Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலத்தின் எதிரொலிகளைப் பாடுபவன் - நேர்காணல் கவிஞர் வாசுதேவன்

Featured Replies

க.வாசுதேவன். கவிஞர்மொழிபெயர்ப்பாளர்ஓவியர்என பன்முக ஆளுமைகளோடு இயங்கிக்கொண்டு இருப்பவர். தமிழ் மொழியில் முதன்முதலில் பிரெஞ்சுப் புரட்சியை எழுதிய ஈழப் புலம்பெயரி. எதையும் தர்க்கித்துப் பார்க்கும்  மொழியாடல் கொண்ட ஒருவர்.   இவைகளைக் கடந்து தமிழ் சமூகத்தின் ஒடுங்குதல் அல்லது உறைநிலை மீது பெரும் கோபம் கொண்ட ஒரு படைப்பாளி.

 

தொலைவில்அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே  ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகளையும் தேர்ந்து எடுக்கப்பட்ட 19 நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிதைகள் என்ற கவிதை மொழிபெயர்ப்பையும் பிரெஞ்சுப் புரட்சி என்ற வரலாற்று நூலினையும் எழுதி இருக்கிறார். 2007 ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாக தொலைவில்” கவிதைத் தொகுதி கனடா தமிழ் தொட்டத்தினரால் தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 தமிழினத்தின்  துயர் படிந்த வரலாற்றின் பாடுகளை பிரேஞ்சுமொழிக்கு மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் இவர் மொழிபெயர்ப்புக் கலையை இளையவர்களிடம் முன்னெடுக்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளார். 

 

எளிமையான சொல்லாடல்கள் அதேவேளை அர்த்தசெறிவு மிகுந்த பிரயோகங்கள் என புதுக்கவிதையின் நுண்மையூடாக தாயகத்துக்கப்பால் படைப்புக்களை நிகழ்த்திவருபவர்களிடையே தனக்கென குறிப்பிட்டுச் சொல்லகூடிய கவிதைப் பாணியினை கொண்டுள்ளவர்.

 

சோறும் கறியும் அத்தோடு சிறிதே கள்ளும் கொடு

யார்முதுகும் சொறிவானடியுன் இளையமகன்

மாலைப்பொழுதுகளில் சிறுவரைப் போல

மகிழ்ந்துவிளையாட கோவிலொன்றும் கொடு

போதுமடி அவனுக்கது”  

 

என்று தமிழ்ச்சமூகத்தின் முகத்தில் சாட்டையால் அடிக்கும் வாசுதேவனை நெருங்கினால்எளிமையான நண்பராக சங்கடமில்லாமல் அணுகமுடியும். சமூகத்தின் பல அடுக்குகளிலும் தன் கரங்களைக் கொண்டிருப்பதாலோ என்னவோ எல்லோரிடமும் நெருக்கத்தினை இயல்பாகவே கொண்டுவிடுகிறார். 

 

எப்போதும் சமூகத்தின் பலமாக  உரையாடல்களே இருக்கிறதென்பதில் மாற்றுகருத்துக்கள் எதுவுமில்லாத நிலையில் நிகழ்ந்திருக்கும் ஒரு உரையாடல் இது. -நெற்கொழு தாசன் 

***************************************************************************************************************************************************************

 

பரிஸ் அகிலனாக ஆரம்பித்த இன்றைய வாசுதேவனின் இடம் ?

 

இலக்கியம் என்பது எப்போதும் எனது இலக்காக இருந்ததில்லை. இலக்கியத்தால் புரட்சி செய்து விடலாமென்றோ அல்லது அது சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றோ நான் தனிப்பட்ட முறையில் ஒரு போதும் நம்பியதில்லை.  இப்போதும் அப்படியொரு நம்பிக்கையில்லை. அவ்வாறு நம்பியவர்களில் மிகப்பெரும்பான்மையினர் ஏமாற்றத்தைத்தான் தழுவிக்கொண்டனர். என்னைப் பொறுத்த வரையிலும் இலக்கியம் என்பது ஒரு தாகம். அது பசி. தவிரக்கமுடியாத வெளிப்பாடும்உள்வாங்கலும். அகிலன் இறந்து விட்டான். வாசுதேவன் இறந்து விட்டான். நான் இன்று இன்னொருவன். நாளையும் இன்னொருவன்.

 

பிரஞ்சுப் புரட்சி உலகியல் மாற்றங்களுக்கு வித்திட்ட ஒரு பெரும் வரலாற்று நிகழ்வு. தமிழில் அதை எழுதத் தூண்டிய காரணம் ஒரு வரலாற்று நோக்குனராக நோக்குனராக அன்றில் இருந்து இன்றுவரை புரட்சிகளுடாக நிகழும் மானிடவியல் மாற்றங்கள் பெருமைப்படக்கூடடியனவா ?

