Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸா: எரிந்து கொண்டிருக்கும் நேரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  காஸா: எரிந்து கொண்டிருக்கும் நேரம் சேரன்

கன்னும் பத்து நிமிடங்களில் உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியேறிவிட வேண்டும். சரியாகப் பதினோராவது நிமிடம் உங்களுடைய வீடு ஏவுகணையால் தகர்க்கப்படும்.”

gaza-6.jpgஇஸ்ரேல் படையினரிடமிருந்து தொலைபேசியில் இந்த எச்சரிக்கை வந்ததும் மைஸா சலீம் தர்ஸாவின் மாமா, மாமி, உறவினர்கள், குழந்தைகள் என இருபது பேர் அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். மைஸாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஹமாஸ் அமைப்புடனோ அல்லது காஸாவில் இயங்கும் மற்றொரு அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கும் எத்தகைய உறவும் இல்லை. காஸாவில் இருப்பவை வீடுகள் அல்ல. பெரிய கட்டிடத் தொகுதிகளில் தொடர் குடியிருப்புகள். மாடியிலிருந்து இறங்கித் தெருவுக்கு வருவதற்கே ஆறு அல்லது ஏழு நிமிடங்களாகி விடும். உலகிலேயே மக்கள் தொகை மிகவும் அடர்ந்து, செறிந்த இடங்களில் காஸாவும் ஒன்று. தொடர் மாடிவீடுகளில் ஒன்றை மட்டும் குறி வைத்துத் தாக்குதல் சாத்தியம் இல்லை. ஒவ்வொரு குண்டு வீச்சும், எறிகணைத் தாக்குதலும் நூற்றுக்கணக்கான பொதுமக்களையும், வயோதிகர்களையும், குழந்தைகளையும் கொன்றொழிக்கும் என்பது இஸ்ரேலிய அரசுக்குத் தெளிவாகத் தெரியும். இஸ்ரேலின் முன்னணிப் பத்திரிகையான ஹரெட்ஸின் பத்தி எழுத்தாளர் கிடியோன் லீவி அண்மையில் எழுதியது போல இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் நோக்கம் எவ்வளவு அதிகமாகப் பலஸ்தீனியர்களைக் கொல்ல முடியுமோ, கொல்லுங்கள் என்பதே அடிப்படை நோக்கம். தொலைபேசி எச்சரிக்கைகள் எல்லா வீடுகளுக்கும் கிடைப்பதில்லை. அகதி முகாம்களில் இருப்பவர்களுக்குத் தொலைபேசிகளும் கிடையாது. எச்சரிக்கை செய்தோம் என இஸ்ரேல் அரசு சொல்வது வெறுமனே பாசாங்கு.

மைஸாவின் உறவினர்கள் தெருவுக்கு வந்து தப்பி ஓடுவதற்கு முன்பாகவே அவர்களுடைய வீட்டையும் தொடர் குடியிருப்பின் பெரும் பகுதியையும் ஏவுகணைகள் தகர்த்து விட்டன. மைஸாவின் குடும்பத்தில் ஏழு பேர் படுகாயம் அடைந்தார்கள். பக்கத்து வீட்டிலிருந்த குடும்பத்தில் ஒருவருமே எஞ்சவில்லை. இதுவரையில் 658 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுள் நூற்று நாற்பத்தேழு குழந்தைகள். ஐ.நா. அவையின் சிறுவர்கள் பதுகாப்பு நிதியம் (Save the Children Fund) விடுத்திருக்கும் அறிக்கையின்படி காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் மிகவும் மோசமாகக் கொல்லப்பட்டும் பாதிப்படைந்திருப்பதும் குழந்தைகளும் சிறுவர்களும்தான். 3745 பலஸ்தீன மக்கள் காயம்பட்டிருக்கிறார்கள். இருபத்தேழு இஸ்ரேலியப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது. ஹமாஸின் ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியப் பொதுமக்கள் இரண்டு பேர். 29 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட ஹமாஸ் உறுப்பினர்களின் விவரம் தெளிவாகத் தெரியவில்லை. பலஸ்தீன மக்களின் 1200 குடியிருப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன. ஐந்து மருத்துவமனைகளும் எழுபது பாடசாலைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

