Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நீங்கள் என்மீது காட்டுகின்ற அன்புக்கு எனக்கு கிடைக்கும் இந்த விருதை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்”. என்றார் டொமினிக் ஜீவா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“நீங்கள் என்மீது காட்டுகின்ற அன்புக்கு எனக்கு கிடைக்கும் இந்த விருதை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்”. என்றார் டொமினிக் ஜீவா.

-மல்லியப்புசந்தி திலகர்-

ஈழத்து தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் 401 இதழ்களை தொடர்ச்சியாக வெளியிட்டு சாதனை படைத்த மல்லிகை டொமினிக் ஜீவா அவர்களுக்கு கனேடிய தமிழ் இலக்கிய தோட்டம் வழங்கிய சிறப்பு இயல்விருது வழங்கும் விழா கடந்த வியாழன் 17-07-2014 அன்று கொழும்புத் தமிழச்சங்கத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் எஸ்தில்லைநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்களும் ஜீவாவின் அபிமானிகளும் கலந்து சிறப்பித்தனர்.

விளிம்பு நிலை சமூகத்தில் இருந்து எழுந்த ஜீவாவின் இலக்கிய பிரவேசம் அதுவரை இருந்து வந்த ஈழத்து தமிழ் இலக்கிய பாரம்பரியத்துக்கு ஒரு மாற்றாக அமைந்தது. சிறுகதையாசிரியராக வெளிப்பட்ட ஜீவா மல்லிகை எனும் இலக்கிய சிற்றிதழின் ஆசிரியராக, வெளியீட்டாளராக ஐம்பது வருடங்களுக்கு மேல் பணி செய்து தனது கடின உழைப்பால் பெரும் சாதனை புரிந்துள்ளார் என தலைமையுரையில் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் குறிப்பிட்டார்.

வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் சபா ஜெயராசா ஜீவாவின் இலக்கிய வருகையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். டொமினிக் ஜீவா அவர்களும், கே.டானியல் அவர்களும் இந்த விளிம்பு நிலை மக்களை அவரது மொழி நடையிலேயே இலக்கியமாக்கி பெரும் சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்கள். இன்று தெணியான் அதனை தொடர்கிறார் கம்யூனிச சிந்தனையாளரான கார்த்திகேசு மாஸ்டரின் வழிகாட்டலைப் பெற்ற இவர்கள் மார்க்சிய கோட்பாடுகளையோ, தத்துவங்களையோ தமது படைப்புகளில் திணிக்காது மக்கள் மொழியிலேயே அதனை வெளிப்படுத்தியவர்கள். தனது மல்லிகை இதழினூடாக மார்க்ஸிய, இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்களுக்கு மாத்திரமல்லாது கம்யுனிஸ்ட் கட்சியை சாராதவர்களினதும், கட்சியை எதிர்த்தவர்களினதும் எழுத்துக்களைக் கூட வெளிக்கொணர்ந்தவர் ஜீவா. தான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராயினும் கட்சி, மத, இன பேதங்களை தனது மல்லிகையில் காட்டாதவர் என தெரிவித்தார்.

வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் சி.மௌனகுரு ‘நாங்கள் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் பேராசிரியர் செல்வநாயகம் அவர்கள் எங்களுக்கு பேராசிரியராக இருந்தார். அந்நாளில் நாங்கள் மல்லிகை பற்றியும் அதன் ஆசிரியர் ஜீவா அவர்கள் பற்றியும் நீங்கள் ஏதும் பேசுவதில்லையே என அவரிடம் கேட்டபோது , அதற்கு காலம் பதில் சொல்லும் எனக் குறிப்பிட்டார். அண்மையில் எனக்கு கனடாவில் இருந்து தொலைபேசி அழைப்பெடுத்த பேராசிரியர் கனகநாயகம் அவர்கள் டொமினிக் ஜீவா அவர்களின் விருது வழங்கல் விழாவில் தாங்களும் உரையாற்ற முடியுமா? எனக்கேட்டார். சரி என ஒத்துக்கொண்டேன். இந்த பேராசிரியர் கனகநாயகம் பேராசிரியர் செல்வநாயகத்தின் புதல்வர் என்பதுதூன் இதிலுள்ள சிறப்பு. 1960 களில் ஜீவா பற்றி காலம் பதில்சொல்லும் என தந்தையார் குறிப்பிட்டிருந்தார். இன்று ஐம்பது வருடங்கள் கழித்து அவர் மகனே காலத்தை உணர்ந்தவராக ஜீவாவுக்கு விருது வழங்கும் குழுவில் ஒரு அங்கத்தவராக உள்ளார். இது ஜீவாவின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டார்.

அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், ஜீவாவுக்கு முன்பதாக இலங்கையர் நால்வருக்கு கனடா – தமிழ் இலக்கிய தோட்டத்தின் இயல் விருது கிடைத்துள்ளது. தலாத்துஓயா கே.கணேஷ், பத்மநாப அய்யர், தாஸீஸியஸ், எஸ்.பொன்னுத்துரை ஆகியோரே இந்த நால்வருமாவர். ஏனைய பத்துப்பேரும் இந்தியர்கள், வெளிநாட்டவர்கள். தலாத்துஓயா கே.கணேஷ் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டபோது அதன் நிறுவுனர்களில் ஒருவரான பேராசிரியர் செல்வா கனகநாயகம் இலங்கைக்கு விருதுடன் வந்திருந்தார். இன்று எமது பூரணி ஆசிரியர் என்.கே.மகாலிங்கம் வருகை தந்துள்ளார். அன்று மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் அந்த விழாவை ஒழுங்கமைத்திருந்தது. இன்று குமரன் பதிப்பகம் உள்ளிட்ட நண்பர்கள் இந்த விழாவை ஒழுங்கமைத்துள்ளார்கள். அன்று கே.கணேஷ் அவர்களுக்கு இயல்விருது வழ்கப்பட்டபோது ‘காலம்’ சஞ்சிகையின் ஆசிரியர் திரு.செல்வம் என்னைத் தொடர்பு கொண்டு யார் இந்த கணேஷ என கேட்கிறார்கள். அவர் பற்றிய கட்டுரையொன்று தரமுடியுமா என கேட்டிருந்தார். குறிப்பாக மலையக எழுத்தாளர்களை அப்படி கேட்கும் நிலை அது. நான் கணேஷ் பற்றி எழுதியிருந்தேன்.

கணேஷ் அவர்களின் படத்தை ‘மல்லிகை’யின் முன் அட்டையில் பிரசுரிக்கும் விருப்பத்தோடு, கணேஷ் பற்றிய ஒரு கட்டுரையை ஒன்றும் எழுதும்படி மல்லிகை ஜீவா அவர்கள் ஒரு நண்பரிடம் கேட்டிருந்தார். அக்கட்டுரை மிகவும் தாமதமாகவும், ஜீவா விற்கு அக்கட்டுரை திருப்தியளிக்காத காரணத்தாலும் தானே கே. கணேஷ் பற்றிய முழுமையான கட்டுரையை எழுதி கணேஷ் அவர்களின் தோற்றத்துடன் இணைந்த அட்டைப்படத்தையும் மல்லிகையில் போட்டவர் மொமினிக் ஜீவா அவர்கள்.

ஜீவா அவர்கள் 1960 ஆண்டு தனது சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு பெற்றவர். அப்போதுதான் நான் எழுதவே ஆரம்பிக்கிறேன். ஆனால் மல்லிகை தனது வெள்ளிவிழா சிறப்பிதழ் வெளியிட்ட போது அந்த விழாவுக்கு தலைமை வகிக்க என்னை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றவர் டொமினிக் ஜீவா.

