Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

--பாலைவனமாக்கப்பட்ட சம்பூரின் அவலங்கள்-

Featured Replies

கொழும்பில் செப்ரெம்பர் 4 ஆம் நாள் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆவது ஆண்டு மாநாட்டின் போது திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த சம்பூரை அரச படைகள் மீளக் கைப்பற்றியதை அறிவித்த போது இடிமுழக்கமான கைதட்டல்கள் எழும்பின. அப்போது ராஜபக்ச கூறினார்: "நமது ஆயுதப்படைகள் சம்பூரை கைப்பற்றியது அங்கு வாழும் மக்களின் நலனுக்காக- நன்மைக்காக" என்றார்.

இருந்தபோதும் பெரும்பான்மையான ஊடகங்கள் சம்பூர் வெற்றியானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான "இராணுவ" வெற்றியாக முன்னிலைப்படுத்தப்பட்டது. "இராணுவ வெற்றியுடன் சம்பூர் மக்களின் நலனை மையமாக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக" டெய்லி நியூசில் பிரபல ஊடகவியலாளர் லூசியன் ராஜகருணாநாயக்க எழுதினார்.

"சம்பூர் மக்களுக்காக" என்று மகிந்த ராஜபக்ச கூறியது உண்மையோ கற்பனையோ இருக்கட்டும். விடுதலைப் புலிகள் அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அதற்கு முன்னரும் "பெருந்தன்மை" மிக்க மகிந்தவால் கூறப்பட்ட கருத்திற்கு மாறுபாடானதாகத்தான் உண்மையான கள நிலைமை இருக்கிறது.

"சம்பூரை" கைப்பற்றியமை, மக்களின் நலனுக்கானது ஆகியவை தொடர்பில் பாரிய விவாதங்கள் இருந்தாலும் அதற்கு மேல் அரசியல்-இராணுவ நலனை முதன்மையாகக் கொண்டது அது என்பது வெளிப்படையானது. இருந்தபோதும் உண்மையான நிலை என்பது மகிந்த கூறியதற்கு முரணானதாக இருக்கிறது.

சம்பூரிலோ அதனைச் சுற்றிய பகுதிகளோ சிறிலங்கா இராணுவத்தினர் உள்நுழைந்து நடந்து சென்றபோது மக்களே அங்கு இல்லை. சேதமடையாத ஆட்டிலறிகள் மற்றும் இராணுவத் தளபாடங்கள் ஆகியவற்றுடன் புலிகள் அங்க்ருந்து வெளியேறிவிட்டனர். அதற்கு முன்னதாகவே வான்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களினால் பொதுமக்கள் வெளியேறிவிட்டனர்.

சம்பூருக்கு சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கே எந்த ஒரு தமிழரையும் காணவில்லை. மனிதர்கள் யாருமற்ற நிலமாக அது இருந்துள்ளது. மக்கள் அங்கே இல்லாதது "ஒரு இரகசிய சதி" என்று ஒரே ஒரு ஊடகவியலாளர் பதிவு செய்திருந்தார்.

சம்பூர் மக்கள் எங்கே போனார்கள்? இதில் ஒன்றும் பெரிய புதிர் இல்லை. அவர்கள் அனைவரும் திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடபகுதிக்கும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். சம்பூர் மட்டுமே "பாலைவன கிராமமாக" இல்லை. 12 கிராமங்களை உள்ளடக்கிய சம்பூர் பிரதேசமும் கூட அப்படித்தான் உள்ளது.

மூதூர் கிழக்கு பிரதேசத்தில் உள்ளது சம்பூர். மூதூர் கிழக்கு பிரதேசம் மற்றும் அதனை அண்மித்த ஈச்சிலம்பற்று பிரதேசம் ஆகியவற்றின் பெரும்பகுதியாக மக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர். மூதூர் கிழக்கின் 24 கிராமங்கள் மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் 19 கிராம மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஆங்காங்கே தாற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

இருந்தபோதும் சிலர் தங்களது பண்ணை வீடுகளிலும் ஆங்காங்கே மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் பிரசன்னமில்லாத பகுதிகளில் வசிக்கின்றனர். தங்களது மூதாதையர் வாழ்ந்த வீடுகளில் தொடர்ந்து வாழ வேண்டும் என்று சிலர் அடம்பிடித்து இருக்கின்றனர். மற்றவர்கள் தங்களது வாழ்வாதாரமாக உள்ள சொத்துக்களைக் காப்பாறிக்கொள்ள அங்கே இருக்கின்றனர். சிலர் முதியவர்களாகவும் நோயாளர்களாகவும் உள்ளனர். அவர்களால் பாதுகாப்புக்காக நீண்ட பயணம் மேற்கொள்ள இயலாது.