 

பிரஞ்சுப்புரட்சியை  எழுதவேண்டும் எனும் எண்ணம் உண்மையில் எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. அதுபற்றி நிறைய வாசித்து அறியவேண்டும் எனும் ஆவலே என்னில் மேலெழுந்து நின்றது. பிற்காலத்தில்தமிழில் பிரஞ்சுப் புரட்சி பற்றிய நூல்களின் பெருவறுமையை உணர்ந்துகொண்டபோதுதான் இப்புரட்சியின் வரலாற்றை நூலாக எழுதவேண்டும் எனும் எண்ணம் என்னை ஆக்கிரமித்தது.

 

புரட்சி எனும் சொல்லுக்கு நாம் கொடுக்கும் வரைவிலக்கணத்தைப் பொறுத்தே அதன் மானிடவியல் மாற்றங்கள் பற்றி நாம் சிந்திக்கலாம். மானிட வாழ்வின் நிலையை உயர்த்தும் நோக்கிலும்மானிட வாழ்வில் மகிழ்வையும்மலர்ச்சியையும் கொண்டுவரும் நோக்கிலும் ஆற்றப்பட்டவை அனைத்தும் புரட்சிகளே. இந்த இலக்கிற்கெதிராக செயற்பட்டவையெல்லாம் பிற்போக்கு வாதச் செயற்பாடுகளே. இக்கோணத்தில் பார்த்தால் புரட்சிகளின் இலக்கு எட்டப்படும் நிலையில் அவை பெருமைப்படக்கூடியவையே.

 

யேசுநாதரோ அல்லது மொகமது நபியோ செய்த ஆத்மீகப்புரட்சியை எடுத்துக்கொண்டோமானால்அவை மானிட விடுதலையின் நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையே. ஆனால்இதே புரட்சிகளின் விளைவாகஇதே புரட்சிகளின் பெயரால் மானிடத்திற்கு ஏற்பட்ட சேதங்களும் ஏராளம் ஏராளம். இருப்பினும் இப்புரட்சிகளின் இலக்குகளையோ அன்றில் அதன் வெற்றிகளையோ நாம் கறைபடுத்திக் கொள்ளலாமா ?  ஒவ்வொரு புரட்சியிலும் நாம் அவதானிக்கும் மானிடவியல் மாற்றங்களில்மானிடத்திற்குச் சாதகமான விளைவுகளும்பாதகமாக விளைவுகளும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.  பாதகமான பக்கங்களை மாத்திரம் பார்வையிட்டு புரட்சிகள் மீது நாம் தீர்ப்பு வழங்குவதைத் தவிர்த்துக் கொள்வதே அறிவார்ந்த விடயமாக இருக்கக்கூடும். எந்தப் புரட்சிபற்றியும் ஒரளவேனும் புறநிலை சார்ந்த தீர்ப்பை வழங்குவதற்கு அப்புரட்சி நடைபெற்றதன் பின் ஆகக்குறைந்தது அரை நூற்றாண்டேனும் நாம் காத்திருக்கவேண்டும்.

 

மேற்கு நாடுகளால் நிகழ்த்தப்படும் ஒரு போராட்டம் அல்லது எழுச்சி புரட்சி என வரையறை செய்யப்படுவதையும்அதே நிகழ்வுகள் ஏனைய தளங்களில் நிகழும்போது பயங்கரவாதம்‘ என வரைபுக்குள்ளாக்கப்படுவதையும் எப்படி எதிர் கொள்கிறீர்கள் ?

 

பயங்கரவாதம் என்பது காலத்திற்கேற்பவும்இடத்திற்கேற்பவும் வேறு வேறான அர்த்தங்களைக் கொள்ளக்கூடியது என்பது இந்த நவீன காலத்தில் யாருக்கும் இரகசியமான விடயமல்ல. அடக்குபவர்களின் அடக்கு முறைக்கு மானிடவிடுதலை முன்னெடுப்பு என்றும்அடக்கப்பட்டவர்களின் எதிர்ப்போராட்டத்திற்கு பயங்கரவாம் என்றும் பெயரிடுவது நவீன காலத்தின் குறியீடு.  வல்லமை படைத்தவர்களின் சொல்லாளு மையும் அவர்களின் ஊடகங்களும்  தம் விருப்புகளையும்தம்மிலக்குகளையும் மற்றவர்கள் தலையில் திணிப்பதற்காக எடுத்துக் கையாளும் முறைமைகளே இவைகள். இவற்றை எதிர்கொள்ள முடியாது. இவை மிகப்பலம் வாய்ந்த நிறுவன மயப்படுத்தப்பட்ட ஊடகங்களின் தலையீட்டாலும்தெரிந்தோ தெரியாமலோ அவற்றுடன் ஒத்தூதும் அறிவிலிகளாலும் வியாபகம் பெறுகின்றன.  இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இவையனைத்தும் மனிதாபிமானம்மனித உரிமைகள் எனும் போர்வைகளின் தோற்றத்துடனேயே  நடாத்தப்படுகின்றன.

