டின் மொத்த மரங்களும் சத்தியக் கட்டுபாட்டுக்கு கட்டு பட்டது போல அசைவில்லாமல் நின்றுக் கொண்டிருந்தன . அன்றைய பொழுதை அருமையாக கழித்த திருப்தியுடன் ஆனந்தமாய் பறவைகள் கூடு திரும்பும் சப்தங்களும் , இரவை சந்திக்கும் உற்சாகத்துடன் ,கீச் கீச் என்று பாடும் இரவுப்பூச்சிகளின் ரீங்காரம் போன்ற சப்தங்களும் கலந்து கலவையானதொரு காட்டிசையால் அக்கானகம் நிறைந்திருந்தது . உற்சாக மனநிலையில் இருப்பவர்களுக்கு உற்சாகத்தையும் ,கலவர மனநிலையில் இருப்பவர்களுக்கு கலவரத்தையும் உண்டு பண்ணும் மந்திர இசை அது. தன்னைப்பற்றிய உணர்வு இருக்கும் வரை வால்மீகிக்கு அக்காடு காற்றைபோல இலேசாக இருந்தது ..இன்று கானகத்தின் சப்தம் அவரின் வயிற்றுக்குள் கலவர அமிலத்தை சுரக்கச் செய்தது . அவர் முகம் வெளிப்படுத்தும் கலவரத்தை பார்க்கும்போது ,நேசத்துக்குரிய யாரோ ஒருவரைக்குறித்த தேடுதல் காணப்பட்டது ..தான் துறவி என்ற நிலையில் இருந்து வழுவி , தாயின் பரிதவிப்பில் வால்மீகியின் மனநிலை இருந்தது

காட்டிற்குள் பயமில்லாது ..ஓடித்திரிந்து வழிப்பறி செய்த வால்மீகியா இது ? இன்று புதிதாய் காட்டிற்குள் வந்தது போல் தயங்கி, தளர்ந்து சோர்ந்து நிற்பது ? துறவியின் மனதுக்குள் கூட இன்னுமொரு உயிர் நிறைந்து விட்டால் ….கடமை பாரம் துவம்சம் செய்து விடுகிறது . இன்னும் எங்கு போய் தேடுவது ?என்ற கேள்வியுடன் அருகில் உள்ள குன்றின் மேல் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூச்சை ஆழமாக உள் இழுத்து விட்டு, கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக்கொண்டார் .அவரை நினைத்து அவருக்கே வெட்கமாக இருந்தது ..ஆத்திரமும், அவசரமும் என்றும் பயன் தராது என்று தெரிந்தும், தன் சிந்தனை ஏன் தாறுமாறாக கட்டவிழ்ந்து ஓடுகிறது ? என்று யோசித்த வாறே அருகில், ஓடிகொண்டிருக்கும் காட்டாற்றை உற்றுப்பார்த்தார் ” உனக்கு தாகம் ஏற்பட்டால் , நீ தாராளமாக வந்து என்னிடம் தாகம் தனித்து கொள்ளலாம் .. ஆனால் ஒருபோதும் நான் உன்னிடம் யாசிப்பேன் என்று எண்ணாதே …என்று சொல்லி ,நீரில் மிதந்த வெள்ளி மின்னல்கள் கண் சிமிட்டி சிரிக்க ,தன்னை சுற்றி எது நடந்தாலும் அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பது போல், தன் ஓட்டத்திலேயே கவனமாக ஓடிகொண்டிருந்தது காட்டாறு. மெல்ல இறங்கி தன் இருகைகளிலும் நீரை அள்ளி,ஆர்வத்துடன் முகத்தில் அறைந்து கொண்டார் ..அந்தக்குளிர்ச்சி அவரை நிதானப்படுத்தியது . மெல்ல நிமிர ஆற்றின் மறுகரையில் ,சலனமில்லாமல் கண் மூடி அமர்ந்திருந்த பெண் உருவம் ஒன்று தென்பட்டது …

அந்தி மயங்கும் இருளில் வெண்ணிற புடவையில் ,விண் ஏறக் காத்திருக்கும் வெண் நிலவு போல் அவள் ஒளி வீசினாள் .முகத்தில் வழிந்த நீரையும் தாண்டி அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது . தேடிக்கண்டடைந்த பரவசத்தில் நெஞ்சு நிறைந்தது . மெல்ல அவள் அருகில் சென்று , நீரில் பாலைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் லாவகத்துடன் அவள் அமைதியை கவனமாக கலைத்தார் ,

” அரசி ,தங்களை நீண்ட நேரமாக காணவில்லை என்றதும் தவித்து போய் விட்டேன் இருள் சூழ்கிறது . வாருங்கள் குடிசைக்கு திரும்பலாம் ” வால்மீகியின் குரல் கேட்டதும், பூ மலர்வது போன்ற மலர்ச்சியுடன் மெல்ல , அந்த அரசக்குல தேவதை கண் திறந்து

,” ஏன் பயம் வால்மீகி ?இந்த பரந்த காடு , ராமனால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுதந்திர பூமி… இந்த அமைதி வெளியில் என் குழந்தையுடன் நான் பல கதைகள் பேசிக்கொண்டிருக்கிறேன் .”