யாராவது ஒருவரை ஓரம் கட்ட நினைத்தால் அவர்களை தூக்கிவிடுவதில் ஜீவா முன்னின்று செயற்பட்டவர். அவரது மல்லிகை அந்த பணியை சிறப்பாக செய்தது. அவரது வாழ்க்கை அனுபவம் ஒடுக்கப்படும் இன்னொரு ஜீவனுக்காக இரங்கும் மனத்தினை அவருக்குக் கொடுத்திருக்கிறது என குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்ட 401 மல்லிகையில் 292 மல்லிகை இதழ்களை நூலகம் நிறுவனத்தினர் எண்ணிம வடிவத்தில் கொண்டுவந்து அரும்பணி செய்துள்ளனர். இதில் விடுபட்டிருக்கும் மல்லிகை இதழ்களை கைவசம் இருப்போர் அவர்களுக்கு கொடுத்து உதவினால் 401 மல்லிகை இதழ்களையும் எண்ணிம வடிவத்தில் எதிர்கால சந்ததி படிக்கக்கூடியதாக இருக்கும். இலக்கிய சாதனையாளரான டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படும் இயல்விருது காலம் தாழ்த்தியேனும் வழங்கப்படும் மிகவும் பொருத்தமான தெரிவு என தெளிவத்தை ஜோசப் தனதுரையில் குறிப்பிட்டார்.

அடுத்தாக சிங்கள எழுத்தாளர்கள் சார்பில் தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளர் கமல் பேரேரா வாழ்த்துரை வழங்கினார். சிறுவயதில் ஆசிரியரினால் விரட்டப்பட்ட ஜீவா படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். சிலவேளை படித்துப் பட்டம் பெற்றிருந்தால் ஒரு சாமானியராகவே வாழ்ந்திருப்பார். ஆசிரியரின் புறக்கணிப்பு காரணமாக போராட்ட குணத்துடன் புறப்பட்ட ஜீவா அவர்கள் இன்று சாதனையாளராக நிமிர்ந்து நிற்கிறார் எனத் தெரவித்தார்.

அவரது உரையை மொழிபெயரத்து வழங்கிய மல்லிகையுடன் நெருக்கமாக பணியாற்றிய திக்குவலை கமால் அவர்கள் தனது வாழ்த்துரையில், கடந்த மாதம் தனது 88வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜீவா அவர்கள் தனது ஏற்புரையில் ‘நான் ஒரு ஐந்தாண்டுத்திட்டம் வைத்திருக்கிறேன்’ எனக்குறிப்பிட்டு எம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவருக்கு தூரநோக்கும் இலக்கும் எப்போதும் இருந்து வந்துள்ளது. மல்லிகை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தாலும் தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களது படைப்புகள் மாத்திரமன்றி சிங்கள படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும், தமிழில் எழுதக்கூடிய சிங்கள எழுத்தாளர்களின் படைப்புக்களையும் மல்லிகையில் வெளியிட்டுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

விருதுக்கான அறிவிப்பினை கவிஞர்.மேமன் கவி வாசிக்க கனேடிய தமிழ் இலக்கிய தோட்டத்தின் சார்பில் வருகை தந்திருந்த எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்கள் விருதினை வழங்கிவைத்தார். விழாத்தலைவர் பேராசரியர் தில்லைநாதன் மலர்மாலை அணிவித்தார். நூலகம் நிறுவனத்தின் பணிப்பாளர் சேரன் மல்லிகை இதழ்கள் அடங்கிய இறுவட்டினை டொமினிக் ஜீவா அவர்களுக்கு கையளித்தார்.

திரு.டொமினிக் ஜீவா அவர்கள் தனது ஏற்புரையில், ‘இங்கு கூடியிருக்கும் எல்லோரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். நீங்கள் என்மீது காட்டுகின்ற அன்புக்கு, எனக்கு கிடைக்கும் இந்த விருதை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். 12வயதாக இருக்கும்போது பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியார் செய்த கணக்கினைப் பிழை என்றேன். மாணவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். அந்தக் கணக்கினை கரும்பலகையில் செய்யுமாறு வாத்தியார் கேட்டார். நானும் செய்தேன். அது சரியா பிழையா எனத் தெரியாது. தன் கை வசம் வைத்திருந்த சோக்கட்டியால் எனது முகத்தில் அறைந்து ‘ஏன்டா இங்க வந்து அறுக்கிறியள், போய் சிரையுங்கோடா’ என்று என் அப்பன் தொழிலைக்காரணம் காட்டி என்னை விரட்டினார்.

