Jump to content

Recommended Posts

பதியப்பட்டது (edited)

புலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர் 56வது பிறந்தநாள் நினைவுகளோடு…..!

ஜூலை 23, 2014 | வீரத்தளபதிகள்.   Edit Post
இயற்பெயர் – ரகுநாதன்

தந்தை – பத்மநாதன்
பிறந்த ஊர் – அளவெட்டி
பி.திகதி – 24.07.1958

Maathavan-Maasrar--600x222.jpg

அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது.

 

அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால் முடிவோடு இன்னும் முடியாத வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மாதவன் மாஸ்ரரையும் காலம் கௌரவப்படுத்திக் கொள்கிறது.

 

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மாணவனாக படித்துக் கொண்டிருந்த ரகுநாதன் என்ற இளைஞன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததும் அந்த இளைஞன் ஒரு காலத்தின் கதையானதும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த அதிசயம் அல்ல அற்புதம்.

சிங்களத்தின் கொடிய இனவாதம் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் தின்ற காலத்தில் தான் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ரகுநாதனின் வாழ்வும் மாற்றத்தைக் கண்டது.

 

தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி மற்றும் வினோஜா, லலிதா, ஜெயா ஆகிய பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற அந்த நாளில் இத்தகைய போராட்டங்களில் தன்னையும் இணைத்து விடுதலைப்பாதையில் நடக்கத் தொடங்கிய ரகுநாதன் 83 தமிழர் மீதான இனக்கொலையின் பின்னர் இந்தியாவிற்கு படிப்பை தொடர்வதற்காக பெற்றோரால் அனுப்பப்பட்டார்.

 

நாட்டைப்பிரிந்த துயர் சொந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியாத அவலம் அயல்நாட்டில் கல்வியைத் தொடர முடியாத மனவுளைச்சலைக் கொடுத்தது. அப்போது இந்தியாவில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பினைத் தானே தேடி அவர்களுடன் தனது பணிகளை ஆரம்பித்தார். இந்தியாவில் 4வது பயிற்சிப் பாசறையில் பயிற்சியை முடித்து ரகுநாதன் மாதவனாகினார்.

 

அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் , புலிகளின் புலனாய்வுத்துறையின் இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கபிலம்மான் ஆகியோர் உட்பட பலரை உருவாக்கியது 4வது பயிற்சிப்பாசறையாகும். இங்கிருந்து உருவாகிய பலர் பின்னாட்களில் அரசியல் இராணுவ புலனாய்வுத் துறைகள் என பல்பரிமாண ஆற்றலோடு பல்லாயிரம் பேரை உருவாக்கும் பேராற்றலைப் பெற்றார்கள்.

 

அக்காலத்தில் ‘போர்க்களம்’ என்ற பெயரில் நூலொன்று உள்ளகச் சுற்றாக வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நூலானது தமிழ் மொழியில் உலக இராணுவ நுணுக்கங்கள், பயிற்சிகளின் நெ(பொ)றிமுறைகள் யாவையும் கற்பித்தலுக்கும் போராளிகள் கற்றுக் கொள்ளவும் பயன்பட்டது.

 

தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழில் இராணுவப் பயிற்சியை போராளிகளுக்கு வழங்க வேண்டுமென்ற விருப்பத்தை இந்த நூல் நிறைவு செய்திருந்தது. போர்க்களம் நூலின் உருவாக்கத்தில் மாதவன் மாஸ்ரரின் பங்கானது வரலாற்றில் அழிக்க முடியாதது.

வெளிநாட்டு இராணுவப் பயிற்சிகள்,  இராணுவ வெளியீடுகள் , ஆயுதங்கள் பற்றிய நூல்களையெல்லாம் பெற்று அவற்றை தமிழாக்கம் செய்து போராளிகளுக்கு இலகுவாய் கற்பிக்கும் வகையில் வடிவமைத்து முதல் முதலில் தமிழில் இராணுவ பயிற்சியை போராளிகளுக்கு வழங்கிய பெருமையில் மாதவன் மாஸ்ரருக்கு கணிசமான பங்கு உண்டு.

 

ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட மாதவன் மாஸ்ரர் தலைவரோடு பணிகளில் இணைந்து 1987களில் தாயகம் வந்து சேர்ந்தார். தாயகம் திரும்பிய பின்னரும் தலைவருக்கு அருகாமையிலேயே பணிகள் நிறைந்தது. எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை பெற்றவர்களுள் மாதவன் மாஸ்ரரும் ஒருவர். பின்பு இந்திய இராணுவ காலத்தில் தலைவருடன் இணைந்திருந்தவரை யாழ்மாவட்டத்திற்கான பணிகளுக்காக தலைவரால் அனுப்பப்பட்டார்.

 

26.10.1987 இந்திய இராணுவம் மாதவன் மாஸ்ரர் பிறந்த ஊரான அளவெட்டியில் நிகழ்த்திய படுகொலைச் சம்பவமானது வரலாற்றில் அளவெட்டி கிராமத்தினால் மறக்க முடியாதது. இந்திய இராணுவத்தினரின் முதலை என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் அளவெட்டி இந்து ஆச்சிரமத்திலிருந்த வயோதிபர்கள் சிறுவர்கள் உட்பட 15பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்த அந்தக்காலத்தில் காட்டிலிருந்து 1988இல் யாழ்மண்ணை வந்தடைந்தார் மாதவன் மாஸ்ரர்.

 

ஊரெங்கும் இந்தியப்படைகள் சுற்றி நிற்க மக்களுடன் வாழ்ந்த போராளிகளில் மாதவன் மாஸ்ரரும் அந்தக் காலத்து சவால் நிறைந்த நாட்களையெல்லாம் கடந்து சென்றார். உறக்கமில்லை உணவில்லை அலைவும் மரணப் பொழுதுகளுமாக விடிந்த பொழுதுகள். எனினும் மாறாத தேசக்காதலோடு மக்களோடு ஊரெங்கும் நடந்து திரிந்த கால்கள் ஓயாது உழைத்துக் கொண்டேயிருந்தது.

அப்போதைய யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல்.மதி அவர்கள் திருநெல்வேலியில் இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டார். 10.12.1988 இந்தியப்படைகளிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரகாவியமான மதி அவர்களின் இழப்போடு தொடர்புகள் யாவும் அறுபட்டு தனித்துப் போனார் மாதவன் மாஸ்ரர். மீண்டும் காட்டுக்குச் செல்வதற்குமான வழிகளும் தொடர்புகள் அற்றுப்போய்விட்டது.