“அரசி , நாம் என்னதான் இயற்கையுடன் இணைந்து வாழ முயற்சித்தாலும் , அது தன் குணத்தை நமக்காக மாற்றிக்கொள்ளாது , காட்டின் இரவுக்குளிர் வயிற்றில் உள்ள சிசுவுக்கு ஆகாது . வாருங்கள் போகலாம் ” வால்மீகியின் பேச்சை கேட்டு சட்டென்று சீதையின் முகம் கோபத்தால் சிவந்தது . தான் எதுவும் தவறாக பேசவில்லையே சீதைக்கு ஏன் இந்த திடீர் கோபம் எனப்புரியாமல் திகைத்தார் வால்மீகி . சீதை கோபம் சிறிதும் குறையாமல் ,

“வால்மீகி , தயவு செய்து அரசி என்றழைக்காதீர்கள் ….ஊருக்குள் மக்களில் யாரோ ஒருவன் என்னை சந்தேகப்பட்டு பேசினான் என்பதற்காக, கர்ப்பிணி என்றும் பாராமல் என்று என்னை என் மன்னவன் ராமன் நாட்டை விட்டு வெளியேற்றினானோ அன்றே நான் அரசி என்பதை துறந்து விட்டேன் … கொண்டவன் கைவிட்டால், பெற்றவனை தேடிப்போகும் ,கோழையல்ல நான் … இங்கு வாழும் மிருகங்களுடன் கூட எனக்கு ஒரு இடம் இல்லாமலா போகும் என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்தேன்… உங்களை சந்தித்தேன் ….உங்களுக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை பார்த்தீர்களா ? உங்கள் மனைவி, குழந்தைகளுக்காக வழிப்பறி கொள்ளையனாக இருந்தீர்கள் . பலனைப்பெற்றுக்கொண்டு பாவத்தை உங்களிடமே சுமத்தி உங்களை அவர்கள் கைவிட்டு விட்டனர் .. யாரும் இல்லை என நீங்கள் துறவியானீர்கள் …ஆனால் எனக்கு சொந்தமனிதர்கள் இல்லாவிடினும் , வெறுங்கையுடன் என்னை என் ராமன் அனுப்பவில்லை ..மனம் நிறைய அன்புடன் ஒரு சிசுவை பெரும் சொத்தாக கொடுத்து அனுப்பியுள்ளார் . தயவு செய்து அரசி என்றழைத்து என்னை பிரித்து பேசாதீர்கள் . எனக்கு அன்பான ஒரு தோழன் இங்கு கிடைத்திருக்கிறான் என்ற என் மகிழ்ச்சியை கொன்று விடாதீர்கள் .”