அன்று ஒரு லட்சியத்தோடு வெளியேறினேன். இதுதான் எனது போராட்டம் எனவும் தீர்மானித்தேன். அமெரிக்காவைப்பார், சீனாவைப்பார், சிங்கப்பூரைப் பார் என்று இல்லாமல் யாழ்ப்பாணத்தைப்பார் என துணிந்து நின்றேன். என்னுடைய திமிர் என்னை நிமிர்ந்து நிற்க வைத்தது. என்னுடைய உழைப்பு என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது. என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள். என்னைப் பலரும் ஏசியும், பேசியும், விமர்சித்தும் புகழ்ந்தும் பாராட்டியுமே இந்த நிலையை அடைந்தேன். சைக்கிளை உருட்டிக்கொண்டு கடற்கரை வழியே மல்லிகை விற்றுக்கொண்டு செல்கையில் ஒரு பல்கலைக்கழக மாணவன் இருபது ரூபா கொடுத்து மல்லிகை ஒன்றை வாங்கினான். சந்தோஷமாகக் கொடுத்தேன். வாங்கியவன் அதே வேகத்தில் அதனைக் கிழித்து என் மீது வீசினான். நான் கோபமடையவில்லை. பொது வாழ்வுக்கு வந்தால் கோபம் கூடாது. நான் அவனுக்குச் சொன்னேன் ‘தம்பி உன்னை நான் கோபிக்க மாட்டேன். நீ மல்லிகை படிக்காவிட்டாலும் பரவாயில்லை. 20 ரூபா காசு கொடுத்துத்தானே வாங்கி கிழிக்கிறாய். பரவாயில்லை’ என்று விடைபெற்றேன் என சுவாரஷ்யமாக உரையை நிறைவு செய்தார்.

நன்றியுரை வழங்கிய என்.கே.மகாலிங்கம் அவர்கள் கனடா தமிழ் இலக்கிய தோட்டம் கடந்த பதினைந்து வருடகாலமாக எவ்வித பக்கசார்பற்ற முறையிலேயே இந்த இயல்விருதினை வழங்கி வருவதாகவும் இதில் யாருக்காவது விருது வழங்கப்பட வேண்டுமெனில் அவருக்காக வேறு ஒருவர் பரிந்துரைத்து விண்ணப்பிக்கலாம் எனவும் கேட்டுக்கொண்டார். ஜீவா அவர்கள் எங்களது விருதினை ஏற்றுக்கொண்டமைக்காக கனடா தமிழ் இலக்கிய தோட்டம் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

குறுகிய கால அறிவிப்பில் ஜீவா மீதான அபிமானத்தின் பேரில் பல இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்பித்த பெரும் நிகழ்வாக ‘மல்லிகை’க்கு இலக்கியத் ‘தோட்டம்’ வழங்கிய விருது விழா அமைந்திருந்தது.

http://www.thuuu.net/?p=1904#more-1904

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டொமினிக் ஜீவா: அழுதபிள்ளை வாங்கிய இனிப்பு!

வடபரவை நந்தன்

1910143_805048182861523_6149012385406436

கடந்த சில தினங்களின் முன்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஒரு விழா நடந்தது. கனடா இலக்கிய தோட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வு. மொமினிக் ஜீவாவிற்கு இயல்விருது வழங்கப்பட்டது. மிகச்சாதாரண ஒரு நிகழ்வாக- ஒரு ஜோதிடப் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வைப் போல- எல்லாம் நடந்து முடிந்தது. வழமையான தமிழ்ச்சங்க கூட்டம்- மாலைப்பொழுது போக்க வருபவர்கள்- வந்தார்கள். அது தவிர, அங்கொன்றும் இங்கொன்றுமாக இடதுசாரி, தலித்திய, பின்நவீனத்துவ, விளிம்புநிலை குரல்கள் என தங்களை அடையாளப்படுத்தும் சிலர் வந்திருந்தனர்.