 

வரலாற்றைப்பாருங்கள் பயங்கரவாதிகள் என் முத்திரை சூட்டப்பட்ட பலரை அது புனரமைத்திருக்கிறது. சமகாலத் தீர்ப்புகள் அரசியல் சார்ந்தவை. வரலாறு உண்மையைத் தேடிச்செல்வது.

 

ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களுக்கும் தனித்தனியான நோக்கமும் பார்வையும் உண்டு என உங்கள் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள. அப்படியாயின் வரலாற்றின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விடாதா இதனூடாக உங்களை மீள் சோதனை செய்ய முடியுமா ?

 

வரலாற்றை எழுதுதல் என்பது அறுதியாக வரையறை செய்யப்பட்ட ஒரு விஞஞானம் அல்ல. விஞ்ஞான விதிகள் கூட நிரந்தரமானவையல்ல.  எந்த வரலாறும் தன்னை ஒரு முகத்துடன் காட்டிக்கொண்டதாக வரலாறில்லை. ஆனால் வரலாறு பற்றிய பார்வைகள் அதன் ஆய்வு முறைமைகளாலும் மற்றும் ஆய்வாளரின் வரலாற்ரறிவு போன்ற பல்வேறு காரணிகளாலும் நிபந்தனைப்படுத்தப்படுவன. வரலாறு பற்றிய ஆய்வு காலப்போக்கில் மாற்றங்காணக்கூடியது.  உலகின் அண்மையக்காலத்தைய சம்பவங்கள் வரலாறாகும்போது நாம் இங்கிருக்க மாட்டோம்.  ஆனால்,உதாரணமாக நாம் இல்லாது போது நடைபெற்றநாம் நேரடியாகச் சாட்சியமாக இல்லாதிருந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற பிரஞ்சுப்புரட்சி வரலாற்றைப் பொறுத்தவரையும் பெரிதாக மறுபரிசோதனை செய்யத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

 

மறுபரிசீலனை என்னும் சொல்லை தற்போது அடிக்கடி குறிப்பிட்ட ஒரு தமிழ் இலக்கியச் சூழலில் கேட்கக்கூடியதாக இருக்கிறது. முன்னர் அவன் பிடித்த முயலுக்கு மூன்று காலிருந்தது. இப்போ இவன் பிடித்த முயலுக்கு ஐந்து காலாக உள்ளது’ என்றவாறான விவாதங்கள் பயன் தருவனவையல்ல. இவைபற்றிக் காலங்காலமாக மறுபரிசீலனை செய்து கொண்டேயிருக்கலாம்.  பாரதூரமான விடயங்களை அவற்றின் பெறுமதி சார்ந்து சிந்திக்கவேண்டும். சுய தேவைகளை அல்லது சுயலாபங்களை முடிந்தளவு விலத்தி வைக்கும் பக்குவம் வரலாற்றை அணுகுபவர்களுக்கு வேண்டும். மூக்கு நுனியை உற்றுப் பார்ப்பதுதான் வராலாற்றை  அறிதல் என நம்புபவர்களின் பார்வைக் கோளாறுகளால் உருவாகும் தீங்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளல் அவசியம்.

 

நாம் சம்பந்தப்பட்டிருந்த அல்லது சாட்சியமாக இருந்த சம்பவங்கள் வரலாறாகும் போது நாம் எல்லோரும் மறுபரிசிலினைக்கு உள்ளாகுவோம். அது வரவிருக்கும் வரலாற்றாசிரியர்கள் சார்ந்த விடயமாகவிருக்கும்.

 

பிரான்ஸ் ஒரு பல்லின கலாசாரபண்பாட்டுத் தளத்தின் மையம். இதில் தமிழ் சமூகத்தின் வினைத்திறன் எப்படியிருக்கிறது ?

 

பிரான்ஸ் பல்லினக் கலாச்சார பண்பாட்டு மையத்தின் தளம் என்று கூறுவது பொருத்தமான ஒன்றல்ல. பிரான்சின் பெருநகரங்கள் பல்லினக் கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறதென்பதே உண்மை. பிரஞ்சு நாட்டின் மிகப்பெரும்பான்மையான  கிராமிய நிலப்பரப்பில் பல்கலாச்சாரத்தின் சுவடுகள் இல்லை. அவை தமக்கேயான  வாழ்வியலைப் பேணி நிற்கின்றன. இதை அனுபவ ரீதியாகக் கண்டுணர்ந்துள்ளேன்.  இந்தச் சூழ்நிலையில் தமிழ் சமூகம் மிகப்பெரும்பான்மையாக விளிம்பு நிலையிலேயே இருக்கிறது என்பதுதான் உண்மை.