gaza2.jpgமைஸாவின் குடும்பத்தினர் காஸாவிலும் மேற்குக்கரையின் ரமல்லா நகரிலுமாகச் சிதறி வாழ்பவர்கள். இஸ்ரேல் அரசின் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், ஒடுக்குமுறைகளை மீறி அவர்கள் சந்திப்பது சாத்தியமில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக காஸா, முற்றுகைக்கும் பொருளாதாரத்தடைக்கும் உட்பட்டிருக்கிறது. ஒருபுறம் எகிப்தும் மற்றைய எல்லாப் புறங்களிலும் இஸ்ரேலும் என இந்தத் தீவிரமான முற்றுகை எண்பது வீதமான காஸா மக்களை ஐக்கிய நாடுகள் அவையினதும் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் உதவியிலும் தங்கியிருக்க வைத்துள்ளது. பதினைந்து லட்சம் மக்கள் வாழும் மிகக் குறுகியதான காஸா நிலப்பரப்பில் பன்னிரண்டு லட்சம் பலஸ்தீன மக்கள் அகதிகள். இவர்கள் மிகப்பெரிய, சனத்தொகை அடர்த்தி மிக்க, எட்டு முகாம்களில் வாழ்கிறார்கள். இந்தப் பகுதிகளிலேயே இஸ்ரேல் அரசின் கடற்படை, வான்படை, தரைப்படை என முப்படைகளின் தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் தீவிரமாக உள்ளன. உண்மையில் காஸாவைத் ‘திறந்த வெளிச் சிறைச்சாலை’ என்று சில விமர்சகர்கள் குறிப்பிடுவது மிகப் பொருத்தமானதாகும். காஸா மீதான பொருளாதாரத் தடையும் முற்றுகையும் சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானவை எனச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, தென்னாப்பிரிக்காவின் பிஷப் டெஸ்மண்ட் டூட்டு போன்ற பலர் குற்றஞ்சாட்டியிருந்தாலும், அமெரிக்க அரசு முற்றுகைக்கும் தடைக்கும் ஆதரவாக இருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தைப் ‘பயங்கரவாத அமைப்பு’ என மேற்குலகின் பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளமையால் காஸா மக்களுடைய பேரவலம் பற்றிச் ‘சர்வதேச சமூகம்’ பொருட்படுத்துவதில்லை. காஸா ஆக்கிரமிப்பு பற்றி இதுவரை வெளியாகியிருக்கும் பெரும்பாலான அமெரிக்க, ஐரோப்பிய, கனடிய அரச அறிக்கைகளில் மந்திரம் போல இரண்டு வாக்கியங்கள் இருக்கும்: ஹமாஸின் பயங்கரவாத ராக்கெட் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. எனவே நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறோம். அப்பாவிப் பொதுமக்களை ஹமாஸ் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதால் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு அவர்களே பொறுப்பு.

gaza3.jpgஉண்மையில் காஸாவும் மேற்குக்கரையும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்பது ஐ.நா.அவையும் மற்றும் முக்கியமான சர்வதேச நிறுவனங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஏற்றுக்கொண்டுள்ள யதார்த்தம். ஆக்கிரமிப்பு நிகழ்ந்தால் அதனை எதிர்ப்பதே வழி; அறம். இதனைத்தான் சர்வதேசச் சட்டங்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தற்பாதுகாப்பு உரிமையை எந்தச் சர்வதேசச் சட்டமோ ஆணையங்களோ வழங்கவில்லை. ஆக்கிரமிப்பாளரின் பாதுகாப்பைப் பற்றி இரங்கி அழும் சூழல் இஸ்ரேல் தொடர்பாக மட்டும்தான் இருக்கிறது. கனடியப் பிரதமர் உட்பட வேறும் சில தலைவர்கள், ‘‘இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நியாயமான, பொருத்தமான, மட்டுப்படுத்தப்பட்ட அளவு எதிர்த்தாக்குதலையே பயன்படுத்துகிறது’’ என வழிமொழிகிறார்கள். ‘மட்டுப்படுத்தப்பட்ட’ தாக்குதல்களிலேயே ஏராளமான பொதுமக்களைப் பத்து நாட்களில் கொல்லமுடியுமெனில் ஏனையவற்றைப் பற்றி அதிகம் எழுதத் தேவையில்லை.

