Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் எப்பவரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் எப்பவரும்

கருணை ரவி

Makemedance_zpse44f6580.jpg

முள்ளிவாய்க்கால் அ.த.க.பாடசாலையில்தான் நிலானியை கண்டேன். பாடசாலையில்தான் வைத்தியசாலை இயங்குகிறது. சின்னக்கட்டடம். அதுக்குள் உயிருக்காகப் போரடிக் கொண்டிருப்பவர்கள் சிலர் தனித்துமாய்… சிலர் உறவினர்களோடும்… சிலர் உயிர் பிரியும் தறுவாயிலும் கிடந்தார்கள்.

வெளியில், மர நிழல்களில் கால் கைகளை இழந்தவர்களும் இறந்தவர்களும் குற்றுயிராய்த் துடிப்பவர்களுமாய்… வெறும் நிலத்திலும் தறப்பாள்களிலுமாய்க் கிடந்தார்கள்.

நான் சஜீத்தை இறந்தவர்களிலும் காயப்பட்டவர்களிலும் தேடிக்கொண்டிருக்கையில்தான் நிலானியைக் கண்டேன். கறுத்திருந்தாள். முன்னைய வடிவெதுவுமில்லை. இரண்டு பின்னல்கள். முன் மயிர் மங்கிக்கட். சிரித்த முகம். இப்போ எதையோ தொலைத்தவளாய் அரைச்சுவரில் முகத்தை குற்றிக்கொண்டு நின்றாள். வியர்வையில் கன்னங்கள் காய்ந்திருந்தன. அவள் என்னைக் காணவில்லை.

சஜீத் குடிதண்ணிக்கென்று மூன்று நாட்கள் குடத்துடன் போய். இன்னும் வரவில்லை. சஜீத் பரந்தன் பொடியன். வீட்டுக்காரர் மாத்தளனில் இருக்க, இவன் கரைவலை இழுத்துக்கொண்டு வலைஞர் மடத்தில் நின்றான். அப்ப மாத்தளனை ஆமியள் சுற்றி வளைத்து வீட்டுக்காரரைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். சஜீத் கழுவா வாடியில் இருந்தான். ஒரு போட்டுக்கு மேலே கடலைப்பார்த்துக்கொண்டு இருந்தான். பசியில் கொட்டாவி விட்டபடி இருந்தான். மாத்தளன் பக்கம் இயக்கத்தின்ர களஞ்சியங்களும் எண்ணைக்குதங்களும் எரிய, புகைகள் சுருள் சுருள்களாய் வானத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தன. அதை பார்த்தபடி இருந்தான்.

பொம்பிளையள் கடற்கரையில் மலம் கழிக்க வருவார்கள்;. அலைக்கு கரைகள் எங்கும் திரணை திரணையாக மலங்கள் உருளும். அதுக்குள்ளால்தான் கரைவலை இழுப்பார்கள். தூண்டில்காரர்களும் அதுக்கள் நின்று நூல்களை எறிவார்கள். சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்களையும் கரையால்தான் கொண்டுபோவார்கள். சில வாகனங்களை அலைகளும் கொண்டுபோகும்.

‘பொம்பிளையள் வெளிக்கு இருக்கிற இடத்தில உனக்கென்னடா அலுவல்?”

கட்டுமரம் வலிக்கப்போன மரியதாஸ் அவனைப்பேசினான். அந்த பாதுகாப்பு வலையத்துக்குள் மலங்கழிக்க எந்த வெளியோ பற்றை மறைவோ கிடையாது. மூன்று இலட்சம் சனங்களும் பாத்தி வெங்காயங்கள்போல நெருங்கியே இருந்தார்கள். மலம் கழிக்கும் பெண்களுக்கு பத்துயார் தூரங்களில் சனங்களின் கூடாரங்கள் இருக்கும். பெண்களை எவரும் விடுப்புப்பார்க்கமாட்டார்கள். செல்களின் பயத்தில் தேவையற்று எவரும் வெளிகளில் நிற்கமாட்டார்கள். பதுங்குகுழிகளோடே இருப்பார்கள். சஜீத்தை போல உறவுகளைப்பிரிந்தவர்களும் உறவுகளை இறந்தவர்களும் பசியில் அலைபவர்களுமே வெளிகளில் திரிவார்கள். மரியதாஸ் அவனை அதட்ட நானும் கிட்டப் போனேன். அப்பதான் அவன் நடந்ததை சொன்னான்.