 

இனரீதியாக தமிழ் எனும் அடையாளம் பிரான்சில் ஈழத்தமிழரின் வருகையின் பின்னரே பரவலாக்கம் கண்டது. ஒருகாலத்தில் ஈழத்தமிழர்களை அகதிகள்’ என்ற நோக்கில்  தம்மை பிரஞ்சுக்காரர்கள்’ எனக் கருதும் இங்கு வாழும் பாண்டிச்சேரியர்கள் ஏளனமாகக் கருதினார்கள். காலணித்துவ உளச்சிக்கலில் புதைந்திருந்த இவ்வாறானவர்கள் காலப்போக்கில் தம் கருத்து நிலைகளை மாற்றிக் கொண்டார்கள். காரணம்தமிழ் எனும் அடையாளம் ஈழத்தமிழர்களால் பரவலாக்கம் அடைந்தபோது அந்த அழகான போர்வையை அவர்களும் போர்த்திக் கொண்டார்கள். இது ஒட்டு மொத்தத் தமிழர்களுக்குமான சாதகமான விடயமே.

 

கடின உழைப்பாளிகள் என்ற வகையில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் நகர்ப்புறக் கலாச்சாரத்தில் தமக்கென ஒரு  இடத்தைத் தக்கவைத்துள்ளார்கள் என்பது மறுக்கமுடியாத விடயமே. எனினும் தற்போது நம்மவர்களையும் மீறி பங்களாதேசத்தவர்கள் தம்மை பெரும் உழைப்பாளிகளாக பிரான்சில் நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளார்கள் என்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வியாபாரத் துறையில் தமிழர்கள் தமக்கென இடத்தைப் பிடித்துள்ளார்கள் என்பதற்கான அடையாங்களும் நிறையவே தென்படுகின்றன.  கல்வித்துறையிலும் ஈழத்தமிழரின் இரண்டாவது தலைமுறையினர் சோடை போகாதுள்ளனர்.அரி தளவு  எண்ணிக்கையானவர்கள் சாதனைகளையும் நிகழ்த்திக்காட்டியுள்ளனர்.

 

இருப்பினும் சமூககலைகலாச்சாரஅரசியல் விடயங்களை தூக்கிநோக்குவோமானல் நாம் இன்னமும் விளிம்பு நிலையில்தான் இருக்கிறோம் என்பது வெளிப்பாடடையும். நமது கலை கலாச்சாரத்தின் ஒடுங்கிய தன்மை எமை வெளிப்புறத்தை நோக்கிய விரிவாக்கதைத் தடை செய்துள்ளது. இந்தியச் சினிமாவி லேயே இன்னமும் எமது கலாச்சாரம் வேர்கொள்வது துரதிஸ்டசவமானது.

 

 

மேற்குறித்த ஈழத்தமிழரின் இரண்டாவது தலைமுறையினர் தங்களின் அடையாளமாக எதைக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் உளவியல் மற்றும் குடும்பப் பிணைப்புகள் எவ்வாறு இருக்கிறது ?

 

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது அத்தனை இலகுவானதல்ல.  புலம் பெயர்ந்த தமிழர் களின் இரண்டாவது தலைமுறையினரில் மிகப் பெரும்பான்மையானவர்கள் ஒருவகையான இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அங்கும் இல்லாத இங்கும் இல்லாத ஒரு இருப்புத்தான் அவர்களுடையது எனக் கருதவேண்டியிருக்கிறது. ரீன் ஏஜ்’ இனரின் நிலைதான் துன்பகரமான நிலை. இவர்களினுடைய பெற்றோர் புரிந்துணர்வு இல்லாதவர் களாகவும் கலாச்சாரப்’ பற்றுள்ளவர்களாகவும் இருப்பார்களேயானால் இவ்விளையோர் தம்முடன்போராடும் அதே வேளையில் பெற்றோருடனும் போராட வேண்டிய நிலையில் வீட்டில் ஒரு வேடமும் வெளியில் ஒரு வேடமுமாக வாழத் தண்டிக்கப்படுகிறார்கள். பெற்றோரைத் திருப்திப்படுத்தவேண்டும் எனும் ஆதங்கமும் அதே வேளையில் பொதுச் சமூக அல்லது கல்விசார் வெளியில் மற்றையவர்களைப்போல் சாதாரணமாக’ வாழவேண்டும் எனும் அவர்களது துடிப்பிற்குமிடையில் தோன்றும் முரண்பாட்டைச் சமாளிப்பதற்காக அவர்கள் வேடந்தாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதைச் சரியான முறையில் கையாண்டு வெற்றிகொள்பவர்களும் இருக்கிறார்கள். துவண்டுதோல்விகண்டு கிளர்ச்சி செய்து தடுமாறுபவர்களும் இருக்கிறார்கள். பெண் பிள்ளைகள்தான் இவ்வியடத்தில் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

