Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும்

அறிஞர் க.பூரணச்சந்திரன்

mqdefault.jpg

போர்முறைகளும் விதிகளும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே வருகின்றன. வாளையும் ஈட்டியையும் கொண்டு போரிட்ட காலத்துப் போர் முறைகள் ஒருவிதம். துப்பாக்கியையும் பீரங்கியையும் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு போரிட்ட முறைகள் இன்னொரு விதம். டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு போர்முறை வேறுவிதமாக மாறியது. டாங்கிகள், போர் விமானங்கள் வந்த பிறகு போர்முறை முற்றிலும் வேறுவிதமாக மாறியது. கடைசி யாக இப்போதோ அணுகுண்டு, ஹைடிரஜன் குண்டு போன்ற அணு ஆயுதங்கள், வேதியியல் நச்சுகள், உயிரியல் அழிப்புப் போர்முறைகள் போன்ற பலவிதமான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. போரின் வரலாற்றை நோக்கும்போது, தனி மனித அழிப்பிலிருந்து மாறி எவ்விதத் தொடர்புமற்ற அப்பாவி மக்களைக் கோடிக் கணக்கில் கொன்று குவிப்பதே போரின் இலட்சியமாகி இருக்கிறது. அதிலும் போர்க் குற்றங்களின் தன்மையும் நம்மை நடுங்கச் செய்கிறது.

வரலாற்றையோ நடைமுறையையோ அறியாத மக்கள் மனத்தில் இராணுவம் என்பது நாட்டைக் காப்பாற்றுவது, தேசத்தைப் பாதுகாப்பது என்றெல்லாம் கருத்து கள் விதைக்கப்படுகின்றன. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட அளவுதான். சாதாரண மாகப் போர் என்பது இக்காலத்தில் கிடையாது. ஏனென்றால் அது பேரழிவு, பொருளாதார நாசம் என்பது எல்லா அரசாங்கங்களுக்கும் தெரியும். நேரடியான சுரண்டல் கருதிப் போர் செய்யமுடியாத நிலையில் இன்றைய வல்லரசுகள் உலகமயமாக்கல் போன்ற கொள்ளைடியக்கும் முறைகளைக் கையாளுகின்றன. அதனால் ஆயுதங்களைக் குவித்துவைத்திருந்தாலும், இப்போதைய வல்லரசுகள் நேரடியாக அணுகுண்டுகளை வீசுவதில்லை. ஆயினும் ஈரான்மீது தாக்குதல், ஈராக் போர் போன்றவற்றில் போரின் அரக்கத்தனத்தையும் இயற்கைச் சீரழிப்பையும் நாம் சில ஆண்டுகளுக்கு முன்பு நேரிலேயே கண்டோம்.

இராணுவம் என்ற பெயரில் ஒரே இடத்தில் குவிக்கப்படும் பல்லாயிரக் கணக்கான ஆடவர்கள் ஆண்டுக்கணக்கில் குடும்பங்களைப் பிரிந்து இருந்தால் என்னென்ன நிகழும் என்பதைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். இக்காலத்தில் போர்கள் எய்ட்ஸ் முதலான நோய்களைத் தோற்றுவிக்கும் ஓரினச் சேர்க்கையை உருவாக்குகின்றன. முதலாம் உலகப் போருக்குப்பிறகு ஓரினப் புணர்ச்சி இலக்கியம் என்ற தனிப்பிரிவே உருவாயிற்று. வேசியர் காலனிகளை உருவாக்குதல், பெண்களைக் கற்பழித்தல், பொருளாதாரச்சீரழிப்பு வரை இவர்களின் பாதிப்பு (போர் நடைபெறாத காலத்திலேயே) மிகவும் அதிகம்.

ஆனால் போர் ஏதோ உன்னதமானது, புனிதமானது போன்ற கற்பனையை ஆளும் வர்க்கம் திட்டமிட்டு உருவாக்குகிறது. சான்றோர் என்றைக்குமே போர் கூடாது என்றே கூறிவருகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் போர்ச்சீரழிவுகளைப் பற்றி எண்ணற்ற திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது இராணுவ வீரர்கள் சொந்த மக்களையே கொல்லும் பாதகர்கள் என்பதை அஸாம் முதலிய மாநிலங்களில் அவர்கள் நடந்துகொண்ட முறையிலிருந்தும், நக்ஸலைட்டுகள் எனப் பெயர்வைத்து பெருமுதலாளித்துவக் கொள்ளைக்கு எதிராகப் போராடுபவர்களை அவர்கள் கற்பழித்துக் கொல்லும் முறையிலிருந்தும் அறிவுள்ளவர்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.

