Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்பம் - ஐம்பது

Featured Replies

கொஞ்சம் பெரிய கவிதை தான். ஆனாலும் இதை எழுதியவரின் திறமையும், தமிழின் இனிமையையும் மெச்சித்தான் ஆக வேண்டும்..
 
இன்பம் - ஐம்பது

அன்பொடு இகத்தினில் வாழுதல் இன்பம்;
     அறிவொடு நிலத்தினில் ஆளுதல் இன்பம்;
பண்புடை மாந்தராய்த் திகழுதல் இன்பம்;
     பணிவுடை மனிதரைப் புகழுதல் இன்பம்;
தென்றலில் மழையினில் நனைதல் இன்பம்;
     சந்தனக் காற்றினில் தவழுதல் இன்பம்;
வெண்மதி வானில் உலவுதல் இன்பம்;
     நிம்மதி நெஞ்சினில் நிலவுதல் இன்பம்;


இரவினில் காதலில் கொஞ்சுதல் இன்பம்;
     உறவினில் களிப்பினில் கெஞ்சுதல் இன்பம்;
அருகினில் சிறகினில் துஞ்சுதல் இன்பம்;
     அருமையில் பெருமையில் மிஞ்சுதல் இன்பம்;
திரையினில் மறைவினில் அஞ்சுதல் இன்பம்;
     திறமையில் கடமையில் விஞ்சுதல் இன்பம்;
உரியதோர் மங்கையின் கொங்கையில் இன்பம்;
     உருகிடும் சங்கம கங்கையில் இன்பம்;

இசையுற வாழ்வினில் இலங்குதல் இன்பம்;
     இல்லறம் சிறப்புற விளங்குதல் இன்பம்;
பசையுறப் பாரினில் துலங்குதல் இன்பம்;
     பருவத்தில் திருமணம் புரிதலில் இன்பம்;
தசையுறு திடத்தினில் கலக்குதல் இன்பம்;
      தருமத்தின் உயர்வினை விளக்குதல் இன்பம்;
வசையற வாயுரை முழக்குதல் இன்பம்;
     வரவுக்குள் செலவினை அடக்குதல் இன்பம்;

அயர்வற மகிழ்வொடு களித்தல் இன்பம்;
     அருமறை உயர்வொடு செழித்தல் இன்பம்;
உயர்வுறக் கருத்தொடு நினைத்தல் இன்பம்;
     ஓய்வறப் பொறுப்பொடு நிலைத்தல் இன்பம்;
துயரற பயமறத் துலங்குதல் இன்பம்;
     சுயப்படு பொருளினை வழங்குதல் இன்பம்;
தெளிவுறு மதியினில் திளைத்தல் இன்பம்;
     திறம்படத் தமிழினில் உரைத்தல் இன்பம்;

தன்மையில் பணிந்து திகழுதல் இன்பம்;
     தவறினைத் துணிந்து விலகுதல் இன்பம்;
தொன்மையின் உண்மை துலக்குதல் இன்பம்;
     தூய்மையில் துறவறம் துலங்குதல் இன்பம்;
பன்மையில் விழித்துப் பழகுதல் இன்பம்;
     பசித்தவர் களிப்புறப் பொழியுதல் இன்பம்;
உன்னலில் உயர்வினைச் செய்தலும் இன்பம்;
     அன்னையின் மடியினில் சாய்வதும் இன்பம்;

எழுதல் இன்பம்; இரவினில் மறுகி
     விழுதல் இன்பம்; இதயம் குழைந்து
அழுதல் இன்பம்; இறையை உருகித்
     தொழுதல் இன்பம்; இளமையில் கற்றுத்
தெளிதல் இன்பம்; உயிருக்கு உயிராய்
     பழகுதல் இன்பம்; உயிரொடு உடலைத்
தழுவுதல் இன்பம்; உணர்வில் கலந்து
     ஒழுகுதல் இன்பம்; ஆளுதல் இன்பம்;

எழுதுதல் இன்பம்; அறிவிலி வாதில்
     நழுவுதல் இன்பம்; அறவழிப் பாதையில்
ஒழுகுதல் இன்பம்; அறிவுக் கடலில்
     ஆழுதல் இன்பம்; அகத்தினில் ஜோதி
மூழுதல் இன்பம்; அறிவொளிச் சுடரில்
     மூழ்குதல் இன்பம்; ஆன்மத் தூய்மை
சூழுதல் இன்பம்; அன்புடை வாழ்கை
     நீளுதல் இன்பம்; வாழுதல் இன்பம்;

