Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும்

ரவி நடராஜன்

எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர், தன் மகன் மூலம், நான் அனிமேஷன் கட்டுரைகள் எழுதியதை அறிந்து, சில ஆண்டுகள் முன்பு, இப்படி அலுத்துக் கொண்டார்:

“பொம்மை படம் பற்றி எல்லாம் கட்டுரை எழுதறயாமே!” (இவருக்கு, மனிதர்கள் நடிக்காத படங்கள் எல்லாமே பொம்மைப் படங்கள்)

“ஆமாம்”

“இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க முடியலப்பா. எப்பப் பாரு வீடியோ விளையாட்டு என்று எதையாவது திருகிகிட்டே இருக்காங்க”

”அவங்க சுறுசுறுப்புக்கு அது ஒரு நல்ல வடிகால் தானே. உங்க பேரங்க எல்லாம் நல்லாத்தானே படிக்கிறாங்க”

“அதெல்லாம் சரிதான். அதென்ன 4,500 டாலருக்கு கம்ப்யூட்டர்? 600 டாலருக்கு பிரமாதமான கம்ப்யூட்டர் கிடைக்கறப்ப எதுக்கு இந்த வீண் செலவு?”

“விளையாட்டு கம்ப்யூட்டருக்கு நிறைய சக்தி வேணும். அதனால விலையும் கூட”

“ஒன்னும் புரியலப்பா. எல்லாரும் சொன்னாங்கன்னு ‘ரோபோ’ படம் பார்த்தா, அது பாதி பொம்மை படமா இருக்கு. ஒரே இரைச்சல் வேற” என்று மேலும் அலுத்துக் கொண்டார்.

Ravi_Natrajan_Circuits_Mother_Boards3.pn

அவர் சொன்னதில் ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது. என்னுடைய அலுவலகத்தில் 6,000 டாலருக்கு விளையாட்டு கணினி வாங்கும் சிலரை அறிவேன். இவர்கள் பேசுவதே, வித்தியாசமாக இருக்கும். தண்ணீரால் குளிர்விக்கப்பட்ட கணினியில் இரவில் 10 மணி நேரம் தொடர்ந்து விளையாடுவதைப் பற்றி பெருமை கொள்ளும் விந்தை மனிதர்கள்.

இது என்ன வீடியோ விளையாட்டு பற்றிய கட்டுரையா? சத்தியமாக இல்லை. ஓரளவிற்கு, ‘சொல்வனம்’ இதழில் முன்னம் எழுதிய ‘விஞ்ஞான கணினி’ என்ற கட்டுரையின் தொடர் என்றுகூட கொள்ளலாம். சற்று பொறுங்கள் – வீடியோ விளையாட்டுக்கும் சீரியஸான விஞ்ஞான கணினிக்கும் என்ன சம்மந்தம்? இருக்கிறது. அதைத்தான் இந்தக் கட்டுரைத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

கணினி வீடியோ விளையாட்டுக்களுக்கு ஏராளமான கணிப்பு சக்தி (CPU power) தேவை. இன்றைய வீடியோ விளையாட்டுக்கள், உண்மையான காமிராக் காட்சிகள் போலக் காட்சிகளை செயற்கையாக உருவாக்கும் வல்லமை படைத்தவை. குறிப்பாக, இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1. வெகு வேகமாக மாறும் காட்சிகள் – இயற்கையான காட்சி மாற்றம், அதாவது, டிஜிட்டல் துள்ளல்கள் இல்லா மாற்றங்கள்

2. தத்ரூபமான நீர்க் காட்சிகள்

3. மிகத் துல்லியமான ஒளிச் சிதறல் (diffraction) மற்றும் ஒளிப் பிரதிபலிப்பு (reflection)

4. ஒரே சமயத்தில், காட்சிக்கேற்ப, நடமாடும்/ஓடும் மனிதர்கள். அவர்களது இயக்கத்திற்கேற்ப, அசையும் அவர்களது உடை மற்றும் தலைமுடி.

5. துப்பாக்கியிலிருந்து/வில்லிலிருந்து வரும் குண்டு, மற்றும் அம்பு, எய்த திசையில் துல்லியமாக பயணம் மேற்கொள்ளும் அழகு. உண்மை துப்பாக்கிக் குண்டைப்போல, காற்று மற்றும் புவிஈர்ப்பு சக்திகளை கையாளும் விஞ்ஞான லாகவம்.

6. எந்த ஒரு கணினி திரையும் படமூலம், அதாவது pixel -களால் நிரப்பப்பட்டவை. இன்றைய கணினி திரைகளில், லட்சக்கணக்கான பிக்சல்கள் ஒரு காட்சியை தோற்றுவிக்கின்றன. அத்துடன், ஒவ்வொரு படமூலத்திற்கும், பல லட்சம் வண்ணங்கள் (colors) , ஒளிர்வு (brightness) என்று ஒரு காட்சிக்கே, பல லட்சம் பைட்டுகள் (megabytes) தேவை. மேலும், நொடிக்கு நொடி மாறும் வீடியோ விளையாட்டுகளில், சிலபல லட்சம் பைட்டுகளை ஒவ்வொரு நொடியும் கையாளுதல் அவசியம். இத்துடன், ஒளி அளவுகள், எய்யப்படும் குண்டுகளின் பாதை என்று அவற்றை துல்லியமாக கணக்கிட ஒரு பெளதிக எஞ்சினும் (physics engine) தேவை.

