Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவதைகளின் உலகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவதைகளின் உலகம்
விநாயக முருகன்




என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். பெண்களுக்கு இதயத்தை கடன் கொடுத்தாலும் கொடுக்கலாம். பணத்தை மட்டும் கடன் கொடுக்கவே கூடாது. அதுவும் அழகான இளம்பெண்களுக்கு கடன் கொடுக்கவே கூடாது. அவர்களிடம் வசூல் செய்ய முடியாது என்று அர்த்தமில்லை. திருப்பி கேட்க நமக்கு மனசு வராது.


நான் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தின் கிளையலுவலகம் ராமாபுரம் எதிரே இருக்கும் டிஎல்எப் வளாகத்தில் உள்ளது. டிஎல்எப் வளாகத்தை சுற்றி அழகான மரங்களுக்கும்,குளுமைக்கும் பஞ்சமே இருக்காது. சென்னையிலேயே போயஸ் கார்டனுக்கு பிறகு நான் மிகவும் விரும்பி ரசிக்கும் இடம் இது. இங்கு பரங்கிமலையும், கூவம் ஆறும், நிறைய மரங்களும் இருப்பதால் கோடைக்காலத்தில் கூட அவ்வளவாக சுகமாக இருக்கும். தவிர பிரிட்டிஷார் காலத்தில் இங்கு இராணுவ குடியிருப்புகள் இருந்தனவாம். பிரிட்டிஷார் சென்றபிறகு அது இந்திய இராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன. எனவே இங்கு மரங்களை வெட்டியோ, மலைகளை பெயர்த்தோ யாரும் பெரியளவில் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லை. உள்நாட்டுப்போரில் இறந்துப்போன பிரிட்டிஷ் வீரர்களுக்காக கட்டப்பட்ட கல்லறைகளும் இந்தப்பகுதியில் பிரசித்தம். எப்போதாவது வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அந்த வீரர்களின் வாரிசுகள் இங்கு பூங்கொத்து வைத்துவிட்டு செல்வார்கள். அந்தக் கல்லறைகளை பார்க்கும்போதெல்லாம் கண்ணுக்கு தெரியாத தேவதைகள் அங்கு நின்று மென்சோக அஞ்சலியொன்றை வாசிப்பது போல எனக்கு தோன்றும். சென்னையில் ஓடும் கூவத்தை நீங்கள் சென்னையின் எந்த பகுதிக்குச் சென்றுப்பார்த்தாலும் அங்கு உருக்கிய தாரை ஓடவிட்ட நிறமாய் தெரியும். ஆனால் ராமாபுரம் பகுதியில் மட்டும் ஓரளவு தெளிந்த தண்ணீர் ஓடும். சென்னைக்கு புதிதாக வருபவர்கள் ஆறு என்றே நம்புபடியான தோற்றத்தில் நாணல் புற்கள் எல்லாம் வளர்ந்து பார்க்க ரம்யமாக காட்சியளிக்கும். அதனாலேயே கூவத்தின் இந்த பகுதியை துணி துவைக்கும் பணியாளர்கள் அதிகம் விரும்புவார்கள்.

இங்கு பணிபுரியும் எனக்கிருந்த ஒரே வருத்தம் இவ்வளவு மரங்களும், அடர்குளுமையும் இருந்தும் இங்கு ஏன் அவ்வளவாக பறவைகள் வசிப்பதில்லை? காக்கைகள் மட்டுமே இங்கு அதிகம் பறந்துக் கொண்டிருக்கும்.அது ஏன் இவ்வளவு நிழலடர்ந்த பிரதேசத்தில் அழகான குருவிகளோ,கிளிகளோ வருவதில்லை என்று எனது அலுவலக கேண்டீனில் அமர்ந்து நினைத்துக்கொண்டிருக்கும்போதுதான் அவளை நான் சந்தித்தேன். அப்போதுதான் தோன்றியது. பேரழகு குடியிருக்கும் இடத்தில் எல்லாம் அழகு உள்ளே வர தயங்கி நிற்குமாம். தேவதைகள் தத்தி தத்தி நடக்கும் நிலப்பகுதிகளின் மேலே பறவைகள் பறக்க தயங்குமாம். அது உறுதியாகவே தெரிந்தது,

