Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே ஒரு பயணக் குறிப்பு.

Featured Replies

நீலப்பனியைத் தேடி – 1

 

நார்வே நாட்டிலுள்ள ஃபியார்ட்ஸுக்குப் போக வேண்டும் எனத் திட்டம் போட தொடங்கியபோது வடதுருவம் வரைக்கும் செல்லும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை. ஐரோப்பாவில் மிகக்குறைவான மக்கள் வாழும் பகுதியான ஸ்காண்டிநேவிய நாடுகள் இயற்கை அழகுக்குப் பிரசித்தமானவை. ஒரு குலையிலிருந்து தொங்கும் வாழைப்பழங்கள் போல நார்வே, டென்மார்க், ஸ்வீடன் என மூன்று பகுதிகளாக ஸ்காண்டிக் நாடுகள் வட துருவத்துக்கு அருகில் தொங்குகின்றன. பெரும் மலைகள் சூழ்ந்த கடல் பகுதிகள் நிரம்பிய ஃபியார்ட்ஸ் பகுதிக்குச் செல்வது எங்கள் பயணத்தின் முதல் நோக்கம். திட்டங்கள் போடத்தொடங்குவதற்காகப் பல குழுமங்களை அலசிக்கொண்டிருந்தபோது நார்வேயிலிருந்து வட துருவத்தை நோக்கிப் பயணிக்கும் ஹடிருடன் (Hurtigruten) எனும் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டோம். 

 

scandinavia_map-225x300.jpg

 

ஹடிருடன் கப்பல் பயணத்தைப் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் தொடரத் தொடங்கியபோது நார்வேயின் கடற்புற நிலப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கியது. ஏதோ புகைப்படங்கள் பார்த்தோம் பிடித்திருந்தன என்பதுபோலில்லாமல் எங்கள் அருகே தீண்டியபடி நின்றிருந்த தொடர்கனவைப்போல வடதுருவப் பயணம் சதா ஈர்த்துக்கொண்டே இருந்தது.

பயணத்தைவிடப் பயணத்துக்காகத் திட்டம் தீட்டுவதே ஒரு பரவசமான அனுபவம் என என் மனைவி சொல்லும்போதெல்லாம் நான் நம்பியிருக்கவில்லை. திட்டம் போடும்போது, ஒரு நிலப்பகுதி மலரிதழ் விரிவதைப் போலக் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கற்பனையில் விரிவடையத்தொடங்கியது. பயண நாள் நெருங்கும் சமயத்தில் நமக்கு இதுவரை இல்லாத ஒரு புதிய உணர்வு நம்மைத் தீண்டுவது போலொரு பரவசம் எங்களிடம் ஒட்டிக்கொண்டது.

பெர்கன், அல்செண்ட் எனும் நகரங்களுக்கிடையே ஹடிருடனில் ஐந்து நாட்களும், மிச்சம் இருந்த ஐந்து நாட்களை ஓஸ்லோ, ஸ்ட்ரின் பகுதியிலும் கழிக்கலாம் என்றும் முடிவு செய்திருந்தோம். என் பெண்ணுக்கு அப்போது ரெண்டு வயதாகியிருந்தது. எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் கேட்கத் தொடங்கியிருந்தாள். எங்கள் எல்லாருக்குமே புதிய நிலம் என்றாலும் அவளுக்கு வேண்டிய உணவுகளும், அவசர மருத்துவ உதவிகளும் கிடைக்குமா எனும் பதற்றம் ஆரம்பத்தில் இருந்தது. நார்வேயைப் பற்றி விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியதும், ஆங்காங்கே கிடைக்கும் வசதிகளைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்ததால் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

முதலில் அல்செண்ட் (Alesund) பகுதியிலிருந்து ஸ்ட்ரின் (Stryn) எனும் கிராமத்துக்கு நீலப்பனிபாளங்களைப் பார்ப்பதற்காகச் சென்றோம்.

norway-alesund.jpg

குடைவரைக் கடல்கள் அமைந்த பகுதியான ஃபியார்ட்ஸ் நார்வே மற்றும் நியூசிலாந்து நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. பல நூறு கிலோமீட்டர்களுக்கு (கிட்டத்தட்ட நார்வே நாட்டின் 1200 கி.மீ நீளக்கடற்கரை நெடுக) மலைகளைக் அரித்து அமைந்திருக்கும் கடல் வழியே சரக்குக் கப்பல்களும், சுற்றுலாக் கப்பல்களும் வட துருவம் வரை தினமும் கடக்கின்றன. ஆழ்மலையிடுக்குகளில் பயணம் செய்யும்போது இலக்கு முக்கியமில்லாமல் போகிறது. குறிப்பாகத் தெளிவான நாட்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீட்டுக்கட்டைப் போல அள்ளிக்குவிக்கப்பட்ட மலைகள் அடுக்கடுக்காக முடிவிலியை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் மற்றொரு கப்பல் அருகே வர இடமில்லாத மிகக்குறுகிய இடுக்கில் செல்லும்போது இருபுறமும் நெடிது நிற்கும் மலை அடுக்குகள் கண்ணாடி பிம்பங்களோ எனும் சந்தேகம் வரும்படியாகத் துல்லியமான பிரதிகளாக இருக்கின்றன. சலூன் கண்ணாடியைப் போல ஆடிப்பிம்பம் மாறி மாறி எதிரொளிக்கிறதோ எனத் தோன்றும்.

norway-fjords.jpg

நார்வே நாட்டின் ஸ்ட்ரின் பகுதிக்கு அருகே ஓல்டெனில் ஐரோப்பாவின் மிகப்பெரிய உறைபனி நிலப்பகுதிக்குச் செல்வதுதான் திட்டம். ஸ்ட்ரின் எனும் இடத்திலிருந்து அந்த மாபெரும் பனிப்பாளத்தின் சிறு பகுதியை அருகில் சென்று பார்க்கமுடியும். கிட்டத்தட்ட 500 கிமீ நீளமுள்ள அந்த உறைபனி உயர மலைகளையும், குறுகிய நதிகளையும் இணைக்கும் பெரும் பரப்பளவு கொண்டது. யோஸ்டெலெஸ்ப்ரீன் (Jostedalsbreen glacier) எனும் ஐரோப்பாவின் பிரம்மாண்டமான உறைபனி உலகின் ஒரு பகுதி ஸ்ட்ரின் ஊரில் அமைந்திருக்கும் ப்ரிக்ஸ்டால் (Briksdal glacier) பனிப்பாளம். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ட்ரின் பகுதியில் மூவாயிரத்துக்கும் குறைவானவர்களே வாழ்கிறார்கள்.