Ravi_Natrajan_Circuits_Mother_Boards1.pn

இத்தனை விஷயங்களை கையாள பெண்டியம் போன்ற சக்தி வாய்ந்த பொது செயலிகளால் (General processors or CPUs) கூட இயலாத காரியம். இதற்காகவே, வீடியோ விளையாட்டுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கணினிகளில், மேற்சொன்ன விஷயங்களுகாகத் தனியாக ஒரு வடிவியல் செயலி (graphics processor) தேவை. நம்முடைய அன்றாட கணினிகளில் கூட சுமார் சக்தி கொண்ட வடிவியல் செயலிகள் இருப்பதாலேயே நம்மால், அதிக சக்தி தேவையற்ற பல வீடியோ விளையாட்டுகளை விளையாட முடிகிறது. இதை on-board graphics processor என்கிறார்கள். பல சக்தி வாய்ந்த வீடியோ விளையாட்டுக்கள், தனிப்பட்ட வடிவியல் செயலிகள் உள்ள கணினிகளில் மட்டுமே இதை ஒன்றிப்போய் விளையாட முடியும் என்று சொல்லிவிடுகிறார்கள். நல்ல வேளை, சுந்தர் வேதாந்தம், ‘சொல்வனத்தில்’ , செயலிகள் பற்றிய அருமையான தொடர் ஒன்றை சமீபத்தில் எழுதினார். தயவு செய்து, அதை சொஞசம் படித்து விடுங்களேன். மீண்டும், அதைப் பற்றி இங்கு விளக்கி உங்களை அறுக்க விருப்பமில்லை.

சுறுக்கமாகச் சொல்லப் போனால், எந்த கணினி வீடியோ விளையாட்டிலும், விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. அதுவும், துல்லிய விஞ்ஞானம். இந்த வடிவியல் செயலிகள் வெறும் படமூலத்துடன் போராடும் செயலிகள் மட்டுமல்ல. அதையும் தாண்டி புனிதமானது (’குணா’ ஸ்டைலில் சொஞ்சம் எதிரொலியும் சேர்த்துக் கொள்ளுங்கள்)

பெரியவர் சொன்னது போல, முதலில், யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சின்ன பசங்க சமாச்சாரம் என்று விட்டு விட்டனர். ஏனென்றால், விஞ்ஞான கணக்கிடல்களுக்கு ராட்சசக் கணினிகள், பல கோடி டாலர்கள் செலவில் தேவையாக இருந்தது உண்மை. அத்துடன் அவை கணினி விஞ்ஞான ரீதியில், வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தன. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், இவ்விரு பாதைகள் ஒன்றாகும் சாத்தியம் உண்டானது.

Ravi_Natrajan_Circuits_Mother_Boards2.pn

திடீரென்று, விளையாட்டாய்த் தொடங்கிய இத்துறை, மிக சீரியஸான விஞ்ஞானத் துறைகளில், இன்று விஞ்ஞானிகளுக்கு பல வித ஆராய்ச்சி முயற்சிகளில், பெரும்பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. விஞ்ஞானிகளும் இத்துறையை தன்னுடைய ஆராய்ச்சிக்கு உபயோகிப்பதில் தயக்கம் காட்டவில்லை. ஏனென்றால், சில அடிப்படை விஷயங்களில், இத்துறையின் வசீகரம் விஞ்ஞான சமூகத்தை தன் பக்கம் ஈர்த்துவிட்டது. உதாரணத்திற்கு, பல லட்சம் விளையாட்டு வடிவியல் செயலிகள், வருடம்தோறும் விற்கின்றன. அதனால், இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை பிரச்னைகள் யாவும் பல நுகர்வோர்களின் பயன்பாட்டால், தீர்க்கப்பட்டு விட்டன. அதாவது, இவை நம்பகமான செயலிகள் என்று பெயர் எடுத்துவிட்டன. அதுவும், பொறுமையே இல்லாத இளைஞர்களின் துல்லிய தேவைகளை நொடிப் பொழுதில் தீர்த்து வைப்பது சாதாரண விஷயமல்ல.

உயிர் தகவல் விஞ்ஞானம் (bio informatics), கூட்டணு இயக்கவியல் (molecular dynamics), மருத்துவ படமாக்கல் (medical imaging) மற்றும் குவாண்டம் வேதியல் (Quantum chemistry) போன்ற துறைகளில், இந்த வடிவியல் செயலிகள் பெரிய அளவில் உதவத் தொடங்கியுள்ளன. இதைத் தவிர, காற்றுமண்டல விஞ்ஞான ஆராய்ச்சி (atmospheric sciences), மூலப்பொருட்கள் விஞ்ஞான ஆராய்ச்சி (material sciences) போன்றவை இதன் பிற புதிய பயன்கள்.

வடிவியல் செயலி தயாரிப்பாளர்களும், விஞ்ஞானிகளின் தேவைக்கேற்ப புதிய மென்பொருள் கருவிகளையும் சேர்த்துக் கொண்டே வருகிறார்கள். இத்தனை வசதிகளுடன், சில ஆயிரம் டாலர்களுக்குஅருமையான ஒரு விஞ்ஞான உதவியாளன் கிடைத்தால் என்ன கசக்குமா?

இப்படி ஆரம்பத்திலிருந்தே அமையவில்லை. ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போய், இப்படியும் செய்தால் என்ன என்று ஆரம்பித்த சிந்தனை, இத்தகைய புதிய பாதையை வகுத்துள்ளது. ஆரம்பத்தில், பலகலைக்கழக விஞ்ஞானிகள் இத்தகைய வடிவியல் செயலிகளை கடைகளிலிருந்து வாங்கி வந்து, தன்னுடைய கணினிகளில் இணைத்து, அதற்காக தனியான குளிர்விக்கும் விசிறிகளை (cooling fans) பொறுத்தி, விஞ்ஞான பிரச்னைகளை இத்தகைய வடிவியல் செயலிகள் எப்படி தீர்க்கின்றன என்று சின்ன முயற்சிகளை மேற்கொண்டனர். சில விஞ்ஞான கருத்தரங்களில், பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவே, தங்களுடைய அணுகுமுறையை விளக்கினார்கள். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. (ஒழுங்காக விஞ்ஞான ஆராய்ச்சி செய்யாமல், விளையாட்டு எந்திரங்களோடு பொழுதை கழித்துவிட்டு, நம் நேரத்தையும் வீணடிக்கும் இவர்களை எப்படி விஞ்ஞானிகள் என்று ஒப்புக் கொள்வது?).