சஜீத் தனித்து நிற்க மனம் இதப்படவில்லை. அவன் பிடிக்கப்படலாம் அல்லது விரட்டப்படலாம் என்ற அச்சம் உகுக்க பாவம் பார்த்து அவனை வீட்டுக்கு கூட்டிவந்தேன். ஒன்றும் கொடுக்காமல் சாப்பிடுறேன் என்ற மனக்கூச்சம் அவனுக்கு. ஒரு நேரமும் சும்மா இருக்கமாட்டான். விறகு வெட்டிக்கொண்டுவருவான். பங்கரைச் சுற்றி மண்மூடைகள் அடுக்குவான். நாற்றம் வீசினால் சுவடடித்துப்போய் செத்த சவங்களை கிடங்குவெட்டித் தாள்ப்பான்.

தண்ணிதான் பெரும் பிரச்சனை. கிணறு தோண்டத்தோண்டத் தூந்துபோகும். கிணறு தோண்டினவர்களும் தண்ணியள்ள விடமாட்டார்கள். வாளியை ஒழித்துவிடுவார்கள். அள்ளினால் தண்ணீர் வத்துதெண்டு கத்துவார்கள். சஜீத் எங்கேயோ போய் பெரிய எண்ணைப்பரலை கொண்டு வந்து ஒரு கிணறாக்கினான். மூன்று நாள்தான் கிணறு இருந்தது. நான்காம் நாள் இரவு கிணத்துக்குள் ஷெல் விழுந்து போட்டுது.

தண்ணிக்கு குடத்துடன்போன சஜீத் காணாமல் போன நாளிலிருந்து எனக்கு உறக்கமே வரவில்லை. யாரும் காணவில்லை என்றால் அவர்கள் செல்லில் இறந்திருப்பார்கள். அல்லது போருக்காகப் பிடிக்கப்பட்டிருப்பார்கள்.

‘கப்பல் வந்திட்டுது…”

நிலானிக்குப் பக்கத்தில் நின்ற சிவசோதி சொல்லிக்கொண்டு ஓடினான். கப்பல் என்றதும் அரிசி வருமா…? மா வருமா…? சீனி வருமா…? பால்மா வருமா…? என்ற நினைவு சஜீத்தைவிடப் பெருத்தது. கஞ்சியோடு மாதக்கணக்காக கிடந்த வயிற்றைத் தடவியபடி வைத்தியசாலையைப் பார்த்தேன். சுவர்வழிய, வழிந்த சனங்கள் வைத்தியரின் கூடாரத்தை மொய்த்தபடி நின்றார்கள்.

வந்தது சரக்குக்கப்பலல்ல நோயாளிகளை ஏற்றும் கப்பலாய்தான் இருக்கவேணும். அந்தக்கப்பல் என்றால்தான் வைத்தியரின் கூடாரத்தை மொய்த்து நிற்கிறார்கள். வைத்தியரின் உறுதிப்படுத்தல் கடிதம் பெற்றவர்களைத்தான் கப்பலில் ஏற்றுவார்கள். காயப்பட்டவர்களில் உயிருக்காகப் போராடிக்கொண் டிருப்பவர்களை மட்டும்தான் முதலில் கப்பலில் ஏற்றவேண்டும்.

வைத்தியரின் உறுதிப்படுத்தல் கடிதத்தோடு சிவசோதி சிரித்துக்கொண்டு இளங்கோவனுக்குப் பக்கத்தில் நின்றான். சிவசோதிக்கு சின்னக்காயம். அதுவும் கையில். சிவசோதி கிளிநொச்சியில் புடைவைக்கடை முதலாளி. பத்து இலட்சம் இயக்கத்துக்குக்கட்டிக் குடும்பத்தை இந்தியாவுக்கு அனுப்பிப்போட்டு கடையில் தனிய நின்றான். கடையில் வேலை செய்யிற சாமந்தியோடு கடையைப்பூட்டிவிட்டு உள்ளுக்கை இருக்க, காவல்துறை பிடித்தது. அடுத்தநாள் வெளியில் வந்து சொன்னார் சாமந்தி ‘ஸ்ரொக்” எடுக்க நிண்டவள் என்று. சிவசோதி பணத்தால் நிறைய வடுக்களை மறைப்பவர்.