பிரம்மாண்டமான பனிப்பாளத்தை எதிர்நோக்கி அமைந்திருக்கும் ஸ்ட்ரினுக்கு நாங்கள் அல்செண்டிலிருந்து சனிக்கிழமை இரவு வந்து சேர்ந்தோம். ஐந்து மணிநேரங்கள் பஸ் பயணம் மேற்கொண்டு ஸ்ட்ரின் வந்து சேர்ந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. புதிய ஊருக்கு நள்ளிரவில் சென்று அடைவது பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானப் பகுதியாகும். பகலில் ஓர் இடத்தை அடையும்போது அந்த ஊரின் சூழலுக்கு நம் பயண நேரத்தில் பழகியிருப்போம். இரவு முழுவதும் கடக்கும் நிலப்பகுதியையும் மலையின் இருபுறங்களும் சரியும் பள்ளத்தாக்குகளைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது அடையும் பிரமிப்புச் சொல்லில் அடங்காத அனுபவம். அல்செண்டிலிருந்து ஸ்ட்ரின் செல்லும் பாதை அப்படிப்பட்ட பரவசமான அனுபவத்தை அளித்தது. மலைப்பாதை வழியாக  எங்கள் பஸ் சென்றபோது சுற்றிலும் கண்கூசும் அளவுக்குப் பனிப்பாளங்கள் திரண்டிருந்தன. இங்கே குளிர்கண்ணாடிகள் போடாவிட்டால் அதிவிரைவில் கண்பார்வைக் கெட்டுப்போகும் என்றார் எங்களுக்கு முன் சீட்டில் இருந்த நார்வேக்காரர்.

ஊசிமுனைத் திருப்பங்களுடன் பனிப்பொழிவுக்கு இடையே பயணம் நீண்டது. வண்டி ஓர் இடத்தில் நிற்கும்போது இறங்கிச் சற்றுத் தூரம் வரை நடந்து பார்த்தேன். எங்கெங்கிலும் வெண்மை. நடக்க நடக்க நான் கிளம்பிய இடம் மறைவது போலக் கடுமையான பனிப்பொழிவு. வெள்ளை உலகத்துள் மூடப்பட்ட வெண்மையான மழைத்துகள்கள். ஆங்காங்கே தெரிந்தக் குடைகள் அப்பெரும் பரப்பின் கண்கள். பனிப்பொழிவு என்றால் பனிமனிதன், உருண்டையாக்கித் தூக்கிப்போடும் குதூகலத்தை அறிந்த எனக்கு என்னைச் சூழ்ந்திருந்த வெண்மைப் பெரும் மன எழுச்சியை அளித்தது. பனிக்காலம் முடிந்து இளவெயிலை வரவேற்குமுகமாக ஆங்காங்கே பனிப்பாளங்கள் உடைந்து சத்தமாக விழுந்தன. பஸ்ஸை விட்டுச் சிறிதுத் தூரம் தான் வந்திருப்பேன் என்றாலும் சத்தம் கேட்டதில் பனிப்பிரளயம் வந்தவன் போல வேகமாகப் பஸ்ஸுக்குத் திரும்பினேன்.

norway-bus.jpg

எங்களையும் சேர்த்துப் பதினைந்துப் பயணிகள் தான் இருந்தனர். உள்ளூர் மக்கள் பஸ் பயணத்தை விரும்புவதில்லை என ஓட்டுனர் சொன்னார். புதிதாகச் செப்பனிடப்பட்ட ரயிலில் மூன்று மணிநேரத்தில் ஸ்ட்ரின் சென்றுவிட முடியும். மேலும் ஓஸ்லோ மற்றும் பெர்கர் நகர்களில் மட்டுமே வர்த்தகம் அதிகம் உண்டு என்பதால் அல்செண்ட், ஸ்ட்ரின் போன்ற பகுதிகளுக்குச் சுற்றுலா பயணிகளும், பனிசறுக்குப் பயிற்சிக்காகவும் மட்டுமே வருவார்கள் எனக் கூறினார். நார்வே நாட்டின் வருவாயில் கப்பல் கட்டுமானத் தொழில், மீன்பிடித்தொழிலும், சுறா வேட்டையும் பிரதானம் என்பதால் வடக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் அதிகமாக இடம் பெயர்வதாகச் சொன்னார்.

நள்ளிரவு தாண்டி ஸ்ட்ரினுக்கு வந்து சேர்ந்தோம். ஒளிப்பேழையைப் போல எஞ்சியிருந்த வெளிச்சத்தின் மிச்சத்தை வானம் ஒளித்து வைத்திருந்தது. எங்கள் சுற்றுப்பாதை மலையிலிருந்து இறங்கத்தொடங்கியபோது கீழே பனிமனிதர்கள் போல நீண்டக் கனரக வாகனங்கள் சாலையில் ஊர்ந்துகொண்டிருந்தன. நார்டிக் நிலத்துண்டுகள் இடித்து எழும்பி நின்ற பெருவெளிகள் மலைகளாகவும் பள்ளத்தாக்குகள் மனித இனத்தின் தொட்டில்களாகவும் கிடந்தன. ஆங்காங்கே மண்ணிலிருந்து பனிப்பாளத்தை உடைத்து வெளிவரத்துடிப்பவைப் போலச் சமநிலப்படுத்தப்பட்ட மலைச்சரிவுகளில் மரத்தாலான வீடுகள். பனிக்காலம் முடிந்ததால் தற்காலிகமாகப் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்குப் பெயர்ந்திருந்த மக்கள் இனி வரத்தொடங்குவர். ஆர்ட்டிக்கிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றுச் சமயங்களில் மலைச்சரிவுகளை உண்டாக்குவதால் மலைப்பாதைகள் நாட்கணக்கில் மூடிவிடுவதும் உண்டு. அதனால் பனியிலிருந்து காத்துக்கொள்ளப் பெரும்பாலானோருக்கு இரண்டு வீட்டமைப்புகள் இருக்கும்.

ரெண்டு நாட்களாக அல்செண்டில் அலைந்ததில் மிகவும் களைப்பாக இருந்தது. அறைக்குச் சென்று கண்ணைமூடினேன். வெண்மலைகளின் பிம்பங்கள் கண்ணுள் எஞ்சியிருந்தன. பரவசத்தையும் மீறி உடனடித் தூக்கம். காலையில் கூரை இடிந்துவிழுவது போலச் சத்தம் கேட்கும்வரை விழிப்பு அண்டவில்லை.