கண்களை அகலவிரித்து தெளிவாக பேசும் சீதையை பார்த்து , கண் கலங்கியது வால்மீகிக்கு . எப்படி வாழ வேண்டியவர் , பொன் தரைவிரிப்பில் கால் நோகுமே என்று பூக்கள் தூவி, ஜனகனின் அரண்மனையில் நடந்த மகாராணி … இப்படி காட்டில் முள்ளும், கல்லும் நிறைந்த கரடு முரடான தரையில் நடக்க விதித்து இருக்கிறதே …சீதையே… சோகம் உனக்காகவே படைக்கப்பட்டதா ? ராமனை நீ திருமணம் செய்து என்ன சுகம் கண்டாய் ? தகப்பனின் வாக்கை நிறைவேற்ற என்று 14 வருட வனவாசம், அதில் பாதி நாள் இலங்கேசுவரனின் அசோகவன வாசம் , இப்பொழுது , சந்தேக அரக்கனின் பிடியில் சிக்கி , மறுபடியும் வன வாசம் … என்ன சோதனை இது இறைவா ..? இந்த மெல்லிய தேவதைக்கு இத்தனை .. கொடுமைகள் …. என்று மனம் கலங்கி சீதைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றார் .. வால்மீகியின் மன நிலை புரிந்ததுபோல் , சிரித்தபடி அருகில் இருந்த கல்லில் கை ஊன்றி, மெல்ல எழுந்தாள் சீதை , “வால்மீகி கவலை கொள்ளாதீர்கள் .. எனக்குள் விரக்தி இல்லை ..கணவன், உறவுகள் நிறைந்த வாழ்க்கைக்குள், எதிர்பார்ப்புகளுடன் இருப்பவளுக்குதான், ஏமாற்றத்தில் சோகம், கோபம் எல்லாம் வரும். நான் அவற்றை எல்லாம் கடந்து வந்து விட்டேன் ..அதற்காக நான் ராமனுடன் வாழ்ந்த வாழ்வை குறை சொல்ல விரும்பவில்லை .. அந்த நொடியில் நான் காதலால் நிறைக்கப் பட்டிருந்தேன் .. அசோகவனத்தில் இருக்கும்போதுதான் எனக்கு புரிந்தது .நானும் ராமரும் எவ்வளவு ஒருவரையொருவர் நேசித்து இருக்கிறோம் என்று..அன்று அந்த காதல் உணர்வும் உண்மை.. இன்று , அந்த தெய்வீகக் காதல் தீர்ந்து போய் ,மனம் நீர்த்து விட்டதும் உண்மை .எல்லாவற்றையும் கடந்து வந்து, வேறு ஒரு தளத்தில்இன்று சீதையாக மட்டுமே நிற்கிறேன் … ,இப்பொழுது எனக்கு உறவுகளின் அழுத்தத்தால் மூச்சு முட்டவில்லை. பொன் பொருளும் , அரண்மனையும் தராத ஆனந்தம் இந்த ஒற்றை மரக்கிளையில் அமர்ந்து தன் குஞ்சுகளுக்கு சோறுட்டும் குருவியின் கொஞ்சல் சப்தம் தருகிறது .,இதுவரை தரையை மட்டுமே பார்த்து பழகிய என் கண்கள் .தடையில்லா மனநிலையுடன் நிமிர்ந்து உங்கள் கண்களை பார்த்து பேசும் தெளிவு கிடைத்திருக்கிறது வால்மீகி ஆதலால் நீங்கள் கலங்க தேவையில்லை …:” என்ற சீதையின் தீர்க்கமான தெளிவான பேச்சு கண்டு வியந்து போனார் வால்மீகி .. அந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் மன தைரியம் கம்பீரமாக அவர் கண்ணில் நிறைந்தது .சோதனைகளில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வீரம் பிறக்கிறது என்பது உண்மைதான் என்பதை கண் எதிரே கண்டார் வால்மீகி

காடு முழு பூரிப்புடன் செழித்து நிற்கிறது. எங்கும் பறவைகளின் கொண்டாட்ட குரல்களும், தென்றலின் குளிர்ச்சியுமாக …வசந்த காலம் துவங்கி விட்டது.. என்றும்போல் பூஜைக்கு பொருட்களை தயார் செய்து கொண்டுருக்கும் வால்மீகியின் மனதுக்குள் இனம்புரியாத பரவசம் ..அந்த உணர்வை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை அது இன்பமாகவும் இல்லாமல் துன்பமாகவும் இல்லாமல் கலவையான ஒரு உணர்வாக இருந்தது . அவர் மனதுக்குள் “இறைவா இன்று ஏதோ நடக்க போகிறது என்பது இந்த ஏழை துறவியின் மனதுக்கு புரிகிறது .. அது நல்லதாகவே நடக்கட்டும் ” என்று வேண்டிக்கொண்டே வாசலில் விளையாடிக்கொண்டிருக்கும் எட்டு மாத குழந்தை லவனை பார்த்து கொண்டார் . பூஜைக்கு பூக்கள் சேகரிக்க காட்டுக்குள் சென்றிருக்கும் சீதா இன்னும் வரவில்லை …அவள் வரும்வரை குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெரும் பொறுப்பு வால்மீகிக்கு இருந்தது ..லவனைபார்க்க ,பார்க்க வால்மீகிக்கு ராமனின் மேல் மிகுந்த கோபம் உண்டாகியது .. என்ன மன்னன் இவன் ? கர்ப்பிணிப்பெண்ணை வெளியேற்றினோமே ..அவள் என்ன ஆனாள் என்று இன்று வரை தேடவில்லை …. இந்த அழகிய இளவரசனை பார்க்க அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை ….மனதுக்குள் புலம்பிக்கொண்டே இறைவனை கண்மூடி,உணர்ச்சி வேகத்தில், உலகை மறந்து தியானிக்க துவங்கினார் .