காயப்பட்டவர்களோடும் மிகுதி அவர்களின் உறவினர்களோடும் கப்பல் போய் விட்டதாம். அந்தக்கப்பலில் சிவசோதியும் போய்விட்டான். அடுத்தநாள் கப்பல்வர வைத்தியசாலையில் ஆயிரத்துக்குமேலே காயப்பட்டவர்கள் கூடிவிடுவார்கள். பிறசர்காரரும் பிரசவ சீசர்காரரும் தங்களை அடுத்த கப்பலில் ஏற்றும்படி வைத்தியருக்குமுன் மன்றாடினார்கள்.

images2_zps663e5c2c.jpg

டொக்டர் கொடுத்த துண்டுக்காரரை இளங்கோவன்தான் சரிசெய்து கப்பலுக்கு வாகனத்தில் ஏற்றுவான். அதில் தன்ர சிபார்சிலும் கொஞ்சப்பேரை ஏற்றுவான். அப்படி ஏற்றுபவர்களில் எவருக்கும் காயங்கள் இருக்காது. சலரோக கிளினிக் கொப்பியை காட்டீய ரகுபதி சுகர் கூடி மூச்சுவிடமுடியாது இளங்கோபனையும் டொக்டரையும் திட்டினார்.

‘அம்மா… அம்மா…ஆ..ஆ…”

சிறுமி ஒருத்தி டொக்டரின் கூடாரத்திலிருந்து கத்திக்கொண்டு வந்தாள். சன நெருசல்களுக்குள் அந்தச் சத்தம் மட்டும்தான் கேட்டது. அவளின் சத்தம் போல நிறையச்சனங்களின் ஒப்பாரிகளும் தொடர்ந்தபடி இருந்தன. காயப்பட்டவர்களின் முனகல்களும் இறந்தவர்களின் கவலையில் குழறும் உறவினர்களின் சத்தங்களும் எப்பவும் வைத்தியசாலையை நிறைத்தபடியே இருக்கும்.

‘நிலானி…” என்றேன்.

‘அங்கிள்”

ஓடிவந்து கைகளை இறுக்கிப்பிடித்தாள்.

‘ஏன் அழுகிறாய்…?”

‘அங்கிள், அம்மாவை இண்டைக்கும் கப்பலில ஏத்தேலை”

‘அம்மாவுக்கு என்ன நடந்தது?” பதற்றத்துடன் கேட்டேன்.

‘அம்மாவுக்குக் காயம். அப்பாவும் அண்ணாவும் செத்துப்போட்டினம்;. நான் மட்டும் தான் தப்பினான். அங்கிள் டொக்டரோடு கதையுங்கோ… மூண்டுநாளா சொல்லுறார் நாளைக்கு நாளைக்கு எண்டு. காயங்கள் இல்லாத ஆட்களுக்கும் துண்டுகள் குடுக்கிறார்”

‘கதைக்கிறன். இப்ப அம்மா எங்கை?”

கூட்டிக்கொண்டு போனாள். மரத்துக்குக் கீழே ஒரு கிளிந்த பாயில் சனங்களுக்குள் செருகுப்பட்டுக் கிடந்தாள். தலையிலும் வயிற்றிலும் வெள்ளைத்துணியால் கட்டியிருந்தது. சிவப்பாய் இரத்தும் ஊறியிருந்தது. அவள் மூன்று நாட்களாய் அனுங்கியபடியே கிடக்கிறாள். அவளைச் சுற்றி நிறைய காயப்பட்டவர்கள். சிலர் படுக்கை இல்லாது வெறும் நிலத்திலும் கிடந்தார்கள். சிலருக்கு உறவினர்கள் எவரும் இல்லை.

ஒரு மூலையில் இறந்தவர்களின் உடல்கள் குவித்திருந்தன. அதுக்குமேலே மொய்த்த இலட்சக்கணக்கான இலையான்கள் சனங்களிலும் மொய்க்கின்றன. இலையான்கள் மொய்க்க மொய்க்க அந்த உடல்களுக்குப் பக்கத்தில் சிறுவர்கள் அம்மா… அப்பா… என கத்திக்கொண்டு நின்றார்கள். வெய்யிலுக்கும் தறப்பாள் வெக்கைக்கும் காயப்பட்டவர்கள் புலுண்டிக்கொண்டு கிடந்தார்கள். அநாதரவாகக் கிடப்பவர்கள்தான் அதிகம்.