நெடும் பயணத்தின் பெரும்பான்மையான விடியல்களைப் போலக் குழப்பத்துடனேயே கண் விழித்தேன். வழக்கமாகத் தூங்கி எழும் அறையல்ல என்பதை உணர்ந்தாலும் எந்த ஊரில் இருக்கிறோம் எனும் சந்தேகம் தெளிவதற்குச் சில நொடிகள் ஆயிற்று. மசமசப்பான காலை வேளையில் கனத்த ஜன்னல் திரை வழியே மெல்லிய ஒளி ஊடுருவியது. கட்டுமானப்பணிகள் நடப்பதுபோலத் தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நள்ளிரவு சூரியன் வரும்நாட்களில் வெளிச்சத்தை மட்டுப்படுத்த ஜன்னலுக்கு வெளியே இரும்பாலான ஷட்டரை பயன்படுத்துகிறார்கள். திரையை விலக்கிப் பார்த்தபோது பாதி வரை இறக்கிவிடப்பட்டிருந்த ஷட்டர் முதலில் தெரிந்தது.

norway-village-300x224.jpg

பக்கத்து வீடு ஐம்பது மைல்கள் என்பதைப் போல அருகில் மலைகளைத் தவிர எதுவும் இல்லை. அரைவிழிப்பு நிலையில் சத்தம் வந்த திசையைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் ஆனது. தூரத்தில் தெரிந்த மலையிலிருந்து கார் அளவிலான பனிப்பாளங்கள் உடைந்து விழுந்தபடி இருந்தன. நாங்கள் சென்றிருந்த பருவம் அப்படி. எங்குத் திரும்பினாலும் மண் நிறத்திலான மலைகள் பனிப்போர்வையை உதறியபடி இருந்தன. பஸ் பயணத்தின் போது தொடங்கிய அதிர்ச்சி இப்போது சகஜமாயிருந்தது.

சுறுசுறுப்பாகக் கிளம்பி மதியம் ப்ரிக்ஸ்டால் பனிப்பாளம் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பயணிகள் இல்லாத மற்றொரு பஸ் பயணம். ஆனால் குறிக்கப்பட்ட நேரத்துக்குக் கிளம்பி எங்களைச் சரியான நேரத்தில் ஓல்டென் (Olden) எனும் கிராமத்தில் இறக்கிவிட்டது. பனிப்பாளத்துக்கு அருகே செல்வதற்கு இங்கிருந்து மற்றொரு வண்டியைப் பிடிக்க வேண்டும் என்பதால் சற்று தொலைவில் மேடானப் பகுதியிலிருந்த கடையில் விசாரிப்பதற்கு என் மனைவி சென்றிருந்தார். நான் என் பெண்ணுடன் வெளியே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் என்னைத் தேடி ஒரு வயதான பாட்டி கடையிலிருந்து வெளியே வந்தாள். கைதட்டிக் கூப்பிட்டது யாரையோ என நினைத்திருந்தபோது, `கெரி`, எனத் துல்லியமாக என் பெயரைக் கூப்பிட்டாள்.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு பல படிக்கெட்டுக்கள் ஏறவேண்டாமென நினைத்து, இங்கிருந்தே என்னவென்று கேட்டேன்.

`டுடே சண்டே. நோ ப்ரிக்ஸ்டால்`, என உடைந்த ஆங்கிலத்தில் கத்தினாள். அதற்குள் என் மனைவியும் அவளோடு சேர்ந்துகொண்டாள்.

அப்போதுதான் எங்கள் தவறு புரிந்தது. எங்கள் பயணத்திட்டத்தின்படி ப்ரிக்ஸ்டால் பனிப்பாளத்தைப் பார்ப்பதற்காக ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இன்னும் சீசன் தொடங்குவதற்கு ரெண்டு வாரங்கள் இருந்தன. மேலும் பனிப்பாளத்துக்கு மேலே அழைத்துச் செல்வதற்கான வண்டி இன்று இருக்காது. அன்று இரவு மீண்டும் பெர்கன் நகருக்குச் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்ததால் அடுத்த நாள் பார்த்துகொள்ளலாம் எனத் திரும்ப முடியாது. கிட்டத்தட்ட இருபது கிமீட்டர்கள் சிறு மலைகள் மீது ஏறினால் மட்டுமே ப்ரிக்ஸ்டால் பனிப்பாளத்தை அடைய முடியும். என்ன செய்வதென்று புரியாமல் நின்றுகொண்டிருந்தோம். அப்போது மீண்டும் எங்களை அந்தப் பாட்டி கடைக்குள் அழைத்தாள்.

இந்த முறை வேறுவழியில்லாமல் நாங்களும் கடைக்குள் நுழைந்தோம். கடைக்குச் சாமான் வாங்கிவந்திருந்த நான்கைந்து நபர்களும் கடை சிப்பந்திகளும் கூடி நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பாட்டி எங்களிடம் சுவரில் ஒட்டியிருந்த படத்தைக் காட்டி, `டுடே நோ பஸ் டு க்ளேசியர்`, என்றாள். எங்களைத் திரும்பிப் பார்த்தபடி நார்வேஜியன் மொழியில் அவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். பாஷை தெரியாத சிற்றூரில் மாட்டிக்கொண்டுவிட்ட சங்கடத்தில் நாங்கள் செய்வதறியாது நின்றிருந்தோம். எங்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு பாட்டி மீண்டும் அந்தக் கூட்டத்தோடு இணைந்துகொண்டார். எங்கள் கையிலிருந்து வரைபடத்தை வாங்கிக்கொண்டு ஏதேதோ பேசியபோதுதான் அவர்கள் அனைவரும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு எங்களுக்கு மாற்று வழி யோசிக்கிறார்கள் எனப் புரிந்தது. வேறு வழியில்லாமல் நாங்களும் அவர்களுடன் நின்றுகொண்டோம்.

அப்போது உயரமான ஒரு நபர் சாமான் வாங்குவதற்காகக் கடைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் எங்களுக்கு வழி தேடிக்கொண்டிருந்தவர்கள் பெருங் கூச்சல் போட்டனர். பாட்டி குடுகுடுவென அவரிடம் ஓடிச் சென்று பரவசமாக ஏதேதோ பேசினார். ஓரிரு நிமிடங்களில் எங்களிடம் ஓடி வந்து, `வெரி லக்கி, ட்ரைவர்`, என கண்ணில் நீர் வராதக் குறையாக உணர்ச்சிவசப்பட்டார்.

கடைக்குள் நுழைந்தவர் ப்ரிக்ஸ்டால் பனிப்பாளத்தில் பகுதிநேரக் கைடாக இருப்பவர். அங்குச் செல்வதற்கான மினி ஜீப்பை ஓட்டுபவர். அவரது அம்மா தக்காளியும் முட்டையும் வாங்கிவர கடைக்கு அனுப்பியதாகவும் எங்களிடம் வசமாக மாட்டிக்கொண்டதாகவும் சிரித்தபடிச் சொன்னார். வீட்டுக்குச் சென்று மினி ஜீப்பைத் தயார் செய்துவிட்டு ஒரு மணி நேரத்தில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினார். அவரிடம் பேசிவிட்டுத் திரும்பிப் பார்த்தபோது பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் தத்தமது வேலைக்குத் திரும்பியிருந்தார்கள். எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார் பாட்டி! பாட்டியின் கண்களில் தெரிந்தக் குதூகலத்தை எங்களால் இன்றும் மறக்கமுடியாது. அது மட்டுமல்லாது ஓஸ்லோவில் வாழும் தனது அக்காவின் வீட்டு முகவரியைக் கொடுத்திருந்தார். அவர் இந்தியாவுக்குப் பல முறைச் சென்றவராம். அவரது வீட்டுக்குச் சென்று மாலை தேநீர் அருந்தினால் மிகவும் சந்தோஷப்படுவார் எனச் சொன்னார். அவர்களைப் பற்றி இப்போது நினைத்தாலும் மனமுருக வைக்கிறது. பெரிய நன்றி சொல்லிவிட்டுக் கடை வாசலில் உட்கார்ந்துகொண்டோம்.

brikstal-way.jpg.