“இறைவா , இந்த குழந்தை இந்த காட்டிலேயே இருந்து விடாமல் , இந்த நாட்டை ஆளும் மன்னனாக வேண்டும் …காலம் எல்லா துன்பங்களையும் மாற்ற வல்லது. சீதைக்கு நல்வழி காட்டு இறைவா …. என்று வேண்டிக்கொண்து இருக்கும்போது துக்க மிகுதியில் அவரையும் அறியாமல் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது . மனம் உருகி தியானித்து கொண்டிருந்த வால்மீகி வாசலில் விளையாடிக்கொண்டிருந்த லவன் மண்டியிட்டு கொண்டே காட்டுக்குள் போனதைக் கூட அறியாமல் ,தியானத்தின் ஆழ்நிலைக்கு போனார் …

பூக்கள் பறித்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த சீதைக்கு , அருகில் கேட்கும் குழந்தையின் சப்தம் அதிர்ச்சியை கொடுத்தது .. அது லவனின் குரல் போன்றே இருந்ததால் ,தாய்மை உணர்வு பொங்க , அங்கும் இங்கும் சுற்றி தேடினாள் . தூரத்தில் ,, காட்டின் ஒத்தயடிப்பாதையில் , தாயைக்கண்ட மகிழ்வுடன் சிரித்துக்கொண்டே லவன் வேக வேகமாக மண்டியிட்டுக்கொண்டே வந்தான் .சீதா குழந்தையை வாரியணைத்து தூக்கி கொண்டு ,வழியெங்கும் பூக்களையும் மரங்களையும், பறவைகளையும் காட்டி குழந்தைக்கு விளையாட்டு காட்ட அது கை கொட்டி சிரித்தது .மழை மேகம் சூழ்ந்து பெருங்காற்று வீசியது . சீதா குழந்தையை மார்புடன் அணைத்து கொண்டு குடிலை நோக்கி வேகமாக நடந்தாள் .

திடீரென்று வீசிய பெருங்காற்றில் வால்மீகியின் தியானம் கலைந்தது ..பற்றற்று இருந்த துறவியின் மனநிலை மாறி , இப்பொழுது சீதாவின் நலம் மட்டுமே நிறைந்திருந்தது ..அப்பெண் வேண்டுமானால் சூழ்நிலையை முழு மனதுடன் ஏற்று கொண்டு வாழலாம் ..ஆனால் , வால்மீகிக்கு அவளைப் பார்க்கும் ஒவ்வொரு நாளும் கொடுமையாக இருந்தது …ஏதேதோ எண்ணங்களில் அலைக்கழிக்கப்பட்டு , வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை மறந்தோமே எனப்பதைத்து போய் , ஓடி வந்து வெளியில் பார்த்தார் அங்கு குழந்தையை காணவில்லை ..வீட்டை சுற்றிலும் தேடிப்பார்த்தார் ..அங்கும் இங்கும் மண் தரையில் குழந்தை மண்டிபோட்ட தடயங்கள் இருந்ததன … காட்டுப்பாதையின் வழியே தடயம் சிறிது தூரம் மட்டுமே இருந்தது … வால்மீகி மிகுந்த கலவரதுக்குள்ளானார் ..அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ?..குழந்தை காணவில்லை என்று சொன்னால் சீதா என்ன ஆவாள் என்பதை அவரால் சிந்தித்து கூட பார்க்க இயலவில்லை ..ஐயோ ..சீதைக்கு என்ன பதில் சொல்வேன் … நாளை ராமர் வந்து என் இளவரசன் எங்கே என்று கேட்டால் என்ன சொல்ல இயலும் ? துறவியாக இருந்து கொண்டு பொறுப்பில்லாமல் தான் இருந்ததை கண்டு வெட்கி தலை குனிந்தார் …எல்லாவற்றையும் இழந்து இந்த குழந்தை மட்டுமே உலகம் என்று வாழும் சீதையை நான் எப்படி எதிர்கொள்வேன் ? பதட்டமும் , அச்சமும் ஆட்கொள்ள …நிலைகுலைந்து போனார் ..

“இறைவா …இப்படியொரு அசம்பாவிதம் நடக்கும் என்பதைத்தான் காலையில் குறிப்பில் உணர்த்தினாயா ? வால்மீகிக்கு இறைவன் மேல் கோபம் வந்தது …இப்படியொரு தாங்க இயலா சோகம் என்னால் சீதைக்கு வரவிடமாட்டேன் என்று, கோபத்துடன் என்ன செய்கிறோம் என்ற சிந்தனையை தொலைத்தவராய்,அவசரம் அவசரமாக , பூஜைப்போருட்களில் இருந்த அருகம்புல் ஒன்றை எடுத்து , என் தவ வலிமை அத்தனையும் சமர்பிக்கிறேன் …இது லவன் போன்றதொரு குழந்தை ஆகட்டும் என்று கையேந்தி கண்கலங்கி , புல்லுக்கு தன் மொத்த தவவலிமையையும் தாரை வார்த்தார் …கண்மூடி தியானித்தார் ….