தமிழ்மக்கள் பெரும்பான்மையினரும் பழங்காலத்தில் சீனப்படையெடுப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட இரத்தத்திலகம் போன்ற படங்களைப் பார்த்து மூளைச் சலவைக்கு ஆளாகி போர் என்பது புனிதமானது, இராணுவ வீரன் என்பவன் ஏதோ புனிதமான ஆசாமி என்பதுபோன்ற கற்பனையில்தான் இருந்தார்கள். அவர் களை போரின் நடைமுறைத் தன்மைகளுக்குச் சற்றேனும் அறிமுகப்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது, முன்னாளில் ஜெயவர்த்தனாவும், கடந்த ஆறேழு ஆண்டுக ளில் இராஜபட்சேவும் தங்கள் இராணுவத்தைவிட்டுச் செய்யவைத்த செயல்கள்தான்.

ஆனால் உத்மானிய துருக்கர் காலத்திலிருந்தே, செங்கிஸ்கான் தைமூர் காலத் திலிருந்தே, புனிதமான சிலுவைப்போர்கள் காலத்திலிருந்தே போர் நடைமுறைகள் என்பவை கொலை, உறுப்புகளைச் சிதைத்தல், பாலியல் வல்லுறவு, பொருளாதார நாசம் என்பவைதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உலகில் மதம் சார்பாக நடந்த போர்களே அதிகம் என்பது வரலாற்றாய்வு கூறுவது. ஆனாலும் அவற்றிற் கும் அடிப்படையாக பொருளாதாரக் காரணங்கள்தான் பின்னணியில் இருந்தன.

இப்படி இன்றைய போர் நடைமுறையையும் வரலாற்றையும் பார்க்கும்போது சங்ககாலச் சமுதாயத்தில் போர் நடந்திருக்கும் விதங்கள் மிகவும் போற்றத்தக்கவை யாகவே காட்சியளிக்கும். ஆனால் தனிமனித அடிப்படையில் ஒருவருக்கொருவர் நேருக்குநேர் வாளைக் கொண்டு போரிட்டாலும், விமானத்திலிருந்து அணுகுண்டு வீசி ஒரே நொடியில் ஐந்து லட்சம் பேரை அழித்தாலும், போர் போர்தான். ஏன் மனிதன் கூட்டங்கூட்டமாகத் தன் இனத்தையே அழிக்கிறான் என்பதன் உளவியல் பின்னணிகளை இன்னொரு சமயம் பார்க்கலாம். ஆனால் விலங்குகள்கூடத் தங்கள் இனத்தையே பெரும் எண்ணிக்கையில் அழிப்பதில்லை, உணவுக்குத் தவிரப் பிறசமயங்களில் கொலை செய்வதில்லை. மனிதன் பெற்றிருக்கும் ‘நாகரிகம்’ நம்மை வியக்கவைக்கிறது!

சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னால் இயற்றப்பட்டவை. அக்காலத்தில் நிகழ்ந்த பல போர்ச் சம்பவங் களைப் புறநானூறும் பதிற்றுப்பத்தும் விளக்குகின்றன. தொல்காப்பியத்தில் புறத் திணையியலும் போர்ச்சம்பவங்களைப் பற்றியே எடுத்துரைக்கிறது.

வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்ற ஏழு திணைகளாகப் புறப்பொருளை வகுத்துக் கவிதை இயற்றலாம் என்பது தொல்காப்பியத்தின் கருத்து. இவற்றில் காஞ்சி, பாடாண் ஆகிய இரண்டினைத் தவிரப் பிற ஐந்து திணைகளும் போர் தொடர்பானவை. புறநானூற்றில், காஞ்சி, பாடாண் ஆகிய திணைகளும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பொதுவியல் என்ற திணையும் முதன்மை பெறுகின்றன. போர்த்திணைகள் அவ்வளவாகப் பாராட்டப் படவில்லை. இது ஒரு நல்ல போக்கு என்றே கூறவேண்டும். காஞ்சி என்பது பொதுவான மானிட நிலையைப் பாடுவது, பாடாண், அரசர்களையும் தலைவர்க ளையும் புகழ்வது, பொதுவியல் அறிவுரைகளை உரைப்பது என்று இன்றைய நோக்கில் பொதுவாகக் கூறலாம். ஆகவே புறநானூற்றில் போர்நிகழ்வுகள் குறிக்கப்படுவன குறைவு என்பதில் ஐயமில்லை.

அகப்பாக்களில் அறநோக்கு வகுக்கப்பட்ட அளவுக்குப் புறப்பாடல்களுக்கான அறநோக்கு வரையறுக்கப்படவில்லை. சங்கப்பாக்களின் அறநோக்கு இன்றைய அறநோக்கும் அல்ல. சான்றாக, சங்க இலக்கியத்தில் பரத்தைமை ஒழுக்கம் இயல்பான ஒன்றாக ஏற்கப்படுகிறது.

