Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழர்களின் கால்களில் சங்கிலியை பிணைக்க முயன்றால், அதில் சிங்களவர்களும் சிக்கிக் கொள்வார்கள்'-பிரசன்ன விதானகே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழர்களின் கால்களில் சங்கிலியை பிணைக்க முயன்றால், அதில் சிங்களவர்களும் சிக்கிக் கொள்வார்கள்'-பிரசன்ன விதானகே

பிரசன்ன விதானகேயை நான் எடுத்த பேட்டியை இங்கே பதிவு செய்துள்ளேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் பேட்டியை கொஞ்சம் தாமதமாகவே பதிவு செய்கிறேன். இந்தப் பேட்டியை நான் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். படித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்,

அருளினியன்.

பிரசன்ன விதானகே, ஈழத் தமிழர்களின் வலிகளையும் நெஞ்சுரத்துடன் படமாக்கிய சிங்கள இயக்குநர். ஈழத் தமிழர்களுக்கு சார்பான தனது நிலைப்பாட்டால், சிங்கள கடும்போக்குவாதிகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தையும், கொலை மிரட்டல்களையும் பெற்றவர். "ஆகாச குசும்' என்ற பெயரில் இவர் சிங்கள மொழியில் இயக்கிய திரைப்படம் "ஆகாய பூக்கள்' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. ஈழப் போர் நிகழ்ந்த முப்பதாண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட ஒரே சிங்கள மொழிமாற்றுப்படம் "ஆகாயப் பூக்கள்'தான்.

"ஒப நத்துவா ஒப எகா' என்ற பெயரில் இவர் சிங்கள மொழியில் இயக்கிய திரைப்படம் "வித் யு வித் அவுட் யு' என்ற பெயரில் ஆங்கில உப தலைப்புடன் அருண் தமிழ் ஸ்டுடியோவினால் இந்தியாவில் திரையிடப்பட்டது. படத்தின் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த இயக்குநர் பிரசன்ன விதானகேயை சந்தித்தேன்.

உங்களுடைய எல்லாப் படங்களிலும், இலங்கையின் சிறுபான்மை இனமான தமிழர்களின் நியாயமான பிரச்னையை ஏதோ ஒரு வகையில் பேசி இருப்பீர்கள். பெரும்பான்மை சிங்கள இனத்தை சேர்ந்த உங்களால் சிறுபான்மை இனத்தின் பிரச்னைகளை எவ்வாறு புரிந்து கொள்ள முடிகிறது...?

கலைஞன் என்று தன்னை உணர்பவனுக்கு, சிறுபான்மை மீதான சரியான புரிந்துணர்வும், அவர்களின் உணர்வுகளை, பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் திறனும் அவசியம். அது இல்லாதவனை கலைஞன் என்று சொல்ல முடியாது. இந்த சமூகத்தில் அதிகம் வன்முறைக்குள்ளாக்கப்படுபவர்களும், அடக்கப்படுபவர்களும் சிறுபான்மையினர்தான். சிறுபான்மையினரின் வலிகளைப் புரிந்து கொள்வதுதான் சமூக நீதிக்கான அடிப்படையாக அமையும். எனது எல்லாப் படங்களிலும் சிறுபான்மையினரின் வலியைப் பேசியிருப்பேன்.

இந்த சிறுபான்மை, பெரும்பான்மை என்பது தனியே இனங்களுக்கு மட்டும் அல்ல. ஒரு ஆண் படைப்பாளி, தமக்கு சிறுபான்மையாக விளங்கும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வலிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எமது பிரதேசத்தில் வருமானத்திற்கு வேறு வழியில்லாமல் இலங்கை இராணுவத்தில் சேர்ந்து இறந்த பல வறிய இளைஞர்களின் மரணங்களையும் நான் தாண்டி வந்துள்ளேன். இலங்கை இராணுவத்தில் இணைந்து இறந்து போன மேட்டுக் குடி வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்களை நாம் விரல் விட்டு எண்ணலாம். இந்த வறிய இளைஞர்களும் சமூகத்தில் வர்க்க அடிப்படையில் சிறுபான்மையினர்தான். அந்த வகையில் சிறுபான்மையான அந்த வறிய இளைஞர்களின் வலியை எனது "டெத் ஆன் எ புல் மூன் டே' திரைப்படத்தில் பதிவு செய்து இருந்தேன்.