எங்கள் அதிர்ஷடத்தை என்னெவென்று சொல்வது? இன்னும் சுற்றுலாவுக்கான சீசன் தொடங்காத ஒரு சமயத்தில் ஊர் உறங்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் பனிப்பாளத்தை நோக்கித் தேர்ந்த ஓட்டுனரோடு சென்றுகொண்டிருந்தோம். யோஸ்டேடால்ஸ்ப்ரீன் எனும் உறைபனி நிலப்பகுதி ஐரோப்பாவில் மிகப் பெரிய பனிப்பாளத்தைக் கொண்டது. கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர்ப் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாளம் பனியுகத்தில் உருவானது. இன்றுவரை சில கிலோமீட்டர்கள் மட்டுமே உருகியுள்ளது.அரைகிலோ மீட்டருக்கும் மேலான ஆழம் உள்ள பனிப்பாளைகள் உள்ளடக்கிய இந்தப்பகுதியின் உறைபனியின் ஆழத்தில் கடலும், வெந்நீர் ஊற்றுக்களும் இருப்பதாகச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். ப்ரிக்ஸ்டால் பனிப்பாளம் இதன் கிளைப்பகுதி.

பிரம்மாண்டமான மலைத்தொடர்கள் எங்களைச் சூழத்தொடங்கியது. பனிப்பாளையின் தோரணவாயிலுக்குள் நுழைந்துவிட்டோம் எனக் குளிர் உணர்த்தியது. எங்களைச் சுற்றி மண் நிறமுள்ள பாறைகள். ஐநூறு கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட மாபெறும் பனிப்பிரதேசத்தை அணைக்கட்டிக் காப்பது போல எங்கள் முன் திரண்டிருந்தது.

நான்கு நபர்கள் மட்டுமே உட்காரக்கூடிய எங்கள் ஜீப் மெல்ல மலையேறிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளும், பனிமலைகளும் தெரியத்தொடங்கும்போது நம் உலகைவிட்டு வேறொரு அதிசய மந்திர உலகத்துள் நுழைந்துவிட்ட உணர்வு. எங்கள் ஓட்டுனர் ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு எங்களை நடத்திக் கூட்டிச் சென்றார். அதுவரை பனிப்பாளம் இருப்பதற்கான அறிகுறி எங்களைச் சுற்றி எங்கும் தென்படவில்லை. நடந்துகொண்டே இருப்போம், திடீரென எங்கள் முன் பிரச்சன்னமாகும் எனும் நினைப்பே பரவசத்தை அதிகமாகக் கூட்டியிருந்தது. சிறு குன்றின் மீது ஏறிவிட்டு, பள்ளத்தில் இறங்கினோம். சற்றுத் தொலைவில், மலைப்பிளவிலிருந்து வெள்ளையாக ஒன்று தெரிந்தது. பொங்கிவரும் பால் உறைந்துவிட்டது போலப் பனிக்கூழ் நுரையாக அது காட்சியளித்தது. அருகே செல்லச் செல்ல வெண்மை நிறம் மெல்ல நீலச்சிதறல்களாகக் காட்சியளித்தது. வானத்தின் பிரதிபலிப்பாக இல்லாமல், இயல்பிலேயே நீல நிறப் பனித்துகள்கள் உண்டு என்பதை அன்று தெரிந்துகொண்டோம்.brikstal-glacier.jpg

 

எந்த நிமிடமும் பனிப்பாளம் மீண்டும் பொங்கி அப்பகுதியை முழுக்க நிரப்பிவிடும் போலிருந்தது. மிகவும் உயிர்ப்பான நிகழ்வை ஒரு கணத்தில் உறைய வைத்ததுபோலதொரு காட்சி. நான் அருகிலிருந்து கல்லில் உட்கார்ந்துகொண்டேன். எங்களைத் தவிர அப்பகுதியில் யாருமே இல்லை. மெளனமான வெளியாக இருக்கும் எனக் கற்பனையில் நினைத்திருந்தேன். ஆனால், அப்பகுதி அப்படி இல்லை. ஒவ்வொரு நொடியும் பனிப்பாளம் உராய்ந்தபடி இருக்கும் சத்தம் பெரும் உறுமல் ஒலி போலக் கேட்டுக்கொண்டே இருந்தது. எங்கள் ஓட்டுனரின் வீடு அப்பகுதியின் மற்றொரு எல்லையில் எங்கள் ஜீப் வந்த பாதையில் இருந்தது. பல சமயங்களில் நூறு தாளவாத்தியக்கருவிகள் ஒன்றாக இசைப்பதுபோலப் பலத்த ஒலி அந்த வெளியைப் பல நொடிகள் நிரப்பிவிடும் எனச் சொன்னார். பிரபஞ்ச நாதம். பனிப்பாளைகள் உறைந்த பனிமலைகள் அல்ல. ஒவ்வொரு நொடியும் நகர்வதும், உராய்வதுமாக, ஆழ்நிலப்பகுதியில் விரிசல்களும், இணைவுகளும் சதா நிகழ்ந்துகொண்டிருக்கும் நகர்வெளி. ஆறுகளும், கடல்பகுதிகளும், பாசிகளும், அபாயகரமான வாயுக்களும் நிரம்பிய உறைபனிப்பாளைகளின் பிரம்மாண்டம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது.

நெடிதோங்கிய மலைகள் சுற்றிலும் அரண் போல அமைந்ததில் பனிப்பாளத்தை ஊருக்குள் வராமல் தடுத்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. இன்று ப்ரிக்ஸ்டால் பகுதி பனிப்பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருகிவருவதாக ஓட்டுனர் கூறினார். நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஐந்து மைல்கள் தூரத்தில் பனிப்பாள விளிம்புக்கருகே நீர்வீழ்ச்சி இருப்பதாகவும், அது சின்ன விரிசலிலிருந்து தொடங்கிப் பெர்கன் பகுதி நதியுடன் காட்டாறு போல இணைவதாகக் கூறினார்.

briksdal.jpg

ஒரு காலத்தில் மண்ணின் ஒருபகுதியாக இருந்த கல்லும் மணலும் காலப்போக்கில் மலைச்சிகரமாகவும், முதல் பொன்னொளியைத் தரிசிக்கும் உச்சிகளாகவும் மாறி ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்கும் நிலப்பகுதி எங்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. நாங்கள் ஒரு வார்த்தையும் பேசாது அமர்ந்திருந்தோம். அருகில் இருந்த மலைமீதேறி உறைப்பனிப்பரப்பைப் பார்த்துவிடவேண்டும் என மனம் பரபரத்தது. ஆனால் என் முன்னால் இருந்த மலைவிரிசல்களில் பொங்கியிருந்த பனிப்பாளத்தைப் பார்ப்பதிலேயே மனம் இன்னும் அடங்கவில்லை என்பது உரைத்தது.