உழைத்தல் இன்பம்; உழவுத் தொழிலில்
     பிழைத்தல் இன்பம்; மழையில் மரங்கள்
கிளைத்தல் இன்பம்; பயிர்கள் மண்ணில்
     முளைத்தல் இன்பம்; மணிகள் முற்றின்
விளைத்தல் இன்பம்; மனையில் சேர்ந்து
      திளைத்தல் இன்பம்; மகிழ்வுற விருந்தினை
அழைத்தல் இன்பம்; மகிழ்ச்சி பொங்கக்
     களித்தல் இன்பம்; உறவுகள் இன்பம்;

படித்தல் இன்பம்; படித்தபின் வேலை
     பிடித்தல் இன்பம்; துடிப்பொடு கடமை
முடித்தல் இன்பம்; பிடித்தவர் கண்ணை
     அடித்தல் இன்பம்; சபையினர் போற்ற
நடித்தல் இன்பம்; காதலில் திருமணம்
      முடித்தல் இன்பம்; இசையெனக் கவிதை
வடித்தல் இன்பம்; கருணையில் உடைமை
      கொடுத்தல் இன்பம்; படைத்தல் இன்பம்;

விருத்தம் இன்பம்; நாட்டிய மங்கையர்
     நிருத்தம் இன்பம்; நல்லிசைப் பாட்டில்
திருத்தம் இன்பம்; நாயகன் நாயகி
     பொருத்தம் இன்பம்; நலமாய்த் திகழும்
கருத்தும் இன்பம்; ஆசையை அறவே
     அறுத்தல் இன்பம்; அறவழிப் பெருமை
சிறத்தல் இன்பம்; அழிவின் வழியை
     நிறுத்தல் இன்பம்; மறுத்தல் இன்பம்;

துயிலுதல் இன்பம்; தொடர்ந்து மகிழ்வைப்
      பயிலுதல் இன்பம்; துவளாது வாழ்வில்
முயலுதல் இன்பம்; தொடுகை உணர்வில்
      மயங்குதல் இன்பம்; துணையைப் பொருந்தி
முயங்குதல் இன்பம்; தொடரும் கலையில்
      தயங்குதல் இன்பம்; துவங்கிய பின்னே
இயங்குதல் இன்பம்; மெய்யெனும் பொய்யில்
     மகிழ்வதும் இன்பம்; நெகிழ்வதும் இன்பம்;

அணைத்தல் இன்பம்; அதரச் சுவையில்
      பிணைத்தல் இன்பம்; அன்பொடு நெஞ்சினை
இணைத்தல் இன்பம்; அண்மையில் அழகினை
      மலைத்தல் இன்பம்; நன்மைகள் தருவன
நினைத்தல் இன்பம்; நயம்படு பொருளினைச்
      சுவைத்தல் இன்பம்; உளத்தொடு சுகத்தினில்
திளைத்தல் இன்பம்; உதவியில் மனிதரை
      முகிழ்த்தல் இன்பம்; பகிர்தல் இன்பம்;

உணருதல் இன்பம்; ஊடலில் கசிந்து
     புணருதல் இன்பம்; காதலில் கூடி
மலருதல் இன்பம்; காவியம் பாடித்
     திணறுதல் இன்பம்; இரவினில் ஆடிக்
கிளருதல் இன்பம்; கனிமொழி பேசிக்
      குளறுதல் இன்பம்; கரைகளைத் தேடி
வளருதல் இன்பம்; கனவுகள் வளர்த்துப்
      புலருதல் இன்பம்; உலருதல் இன்பம்;

தேடுதல் இன்பம்; தேனிசைத் தமிழில்
     பாடுதல் இன்பம்; சுகத்தொடு கண்களை
மூடுதல் இன்பம்; தாள இலயத்தொடு
     ஆடுதல் இன்பம்; அழகின் சிரிப்பை
நாடுதல் இன்பம்; அகமும் புறமும்
     கூடுதல் இன்பம்; அன்பிற்கு ஏங்கி
வாடுதல் இன்பம்; அன்னையைத் தேடி
      ஓடுதல் இன்பம்; சாடுதல் இன்பம்;