 

கடல்வழியாக தனது முயற்சியில் தமிழகத்திற்குச் சென்றடைந்து கிட்டண்ணா, பாலாண்ணா ஆகியோரின் தொடர்புகளை எடுத்து அவர்களோடு பணிகளைத் தொடர்ந்தார். எங்கிருந்தாலும் விடுதலைப் போராளிக்கு ஓய்வில்லையென்பதனை தனது உழைப்பால் உணர்த்திய போராளி. பின்னர் 1989களில் பிறேமதாச அரசோடு பேசும் காலம் வந்த போது தாயகம் வந்து பாலமோட்டைக் காட்டுப்பகுதியைச் சென்றடைந்தார்.

 

ஒவ்வொரு போராளியின் நினைவிலும் மாதவன் மாஸ்ரரின் கலகலப்பும் நகைச்சுவையுமே நினைவில் நிற்கும் மறக்க முடியாத மனிதன். மென்மையான அந்த இதயத்தினுள் ஒரு மாபெரும் புலனாய்வாளன் புலனாய்வு ஆசான் புதைந்து கிடந்ததை காலமே கைபற்றி வெளியில் காட்டியிருந்தது.

 

புலிகளின் புலனாய்வுத்துறை பெரு வளர்ச்சி கண்டு உலகை அதிசயிக்க வைத்த எல்லா வெற்றிகளின் பின்னாலும் மாதவன் மாஸ்ரரும் வெளியில் தெரியாத வேராக இருந்தார்.

000                000                  000
 

அந்தக்காலம் தலைவருக்கும் தளபதிகளுக்கும் சோதனைகளும் தடைகளுமே சூழ்ந்திருந்தது. எனினும் புலிகளின் அமைப்பின் துறைசார் வளர்ச்சிகள், மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் ஒரு பிரிவாக புலனாய்வுப்பிரிவின் தேவையும் அதன் எதிர்கால பணிகளும் உணரப்பட்டு தனித்த சிறப்பான புலனாய்வுத்துறையை உருவாக்க தலைவரின் சிந்தனையின் செயல்வடிவமாக போராளிகள் செயற்படத் தொடங்கியிருந்தனர்.

 

அப்போதைய பிரதித்தலைவரான மாத்தையாவின் நிர்வாகத்தில் சலீம் அவர்களின் பொறுப்பின் கீழ் மாதவன் மாஸ்ரரினால் பயிற்சிகள் வழங்கப்பட ஆயத்தங்கள் தயராகியது.

 

புலனாய்வுப்பிரிவின் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளின் முடிவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு பாலமோட்டைக்கு உள்வாங்கப்பட்டார்கள். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியின் ஆரம்பம் இங்கேதான் உருவாகியது. இதுவே பின்னாளில் புலனாய்வுத்துறையின் பல்பரிமாண மாற்றத்தின் ஊற்றாகியது.

 

பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது. பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலம் அது.

 

பாலமோட்டையிலிருந்தே அரசியல் போராளிகளை இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி கொழும்புக்கு ஏற்றிச் செல்லும். அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் போராளிகளை மாதவன் மாஸ்ரரால் வளர்க்கப்பட்ட புலனாய்வுப்போராளிகள் பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்கள்.

 

யாழ்மாவட்டத்திலிருந்து அதிகளவிலான போராளிகளும் இதர மாவட்டங்களிலிருந்து ஐந்து ஐந்து போராளிகளுமாக பாலமோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள். புலனாய்வுப் பயிற்சிக்கு வந்திருந்த போராளிகள் தனித்தனியே நேர்முகம் செய்யப்பட்டார்கள். பயிற்சியின் கடுமை கட்டுப்பாடுகள் யாவும் விளங்கப்படுத்தப்பட்டு அனைத்து விதிகளையும் ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர்களை மட்டுமே பயிற்சியில் பங்கெடுக்க அனுமதியும் வழங்கப்பட்டது.

 

பயிற்சியின் கடினம் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு போராளிகள் புலனாய்வுப்பயிற்சிக்குத் தயாரானார்கள். 37என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய முகாம் புலனாய்வுப்பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டது.
லெப்.கேணல் கிறேசி அனைத்து முகாம்களுக்கு பொறுப்பாகவும் புலனாய்வுப் பகுதிக்கு சலீம் அவர்களும் பொறுப்பாக புலனாய்வுப் பயிற்சியில் ஆண் பெண் போராளிகள் தயாராகினர்.

 

பயிற்சிக்கான முதல் நாள் கலந்துரையாடலில் பயிற்சி பெறும் போராளிகளுக்கான பயிற்சி விதிகள் விளக்கப்பட்டது. பயிற்சியின் போது தினமும் 10கிலோ மண்மூடையைச் சுமந்தபடியே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நித்திரைக்குச் செல்லும் நேரம் தவிர்த்த இதர நேரமெல்லாம் 10கிலோ மண்மூடையை யாரும் கழற்றவே கூடாதென்று அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சியின் நெறிப்படுத்துனர்களாக மாதவன் மாஸ்ரர் மற்றும் சலீம் ஆகியோர் கவனிப்பர் எனவும் விளக்கப்பட்டது.

 

புலனாய்வுத்துறை பயிற்சிகளில் மாதவன் மாஸ்ரரின் சிரத்தையும் கவனமும் அனைத்துப் போராளிகளையும் அப்பயிற்சியில் அக்கறையோடு பயிற்சியைத் தொடர வைத்தது. அதுமட்டுமன்றி குறும்புகள் ,குழப்படிகள் நிறைந்த இளவயதுக்காரர்களால் நிறைந்த அந்தப் பயிற்சி முகாமில் பயிற்சியாசிரியராக மட்டுமின்றி ஒரு தந்தையின் கண்டிப்பும் கவனமும் ஒவ்வொரு போராளிக்கும் பொதுவாகவே இருந்தது.

 

குறும்புகள் செய்வோருக்கு தண்டனைகள் வழங்குவதில் தந்தையாகவும் அவர்களின் வளர்ச்சியில் தாயின் அக்கறையோடும் புலனாய்வுப்பயிற்சிகளை நடாத்தி புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை காத்திரமாக வழங்கியிருந்தார். மாதவன் மாஸ்ரரினலேயே உருவாக்கப்பட்ட போராளிகள் புலனாய்வுத்துறையின் பல்துறைசார் ஆற்றல்களோடும் வளர்ந்தார்கள். அனைத்து புலனாய்வுப் போராளிகளின் உருவாக்கத்திலும் மாதவன் மாஸ்ரரே ஆதாரமாக ஆசானாக இருந்தார்.