 

மேற்கத்தையநகர்ப்புறச் சாம்பாருக்‘ கலாச்சாரத்தில் அடையாளம் என்பது ஒரு விசித்திரமான விடயம். பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் மேற்குலக நகரங்கள் வெளிப்படையாக இனவாதத்தை தூக்கிப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. வெள்ளையர்களுக்கான’ முன்னுரிமை அனேகமாக எல்லா மட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. என்னதான் மனித உரிமை பற்றிப் பேசினாலும் சட்டங்கள் எவையாயிருப்பினும் நடைமுறைவாழ்வில் இனவாதம் தலைகாட்டத்தான் செய்கிறது.

 

இந்நிலையில்நமது இரண்டாவது தலைமுறையின் உளவியல்அடையாளம் எதுவாக இருக்கமுடியும்?  முதல் தலைமுறையினரை சோறுகள்’ என்று எள்ளி நகையாடும் இரண்டாவது தலைமுறையினரும் இருக்கின்றனர் தானே.  இந்த இரண்டாவது தலை முறையின் உளவியல்  அடையாளம் தெளிவற்றது என்றுதான் கூறுவேன். இருப்பினும் தெளிவற்ற உளவியல் அடையாளமென்பது கட்டாயமாகப் பாதகமானது என்று கூறுவதும் அத்தனை இலகுவானதல்ல.

 

 

ஈழ மற்றும் புலம்பெயர் தமிழக்கவிதைகள் சுய புலம்பல்கள் அல்லது அரசியல் பிரச்சாரக் கூற்றுக்களே தவிர அவை கவிதைகள் அல்ல என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிதே. இது குறித்து ?

 

இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் யாரென்பதை உற்று நோக்கிப்பாருங்கள். அவர்களில் முதன்மையானவர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியில் மனிதர்களே இல்லை என்றும் தாமே உலகின் முதல் தர  இலக்கியவாதிகள் என்றும் தம்மைக் கருதிக்கொண்டிருப்பவர்கள். ஈழத்தில் நடைபெற்று முடிந்தது வெறும் குழுச்சண்டையென்றும் அது காரணமற்ற வன்முறையின் வெளிப்பாடென்றும் பிரகனடம் செய்பவர்கள். மற்றும் மூன்றாந்தர இடதுசாரிகள். இத்தரப்பினரில் பாட்டாளி வர்க்கப்’ போர்வையில் சோம்பல் வளர்ப்பவர்களும் அடங்குவர். இவர்களைக் கேட்டீர்களானால்இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்து 70 வருடங்களாகப் போகும் நிலையிலும் இன்னமும் யூதர்கள் ஏன் அழுது கொண்டிருக்கிறார்கள் எனக்கேட்பார்கள். இதுபோன்றவர்களின் போலி மனிதாபிமானமும் மாற்றோர் துன்பமறியாமையும் இவர்களை இலகுவாக முகமூடி களைந்து அடையாளம் காட்டிவிடுகின்றன.

 

அப்படியானால் இடதுசாரிய மற்றும் வர்க்கச் சிந்தனைகள் வெறும் சிந்தாந்தக் கோட்பாடுகள்தானா அவற்றினால் இன்று பயனேதும் இல்லையா 

 

மனிதகுலம் எப்போதுமே அடக்குபவர்கள் எனவும் அடக்கப்படுபவர்கள் எனவும் பிரிந்தே கிடக்கிறது. இந்த இருமை நிலையிலிருந்து அது எப்போதும் தப்பிக்கப்போவதில்லை என்றும் கூறிவிடலாம். ஆனால்அடக்குப்படுபவர்கள் எப்போதும் ஏதோ ஒரு வடிவில் தம் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப்போராடிக்கொண்டே வந்திருக்கிறாரகள். பல உரிமைகளை வென்றெடுத்தும் உள்ளார்கள்.  இருப்பினும்அடக்குமுறைக்கெதிரான உரிமைப்போராட்டங்கள்  கோட்பாடுகளாக  வரையறுக்கப்படுவதற்கு முன் நடைபெற்ற போரட்டங்களையும்அதன் பின்னர் நடைபெற்ற போராட்டங்களையும் ஒப்பீடு செய்வோமானால் சில உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். மாக்சிய-லெனினிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டஅதாவது கட்டமைக்கப்பட்டஅமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் அல்லது புரட்சிகள் சர்வாதிகார அரசுகளின் தோற்றங்களுக்குக் காரணமாக இருந்தன. குறிப்பாக  கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும்ருசியாவையும் உதாரணங்களாகக் காட்டலாம். இவ்வரசுகள்  பாட்டாளி வர்க்க’ அரசுகளாக அல்லாது  ப்யூரோகிராசி’ களாகவேயிருந்தன. பின் உலகச் சூழ்நிலைகளுக்குத் தாக்குப்பிடிக்காது  தளர்ந்துதள்ளாடி உதிர்ந்து போயின.  சனநாயக அரசுக் கட்டமைப்புகளுள் பாட்டாளிகளுக்குள்ள  போராட்ட உரிமை  ப்யூரோக்கிராசி-கம்யூனிசக் கட்டமைப்புக்குள் இருக்கவில்லை என்பது வெள்ளிடைமலை.  சிலர் கம்யூனிசத்தை பூசைக்குரிய விடயமாக்கி அங்கு சில கடவுளர்களையும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.  கோட்பாடுகள் மனித குலத்திற்குச் செய்த நன்மைகளை விடவும் தீமைகள் அதிகமானவையென்றே எனக்குத் தோன்றுகிறது.