ஒரு வாதத்திற்காகக் காஸா படையெடுப்பில் இஸ்ரேல் அரசுக்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் சர்வதேசச் சட்ட உரிமை இருக்கிறது என வைத்துக்கொண்டாலும் அந்த உரிமை மிகக் குறுகியகாலத்துள் பயன்படுத்தப்பட வேண்டும். கிழமைக்கணக்காக அல்லது மாதக்கணக்காக நீங்கள் அந்த உரிமையைப் பயன்படுத்த முடியாது. மேலும் எவ்வளவு விரைவில் ஐ.நா. தலையிட வேண்டுமோ அவ்வளவு விரைவில் அதற்கு இணங்கிவிடவேண்டும். தற்காப்புத் தாக்குதல்கள் நியாயமாகவும் தகுந்த அளவிலேயுமே இருக்க வேண்டும். இவையெல்லாம் விதிகள். எல்லா விதிகளையும் மீறுவதுதானே இஸ்ரேலின் வழமை!!

மைஸா சலீம் தர்ஸா என்னுடைய நண்பர். ரமல்லாவின் பீர்செயிட் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிபவர்; நான் பணியாற்றும் விண்ட்ஸர் பல்கலைக்கழகமும் ரமல்லாவின் பீர்செய்ட் பல்கலைக்கழகமும் இணைந்து பலஸ்தீன மக்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெருசலேமிலும் ரமல்லாவிலும் பலஸ்தீனத்தின் ஏனைய பகுதிகளுக்கும் நான் சென்றுவரத் துணைபுரிந்தவர் மைஸா. பீர்செயிட் பல்கலைக்கழகத்தில் ‘ஈழப்போராட்டமும் பலஸ்தீனமும்’ என்ற தலைப்பிலான விரிவுரையையும் கலந்துரையாடலையும் அதன் பிற்பாடான கவிதை நிகழ்வையும் ஒழுங்குபடுத்தியவர்களில் அவரும் முக்கியமானவர். என்னுடைய விரிவுரையின் ஒரு பகுதியாக கலம் மக்ரேயின் ஆவணப் படங்களான இலங்கையின் கொலைக்களங்கள் (Sri Lanka’s Killing Fields), போர் தவிர்ப்பு வலயம் (No Fire Zone) என்பனவற்றிலிருந்து தெரிந்தெடுத்த சில பகுதிகளைத் திரையிட்டுக் காட்யிருந்தேன். அந்தக் காட்சிகள் விரிவுரைக்கென வந்திருந்த பலஸ்தீன மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் பலஸ்தீன விடுதலை அமைப்பின் போராளிகளிடமும் ஊடகவியலாளரிடமும் ஏற்படுத்திய பேரதிர்ச்சி எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. விரிவுரையின் முடிவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் பலஸ்தீன அதிபர் மஃமூத் அப்பாஸும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவும் படத்தைப் போட்டுக் காட்டினேன். அந்தப் படம் ராஜபக்ச பலஸ்தீனத்துக்குச் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட படம். படத்தைப் பார்த்த உடனே எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என நான் நினைத்தது தவறாகப் போயிற்று. சிரிப்பே மேலோங்கிற்று. “அப்பாஸிடம் இதனைவிட வேறெதனை எதிர்பார்க்க முடியும்?” என்பது அவர்களுடைய எதிர்வினை!

இன்று காலை (20.07.2014) மைஸாவுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் துயர அலைகளை எழுப்பிக் கொண்டேயிருக்கின்றன.

“இவ்வளவு விரைவில் உங்கள் நாட்டு வன்னியில்

இடம்பெற்றது மாதிரியான பயங்கரத்தை நாங்கள்

சந்திப்போம் எனக் கனவிலும் நினைத்ததில்லை...”

gaza-2a.jpgமைஸாவும் அவருடைய கணவரும் குழந்தைகளும் ரமல்லாவில் இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு தடவைகள்தான் அவர்கள் காஸாவிலுள்ள தமது நெருங்கிய உறவினர்களுடன் தொலைபேசியில் பேச முடியும். வேறு எந்தத் தொடர்புகளையும் பேணுவதற்கான சாத்தியங்களை இஸ்ரேல் தடுத்து வைத்திருக்கிறது. காஸாவும் மேற்குக்கரையும் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளன. தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, உட்பட எல்லாமே இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. மைஸாவின் பாட்டனார் இதயநோயால் அவதிப்படுபவர். இப்போது காஸாவில் அவருக்கான எத்தகைய மருத்துவ உதவியும் இல்லை.