000          000           000

யாழ்மாவட்டத்தின் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்டிருந்த பொட்டு அம்மான் 1989 இறுதியில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தளபதி பானு அவர்கள் யாழ்மாவட்டத்தின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

காரணம் சொல்லப்படாமல் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு பொட்டு அம்மான் அவர்கள் தலைவரால் பாலமோட்டைக்கு அழைக்கப்பட்டார். தனது ஒவ்வொரு அசைவிலும் பணியிலும் புலனாய்வுக்கான திறனையும் ஆழமையையும் வெளிப்படுத்தியது மட்டுமன்றி அதுவே சிந்தனையாயிருந்த பொட்டு அம்மான் அவர்கள் புலிகளின் புலனாய்வுத்துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

 

பொட்டு அம்மானிடம் திறமை வாய்ந்த தளபதிகளான லெப்.கேணல் சூட், லெப்.கேணல். மாதகல் ராஜன், மாதவன் மாஸ்ரர் ,கபிலம்மான் போன்றவர்களைக் கொடுத்த தலைவர் புலனாய்வுத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தளத்தையும் வழியையும் உருவாக்கும் பொறுப்பை பொட்டு அம்மான் அவர்களிடம் கையளித்திருந்தார்.

 

பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறையின் உருவாக்கம் புதிய வடிவத்தில் காலடி வைத்த காலம் 1990. இக்காலம் இந்தியப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறியிருந்தது. புலிகள் நாட்டுக்குள் வந்திறங்கி மக்களோடும் மக்களின் பணிகளோடும் தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தார்கள்.

புலனாய்வுத்துறையின் முக்கிய மாற்றமும் வளர்ச்சியும் புதிய பாய்ச்சலை நோக்கிய பயணம் ஆரம்பித்திருந்த இந்நேரத்தில் பொட்டு அம்மான் அவர்களால் மாவட்டங்களுக்கான புலனாய்வுப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

 

யாழ்மாவட்டம் மாதகல் ராஜன்  , வன்னிமாவட்டம் மல்லி , மட்டக்களப்பு மாவட்டம் நியூட்டன் , திருகோணமலை மாவட்டம் கபிலம்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டு மாவட்டங்களுக்கான புலனாய்வுத்துறை கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இக்காலமானது மிகுந்த சிக்கல் நிறைந்த காலமாக இருந்தது. அதுமட்டுமன்றி சகோதர இயக்கங்கள் , இந்திய இராணுவத்தோடு இணைந்து இயங்கியவர்கள் , இந்திய இராணுவ காலத்தில் நடந்த பல படுகொலைகளில் நேரடிப் பங்காளிகள்,  எதிரியின் உளவாளிகள் முகவர்கள் யாவரும் கலந்திருந்த சிக்கல்கள் நிறைந்த நேரமது. ஒவ்வொரு விடயத்தையும் சரியாக இனங்கண்டு ஆராய்ந்து விடுதலைப்பயணம் பயணிக்க வேண்டிய இக்கட்டான காலமும் இதுவே.

 

இந்தக் காலத்தில் தான் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பணிகளில் ஒன்றாக தகவல் சேகரிப்பு விசாரணைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சேகரிக்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை , உறுதிப்படுத்தல் , சரியான வகையில் இனங்காணப்பட்ட விடயங்கள் அனைத்தும் சரியானவே என்பதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு விசாரணைப் பிரிவின் கையிலேயே இருந்தது.

 

இவ்விசாரணைப் பிரிவிற்கும் பொட்டு அம்மானுக்குமான இணைப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டார். விடயங்களைச் சரியாக ஆராய்ந்து அவற்றை எழுத்து வடிவாக்கி அறிக்கைகள் தயாரித்து பொட்டு அம்மானுக்கு வழங்கும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரரின் பங்கு காத்திரமானது மட்டுமன்றி காலத்தின் தேவையாகவும் அமைந்தது.

 

அறிக்கைகள் என்பது கடதாசிகளில் எழுதப்பட்டாலும் அக்கடதாசிகளிலேயே அனைத்து விடயங்களும் த(தே)ங்கியிருந்தது. ஒவ்வொரு சிறு சிறு விடயங்களிலும் சரிகளையும் ,தவறுகளையும் , நியாயங்களையும் , தீர்வுகளையும் இவ் அறிக்கைகளே தாங்கிக் கொண்டிருந்தது.

 

ஒரு சிறு தவறுக்கும் ஒரு அறிக்கையே காரணமாகிவிடக்கூடிய ஆபத்தான பணி. ஆபத்தான பணியையும் அழகாக செய்து முடிக்கும் திறமை மாதவன் மாஸ்ரரிடமும் மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட புலனாய்வுத்துறைப் போராளிகளிடமுமே இருந்தது. போராளிகள் சேகரித்து வரும் அறிக்கைகள் யாவையும் தானே வாசித்து அவ்வறிக்கைகளை தொகுப்பாக்கி கோடிகளுக்கு நிகரான பெறுமதி மிக்க புலனாய்வுப்பணியின் தந்தையாகவே மாதவன் மாஸ்ரரின் தியாகம் அமைந்தது.

000            000               000

இக்காலத்தில் மாதவன் மாஸ்ரரிடம் கல்விக்குழுவினை உருவாக்குமாறு பொட்டு அம்மானால் பணிக்கப்பட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் செயல்வடிவத்தையே காட்டும் திறமை மிக்கது புலிகளின் வரலாறு. பொட்டு அம்மானின்  எண்ணத்தில்  உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் பொறுப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டு கல்விக்குழுவின் செயற்பாட்டுக் குழு உருவாக்கம் காண்கிறது.

 

கல்விக்குழு ஆசிரியர் குழுவில் 3பேர் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உலக புலனாய்வு அமைப்புகள் கட்டமைப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்தல் மற்றும் நூல்களை தருவித்துக் கொடுக்க வேண்டும். தருவிக்கப்படும் அனைத்துலக புலனாய்வு பிறமொழி நூல்களை ஓய்வுபெற்ற மொழிப்புலமையாளர்களுக்கு ஊதியம் வழங்கி நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பும் மாதவன் மாஸ்ரரிடமே இருந்தது. இப்பணிக்காக தனியாக இடமொன்றை ஒழுங்கு செய்து அங்கு வைத்தே இப்பணி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.

 

இப்போதைப் போல அந்தக்காலம் இலகுவில் கணணியில் தட்டச்சு செய்து நூல்களை வடிவமைக்கவோ அல்லது அச்சுப்பதிக்கவோ இலகு வசதிகள் இல்லை. பிறேமதாச அரசின் பொருளாதாரத்தடை நடைமுறையில் இருந்த காலம். அடிப்படை தேவைகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அச்சடிக்கும் கடதாசியிலிருந்து அனைத்தும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
மொழிபெயர்க்கப்படும் புலனாய்வு நூல்களை அச்சுக்கோர்த்து நூல்வடிவாக்கி புலனாய்வுப் போராளிகளுக்கு கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கும் பெரும் பொறுப்பை மாதவன் மாஸ்ரரே எற்றிருந்தார்.