வடக்கு கிழக்கில் தமிழர்க்கு சிறுபான்மையாக இருந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட அவலத்தை எனது "ஆகஸ்ட் சன்' படத்தில் பதிவு செய்திருந்தேன். ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விஷயம் பிரதானமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை சிறுபான்மையினரின் வலிகள் பிரதானமானவை. அதை நான் சாகும் வரை பதிவு செய்வேன்.

ஆனால், சிறுபான்மையினத் தமிழர்களின் வலிகளைப் புரிந்து கொண்ட சிங்கள மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக அல்லவா இருக்கிறது?

சிறுபான்மைத் தமிழர்களின் வலிகளை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேன் என்பதை விட, அவர்களின் வலிகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் எனக் கூறுவதே சரியாக இருக்கும். ஊரையிழந்து உறவை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து, அடையாளத்தையும் இழந்து நிர்க்கதியாக இருக்கும் தமிழர்களின் வலிகளை ஒரே வார்த்தையில் புரிந்து கொண்டேன் என எப்படிக் கூற முடியும்...? பெரும்பான்மை இனமாக இருந்துகொண்டு ஈழத் தமிழர்களின் வலிகளை புரிந்து கொள்வதற்கும், சிறுபான்மை இனமாக அந்த வலிகளுடன் வாழ்வதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு, இல்லையா...? பெரும்பாலான சிங்கள மக்களால் ஈழத் தமிழர்களின் வலிகளை ஏன் புரிந்து கொள்ள முடிவதில்லை என்ற கேள்வி எனக்கும் எப்போதும் உண்டு. ஒரு படைப்பாளியாக இந்தக் கேள்விக்கான சரியான விடையை நான்தான் தேடிக்கண்டறிய வேண்டும்.

தமிழர்களின் கால்களில் சங்கிலியை பிணைக்க முயன்றால், அந்த சங்கிலியில் சிங்களவர்களும் சிக்கிக் கொள்வார்கள் என்ற உண்மையை சிங்களவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகள் போர் நிறைவுக்கு வந்த பின்பும் இன்னும் வேறு ஏதோ விதத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழர்களின் நியாயமான பிரச்னைகளை சிங்களவர்கள் புரிந்து கொண்டிருந்தால் ஈழம் இந்தளவு தூரம் எரிந்திருக்காது.

இலங்கையில் இன முரண்பாடுகள் எந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறது என நினைக்கிறீர்கள்?

ஒரு பிரச்னையை தமிழர்கள் ஒரு மாதிரியாகவும் சிங்களவர்கள் வேறு மாதிரியாகவும் பார்ப்பதில்தான் அனைத்து சிக்கல்களும் ஆரம்பிக்கின்றன. இந்தியத் துணைக் கண்டத்தில் சிங்களவர்கள் தங்களை சிறுபான்மையாக உணர்கிறார்கள். அதனால் பயப்படுகிறார்கள். அந்த பயத்தை இலங்கை அரசியல்வாதிகள் ஊதிப்பெருப்பிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் சிங்களவர்கள், தமிழர்களை அடக்கி வைக்க நினைக்கிறார்கள்.

தமிழர், சிங்களவர் என்ற பேதத்தைக் கடந்து மனிதர்களாக முன்நோக்கிச் செல்ல வேண்டும். எதிர்கால சந்ததியாவது அதை செய்ய வேண்டும்.

முப்பது வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை தமிழ் அமைப்புகள் தொடங்கியபோது, தமிழருக்கு இருந்த பிரச்னைகள் அவர்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் அப்படியே இருக்கிறதே?

இலங்கை அரசின் அரசியல் கொள்கைகளின் தவறால் உருவான விளைவுதான் விடுதலைப்புலிகள். ஆகவே விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என இலங்கை அரசு கூறுவதுபோல என்னால் கூற முடியாது. அரசியல் ரீதியான குறைகள், பாரபட்சங்கள் இருக்கும் போதுதான் அங்கே போராட்டம் முளைவிடும். இலங்கையில் சிறுபான்மை இனத்தால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அவர்களுக்கிருந்த பிரச்னைகள் இன்னும் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழர்களின் கோரிக்கைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் உருவாகும். தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசால் வெல்லலாம் அதுவல்ல முக்கியம் தமிழர்களின் இதயத்தை வெல்லவேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