தியானத்தின் வேகத்தில் அவர் உடல் ஒரு முறை குலுங்கி அடங்கியது…மெல்லிய புல்லினை ஏந்தியிருந்த கைகள் சிறிய பளுவை உணர்ந்தது.. காட்டின் குளிரினை மீறி , இளஞ்சூட்டில் ஒரு பஞ்சு பொதி அவர் கைகளில் வந்தமர்ந்தது போல் உணர்ந்தார் …ஆவலுடன் கண் திறந்து பார்க்க வால்மீகியின் கைகளில் லவன் “. மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று மீண்டார் .. குழந்தையை கைகளில் ஏந்தி ஆனந்த கூத்தாடினார் .. தன நெஞ்சோடு குழந்தையை அணைத்து கொண்டு , கண் கலங்கி உச்சி முகர்ந்து திரும்புகையில் , அவரையே பார்த்துக்கொண்டு ,ஒரு கையில் பூக்கூடையும், இடுப்பில் லவனயும் சுமந்தபடி , என்னவென்று வரையறுக்க இயலாத உணர்வின் பிடியில் சீதா நின்றிருந்தாள் .வால்மீகி, தன் கையில் உள்ள குழந்தையையும் சீதாவின் இடுப்பில் உள்ள குழந்தையையும் மாறி , மாறி பார்த்தார். இரண்டு குழந்தைகளும் , இரட்டை பிறவிகள் போல் ஒத்து இருந்தன … அவர்களுக்கிடையில் இருந்த அந்த சில நிமிட மவுனம் … மலையையும் விட கனமானதாக இருந்தது … சட்டென்று வால்மீகி குழந்தையை சீதாவின் காலடியில் வைத்து , அவள் காலில் விழுந்து , “என்னை மன்னித்து விடு ,தாயே….குழந்தையை காணாமல் நீ தவித்து போவாயே …” கதறி அழும் வால்மீகியை அவர் பேசி முடிக்கும் முன்னரே , தடுத்து , ” என்ன வால்மீகி .. நீங்கள் என் மீது வைத்திருக்கும் அளவுக்கதிகமான அன்பும் , அக்கறையுமே இக்காரியத்தை செய்ய தூண்டியுள்ளது .. அந்த நேசத்தை நான் மதிக்கிறேன் … என் தாய் பூமா தேவி, நான் கொடுமையை அனுபவிக்க கூடாது என்று எனக்கு வால்மீகி என்ற என்ற அதி அற்புத தோழனை கொடுத்திருக்கிறாள் ..உங்கள் அன்புக்கு கைம்மாறாக செய்வதற்கு, என்னிடம் எதுவும் இல்லையே என்ற வேதனையில் இருந்தேன் . இதோ இந்த பெறுதற்கரிய , பரிசினை கொடுத்திருக்கிறீர்கள் இனி இக்குழந்தையை …குசன் என்று பெயரிட்டு என் மகனாகவே ஏற்றுக்கொள்வேன் ..இன்று முதல் எனக்கு இரு குழந்தைகள் …லவன் ,குசன் …நன்றி வால்மீகி . என்று அதிக வாஞ்சையுடன் லவனுடன் ,குசனையும் அணைத்து கொண்டாள் சீதா .வால்மீகிக்கு சீதாவின் பெருந்தன்மையும் , நட்புணர்வையும் கண்டு வியப்பு மேலிட்டது . ஏற்கெனவே கலங்கமுற்றவள் என்ற பெயர் பெற்ற சீதா , வழிப்பறி கொள்ளையனான தன்னுடன் வசிப்பதே குற்றம் ..இதில் தன்னால் உருவாக்கப்பட்ட குழந்தையை தன் குழந்தையாக எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஏற்றுகொள்வது என்பது .. அசாதாரணமான மனவலிமை கொண்டவர்களால் மட்டுமே முடியும் ..வார்த்தைகளற்று சிலையானார் வால்மீகி .

“தாயே ராமன் என்னும் அதி உன்னதமான அரசரின் குழந்தையுடன் , அதற்கு சற்றும் பொருத்தமில்லாத இந்த ஏழை கொள்ளையனின்