இதுவரையில் மூன்று மருத்துவமனைகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கி அழித்துள்ளனர். இவற்றுள் ஒன்று, அல் ரஃபா மருத்துவமனை. உளவளம், உடல் வளம் குன்றியவர்களைப் பேணிப் பராமரிக்கின்ற மருத்துவமனை அது. ஐ.நா. அவையின் கண் காணிப்பில் இருந்தாலும் அந்த மருத்துவமனையையும் இஸ்ரேலியப் படையினர் விட்டு வைக்கவில்லை. மருத்துவமனைகளை மட்டுமல்ல பாடசாலைகள், குழந்தைகள் காப்பகம், ஐ.நா. அவையின் பாதுகாப்பில் தஞ்சம் பெற்றிருந்த பலஸ்தீன மக்களின் முகாம்கள் என எல்லா இடங்களையுமே குறி தவறாமல் தாக்கி அழித்துள்ளனர் இஸ்ரேலியப் படையினர். “ஹமாஸின் கேந்திர நிலையங்களின் மீதே தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்துகிறோம்“ என இஸ்ரேலிய அரசும் வடஅமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் பலவும் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தாலும் இயலுமானவரை பலஸ்தீனிய மக்களைக் கொல்வதே இஸ்ரேலின் திட்டம் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் துலக்கமாகக் காட்டுகின்றன.

ஏராளமான போர்க் குற்றங்களை இஸ்ரேல் செய்து வருகின்றது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இப்போது வெளியாகி உள்ளன. காயம்பட்ட சிறுவர்களையும், குழந்தைகளையும் சுட்டுக் கொல்வது, மருத்துவமனைகள் மீது குண்டு வீசுவது, சிறைப்பட்டவர்களைச் சுட்டுக் கொல்வது, சிறுவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவது என எல்லாவிதமான போர்க்குற்றங்களுக்கும் ஆதாரங்கள் பெருகி வருகின்றன. கொத்தணிக்குண்டுகள் (Cluster Bombs), வெள்ளைப் பொசுபரசு எனும் நச்சு மருந்து பூசப்பட்ட குண்டுகள்,வெடிக்கும்போது சிறு சிறு அம்புகளைப்போல ஆயிரக்கணக்கான தொடரம்புகளை வீசியெறியும் குண்டுகளை (Flachette Bombs) வீசுவது எனச் சாத்தியமான எல்லா ஆயுதங்களையும் காஸாவின் பொதுமக்கள்மீது இஸ்ரேல் ஏவி

விட்டுள்ளது. எனினும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் தார்மீக ஆதரவும் ஆயுத வழங்கலும் அண்மையில் மேலும் அதிகரித்துள்ளது. சென்றவாரத்தில் மட்டும் இஸ்ரேலுக்கு வழமையாக வழங்கப்படும் இராணுவ உதவித்தொகையான 3.1 பில்லியன் டாலர்களுக்கு மேலதிகமாக 350 மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இது தற்செயலானதல்ல.

சில நாடுகள் இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இல்லை. தென்னாப்பிரிக்கா இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிவிட்டது. சிலே (Chile), இஸ்ரேலுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டுவிட்டது. கொலம்பிய அதிபர் மோராலேஸும் இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிவிட்டார். வெனிசூலா அதிபர் பலஸ்தீனிய மக்களுக்கு நடப்பது இனப்படுகொலை எனக் கூப்பாடு போடுகின்றார் (இவர்கள் எல்லோரும் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சவை ஆதரிப்பவர்கள். ராஜபக்சவிற்கு சமாதான விருது வழங்கியவர் மோராலேஸ் என்பது முரண்னகையுடன் கூடிய இடைப்பிறவரல்!!). இலங்கை, இந்தியா போன்ற பல நாடுகள் இஸ்ரேலுடன் உளவுத்துறை சார்ந்தும், ராணுவ உதவி சார்ந்தும் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் உறவுகளைப் பேணி வருபவை.இத்தகைய உறவுகள் பற்றி இந்த நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு எத்தகைய விவரங்களும் சொல்லப்படுவதில்லை.