போராட்டம் ஆரம்பித்த காலத்தில் அவர்களிடம் நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால், அவர்கள் தமக்கான அரசியலை கட்டமைக்காமல் ஆயுதத்தை மட்டுமே நம்பியது தவறு. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தாக்குதலுக்கு பின்பு, ஆயதக் குழுக்கள் மீதான உலகின் பார்வை மாறியதும் அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

தனிநாடு உட்பட, விடுதலைப் புலிகளின் கொள்கைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

எந்தத் தீர்வாக இருந்தாலும் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கைக்குள்தான் எடுக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. விடுதலைப் புலிகளின் கொள்கைகளைப் பகுத்தறிந்து பேச நான் அரசியல் ஆய்வாளன் இல்லை. இன்றைய ஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. "நாங்கள் இன்று, எந்த உரிமையும் இல்லாமல் பிச்சைக்காரர்கள் போல இருப்பதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம்' என எனக்குப் பல இலங்கைத் தமிழர்கள் கூறியுள்ளனர்.

2009 இல் இறுதிப் போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, அதை போர் வெற்றியாக சிங்கள மக்கள் கொண்டாடியதன் பின்னணியில் உள்ள உளவியலை எப்படி புரிந்து கொள்வது...

இலங்கை ராணுவம் இறுதிப் போரில் வெற்றி பெற்ற போது நான் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். கிரிபத்(பாற் சோறு) ஒரு கையிலும், இலங்கை தேசியக்கொடி இன்னொரு கையிலுமாக எம்மை வழிமறித்த பல சாதாரண சிங்கள மக்கள் என்னையும் அந்தக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்ள வருமாறு அழைத்தனர். இலங்கைத் தீவின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருக்கும் போது, அதே தீவின் இன்னொரு பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதன் மன நிலையை உங்களைப் போல என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், சிங்கள மக்களின் அந்த போர் வெற்றிக் கொண்டாட்டங்கள்தான், இறுதிப் போரின் பிறகான இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. 'எமது அழிவை நீங்கள் கொண்டாடினீர்களே...?' என எனது தமிழ் நண்பன் என்னிடம் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. இறந்து போனவர்கள் எல்லாம் தமிழர்களாக இருந்தாலும் அவர்களும் இலங்கையின் பிரஜைகள் என்பதையும், அவர்களும் மனிதர்கள்தான் என்பதையும் சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாதது உண்மையில் துரதிஸ்டவசமானது.

"வித் யூ வித் அவுட் யூ' படத்தில் நாயகியாக இந்தியாவை சேர்ந்த அஞ்சலி பாட்டீலை தேர்ந்தெடுத்த காரணம் என்ன?

இலங்கை தமிழ் பெண்ணையே அந்தப் படத்தில் நடிக்க வைக்க முயன்றேன். ஆனால், கடந்த 30 வருடங்களில் இலங்கையில் வெறும் 10 படங்கள்தான் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் நாயகிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நான் தேடிய நாயகி எனக்குக் கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் நாயகிதான் பிரதானம். அவரின் பார்வையில்தான் படம் நகரும். அப்போதுதான் நண்பர்கள் சொல்லி, அஞ்சலி பாட்டீலை சந்தித்தேன். நான் மனதில் நினைத்து வைத்திருந்த ஈழத்துப் பெண் போலவே இருந்தார். அவரை நடிக்க வைத்தேன்.

ஸ்ரீகர் பிரசாத்துடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஒரு படத்தின் கதாபாத்திரத்தின் மன உணர்சிகளைக்கூடத் தனது படத்தொகுப்புத் திறமை மூலமாக சரியான முறையில் திரையில் பிரதிபலிக்க வைப்பார். இந்தப் படத்தில் நாயகன் மற்றும் நாயகி பல காட்சிகளில் கண்கள் மூலமாகத் தான் பேசிக் கொள்வார்கள். அதை அவர் படத்தொகுப்பு செய்திருக்கும் விதம் அற்புதம்

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்ததை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

இறுதிப் போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற உயிரிழப்புகள் பற்றிய சரியான தரவுகள் யாரிடமும் இல்லாத நிலையில் இது சம்பந்தமாக கருத்துக் கூற விரும்பவில்லை.

இலங்கை அரசின் போர்க் குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இந்த உயிரிழப்புகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணையை விட, இலங்கைக்குள் அமைக்கப்படும் விசாரணைக் குழு அதிக பயன் தரும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழர்களின் இறந்தகாலத்தின் வடுக்களை அகற்றாமல் சுபீட்சமான எதிர்காலம் இல்லை.