படைப்பினையும் ஒரு சேர பாவிப்பேன் எனும் உங்கள் பெருந்தன்மை புரிகிறது .. அறியாமல் செய்த தவற்றினை நானே களைகிறேன் .. குசனை நான் திரும்ப பெற்றுக்கொள்கிறேன் ” என்று குரல் உடைந்து குற்ற உணர்ச்சியில் பதறினார் வால்மீகி . இரண்டு குழந்தைகளையும் தன் மடியில் வைத்து கொண்டு , கொஞ்சியபடி இருந்த சீதா , வால்மீகியை நோக்கி திரும்பி தீர்க்கமாக, பதட்டமில்லாமல் பேசினாள் ,’ வால்மீகி ,என்னைப்பொருத்தவரை ”அத்து மீறி யோனிக்குள் பிரவேசிப்பது ஆணுக்கு அவமானம் என்று தன் விரல் நுனிக்கூட என் மீது படாமல் காத்திருந்த இலங்கேசுவரனும், மனைவி மக்களுக்காக வழிப்பறி செய்து கொள்ளைக்காரனாக வாழ்ந்து , அனைவரையும் வாழவைத்து விட்டு துறவியாகி …இன்று வரை எனக்கு தாயாக, தோழனாக இருந்து பாதுகாக்கும் வால்மீகி இவர்களே உயர்ந்தவர்கள் என்று கருதுகிறேன் …ராமனின் விரல் நுனி இனி என் மீது பட்டால் கூட அது என் பெண்மைக்கு அவமானம் .உடல் என்பது உடல் மட்டுமல்ல அது மனமும் கூட .வால்மீகி.மனம் ஒவ்வாமல் உடல் எப்படி இயங்க முடியும் ? ..அப்படி ஒரு சூழல் உருவானால் நான் என் உடலை தீக்கு இரையாக்குவேனே தவிர ஒருபோதும் ராமனுக்கு மீண்டும் மனைவியாக மாட்டேன் . பெண்ணை பொருத்தவரை , அவள் மனதில் உயர்ந்த இடம் பிடிக்க வேண்டுமே தவிர , உலகு சொல்லும் அந்தஸ்து ..அவள் மதிப்பில் என்றும் உயர்ந்ததல்ல ..நீங்கள் இந்த இருகுழந்தைகளையும் ஒருபோல பாவித்து , அனைத்து பயிற்சிகளையும் கற்று கொடுங்கள் …இவர்கள் இந்நாட்டின் தலை சிறந்த வீரர்களாக உருவாக வேண்டும் ..செய்வீர்களா வால்மீகி ?” சீதையின் வார்த்தைகளின் நேர்மை வால்மீகியை , மவுனியாக்கியது . அங்கே சொல் மரித்து ,தோழமை வலுவானது

காடு என்பது லவனுக்கும், குசனுக்கும் தாய் நாடு ஆனது. மிருகங்களுடன் பழகி எப்பேர்பட்ட மிருகத்தையும் தன் வசப்படுத்தும் வித்தையை கற்று வைத்திருந்தனர் . காட்டின் சூட்சுமம் தெரிந்த வால்மீகி இருவரையும் நிகரில்லாத வீர்களாக வளர்த்திருந்தார். அயோத்தியில் ராமன் நல்ல மன்னன் எனப்பெயர் பெற்று விளங்கினான் . அவனுடன் அவர் சகோதர்களும் இருக்க , தன் பேரரசை விரிவாக்க , அசுவத்தை அண்டை நாடுகளில் உலவ விட முடிவு செய்தான் . அண்டை நாட்டிற்கு அனுப்பி வைக்க படும் ராமனின் குதிரையை , ராமனை எதிர்க்க விரும்புவர்கள் குதிரையை கட்டி வைத்து விட்டால் அந்த மன்னனை போரிட்டு, வென்று அந்நாட்டினை தங்களது நாட்டுடன் இணைத்து கொள்வர் . அண்டை நாட்டை நோக்கி விரட்டப்பட்ட குதிரை வழி தவறி காட்டிற்குள் வந்து விட்டது . லவனும் குசனும் குதிரையை நடுக்காட்டில் கட்டி வைத்து விட்டனர் .. ராமனின் சகோதரர்கள் அனைவரும் குதிரைக் மீட்க வந்து தோற்று திரும்பினர் .ராமனுக்கு ஆர்வம் அதிகம் ஆனது , காட்டுக்குள் யார் அந்த வீரர்கள் என்று பார்க்க தானே புறப்பட்டு வந்தான் . வந்திருப்பது தன் தந்தை ராமன் என்று தெரிந்ததும் , லவனும் குசனும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றனர் . ஆக்ரோசமாக ராமனுடன் சண்டையிட்டனர் ..அவர்கள் இருவரையும் எதிர்கொள்ள இயலாமல் ராமன் திணறினான் .. இந்த சண்டையை தூரத்தில் இருந்து பார்த்த சீதை வால்மீகியை அழைத்து ,” வால்மீகி , குழந்தைகள் இருவரும் ராமனுடன் போரிடுவதை நான் விரும்பவில்லை .அசுவத்தை அவிழ்த்து விட்டு , சண்டையை நான் நிறுத்த சொன்னதாக சொல்லுங்கள் என்றாள் . வால்மீகி போரை நிறுத்த முயற்சித்தார் . இளைஞர்களின் வேகம் அதிகமாக ஆக்ரோசமாக இருந்தது . இவர்களின் சண்டையில் கானகமே குலுங்கியது . வால்மீகி தன் குரலை உயர்த்தி ,” குழந்தைகளே உங்கள் தாய் சீதாவின் ஆணை போரை நிறுத்துங்கள் ” என்று கத்தினார் . தாயின் ஆணை என்று சொன்ன சொல்லுக்கு மதிப்பளித்து லவனும் குசனும் போரை நிறுத்தி அசுவத்தை அவிழ்த்து விட்டனர் . ராமன் வியப்புடன் வால்மீகியை பார்த்து இவர்கள் என் குமாரர்களா , இந்த அயோத்தியின் இளவரசர்களா ? என்று கேட்க வால்மீகி ஆம் என்று தலையசைத்தார் . ராமனின் கண்கள் ஆர்வத்துடன் சீதையை தேடின .. ராமனின் தேடல் வால்மீகிக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்க , குழந்தையின் ஆர்வத்துடன் சீதையிடம் ராமனை அழைத்து சென்றார் .. இனியாவது சீதாவின் வாழ்வு மலரட்டும் என மனமார பிரார்த்தித்தார் .