 

ஈழத் தமிழ் கவிதைகளின் படிமம் குறியீடு தொன்மம் உருவகம் போன்றன சிறைப்பட்டிருப்பதாக கருதுகிறீர்களா ?

 

ஈழத் தமிழ் கவிதைகள் மாத்திரமல்ல. உலகக் கவிதைகளுக்கும் இதுபொருந்தும். பண்பாட்டு விழுமியங்களும்,அவற்றின் வரலாற்றுப் போக்கிலான கூர்ப்பும்மொழியியற் கூறுகளினூடே கடத்தப்படும் படிமங்களும்வாழ்வுச்சுவடுகளும் இன்றிஅவற்றின் சிறைப்படுத்தலின்றி  இலக்கியம் சாட்சியாக வெளிப்படவே முடியாது. கவிதை இதற்கு எவ்வாறு விதிவிலக்காக முடியும் குறிப்பாக ஈழத்துக்கவிதைகள் இவ்விதிகளிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்ளமுடியும்?

 

வாசுதேவனின் கவிதைகளின் மையம் ?

 

எவ்விதச் சந்தேகமுமின்றி வாசுதேவனின் பிரக்ஞையே.

 

தொலைவில்’, ‘அந்த இசையைமட்டும் நிறுத்தாதே’ என  இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிடுள்ளீர்கள். இப்போது உங்கள் படைப்புகளில் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் ?

 

பொதுவாகவே எழுதும் கவிதைகள் என்பவை வாழ்பனுபவங்களின் எதிரொலிகளே. வாழ்க்கை பயணிக்கும் பாதையும்அது சிந்தனையில் ஏற்படுத்தும் தாக்கங்களுமே கவிதையின் மூலங்களாகின்றன. ஓரு தொகுப்பிலிருந்து இன்னொரு தொகுப்பிற்குத் தாவும் போது அது பாரிய அனுபவப் புரட்சி என்று கருதுவது ஒருவகையில் அப்பாவித்தனமானது. வாழ்க்கைப் பாதையின் எதிரொலிகளாக் கவிதைகள் முளைக்கின்றன. அவ்வளவுதான்.

 

பொதுவாக கவிஞர்கள்கவிதைகள் மேல்தான் விமர்சனம் வைக்கப்படும். நீங்கள் வாசகர்கள் மேல் எப்படியானதொரு விமர்சனத்தை முன் வைப்பீர்கள் ?

 

நமக்கு நாமே நீண்ட காலத்திற்குப்பொய்கூறுதல் சாத்தியமற்ற விடயம். தமிழ் கவிதைகளின் வாசகர்கள் யார் சாதாரண மக்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் கவிதையுலகிலிருந்து வெளியேதான் நிற்கிறார்கள். அவர்கள் கவிதை மொழியால் ஈர்க்கப்படுவதில்லை. சற்று மிகைப்படுத்திக் கூறுவதானால் கவிஞர்கள்தான் மாறி மாறித் தங்கள் கவிதைகளை வாசிக்கிறார்கள். தமக்குத் தாமே புகழரம் சூடிக்கொள்கிறார்கள். புத்தக வெளியீடுகளைப் பார்க்கின்றபோது மீண்டும் மீண்டும் ஓரே முகங்களைத்தானே நாம் பார்க்கிறோம். மீண்டும் மீண்டும் ஒரே இலக்கிய அரசியல்’ தானே மேடையேறிக்கொண்டிருக்கிறது.  வாசகர்கள் மேல் வைக்கக்கூடிய விமர்சனம் என்பது கவிஞர்கள் மேல் வைக்கப்படும் விமரசனம் என்று முடிவடைவகின்றது. ஏனெனில் மிகப்பெரும்பான்மையான வாசகர்களும் கவிஞர்களே. இதனால்தான் தமிழ் கவிதையுலகில் விமர்சனம் என்பது சோடைபோன விடயமாகக் கிடக்கிறது.