ஆனால் என்ன அழகு இருந்து என்ன பிரயோசனம். தேவதைகளுக்கு கல் நெஞ்சமல்லவா உள்ளது? அரைமணிநேரமாக கேண்டீனில் சோகமாக அமர்ந்து அங்கு சென்றுக் கொண்டிருக்கும் தேவதைகளை பார்த்துக்கொண்டிருக்கின்றேன். எல்லா தேவதைகளும் பூமிக்கு வரும்போதே ஐபோனையும்,சாம்சங் கேலக்சியையும் கையோடு எடுத்து வந்துவிடுகிறார்கள். அது எப்படி எல்லா தேவதைகளுக்கும் அரக்கர்கள் உருவில் இருக்கும் காதலர்கள் அதுவும் அவர்கள் எந்த தவமும் செய்யாமல் வரம் போல உடனே கிடைத்து விடுகிறார்கள். திகைப்பாக இருந்தது. எனக்கு யாருமில்லை. நான் கூட மனதுக்குள் நினைத்துக்கொண்டு சோகமாக தேநீர் அருந்தியபடி அமர்ந்திருந்தேன். யாரும் என்னைக் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. சரி நம்ம பிழைப்பை பார்க்கலாமென்று இருக்கையிலிருந்து எழுந்தேன்.

அப்போதுதான் அவள் தூரத்தில் இருந்து என்னை பார்த்து கையை அசைத்தது போல தோன்றியது. திரும்பி பார்த்தேன். நல்லவேளை பின்னால் எந்த அரக்கனும் இல்லை. அவளை பார்த்தால் தேவதைகளின் தேவதை போல இருந்தாள். ஜீன்ஸ் பேண்ட்டும் டிஷர்ட்டும் இறுக்கமாக அணிந்திருந்ததால் எனக்கு மூச்சு திணறியது. அவள் என்னை பார்த்து அங்கேயே இருங்க.. ப்ளீஸ் என்று சொன்னாள். எனக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. அவள் ப்ளீஸ் இங்கேயே இருங்க . நான் இப்ப வந்துடறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று எதோ தின்பண்டம் வாங்க ஆரம்பித்தாள். நான் புரியாமல் தூரத்தில் தின்பண்டம் வாங்கும் கடையில் நிற்கும் அவளை பார்த்தேன். ப்ளீஸ் ப்ளீஸ் என்று என்னை பார்த்து சைகை காட்டினாள். அது உலகின் எந்த மொழியிலும் மொழிபெயர்க்க இயலாத ஒரு கவிதை போல இருந்தது. காலம் அப்படியே உறைந்துப்போகக்கூடாதா என்று கூட ஏக்கமாக இருந்தது. எனது பக்கத்தில் தீனி டப்பாவோடு வந்தாள். எனக்கு அப்படியே வானத்தில் மிதப்பது போல இருந்தது. ப்ளீஸ் இப்ப நீங்க எழுந்துக்குங்க என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“இல்ல கேண்டீன்ல கூட்டம் அதிகமாக இருந்துச்சு. இந்த நேரத்துல இடம் கிடைக்காது. அதான் உங்கள இங்க கொஞ்ச நேரம் உட்கார சொன்னேன்” என்றாள்.

அது ஏன் இந்த தேவதைகளுக்கும்,யட்ஷினிகளுக்கும் இப்படி மனிதனின் மனதை கொல்லும் கொடூரத்தை கொடுத்தார்கள் என்று நினைக்கும்போது வருத்தமாக இருந்தது. அவ்வளவு மோசமாக நான் எனது வாழ்க்கையில் காயம் பட்டதே இல்லை. நாம் கொஞ்சம் கண்ணை மூடி தூங்கினால் நம்ம கிட்னியை அப்படியே உருவி எடுத்துட்டு போய் சேட்டு கடையில அடகு வச்சு காதலனுடன் திரைப்படம் பார்க்க செல்லும் பெண்ணைப்பற்றி நண்பர்கள் என்னிடம் சொல்லியுள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் நம்பியதில்லை. அதெல்லாம் ஏதோ நாடகத்தில் வரும் மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள் போல தோன்றும். கடுப்போடு எழுந்து வந்துவிட்டேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு எனது வேலையே ஓடவில்லை. எனது மனம் அந்தப் பெண்ணை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. எனது அலுவலக நண்பனிடம் சொன்னேன். அவன் என்னை விநோதமாக பார்த்துவிட்டு பிறகு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

டிஎல்எப் வளாகத்தில் மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஆயிரம் பேர்கள் வேலை செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் உள்ளே வருவார்கள். வெளியே செல்வார்கள். எனவே அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது. ஆனால் நல்லவங்களுக்கு நல்ல நேரமும்,கெட்ட நேரமும் நீண்ட நேரம் நீடிக்காது என்று ஒரு பழமொழி உள்ளதல்லவா? அந்தப் பெண்ணை மீண்டும் கேண்டீனில் காலை நேரத்தில் சந்தித்தேன். எனது கடனட்டை வேலை செய்யவில்லை. கடனட்டையில் பிரச்சினையா அல்லது கடனட்டையை தேய்க்கும் எந்திரத்தில் பிரச்சினையா தெரியவில்லை. சட்டைப்பையில் ஐநூறு ரூபாய் தாள் இருந்தது. அந்த கேண்டீனில் சில்லறை கிடைப்பது குதிரைக்கொம்பு. என்ன செய்வதென்று முழித்துக் கொண்டு திரும்பும்போது அவள் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தாள். என்னை பார்த்து சிரித்தாள்.