இத்தகைய ஆரம்ப முயற்சிகளில் நிலநடுக்க ஆய்வாளர்கள் (Seismologists) முதலில் இவ்வகை வடிவியல் செயலிகளை பயன்படுத்த முன் வந்தனர்.

Ravi_Natrajan_Circuits_Mother_Boards4.pn

மெதுவாக இவ்வகை செயலிகளின் விலையைப் பார்த்து, (மிகக் குறைவு), மற்ற விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் உபயோகிக்கத் தொடங்கினர். இன்று, பல இயந்திரவியல் கட்டமைய்யு பொறியாளர்கள் (mechanical design engineers) இத்தகைய வடிவியல் செயலிகளை, தங்களது அன்றாடப் பணிகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மேலும், உலகின் மிக சக்தி வாய்ந்த 10 கணினிகளை எடுத்துக் கொண்டால், அதில், இத்தகைய வடிவியல் செயலிகள் பொறுத்தப்பட்டவை 3 –வது இருக்கும் என்று சொல்லலாம்.

எதிர்காலத்தில், விளையாட்டுப் பிரியர்களை மட்டுமே சார்ந்து வடிவியல் செயலி நிறுவனங்கள் இருக்கப் போவதில்லை. இத்தகைய வடிவியல் செயலிகளை முன்னேற்றத் துடிக்கும் நிறுவனங்கள், தங்களது வியாபார விரிவுக்காக இத்தகைய உத்திகளை பின்பற்றி வந்துள்ளார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதனால், விளையாட்டும், விஞ்ஞானமும் தொடர்ந்தே இத்துறையில் பயணிக்கும் என்று நம்ப வாய்ப்புள்ளது. அதற்கு முன்னால், சொஞ்சம் சரித்திரம், இவ்வகை வடிவியல் செயலிகளின் வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அடுத்த பகுதியில் கொஞ்சம் சரித்திரம் பார்ப்போம்…

பின்குறிப்பு

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

# ஆங்கிலச் சொல் தமிழ் பரிந்துரை

1 Bio Informatics உயிர் தகவல் விஞ்ஞானம்

2 Molecular dynamics கூட்டணு இயக்கவியல்

3 Medical imaging மருத்துவப் படமாக்கல்

4 Quantum chemistry குவாண்டம் வேதியல்

5 Atmospheric sciences காற்றுமண்டல விஞ்ஞானம்

6 Material sciences மூலப்பொருட்கள் விஞ்ஞானம்

7 General processors or CPUs பொதுச் செயலிகள்

8 Graphics processor வடிவியல் செயலிகள்

9 Personal Computer தனிநபர் கணினி

10 Pixel படமூலம்

11 Brightness ஒளிர்வு

.- See more at: http://solvanam.com/?p=34481#sthash.wxvZ3Yhj.dpuf

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ விளையாட்டுகளும் கணினி இணையாளலும் – 2

ரவி நடராஜன்

1980 –களில், புதிய தனிநபர் கணினிகள் (personal computers) வரத் தொடங்கின. இன்றைய மடி மற்றும் மேஜைக் கணினிகளோடு ஒப்பிட்டால், மிகவும் சக்தியற்றவை இவை. ஆனால், முன்பு பல லட்சம் டாலர்கள் விலையாக இருந்த கணினிகளோடு ஒப்பிட்டால், சில ஆயிரம் டாலர்களுக்கே விற்ற இந்த தனிநபர் கணினிகள், கணினிப் பொறியாளார்களின் கற்பனைகளைச் சிறகடிக்கச் செய்தன. ஆனால், இவற்றைப் பயன்படுத்தி, விஞ்ஞானப் பிரச்னை எதையும் தீர்க்க வழியில்லாமல் தவித்தார்கள். பெரிய விஞ்ஞானக் கணக்கிடல்களுக்காகத் தயாரிக்கப்பட்ட கணினிகள், இந்தக் குறையைப் பயன்படுத்திக் கொண்டு, பல புதிய உத்திகளைக் கொண்டு தங்களது தயாரிப்புகளை மேம்படுத்தத் தொடங்கினர்.

1980 – 1989 – முதல் கட்ட முயற்சிகள்

SIMD_Instruction_Data_Pool_Graph_Process

இதில் முதன்மையான அணுகுமுறை, data parallel computing எனப்படுகிறது. அதாவது, பல செயலிகளும், ஒரே நேரத்தில், பல தரவுகளை (data) கையாளும். (ஒரே ஆணை கொண்டு) முறையாகும் இது. கணிதக் கணக்கிடல்களுக்கு, இது மிகவும் தோதானது. குறிப்பாக, வரிசைகளைக் (arrays) கையாள, இது மிகவும் உபயோகமான விஷயம். Cray என்ற சூப்பர் கணினி இவற்றுக்கு பெயர் பெற்று விளங்கியது. பல கோடி டாலர்களுக்கு, இவற்றை பெரிய அரசாங்க ஆய்வுக்கூடங்கள், மற்றும் பெரிய பல்கலைக் கழகங்களால் மட்டுமே வாங்க முடிந்தது. இந்த அணுகுமுறையை, கணினி விஞ்ஞானிகள், SIMD – Single Instruction Multiple Data என்று அழைக்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில், இதுவே விஞ்ஞான கணினியின் எதிர்காலம் என்று நம்பிய பொறியாளார்கள், புதிய இணையாளல் கட்டமைப்பு (computing parallel architectures) யோசனைகள், கணினி நெறிமுறைகள் (algorithms) மற்றும் கணினி நிரல் மொழிகள் (programming languages) என்று பலவற்றையும் உருவாக்கினார்கள்.