இருள் மலையிலிருந்து இறங்கத்தொடங்கியிருந்தது. முதலில் நிழல்களாகவும் பின்னர் வலுவான காற்றாகவும் மாலை மாறிவிடும் என்பதை நார்வேயில் இருந்த சில நாட்களில் அறிந்துகொண்டிருக்கிறேன். ஓட்டுனருக்கு நன்றி கூறிவிட்டு மலை இறங்கத் தயாரானோம். என் மகள் தோளில் உறங்கியிருந்தாள். அவளை எழுப்ப மனம் வரவில்லை. விழித்ததும் அவள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருந்திருக்காது

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

நார்வே பயணம் – 2

 

கடந்த உறைப்பனிக்காலத் தொடக்கத்துக்கு, அதாவது 2.5 பில்லியன் வருடங்களுக்கு முன் நார்வே நாட்டின் ஃபியார்ட்ஸ் பகுதிக்கு மேலே பறந்துசென்றால் எந்தவிதமான நிலப்பகுதிகள் தெரியும்? இப்போது தனித்தனிப் பகுதிகளாக இருக்கும் ஸ்காட்லாந்து, ஸ்காண்டிநேவியா, சைபீரியா, அலாஸ்கா பெரும் பனிப்பாளத் தொடர்ச்சியாக அமைந்திருக்கும். ஸ்காட்லாந்து நாட்டின் இன்றைய ஹட்ரியன் சுவர் (Hadrian’s Wall) எனப்படும் பகுதியிலிருந்து நடந்து ஒருவர் கனடா நாட்டுக்குள் நுழைந்து, மத்திய அமெரிக்காவுக்குள் சென்றுவிட முடியும். ஃபியார்ட்ஸ் (Fjords – மலைகளுக்கிடையே அமைந்திருக்கும் கடல்)  பகுதிகளில் கடல் மட்டம் வெகுவாகக் குறைந்திருக்கும் என்பதால் பெரு மலைகளுக்கு இடையே கடல்கள் இருந்திருக்காது. பனி மலைகளை நடந்து கடந்திருக்க முடியும். பொறுமையோடு நாம் பறந்தபடி காத்திருந்தால், பெரும் பிளைவு ஏற்பட்டு யூரேஷியா பகுதி கண்டங்களாகப் பிரியும் வரை பல தொல்குடிகள் இடம்பெயர்ந்தபடி இருப்பதைப் பார்த்திருக்கலாம். இன்று இந்த மலைகளுக்கிடையே கடல்கள் புகுந்து ஃபியார்ட்ஸாக மாறிவிட்டன.

Bryggen.jpg

பெர்கன் துறைமுகத்திலிருந்து வட துருவத்தில் இருக்கும் கிர்கெனேஸ் (Kirkenes)  நகரம் வரை செல்வதற்கு ஹட்டிகுட்டன் கப்பல் ஏழு நாட்கள் எடுத்துக்கொள்ளும். கப்பலில் ஏறுவதற்கு முதல் நாள் பெர்கன் நகரில் உள்ள Bryggen எனும் துறைமுகப்பகுதிக்குச் சென்றோம். யுனெஸ்கோ பாதுகாத்து வரும் பகுதிகளில் ஒன்றான இங்கு எழுநூறு வருடப் பழைய பலசரக்கு கொள்முதற்கலன்கள் இன்றும் உபயோகத்தில் உள்ளன. பல வண்ணங்கள் கொண்ட நுழைவாயில் வழியே உள்ளே போகும்போது புதிர் நகரத்துக்குள் நுழைந்தது போலிருந்தது. E.C.எஷரின் புகழ்பெற்ற ஓவியங்கள் போல ஒரு பக்கம் மாடிப்படிக்கட்டுகளில் ஏறினால் மேலே போகாமல் கீழ்தளப்பகுதிக்குள் எங்களைச் சென்றுசேர்த்தன.

 

Inside_Bryggen.png

மிகச் சிக்கலான அமைப்பாக இருந்ததால் உள்நுழையவும், வெளிவரவும் வழி தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம். புராதன அறைகளிலிருந்து வெளிவர வழி தெரியாத தவிப்போடு ஆதிக்காலப் பேய்கள் உளவுவதாக சில அறைவாசல்களில் எழுதிவைத்து பயத்தை மேலும் அதிகப்படுத்தினர். இங்குள்ள சில அறைகளின் அமானுஷ்யத் தன்மை மாறும்போது கடல் கொந்தளிப்பு அடையும் எனும் நம்பிக்கை பல காலங்களாக மாலுமிகளிடையே இருந்து வந்திருக்கிறது. அப்போது கடலரக்கன் வெளியேறி கப்பல்களை கவிழ்த்துவிடுவான். அவனை மதிக்காத கப்பல் தலைவனை கரைக்கு வந்தபின்னும் விதி விடாது எனும் தொன்மையான நம்பிக்கைகள் பலதும் பிரிக்கன் வீதிகளில் எழுதப்பட்டுள்ளன.

 

insidebryggen-200x300.jpg

ஒருவிதத்தில் கிரேக்க தொன்மக்கதைகள் போல இப்படிப்பட்ட தொன்மங்கள் வட ஐரோப்பிய இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்துள்ளன. நார்ஸ் தொன்மத்தின் அடிப்படைக் கதைகள் இன்று புதினங்கள், ஆபராக்கள், திரைப்படங்கள் என பல வடிவங்களில் வந்துள்ளன. The Flying Dutchman எனும் கதை வாண்டெர்டீகென் எனும் மாலுமியின் போராட்டத்தைச் சொல்லும் கதை. கடலரக்கனை நம்பாது செல்வத்தையும் தனது ஒப்பற்ற ஆற்றலையும் நம்பும் கப்பல் தலைவன் ஒருவனுக்கு சாபம் கிடைக்கிறது. தூய்மையான காதலை அடையும் வரை அவனது கப்பல் கரை சேராது் கடலில் சுற்றியபடி இருக்கும். ஏழு வருடங்களுக்கு ஒரு முறை கடலலை கப்பலை கரைசேர்க்கும்போது உண்மையான காதலை அவன் கண்டடைய வேண்டும். அப்போது அவனுக்குச் சாபவிமோசனம் கிடைக்கும். ஒரு விதத்தில் இது நார்வே நாடு உருவானக் கதையாகவும் பிரிக்கென் அருங்காட்சியகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. தொலைந்து போன இப்படிப்பட்ட பல தொன்மக்கதைகளை மறு உருவாக்கம் செய்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல புதினங்கள், ஆப்ராக்கள் வெளிவந்தன.