அந்தப் பகுதிகளில் அனைத்து அரச கட்டமைப்புக்களும் நொறுங்கிக் கிடக்கின்றன. அவற்றில் இன்னமும் எஞ்சியிருப்பது எத்தனை என்று எவரும் அறிந்திருக்கவில்லை. குடிசார் நிர்வாகம் என்ற போர்வையில் திருகோணமலையில் முகமூடி அணிந்திருக்கக்கூடிய இராணுவ நிர்வாகமானது எந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தையோ அல்லது நிவாரண அமைப்புகளையோ பாதுகாப்பைக் காரணம் காட்டி அங்கே அனுமதிக்கவில்லை. அரச அதிகாரிகளும் கூட அங்கே போகவில்லை. உலர் உணவுப் பொருட்கள் இல்லை- அவசரமான அத்தியாவசியப் பொருட்களோ அல்லது மருத்துவ விநியோகமோ அனுமதிக்கப்படவில்லை. உட்கட்டமைப்பு அழிந்துவிட்ட போது அங்கே தகுதியான மருத்துவர்களும் இல்லை. நோய்வாய்ப்படும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையின் தென்பகுதியான வெருகல்- வாகரை மற்றும் மட்டக்களப்பின் வடக்குப் பகுதிக்கு பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 8,543 குடும்பங்களைச் சேர்ந்த தோராயமாக 48,600 மக்கள் திருகோணமலை கோரல்பற்று வடக்குப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ளனர். வெருகல் பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோர் தொகை தெரியவில்லை.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாகியுள்ளது. இடம்பெயர்ந்தோரில் பெரும்பாலானோர் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் வசிக்கின்றனர். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஒப்பிடுகையில் விடுதலைப் புலிகள் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை தடுக்காமையினால் இடம்பெயந்துள்ளனர். இவர்களில் சிலர் மீளவும் மட்டக்களப்பு நகருக்குள் மட்டுமல்லாது பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த மக்கள் பெருந்துன்பத்தை அனுபவித்துள்ளனர்.

சம்பூரைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தினருடன் சுமார் 100 கிலோ மீற்றர் நடந்தே மட்டக்களப்புக்கு வந்தடைந்துள்ளார். இது ஒரு நீண்டபயணம் இல்லை. ஆனால் பல இடங்களிலிருந்து தொடர்ந்து இடம்பெயர்ந்து வந்துள்ளனர். இந்த பயணம் ஏப்ரலில் தொடங்கி ஓகஸ்ட்டில் முடிவடைந்துள்ளது.

கொழும்பு இராணுவத் தலைமையகம் மீது ஏப்ரல் 25 ஆம் நாள் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே சம்பூர் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி தலைமையகம் தாக்கப்படவில்லை. ஆனால் திருகோணமலையில் உள்ள மூலோபாயம் மிக்க சம்பூர்தான் தாக்கப்பட்டது.

வான், தரை மற்றும் கடலினூடாக இரண்டு நாட்கள் தாக்குதல் நடத்தப்பட்டன. இஸ்ரேலிய கிபீர் மற்றும் உக்ரெயின் மிக் - 27 விமானங்கள் அப்பகுதியில் குண்டுத் தாக்குதல் நடத்தின. கடலோரப் பிரதேசங்களை கடற்படைப் படகுகள் தாக்கின. திருகோணமலை துறைமுகம் மற்றும் குரங்குப்பாலம் ஆகியவற்றிலிருந்து கோட்டியார் குடாவுக்கு அப்பால் பல்குழல் உந்துகணை மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த இருநாட்களிலும் 17 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர். பல கட்டடங்கள் மற்றும் வசிப்பிடங்கள் சிதைந்து போயின.

அதன் பின்னர் வடபகுதியில் பருத்தித்துறை கடற்பரப்பில் மோதல் நடந்த போதும் சம்பூர் தாக்குதலுக்குள்ளானது.

"மூலோபாயம்" மிக்க சம்பூரை மீளக் கைப்பற்றும் ராஜபக்ச அரசாங்கத்தின் நோக்கத்தை இது தெளிவுபடுத்தியது. மும்முனைத் தாக்குதல்களால் முதலில் மக்கள் வெளியேறினர். தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஒவ்வொரு தாக்குதலையும் பயன்படுத்திக் கொண்டு சம்பூரை இலக்கு வைத்தனர். சம்பூரிலிருந்து மக்கள் வெளியேறினர்.