இதே காலகட்டம், கணினி வடிவியலின் (computer graphics) ஆரம்ப நாட்கள். முதலில் வந்த தனிநபர் கணினிகளில், பெரிதாக படம் வரையும் திறன் இல்லை. நேர்கோடுகள், சின்ன வளைவுகள் என்று அடிப்படை வடிவியலுக்கு மட்டுமே அன்றைய இண்டெல், மற்றும் கமடோர் கணினிகள் வழி வகுத்தன. இவை இரு பரிமாண வடிவியல் (2d graphics) தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்தது.

1990 -1999 இரண்டாம் கட்ட முயற்சிகள்

1990 –களில், பொது செய்லிகளின் விலை மிகவும் குறையத் தொடங்கியது. ஏராளமான விலை கொடுத்து, ராட்சச கணினிகளுக்கு பதில், ஏன் மலிவான பொது செயலிகளை வைத்து விஞ்ஞான பிரச்னைகளைத் தீர்க்கக் கூடாது? இதுவே, விரவல் கணினி செய்முறை (distributed computing) ஆனது. இந்த புதிய நோக்கின் ஆரம்ப நாட்களாதலால், பல சிக்கல்கள் முளைக்கத் தொடங்கின. இந்த அணுகுமுறை 1980 –களின் அணுகுமுறைக்கு எதிர்மாறானது. முதலில், பிரச்னைக்கான தரவுகள் (data) பல செயலிகளுக்கும் பரப்பப்பட்டன. ஒரே நிரலால் பல வலையமைக்கப்பட்ட (networked computing nodes) கணினி மையங்களில் உள்ள தரவுகளை கையாள முடிந்ததே இதன் வெற்றி. கணினி விஞ்ஞானிகள், இந்த அணுகுமுறையை, SPMD – Single Program Multiple Data, என்று அழைக்கிறார்கள். 1980 –களில், ஒரே ஆணை (instruction) பல தரவுகளை, ஒரே நேரத்தில் கையாண்டது. இத்தகைய அணுகுமுறை, பலதரப்பட்ட விஞ்ஞான பிரச்னைகளை குறைந்த செலவில் துல்லியமாக தீர்க்க முடிந்தது. கணினிகளின் செய்திப் பரிமாற்றம், இந்த முயற்சிக்கு மிகத் தேவையான ஒன்றாகியது. ஆனால், அதிகம் வளராத வலையமைப்புத் தொழில்நுட்பம், கழுத்தை அறுத்தது உண்மை. இதை ஒரு உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். 1980 –ல் உள்ள முறை, இரண்டாம் உலகப் போரில் இத்தாலி போன்ற நாடுகள் பின்பற்றிய முறையைப் போன்றது – அதாவது, ”தாக்கு, நாட்டை பிடி” என்ற ஒரே ஆணையுடன், வட ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்கி, ஓரளவு வெற்றியும் கண்டனர். 1990-ல் உருவான முயற்சி, அமெரிக்காவின், முதல் வளைகுடா போருடன் ஒப்பிடலாம். அழகாகத் திட்டமிட்டு, பல நகரங்களில், தாக்குதல்கள் ஈராக்கில் அமெரிக்கா நடத்தியது. அதன் வெற்றிக்கு காரணம், பன்னாட்டுப் படைகளை ஒருங்கிணைக்கும் செய்தி தொடர்பு, மற்றும் தந்திரம் (strategy). சில இடங்களில், பிரிடிஷ், மற்ற இடங்களில் ஆஸ்த்ரேலியா என்று அனைவரும் தந்திரத்தை புரிந்து செயலாற்றினர்.

Problem_Instructions_Processor_Flow_Mach

Windows_95_logo-150x150.png

இதே காலகட்டத்தில், விண்டோஸ் 95 அறிமுகப்படுத்தப்பட்டது. மைக்ரோசாஃப்ட் (Microsoft) புண்ணியத்தில், விண்டோஸில் இரு பரிமாண விளையாட்டுக்கள் வெளிவரத் தொடங்கின. ஆரம்பத்தில், இது ஒரு விண்டோஸ் வேகப்படுத்தும் உத்தியாக இருந்தது. நாளடைவில், சில தனிப்பட்ட கணினிகள், இதற்காக ஒரு தனிச் செயலியை அறிமுகப் படுத்தத் தொடங்கின. ஏன், முப்பரிமாண வடிவியல், (3d graphics) தனிநபர் கணினிகளில் சாத்தியமில்லை என்ற சர்ச்சை தொடங்கியது. இக்காலகட்டத்தில், சன் போன்ற கம்பெனிகள், இரு/முப்பரிமாண வடிவியல் கணினிகளை பொறியாளர்களுக்கு (Sun workstations) விற்கத் தொடங்கியது. இவை பெரும்பாலும், பொறியாளர்கள் தங்கள் வடிவமைப்பு வரைபடங்களுக்காக (engineering design, drafting) பயன்படுத்தத் தொடங்கினர்.