 

19ம் நூற்றாண்டுப் பிரஞ்சுக் கவிதைகளுக்கும் இன்றைய பிரஞ்சுக் கவிதைகளுக்குமிடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஊடாக நிகழ்ந்த சமூகத்தாக்கம் என்னஇவற்றோடு ஒப்பிடும்போது தமிழ்க்கவிதையின் சூழல் எப்படியிருக்கிறது ?

 

மொழி எதுவாக இருப்பினும் கவிதை சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தியது அல்லது ஏற்படுத்தும் என்று எண்ணுவது எத்தனைதூரம் பொருத்மானது என்று கேட்கத் தோன்றுகிறது. கவிதை சமூகத்தையும் சமகாலத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. அதன் சாட்சியமாகக் கூட இருக்கிறது. ஆனால் அது சமூக மாற்றத்தின காரணியாக இருந்ததா என்றால் என்னைப் பொறுத்தவரையில் இல்லையென்றுதான் கூறுவேன்.  தமிழ்க்கவிதையின் நிலையும் இதுவேதான்.

 

ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளீகள். ஓவியராக வாசுதேவன் பயணித்திருக்கும்  தூரம்ஓவியராக இருந்து கவிஞர் வாசுதேவனை விமர்சித்தால் திருப்தி கிடைக்கிறதா?

 

அனைத்துக் கலைகளின் மூலமும் நுண்ணுணர்வுகளே. குகைகளில் ஓவியம் வரைந்த ஆதிமனிதர்களும் தமது நுண்ணுர்களை தம்மால் முடிந்த வகையில் வெளிப்படுத்தினார்கள்.  இசைஓவியம்இலக்கியம்நடனம் என இன்னோரன்ன கலைவடிவங்கள் அனைத்தும் மனிதர்களின் மரணத்திற்கெதிரானதும்அபத்தத்திற்கு எதிரானதுமான புரட்சிகளே. ஒவியம் வரைவதென்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு தியானம்போதைத் தேடல். அது ஒரு பயணம் அல்ல.  இவ்வகையில் ஓவியத்துறையில் பயணித்திருக்கும் தூரம் என ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. குளியலறைக்குள் நின்று பாடும்போதும்கவிதையொன்றை எழுதும்போதும் அன்றில் ஒவியம் ஒன்றை வரையும்போதும் நான் வேறு வேறு மனிதனாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அனைத்துமே அகத்தின் வெளிப்பாடுகள்தான். அனைத்தினதும் ஊற்றுக்கண்கள் ஒன்றேதான்.

 

எண்பதுகளின் பிற்பகுதிகளில் இருந்து பொது வெளியில் இயங்கி வரும் நீங்கள்அதிகளவு பல்லின இலக்கியவாதிகளுடன் நெருக்கங்களைக் கொண்டிருக்கும் நீங்கள்ஈழத்தமிழ் மக்களின் துயரங்களைவலிகளை இழப்புகளைஇலக்கியப் படைப்புகளை அவர்களிடம் எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள் ?

 

தனிப்பட்ட முறையில் என்னாலான பகிர்வுகளை மேற்கொண்டிருக்கிறேன். ஒரு கடமையாக அல்ல. ஆனால் இயல்புநிலையானசாட்சியமற்ற பகிர்வுகளாக. அண்மைக்காலமாக  ஈழத்தின் துயர்படிந்த கவிதைகளை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கத்  தொடங்கியிருக்கிறேன். அவை எப்போது ஒரு தொகுப்பாக வெளிவரும் என்பதை என்னால் சொல்லமுடியாதுள்ளது. தனிமனிதனாக இவ்வாறானதொரு வேலையை விரைவில் செய்து முடிப்பதற்கான கால அவகாசம் எனக்குப் போதாதுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்  அடுத்த தலைமுறையினர் சிலரை ஒருங்குகூட்டி அவர்களுக்கு மொழிபெயர்ப்புக் கலையைக் கற்பிக்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளேன்.  அடுத்த தலைமுறை இருமொழிப் பயிற்சி பெற்று  இலக்கிய மொழிபெயர்ப்புத் துறைக்குள் செல்லவேண்டிய ஒரு கட்டாயத் தேவையிருக்கிறது. எமது புலம்பெயர்வு அதற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.  எத்தனை காலத்திற்குத்தான் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டிருப்பது ?

 

 

ஈழத்தில் மிலேச்சத்தனமான இன அழிப்புக்குள்ளான நிலையில் அந்த வலிகளை சுமந்து கொண்டு புலம்பெயர் ஈழத்தமிழினம் செல்லும் திசை உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா ?