‘அங்கிள்… அம்மாவுக்கு மேலை கிடக்கிற அந்தக் காலை எடுத்து விடுங்கோ. அம்மாவுக்கு நோவும்”

அவளுக்கு மேலே காலைப் போட்டு கிடந்த ஒருவனின் காலை மெல்ல தூக்கினேன். பாரமாய் இருந்தது. தள்ளினேன். அரங்குப்படவில்லை.

‘அங்கிள் அது பொடி”

பிணங்களை அகற்றி காயப்பட்டவர்களை ஒழுங்கு படுத்துவதற்கு வைத்தியசாலையில் எந்த பணியாளர்களுமில்லை. வைத்தியசாலையைச் சுற்றிச் குண்டுகள் விழ விழ அவர்கள் ஓடிவிட்டார்கள். மூன்று வைத்தியர்கள் மாத்திரமே நின்றார்கள்.

பிணத்தை அரக்குவதற்காக முகத்தை மூடியிருந்த துணியை விலக்கினேன். சஜீத். உடலில் ஆணிகள் அறையப்படுவதான வலி. கொஞ்சநேரம் எதுவுமே செய்யமுடியவில்லை. அவனையே பார்த்தேன். மார்பிலே குண்டு பட்டு உடல் புலுண்டியிருந்தது. எரிகுண்டு துளைத்திருக்கவேணும். தண்ணிக் குடத்துடன் போன அந்த இறுதிப்பொழுது நெஞ்சுக்குள் வர கண்ணீர் திரண்டு இமைகளுள் நிறைந்தது.

மெதுவாக சஜீத்தை தூக்கினேன். தூக்கக் கேட்டால் எவரும் உதவிக்கு வரமாட்டார்கள். வேலிக்கரையில் சிறிய பதுங்குகுழி இருந்தது. அதுக்குள் சஜீத்தை வளர்த்த நிலானி கேட்டாள்-

‘அங்கிள்…அம்மா செத்துப்போயிடுவாங்களா?”

நான் எந்தப்பதிலும் சொல்லவில்லை. மஜீத்துக்கு மண்ணைத் தூவிவிட்டு நிலானியை அப்படியே அணைத்தேன்.

அவளை மூன்று வயதிலிருந்தே தெரியும். கிளிநொச்சியில் எங்கட காணிக்குப்பக்கத்தில் குடியேறினாள். தகப்பன் கச்சேரியில் கிளாக். மாலை நான்கு மணியென்றதும் புத்தகத்தை தூக்கிக்கொண்டு வருவாள். அவளுடன் பொமேரியன் நாயும் வரும். நாலுமணியிலிருந்து ஆறு மணிவரையும் வீட்டில் நிற்பாள். பாடம் சொல்லிக்கொடுப்பேன். நல்ல கெட்டிக்காறி.

ஒருநாள் விடிய அறிவியல்நகர்ப் பக்கமாய் திடீரென துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. சனங்கள் ஆமியள் வந்திட்டாங்கள் என ஓடினார்கள். குண்டுகளும் கிட்டவாக விழுந்தபடி இருந்தன. சனங்கள் திக்குத் திசைகள் தெரியாது அங்குமிங்குமாய் ஓடினார்கள். அதுக்குப்பிறகு இன்றுதான் நிலானியைக் கண்டேன்.

‘அங்கிள்… நான் சின்னப்பிள்ளை. என்னைப்பேய்க்காட்டுறார் டொக்டா. நீங்கள் போய் கதையுங்கோ நாளைக்குவாற கப்பலில அம்மாவை ஏத்தச் சொல்லி”

‘ஒரு கப்பல்தானே ஒவருநாளும் வருகுது. நிறையக் காயப்பட்டதுகளல்லே…”

‘ரண்டு கப்பல் விடாங்களே அங்கிள்?”

நான் எந்தப்பதிலும் சொல்லவில்லை. குண்டுகள் விழ விழ காயப்பட்டவர்களை தோள்களில் சுமந்தும் மோட்டார் சைக்கிள்களில் ஏந்தியும் கொண்டுவந்தபடி இருந்தார்கள்.