புறத்திணை இயலில் போர்த் தொடர்பான ஐந்து இயல்களிலும் வீரர்கள் நிகழ்த்தும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவற்றை நேரடி வாழ்க்கையில் கண்ட காட்சிகளின் வாயிலாகவே தொல்காப்பியர் பெற்றார் என்று கொண்டாலும், அவை சம்பவங்கள்தானே ஒழிய நியமங்கள் அல்ல. உதாரணமாக, படை செல்லு கின்ற ஆரவாரம், நற்சொல்லை ஆராய்தல், பிறர் அறியாமல் ஒற்றறிதல், சூழ்ந்தவர் களை அழித்தல், பசுக்கூட்டத்தைக் கவர்தல், அப்போது பகைவரோடு செய்யும் சண்டை, பசுக்கூட்டத்தைத் தன் நாட்டுக்குக் கொண்டு வருதல், அதைப் பங்கிடுதல், கள்ளுண்டு மகிழ்தல் போன்றவை வெட்சித் திணைக்குரிய துறைகளாகச் சொல்லப் படுகின்றன. இவை யாவும் போரின் தொடக்கநிலையில் நிகழக்கூடிய சம்பவங்கள்.

இதுபோலவே பிற திணைகளிலுள்ள துறைகளும் போர்ச்சம்பவங்களாகவே அமைந்துள்ளன. புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களிலோ சம்பவங் கள்தான் வருணிக்கப்பெற இயலும் என்பது நாம் அறிந்ததே. இவை எதுவும் போருக்கு இலக்கணம் அல்ல.

போரின் ஐந்து நிலைகள்:

தொல்காப்பியர் ஐந்து புறத்திணைகளில போரின் ஐந்து நிலைகளைக் குறிப்பிடுகிறார். அந்த ஐந்து நிலைகளுக்கும் ஐவகைப் பூக்களை அணிந்தனர் வீரர்கள். பழங்காலத்தில் வீரர்கள் வட்டுடை என்ற தனியான உடையை அணிந்தனர் என்று தெரிந்தாலும், அவர்களுக்கெனத் தனித்தனி சீருடைகள் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால் பூக்களை வீரர்கள் அணிந்தனர் என்று கருதலாம். தொல்காப்பியர் கூறுவதன்படி, ஆநிரை கவர்தல் போரின் தொடக்கமாய் அமைந்தது. ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூ அணிந்துகொள்வர். அவர்கள் நற்குறிகண்டே தங்கள் பணியினைத் தொடங்கினர். வீரர் கள் நற்சொல் அல்லது விரிச்சி கேட்க ஊருக்குள் சென்று நோக்குவர். பின் உளவு பார்ப்பர். ஆநிரைகளைக் கவர்வதைத் தடுப்பவர்களுடன் போர் தொடுப்பர். பின் வெற்றிக்குரிய தெய்வமான கொற்றவையை வணங்கி உண்டு கள் குடித்துக் கொண்டாடுவர்.

ஆநிரைகள் அக்காலச் செல்வ இருப்பு. அதனால்தான் மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருள் எழுந்தது. பெற்றம் (கால்நடைக்கூட்டம்) என்ற சொல் செல்வத்தைப் பெறுதல் என்ற சொல்லின் அடிப்படையாக அமைந்தது. எனவே ஆநிரைகவர்தல் என்பது இன்னொருவனுடைய செல்வத்தைத் திருடும் செயலே ஆகும். பசுக்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கைவிட, எதிரியின் பசுக்கூட்டமாகிய செல்வத்தைக் கொள்ளையடித்தலே ஆநிரை கவர்தலின் நோக்கமாக இருந்தது. இது எதிரி அரசனுக்கு இந்த அரசன் படையெடுப்பதைக் குறிக்கும் சூசகமாகவும் அமைந்திருக்கலாம். ஆனால் அரசனுக்காக அன்றி, தனிமனித நிலையிலும் ஆநிரை கவர்தல் (கால்நடைத் திருட்டு) நடைபெற்றதைப் பிற்கால நூல்கள் காட்டுகின்றன.

களவு மேற்கொள்ளுதல் (ஆநிரை கவர்தல்) வெட்சி என்றால் அதற்கான அற அடிப்படை என்ன? அரசன் படையெடுக்கப்போகிறான், அதனால் அதற்கு முன் னோடியாக ஆநிரைகளை இன்னொரு நாட்டிற்குள் புகுந்து திருடுகிறான் என்பது அறவொழுக்கத்தின் பாற்பட்டதாகுமா?