காஸா மீதான இந்தப் படையெடுப்பு புதிதான ஒன்றல்ல. ஏற்கனவே தீவிரமான இரண்டு படையெடுப்புகளை இஸ்ரேலிய அரசு முன்னெடுத்துள்ளது. எனினும், வெற்றி பெறவில்லை. ஹமாஸின் எறிகணைத் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்துவதும் காஸாவில் அமைக்கப்பட்டிருக்கும் பல நிலத்தடிச் சுரங்கங்களை அழிப்பதும்தான் அண்மைப் படையெடுப்பின் நோக்கம் எனச் சொல்லப்பட்டாலும் வேறு முக்கியமான காரணங்களும் சொல்லாத சேதிகளாக உள்ளன. சமாதான முயற்சிகளைக் குழப்புவது, பலஸ்தீன அரசு உருவாகுவதற்கான எல்லாக் காரணிகளையும் முடக்கிவைப்பது என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கன. காஸாவை ஒட்டிய கடற்பரப்பில் காணப்படுகின்ற எண்ணெய் வளமும் வாயு வளமும் மிக முக்கியமான வளங்களாகும். உண்மையில் இஸ்ரேல் - பலஸ்தீனக் கடற்பரப்பில் கிடைக்கக்கூடிய எண்ணெய், கனிம வளங்களில் 60 சதவீதமானவை பலஸ்தீன மக்களுடைய பகுதிகளிலேயே உள்ளன. இவற்றுள் காஸா முக்கியமான இடம். இந்த வளங்களைச் சுரண்டுவதற்காக ஏற்கனவே பிரித்தானியம் பெருநிதி நிறுவனமான பிரித்தானியப் பெற்றோலியமும் (BP) பலஸ்தீனிய அதிகார அவையும் செய்துகொண்ட உடன்படிக்கையை இஸ்ரேல் உதறித் தள்ளிவிட்டது. பலஸ்தீனிய மக்களையும், ஹமாஸையும், அப்பாஸின் பலஸ்தீன அதிகார அவையையும் புறந்தள்ளிவிட்டு ஙிறி நிறுவனத்தோடு புதிய உடன்படிக்கையொன்றைச் செய்வதே இஸ்ரேலின் நோக்கம். இப்போது காஸாவின் கடற்பிரதேசம் அனைத்தும் இஸ்ரேலியக் கடற்படையின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டில் இருப்பதால் காஸா மீதான ஆக்கிரமிப்பின் இறுதியில் கனிம, எண்ணெய் வளங்கள் அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் முற்றுமுழுதாக எடுத்துவிடலாம் என்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கங்களில் முக்கியமானதாகும். இந்தத் திட்டத்தையும் இதற்கான வன்முறை மிகுந்த வழிமுறைகளையும் ஆக்கிரமிப்பையும் இனப்படுகொலையையும் மிகுந்த திட்டமிடலுடன் நீண்டகாலக் கண்ணோட்டத்துடன் இஸ்ரேல் நிகழ்த்தி வருகிறது.