தானம் இன்பம்; வானம் இன்பம்;
      தன்னிலை மறக்கும் கானம் இன்பம்;
மோகம் இன்பம்; போகம் இன்பம்;
     மோதலில் பிறக்கும் காதல் இன்பம்;
நாணம் இன்பம்; பாசம் இன்பம்;
     நட்பினில் வருகிற நேசம் இன்பம்;
பானம் இன்பம்; பதவியும் இன்பம்;
      பணிவில் தெரிகிற துணிவும் இன்பம்;


தகிப்பது இன்பம்; சுகிப்பது இன்பம்;
     கொடுப்பது இன்பம்; எடுப்பது இன்பம்;
நகைப்பது இன்பம்; புகைப்பது இன்பம்;
     இசைப்பது இன்பம்; இசைவது இன்பம்;
பசிப்பது இன்பம்; புசிப்பது இன்பம்;
      ரசிப்பது இன்பம்; ருசிப்பது இன்பம்;
சகிப்பது இன்பம்; வசிப்பது இன்பம்;
      நுகர்வது இன்பம்; பகர்வது இன்பம்;


உதயம் இன்பம்; இரவும் இன்பம்;
     மதியம் இன்பம்; மாலை இன்பம்;
கதிரும் இன்பம்; நிழலும் இன்பம்;
     அனலும் இன்பம்; புனலும் இன்பம்
உறவும் இன்பம்; பிரிவும் இன்பம்;
     வரவும் இன்பம்; செலவும் இன்பம்;
பரிவும் இன்பம்; உரிமை இன்பம்;
     அறிவும் இன்பம்; தெளிவும் இன்பம்;


கவனம் இன்பம்; புவனம் இன்பம்;
     காட்சி இன்பம்; தேர்ச்சி இன்பம்;
அகமும் இன்பம்; புறமும் இன்பம்;
     ஆட்சி இன்பம்; மாட்சி இன்பம்;
மவுனம் இன்பம்; தவமும் இன்பம்;
     மீட்சி இன்பம்; நீட்சி இன்பம்;
வரமும் இன்பம்; திறமும் இன்பம்;
     சாட்சி இன்பம்; தீட்சை இன்பம்;

பார்வை இன்பம்; தேர்வை இன்பம்;
     தண்மை இன்பம்; மென்மை இன்பம்;
வாய்மை இன்பம்; நேர்மை இன்பம்;
     கண்மை இன்பம்; நன்மை இன்பம்;
தாய்மை இன்பம்; சேய்மை இன்பம்;
     அண்மை இன்பம்; அன்னை அன்பாய்
காய்தல் இன்பம்; உவத்தல் இன்பம்;
     தந்தை காட்டும் சிரத்தை இன்பம்;

பிள்ளை இன்பம்; கிள்ளை மழலையை
     உள்ளல் இன்பம்; அமுத மழையினை
அள்ளல் இன்பம்; கன்னம் கொஞ்சிக்
     கிள்ளல் இன்பம்; கைகளில் வாரிக்
கொள்ளல் இன்பம்; கவலையை ஒருங்கே
      தள்ளல் இன்பம்; துடிப்போடு ஆடித்
துள்ளல் இன்பம்; பாடலைக் கூடி
      விள்ளல் இன்பம்; பள்ளி இன்பம்;

பிறத்தல் இன்பம்; நல்லவை சொல்லி
      வளர்த்தல் இன்பம்; நல்வினை பெருக்கி
சிறத்தல் இன்பம்; நல்லவர் தம்முடன்
     உரத்தல் இன்பம்; அல்லவை தன்னைத்
துறத்தல் இன்பம்; தீமையை நெஞ்சினில்
      அறுத்தல் இன்பம்; தீயவர் தொடர்பை
மறுத்தல் இன்பம்; நிலமகள் போலும்
      பொறுத்தல் இன்பம்; திருத்தல் இன்பம்;