தொல்காப்பியமோ சங்க இலக்கியங்களோ போர்ச்சம்பவங்களுக்கு அடிப்ப டையான விதிகளையும் கூறியிருக்கலாம். சான்றாக, வெட்சித்திணை என்பது வேற்றுப்புல அரசனின் ஆநிரை கவர்தல் பற்றியது என்பது புலனாகிறதே அன்றி, எந்தச் சந்தர்ப்பத்தில் அதை மேற்கொள்ளவேண்டும், எந்த விதிகளைப் பின்பற்றி வெட்சிப்படைகள் செல்ல வேண்டும், ஆநிரை மேய்ப்பவர்களை அவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் விதிகள் இல்லை. சேர சோழ பாண்டிய அரசுகள் தோன்றுவதற்குமுன்பு, அக்கால அரசுகள் சிற்றரசுகள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு சிற்றரசின் சுற்றளவு நூறுமைல் வரை இருக்கலாம். குறுக்கு நெடுக்காக 20-25 மைல்கள் இருக்கலாம். சில நூறு கிராமங்கள் அப்பகுதியில் இருக்கக்கூடும். அவ்வாறாயின் ஆநிரை கவர வருபவர்கள் எல்லையிலே கண்ணில் படும் ஆநிரைகளைக் கவர்வார்களா, அல்லது அரசனைத் தேடிச்சென்று அவனுக்குரிய ஆநிரைகளைக் கவர்வார்களா என்பதும் தெரியவில்லை.

ஆநிரைகளை மீட்பவர்கள் கரந்தைப்பூ அணிந்து போரிடுவது வழக்கம்.

பகைவர் நாட்டைக் கவர விரும்பும் மன்னன் வஞ்சிப்பூ அணிந்து செல்வது வழக்கம். போரின் இறுதியில் பகைவர் நாடு எரிக்கப்படும். தமக்கு அடங்கித் திறை செலுத்தாத நாட்டின்மீது மீண்டும் போர்தொடுக்கப்படும். இப்போரில் உதவு வோர்க்கு மாராயன் என்று பட்டமளிப்பது பிற்காலத்து வழக்கு. போர்க்காலத்தில் வீரர்களுக்குப் பெருஞ்சோற்று உருண்டைகள் அளிப்பது வழக்கம்.

கோட்டைப் போரில் ஈடுபடுவோர் உழிஞைப்பூ சூடிக்கொள்வர். முற்றுகைப் போர் உழிஞைப் போர் எனப்படும். முற்றுகையை முறியடிக்கும் போர் நடவடிக் கைகள் நொச்சி எனப்படும். கோட்டைக்குள் இருப்பவர் வெற்றியடைவதும் உண்டு, வெளியிலிருந்து தாக்குவோர் வெற்றியடைதலும் உண்டு. தாக்கச் செல்வோர் வெற்றி பெற்றால் அதன் அடையாளமாக மண்ணுமங்கலம் (வெற்றி நீராட்டு) நடைபெறும்.

கோட்டைக்கு அப்பால் வெட்ட வெளியில் இருபெருவேந்தரும் போர்புரிவது தும்பைப்போர் ஆகும். போரிடுவோர் தும்பைப் பூ சூடிக்கொள்வர். இப்போரில் தான் நால்வகைப் படைகளும் பயன்படுத்தப்படும்.

போரில் வெற்றிபெற்றோர் வாகைப் பூ சூடுவர். யானைமீதிருந்த வேந்தனைக் கொன்ற மற்றொரு வேந்தன் தன் வாள்வீரர் சூழ ஆரவாரம் செய்தல் ஒள்வாள் அமலை எனப்பட்டது. இவை யாவும் தொல்காப்பியத்தினால் தெரியவரும் செய்தி கள். சேவியர் தனிநாயகம் அடிகள், இவை யாவும் பழங்காலச் சமூகத்தின் எச்சங்க ளாகவும் நினைவுகளாகவும் இருந்து எழுதப்பட்டவையே அன்றி, உண்மையில் சங்க காலத்தில் நிகழ்ந்தவை அல்ல என்கிறார். அகத்திணையைப் படைக்கக் கவிதை மரபுகள் வகுக்கப்பட்டது போல, புறத்திணையைப் படைக்கத் தொல்காப்பியர் வகுத்த கவிதை மரபுகள் இவை என்று நாம் முடிவுசெய்யலாம்.

போர் விதிகள்:

சமஸ்கிருதத்தில் கவுடலீயம் என்ற அரசியல் நூல் இருப்பதுபோலத் தமிழில் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே ஓர் அரசன் எப்படிப் படைகளை நிர்வாகம் செய்ய வேண்டும், அதற்கு எவ்வளவு பொருள் செலவிடவேண்டும், போர்க்களத்தில் பயன்படுத்த வேண்டிய நியமங்கள் என்ன என்பனவற்றை யெல் லாம் தமிழில் நேரடியாக அறிய வழியில்லை. கிடைக்கும் சில இலக்கியக் குறிப்புகளை வைத்து யூகிக்கவேண்டிய நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். போருக்கு இலக்கணம் கூறும் புறநானூற்றுப பாக்களிலும் பார்ப்பனர்களுக்கு ஆதர வான கூற்றுகளே இடம்பெறுகின்றன. பசுக்களைக் கொல்லக் கூடாது, பசுப்போன்ற பார்ப்பனரைக் கொல்லக் கூடாது, புதல்வரைப் பெறாதவர்களைக் கொல்லக் கூடாது போன்ற விதிகள் சொல்லப்பட்டுள்ளன.