gaza-7.jpgஹமாஸுக்கு எதிராக முன்வைக்கப்படுகிற முக்கியமான குற்றச்சாட்டுகள் மூன்று. முதலாவது, இஸ்ரேலையும் யூதர்களையும் அழிப்பது என்னும் நோக்கம் அதனுடைய யாப்பில் இடம்பெற்றுள்ளது. அதுவே அவர்களது அரசியல்/ராணுவத் திட்டம். இரண்டாவது, போர் நிறுத்தத்திற்கான எல்லா முயற்சிகளையும் அது நிராகரித்து விட்டது. மூன்றாவது, இஸ்ரேலியப் பொதுமக்களை நோக்கியே ஹமாஸ் ஏவுகணைகளை வீசுகிறது. 1988இல் ஹமாஸ் உருவாக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட கோட்பாட்டு அறிக்கையில், ‘‘பலஸ்தீனத்தின் ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பிலும் கடவுளின் பதாகையை ஏற்றுவோம்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கடந்த பல ஆண்டுகளில் ஹமாஸின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1967இல் இருந்த எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீனத்தை அமைப்பதற்கு அவர்கள் தயார் என்பதைப் பலமுறை தெரிவித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் எகிப்து அரசால் முன்னெடுக்கப்பட்ட போர் நிறுத்த முயற்சிகளில் ஹமாஸ் கலந்தாலோசிக்கப்படவில்லை. இஸ்ரேலின் நலன்களைப் பேணுவதே அந்த முயற்சிகளின் மையமாக இருந்தது. வெறுமனே சமாதானம் அல்ல. நீதியும் சமத்துவமும் கூடிய சமாதானமும் போர் நிறுத்தமுமே அவசியம் என்பதை பலஸ்தீனச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். முற்றுகை நீக்கப்படவேண்டும்; பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும் என்ற ஹமாஸின் கோரிக்கைகள் நியாயமானவை. பொதுமக்களைக் குறிவைத்து எறிகணைகளை வீசுவது பெருங்குற்றம்தான். வலுக்குறைந்த, கூர்மையற்ற, இலக்கற்ற எறிகணைகள்தான் பெரும்பாலானவை என்றாலும் அவற்றைக்கூடப் பொதுமக்களைத் தாக்கப் பயன்படுத்த முடியாது. திட்டமிட்டு, அல்லது தெரிந்து கொண்டே அப்பாவிப் பொதுமக்களைக் குறி வைப்பதை எத்தகைய சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இஸ்ரேலையும் யூதர்களையும் முற்றுமுழுதாக ஒழித்துவிட வேண்டும் என்று சொல்கிற பல இஸ்லாமிய அமைப்புக்கள் உள்ளன. இந்தக் கருத்தியலை ஆதரிக்கும் ஏராளமானோர் உள்ளனர். எனது முகநூல் இஸ்லாமிய நண்பர்கள் பலருக்கு யூதர்களை இனப்படுகொலை செய்வது அவசியமானது என்பதில் தீவிர உடன்பாடு இருக்கிறது. இத்தகைய வன்மமும் வெறுப்பும் இரு தரப்பிலும் மேலோங்குகிறபோது நிலைமை மிகவும் சிக்கலடையும் என்பது சொல்லாமல் தெரிவது.

காஸா ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பல முற்போக்கான யூத அமைப்புக்களும் ஆளுமைகளும் குரல்கொடுத்து வருவதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஜெருசலேமில் நூற்றுக்கணக்கான யூத மக்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஊர்வலம் செய்கிறார்கள். மனித உரிமை நிறுவனங்களுக்குச் சாட்சியம் வழங்குகிறார்கள். பெட்சலேம் என்னும் இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக இஸ்ரேல் செய்கிற அநியாயங்கள் பற்றி ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. இவை பலஸ்தீன மக்களின் போராட்டங்களுக்கு உணர்வொருமைப்பாடு சேர்க்கும் முக்கியமான செயற்பாடுகள் ஆகும்.

எனினும், பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனவாதமும், இனப்படுகொலையுமே ஒரே வழி; வேறு வழிகள் சாத்தியமில்லை என்ற குரல்கள் இஸ்ரேலின் எல்லா மட்டங்களிலிருந்தும் பெரிதாக ஒலிக்கின்றன. ஜெருசலேமில் இஸ்ரேலியப் பொதுமக்களால் பலஸ்தீனிய மக்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. ‘அராபியர்களைக் கொல்; கொளுத்து’ என்ற சுலோகங்கள் தாராளமாக எழுப்பப்படுகின்றன. இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ‘‘பலஸ்தீனப் பெண்களையும், குழந்தைகளையும், தாய்மார்களையும் கொல்ல வேண்டும்’’ என்று உரையாற்றுகிறார். ‘குழந்தைகளையுமா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘‘ஆம், அவர்கள் குட்டிப் பாம்புகள். அனைவரையுமே அழிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை’’ எனத் தெரிவிக்கிறார்.