 

அத்தோடு இலங்கையில் வரும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் முக்கியமான செய்திகளை வெட்டி அவற்றை மட்டைகளில் ஒட்டி அச்சுப்பிரதியெடுத்து நூலுருவாக்கும் பொறுப்பானது ஒரு புலனாய்வுத்துறையின் போராளியிடம் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு போராளியும் தனக்கு வழங்கப்படும் பொறுப்பையும் பணியையும் கவனமாகவும் கடமையுணர்வோடும் செய்து முடிக்கும் திறனை ஊட்டியது புலிகளின் பயிற்சிகளும் பாசறைகளும். இங்கும் மாதவன் மாஸ்ரரின் பங்கும் பணியும் பெரியது.

 

மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் அபார வளர்ச்சியும் செயற்பாடும் வேகவேகமாய் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொடுத்தது. இத்தனை வளர்ச்சியின் முதுகெலும்பாக மாதவன் மாஸ்ரரே நிமிர்ந்து நின்றார்.

இத்தோடு பிறமொழிகளில் வெளியாகும் புலனாய்வு திரைப்படங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு போராளிகளுக்கு காட்டப்பட்டது. அனைத்து துறைசார் போராளிகளுக்கும் கல்விக்குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களே கற்பித்தலில் பயன்படுத்தப்பட்டது. இக்கற்பித்தல் பொறுப்பும் ஒரு புலனாய்வுத்தறைப் போராளியிடம் வழங்கப்பட்டிருந்தது. கல்விக்குழுவே அனைத்து துறைசார் போராளிகளுக்கான விழிப்புணர்வையூட்டியும் புடம்போட்டு வளர்த்து பணிகளுக்கு அனுப்பினார்கள்.

 

அதுபோல வெளிப்பணிகளுக்குச் செல்லும் ஆண் பெண் போராளிகளையும் கல்விக்குழுவே பயிற்றுவித்து அனுப்பியது. கல்விக்குழு உருவாக்கிய திறமையானவர்களை வைத்தே இதர துறைகளின் போராளிகளுக்கான பயிற்சிகளும் , இளநிலைப் போராளிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் ஆணிவேராக நின்ற மாதவன் மாஸ்ரரினால் உருவாக்கப்பட்டவர்கள் பலர் பின்னாட்களில் பெரும் பொறுப்புகளில் கடமைகளைத் தொடரவும் ஏணியாக நின்ற இமயம் மாதவன் மாஸ்ரர்.

 

கல்விக்குழுவின் ஆரம்பமும் அதன் அடித்தளமுமே பின்னாளில் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் இதர துறைகளின் திறமையாளர்களை செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்ததை வரலாறு தன் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டது. உலகம் புலிகளின் புலனாய்வுத்துறையை இன்றுவரை புதிர்களாயே பார்க்கும் வகையில் புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியானது மேம்படவும்  அதி உச்சதிறனுடன் வளரவும் காரணமான பலரை உலகம் காணாமல் அவர்கள் மௌனங்களாலே எழுதப்பட்டார்கள். அந்த மௌனம் எழுதிய வரிகளில் மாதவன் மாஸ்ரரும் அடங்குகிறார்.

000            000               000

1993காலம் தமிழீழப்போராட்ட வரலாற்றில் சவால் நிறைந்த நெருக்கடியை புலிகள் சந்தித்த காலம். எனினும் புலனாய்வுத்துறையின் நுண்ணிய அவதானிப்பு ஆற்றல் எல்லாத்தடைகளையும் உடைத்துக் கொண்டு நிமிர வைத்தது. இக்காலம் மாதவன் மாஸ்ரர் உருவாக்கிய போராளிகள் வௌ;வேறு துறைகளுக்கும் பணிகளுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். கல்விக்குழுவின் வளர்ச்சியானது மாதவன் மாஸ்ரருக்கு மேலும் பல பணிகளை வழங்கிய நேரம் கல்விக்குழுவிற்கான பொறுப்பாளராக பொஸ்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார்.

 

மாதவன் மாஸ்ரர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி அவதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார். இக்காலத்தில் வெளியக புலனாய்வுத்துறையின் ஆண்கள் பிரிவுக்கு தளபதி கேணல் சாள்ஸ் அவர்களும் , பெண்கள் பிரிவுக்கு தளபதி லெப்.கேணல் அகிலா அவர்களும் பொறுப்பில் இருந்தார்கள் அகிலா அவர்கள் வீரச்சாவடையும் வரையும் பெண்கள் புலனாய்வின் பொறுப்பாளராக அகிலா அவர்களே இருந்தார். அதிலும் அகிலா அவர்கள் வெளியகப்பொறுப்போடு  வெளியகப்பணியகத்தின் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.

இவ்விரண்டு நிர்வாகங்களுக்கும் உட்படாத ஒரு பணியை பொட்டு அம்மான் அவர்கள் மாதவன் மாஸ்ரரிடம் வழங்கியிருந்தார். அந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் மாதவன் மாஸ்ரரிடமே வழங்கியிருந்தார். புலனாய்வுத்துறையின் பணிகள் இரகசியமானதாகவும் ஆழமானதாகவும் இருந்த போதிலும் இவை அனைத்திலும் மாதவன் மாஸ்ரருக்குப் பெரும் பங்கிருந்தது.

 

000             000            000

அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து 3ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. சமாதானத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்ட சந்திரிகா அம்மையார் அவர்கள் தமிழர் தரப்புடன் போர் செய்யத் தக்க தனது முழுபலத்தையும் பயன்படுத்த முனைந்து யுத்தத்தில் ஈடுபடத்தொடங்கியது.

குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளான வடகிழக்கில் யுத்தம் ஆரம்பித்திருந்தது. தொடர்ந்த விமானத் தாக்குதல்கள் எறிகணை வீச்சுக்கள் மரணத்தின் காலைகளையே தமிழர் நிலத்தில் பரவிவிட்டிருந்தது. அன்றாட விடியல் சாவுகளைக் கொண்டு வரும் பொழுதுகளாகவே விடியத் தொடங்கியது. எல்லா நம்பிக்கைகளும் போய் இனி யுத்தம்தான் என சந்திரிகா அரசு கடல், தரை, வான் படைகளை களத்தில் இறக்கியது.

 

மாதவன் மாஸ்ரர் மிகவும் அவசியமான பொறுப்பொன்றை பொறுப்பேற்று தனது பணிகளில் நேர்த்தியும் கவனமுமாகியிருந்த வேளையில் சூரியக்கதிர் நடவடிக்கையை எதிரி மேற்கொண்ட நாட்களவை.