 

flying-300x180.jpg

பிரிக்கெனைச் சுற்றி வரும்போது கடற்கரை ஓரத்தில் இருந்த பழமையான தேவாலயங்கள் எதிர்பட்டன. வரிசையாக அமைக்கப்பட்டிருந்த வண்ண கட்டடங்களைத் தாண்டி சென்றபடி இருந்ததில் வந்த வழி மறந்துவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் திரும்பிவிடலாம் எனப் பார்த்தபோது ஆதிகாலத்து கப்பல் இடிபாடுகளோடு பாதுகாக்கப்பட்ட இடத்தை அடைந்தோம். ஏதோ நினைப்பில் சுற்றி அலைந்ததில் குழம்பிப்போய் எதிரே பிரம்மாண்டமாக நின்றிருந்த கப்பலை சற்று ஆச்சர்யத்தோடும் அதிக குழப்பத்தோடும் சுற்றிப்பார்த்தேன். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் கடற்புள்ளுகள் நிரம்பியிருந்த கடற்கரையில் இருந்தேன் என நம்பமுடியாதபடி காலத்தில் பின்னோக்கிச் சென்றுவிட்டது போலிருந்தது. நீண்ட தூரம் ஒரே விதமான பகுதிகளைக் கடக்கும்போது வரும் இட மயக்கம் எனக்கு வந்துவிட்டிருந்தது. கணக்கில்லாமல் நடந்ததுபோல களைப்பு. இடிந்து போல கப்பலைச் சுற்றி வந்ததில் தட்டாமாலை சுற்றி வந்து திடுமென நின்றது போல தள்ளாட்டம்.

ஹட்டிகுட்டன் கப்பலில் கிளம்ப வேண்டிய நாள் காலையில் நார்வே நாட்டுக்குப் பிரத்யேகமான தேவாலயத்தைக் காண வேண்டும் எனக் கிளம்பினோம். Stave எனப்படும் தேவாலய வடிவங்கள் மரத்தால் கட்டப்பட்டவை. வட ஐரோப்பிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க தேவாலயங்கள் ஸ்டேவ் பாணியில் அமைந்திருக்கும். பெர்கன் நகரின் ஃபானா எனும் பகுதியில் அமைந்திருந்த ஃபேண்டாஃப்ட் (Fantaft) ஆலயத்துக்குச் சென்றிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த பெர்கன் நகர மையத்திலிருந்து ஒரு மணி நேரம் ரயிலில் பயணம் செய்து ஃபானா பகுதியை அடைந்தோம். நாங்கள் கொண்டுவந்திருந்த வரைபடத்தை ரயிலில் விட்டுவிட்டதால் நிலையத்திலிருந்து ஒவ்வொரு தெருவாக வழி கேட்டபடி ஆலயத்தை நோக்கி நடக்கத்தொடங்கியதில் காட்டுப்பகுதி வழியே நடப்பது போல வழியெங்கும் செழிப்பான பைன் மரங்கள். மண் நிறத்திலான சிறு கற்கள் பாதை ஓரமெங்கும் எங்களுடனே வந்தது. வழியில் தெரிந்த வீடுகளைச் சுற்றிச் சுவர் உயரத்துக்கு செடிகள் அமைத்திருந்தனர். மெல்ல வீடுகள் பின்னகர்ந்து மலை வழி உயரச் சென்றது. ஏப்ரல் மாதமாக இருந்தாலும் குளிர் குறைந்தது போலத் தோன்றவில்லை. தூரத்தில் தெரிந்த வடக்குக் கடலில் அலைகள் இல்லை.

 

fantoft_stave.jpg

 

 

உயர ஏறிய பிறகு எங்கள் பாதை கிடுகிடுவென கீழே இறங்கத் தொடங்கியது. மீண்டும் சில வீடுகளும், மக்கள் தலைகளும் தெரியத் தொடங்கியதில் சற்றே நிம்மதியானது. நார்வே நாட்டுத் தலைநகரமும், வர்த்தக மையங்களே கூட வேலை நிறுத்த நாள் போல எல்லா நாளும் ஆளரவம் இல்லாமல் இருந்தது. ஃபானா போன்ற காடு சூழ்ந்த பகுதியில் எந்தவிதமான வாழ்க்கை சூழல்கள் அமைந்திருக்கும் எனச் சுலபமாக கணிக்க முடிந்தது. ஒருவரை ஒருவர் பெயர் சொல்லிக் கூப்பிடுமளவு மிக நெருக்கமான சமூக சூழல் அமைந்திருந்தது. தூரத்தில் தெரிந்த ஸ்டேவ் ஆலயத்தின் தலை தெரிந்தபோது காலை பதினோறு மணி. நாங்கள் நடந்த சாலையில் ஓரிருவர் சென்றுகொண்டிருந்தனர். வைக்கோலை ஏற்றிச்சென்ற ட்ராக்டரை வழிமறித்து ஆலயத்துக்குச் சுருக்கமான வழியை வினவினோம். காலத்தைக் கடந்து ஏதோ ஒரு ஊரில் வழிதவறி இறங்கியவர்களைப் பார்ப்பது போல எங்களைப் பார்த்தார். சிறு குழந்தையோடு இத்தனை தூரம் நடந்து வருவது அவரது தெருக்கோடியில் இருந்த ஆலயத்தைப் பார்ப்பதற்காக என அவர் நம்பச் சிரமப்பட்டார். பொதுவாக சுற்றுலாப் பயணிகளென்றால் பலரும் ஜாக்கிரதையாகத்தான் பழகுகிறார்கள். ஸ்ட்ரின் ஊரில் எங்களுக்கு நடந்த அனுபவம் அரிதான ஒன்றுதான்.

ராக் இசை பாணிக்குப் பெயர்போன நார்வே நாட்டில் இசை தொடர்பான கலகக் குழுக்களும் பல உள்ளன. அவற்றில் ப்ளாக் மெட்டல் எனும் குழுவினர் கிறிஸ்துவத்துக்கு எதிரான அமைப்பினர். சாத்தானின் பழக்கங்களை பயிற்சியாக மேற்கொள்வதாகக் கூறும் இவர்களது குழுவில் பல வினோதப்பழக்கங்கள் தொடர்ந்து நார்வே நாட்டு அரசுக்குத் தலைவலியைத் தந்தது. நாங்கள் பார்க்கச் சென்றிருந்த ஃபாண்டாஃப் ஆலயத்தை 1990களில் இக்குழுவினர் எரிக்க முயன்றனர். பல சட்டவிரோத செயல்களை மேடையிலும், மேடைக்கு வெளியேயும் செய்ததில் இக்குழு நார்வே நாட்டில் தடை செய்யப்பட்டது. இன்றும் பல முன்னணி இசை கலைஞர்கள் இக்குழுவின் மரபைத் தொடர்ந்து வருகின்றனர். வருடாவருடம் ராக் பாணி இசை நிகழ்ச்சிகள் இங்கு நடக்கின்றன. கருப்பு உடைகளில் மாடு போலப் பெருத்த வண்டிகளில் ராக் இசைப்பிரியர்கள் வலம் வருவதை சகஜமாகப் பார்க்க முடிந்தது.