“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும் பிணியுடையீரும், பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்,

எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என

அறத்தாறு நுவலும் பூட்கை”

என்று பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய புறநானூறு 9ஆம் பாட்டினால் அக்காலப் போர்களில் எவ்வாறு அறப்போர் என்ற கருத்து செயல் வடிவம் பெற்றது, எவரையெல்லாம் கொல்லக்கூடாது என்று கருதினார்கள் என்னும் விளக்கம் தென்படுகிறது.

புதல்வரைப் பெறாதவரைக் கொல்லக்கூடாது என்ற விதி இருப்பதைப்போல புதல்வியை (மகளை)ப் பெறாதவர்களைக் கொல்லக்கூடாது என்ற விதி இல்லை. ஏனென்றால் ‘புத்’ என்ற நரகத்தை அடையாமல் ஆன்மாவைக் காப்பாற்றக் கூடியவன் மகன் மட்டுமே. மகள் அல்ல. இவ்வாறு பார்ப்பன ஒழுக்கங்களே புறநானூற்றில் விதிகளாகச் சொல்லப்படுகின்றன. பெண்களைக் கொன்றுவிட்டால் சந்ததி அற்றுப் போய்விடும், பிறகு போரிடுவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதால் பெண்கள் போரில் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.

-தொடரும்

http://www.poornachandran.com/சங்ககாலப்-போர்முறைகளும-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும்- பகுதி 2

sangakaala-pormurai1.jpg

சங்ககாலத்தில் போருக்கெனச் சில ஒழுங்குமுறைகள்-பார்ப்பனச் சார்பானவையாக இருப்பினும்-இருந்தன என்பதைத்தான் மேற்கண்ட அடிகளில் வரும் அறத்தாறு நுவலும் பூட்கை என்ற தொடர் காட்டுகின்றது. பழங்காலத்தில் நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி முதலியன கொண்டு போரிடும் முறையே இருந்தது. எந்தச் சமூகத்திலும்-மிகப் பழமையான குடிகள் உட்பட-சண்டைக்கெனச் சில விதிகள் இருக்கவே செய்யும். சான்றாக நேருக்குநேர் ஆட்கள் போரிடும் பழங்கால முறையில், எந்த நாட்டிலும் முதுகில் தாக்குவது ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை.

புறமுதுகிட்டு ஓடும் எதிரியையும் ஆடைகழன்ற நிலையில் நின்றோரையும் மேய்ச்சல் நிலத்தில் வீழ்ந்தோரையும் நீரில் பாய்ந்தோரையும் படைக்கலமின்றி நிர்க் கதியாய் நிற்போரையும் தாக்குதல் கூடாது என்பவை பொதுவான அக்கால விதிகள் என்று கூறலாம்.

சங்ககாலச் சமுதாயம்:

புறநானூறு, பதிற்றுப்பத்தின் வழி காணுகின்ற சங்கச் சமுதாயம், மாறிவந்த ஓர் அமைப்பு. சங்ககாலத்தின் தொடக்கப்பகுதியில் வேள் பாரி, வல்வில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி, அதியமான் போன்ற சிற்றரசர்களும் பண்ணன் போன்ற ஊர்த்தலைவர்களும் மிகுதியாக இருந்தனர். ஆனால் கொஞ்சம்கொஞ்ச மாக இவர்களை அழித்துச் சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர் செல்வாக்குப் பெற்றனர். இந்த மாற்றத்தைச் சங்கப்பாக்கள் தெளிவாகக் காட்டுகின்றன. மூவேந்தர்களும், சிற்றரசர்களுடன் போரிட்டது நாட்டைக் கொள் ளை கொள்வதற்காக என்றால், சிற்றரசர்கள், தங்களுக்குள் அப்பெரு வேந்தர்களின் (ஆதரவு வேண்டி) சார்பாகப் போரிட்டனர்.

sangakaala-pormurai2.jpg

புறநானூற்றில் சில பாக்கள் மூவேந்தர்கள் பிற சிறுவேந்தரை ஆக்கிரமித் ததைக் கூறுகின்றன. ஆக்கிரமிப்பவர்கள் சார்பாகவே விதிகள் வகுக்கப்படுவதும், வரலாறு எழுதப்படுவதும் காலங்காலமாக நாம் காணும் உண்மை. எனவே ஆக்கிர மிப்பவர்கள் சார்பாக,