குடிசையின் வாசலில் சலனமற்று ,வேற்றுபார்வையுடன் அமர்ந்திருந்தாள் சீதா ..அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் பிரதிபலிக்கவில்லை .. நீண்ட பிரிவுக்கு பின் தன் ஆருயிர் மனைவியை பார்க்கும் ராமன் உலகையே மறந்து காதலுடன் சீதையை நோக்கினான் .. உலகத்தின் மொத்த யவனத்தையும் ஒருங்கே கொண்டிருந்தவளாக சீதை ராமனின்கண்களுக்கு தோன்றினாள் . மிகுந்த காதலுடன் ராமர் , சீதா ..என்றழைத்தார் .அந்த குரலில் ஏக்கமும் குழைவும் இருந்தது . அவள் சட்டென்று எழுந்து அவ்விடத்தில் இருந்து நகர்ந்து , ராமரை ஏறிட்டும் பார்க்காமல் விலகி சென்றாள் . ராமருக்கு முகம் வாடியது .லவனும் குசனும் தாய்க்கு பிடிக்கவில்லை என்று புரிந்ததும் ராமரை விட்டு சிறிது விலகி நின்றனர் . வால்மீகிக்கு இவர்கள் இடையில் நாம் பேசலாமா கூடாதா என்று தெரியாமல் தவித்தார் .சீதையின் வைராக்கியம் அவள் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருப்பாள் என்பதை வால்மீகிக்கு புரிய வைத்தது . சீதை , இயற்கையை போன்றவள் , அவள் அன்பும் ,பண்பும் நிறைந்தவள் . வாழ்க்கையை , தொலைநோக்கில் உடல் தாண்டி பார்க்கத்தெரிந்தவள். இத்தனைவருடம் காட்டில் ஒன்றாக இருந்தும் ஒரு முறை கூட பார்வையோ ,வார்த்தையோ வித்தியாசப்பட்டதில்லை .ஒரு நாள் கூட அவள் சோர்ந்து அமர்ந்ததில்லை .மனம் சொல்லும் வாழ்க்கையை வாழும் நேர்மையானவர்களை துக்கம் சொந்தம் கொண்டாடுவதில்லை .சீதையை ஒரு நண்பனாக வால்மீகி நன்கு புரிந்து வைத்து இருந்தார் . அதனாலேயே ,மறுபடியும் கணவன் மனைவி இணையும் பொன்னான வாய்ப்பை சீதையின் பிடிவாதத்தால் இழக்க நேரிடுமோ என்று அவருக்கு அச்சமாக இருந்தது . ராமர் சீதையை நோக்கி ,’ உன் கோபம் எனக்கு புரிகிறது .. என்னுடைய சூழல் , மன்னனாக நான் கடமையாற்ற வேண்டியிருந்தது. உன்னை அனுப்பி விட்டேனே தவிர ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்து நான் எப்படி துடித்திருப்பேன் என்று எனக்குத்தான் தெரியும் .இன்று வரை உன்னை தவிர வேறு எந்த பெண்ணையும் மனதால் கூட நான் நினைக்கவில்லை .என்னை புரிந்து கொள் சீதா .. நீ மிகப்பெருமை வாய்ந்தவள் . புத்திசாலி …அன்பின் அரசி …” ராமனை பேச விடாமல் சீதா இடைமறித்து ,” என்னைக்குறித்த புகழாரம் இங்கு தேவையில்லை ..என் குழந்தைகள் அசுவத்தை அடக்கி போரில் உங்களை வெற்றி கண்டுள்ளனர் .உலகம் தந்தையை தனயன்கள் வென்றார்கள் என்று பேசிவிடக்கூடாதே என்றுதான் போரை நிறுத்த சொன்னேனே தவிர உங்கள் மேல் உள்ள காதலால் அல்ல .. போர் தர்மப்படி அயோத்தியை ஆளும் உரிமை என் புதல்வர்களுக்கு உண்டு ..ஆகவே அவர்களை அயோத்தியின் இளவரசர்களாக அங்கீகரித்து, நியாயப்படி அவர்களிடம் ராஜ்யத்தை ஒப்படையுங்கள். இவர்கள் இருவரும் உருவத்தில் உங்களை ஒத்திருப்பதால் உங்கள் நாட்டில் ஒருவரும் சந்தேகப்படமாட்டார்கள் .நான் ஒருபோதும் மீண்டும் அயோத்தியின் மண்ணை மிதிக்க மாட்டேன். சந்தேகம் என்ற மரண அடி உங்கள் திருவாய் மலர்ந்து அருளிய போதே , உங்கள் மனைவி சீதை இறந்து விட்டாள் .” என்று கூறி கண் மூடி தன் தாய் பூமா தேவியை தியானித்தாள் .” தாயே நீயும் ஒரு பெண் .. என் மனநிலை உனக்கு புரியும் . தயவு செய்து இப்பூவுலகின் கட்டமைப்பில் இருந்து என்னை காப்பாற்று .உலகைப்போறுத்தவரை நான் கற்புக்கரசி என்பது நிரூபணம் ஆகவேண்டும் அவ்வளவுதான் ..இங்கு கற்புக்கரசிகளின் மன உணர்வுகள் பற்றி எவருக்கும் அக்கறையில்லை. இந்த பூலோகத்தின் இறுதி நாட்கள் வரையும் , பெண் உறுப்புகளின் அடுக்குகளாக , தேவையில்லை எனில் தூக்கியெரியப்படும் சாதனமாக மட்டுமே கருதப்படுவாள். என்ற உண்மை என்னை கொல்கிறது . மீண்டும் கணவனுடன் இணைந்து வற்றிய காதலுடன் , வாழும் சவ வாழ்கைக்கு நான் தயாராக இல்லை ..ராமன் தீண்டிய இவ்வுடல் அக்னியில் எரிந்து சாம்பலாகட்டும் . என்னை ஏற்று கொள் தாயே ”