“உங்க பின்னாடி நிக்கறவங்ககிட்ட சில்லறை கேளுங்க” என்று கேஷ்கவுண்டரில் இருந்த ஆள் சொன்னார். எதேச்சையாக திரும்பிப்பார்த்தால் அவள் நின்றிருந்தாள். எதுக்கு வம்பு..அப்படிப்பட்ட பழச்சாறை எதுக்கு குடிக்கணும் என்று திரும்பி நடந்தேன்

“ஹலோ..எக்ஸ்கியூஸ்மி…உங்களைத்தான். என்னங்க இது? அன்னைக்கு சீட்டு எல்லாம் பிடிச்சு கொடுத்தீங்க. நான் ஹெல்ப் செய்யமாட்டேனா? கொடுங்க சில்லறை தர்றேன்” என்று என்னிடம் இருந்த ஐநூறை வாங்கி (கிட்டத்தட்ட பிடுங்கி) சில்லறை கொடுத்தாள். ஆனால் அவளிடம் நானூற்று ஐம்பது ரூபாய்தான் இருந்தது.

“இதை எடுத்துக்குங்க. மதியம் சாப்பிடும்போது வந்தீங்கன்னா ஐம்பது ரூபாய் தர்றேன்” என்றாள்.

பரவாயில்லை. தேவதைகளுக்கும் இதயம் இருக்குமென்று நினைத்துக்கொண்டேன். மதிய உணவு இடைவேளைக்கு சரியாக ஒருமணிக்கு வருவதாக உறுதியளித்திருந்தாள். அது போலவே அங்கு வரவும் செய்தாள். நான் கேண்டீனுக்கு செல்லும்முன்பே அவள் அங்கு சென்று எனக்காக காத்திருந்தாள். சிக்கன் பிரியாணி நூறு ரூபாய் என்று எழுதப்பட்டிருந்த கவுண்டரில் நின்றுக்கொண்டிருந்தாள்.. அவள் சோகமாக என்னை பார்த்தாள்.

“இப்பவும் சில்லறை இல்லையாம். எங்கிட்ட நீங்க காலையில கொடுத்த ஐநூறு ரூபாய்த்தான் இருக்கு. உங்ககிட்ட நூறு ரூபாய் இருக்குமா?” என்று கேட்டாள். மனசு கேட்கவில்லை. கொடுத்தேன்.

இருவரும் பிரியாணித்தட்டுடன் சென்று தூரத்தில் தெரியும் பரங்கி மலையையும், அங்கு தாழப்பறக்கும் விமானங்களையும் ரசித்தபடியே உணவருந்தினோம். சாப்பிடும்போது அவளிடம் “நீங்க எனக்கு மொத்தம் நூற்று ஐம்பது ரூபாய் கடன் தரனும்” என்றேன் தயங்கியபடியே.

ஏதோவொரு திரைப்படத்தில் தனது உடலில் ஆவி குடிவந்த கதாநாயகி தனது கணவனை பார்ப்பாரே. அது போல என்னை பார்த்தாள். எனக்கு பயத்தில் வெலவெலத்து விட்டது. அவள் பதிலேதும் சொல்லவில்லை. நம்பினா நம்புங்க ஒரு நறநறவென பொடிபொடியாக சிக்கன் எலும்புகளை கடித்து முழுங்கிவிட்டாள். தட்டில் எதுவுமில்லை. நான் எதுவும் பேசாமல் அமைதியாக உணவருந்திவிட்டு கைகழுவ சென்ற இடத்தில் எதேச்சையாக கண்ணாடியில் நிமிர்ந்து பார்த்தேன். எனது பின்னால் அவள் நின்றுக்கொண்டிருந்தாள். கொலை செய்வது போல பார்த்துக்கொண்டிருந்தாள். திடுக்கிட்டு திரும்பினேன். அவள் கண்கள் கருணையற்ற கொலையொளி ஒளிர்வது போல பட்டது. அவள் சலனமற்ற குரலில்

“என்னோட எம்ப்ளாயி நம்பர் சொல்றேன். நோட் செஞ்சுக்குங்க. கம்யூனிகேட்டர்ல பிங்க் செய்யுங்க. நாளைக்கு நான் சில்லறை மாத்தி வைக்கறேன். வந்து வாங்கிக்குங்க” என்றாள்.