 

யாழ்மண்ணைக் கைப்பற்றும் முயற்சியில் யாழ்மாவட்டத்தில் பலாலி ,காங்கேசன்துறை ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் முற்றுமுழுதாக யாழ்மண்ணைக் கைப்பற்றும் நோக்கில் அனைத்து முனைகளிலிருந்தும் முன்னேறத் தொடங்கியது.

 

09.07.1995அன்று பலாலியில் முகாமிட்டிருந்த சிங்களம் முன்னேறிப்பாய்தல் எனும் பெயரில் வலிகாமம் வடக்கு, மேற்கு பகுதிகளை நோக்கி படை நகர்வை மேற்கொண்டனர். தங்கள் வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் தேவாலங்கள் கோவில்களில் தஞ்சமடைந்தனர்.

 

முன்னேறும் படைகளுக்கு ஆதரவாக வான்படைகளின் புக்காரா விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இதன் தொடக்கமாக நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்தும் மரணித்துப் போனவர்களின் உறவுகளின் கண்ணீரால் நிறைந்தது.

 

குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என இக்குண்டு வீச்சில் இரத்தமும் சதையுமாக நவாலி தேவாலய வளாகம் மரண ஓலத்தால் நிறைந்தது. 3குண்டு வீச்சு விமானங்கள் ஒன்றாக நடாத்திய தாக்குதலில் இரத்தக்கறைபடிந்த துயரத்தை மக்கள் மனங்களில் பதிவாக்கியது. பேரவலத்தின் ஆரம்பம் அன்று தொடங்கியது.

 

அதேதினத்தில் அளவெட்டி , சண்டிலிப்பாய் போன்ற பகுதிகள் நோக்கியும் பலாலியிலிருந்து எதிரியால் தொடுக்கப்பட்ட பீரங்கி , எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட எதிரி வலிகாமம் தென்மேற்கு , மேற்கு , தெற்கு பகுதிகள் நோக்கியும் மக்கள் வாழிடங்கள் நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர். உடுத்த உடைகளுடன் கைகளில் அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.

 

வீதியெங்கும் மக்கள் வெள்ளம். மக்கள் நகரும் இடமெங்கும் எதிரியின் விமானத்தாக்குதலும்,  எறிகணை வீச்சுகளும் துரத்திக் கொண்டு போனது. மரணங்களும் , காயங்களும் சாவின் வாசனையை துயரத்தின் வேதனையை மக்கள் அனுபவித்தபடியே நடந்தார்கள். காயமடைந்தவர்களை காப்பாற்ற அவகாசமோ மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆதரவோ கிடைக்கவில்லை. மருத்துவ வசதியோ காயமடைந்தோரை ஏற்றிச் செல்ல வாகன வசதியோ இல்லாமல் மரணம் மலிந்தது. மனங்கள் மட்டும் வலியோடு நடந்தது.

 

நவாலிமண்மீது வீசப்பட்ட குண்டுகளால் அக்கிராமம் அமைதியை இழந்தது. அழுகையினாலும் மரண வலியினாலும் உயிர்கள் துடிக்க அன்று நவாலி சென்பீற்றர் தேவாலயம் மற்றும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வீழ்ந்த குண்டுகளால் 147இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து போக 360இற்கும்  மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கும் வழியின்றி பலரை இழக்கும் நிலமையை அன்றைய நாளில் அங்கிருந்த மக்களால் மறக்க முடியாத வடுவைத் தந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு, நீர் வசதிகளை வழங்கிய 48தொண்டர்களும் அன்று தங்கள் உயிர்களை அங்கே விதைத்து விழிமூடிக்கொண்டனர்.

 

எதிரியின் வரவை எதிர்த்து சமராடிக் கொண்டிருந்தார்கள் புலிகள். நவாலி , நாகர்கோவில் ,நந்தாவில் அம்மன்கோவில் என இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் தங்கிடங்களிலெல்லாம் சிங்கள வான்படையின் தாக்குதல் பெரும் உயிரழிவைத் தந்தது.

அநியாயமாக அழிக்கப்பட்ட நவாலி தேவாலயத்தை அரச ஊடகம் புலகளின் ஆயுதத் தொழிற்சாலை குண்டுவீச்சில் அழிக்கப்பட்டதென அறிவித்திருந்தது. உலகமும் இந்த அழிப்பை பெரிதுபடுத்தவில்லை. தேவாலயம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி யாழ் மறை மாவட்ட ஆயர் வத்திக்கானுக்கு அறிவித்திருந்தார். வத்திக்கானும் நாவாலித் தேவாலயத்தின் மீது வீசப்பட்ட குண்டுகளில் அழிந்த தேவாலயம் பற்றியோ உயிர்கள் பற்றியோ எவ்வித கவனத்தையும் காட்டவில்லை. என்றும் தமிழர் மீதான அழிவுகளை உலக நாடுகள் இப்படித்தான் மௌனிகளாக வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்தது. புலிகளே மக்களின் அழிவுகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முதல் முன்னேறி வரும் இராணுவத்துடனான சமரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் மக்களைக் குண்டுவீசிக் கொன்றழித்த புக்காரா குண்டுவீச்சு விமானம் மீது 14.07.1995 சண்டிலிப்பாயில் வைத்து புலிகளின் ஏவுகணை மூலம்  புக்காரா சுட்டுவீழ்த்தப்பட்டது. கடற்புலிகளால் இதே காலம் எடித்தாரா கப்பல் மீது கடற்புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு கடல் மூலமான எதிரியின் வழங்கலிலும் புலிகள் தடைய ஏற்படுத்தியிருந்தனர்.

 

தரையால் முன்னெடுக்கப்பட்ட எதிரியின் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகளால் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையும் மேற்கொள்ளலுக்கு திட்டமிடப்பட்டது. புலிப்பாச்சல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காலம் பௌர்ணமிகாலமாகும்.
நிலவு காலத்தில் வலிந்த தாக்குதல்களைச் செய்வதில் அதிகளவு பாதகத்தையே சந்திக்க வேண்டிய நிலமை வரும். ஆனால் அந்த நிலவுகாலத்தில் எதிரியிடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் காலம் கொடுத்தது. புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் புலிகளின் இராணுவத் திறனும் எதிரியுடனான சண்டையும் எதிரியால் எதிர்கொள்ள முடியாது போக கைப்பற்றிய பகுதிகளை விட்டு எதிரி பின்வாங்கிப் போனான்.  புலிப்பாய்ச்சல் மூலம் எதிரியின் கனவு சிதைக்கப்பட்டது.