“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை”

என்று கொள்கையே வகுக்கிறார் இடைக்குன்றூர் கிழார். இது நெடுஞ்செழியன் என்ற பெரும் வேந்தனுக்கெனப் பாடப்பட்ட புறம் 76ஆம் பாட்டு. அதாவது உலகில் இயற்கையாகவே ஒருவனோடு ஒருவன் போரிடுவதும் ஒருவனை ஒருவன் கொல்லு தலும் நடைபெற்று வருகிறது என்பது பொருள். போரில் பிறரை அழிப்பவர்களுக்கு மிகச் சாதகமான பாட்டு இது. பாதிக்கப்பட்ட தலைவன் ஒருவனின் சார்பாகப் பாடியிருந்தால், ‘கொல்லாமையே இவ்வுலகத்து இயற்கை’ என்று பாடியிருந்தாலும் இருப்பார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தோல்வியுற்றவர்களுக்கு யாரும் ஆதரவு இல்லை என்பது உண்மை.

வீரத்தின் பெருமிதமும் வாழ்க்கைமதிப்புகளும்:

சங்க கால அரசர்கள், போரினால் பெற்ற வெற்றிகளைத் தங்கள் பெயருடன் இணைத்து-தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பது போலப் பெருமைப்பட்டுக்கொண்டனர். போரில் இறந்தாலும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், கூடகாரத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டதனால் அவர்களது வெற்றிப் பெருமிதம் புலனாகிறது.

கரிகால் வளவன் போரில் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருந்தான். முதுகில் எவ்வாறோ புண்பட்டதை எண்ணி இரும்பொறை வடக்கிருந்து உயிர்நீக்க முடிவுசெய்தான். அதனால் “மிகப்புகழ் உலகம் எய்தப் புறப்புண் நாணி வடக்கிருந்த சேர மன்னன்” என வெண்ணிக் குயத்தியாரால் குறிக்கப்படுகிறான். கரிகால் வளவனைப் பாடும் வெண்ணிக் குயத்தியார், அவன் நின்னினும் ‘நல்லன் அன்றே’ என்று பாடுவதைப் புறநானூறு 66 காட்டுகிறது. “முதுகில் காயம்படச் செய்த உன்னைவிட, அதற்கு வெட்கப்பட்டுப் பட்டினிகிடந்து புகழ் உலகம் அடைய முயலும் அவன் அல்லவா நல்லவன்” என்ற கருத்து இப்பாட்டில் இடம்பெறுகிறது.

போருக்குப் புறப்படும் அரசர்களும் வீரர்களும் வஞ்சினம் உரைப்பதைக் காண்கிறோம். போர்க்களத்தில் ஒரு குறித்த சாதனையைச் செய்யாவிட்டால் இன் னின்னவன் ஆகுக என்று மன்னர்கள் வஞ்சினம் உரைப்பது வழக்கம். புறநானூற்றில் மூன்று அரசர்கள் (பூதப் பாண்டியன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி) இவ்வாறு வஞ்சினம் உரைத்துள்ளனர். சான்றாக, நெடுஞ்செழியன், “நான் பகையரசர்களைத் தாக்கி வென்று, அவர்கள் முரசத்தைக் கைப்பற்றவில்லை என்றால், என் குடிமக்கள் என்னைக் கொடியவன் என்று தூற்றுவார்களாக, மாங்குடி மருதன் முதலிய புலவர்கள் என்னைப் பாடாமல் விடுவார்களாக, நான் இரப்போர்க்கு இல்லை என்று கூறுவேன் ஆகுக” என்று கூறுவது, அக்கால அரசர்கள் எவ்வித மதிப்பு களைத் தலையானவையாகக் கருதினார்கள் என்பதைக் காட்டுகிறது.

இவற்றை வீரயுகத்திற்குரிய மதிப்புகள் என்று கணித்து இவை போன்றவை முதன்மை பெற்றுக் காணப்படுவதால் சங்க இலக்கியத்தில் சில புறநானூற்றுப் பாக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி. யு. போப் அவற்றிற்கு Tamil Heroic Poems என்ற பெயர் தந்தார். இதற்கு ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்குப் பின்னால் சங்க இலக்கியத்தை ஆராய்ச்சி செய்த கைலாசபதியும் Tamil Heroic Poems என்னும் தலைப்பில்தான் ஆய்வு செய்திருக்கிறார். அதன்பின் மிகச் சிறப்பான முறையில் சங்கஇலக்கியத்தை மொழிபெயர்த்த ஏ.கே. இராமானுஜன் அதற்குக் கொடுத்த பெயர் Poems of Love and War. இவையெல்லாம் சங்க இலக்கியப் புறப்பாக்களில் காணப்படும் வீரத்தன்மையை வலியுறுத்துவனவாக உள்ளன,

பழங்காலத்தில் போரினால் பரத்தையர் என்ற தனிஇனமே உருவாயிற்று. சங்க இலக்கியங்கள் மருதத்திணை என்ற பெயரில் பரத்தையர் தொடர்பை நியாயப் படுத்துகின்றன.