Sony_PS_Playstation_3d_1995-300x196.png

அத்துடன், சோனியின் ப்ளேஸ்டேஷன் (Sony Playstation) , மற்றும் நிண்டெண்டோ (Nintendo consoles) போன்ற விளையாட்டு எந்திரங்கள், முப்பரிமாண வடிவியல் விளையாட்டுக்களை, அறிமுகப்படுத்தினர். ஆரம்ப கட்ட தனிநபர் கணினிகளின் முப்பரிமாண வடிவியல் செயலிகள் படுதோல்வியை சந்தித்தன. மைக்ரோசாஃப்ட் விடாமல் தன்னுடைய DirectX என்ற வடிவியல் கையாளும் மென்பொருளை முன்னேற்றிக் கொண்டே வந்தது. முக்கியமாக, வெளிச்ச கையாளுதல், மற்றும் படமூலத்தை கையாளும் திறனை ( T&L – Transform and Lighting) தன்னுடைய 7 –வது வெளீயீட்டில் கொண்டு வந்தது. இந்த பத்தாண்டின் இறுதியில், உருப்படியான முதல் வடிவியல் செயலி, தனிநபர் கணினிகளுடன் இணைந்தது.

கொஞ்சம் நிறுத்தி, இந்த வடிவியல் செயலிகளின் வடிவமைப்புக் கொள்கைகளை (design principles) சற்று ஆராய்வோம்.

1.பல கோடி பட மூலங்களை (pixels) நொடிக்குள் கையாள வேண்டும்

2.மேலே சொன்ன கையாளுதல், ஒன்றன் பின் ஒன்றாக நேர்ந்தால், குழந்தைகள் -டிவி யில் கிரிகெட் பார்க்கப் போய்விடுவார்கள். திரையின் பகுதிகளுக்கேற்ப, பல ஒப்பிணைவு (parallel) கையாளல், அல்லது இணையாளல் அவசியத் தேவை. அப்பொழுதுதான், மாறும் காட்சிகள் கண்களுக்கு ஒரு தொடர்ச்சியாகக் காட்சியளிக்கும்

3.கோடுகளை வரைவது என்பது அடிப்படை கணினி வடிவியல் தேவை. பலகோண வரைதல் (drawing polygons) என்பது வடிவியல் செயலிகளின் திறனை அளக்கும் ஒரு உத்தி. பொதுவாக, வடிவியல் செயலிகள், பல லட்சம், பலகோணங்களை ஒரு நொடியில் வரையும் திறம் கொண்டவை

4.பெண்டியம் போன்ற பொது செயலிகளில், 4 அல்லது 8 மைய செயல்தளங்கள் இருக்கிறது (multi-core CPUs). ஆனால், வடிவியல் செயலிகளில், பல நூறு மைய தளங்கள் உண்டு. இதனால், ஒரே சமயத்தில் பல நூறு ஆணைகள் இயங்கிய வண்ணம் இருக்கும். இவற்றை திரிகள் (threads) என்று கணினி விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்

இத்தகைய விஷயங்களை வடிவியல் செயலிகளிடம் விட்டு விட்டால், பொது செயலிகளான பெண்டியம் போன்ற செயலிகள், தங்களின் வடிவமைக்கப்பட்ட வேலைகளைச் செய்யும். இதில் பெரிய சவால், எச்செயல் எந்த செயலியிடம் வழங்க வேண்டும் என்று முடிவெடுப்பது. இது, இங்கே எழுதுவதைப் போல அவ்வளவு எளிதல்ல. வேண்டுமானால், திருக்குறளை சற்று மாற்றி இப்படிச் சொல்லலாம்:

எத்தரவு எவ்வகை என்றாய்ந்து அத்தரவு

அச்செயலியிடம் விடல், இணையாளல்

2000 – இன்றுவரை

பொதுச் செயலிகளில், ஏராளமான உதிரி பாகங்கள் அடைக்கப்பட்டு வெளிவந்தாலும், அவற்றின் செயல்திறனில் உதிரி பாகங்கள் அடைப்பிற்கு ஏற்றவாறு முன்னேற்றமில்லை. அத்துடன், இவற்றின் அளவும் பெரிதாகிக் கொண்டே வந்தது. இவற்றின் குளிர்விக்கப்படும் தேவைகளும் அதிகரித்தது. இந்த நிலையில், பொது செயலிகளில், மேலும் வடிவியல் தேவைகளை திணிப்பது அர்த்தமற்றதாக பொறியாளர்களும் எண்ணத் தொடங்கினார்கள். பொது செயலிகளின் சேவை, இயக்க நிரல்களின் (operating systems) அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யவே சரியாக இருந்தது.

NVIDIA_CUDA.png

2000 –ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஏராளமான வன்பொருள் முன்னேற்றங்கள் (hardware advances) இந்த வடிவியல் செயலிகளில் வரத் தொடங்கின. ஆனால், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது 2004-ல் நடந்த ஒரு மென்பொருள் முன்னேற்றம். nVidia என்ற அமெரிக்க வடிவியல் செயலி தயாரிப்பாளர், CUDA என்ற நிரல் எழுதும் ஒரு கணினி மொழி/முறையை அறிவித்தது. இத்துறையை மாற்றியமைத்த ஒரு மிகப் பெரிய முன்னேற்றம் இது என்று சொல்லலாம். அதுவரை, மைக்ரோசாஃப்டை எதிர்பார்த்து இருந்த இந்தத் துறை, திடீரென்று விடுதலைப் பெற்றது. அத்துடன், மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க நிரலை (operating system) சார்ந்தே காலத்தைத் தள்ள வேண்டியிருந்தது. மைக்ரோசாஃப்டிற்கு பல்லாயிரம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில், வடிவியல் முக்கியமாக இருந்தாலும், ஏதாவது ஒரு எக்ஸெல் பிரச்னை, அதைவிட முக்கியம். இத்துறையின் தேவைக்காக மைக்ரோசாஃப்ட் ஒன்றும் இருக்கிற வேலையெல்லாம் விட்டு விட்டு வடிவியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போவதில்லை.