கனடா இலககிய தோட்ட விருதை அறிந்திராத நண்பர்களிற்காக ஒரு மிகச்சுருக்கமான குறிப்பு. கனடா இலக்கிய தோட்ட விருதெனப்படுவது, கனடாவில் இருக்கும் நான்கைந்து பேர் சொந்தக்காசில் செய்யும் சூனியம். அந்த விருது பற்றிய மேலதிக விபரங்கள் உலகத்திற்கு தெரியாது. சிதம்பரம் கோயிலின் கர்ப்பக்கிரக இரகசியத்தை போல என்றும் வைக்கலாம். வருடா வருடம் திடீர் திடீரென முகப்பத்தகத்தில் சிலர் பகிர்வார்கள்- இந்த வருடம் இன்னார் என. இதுவரை சுந்தர ராமசாமி, கணேஸ், பத்மநாபஐயர், எஸ்.பொ, தெளிவத்தை ஜோசப், எஸ்.ரா என ஒரு நீளமான பட்டியலிற்கு அது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் உள்ள ஒரேயொரு பெறுமதியென்னவென்றால், ஒரு கனடா ரிக்கற்றும், இலங்கைப்பணத்தில் கிடைக்கும் மூன்று இலட்சம் ரூபாவும். முன்னது டொமினிக் ஜீவாவிற்கு கிடைக்கவில்லை. பின்னது கிடைத்தது. அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்போ விருதை கேள்வி கேட்கலாமா? அதுவும் முடியாது.

நான் எனது காசில் ஒரு நண்பனை கூப்பிட்டு, பணிசும் வாழைப்பழமும் வாங்கிக் கொடுக்கிறேன் என வைத்துக் கொள்வோம். அதை நீங்கள் கேள்வி கேட்கலாமா? அடுத்த தெருவில் ஒருவன் பசியோடு காத்திருக்க, நீ எப்படி உனது நண்பனிற்கு விருது கொடுத்தாய் என? முடியாது தானே. My car. My petrol என்றுதான் வரும்.

இலக்கியம், அரசியல், மனித வாழ்க்கை என்பன எல்லாம் இந்த வகையானவைதான். எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் தெரிவுகள் உள்ளன. பக்கத்து வீட்டுக்காரன் பதினைந்து பவணில் மனைவிக்கு தாலி செய்து போட்டால் யாரும் கேட்க முடியாது. ஆனால் கேட்கவே முடியாதென்றுமல்ல. இந்த விடயங்கள் எல்லாம் அவையவைக்கான நெறிமுறைகளை கொண்டவை. அறத்தையுடையவை. அதற்காக வீதியில் போகும் எல்லா மனிதர்களையும் நாம் இழுத்து வைத்து, அறச்சீற்றம் கொள்ளவும் முடியாது. அதேபோல, பொதுவாழ்விற்கு வந்தவரொருவரை நாம் சாதாரணமாகவும் விட்டுவிடவும் முடியாது. இலக்கியமும் இப்படித்தான். விருது கொடுப்பது அவர்கள் தெரிவு. ஆனாலும் பொதுஅரங்க செயற்பாடு என்பதன் அடிப்படையில் நாம் கேள்வி கேட்கலாம். இப்படியான கேள்விகள் வரக்கூடாதென கனடாவாசிகள் நினைத்தால், அவர்கள் செய்ய வேண்டியதொன்றுதான். இலக்கியத்திற்காக விருது வழங்குகிறோம் என அறிவிக்காகமல், வயதானலும் உடல்நலத்தை பேணிப்பாதுகாப்பதால் வழங்கப்படும் சுகாதாரவிருது என அறிவித்து விட்டு வழங்க வேண்டும்.

கனடா இலக்கிய தோட்டத்தின் விருது தேர்வு பற்றி இதுவரை யாருக்கும் தெரியாது. ஒருவேளை அமெரிக்காவின் அணுகுண்டு இரகசியங்கள் வெளிப்பட்டாலும் வெளிப்படலாமே தவிர, கனடாவின் இலக்கிய தோட்ட விருது தேர்வு முறைகள் வெளிவரப்போவதில்லை. அனேகமாக நான் நினைக்கிறேன், அங்கிருக்கும் நான்கைந்து பேர் அந்தந்த சூழல் நிலைமைக்கேற்ப இராஜதந்திரமாக செயற்பட்டு விருது வழங்குவார்கள் என நினைக்கிறேன். இது எடுத்தபாட்டில் வீசப்படும் கல் அல்ல. விருதுகளையும், விருது வழங்குனர்களையும் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்கள் இந்த முடிவிற்கு வரக்கூடும்.