‘காயப்பட்டவர்களுக்கு ஒரு உதவியாளர்களைத் தவிர வேறு எவரும் நிற்கவேண்டாம். தயவு செய்து இந்த இடத்தை விட்டுப் போங்கள்”

இளங்கோவன் இழப்புக்களைத் தவிர்ப்பதற்காக வாகனம் ஒன்றில் ஏறிநின்று கத்தினான். நான் நிலானியை கூட்டிக்கொண்டு கூடாரத்துக்குள் நுளைய குமரவேல் வைத்தியரோடு கதைத்துக் கொண்டு நின்றார்.

‘ஐயா, காயப்பட்டு ஐஞ்சுநாளாப்போச்சு. இன்னும் ஏற்பூசி போடேலை. இண்டைக்கு வந்த கப்ப லில மருந்துகள் வந்ததே?”

‘மருந்துகள் ஒண்டும் வரேலை. நாளையான் கப்பலில வருமோ தெரியாது”

‘ஏற்பாக்கி செத்தாப்பிறகே மருந்து”

வேதனையோடு குமரவேல் புறுபுறுத்தபடி வர அடுத்ததாக நான் போனேன்.

‘ஐயா… இந்தப்பிள்;ளையின்ர தகப்பனும் சகோதரங்களும் செத்துட்டுதுகள். தாய்க்கு சரியான சீரியஸ். காயப்பட்டு மூண்டு நாள். கப்பலிலை…”

வார்த்தையை முடிக்கவில்லை. கொஞ்ச நேரம் யோசித்த வைத்தியர்

‘நாளைக்கு போறதுக்கு ஆயத்தமாகுங்கோ”

நிலானி சிரித்தாள். நிலானிக்கு மாற்றி உடுக்க எந்த உடுப்புகளும் இல்லை. அழுக்கு உடையுடன் றின்றாள். உடனே எனது கூடாரத்துக்குப் போனேன். வைத்தியசாலைக்குப் பக்கதில்தான் எனது கூடாரமும். காயத்திரி மண்மூடைகளுக்குள் தேனீர் வைத்துக்கொண்டிருந்தாள். சீலையில் பைகள் தைத்து அதுக்குள் மண் போட்டு சுற்றவர அடுக்கியிருந்த சஜீத்தின் அரண் அது. மேலே திறந்தபடி இருந்தது. மூட குற்றியள் இல்லை. மேலால் குண்டோ ரவுண்சோ வந்தால் எல்லாம் சரி. பக்கத்தில மகேசக்காவின் காப்பரண். அவளும் சீலையில் பைகள் தைத்துத்தான் அரணை அமைத்திருந்தாள். சீலையில் பைகள் தைத்து மண்மூடைகள் அடுக்கினால் அதை அரண் என்று நான் சொல்லுவேன்-

‘எங்கட அரண் ஆட்லெறிக்கும் அஞ்சாது”என்று மகேசக்கா சிரிப்பா.

நாங்கள் இரணைப்பாலையிலிருந்து இடம்பெயர மகோசக்காவும் எங்களுடன் வந்தா. மூன்று பிள்ளைகளும் புருசனும். சமையல் எல்லாம் எங்களோடுதான். ஒவருநாளும் கஞ்சிதான். தேங்காய், புளி, உப்பு எதுவும் இல்லை. கடைகளுமில்லை. வாங்கவும் முடியாது.

மகேசக்கா நல்ல காசு வைச்சிருக்கிறா. கஸ்ரத்தில சனங்கள் நகைகளை விற்கக் கொண்டுவர அரைவிலைக்கு எடுப்பா. குண்டுகள் விழுந்து வெடிக்க வெடிக்க பதுங்குகுழிக்குள் இருந்து

‘காயத்திரி…”

என கூப்பிடுவா. நகைப்பை தலைமாட்டில் இருக்கும்.

‘நாங்கள் சாவிலும் ஒன்றாத்தான் சாகோணும். ஆமியிட்ட போவிலும் ஒண்டாத்தான் போகோணும்”

இப்படித்தான் ஒவருநாளும் கதைப்பா. குண்டுகள் விழுந்து செத்தாலோ காயப்பட்டாலோ ஒருதரும் தூக்கிறதுக்கு வராதுகள். இப்படி கூடி இருக்கிறது நல்லது என்று காயத்திரி சொல்வாள்.

நான் காயத்திரியிடம் நிலானிக்கு பெற்சீற் வாங்கினேன். பெற்சீற்றோடு சாறி ஒன்றும் தந்தாள். மகேசக்கா தனது மகளின் சட்டை ஒன்றை தந்தாள்.

download_zpsea8d9e2c.jpg

விடிந்தது…

ஒன்பது மணிக்கு கப்பல் வரும். காயத்தரி தந்த உடுப்புப்பாசலை கையில் வைத்துக்கொண்டு நிலானியோடு நின்றேன்.