சமைத்தல் இன்பம்; சபையினர் கூடிச்
     சுவைத்தல் இன்பம்; சத்திய தத்துவம்
படைத்தல் இன்பம்; பைத்திய வழக்கம்
     உடைத்தல் இன்பம்; நம்பிக்கை தருவன
விதைத்தல் இன்பம்; வையகம் செழிக்க
     விளைத்தல் இன்பம்; கையறு நிலையினைச்
சிதைத்தல் இன்பம்; கனவுகள் மெய்ப்பட
     விழித்தல் இன்பம்; அமைத்தல் இன்பம்;

ஆக்கம் இன்பம்; ஆயும் மனதின்
     ஏக்கம் இன்பம்; அரங்கம் தருகிற
ஊக்கம் இன்பம்; அதனால் வருகிற
     தாக்கம் இன்பம்; அறிவால் துணிந்த
நோக்கம் இன்பம்; ஆழ்ந்து நுணுகும்
     நோக்கும் இன்பம்; விரிந்து காணும்
போக்கும் இன்பம்; வேலும் ஆலும்
     பாக்கும் இன்பம்; தேக்கும் இன்பம்;

யாகம் இன்பம்; யோகம் இன்பம்;
     தாரம் இன்பம்; பாரம் இன்பம்;
ஆய்வு இன்பம்; ஓய்வு இன்பம்;
     அன்பு இன்பம்; பண்பு இன்பம்;
தியானம் இன்பம்; தியாகம் இன்பம்;
      திரைக்கடல் இன்பம்; திரவியம் இன்பம்;
நாயாய் உழன்று நடப்பதும் இன்பம்;
     கடற்கரை மணலில் கிடப்பதும் இன்பம்;

கோடை இன்பம்; குளிர் இன்பம்;
      குருவிக் கூட்டில் மழை இன்பம்;
வாடை இன்பம்; அலை இன்பம்;
     அருவிப் பாட்டில் இசை இன்பம்;
ஆடை இன்பம்; அவை இன்பம்;
      அழகிய தமிழில் சுவை இன்பம்;
மேடை இன்பம்; கலை இன்பம்;
      தினமொரு குறளின் உரை இன்பம்;

தாயகம் காக்கும் படை இன்பம்;
      தண்ணீர் தேக்கும் மடை இன்பம்;
தியாகம் வேள்விக்குக் கொடை இன்பம்;
      தெரியும் கேள்விக்கு விடை இன்பம்;
வாயில் புன்னகைக் கடை இன்பம்;
      வைகறைக் காற்றில் நடை இன்பம்;
தூய்மை துலங்கும் உடை இன்பம்;
     வெயிலோ மழையோ குடை இன்பம்;

அரும்புகள் மலரும் வனம் இன்பம்;
     அறுசுவை பகரும் உணவு இன்பம்;
குறும்புகள் காட்டும் மகவு இன்பம்;
     குறுநகை தீட்டும் மொழி இன்பம்;
உறவினர் கூடும் நாள் இன்பம்;
     ஊரார் சேரும் தேர் இன்பம்;
விருந்தினர் நிறையும் இல் இன்பம்;
     மருந்தையும் பகிரும் சொல் இன்பம்;

காற்றில் ஒலிக்கும் இசை இன்பம்;
     கண்கள் உரைக்கும் மொழி இன்பம்;
ஏற்றம் இரைக்கும் ஒலி இன்பம்;
     இரவில் கலங்கரை ஒளி இன்பம்;
ஆற்றும் உரையில் இதம் இன்பம்;
     ஆற்று மணலில் நடை இன்பம்;
தேற்றும் மனிதரின் உளம் இன்பம்;
     தேக பலத்தில் நலம் இன்பம்;

பறவைகள் வாழும் சோலை இன்பம்;
     நறுமணம் சூழும் மாலை இன்பம்;
நிறைமகள் இடுகிற கோலம் இன்பம்;
     வயல்வெளி மகளிரின் குலவை இன்பம்;
அறுபது அகவை நிறைதல் இன்பம்;
     அதனினும் எண்பதும் நூறும் இன்பம்;
முறையொடு ஆற்றும் வினையும் இன்பம்;
      முதுமொழிக் கூற்றில் நிறையும் இன்பம்;

அச்சம் அற்ற ஆண்மை இன்பம்;
     அழுகை அற்ற பெண்மை இன்பம்;
குற்றம் அற்ற கற்பு இன்பம்;
     குறைகள் அற்ற வெற்றி இன்பம்;
சஞ்சலம் அற்ற கல்வி இன்பம்;
     சுயநலம் அற்ற தொண்டு இன்பம்;
வஞ்சகம் அற்ற நெஞ்சம் இன்பம்;
     வருத்தம் அற்ற அண்மை இன்பம்;