அப்படி என்ன விசேஷம் இந்த CUDA –வில்? முதலில், எல்லோருக்கும் (கணினி நிரலர்கள்) தெரிந்த C கணினிமொழியை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன், பல இயக்க நிரலிலும் பயன்படுத்தத் தகுந்த மொழி. சில புதிய ஆணைகளைக் கற்றாலே போதும். அழகாக வடிவியல் நிரலிகளை உபயோகிக்கலாம். அத்துடன் nVidia பல்வேறு உதாரணங்கள், மற்றும் வசதிகளை நிரலர்களுக்கு தாராளமாக வழங்கியது. வெகு மலிவான வடிவியல் செயலி, மிக அதிக கணினிகளில் பயன்படுத்தக் கூடிய மொழி/கருவிகள் என்றால் விஞ்ஞானிகளுக்கு என்ன கசக்குமா?

அடுத்த 10 ஆண்டுகளில் எல்லா வடிவியல் செயலி தயாரிப்பாளர்களும் CUDA உடன் சேருவதை கூடா ஒழுக்கமாக என்னவில்லை! இன்று, CUDA –வில் நிரல்களை பல்வேறு மலிவு லினிக்ஸ் கணினிகளில், பல வகை விஞ்ஞான பிரச்னைகளைத் தீர்க்க விஞ்ஞானிகள், புது அணுகுமுறைகளை உருவாக்கிய வண்ணம் இருக்கிறார்கள். எங்கோ இருக்கும் ராட்சச கணினியை எதிர்பார்க்காமல், தங்களுடைய அலுவலகத்தில் இருக்கும் கணினியிலேயே அதிவேக பிரச்னை தீர்க்கும் இந்த கூடா பழக்கத்தையும் சேர்த்துக் கொண்டுவிட்டார்கள்! CUDA –வில் இன்னொரு முக்கியமான விஷயம். சில விஞ்ஞான பிரச்னைகளுக்கு வடிவியல் செயலிகளின் சக்தி தேவை. ஆனால், அவற்றின் வடிவியல் உபாதைகள் தேவையில்லை. CUDA இப்படிப்பட்ட வடிவியலுக்கு சம்மந்தமே இல்லாத ஆனால், செயலிகளின் இணையாளல் (parallel computing power) சக்தியை எளிதாக பயன்படுத்த உதவியாக இருந்தது. அத்துடன் எதை எங்கு கையாள வேண்டும் என்பதை CUDA வின் தொகுப்பி (compiler) பார்த்துக் கொள்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக கையாளப்பட வேண்டிய ஆணைகள் பொதுச் செயலிக்கும், இணையாளல் தேவைகள் வடிவியல் செயலிக்கும் அனுப்பப்படுகிறது. நிரலர்கள் இதைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை.

Server_Rack_NAS_SAN_Files_Cloud.png

nVidia -வின் கூற்றுபடி, இதுவரை CUDA வில் இயங்கக்கூடிய 80 மில்லியன் செயலிகளை இதுவரை விற்றுத் தள்ளிவிட்டார்கள். இதில் பெரும்பாலும் வீடியோ விளையாட்டு உபயோகத்தில் இருந்தாலும், கணிசமான சில மில்லியன் செயலிகள் விஞ்ஞானிகளுக்கும் உதவி செய்து வருகிறது.

ATI என்ற இன்னொரு அமெரிக்க நிறுவனம் இத்துறையில் nVidia வுடன் கடும் போட்டி போடும் நிறுவனம். ATI –யும் இணையாளல் செயலிகளையும், வடிவியல் செயலிகளையும் பல்லாண்டுகளாக வடிவமைத்து வருகிறது. கணினியின் மற்ற எல்லாத் துறைகளைப் போல, இத்துறையிலும், யாருடைய வடிவமைப்பு உயர்ந்தது என்ற விடா சர்ச்சை இன்று வரைத் தொடர்கிறது. ATI, சில ஆண்டுகளுக்கு முன், இன்னொரு அமெரிக்க நிறுவனமான, AMD –யுடன் இணைந்தது.

CUDA –வை போல இன்னும் சில கணினி முறைகள் இன்று வளாரத் தொடங்கியுள்ளன. முக்கியமாக, OpenCL என்பது இன்னொரு முறை. வழக்கமாக, கணினி மென்பொருளாளர்கள், எது உயர்ந்தது, என்று விடாமல் அலசி வரும் இன்னொரு துறை, கணினி வடிவியல்!

உலகின் மிக சக்திவாய்ந்த கணினிகளில் ஒன்று சைனாவில் இன்று உள்ளது. அதில் பல நூறு வடிவியல் செயலிகள் ஒன்றாக வேலை செய்து பல சூப்பர் கணினிகளுக்கு சவால் விடுகிறது. சைனாவின் ராணுவ மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த பகுதியில், மேல்வாரியான அலசலிலிருந்து, சற்று ஆழமான புரிதலுக்கு முயற்சிப்போம்.

பின்குறிப்பு

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்.

# ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை

1 Algorithms (computing) கணினி நெறிமுறைகள்

2 Array வரிசை

3 CPU core மைய செயல்தளங்கள்

4 Data தரவு

5 Distributed computing விரவல் கணினி செய்முறை

6 Networked computing nodes வலையமைக்கப்பட்ட கணினி மையங்கள்

7 Operating systems இயக்க நிரல்கள்

8 Parallel (computing) architecture இணையாளல் கட்டமைப்பு

9 Parallel processing இணையாளல்

10 Programming languages நிரல் மொழிகள்

.- See more at: http://solvanam.com/?p=34690#sthash.hFGzXYCe.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்பிற்க்கு கிருபன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் -3

ரவி நடராஜன்

இதுவரை, நாம் மேல்வாரியாக, வடிவியல் செயலிகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த கட்டுரையில், இவற்றின் செயலாற்றத்தை, உதாரணங்களோடு ஆராய்வோம். முதலில், சில கேள்விகளை முன் வைப்போம்:

Intel_NVidia_AMD.png

1.இண்டெலின் பெண்டியத்திற்கு சவால் விடும், புதிய செயலிகளா இந்த வடிவியல் செயலிகள்?