 

fantoft.jpg

 

நாங்கள் சென்றிந்தபோது ஃபாண்டாஃப் ஆலயத்தில் சீரமைப்பு நடந்துகொண்டிருந்ததால் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. நான்கைந்து கைகள் ஒவ்வொரு திசையிலும் சுட்டிக்காட்டுவதைப் போன்ற வெளிப்புறத் தோற்றம் மிக வித்தியாசமான அமைப்பில் இருந்தது. முழுவதும் மரத்தால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் வெளிப்புறத்தில் மரக்கைகள் புடைத்துத் தெரிகின்றன. பொதுவாக ஐரோப்பிய பர்ரோக் பாணி தேவாலையங்களின் வெளிப்புறத்தில் கார்காயில் (Gargoyle) எனச் சொல்லப்படும் கற்களாலான அமைப்புகள் தண்ணீர்குழாயைப் போல நீட்டிக்கொண்டிருக்கும். தேவாலயச் சுவர்களில் தேங்கிக் கிடக்கும் மழைத்தண்ணீரை வெளியேற்றப் பயன்படும் இந்த அமைப்புகள் விலங்குகள் வாயைப் பிளந்துகிடக்கும் யாளித்தோற்றத்தில் அமைந்திருக்கும். ஒரு உபயோகத்துக்காக கட்டப்பட்ட அமைப்புகளுக்கென காலப்போக்கில் தனி முக்கியத்துவத்தை அடைந்தது. இவற்றுக்கென தனி வரலாற்றுக்கதைகளும், தொன்ம குறியீடுகளும் ஐரோப்பிய தேவாலய சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளன.

hurtigruten.png

ஐரோப்பாவின் பிற நாடுகளை ஒப்பிடும்போது நார்வே மிகப் புதியது. எட்டு மாதங்களுக்குக் கடுமையான குளிர், அதிக புழக்கத்தில் இருக்கும் நார்வேஜியன் மொழி என்பதால் பலரும் நார்வே நாட்டுக்கு இடம் பெயருவதில்லை. கடந்த முப்பது வருடங்களாக இது கொஞ்சம் மாறி வருகிறது. உள் நாட்டு கலவரங்கள் அதிகமானப் பின்னர் இலங்கை தமிழ் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பல நாடுகளில் முதன்மையானது நார்வே. நாங்கள் தங்கியிருந்த ஸ்ட்ரின் பகுதியில் பல இலங்கைத் தமிழர்களைப் பார்க்க முடிந்தது. தமிழில் பேச முயன்றபோது அதை அவர்கள் அதிகம் விரும்பவில்லை என உணர்ந்தேன். அதே போல, அண்மைக்காலங்களில் ஸ்காண்டிநேவிய பல்கலைக்கழகங்கள் அதிக வெளிநாட்டு மாணவர்கள் வருவதை ஊக்குவிப்பது போல பல புதிய வழிமுறைகளை உண்டாக்கி உள்ளனர். அதனால் இந்திய மற்றும் சீன மாணவர்கள் பலரை ஓஸ்லோ, பெர்கன் போன்ற பெரு நகரங்களில் பார்க்க முடிந்தது. பொது மொழியாக ஆங்கிலம் வளராத ஸ்காண்டிநேவியாவில் இது பெரும் மாற்றத்தை உருவாக்கிவருகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போல நெடும் மன்னராட்சி வரிசைகளும், பிற நாடுகளை ஆண்டுவந்த சரித்திரமும் நார்வே நாட்டுக்கு அதிகம் கிடையாது. பிற ஐரோப்பிய நாடுகளில் பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் பல கட்டடங்கள் சரிந்துவிட்டன, குவியல்குவியலாக நகரங்கள் விழுந்து அவற்றின் மீது புது அமைப்புகள் எழுதப்பட்டுவிட்டன. ஐரோப்பாவின் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது சரித்திரத்தின் நிழல் எந்தளவு நீண்டுள்ளது எனத் தெரிகிறது. கால்களுக்குக் கீழே நகரும் பூமித்தட்டுகள் போல ஒவ்வொரு மனித வளர்ச்சி யுகமும் பலவற்றை நினைவில் வைத்திருக்கும் அதே நேரத்தில் சிலதை மறக்க முயல்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நகரங்கள் புத்துயிர்ப்பு பெற்று எழும்போது, நமது ஞாபகங்கள் நம்மை ஏமாற்றுகின்றன என்றே தோன்றுகிறது. கண்ணுக்குள்ளே இருக்கும் குருட்டுப்புள்ளியைப் போல சில காட்சிகளை நம் நினைவு ஓரங்கட்டிவிடுகிறது போலும்.

தேவாலயத்தைப் பார்த்தபின்னர் பெர்கன் நகரத்து துறைமுகத்துக்கு விரைந்தோம்.

ஹட்டிகுட்டன் கப்பலில் நாங்கள் கிளம்பும்போது அசாதாரணமான இருட்டும் புழுக்கமும் ஒருசேர அமைந்திருந்தது. பின் மதிய நேரத்தில் கிளம்பிய எங்கள் கப்பல் கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர் தூரம் சென்றால் அடுத்த பெரிய ஊரான அல்செண்ட் வரும். அதுவரை பல சிறு துறைமுகங்களில் வர்த்தகத்துக்காக நிற்கும் சரக்கு கப்பல் ஹட்டுகுட்டன். ஒவ்வொரு நாளும் பெர்கன் நகரிலிருந்து புறப்பட்டு வடக்கு துருவத்திலிருக்கும் ட்ராம்சோ (Tromso) எனும் ஊருக்கு ஏழாவது நாள் சென்று சேரும். ஃபியார்ட்ஸ் பயணத்தடத்தில் இருக்கும் சிறு பொட்டு ஊர்களும் இந்த சரக்கு கப்பலை நம்பித்தான் இருக்கின்றன. வரைபடத்தில் பார்த்தால் சிறு சிறு தீற்றுகளாக வெள்ளைத் தீவுகள். ஒவ்வொன்றிலும் ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் கூட்டம். அதில் குறிப்பிடத்தக்க ஊர் அல்செண்ட்.

Norse-300x199.jpg

பதிமூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நார்ஸ் எனும் கடற்கொள்ளைக் குழுவினர் சிறு குடிகளாக இப்பகுதியில் சிதறியிருந்தனர். புதிதாகக் கரைந்திருந்த பனிப்படலங்கள் அப்பகுதியின் கடல்மட்டத்தை உயர்த்தியிருந்தது. ஒவ்வொரு சிறு குழுவும் தத்தமது ஆதிக்குழுவை மறந்து தனிக்குடிகளாக பெருகத் தொடங்கின. சிறு விசைப்படகுகளை அவர்கள் உருவாக்கத்தொடங்கிய காலகட்டம். மிகக்குறைந்த நாட்கள் மட்டுமே இருந்த வெயில் காலம் நிலச்சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக அமைந்திருக்கவில்லை. பெரும்பாலும் சாகுபடி செய்யத்தெரியாத வேட்டைக்குழுவினர். குடி செழிப்படைய புது விசைப்படகுகளும் சிறு கப்பல்களும் கட்டத்தொடங்கினர்.