‘‘ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை முறியடிப்பதற்கு இருக்கும் ஒரே வழி என்னவென்றால் கைது செய்யப்படும் ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரதும் தாய், சகோதரி அல்லது மனைவிமாரை நாம் ‘கற்பழிக்க’ வேண்டும். அதுதான் அவர்களுக்குப் புரியக்கூடிய மொழி’’ என இஸ்ரேலின் பார்-இலான் பல்கலைக்கழகப் பேராசிரியர் மோர்டிக்காய் கேடார் இஸ்ரேலிய வானொலிக்குத் தெரிவித்திருக்கிறார். 90 வீதத்துக்கு மேலான இஸ்ரேலிய மக்கள் காஸா மீதான குண்டு வீச்சுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என் ஒரு கருத்துக் கணிப்புக் கூறுகின்றது.

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர், காலம் சென்ற ஏரியல் ஷரோனின் புதல்வர் ஜிலாட் ஷரோன் (21-07-2014) ஜெருசலேம் போஸ்டில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்:

காஸாவில் வாழ்பவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் அல்ல; அவர்கள்தான் ஹமாஸைத் தேர்தல்கள் மூலம் ஆட்சியில் அமர்த்தியவர்கள். அவர்கள் அனைவருமே குற்றவாளிகள்...

காஸா முழுவதையுமே தரைமட்டமாக்குங்கள்; அமெரிக்கர்கள் ஹிரோஸிமாவுடன் மட்டும் நிறுத்தவில்லை; நாகசாகியையும் குண்டு வீசித் தகர்த்தார்கள். அதனை நாங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

இவையெல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் உணர்ந்தும் மனம் தளர்ந்து போயிருக்கிற எனது இன்னொரு யூத நண்பர் - அவர் ஜெருசலேமின் ஹீப்றூ பல்கலைக்கழகத்தில் தமிழும் வடமொழியும் கற்பிப்பவர் - ஏப்ரல் மாதம் கூறியதை என்னால் மறக்கவே முடியாது:

‘‘ஜனநாயக, யூத அரசாக இஸ்ரேல் ஒருபோதும் இருக்க முடியாது. அத்தகைய எண்ணக்கருவே அடிப்படையில் சாத்தியமற்றது. இப்போதுள்ள நிலைமையில் அவர்கள் பாஸிஸ்டுகளாகத்தான் அரசையும் இஸ்ரேலையும் தக்க வைத்துக்கொள்ள முடியும்...’’

http://www.kalachuvadu.com/issue-176/page20.asp

 

இஸ்ரேலும் சிங்களமும் ஒன்றுதான்.சிங்களத்திற்கு ராணுவ யுக்திகளை வழங்குவது பல நாடுகளாகவிருந்தாலும் அவர்கள் பின்பற்றுவது மொஸாட்டின் அறிவுரைதான்.எஸ் டி எfவின் உருவாக்கம்.அவர்கள் மூலமாக இராணுவக்குடும்பங்களை தாக்கியது.பின்னர் இலங்கை ராணுவத்தினர் பல்கலைக்கழகங்களில் படித்த சிங்கள இளைஞர் யுவதிகளை கொலை செய்து அவர்களின் கண்களைத்திருடி விட்டு (இன்று அதிகமான ஜப்பானியர் பார்ப்பதே இலங்கையரின் கண் தான்) டயர் போட்டு எரித்து அவர்களின் முகத்தை மட்டும் சிதைத்தது.தமிழர்கள் மீதான தாக்குதல் இவையாவும் மொஸாட்டின் வழியில் வந்தது தான்.ஆனபடியால் தான் இரு தாக்குதலும் ஒரே மாதிரியானவை.யூதர்களை மேற்குலகு ஒன்றுமே செய்யாது.தோமஸ்குக் தவிர்ந்த அனேகமான கடனட்டை நிறுவனங்கள் அவர்களுடையதுதான்.ஒரே நேரத்தில் வங்கிகளில் பணத்தை திருப்பி பெற்றார்களாயின் அமெரிக்கா,கனடா,ஐரோப்பா போன்றவை ஸ்திரமற்றுவிடும்.இவர்களுடன் பகைத்தால் செய்மதி மற்றும் உலக கணனி தொடர்பாடல் யாவும் ஆட்டம் கண்டு விடும்.ஹிட்லர் சும்மாவா இவர்களை அழித்தார்.ஆகவே யாருமிவர்களை ஏதும் சொல்லமாட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.