அரசியல் அற்ற பணிமனை இன்பம்;
     ரகசியம் அற்ற துணையும் இன்பம்;
துரோகம் அற்ற தோழமை இன்பம்;
     ரோகம் அற்ற தேகம் இன்பம்;
விரோதம் அற்ற சுற்றம் இன்பம்;
      விரசம் அற்ற சொற்கள் இன்பம்;
உரசல் அற்ற நட்பும் இன்பம்;
     விரிசல் அற்ற மனையும் இன்பம்;

தழுவல் அற்ற படைப்பும் இன்பம்;
     தளைகள் அற்ற நடையும் இன்பம்;
நழுவல் அற்ற நண்பர் இன்பம்;
     களங்கம் அற்ற நல்லோர் இன்பம்;
வழுவல் அற்ற ஒழுக்கம் இன்பம்;
     பிழைகள் அற்ற பழக்கம் இன்பம்;
அழுகல் அற்ற கனிகள் இன்பம்;
     பழுதுகள் அற்ற விருதுகள் இன்பம்;

படுத்தல் அற்ற பாடம் இன்பம்;
     பகைத்தல் அற்ற வீடும் இன்பம்;
தடுத்தல் அற்ற காடும் இன்பம்;
     தடைகள் அற்ற நாடும் இன்பம்;
விடுத்தல் அற்ற பிடிப்பும் இன்பம்;
     கடுத்தல் அற்ற மொழியும் இன்பம்;
தொடுத்தல் அற்ற துணையும் இன்பம்;
     முடித்தல் அற்ற தொடரும் இன்பம்;

மறைத்தல் அற்ற இனிமை இன்பம்;
      சிதைத்தல் அற்ற தொன்மை இன்பம்;
குறைத்தல் அற்ற வாயில் இன்பம்;
      குழைத்தல் அற்ற பணிவும் இன்பம்;
வறுமைகள் அற்ற இளமை இன்பம்;
     களைத்தல் அற்ற பணியும் இன்பம்;
சிறுமைகள் அற்ற வளமை இன்பம்;
     வளைத்தல் அற்ற வாய்மை இன்பம்;

விலங்கு அற்ற விடுதலை இன்பம்;
     விளம்பரம் அற்ற உபயம் இன்பம்;
சிலந்தி அற்ற மூலை இன்பம்;
     சிக்கல் அற்ற வேலை இன்பம்;
சலனம் அற்ற வேளை இன்பம்;
     குழப்பம் அற்ற மூளை இன்பம்;
கலக்கம் அற்ற இதயம் இன்பம்;
      கவலை அற்ற உதயம் இன்பம்;

 

சோதனை அற்ற சாலை இன்பம்;
     சோகம் அற்ற பயணம் இன்பம்;
வேதனை அற்ற மனமும் இன்பம்;
     வேகம் அற்ற மாலை இன்பம்;
போதனை அற்ற காதல் இன்பம்;
     வரம்பும் அற்ற உரிமை இன்பம்;
ரோதனை அற்ற சூழல் இன்பம்;
     தொல்லை அற்ற செல்வம் இன்பம்;


மெல்வதை மட்டும் கடிப்பது இன்பம்;
     மெத்தையில் நித்திரை கொள்வது இன்பம்;
வெல்வதைச் சொல்லிச் செய்வது இன்பம்;
     வித்தையில் யாவையும் கற்பது இன்பம்;
சொல்லில் நிலையாய் நிற்பது இன்பம்;
     சுத்தத்தைப் பேணிக் காப்பது இன்பம்;
வல்லவை செய்து முடிப்பது இன்பம்;
     வளம்பெற ஆவணம் வடிப்பது இன்பம்;

உயிரினை மேம்படப் போற்றுதல் இன்பம்;
     உண்மையை மெய்ம்படச் சாற்றுதல் இன்பம்;
பயிரினைச் செழிப்புறத் தேற்றுதல் இன்பம்;
      பார்வையை விழிப்புற மாற்றுதல் இன்பம்;
இயற்கையைக் களிப்புறச் சேர்குதல் இன்பம்;
      இன்மையை முழுவறத் தீர்க்குதல் இன்பம்;
செயற்கையை நலம்பெறத் தீட்டுதல் இன்பம்;
      செய்வினை வளம்பெறக் கூட்டுதல் இன்பம்;