அவளிடம் விடைப்பெற்று எனது இருக்கைக்கு திரும்பி வெகுநேரமாகியும் ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்திவிட்டோமா என்று குழப்பமாக இருந்தது. எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை. ஏதோ ஓர் இணையத்தளத்தை படித்துக் கொண்டிருந்தேன். அந்த தளத்தில் யாரோ ஒரு கதையை எழுதியிருந்தார்கள் இப்படி.



தேவலோகத்துக்கு விருந்தினராக சென்றிருந்த அர்ஜுனனை சந்தோஷப்படுத்த நினைத்த அவனது தந்தை இந்திரன் அர்ஜுனனின் அறைக்குள் ஈரேழு உலகத்தின் தலைசிறந்த பெண்ணான ஊர்வசியை அனுப்பி வைக்கிறான். அர்ஜுனனின் அறைக்குள் ஊர்வசி நுழைகிறாள். ஆனால் அந்த நேரம் பார்த்து அர்ஜுனன் கடுமையான விரதம் இருக்கிறான். ஊர்வசி அறைக்குள் நுழைந்ததும் ஆடைகளை களைகிறாள். அர்ஜூனன் பதறிச்சென்று அவளது பாதங்களில் விழுகிறான்.

அன்னையே தங்களை வணங்குகிறேன். எங்கள் குலத்தில் முன்னவரான புரூரவ சக்ரவர்த்திக்கு தாங்கள் மனைவியாக இருந்திருக்கிறீர்கள். அவ்வகையில், எனக்கு தாயாகின்றீர்கள் என்று சொல்ல . ஊர்வசிக்கு மகாகோபம்.

“ஏ அர்ஜுனா ! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய். தேவதாசிகளை உறவு கொண்டாடும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை மறந்து விட்டாயா ? நாங்கள் யாரிடம் உறுவு கொள்ள விரும்புகிறோமோ, அவர்கள் எங்களை திருப்தி செய்ய வேண்டுமென்ற விதிக்கு புறம்பாக பேசினாய். உன் வீரம், உன் திறமைக்காக என்னை உன்னிடம் ஒப்படைக்க வந்தேன். நீயோ, என்னைத் தாயாகப் பார்த்தாய். நீ பேடியாக (ஆணும் பெண்ணும் மற்ற நிலை) போ” என சாபம் கொடுக்கிறாள்

இதுக்கெல்லாமா ஒரு பெண் இப்படி சாபம் கொடுப்பாள். இருக்காது. வேறெங்கோ தப்பு நடந்திருக்க வேண்டும். இந்தக்கதை பெண்களை அடிமைப்படுத்த நினைத்த காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். எனக்கென்னவோ அர்ஜூனன் ஊர்வசியிடம் நூற்றி ஐம்பது பொற்காசுகள் கடன் கொடுத்திருக்க வேண்டும். திருப்பிக்கேட்க செல்லும்போது அவள் சாபம் விட்டிருக்க வேண்டும். மலைகள் வளர்ந்துக்கொண்டே செல்வது போல கதைகளும் காலத்துக்கேற்ப மாறும்தானே? கண்டிப்பாக முன்னொரு காலத்தில் இப்படித்தான் அர்ஜூனனுக்கும், ஊர்வசிக்கும் இடையே ஏதோ பிணக்கு நடந்திருக்க வேண்டும். எனக்கு ஏசி அறையிலும் வியர்த்துக்கொட்ட ஆரம்பித்து விட்டது. மனதின் மூலையில் எப்போதும் இருக்கும் அந்த சந்தேகங்களும், குழப்பங்களும் மீண்டும் குடிவந்து படபடப்பாக உணர ஆரம்பித்தேன். சமீபகாலமாக இதுபோன்ற இனம்புரியாத உணர்வு அடிக்கடி என்னை வந்து தாக்க ஆரம்பித்துள்ளது.