000               000              000

17.10.1995 அன்று ரிவிரெச (சூரியக்கதிர்) என்ற பெயரில் யாழ்மண்ணை முற்றுகையிடும் கனவோடு சிங்களப்படைகள் முன்னேறத் தொடங்கியிருந்தது. வரலாறு காணாத அழிவையும் இழப்பையும் இடப்பெயர்வையும் கண்டது யாழ்மண்.

காலம் காலமாய் சேர்த்த சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து அகதியாக்கப்பட்டார்கள் மக்கள். சிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் கொன்று போட்டுக் கொண்டிருக்க கிடைத்ததைக் கைகளில் எடுத்துக் கொண்டு இடம்பெயரத் தொடங்கியவர்களை 30.10.1995அன்று மாபெரும் துயரில் வீழ்த்தியது காலம்.

6லட்சம் தமிழர்களை ஒரேநாளில் துடைத்தெடுத்து சொந்த இடங்களிலிருந்து துரத்திய அந்த நாளின் துயரத்தை வார்த்தைகளுக்குள் கட்டி வைக்க தமிழில் வார்த்தைகளாலேயே முடியாது போனது. மழைவெள்ளத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்தது. ஒருநாளில் யாழ்மண்ணின் குடிகள் தங்கள் சொந்த ஊரைப் பிரிந்து சென்று கொண்டிருந்தது.

 

30.10.1995அன்று புலனாய்வுத்துறையின் பணியகப்பொறுப்பாளரும் வெளியக பெண்கள் பிரிவு புலனாய்வுப் பொறுப்பாளருமான லெப்.கேணல்.அகிலா அவர்கள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மண்ணை மீட்கும் சமரில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிர்களை ஈந்து கொண்டிருந்தவர்கள் வரிசையில் லெப்.கேணல்.அகிலா அவர்களும் வீரகாவியமானார். மாதவன் மாஸ்ரரின் வழிநடத்தலில் பாலமோட்டைக் காடுகளில் நடைபெற்ற முதல் புலனாய்வுப் பாசறையில் வளர்ந்த அகிலா அவர்களின் புலனாய்வுத்துறையின் பணிகளானது ஒரு தனி வரலாறு.

 

புலிகள் பெரும் சவாலையும் நெருக்கடியையும் சந்தித்த காலங்களில் இக்காலமும் முக்கியமான காலமாகும். இப்போது லெப்.கேணல்.அகிலா அவர்களின் பொறுப்பிலிருந்த பணியகப் பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் பொட்டு அம்மானால் வழங்கப்பட்டது.

இப்போதைய காலம் போல கையுக்குள் ஆவணங்களை சேமிக்கும் இலத்திரனியல் வசதியோ அல்லது சேமிப்பு வசதிகளோ இல்லாத காலம். அனைத்து கோவைகள் ஆவணங்கள் யாவுமே கையெழுத்து வடிவில் லட்சக்கணக்கான கடதாசிகளில் எழுதப்பட்டு கோவைப்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு ஆவணமும் விலைபேச முடியாத பெறுமதி மிக்கவை. உயிரை விடவும் பெறுமதி வாய்ந்தவை அத்தனை ஆவணங்களும்.

 

எதிரி முன்னேறி வரவர அத்தனை ஆவணங்களையும் பின்னகர்த்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் வந்தது. ஏற்கனவே ஒருவரின் நிர்வாகத்தின் கீழிருந்து அனைத்தையும் மீளச்சீர்படுத்தி வேகவேகமாய் அனைத்தையும் இடம் மாற்றி பாதுகாப்பாக வன்னிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் சக போராளிகளின் துணையோடு பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்த்தார்.

 

இதுவொரு சவாலான பணியாகவே இருந்தது. எல்லோரையும் உள்வாங்கி பொறுப்பைக் கொடுத்து ஆவணங்களை நகர்த்த முடியாத அவசரம். தனது பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் காட்டிய அர்ப்பணிப்பு , பொறுப்புணர்வு ஒரு போராளியின் கடமையை உணர்த்தியது. குறித்த போராளிகளை மட்டுமே நியமித்து குறித்த கால இடைவெளிக்குள் அனைத்தையும் பத்திரப்படுத்திய மாதவன் மாஸ்ரரின் பணியை பொட்டு அம்மான் பாராட்டி கௌரவித்திருந்தார்.

000             000           000

புலனாய்வுத்துறையின் வளர்ச்சியும் பணிகளின் விரிவாக்கமும் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பல்பரிமாண ஆற்றலும் எங்கும் சென்று வென்று வரும் வல்லமையை வளர்த்திருந்த காலத்தின் ஒரு பகுதியது. எதிரியைவிடவும் எம்மவர்களின் தொல்லைகள் காட்டிக்கொடுப்புகள் சகோதர இயக்கங்களின் அநியாயங்கள் எல்லைமீறியிருந்த காலம்.

 

பணிகளுக்காக எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயங்கத் தொடங்கிய போராளிகளை எதிரி இனங்காண்கிறானோ இல்லையோ மற்றைய இயக்கங்கள்; இனம் கண்டு பணிகளில் நின்ற போராளிகளை ஆதரித்த குடும்பங்கள் அவர்களின் தங்கிடங்களை தேடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 

இந்த நிலமையிலிருந்து போராளிகளை பாதுகாப்பதோடு ஆதரவாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கும் சமவேளை சகோதர இயக்கங்களுடனான ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட பொட்டு அம்மான் அதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தை மாதவன் மாஸ்ரரிடம் விளக்கி ஒரு நிர்வாக அலகை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார்.

 

இவ்விடத்தில் அரசியல் போராளியாகவும் மாதவன் மாஸ்ரரின் ஆழுமை வெளிப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறையின் மூலவேரான மனிதர் அரசியல் பணியிலும் பணிகளை நகர்த்தவும் பணியாற்றவும் முடியுமென்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரும் வகையில் அவரது அரசியல் பணிகள் அமைந்தது.

 

இப்பணியில் முக்கியமான பொறுப்புக்களில் இருந்த புலனாய்வுத்துறைப் போராளிகளையும் பொட்டு அம்மான் கொடுத்திருந்தார். இப்பணியில் மாதவன் மாஸ்ரரிற்குத் துணையாக ஞானவேல் அவர்கள் பணியாற்றத் தொடங்கியிருந்தார். இம்முயற்சியே பின்னாட்களில் சகோதர இயக்கங்கள் அரசியல்வாதிகளை புலிகளோடு ஒற்றுமைப்பட்டு அரசியல்பணிகளைச் செய்வதற்கான மூலவேராக இருந்தது.