2.வடிவியல் செயலிகள் அவ்வளவு மேலானது என்றால், ஏன் அவற்றை மட்டுமே மையமான கணினிகளை உருவாக்குவதில்லை?

3.வடிவியல் செயலிகளை, ஏன் நாம் வழக்கமான அன்றாட கணினிப் பிரச்னைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது?

4.வடிவியல் செய்லிகளை மையமாகக் கொண்ட இயக்க நிரல்கள் (operating systems) ஏன் இன்று இல்லை?

5.படிப்படியாக வடிவியல் செயலிகள், பொதுச் செயலிகளின் வேலையை எதிர்காலத்தில் செய்யத் துவங்கிவிடுமா?

auditorium-196x300.png

எல்லாமே நல்ல கேள்விகள் தான். கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கு முன்பு, ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்:

ஒரு நிறுவனம் தன்னுடைய வருடாந்திர பங்குதாரர்கள் சந்திப்பை (annual shareholders meeting) , ஒரு பெரிய, ஆனால் பழைய அரங்கத்தில் நடக்க முடிவு செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதில், பல முன்னேற்பாடுகள் செய்தல் அவசியம்:

1.பல ஆண்டுகளாக கவனிக்கப்படாத பெரிய அரங்கம், சுத்தம் செய்யப்பட வேண்டும்

2.மின் விளக்குகள் சரியாக இயங்குகிறதா என்று அரங்கம் முழுவதும் சோதித்து, சரி செய்ய வேண்டும்

3.நாற்காலிகள், மற்றும் சந்திப்புக்கு தேவையான தளவாடங்கள் (furniture) சரியாக உள்ளனவா என்று சரி பார்க்க வேண்டும்

4.மின்/குளிர்சாதன அமைப்புகள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்

5.சரியான கோணங்களில் காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். உலகின் மற்ற பகுதிகளில் வாழும் பங்குதாரர்கள் நிகழ்ச்சிகளை பார்க்க உதவியாக இருக்கும்

6.சந்திப்புக்குத் தேவையான பாதுகாப்பு அமைப்புகள் சரியாக அமைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்

மேலே சொன்ன ஆறு ஏற்பாடுகள், செய்யப் பட வேண்டிய வேலைகளில் ஒரு சின்ன பகுதிதான். ஆனால், நமது வடிவியல் செயலிகள் புரிதலுக்கு இவை போதுமானது.

இன்னும் 4 நாட்களில் அந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்றும் வைத்துக் கொள்வோம். அத்துடன், இந்த வேலைகளைச் செய்து முடிக்க நம்மிடம் இரு தரப்பு ஆட்கள் இருப்பதாகக் கொள்வோம். அதாவது, 1) தன்னுடைய அனுபவம் மற்றும் பயிற்சியால் மட்டுமே சில தனித்தன்மையான (specialized) செயல்களைப் புரிபவர்கள் 2) சொல்லிக் கொடுத்தால், அப்படியே மீண்டும், மீண்டும், அதே செயலை செய்து முடிப்பவர்கள். இவர்களிடம், பயிற்சி மற்றும் அனுபவத்தை எதிர்பார்க்க முடியாது.

People_at_Work.png

1.சுத்தம் செய்யும் பணியை, இரண்டாம் தரப்பினரிடம் தாராளமாகக் கொடுக்க முடியும். அதுவும், பலர் இருந்தால், இன்னும் நல்லது. அரங்கத்தை பல பகுதிகளாகப் பிரித்து, இவர்களை அனுப்பினால், 4 முதல் 5 மணி நேரத்திற்குள், சுத்தம் செய்து முடித்து விடுவார்கள். முதல் தரப்பினரால், இச்செயலைச் செய்ய முடியும். ஆனால், அவர்கள் சில நாட்கள் எடுத்துக் கொள்வார்கள். அத்துடன், நம்மிடம் அதிக அளவில் முதல் தரப்பினர், இருக்க மாட்டார்கள்

2.மின் விளக்குகள் சரியாக இயங்குகிறதா என்று சரிபார்க்கும் செயலினையும் இரண்டாம் தரப்பினர், முதல் தரப்பினரைவிட வேகமாகச் செய்ய முடியும். ஏனெனில், அரங்கில் பல்லாயிரக்கணக்கான மின் விளக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும்

3.தளவாடங்கள் பணியும் இரண்டாம் தரப்பினர், முதல் தரப்பினரைவிட வேகமாகச் செய்ய முடியும். ஏனெனில், அரங்கில் பல்லாயிரக்கணக்கான தளவாடங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்

4.மின்/குளிர்சாதன அமைப்புகள் பரிசோதனை: இரண்டாம் தரப்பினர், இதற்கு சற்றும் பொருந்த மாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் பயிற்சியும் அனுபவமும் இல்லை. அத்துடன், இப்பணியை எளிதாக பிரித்துத் தருவது இயலாதது. இது, முதல் தரப்பினரின் பலம்

5.சரியான கோணங்களில் காமிரா பொருத்தல்: இரண்டாம் தரப்பினர், இதற்கு சற்றும் பொருந்த மாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் பயிற்சியும் அனுபவமும் இல்லை. அத்துடன், இப்பணியை எளிதாக பிரித்துத் தருவதும் இயலாதது. இதுவும், முதல் தரப்பினரின் பலம்

6.சந்திப்புக்கு தேவையான பாதுகாப்பு அமைப்புகள்: இதை இரண்டாம் தரப்பினரிடம் விட்டால், சொதப்பி விடுவார்கள். பாதுகாப்பு என்பது, அனுபவம் மற்றும் சரியான பயிற்சி தேவையான ஒரு செயல்

இந்த உதாரணத்திலிருந்து, எந்த தரப்பினர் எந்த வகை செயல்களை செய்ய வல்லவர்கள் என்று புரிந்திருக்கும். முதல் தரப்பினர், ஒரு புரிதலுக்காக, ’பொது செயலிகள்’ என்று கொள்ளலாம். இரண்டாம் தரப்பினர், ’வடிவியல் செயலிகள்’ என்று கொள்ளலாம்.