 

நிச்சயமாக இல்லை. ஈழத்தில் இன அழிப்பே நடைபெறவில்லை என்று கூறுபவர்களும் நம் மத்தியில்தானே இருக்கிறார்கள். பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு உரோமத்தை வருடிவிடுபவர்கள் நம் மத்தியில்தானே இருக்கிறார்கள். சிங்கள மக்களில் சிறு தொகையினரேனும் நடைபெற்ற அநீதிக்காக வருந்துகையில்தம் தனிப்பட்ட வஞ்சம் தீர்ந்ததாக எம்மில் சிலர் வெளிப்படையாகவே கூறிக்கொள்கிறார்களே. இதைத்தான் நான் மூக்கறையனிசம்‘ என்று அழைக்கிறேன்.

 

ஈழத் தமிழ் சமூகம் பிளவுண்டதும்சிதறுண்டதுமானது. அதை மேன்மேலும் பிளவுபடுத்தும் திட்டமிட்ட நோக்கில் செயற்படுபவர்கள் தங்களது குறுகியகால நோக்கங்களில் வெற்றி பெறக்கூடும். ஆனால்நீண்ட காலவிளைவுகளுக்கு அவர்களே பலியாகப்போவதைத் யாராலும் தவிர்க்கமுடியாது.

 

தமிழ்நாட்டிலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி மிக அதிகமாக தமிழ் செயற்பாடாளர்கள் எதிர்கொள்ளும் ஒரு வன்முறை துரோகிப்பட்டம். இதன் மூலம் எதைக் கண்டடையப்போகிறோம் ?

 

தன் இருப்பு நிலையில் மற்றும் கருத்து நிலையில் சுமூகமாக இருக்கக்கூடிய சமூகத்தில்மக்கள் மத்தியில் இவ்வாறான சொல்லுபயோகங்கள் தேவைப்பவடுதில்லை. இச்சுமூக நிலையில்லாத நிலையில் ஒரு வித கூட்டு பரனொய்ட்’ மனோபாவம் தானாகவே உருவாகிவிடுகிறது.  போர்க்காலச் சூழலும்பகைச் சூழலும் இம்மனோ நிலையின் அடிப்படைக் காரணிகளாக அமைந்து விடுகின்றன. இது தமிழ்ச் சமூகத்திற்கு மட்டும் சொந்தமான ஒரு விடயம் என்று கருதிவிடாதீர்கள். மனிதகுலம் ஒட்டுமொதத்திற்கும் இதுதான நிலை. எங்கெல்லாம் தேசியஇனமத அடையாளங்களின் இருப்பு நிலை தடுமாறுகிறதோ அங்கெல்லாம் துரோகிகள் இருப்பார்கள். யார் சார்பாக  யார் துரோகி என்பதைப் பல்வேறு விடயங்கள் தீர்மானிக்கின்றன. வெற்றிகளும்தோல்விகளும் காலமும் இடமும் இச்சொல்லின் அர்த்தத்தை அவ்வப்போ மாற்றிக் கொள்கின்றன. அவ்வளவுதான்.

 

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களிடம் வழக்கொழிந்து போய்க் கொண்டிருந்த சாதியங்கள் பற்றிய உரையாடல்கள் மீள அதிகரித்திருப்பது குறித்து ?

 

சாதீயம் பற்றிய உரையாடல்களையும்சாதிய இருப்பு நிலையையும் நான் ஒன்றுபடுத்திப் பார்ப்பதில்லை. சாதிகளின் இருப்பு நிலைக்கும்அது தொடர்பான உரையாடல்களுக்குமான உறவு பற்றிய ஒரு தெளிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமாதொன்றாகும்.  ஏனெனில் இவ்வுரையாடல்கள் பல்தரப்பட்டவை. சாதிய அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை கூர்மைப்படுத்தும் உரையாடல்களும் உண்டு. அதை தணித்து சாதியக் கலைப்பை அல்லது கலப்பை தோற்றுவிக்கும் உரையாடல்களும் உண்டு. இவையெல்லாம் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அணுகப்படல்வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் சாதிக் கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா அல்லது வீழ்ச்சியுற்றிருக்கிறதா என்னும் கேள்விக்கான விடையிலிருந்து இது ஆரம்பிக்கப்படலாம். சாதியப்பாகுபாட்டின் இன்மை  தமிழ்தேசியத்தைப் பலப்படுத்தும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

 

நன்றி : ஆக்காட்டி சஞ்சிகை. (புரட்டாதி -ஐப்பசி)

                                           

 

வாழ்த்துக்கள் , வேலணைக்  கவிஞர் ,மொழிபெயர்ப்பாளர்   வாசுதேவன்  அவர்களின் பணி  மேன்மேலும் தொடர எனது  நல்வாழ்த்துக்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.