 

பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒருங்கிணைவு மற்றைய இயங்கங்களுடனான புரிந்துணர்வு செயற்பாடுகள் யாவுக்கும் பொட்டு அம்மானின் திட்டமிடல்களும் செயற்பாடுகளும் புலனாய்வுப் போராளிகளின் பணிகளும் மாதவன் மாஸ்ரரின் உழைப்புமே காரணம்.

ஓவ்வொரு இயக்கங்களுடனும் தொடர்புகளைப் பேணவும் ஒவ்வொரு இயக்கங்களுடனும் இணைந்து பணியாற்றவும் கூடிய வகையில் ஒவ்வொரு இயக்கங்களுக்குமான தனித்தனியான புலனாய்வுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அக்கட்டமைப்பு மூலம் அவர்களுடனான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

 

கடந்தகால தவறுகள் , புரிதலின்மைகளினால் ஏற்பட்ட கசப்புணர்வுகள் யாவையும் இந்தக் கட்டமைப்பு கணிசமான அளவு மறந்து பணிகளைச் செய்யவும் காரணமாகியது. எனினும் பழைய தவறுகளை மட்டுமே எண்ணையூற்றி வளர்த்து அதில் குளிர்காயத்துடித்தவர்களுக்கு மத்தியில் சகோதர இயக்கங்களுடனான தொடர்பாடல் பணிசார்ந்த வேலைகள் இறுக்கமடைந்தது.

இதில் ரெலோ , ஈ.பீ.ஆர்.எல்.எவ் போன்ற இயக்க நிர்வாகங்களோடு ஆரம்பமே மிகவும் சிறந்த புரிதல் , தாயகம் எனும் ஒரே நோக்கத்திலான பணிகளும் செய்யும் வாய்ப்பை உருவாக்கியதில் கணிசமான பங்களிப்பையும் போராளிகளை உருவாக்கியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கென்பது அளப்பரியது.

 

ஒருகாலம் எதிரும் புதிருமாக இருந்த நிலமையை மாற்றி புலிகளின் புலனாய்வுப் போராளிகளுக்கான தடைகள் இல்லாத ஆதரவை இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிய இயக்கங்களும் , இயக்கப் பிரமுகர்களும் வழங்கி தங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதன் வெளிப்பாடே சமாதான காலத்தில் ஒரே மேசையில் அனைவரும் ஒன்றிணையக் காரணமாய் அமைந்தது. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. அந்த மாற்றம் புலிகளுக்கும் ,மற்றைய சகோதர இயக்கங்களுக்கும் இடையில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. இம்மாற்றத்தின் வேராக நின்றவர் பொட்டு அம்மான் அவர்கள்.

000               000               000

ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ம் திகதி சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது கைச்சாத்திடப்பட்ட பின்னர் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற 6கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் நடைபெற்றிருந்தது. இப்பேச்சுவார்தைகள் யாவும் இலங்கைக்கு வெளியில் வெளிநாடுகளில் நடைபெற்றிருந்தது.

 

புலிகள் அனைத்துலக சமூகத்திற்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கி இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். ஆயுதங்களோடு போர்புரிந்த அமைப்பானது அரசியல் ரீதியான விடுதலையை விரும்பியதன் அடையாளமாக இப்பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கேற்றார்கள்.

 

இக்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாயகத்திற்கு சென்று புலிகளின் அனைத்துதுறைசார் போராளிகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து  செல்லும் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி நிலத்தில் வாழும் போராளிகளுக்கும் மக்களுக்குமான இணைப்புப் பாலமாக மாதவன் மாஸ்ரர் ஆற்றிய பங்கானது புலத்திலிருந்து மாதவன் மாஸ்ரரின் நிர்வாக அலகின்கீழ் பணியாற்றியவர்கள் அனைவருமே மாதவன் என்ற மலையின் சிகரம் தொடவல்ல ஆற்றலை பண்பை அறிந்திருந்தனர்.

 

இதேவேளை இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வாழ்ந்த அனைத்து சமூகங்களுடனும் நல்லுறவை வளர்த்து புலிகளுக்கும் அந்த மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்தியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கு வெளியில் வராத உண்மையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

 

நம்பியிருந்த சமாதான காலம் தமிழருக்கான விடுதலையை நிம்மதியான வாழ்வைத் தருமென்று நம்பிய நம்பிக்கைகள் எல்லாம் மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியது. அனைத்துலகமும் புலிகள் மீதே தங்கள் முழுமையான பலத்தையும் பயன்படுத்தத் தொடங்கியது. இலங்கையரசின் அத்துமீறல்கள் யாவற்றிற்கும் அனைத்துலக சமூகம் ஆதரவாகவே நடந்து கொண்டது.

2009மேமாதம் எங்கள் கனவுகள் , இலட்சியப் பயணத்தின் நிமிர்வுகள் யாவுமே அனைத்துலகத்தின் ஆதரவோடு பலியெடுக்கப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் புலிகளின் பலம் முடக்கப்பட்டது. வாழ்வோமாயினும் போராடுவோம் இல்லை வீழ்வோமெனினும் இறுதிவரை போராடிச்சாவோம் என்ற நிலமையில் புலிகள் அனைத்துலக பலத்தோடு போராட வேண்டிய நிலமைக்குத் தள்ளியது உலகு.

 

பெரும் பலங்களாக விளங்கிய தளபதிகளும் போராளிகளும் இறுதிச்சமரில் பங்கேற்றார்கள். எல்லாரையும் போல மாதவன் மாஸ்ரரும் தனது முடிவை களத்திலே எழுதும் முடிவையெடுத்தார். தனது துணைவியோடு இணைந்து தனக்கான பணிகளோடு களத்தில் நின்றார்.

திருமண பந்தத்தில் இணைய மறுத்து தனது இலட்சியத்தில் மட்டுமே கவனமாக இருந்தவர் மாதவன் மாஸ்ரர். ஆனாலும் திருமண பந்தத்தில் இணைய வேண்டுமென பலமுறை தலைமையாலும் தளபதிகளாலும் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டேயிருந்தார். தேசம் விடியும் வரை தேசக்காதலை மட்டுமே சுமக்கப் போவதாய் விடாப்பிடியாக நின்றார்.

 

எனினும் தலைமையின் தொடர்ந்த வேண்டுதலுக்கு மதிப்பழித்து நீண்டகால இழுத்தடிப்பின் பின்னரேயே திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். குடும்ப பந்தத்தையும் விட தேசபந்தத்தையே ஆழமாக நேசித்த மனிதன். அவரது துணைவியாரும் புலனாய்வுத்துறைப் போராளியாகவே அமைந்தது அவரது பணிகளுக்கு மேலும் ஆதரவையும் வழங்கியது.