படைப்பிரிவுகள்:

sangakaala-pormurai3.jpg

அரசனுக்கு இருக்கவேண்டிய அங்கங்கள் ஆறினுள் முதலாவதாகக் கூறப் படுவது படை. பிற ஐந்து-குடிமை, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை. எனவே தமிழக மன்னர் யாவரும் படை வைத்திருந்தனர் என்பதை உணரலாம். யானை குதிரை தேர் காலாள் என்னும் நால்வகைப்படைகளோடு கப்பற்படையும் இருந்தது. சங்ககாலத்திலிருந்தே இந்தியாவில் தமிழ் மக்கள் மட்டுமே கப்பற்படை வைத்திருந்தனர்.

யானைப்படை மிக இன்றியமையாத ஒன்று. ஆனால் முன்னணிப்படையில் பயன்படுவதில்லை. பின்னால் சென்று எதிரிகளைப் பெரிய எண்ணிக்கையில் அழிக்கவும், அரண்களை உடைக்கவும் யானைகளே உதவும். அரசனும் முதன்மையான படைத் தலைவர்களும் யானைமீது சென்றனர். எண்பேராயத்தின் உறுப்பினர்களில் ஒருவர் யானை வீரர். இவரை யானைப்படைத் தலைவர் எனக்கருதமுடியும். யானைகளுக்கு மதுவூட்டி வெறியேற்றி அழைத்துச் சென்றனர். வலிமை மிக்க கோட்டை வாயில்களைத் தாக்கி உடைப்பதற்கு யானைகளைப் பயன்படுத்தினர்.

குதிரைப்படை விரைந்து தாக்குவதற்குரியது. எனவே முன்னணிப்போரில் அதன் பயன் மிகப் பெரிது. எண்பேராயத்தின் உறுப்பினர்களில் இன்னொருவர் இவுளிமறவர். இவரைக் குதிரைப்படைத் தலைவர் எனக் கருதலாம். போருக்கான குதிரைகள் எப்போதுமே அரபு நாட்டிலிருந்துதான் நம் நாட்டிற்கு இறக்குமதியாயின. பாண்டிய அரசன் 4000 குதிரை வீரர்களை வைத்திருந்ததாக மெகஸ்தனிஸ் (கி.மு.4ஆம் நூற்றாண்டு) கூறுகின்றார். ஆனால் அக்காலத்தில் குதிரைகளுக்கு இலாடம் அடித்துப் பயன்படுத்தாமையால் ஏராளமான குதிரைகள் விரைவில் இறந்துவிட்டன என்றும் தமிழர்களுக்குக் குதிரைகளைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றும் வாசப் கூறுகிறார்.

தேர்ப்படையும் பழங்கால மன்னர்களுக்கு உண்டு. உருவப் பஃறேர் இளஞ் சேட் சென்னி என்ற சோழன் பல அழகிய தேர்களை உடையவன் என்று அவன் பெயரிலிருந்தே தெரிகிறது. அக்காலத்தில் தேர்செய்யும் தச்சர்கள் சிறப்பாக மன்ன னால் பணியமர்த்தப் பட்டிருந்தனர். தேர்கள் குதிரைகளால் இழுக்கப்பட்டன.

காலாட்படையில் மறவர், எயினர், வேடர், மழவர், மள்ளர், பரதவர், மலையர், ஒளியர், கோசர் போன்ற பல இன வீரர்கள் இருந்தனர். யவனர்களும் படைவீரர்களாகப் பணியாற்றினர். மழவர்கள் அடிக்கின்ற கோலுக்கு அஞ்சாது மேன்மேலும் சீறிவருகின்ற நாகம் போல அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் என்று இலக்கியங்கள் சிறப்பிக்கின்றன. முன்னணிப்படைப் பிரிவு தூசிப்படை எனப்பட் டது. இறுதியாக வரும் படை கூழை எனப்பட்டது.