எறிகணை மற்றும் வான் தாக்குதல்கள் ஏப்ரல் முதல் சம்பூர் கைப்பற்றப்பட்ட செப்ரெம்பருக்குப் பின்னரும் தொடர்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் கூற்றின்படி, இந்தக் கால கட்டத்தில் 97 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 215 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெருகல்- வாகரை பிரதேசங்களை நோக்கி இப்போதும் வான்குண்டு மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அந்தப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பூரைச் சேர்ந்த கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் எம்மிடம் தனது நிலைமயை தெரிவித்தார்.

அவரும் அவரது குடும்பத்தினரும் சம்பூரிலிருந்து முதலில் வெளியேறி 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாட்டாளிபுரத்தைச் சென்றடைந்தனர். காட்டுப் பாதையூடாக பாட்டாளிபுரத்தை சென்றடைந்துள்ளனர். அங்கே சில வாரங்கள் தங்கினர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான சிறுவர் பாதுகாப்பு அமைப்பு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களைக் கொடுத்தன. கைவிடப்பட்ட அந்த மக்களுக்கு உத்தியோகப்பூர்வமாக எந்த ஒரு அரசாங்க உதவியும் வழங்கப்படவில்லை. இராணுவத்தன்மை கொண்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் திருகோணமலையின் அரச அதிபராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவித உதவியும் கிடைக்காமல் தடை செய்துவிட்டார். சம்பூரைச் சேர்ந்த மக்கள் இலங்கை குடிமக்கள். மற்ற குடிமக்களுக்கான அனைத்து உரிமைகளையும் அந்த மக்களுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் கைவிடப்பட்டனர். தங்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாயினர். மற்றவர்கள் பெற்றுள்ள வாழ்வதற்குரிய அடிப்படை உரிமை அவர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தது.

அந்த கல்வித்துறையினரின் குடும்பத்தினர் சோகம் தொடர்ந்தது. பாட்டாளிபுரம் பகுதி மீது கட்டைப்பறிச்சான் முகாமிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டப்பட்டது. ஆகையால் அந்த கல்வித்துறை அதிகாரியின் குடும்பத்தினர் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மூதூர் கிழக்கின் நல்லூரைச் சென்றடைந்தனர். ஆனால் விரைவிலேயே அங்கும் திருகோணமலையிலிருது பல்குழல் உந்துகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தோப்பூர் மற்றும் செல்வநகர் முகாம்களிலிருந்து எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வான்குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டது.

தற்காப்புக்காக அந்த குடும்பத்தினர் மற்றவர்களுடன் சேர்ந்து இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சென்றடைந்தனர். ஈச்சிலம்பற்று பிரதேசம் மற்றும் மூதூர் கிழக்கு இடையேயான தாம்போதி சாலையோர நடைபாதை அது. எறிகண மற்றும் இடைவிடாத வான்குண்டுத் தாக்குதல்கள் தொடர்ந்தன. அங்கிருந்து உப்பூறல் மற்றும் சீனன்வெளி ஆகிய பிரதேசங்களை நோக்கி அந்தக் குடும்பத்தினர் நகர்ந்தனர். தொடர்ச்சியான ஆட்டிலறி மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களால் புன்னையடி மற்றும் கல்லடிப் பகுதிகளில் அகதிகளாக வாழ்ந்தனர். மாவிலாறு பிரச்சனையின் போது இந்தப் பகுதிகளிலும் வான்குண்டுத் தாக்குதலுக்குள்ளானது. "நீருக்கான யுத்தத்திற்கு" எதுவித சம்பந்தமுமே இல்லாத பகுதிகள் இவை.

அதன் பின்னர் பலாத்தோட்டம், மாவடிச்சேனை மற்றும் முத்திதோட்டம் ஆகிய தென்பகுதிகளுக்கு அந்தக் குடும்பத்தினர் இடம்பெயர்ந்தனர். இந்தப் பகுதிகளும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கவில்லை. கடைசியாக அந்தக் குடும்பத்தினர் வெருகலைச் சென்றடைந்தனர். அவர்கள் ஆற்றைக் கடக்கும் போது அவர்கள் பயணித்த படகு மீது வான் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலிருந்து தப்பி வந்துள்ளனர். இப்போது அந்தக் குடும்பத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உறவினர் வீட்டில் உள்ளனர்.