பொது செயலிகளால், வடிவியல் செயலிகளின் வேலைகள் அனைத்தையும் செய்ய முடியும். ஆனால், அதிக நேரமாகும். ஆனால், வடிவியல் செயலிகளால், பொது செயலிகளின் வேலையைச் செய்ய இயலாது

1.எல்லா வேலைகளையும் வடிவியல் செயலிகளால் செய்ய இயலாது. சந்தையில் லாரியுடன் வந்திரங்கும் கூலிப்படை போன்றது இந்த வடிவியல் செயலிகளின் இயக்கம்

2.வடிவியல் செயலிகள், பொது செயலிகளைவிட குறைவான வேகத்தில் செயல்படுகின்றன. ஆனால், அவற்றில் அதிக மைய செயல்தளங்கள் (CPU cores) உள்ளன.

3.பொது செயலிகளில், நூற்றுக்கு உட்பட்ட மென் திரிகள் ஒரே சமத்தில் இயங்கும் திறம் படைத்தவை. வடிவியல் செயலிகளில், பல்லாயிரம் மென் திரிகள் (software threads) ஒரே சமத்தில், சர்வ சாதாரணமாக இயங்கும் (நம்மூர் அரசியல்வாதிகள் மூலம், நமக்கு தெரிந்த சொல் – ‘கூலிப்படை’!)

மேலே சொன்ன விளக்கங்களிலிருந்து, முதலில் நாம் பட்டியலிட்ட கேள்விகளுக்கு பதில்:

1.பெண்டியத்திற்கு சவால் – அப்படி ஒன்றும் இல்லை. பொது செயலிகளின் வேலையும், வடிவியல் செயலிகளின் வேலையும் வேறுபட்டவை

2.தனிப்பட்ட வடிவியல் கணினிகள் – இயக்க நிரல்களின் தேவைகளை வடிவியல் செயலிகளால் பூர்த்தி செய்ய முடியாது (இது பற்றி கொஞ்சம் விரிவாக பிறகு பார்ப்போம்). இதனால், தனிப்பட்ட வடிவியல் கணினிகள் சாத்தியமில்லை. கூலிப்படை கொண்டு ஒரு நிறுவனத்தை நடத்த முடியுமா?

3.அன்றாட கணினி பிரச்னைகளுக்கு வடிவியல் கணினிகள் – சரிப்பட்டு வராது. இது வடிவியல் செயலிகளுக்கு இழைக்கும் அநியாயம். வாழ்க்கையின் 90 வருடம் சும்மா இருந்த ஒருவரைப் போல அவை காட்சியளிக்கத் துவங்கும்  இதனாலேயே, இண்டெல் போன்ற நிறுவனங்கள், on-board graphics processor என்ற, அதிக திறனற்ற வடிவியல் செயலிகளை மடிக்கணினிகளுக்காக தயாரிக்கிறது. எக்ஸல் படங்களுக்கும், பவர்பாயிண்ட் காட்சியளிப்பிற்கும் அது போதுமானது!

4.வடிவியல் இயக்க நிரல்கள் (OS for graphics processors) – இது சிந்திக்கும் கூலிப்படை போன்ற விஷயம். இயக்க நிரல்களுக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் தேவையானது: அ) இயக்கத்தில் குறுக்கீடு (interrupt) மற்றும் ஆ) பல்முடிவெடுக்கும் திறன் – அதாவது ஒரு சந்திப்பில், பல பாதைகள் இருந்தால், எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்ற முடிவெடுப்பது இயக்க நிரல்களில் மிகவும் முக்கியம். ஆனால், வடிவியல் நிரல்களால், அது இயலாத காரியம். பெரும்பாலும், ஒரு வேலையை முடித்து, அதே வேலையை அடுத்த பகுதியில் செய்யும் கூலிப்படை போன்றவை வடிவியல் செயலிகளின் செயல்பாடு. பின்நோக்குதல் என்பது இவைகளால் இயலாது. அத்துடன், எங்காவது பல பாதைகள் தோன்றினால், முடிவெடுக்கும் திறனற்றவை

5.எதிர்காலத்தில், வடிவியல் செயலிகள் பொது செயலிகள் போல இயங்கும் சாத்தியம்: சரிப்பட்டு வராது. ஏனென்றால், பொது செயலிகளின் திறனை வடிவியல் செயலிகளில் கொண்டு வருவது மிகவும் கடினமான செயல். அப்படியே செய்தால், இந்த இரண்டு செயலிகளுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது. அத்துடன், நம்முடைய உதாரணப்படி பார்த்தால், கூலிப்படையை மேதையாக்கும் செயல் போன்றது இது

Microprocessors.png

அடுத்த கட்டமாக, உதாரணத்தைத் தாண்டி, தொழில்நுட்ப விஷயங்களையும் அடுத்த பகுதியில் ஆராய்வோம்.

பின்குறிப்பு

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன் வைக்கிறேன்

# ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை

1 Parallel processing இணையாளல்

2 Graphic processors வடிவியல் செயலிகள்

3 General processors பொது செயலிகள்

4 Operating system இயக்க நிரல்

5 Software threads மென் திரிகள்

6 Interrupt குறுக்கீடு

.- See more at: http://solvanam.com/?p=35011#sthash.ijpYWThr.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.