தங்களது இறுதி முடிவு தப்பித்தல் அல்ல இறுதிவரை போராடிச் சாதல் என்ற முடிவைத் தனது அன்புக்கினிய தோழமைகளுக்கு அறிவித்துவிட்டு களத்தில் நின்றார்.

 

18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 30வருட விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு புலிகளின் ஆயுதங்களும் மௌனித்துக் கொண்டது. போராடியே தமிழினத்தின் அடையாளத்தை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்த புலிகளின் வரலாறு அந்தக் கடலைகளோடு கரைந்து கொண்டிருந்தது.

 

ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்கால் அலைகளோடு உயிர்களின் துயரோசைகள் கலந்தது. இறுதிவரை இலட்சியம் சுமந்து ஒன்றாய் வாழ்ந்த தோழர்கள் தளபதிகள் போராளிகளோடு மாதவன் மாஸ்ரரும் தனது முடிவைத் தானே தேர்ந்து விழிமூடினார்.

புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சி , இராணுவ , அரசியல் வளர்ச்சி , சமூக பொருளாதார , உலக அரசியலுடனான மாற்றங்களுக்கு ஏற்ப புலிகளின் அனைத்து வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் மாதவன் மாஸ்ரர் என்ற மாபெரும் ஆற்றல் இருந்ததும் வளர்ந்ததும் வரலாறாக….!

 

புலிகளின் போரியல் வெற்றிகளை வழிநடாத்திய தளபதிகள் பலருடனும் நட்பும் நெருக்கமும் கொண்டிருந்த மாதவன் மாஸ்ரரிடம் தங்கள் திட்டமிடல்களுக்கான ஆலோசனைகள் பெற்று தாக்குதல் வியூகங்கள் அமைத்து சண்டைகளை வழிநடாத்திய பல தளபதிகள் யாவரோடும் மாதவன் மாஸ்ரரும் அழியாத வரலாறாக மனங்களில் நிறைகிறார்.

 

உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த வரலாறுகள் ஒவ்வொன்றினுள்ளும் புலிகளும் மாவீரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள். மாதவன் மாஸ்ரர்களாகவும் மரணத்தை வென்ற புலிவீரர்களாகவும் என்றென்றும் துளிர்த்துக் கொண்டேயிருப்பார்கள் புலிகள்.

 

- நினைவுப்பகிர்வு - சாந்தி ரமேஷ் வவுனியன் -

 

Edited by shanthy
  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளின் போரியல் வெற்றிகளை வழிநடாத்திய தளபதிகள் பலருடனும் நட்பும் நெருக்கமும் கொண்டிருந்த மாதவன் மாஸ்ரரிடம் தங்கள் திட்டமிடல்களுக்கான ஆலோசனைகள் பெற்று தாக்குதல் வியூகங்கள் அமைத்து சண்டைகளை வழிநடாத்திய பல தளபதிகள் யாவரோடும் மாதவன் மாஸ்ரரும் அழியாத வரலாறாக மனங்களில் நிறைகிறார்.

 

உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த வரலாறுகள் ஒவ்வொன்றினுள்ளும் புலிகளும் மாவீரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள். மாதவன் மாஸ்ரர்களாகவும் மரணத்தை வென்ற புலிவீரர்களாகவும் என்றென்றும் துளிர்த்துக் கொண்டேயிருப்பார்கள் புலிகள்.

 

Posted

உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.

Posted

90அல்லது 91 காலப்பகுதியில் தென்னிலைங்கையில் நின்று வேலை செய்வது கடினம் என்று போராளிகள் கூறுயது கேட்டு பொட்டம்மான் தான் புறப்பட்டு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்று இங்கிருத்து ஓமந்தை ஊடா வன்னி வந்தார் அவர் வந்து மூன்றாம் நாள்தான் பொட்டம்மான் தென்னிலங்கை வந்த செய்தி அரசுக்கு தெரிந்திருந்தது என்று சொன்னார்கள் ...அவர் ஒரு லாரி ரைவருக்கு உதவியாளனா வெற்றிலையும் போட்டு ..தலைப்பா கட்டுடன் வந்திறங்க போராளிகளே இனம் காணவில்லையாம் ...

 

இது ஒரு புலனாய்வு போராளி சொல்லி கேட்டு இருக்கிறேன் உண்மையா சாந்தி அக்கா .

  • 2 weeks later...
Posted

வீர வணக்கங்கள்.

Posted

கருத்திட்ட விருப்பிட்ட அஞ்சலித்த அனைவருக்கும் நன்றிகள். மாதவன் மாஸ்ரர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் முதுகெலும்பென்றால் அது மிகையாகாது.  இன்னும் பலநூறு விடயங்கள் எழுதப்படவில்லை. காலம் கைகூடும் போது மீதி விவரங்களும் எழுதப்படும்.


90அல்லது 91 காலப்பகுதியில் தென்னிலைங்கையில் நின்று வேலை செய்வது கடினம் என்று போராளிகள் கூறுயது கேட்டு பொட்டம்மான் தான் புறப்பட்டு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்று இங்கிருத்து ஓமந்தை ஊடா வன்னி வந்தார் அவர் வந்து மூன்றாம் நாள்தான் பொட்டம்மான் தென்னிலங்கை வந்த செய்தி அரசுக்கு தெரிந்திருந்தது என்று சொன்னார்கள் ...அவர் ஒரு லாரி ரைவருக்கு உதவியாளனா வெற்றிலையும் போட்டு ..தலைப்பா கட்டுடன் வந்திறங்க போராளிகளே இனம் காணவில்லையாம் ...

 

இது ஒரு புலனாய்வு போராளி சொல்லி கேட்டு இருக்கிறேன் உண்மையா சாந்தி அக்கா .

 

இவ்விடயம் பற்றி எனக்கு தெரியாது அஞ்சரன். ஒரு முதுநிலைத் தளபதியை இப்படி ஒரு பகுதியில் சென்று வரக்கூடிய அனுமதியை சக தளபதிகள் சரி போராளிகள் சரி அனுமதித்திருக்கமாட்டார்கள். ஏனெனில் புலனாய்வுத்துறையின் அதிவேக வளர்ச்சியானது 89களில் வேகப்படுத்தப்பட்டு 90களில் அதி வளர்ச்சி கண்டது. அதில் பொட்டம்மான் அவர்களை நம்பியே தலைவர் அப்பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். இப்படியிருக்க நீங்கள் குறித்தது போல ஒரு விசப்பரீட்சையை செய்திருக்க வாய்ப்பிருக்காது என்றே நினைக்கிறேன்.

கருணாவுடனான முறுகல் தொடங்கிய காலமும் 90 என்பதால் நடைமுறையில் இத்தகைய பலப்பரீட்சையை பரீட்சித்துப் பார்க்கக்கூடிய வழிகள் இருக்க முடியாது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.