எனது அலுவலக நண்பன் “என்னாச்சு உனது உடம்புக்கு? ஏன் உனக்கு இப்படி வியர்க்குது? பிபி இருக்கா?” என்று கேட்டான். பதில் எதுவும் சொல்லாமல் கணிப்பொறித்திரையை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் அந்த பெண்ணை மீண்டும் உணவகத்தில் சந்தித்தேன். உணவகத்தில் ஐஸ்கிரீம் வாங்கி கொண்டிருந்தார். நான் இன்னொரு கவுண்டரில் காபி வாங்கிக்கொண்டிருந்தேன். நல்லவேளை உணவகத்தில் அமர காலியான இருக்கைகள் இருந்தன. அன்று போல என்னை அமரச்சொல்லி இடம் போடவில்லை. ஐஸ்கிரீம் வாங்கிவிட்டு என் எதிரே வந்தமர்ந்தாள். அவள் கைப்பையில் நூறு ரூபாய் நோட்டுகளும், ஐம்பது நூறு ரூபாய் நோட்டுகளும் தெரிந்தன.

என்னைப் பார்த்து சிரித்தார். சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த யாரோ ஒரு பெண்ணின் அலைபேசி ஒலித்தது. மாமா மாமா எப்ப ட்ரீட்ட்டு என்று ரிங்டோன் ஒலித்தது. எனக்கு அதையெல்லாம் கவனிக்கும் மனநிலை இல்லை. அதை தாண்டி எனக்கு தர வேண்டிய நூற்றி ஐம்பது ரூபாய் நினைவுக்கு வந்தது. அவளிடம் கொடுத்த கடனை கேட்க தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது. ஆனால் அவளோ அதுபோன்ற ஒரு சம்பவமே நடக்காதது போல என்னிடம் இயல்பாக பேச ஆரம்பித்தாள். பொங்கலுக்கு வந்த புதுத்திரைப்படங்கள் முதல் பாராளுமன்ற தேர்தல் வரை ஏன் நரேந்திர மோடி, சோனியா காந்தி பற்றி கூட பேசிக்கொண்டே போனாள். ஆனால் கடைசி வரைக்கும் எனக்கு தர வேண்டிய நூற்றி ஐம்பது ரூபாய் அவளுக்கு நினைவு வரவில்லை.

நான் அப்போது ஒரு நூதனமான உத்தியை கையாள ஆரம்பித்தேன். இக்கட்டான நேரங்களில்தான் மனிதர்களுக்கு பிரமாதமான யோசனைகளை எல்லாம் தோன்றுமாம். ஒரு திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் அம்னீஷியா வியாதி குணமாகி வீடு திரும்பும் கதநாயகி ரயிலின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருப்பார். அவர் காதலனை மறந்துவிட்டிருப்பார். ரயில் நகரும்போது அங்கு ஓடிவரும் காதலன் தனது காதலை நினைவூட்ட ஏதேதோ செய்வார். அதுபோல நான் அவளிடம் அந்த நூற்றி ஐம்பது என்ற எண்ணை எப்படி எப்படியோ நினைவூட்டினேன்.

அஜீத் நடித்த ஐம்பதாவது திரைப்படம் மங்காத்தா என்று பேச்சினூடாக சொன்னேன். அவளுக்கு எதுவும் புரியவில்லை. எங்க அம்மாவுக்கு ஐம்பது வயது என்று சொன்னேன். எங்க பாட்டி ஒருத்தங்க நூற்றி ஐம்பது வயசு வரைக்கும் உயிரோட இருந்தாங்க என்று கூட சொல்லிவிட்டேன். ஈஸிட் என்று அந்த பெரிய கண்களை வைத்து ஆச்சர்யமாக கேட்டாள். கடைசி வரை அவளுக்கு என்னிடம் வாங்கிய நூற்றி ஐம்பது ரூபாய் நினைவுக்கு வரவேயில்லை.

இப்படியே போனால் இது மிகப்பெரிய காவியச்சோகமாகி விடுமோ என்று பயந்தேன். ஒருவேளை எனது கல்லறைக்கு யாராவது வந்தால் அங்கே வைக்கும் அவர்கள் மலர்களோடு அவள் இரக்கம் இல்லாதவள் என்றும் நான் பைத்தியக்காரன் என்றும் பாடிவிடுவார்களோ என்றும் பயமாக இருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக அன்று விடைபெற்ற நான் மறுநாள் அவளை மீண்டும் உணவகத்தில் சந்தித்தேன். அன்று காதலர் தினம். அவளோடு இன்னொரு பெண்ணும் இருந்தாள். அவள் தோழியாக இருக்க வேண்டும். ஆனால் அந்த தோழி அவள் அழகாக இல்லை. அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சு வாக்கில் காதலர் தினமன்று என்ன செய்வீங்க என்று கேட்டேன். இரண்டு பேரும் சொல்லி வைத்தது போல இப்படித்தான் சொன்னார்கள்.