ஈழத்தமிழர்களிடம் உள்ள இந்திய மயக்கம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கக்கா இருந்தாலும் இந்தியாப்பக்கம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலானவர்கள் அடம்பிடிப்பார்கள். இதில் இலக்கிய சூழலில் நிலைதான் பரிதாபம். அவர்கள் அனைத்திற்கும் இந்திய தயவில்த்தான் தங்கியிருக்க வெண்டும். கதைப் பாணியிலிருந்து, பிரசுரகளம், அங்கீகாரம் என அதன் உள் அரசியல்கள் சொல்லி மாளாது. இது எல்லாப்படைப்பாளிகளிற்குள்ளும் உள்ளதுதான். என்ன ஆளாளுக்கு அளவு வேறுபாடு இருக்கும். இதில் கனடாவிலுள்ள இந்த விருதுக்குழு அளவிற்கதிகமான விமர்சனங்களை சந்திப்பவர்கள்.

10494818_805048186194856_822154272679308

புலம்பெயர்ந்தவர்களில் ஒரு தரப்பினர், எதற்கெடுத்தாலும் தென்னிந்திய சினிமா நடிகர்களிடம்தான் ஓடுவார்கள். உள்ளூர் ஐயிற்றம் ஒன்று மேடையில் குத்தாட்டம் போடுவதை விட, நமீதாவந்து குத்துவதைத்தான் நம்மவர்கள் ரசிப்பார்கள். அந்த நம்மவர்கள் யார்? சமூகத்தைப்பற்றி சிந்திக்காமல், பொழுது போக்கில் லயித்து சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு செத்துப் போகும் சீவன்கள். அப்படித்தான் சமூகப்போராளிகள் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள். இந்தியா நடிகைகளிற்கு பதிலாக கவிஞைகளையும், கதாசிரியர்களையும் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னர் நமது சமூகத்தில் நிலவிய தீண்டாமை கொடுமையை போன்றதுதான் இந்த மனநிலை. இலக்கியத்தின் சாதியிது. பிரசுரங்கள், அங்கீகாரங்களிற்காக இந்தியர்களுடன் சமரசம் செய்து கொள்வது. உள்ளர்வாசிகளுடன் தொடர்பை பேணினால் நம்மையும் குறைந்தவர்கள் என இந்தியர்கள் நினைத்துவிடுவார்கள் என்ற பதகளிப்பு இவர்களிடம் நிறைந்திருக்கும்.

பிறகெப்படி இப்போது டொமினிக் ஜீவா விருது பெற்றார்? பிரான்சிலுள்ள ஒரு நண்பர் சொன்னார், தான் குழுவில் உள்ள காலம் செல்வத்திற்கு கறாரான கடிதம் போட்டு சண்டை பிடித்ததாக. அவரும் சில புலம்பெயர் தலித்திய எழுத்தாளர்கள் தொடர்ந்து இதற்காக கனடா ரீமுடன் முறுகுப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எத்தனை நாளைக்குத்தான் முறுகுப்பட்டு கொண்டிருப்பது? வில்லங்கத்தை முடித்துவிட கனடாரீம் முடிவு செய்து விருதை கொடுத்து விட்டது. இதுவரை பரவாயில்லை. ஒரு தலித்திய எழுத்தாளர் சொன்னார், கனடாவிலிருந்து விருதுக்குழு உறுப்பினர் ஒருவர் தன்னை தொலைபேசியில் அழைத்து பின்வருமாறு சொன்னாராம். “இத்தனை நாளாக ஜீவாவிற்கு விருது கொடுக்கச் சொல்லி சண்டை பிடிச்சியள். இப்ப குடுக்கிறம். இனி சண்டை பிடிக்க மாட்டியள்தானே” என.

நான் அவரிடம் கேட்டேன், நாளையே நான் ஒரு கத்தியுடன் போய், கனடா விருதுக்குழுவின் கழுத்தில் கத்தியை வைத்து கவிஞை அரியாத்தைக்கு விருது கொடுக்க சொன்னால், வழங்குவார்கள்தானே என. அவர் எதுவும் சொல்லவில்லை. ஆக, நமது தலித்திய போராளிகள் வெருட்டி ஒரு விருதை வாங்கி விட்டார்கள்.