சீதையின் வேண்டுகோளை ஏற்று கொண்டதுபோல் அண்டமே ஒரு முறை குலுங்கியது . காட்டின் குளிரை மீறி அவர்கள் நின்றிருந்த இடத்தை சுற்றி ஒரு உஷ்ணம் பரவியது .சீதையின் காலடியில் இருந்து தீ கங்குகள் உருவாகி ,அவள் பூமெனியெங்கும் விரைந்து பரவின.அவள் நின்றிருந்த இடம் இரண்டாக பிளந்து பொன்னால் புடம் போட்டது போல் ,அக்னி பிழம்பாக ,தேவி பூமியில் புதைந்து மறைந்தாள் . அவள் மறைந்த இடத்தில் அக்னி பற்றி எரிந்த சுவடு கூட இல்லாமல் புற்கள் பசுமை மாறாமல் காணப்பட்டது ..ராமன் கண்கலங்கி கைகூப்பி “மன்னித்து விடு சீதா ” என்று கதறினான் . வால்மீகி துக்கம் தாளாமல் வாய்விட்டு கதறி , பூமியில் தலைவைத்து வணங்கினான் .பூமிக்குள் இருந்து வால்மீகிக்கு சீதையின் குரல் கேட்டது, “இறந்து போய் ,அயோத்தியில் இருந்து வெளியேறிய என்னை இன்றளவும் உயிர்ப்புடன் வைத்திருந்ததற்கு நன்றி தோழா. பெண்மையின் தன்மானத்தை அடகு வைத்து பெரும் தாம்பத்யம் எனக்கு தேவையில்லை .சுதந்திரக்காற்றை சுவாசித்து , தலை நிமிர்ந்து வாழ எனக்கு தோள் கொடுத்தாயே தோழனே ..நான் மனைவி என்ற அந்தஸ்துக்காக மனம் கூசி , கூனிக்குருகி ஒவ்வொருநாளும் புழுவினை ஒத்த வாழ்வை வாழ முடியுமா தோழா நம் வாழ்வை யாருக்கு நாம் நிரூபிக்க வேண்டும் ?…நீ சொல் …ராமனை நான் மறுத்தது தவறா ? என் முடிவு தவறா ?”–

http://malaigal.com/?p=5233

விஜயபத்மா என்ற எழுத்தாளரின் பெயரை இன்றே முதலில் காண்கின்றேன். கதை சொன்ன விதமும் அதில் கூர்மையாக நிற்கும் பெண்ணியமும் அருமையாக இருக்குது.

 

இணைப்புக்கு நன்றி கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.