“காலையில் குளிச்சுட்டு கோவிலுக்கு போவோம். அப்புறம் எங்க அப்பா, அம்மாவுக்கு போன் செஞ்சு பேசுவோம். அப்புறம் காலேஜ் படிக்கற தம்பியிடம் போன்ல பேசுவோம். யுஎஸ்ல இருக்கற அண்ணன், அண்ணிகிட்ட போன்ல பேசுவோம். அண்ணிக்கு வாழ்த்து செய்தி சொல்வோம்”

இது என்ன? புதுமாதிரி புரளியா இல்ல இருக்கு? என்று நினைத்துக்கொண்டு,

“உங்களுக்கு பாய் பிரண்டே இல்லையா? அவங்களோட காதலர் தினம் கொண்டாட மாட்டீங்களா?” என்று கேட்டேன்.

“என்னது லவ்வா? காதலர் தினம்னா லவ்வர்ஸ் மட்டும்தான் கொண்டாடனுமா என்ன? அம்மாவுக்கு, அப்பாவுக்கு,நண்பர்களுக்கு யாரெல்லாம் நம்ம மேல அன்பா இருக்காங்களோ அவங்களுக்கு கூட கிரீட்டிங்க்ஸ் அனுப்பலாம்” என்றார்கள்.

நான் அன்னைக்கே சொல்லலை. நாம் கொஞ்சம் கண்ணை மூடி தூங்கினால் அப்படியே நம்ம கிட்டினியை உருவி எடுத்துட்டு போய் சேட்டு கடையில அடகு வச்சு திரையரங்கு போயிடுவாங்க. எனது நண்பர்கள் சொன்னது காதில் ஒலிக்க ஆரம்பித்தது.

அடுத்த ஒரு வாரம் அந்தப் பெண்ணை என்னால் சந்திக்க முடியவில்லை. அந்த பெண்ணின் நினைவாகவே இருந்தேன். எனது நிலையை பார்த்துவிட்டு எனது அலுவலக நண்பன் என்னவென்று கேட்டான். விஷயம் சொன்னேன்.

“அற்பமே நூற்று ஐம்பது ரூபாய்க்கா இவ்வளவு பெரிய கவலை?” என்று கேட்டான்.

“பிரச்சினை பணம் அல்ல நண்பா. பேருந்து பயணத்தின்போது பலரை கவனித்துள்ளேன். அமர ஜன்னலோர இருக்கை கிடைத்தும் வெளியே மரங்கள், மலைகள் தெரிந்தாலும் அவற்றை கவனிக்காது உள்ளூர பதற்றமாக இருப்பார்கள். காரணம் நடத்துனர் ஒரு ரூபாய் சில்லறை பாக்கி கொடுக்க வேண்டி இருக்கும். ஒரு ரூபாய் என்பது இந்த காலத்தில் பெரிய தொகை இல்லைதான். பிச்சைக்காரர்களே ஒரு ரூபாயை வாங்குவதில்லை. அரசாங்கம் கூட ஒரு ரூபாய் வெளியிடுவதை நிறுத்திவிடலாமா என்று தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் நடந்துனர் திருப்பிக்கொடுக்க வேண்டிய அந்த ஒரு ரூபாய் என்பது மனதின் மூலையில் நெருஞ்சி முள்ளாய் உறுத்திக்கொண்டே இருக்கும். அதை வாங்கியபிறகுதான் பேருந்தில் நம்மால் நிம்மதியாக உறங்க முடியும். இது ஒரு உளவியல் ரீதியான பிரச்சினை. மனதை பற்றி பிராய்டு என்ன சொல்ல வருகிறாரென்றால்…”

நான் பிராய்டு என்ற பெயரை சொன்னதும் எனது அலுவலக நண்பன் தனக்கு வேலை இருக்கிறதென்று எழுந்துச் சென்றுவிட்டான். எனக்கு வருத்தமாக இருந்தது. அந்தப் பெண்ணை பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். அவள் எங்கள் அலுவலகத்தை விட்டு வேறெங்கோ வட இந்திய பக்கம் சென்றுவிட்டாள் என்பதை அவளது பணியாளர் எண்ணை வைத்து தெரிந்துக்கொண்டேன். பிறகு அடுத்து வந்த நாட்களில் மெல்ல மெல்ல அவளை மறந்துப்போக ஆரம்பித்தேன். மனதின் அசாத்தியமான எத்தனையோ விஷயங்களில் இந்த மறதியும் உண்டு. எனக்கு பிடித்தமானதும் கூட. ஆனால் நாம் மறந்துப்போக நினைக்கும் எத்தனையோ விஷயங்கள் அவ்வளவு எளிதில் மறைந்துவிடுவதில்லை. அவள் எனக்கு தரவேண்டிய நூற்று ஐம்பது ரூபாய் மெல்ல மெல்ல எனது நினைவின் அடுக்குகளில் இருந்து மறைந்துக் கொண்டே வந்தது.