10527442_805048196194855_184053316393263

உண்மையில் இந்த விருதை ஜீவா புறமொதுக்கியிருக்க வேண்டும். கிடைக்கின்ற விருதுகளையெல்லாம் பரிசீலனையின்றி ஒருவர் விருது வாங்க இரண்டு காரணமுள்ளது. ஒன்று விருதுகள், அவற்றின் அரசியல் பற்றி அக்கறையில்லாமல் வாங்கிக்குவிக்கும் மனோபாவம். இரண்டு, நிராகரிக்க மனசிருந்தாலும் தவிர்க்க முடியாத பொருளாதார நிலைகாரணமாக அதன் பணப்பெறுமதிக்காக வாங்குவது. ஜீவாவிற்கு இரண்டாவது பிரச்சனையில்லை. அப்பொழுது முதலாவது காரணமா?

இருக்கலாம் என்பதே என் எண்ணம். ஏனெனில், கடந்த பதினைந்து வருடங்களின் முன்னர் ஜீவாவை நான் படித்தபோது இருந்த ஜீவாவை நான்கு வருடங்களின் முன்னர் முதன்முதலில் நேரில் சந்தித்தபோது சந்திக்கவில்லை. ஏற்கனவேயிருந்த ஜீவா கொல்லப்பட்டு, அங்கீகாரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும் ஆசைப்படுபவராகவும், தவறான இலக்கிய மதிப்பீடுகளினால் தான் பற்றிய அளவிற்கதிகமான கற்பனைகளிலும் அவர் வாழ்ந்தார். நான் நினைக்கிறேன். இது தனிப்பட்ட ஜீவாவின் வீழ்ச்சியல்ல. இலங்கைத் தமிழ்ச்சூழலில் சாதியஇயக்கத்தின் வீழ்ச்சி. இது இன்று நேற்று ஆரம்பமான வீழ்ச்சியல்ல. 1990களின் தொடக்கத்திலிருந்து அந்த இயக்கம் வீழ்ச்சியடைய தொடங்கிவிட்டது. தனது நீண்டகால செயற்திட்டம் பற்றி மூலோபாயங்கள் இல்லாமை மற்றும் இதனை வழிநடத்தவல்ல முறையான தலைமைகள் இல்லாதமையினால் இந்த துயரம் நிகழ்ந்தது. இதன் விளைவுதான், அந்த இயக்கம் தன்னை இலங்கை அரசுடன் பிணைத்துக் கொண்டதும். இது தனியாக பேச வேண்டிய விடயம்.

இந்த விருது பற்றிய அறிவித்தல் வெளியானதும், இணையத்தளத்தில் இயங்கும் தலித்திய போராளிகள் வெளிப்படுத்திய அளவிற்கதிகமான உணர்ச்சிவெள்ளம் வேடிக்கை தருவதாக இருந்தது. இப்பொழுதுதான் என்றல்ல, அவர்கள் பல்வேறு விடயங்களிலும் வேடிக்கை காட்டிக் கொண்டுதான் இரக்கிறார்கள். சமகாலத்தில் அதிக வேடிக்கை வினோத காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருப்பவர்கள் இரண்டு தரப்பு. ஒன்று அதிதீவிர தமிழ்தேசிய தரப்பு. மற்றது இவர்கள்.

உண்மையில் இந்த விருதை அவர்கள் எதிர்த்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு பெண்ணை கட்டாயமாக பாலியல் வன்முறை செய்வதைப் போலத்தான் இந்த விருதும். விருதுக்குழுவை வெருட்டி வாங்கப்பட்டுள்ளது. வழக்கமான விருது வழங்கும் நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் மிக இரகசிய நிகழச்சியைப் போல கொழும்பில் நடத்தப்பட்டது. அதற்கு ஒரு நண்பர் சொன்னார், இப்படியானவர்களுடனான டீலிங்ககளை அவர்கள் தமது வீடகளிற்கு வெளியே கொல்லைப்பறங்களில்த்தான் வைத்துக் கொள்வார்கள் என. இந்த நிகழ்ச்சியை பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது. அக தன்வாழ்நாளின் இறுதியில் டொமினிக்ஜீவா தன் மீத ஒரு கறையையும் அணிந்து கொண்டு விட்டார். இந்த விடயத்தில் கறை நல்லதல்ல.

http://pagetamil.com/?p=9579

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.