கலையினை அழகொடு புதுக்குதல் இன்பம்;
     கந்தலை இழிவினை ஒதுக்குதல் இன்பம்;
சிலையினை உயிரெனச் செதுக்குதல் இன்பம்;
     சிந்தனைச் சிறகினை விரிக்குதல் இன்பம்;
கவிதையின் நயத்தினைக் கதைத்தல் இன்பம்;
     காவியம் இலக்கியம் படைத்தல் இன்பம்;
மழைமுகில் வருகையில் மயிலுக்கும் இன்பம்;
     ஓவியம் வரைகையில் மனதுக்கும் இன்பம்;

நினைவினைக் கிளறும் புகைப்படம் இன்பம்;
     நெடுநாள் நினைக்கும் திரைப்படம் இன்பம்;
நினைத்தவை வாழ்கையில் நடக்கையில் இன்பம்;
     நெஞ்சினில் நினைவுகள் படர்கையில் இன்பம்;
தொலைந்தவை கிட்டின் தொடர்ந்திடும் இன்பம்;
     கலைந்தவை கூடின் நிறைந்திடும் இன்பம்;
விளைந்தவை நன்றெனின் பெருகிடும் இன்பம்;
     இனியவை காண்கையில் மலர்ந்திடும் இன்பம்;

தேர்வை வென்ற தகவல் இன்பம்;
     திடத்தைத் தருகிற அஞ்சல் இன்பம்;
யாரையும் வெல்லும் கனியுரை இன்பம்;
     வாய்மொழி சொல்லும் தேன்மொழி இன்பம்;
தூர தேசத்துத் தொடர்பும் இன்பம்;
     தொடரால் வருகிற அழைப்பும் இன்பம்;
வரவைப் பெருக்கும் தொழிலும் இன்பம்;
     வாய்ப்பைக் குவிக்கும் வர்த்தகம் இன்பம்;

கடன்களை அடைக்கும் உளம் இன்பம்;
     காய்மையைக் கலைக்கும் மனம் இன்பம்;
உடமையில் மாண்பே உயர் இன்பம்;
     உலகினில் நீரே நிறை இன்பம்;
கடமையயில் நடுநிலைச் செயல் இன்பம்;
     கலகத்தைத் தீர்க்கும் தரகு இன்பம்;
படையினைத் தேற்றும் தலை இன்பம்;
     பணிவினைப் பேணும் நிலை இன்பம்;

அழகினைக் காட்டிலும் அறிவு இன்பம்;
      அலையினைக் காட்டிலும் கடல் இன்பம்;
உழைப்பினைக் காட்டிலும் முனைப்பு இன்பம்;
      உலகினைக் காட்டிலும் உயிர் இன்பம்;
மழையினைக் காட்டிலும் பயிர் இன்பம்;
     மலரினைக் காட்டிலும் மணம் இன்பம்;
நிழலினைக் காட்டிலும் நீர் இன்பம்;
     நிலவினைக் காட்டிலும் வான் இன்பம்;

மலையினைக் காட்டிலும் சிலை இன்பம்;
     மணலினைக் காட்டிலும் வீடு இன்பம்;
விலையினைக் காட்டிலும் பயன் இன்பம்;
     நினைவினைக் காட்டிலும் நனவு இன்பம்;
செலவினைக் காட்டிலும் வரவு இன்பம்;
     கனவினைக் காட்டிலும் கதை இன்பம்;
பகலினைக் காட்டிலும் இரவு இன்பம்;
     அனலினைக் காட்டிலும் குளிர் இன்பம்;

பிரிவினைக் காட்டிலும் உறவு இன்பம்;
     பெறுவதைக் காட்டிலும் தரல் இன்பம்;
ஊரினைக் காட்டிலும் பேர் இன்பம்;
     உறவினைக் காட்டிலும் உணர்வு இன்பம்;
நீரினைக் காட்டிலும் மோர் இன்பம்;
     நிறத்தினைக் காட்டிலும் அறிவு இன்பம்;
பாரினைக் காட்டிலும் பரிவு இன்பம்;
     பசுவினைக் காட்டிலும் பால் இன்பம்;