அந்த சம்பவத்துக்கு பிறகு நான் எந்த பெண்களிடமும் பழகுவதில்லை. பேசுவதுமில்லை. நானுண்டு எனது வேலையுண்டு என்று சென்றுக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மை என்னவென்றால் பெண்கள்தான் என்னிடம் பேச பயந்திருந்தார்கள் என்று தெரிந்தது. காரணம் அதே வாரம் சிறுசேரியில் எங்கள் கிளை அலுவலகத்தின் எதிரே இருந்த இன்னொரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த உமாமகேஸ்வரி என்ற பெண்ணை கொலை செய்துவிட்டார்கள். பாவம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவரை யாரோ சில வடஇந்தியர்கள் வன்புணர்ந்து கொன்று புதருக்குள் வீசிவிட்டார்கள். சடலத்தை கொலை நடந்த ஏழெட்டு நாட்கள் கழித்தே காவல்துறையினர் அவரது உடலை கண்டுப்பிடித்தார்களாம். வழக்கமாக அந்த பெண் அலுவலக காரில்தான் வீட்டுக்கு போவாராம். ஆனால் அன்று மட்டும் ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்துள்ளார். இருட்டு நேரம். என்ன நடந்ததென்று தெரியவில்லை. பிறகு சடலம்தான் கிடைத்துள்ளது. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் சம்பவத்தை நேரில் பார்த்தது போல விவரித்து எழுதியிருந்தார்கள். குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருவதாகவும், இன்னமும் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றும் எழுதியிருந்தார்கள். அந்த சம்பவத்துக்கு பிறகு சிறுசேரி மட்டுமல்ல டீஎல்எப் வளாகத்தில் கூட ஆண்களும்,பெண்களும் சேர்ந்து பழகுவது,பேசுவது ஏதோ குறைந்தது மாதிரி எனக்கு ஒரு பிரமை. எனது அலுவலக நண்பனிடம் சொன்னேன்.

“நீ அதீத கற்பனைகளாலும், அதீத புத்தக வாசிப்பாலும் உன்னை நீயே குழப்பிக் கொள்கிறாய். இப்போதெல்லாம் உனது மண்டைக்குள் தேவையற்ற சந்தேகங்களும், உனது காதுக்குள் தேவையற்ற ஒலிகளும் அதிகரித்துள்ளனவோ என்று எனக்கு தோன்றுகின்றது. நீ விரைவிலேயே ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்க்க செல்லக்கூடுமென்று தோன்றுகின்றது” என்றான். நான் கடுப்போடு அங்கிருந்து நகந்து தனியாக கேண்டீன் சென்றேன். கடைக்கார பையனிடம் சூடான இஞ்சி தேநீர் தயாரிக்க சொல்லிவிட்டு நின்றுக்கொண்டிருந்தேன்.

“எக்ஸ்கியூஸ்மி நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?” என்று கேட்டார்.

திரும்பினேன். இது வேறு ஒரு தேவதை. ஆனால் பல்லாவரம் மலையடிவாரத்தில் நிற்பவனிடம் வந்து வத்திப்பெட்டி இருக்கா என்று அச்சுறுத்துவது போல எனக்கு தோன்றியது. கேட்ட தொனிதான் அப்படியே தவிர முகம் பார்க்க ஓவியர் மாருதி வரைந்த ஓவியம் போலிருந்தது.

“மன்னிக்கவும். எனக்கு இப்போதெல்லாம் பணத்தின் மீது ஆசை போய்விட்டது. நான் பணம் வைத்துக்கொள்வதில்லை” என்று சொன்னேன்

அவள் சோகமாக முகத்தோடு, “இல்ல இங்க யாருமே சில்லறை தரமாட்டேங்குறாங்க”

“சரி. எங்க போய் கேட்டீங்க?” என்றேன். தூரத்தில் இருந்த ஒரு கவுண்டரை காட்ட அங்கு ஒரு பெண்மணி தெரிந்தார்.

“அங்க ஏன் போய் கேட்டீங்க? என்னோட வாங்க” என்று பக்கத்தில் இருந்த ஒரு ஆண் அமர்ந்திருந்த கவுண்டரில் அழைத்துச்சென்று சில்லறை வாங்கி கொடுத்தேன். அவன் சிரித்தபடியே

“ஐந்து ரூபாய் சில்லறை வேணுமா பத்து ரூபாய் வேணுமா?” என்று வழிந்தான்.