கோரல்பற்று வடக்கு பிரதேசமான இடம்பெயர்ந்த தமிழர்களால் நிறைந்துள்ளனர். ஆனால் அங்கே இடம்பெயர்ந்த வந்து சேரும் மக்களுக்கான வசதிகள் ஏதும் இல்லை.

அந்தக் குடும்பத்தின் சோகத்தை தொலைபேசியூடாக கேட்கும் போது மிகவும் வேதனையக இருந்தது. அங்கே முடிவற்ற சோகங்கள் நிறைய உள்ளன. போர்க்காலத்தில் அவர்கள் வசித்து வந்த வீடு இருமுறை பாதிப்புக்குள்ளானது. அடிப்படையான திருத்தங்களுக்குப் பின்னர் மீண்டும் அதிலேயே வசித்து வந்தனர். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்த போது நிரந்தர அமைதி வந்ததாக மற்றவர்களைப் போல் அவர்களும் கருதினர். கடன் வாங்கி வீட்டைச் சீரமைத்தனர். புதிய வீடாக அது தோற்றமளித்தது. ஆனால் தற்போது மீண்டும் இருமுறை அந்த வீடு எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதலில் சேதமடைந்துவிட்டது. திருத்தத்துக்கு அப்பால் அந்த வீட்டிலிருந்தே அனைவரும் வெளியேறிவிட்டனர்.

இந்தச் சோகம்தான் அந்தப் பிரதேச மக்களின் பெரும்பான்மையோரின் சோகமாக இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் நகரும் போதும் தாக்குதல்களினால் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் நடந்தோ அல்லது ஈருருளிகளையோ பயன்படுத்துகின்றனர். சிலர் மாட்டு வண்டிகளில் செல்கின்றனர். ஒரு சிலரே உழவு இயந்திரங்களில் வெளியேறி உள்ளனர். பிரதான வீதிகள் பாதுகாப்பானவை அல்ல. பாலங்கள், தாம்போதி சாலையோர நடைபாதை, படகுப் பயணம் என மக்கள் பயணிக்கும் அனைத்துமே தாக்குதலுக்கு இலக்காகின்றன. இது இலங்கை மக்களுக்கானது மட்டுமல்ல சில வெளிநாட்டவருக்கும் நிகழ்ந்திருக்கிறது. அவர்களும் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

மட்டக்களப்பை வந்தடைந்த கல்வித்துறை அதிகாரி மாணவர்களைப் பற்றி கூறினார், மொத்தம் அந்தப் பிரதேசத்தில் 18 ஆயிரம் மாணவர்கள் இருந்தனர். இப்போது அவர்கள் அனைவருமே இடம்பெயர்ந்துவிட்டனர். அகதி முகாம்களில் வாழ்கின்றனர். பாடசாலைகள் சீர்குலைந்துவிட்டன என்றார்.

அண்மையில் பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சியில் பல பாடசாலை மாணவர்கள் தாங்கள் கல்வி வாய்பபி இழந்தது குறித்த கவலையைத் தெரிவித்திருந்தனர்.

சம்பூரிலிருந்து மக்கள் திட்டமிட்டு படிப்படியாக முற்றாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமையை இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களையும் மறுப்பது என்பது அம்மக்களை முற்றாக திருகோணமலையிலிருந்து வெளியேற்றிவிட்டு தமிழரல்லாத திருகோணமலையை உருவாக்கின்ற ஆழமான சதியின் ஒரு பகுதியாக உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கும் இந்தத் தாக்குதல்களுக்கும் குறிப்பிடும்படியான தொடர்பு இல்லை.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுப்படி அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அரசாங்க உதவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அது போதுமானது அல்லது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் செல்ல வேண்டும்.

சம்பூரை தமிழீழ விடுதலைப் புலிகள் மீள கைப்பற்றமாட்டார்கள் என்று கருதி அங்கே அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 300 ஏக்கர் நிலம் வரையறுக்கப்படுட்டுள்ளது.

இப்படியாக திட்டமிட்ட வகையில் அந்த மக்களை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆனாலும் மகிந்த ராஜபக்ச கூறுகிறார்:

"நமது ஆயுத படைகள் சம்பூரை கைப்பற்றியது அங்கு வாழும் மக்களின் நலனுக்காக- நன்மைக்காக" என்று அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sri_lanka_tamil006rs.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.