நமது வான்வழிப்பயணத்தை கடலுக்கு மேலே மேற்கொண்டால் பல கப்பல்களைக் காணத்தொடங்குவோம். இன்றைய கட்டுமான அமைப்பின் பாதுகாப்பு சட்டங்கள் அந்தகால கப்பல்களில் கிடையாது. நமது கால இயந்திரப் பயணத்தில்  நார்ஸ் தொல்குடிகளின் கப்பல்களில் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. முறையான கப்பல் கட்டமைப்பு உருவாவதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். யூரேஷியா நிலப்பகுதியின் மிகச் சிறந்த கப்பல் கட்டுமானங்கள் ஸ்காண்டிநேவியா பகுதியில் உருவாயின. கடல் கடந்து பல நாடுகளில் கொள்ளை அடிக்கத் தொடங்கினர். முறையான காலனியாதிக்கமாக இது உருவாகாவிட்டாலும், மிகச் செழிப்பான காலனி ஆதிக்கத்துக்கு இது அடிக்கல் நாட்டியது. நார்ஸ் குடியினர் கடற்கொள்ளையராக      இங்கிலாந்துப் பகுதிகளில் நுழைந்ததன் விளைவு பிரித்தானியரும் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கத் தொடங்கினர். அதன் விளைவு காலனியாதிக்கத்திலும், உலகம் முழுவதுமான வர்த்தகப் பரவலுக்கும் வழிவகுத்தது.

hurtigruten.jpg

எங்கள் கப்பலில் மிகவும் குறைவான சுற்றுலாப்பயணிகள் இருந்தனர். ஏழு தளங்களாக அமைந்திருந்த ஹட்டிகுட்டன் கப்பலில் கிட்டத்தட்ட ஐந்து தளங்கள் முழுவதும் கப்பல் கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலும் ஒவ்வொரு சரக்குகளை ஏற்றிச்செல்லும். எங்கள் கப்பல் ட்ராம்சோவிலிருந்த கப்பல் கட்டுமானத் தளவாடத்துக்காக பொருட்களை நிரப்பியிருந்தது. ஒவ்வொரு சிற்றூரில் நிற்கும்போதும் அங்கிருந்த துறைமுகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றேன். கப்பல் வழி வர்த்தகம் மட்டுமே சாத்தியம் என்பதால் ஒவ்வொரு ஊரிலும் மிக விரிவான துறைமுகச் சோதனைச்சாலை அமைந்திருந்தது. பனிக்காலங்களில் பனி உடைப்பான் (Ice Breaker) பொருத்திய கப்பல்கள் வடதுருவத்தை நோக்கி தினமும் செல்லும். பனிக்கால சாலைகளில் சால்ட் (salt) கணிமத்தைப் பரப்புவதைப் போல இங்கு கப்பல் போகும் பாதையில் பனியை உடைத்து ஹட்டிகுட்டன் போன்ற சரக்கு கப்பல்களுக்கு வழிவகுக்கும். இந்த வசதி இல்லாத காலத்தில் ஒரு மலைத்தொடரிலிருந்து மற்றொரு மலைக்கு வேட்டைக்காகச் செல்வதும், மற்ற குடிகளின் கப்பல்களைக் கைப்பற்றுவதுமாக நார்ஸ் பழங்குடியினர் தங்கள் நிலப்பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத்தொடங்கினர்.

ஒவ்வொரு குடிகளுக்கும் தனித்தனி பழக்கங்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் பல காலங்களாகத் தொடர்ந்திருக்கின்றன. இன்றும் பெர்கன் நகரத் துறைமுகக் கட்டுமானப் பகுதிகளில் வாழும் மக்களிடையே பல நம்பிக்கைகள் இன்னும் மிச்சம் இருப்பதாக அருங்காட்சியக குறிப்பு தெரிவிக்கிறது. நல்ல நேரம், கெட்ட நேரம், மேகங்கள், பறவைக்கூட்டங்கள், பலமான காற்று என ஒவ்வொரு குறிப்புக்கும் பல கதைகள் வைத்துள்ளனர்.

Aurora-Borealis.jpg

வட துருவம் வரை செல்லும் திட்டம் இருந்தாலும், ஏழு நாட்கள் தொடர்ந்து கடலில் பயணம் செய்ய முடியுமா எனும் சந்தேகம் ஆரம்பம் முதலே இருந்தது. நாங்கள் நினைத்ததுபோலவே மூன்றாம் நாள் சற்றே உடல் உபாதையோடு அல்செண்ட் நகரத்தில் இறங்கிவிட்டோம். நாங்கள் சென்றிருந்த ஏப்ரல் மாதத்தில் நார்வே நாட்டின் வடக்கு கோடியான டிராம்சோ நகரம் வரை சென்றிருந்தால் Aurora Borealis எனும் வானவெளிச்ச நடனத்தைப் பார்த்திருக்கலாம். நள்ளிரவுச் சூரியனைப் பார்த்திருக்கலாம். வட துருவக் கடலில் சுறா கூட்டம் அலையோடு ஆடும் ஆட்டத்தைத் தொடர்ந்திருக்கலாம். துருவக் கரடிகளின் குடும்பங்களைப் பார்த்திருக்கலாம்.  எங்களைப் பார்த்ததும் அவை பனித்துளைகள் வழியே கடலுக்குள் மறையும் அழகைப் பார்ப்பதற்காக மற்றொரு பயணத்திட்டம் போட வேண்டும். இம்முறை டிராம்சோ நகருக்கு நேரடியாகச் சென்று வட துருவத்தை மட்டும் காண வேண்டும். துருவங்களுக்கு அருகே ஃபியார்ட்ஸ் மலைப்பகுதிகள் இருக்கின்றனவாம் – இந்தப்புறம் நார்வே போல நமது சிறிய தெருக்கோடி அந்தப்புறத்தில் நியூசிலாந்தும் பல ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கிறது.

 

 http://solvanam.com/?p=29434#sthash.oJ3VDVDM.dpuf

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றி..இன்று மிகவும் பிடித்த ஆக்கம் இது.படங்கள் இன்று கொள்ளை அடிக்காட்டிக்கும் என்றாவது ஒரு  நாள் கொள்ளை அடிக்கப்படும்..நீல வெண்பனி பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல்  உள்ளது..நேரில் பார்த்தவர்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.இத்தோடு நடுச்சாமத்தில் சூரியன் உதிக்கும் படம் ஒன்றையும் இணைத்திருந்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும்..

  • 1 year later...
  • தொடங்கியவர்

 

 

e Midnight Sun in Northern Sweden...

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும், கட்டுரையும் நன்றாக உள்ளது.
அதிலும்... நள்ளிரவில் சூரிய உதயம் காணொளி மிக அருமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.