அவளிடம்,”நான் அப்பவே சொல்லல. நீங்க கேட்டா அவன் நூறு ஒரு ரூபாய் கூட தருவான்” என்று சொன்னேன். அவள் சில்லறைக் காசுகளை கொட்டியது போல சிரிக்க அவன் என்னை முறைத்து விட்டு, “இனிமே இந்தாள அழைச்சுட்டு வந்தா நான் சில்லறை தரமாட்டேன்” என்றான் கடுப்போடு.

அவளிடம் “ஆமா எதுக்கு பத்து ரூபாயா சில்லறை வாங்குனீங்க?” என்று கேட்டேன்

“இல்ல. இப்பவெல்லாம் வேலை முடிஞ்சு லேட் நைட்ல தனி ஆட்டோவுல போறது பயமா இருக்கு. ஷேர் ஆட்டோவுலதான் போறேன். சில்லறை இல்லாட்டி மீதிக்காசு தர்ற மாட்டேங்குறாங்க” என்றாள். சரிதான் பெண்கள் உஷாராத்தான் இருக்காங்க என்று நினைத்தால் மதியம் அந்தப்பெண் மீண்டும் சோகமாக வந்தாள். என்ன விசயமென்று கேட்டேன்.

“பாருங்க இந்த பத்து ரூபாய் நோட்டு கிழிஞ்சிருக்கு.செல்லாத நோட்டை கொடுத்து ஏமாத்திட்டான். அவன்கிட்ட கேட்க போயிருந்தேன். கவுண்டர் பூட்டியிருக்கு” என்றாள்

“அதுக்கு? நான் என்ன செய்யனும்?”

“இல்ல. உங்களுக்கு தெரிஞ்ச ஆள்தானே. வேற பத்து ரூபா இருந்த கொடுங்க. நீங்க அவர்கிட்ட சொல்லி நாளைக்கு வேற நோட்டு வாங்கிக்குங்க”

இதுல மட்டும் இவங்க எப்படித்தான் என்னைய மட்டும் கண்டுபிடிப்பங்களோ என்று தோன்றியது. தவிர இதுல மட்டும் இந்தப் பெண்கள் எப்படித்தான் உஷாராக இருப்பார்களோ என்றும் தோன்றியது. அதீத கற்பனைகளாலும், தேவையற்ற விஷயங்களாலும் உன்னை நீயே குழப்பிக் கொள்கிறாய். இப்போதெல்லாம் உனது மண்டைக்குள் தேவையற்ற குழப்பங்கள் அதிகரித்துள்ளன என்று எனது அலுவலக நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒருவேளை என்னைத்தவிர இந்த உலகத்தில் இருக்கும் எல்லாரும் சந்தோஷமாக தெளிவாக இருக்கிறார்களோ? ஏனோ மனதெங்கும் பதற்றமும், சங்கடமும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது.

எனது இருக்கைக்கு திரும்பியும் வெகுநேரம் வரை அந்த பெண் இறுதியாக சொன்ன வாக்கியமே எனது காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. அதை அவள் சொல்லும்போது வேடன் கையில் தவறி விழுந்த புறாவின் இதயம் போல அவளது உடம்பு லேசாக நடுங்கிக்கொண்டிருப்பது போல தோன்றியது. அப்போது அவளது கண்கள் கணநேரம் உயிரோட்டமின்றி நிலைகுத்தி இருந்ததை உணர முடிந்தது.

“இப்பவெல்லாம் வேலை முடிஞ்சு லேட் நைட்ல தனியா ஆட்டோவுல போறது பயமா இருக்கு” அவள் சொன்னது காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஏனோ என் வாழ்க்கையில் வந்து மறைந்துப்போன தேவதைகள் எல்லாரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களை எல்லாம் இனி பார்க்க முடியுமோ என்னவோ? என்னதான் எப்போதும் தேவதைகளையே நினைத்துக்கொண்டிருந்தாலும் அது உண்மையில் தனிப்பட்ட முறையில் எனக்கு இதமூட்டினாலும் தேவதைகளின் சொந்தவாழ்க்கை அப்படியொன்றும் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இல்லாதது போல தோன்றியது. மேலும் தேவதைகளின் அர்த்தமற்ற பயமும், மென்சோகமும் எனக்கும் தொற்றிக்கொண்டது.


http://malaigal.com/?p=5343

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.