இளங்கோவன் வோக்கியில் ஏதோ கதைத்தான். வாகனம் ஒன்று வந்து கேற்றடியில் நின்றது. வைத்தியரின் துண்டோடு நின்ற முதலாவது ஆளை வாகனத்தில் ஏற்றினார்கள். நிலானி இருபத்தைந் தாவது வரிசையில் நின்றாள். ஐந்தாவது வாகனத்தில்தான் நிலானியை ஏற்றினார்கள். நிலானி வாகனத்தில் ஏறிநின்று கையை அசைத்தாள். நானும் அசைத்தேன்.

குண்டுகள் நாலுதிசையிலும் விழுத்தொடங்கின… பீஸ் ‘சடார்’ ‘சடார்’ என்று மரங்களிலும் வைத்தியசாலை கூரைகளிலும் அடித்தது. இளங்கோவன் கத்தினான் எவரையும் கூட்டமா நிற்கவேண்டாம் என.

இளங்கோவனின் வோக்கி அலறியது.

‘இளங்கோவன் இளங்கோவன் ஓவர்”

‘சொல்லும் அப்பன்”

‘கடற்கரையில ஷெல் விழுந்து நாலாவதாக வந்த வாகனம் சரி. பன்ரண்டு பேரும் அடையாளம் தெரியேலை. கப்பலுக்குப்பக்கத்திலயும் ஷெல்கள் விழ கப்பலை எடுத்திட்டாங்கள். இனி ஒருதரையும் அனுப்ப வேண்டாம்”

வோக்கியில் வந்த செய்தியைக் கேட்டதும் நிலானியை நினைத்தேன்.

படார் என்றது ஒரு குண்டு. மின்னலாய் ஒளி தறப்பாளில் அடித்துச்சென்றது. கூரை ஓடுகள் பொலுபொலெண்டு கொட்டுப்பட்டது. கரும்புகை எல்லா இடமும் பரவியது. ஐயோ.. அம்மா.. என வைத்தியசாலை எங்கும் ஒரே ஓலம். குப்புறக்கிடந்த நான் மெதுவாக எழும்ப தலையிலிருந்து புழுதிகள் கொட்டுப்பட்டன. புகைக்கு கண்கள் எரிந்துகொண்டு வந்தன. கண்களைக்கசக்கிக்கொண்டு வெளியில் ஓட கால்களுக்குள் சனங்கள் மிதிபட்டார்கள். மிதிபட்டவர்களில் சிலர் மட்டுமே கத்தினார்கள். சிலர் கத்தவில்லை. இளங்கோவனின் வோக்கிக் கை வேலியில் தொங்கியது. பொடி கேற்றடியில் பிழந்து கிடந்தது. கால்கள் எல்லாம் இரத்தம். எனது இரத்தமா அல்லது வேறு எவரின் இரத்தமா என நினைக்க பதற்றம் விடவில்லை. ஓடினேன். நிலானி போன வாகனத்தின் மேல் மரம் முறிந்துவிழுந்திருந்தது. வாகனம் கருகியிருந்தது. வாகனத்தின்மேல் ஷெல் விழுந்திருக்கிறது. வெளிகளில் எவருமில்லை. தறித்துவிடப்பட்ட பனைக்குற்றிகளாய் உடற்கட்டைகள். நிலானியை நினைத்தபடி எனது கூடாரத்துக்கு ஓடினேன்.

காயத்திரி என்னைக்கண்டதும் பெரிய சத்தமாய் விக்கலெடுத்தாள். மகேசக்காவை காணவில்லை. காயத்திரி அழ பக்கத்தில் நிற்காமல் மகேசக்கா எங்கே போனாள்? பிள்ளைகளைகளையும் காணவில்லை. நிழலைப்போல எங்களுடனே ஒட்டியிருக்கும் மகேசக்கா.

‘எங்கை காயத்திரி மகேசக்கா…?”

பயம், திகைப்போடு அவசரமாய்க் கேட்டேன்.

‘ஐம்பதாயிரம் குடுத்துத் துண்டெடுத்துக்கொண்டு கப்பலில போட்டுதுகள்”

என்றாள்.

http://pagetamil.com/?p=8133

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.