பேரினவாத அரசின் பார்வை இப்போது இலங்கை முஸ்லிம் மக்கள் பக்கமாகத் திரும்பியுள்ளதே...

முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை நடத்திய "பொது பலசேனா'வினர் தங்களை சிங்கள பௌத்தர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள். அமைதியின் வடிவமான பௌத்த பிக்குகள் ரவுடிகள் போல வன்முறையில் இறங்குவதை எப்படி ஏற்றுக் கொள்வது...? பௌத்த சிங்களவர்களின் பெயரால் இன்னொரு உயிரை எடுப்பதை பௌத்தர்கள் எம்மால் அனுமதிக்க முடியாது. பொது பலசேனா அமைப்பின் வன்முறைகளுக்கெதிராக இலங்கையின் படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதில் எனது கையெழுத்தை இட்டுவிட்டுத்தான் இந்தியா வந்தேன். இந்த இனவாத அமைப்புகள் இன்னொரு கறுப்பு ஜூலையின் பக்கம் இலங்கையை நகர்த்தி செல்வதாக நான் அஞ்சுகிறேன். இலங்கைத் தீவு பல அழிவுகளைக் கண்டுள்ளது. எத்தனையோ தமிழ் அறிஞர்கள் போரினால் இலங்கையை விட்டு புலம் பெயர்ந்துள்ளனர். இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு அது பெரிய இழப்பு. இனியும் இனவாதம் வேண்டாம். வன்முறை வேண்டாம். வன்மம் வேண்டாம். இனியும் இந்த அழிவுகள் வேண்டாமே... ப்ளீஸ்.

இலங்கை தமிழர்களுக்கு தீர்வாக நீங்கள் கருதுவது என்ன?

இலங்கை நாடானது அனைத்து இனத்திற்கும், மதத்திற்கும் பொதுவானது என நம்புபவன் நான். சிங்கள, தமிழ் மக்களிடையே உள்ள வேறுபாடுகளைத் விட அவர்களிடையே இருக்கும் கலாச்சார, பண்பாட்டு ஒற்றுமைகள் அதிகம். ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு சம உரிமை என்பதுதான் எனது கனவு. கணபதி ஐயா கடையில் யாழ்ப்பாணப்புகையிலை வாங்கி, சலீமுடன் சேர்ந்து அருந்தும் இலங்கைதான் எனது கனவு. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படாவிட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இல்லை, சிங்களவர்களுக்கு கூட சரியான எதிர்காலம் அமையாது.

http://aruliniyan.blogspot.in/2014/09/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி 
பதில்கள் சில இடங்களில் டல் அடிக்கிறதே ...?

ஒன்றிணைக்கப்பட்ட இலங்கைக்குள் தீர்வு எப்படி ...?
அவன்தான் எங்களை நீங்கள் இந்த நாட்டு பிரஜையில்லை ...இந்தியாவுக்கு ஓடுங்கோ ,,,இப்படி விரட்டுறான் 
இவனோட சேர்ந்து சீவிக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்தாச்சு ...பிறகெப்படி தீர்வு ஒன்றுபட்ட நாட்டிற்குள் தருவீங்கோ 

 

 

 

இந்த உயிரிழப்புகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணையை விட, இலங்கைக்குள் அமைக்கப்படும் விசாரணைக் குழு அதிக பயன் தரும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

ஆக ....தங்களோட நாத்தம் வெளியில மணக்கக்கூடாது  என்பதில சிங்களவர்களுக்கிடையில் வேறுபாடில்லை.
பறனகமையின் நாத்தக்குழு ஏதாவது செய்யும் என்று எதிர்பார்க்க சொல்லுறார் 

ஒரு வகையில் மற்ற சிங்களவரை விட இவர் எவ்வளவோ பரவாயில்லை.

 

கருப்பு ஜூலை கருப்பு ஜூலை என்று இந்த சிங்களவர்கள் பம்முவதை பார்க்க சிரிப்பு சிரிப்பா வருது 
அத திட்டம் போட்டு செய்வாங்களாம் ,,,தமிழர வேரருப்பாங்களாம் ....பிறகு கூடியிருந்து குளறுவாங்கலாம் 

சிங்களவரிடமிருந்து எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது இதுவே நிதர்சனம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.