கருக்கலில் மழையின் வரவு இன்பம்;
     மழையில் மணலின் மணம் இன்பம்;
அறுவடை நாளின் உணவு இன்பம்;
     அனுபவம் பேசும் மொழி இன்பம்;
வறுமையை அழிக்கும் வழி இன்பம்;
      திறமையை வளர்க்கும் கலை இன்பம்;
பொறுமையைக் காட்டும் குணம் இன்பம்;
     புதுமையை ஏற்கும் மனம் இன்பம்;

வித்தில் விளையும் விந்தையே இன்பம்;
     யுத்தம் களையும் சிந்தையே இன்பம்;
பக்தியில் தேடும் முக்தியே இன்பம்;
     முக்தியை நாடும் பக்தியே இன்பம்;
சித்தியில் தெளியும் புத்தியே இன்பம்;
     புத்தியில் அறியும் உணர்வே இன்பம்;
சக்தியில் மலரும் சாதனை இன்பம்;
     சத்தியம் ஒளிரும் சோதனை இன்பம்;

காலம் முழுதும் கடமையில் ஒன்றாய்
     ஆலயம் தொழுதல் சாலவும் இன்பம்;
நாளும் பொழுதும் நல்லதை எண்ணி
      வாழும் நாளில் வளருதல் இன்பம்;
ஆழும் மனதில் அடக்கம் பேணி
      அறிவில் ஞானம் பெருகுதல் இன்பம்;
புலனை ஒன்றி இறையை உணர்ந்தே
      மீளாத் துயிலில் மாளுதல் இன்பம்;

இயற்கையைக் காத்தலே இன்பம்; - நெஞ்சில்
      இனிமையைச் சேர்த்தலே இன்பம்; - உளத்தில்
உயிர்களை மதித்தலே இன்பம்; - உலகில்
     பிணிகளை அழித்தலே இன்பம்; - நிலத்தில்
பயிர்களை வளர்த்தலே இன்பம்; - வளத்தில்
     மக்களைப் பெறுதலே இன்பம்; - நலத்தில்
வயிற்றுக்குப் புசித்தலே இன்பம்; - களிப்பில்
      யாக்கை சுகித்திடத் துய்த்தலே இன்பம்;

பயத்தினை வெல்வதே இன்பம்; - மனத்தில்
      மரணத்தை வெல்வதே இன்பம்; - கல்வியில்
முயன்றதை அறிவதே இன்பம்; - கடமையில்
      தாயகம் காப்பதே இன்பம்; - களத்தில்
உயர்வினை அடைவதே இன்பம்; - நடப்பில்
      இன்னலைச் சகித்தலே இன்பம்; - நிறைவில்
உய்த்திடும் ஞானமே இன்பம்; - இறுதியில்
     இரணமே இல்லாத மரணமே இன்பம்;
     \

உறுதியாய்
     மரணம் ஒன்றே மாறாப் பேரின்பம்;
 
- எழுதியவர் பெயர் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் ஐம்பதா ஐநூறா...! அவ்வளவும் அருமை...!!

 

எழுதியவர்  இன்பத்தை எழுதி முடித்து விட்டார் , இப்ப துன்பத்தை எழுதிக் கொண்டிருக்கின்றார் , இப்போதைக்கு முடிக்க மாட்டார்...!

 

நன்றி நன்பரே...!!!  :)

  • தொடங்கியவர்

வரவுக்கும் நட்புறவு பாராட்டும் மனதுக்கும் நன்றி சுவி :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்பத்தில்.... இத்தனை வகைகளா?
நாம்... தான் அதனை உணரத் தெரியாமல் இருக்கிறோம் போலுள்ளது. :)

  • தொடங்கியவர்

இன்பத்தில்.... இத்தனை வகைகளா?

நாம்... தான் அதனை உணரத் தெரியாமல் இருக்கிறோம் போலுள்ளது. :)

 

இவ்வளவு இன்பம் இருக்கிறதோ? இல்லையோ தெரியாது ?? ஆனால் இத்தமிழை வாசிக்கையில் எல்லாம் இன்பமயமாக இருக்கிறது ...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.