கடல் வாணிகத்திற்குப் பாதுகாப்பளிக்கவும், கடற் கொள்ளைக்காரர்களை அழிக்கவும் கப்பற்படை பயன்பட்டது. கரிகாலன் இலங்கைமீது படையெடுத்துச் சென்று கைதிகளைப் பிடித்துவந்ததற்குக் காரணம், அவனிடம் வலிமைமிக்க கப்பற் படை இருந்தமையே. கடல் அரண் அமைத்து கடற்கொள்ளையில் ஈடுபட்ட கடம்பர் களை ஒழித்துக் ‘கடல்பிறக்கோட்டிய’ என்னும் சிறப்புப்பெற்றான் சேரஅரசன் செங்குட்டுவன்.

sangakaala-pormurai6.jpg

வேல், வாள், வில், அம்பு, கோல் ஆகியவை சங்ககாலப் படைக்கலங்கள். வேலும் வாளும் எஃகினால் செய்யப்பட்டதால் எஃகம் எனப்பட்டன. வேல்வடித்துத் தருவதற்கெனக் கொல்லர்கள் இருந்தனர். வாள் தகுந்த உறைகளில் இடப்பட் டிருந்தது. மன்னனின் வாள் நுண்ணிய அழகிய வேலைப்பாடுகளையும் விலை யுயர்ந்த கற்களையும் உடையதாயிருந்தது. அம்பு அறாத் தூணியில் அம்புகள் வைக் கப்பட்டிருந்தன. சுற்றி எறியவல்ல கனமான திகிரி (சக்கரம்), கவண் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.

கொல்லிமலைத் தலைவன் ஓரி, அம்பு எய்வதில் வல்லவனாதலின் வல்வில் ஓரி எனப்பட்டான். பலவேல்களை ஒருங்கே வீசுவதில் வல்லவனாதலின் பெரு விறற்கிள்ளி என்ற சோழ அரசன் பல்வேல் தடக்கை என்ற சிறப்புப் பெற்றிருந்தான்.

மேற்கூறப்பட்ட ஆயுதங்களைச் சமாளிக்கத்தக்க கேடயங்கள் இருந்தன. அவை இரும்பினாலும் தோலினாலும் செய்யப்பட்டன. உடலில் போர்த்திக் கொள் ளும் கவசமும் இருந்தது.

போர் நடவடிக்கைகள்:

போரைத் தொடங்குவதெனத் தீர்மானித்தவுடன் படைக்கான போர்வீரர் களைத் திரட்டுவதற்குத் தூதுவர்களை அனுப்புவது வழக்கம் ஆகலாம். சிலப்பதிகாரம் முதலிய பிற்கால இலக்கியங்கள் இதனைக் குறிப்பிடுகின்றன. மறவர், எயினர், மழவர் போன்றவர்கள் போரில் சேர்ந்தனர். படை புறப்படுவதற்கு முன் நன்னிமித்தங்கள் பார்க்கப்பட்டன. படை புறப்படுவதற்கு முன்னர் நல்ல நாளில் வாளைப் புனித நீராட்டி குடை முரசு ஆகியவற்றுடன் அணிவகுப்பு நடத்தினர். இதனை நாட்கோள் என அழைத்தனர். மன்னர்கள் தங்கள் மரபிற்குரிய மாலை களைச் சூடினர். மன்னனின் வெண்கொற்றக் குடையும், கொடியும், முரசும் முன் கொண்டுசெல்லப்பட்டன. கொற்றவைபோன்ற போர்க்கடவுளரின் அருளை வேண் டினர். முரசுகள் ஒலித்தன.

பாசறை:

போர்க்களத்தில் போர் நடைபெறாத சமயத்தில் போர்வீரர்களும் மன்னனும் தங்கியிருக்கும் இடம் பாசறை எனப்பட்டது. பாடிவீடு என்று சொல்வர். பாசறை யில் தங்கியிருக்கும் மன்னனுக்குப் பணிபுரியப் பெண்கள் இருந்தனர். சட்டை அணிந்த யவனர்கள் மெய்க்காவலர்களாக இருந்தனர். மொழி தெரியாதவர்களை மெய்க்காவலராகக் கொள்வது பாதுகாப்பு என்று அக்காலத்தில் கருதியிருக்கலாம்.

நேரத்தை அறிவிக்கும் நாழிகைக்கணக்கர் இருந்தனர். அரசன் காயம்பட்ட வீரர்களைக் கண்டு ஆறுதல் உரைப்பதும் வழக்காக இருந்தது. அரசன் பாசறையைப் பார்வையிடும்போது படையின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் வீரர்கள் புண்பட் டோர்களைக் காட்டி விளக்கம் தருவது வழக்கமாக இருந்தது.

கோட்டை:

sangakaala-pormurai4.jpg

தலைநகரங்களைச் சுற்றிக் கோட்டைகட்டிப் பாதுகாப்பது அக்கால வழக்கம், கோட்டைச் சுவர்கள் உயரமாக இருந்தன. அவை செங்கற்களால் கட்டப்பட்டு மண்ணால் பூசப்பட்டன. கோட்டையைச் சுற்றி அகழிகள் உண்டு. அகழிகளைச் சுற்றிலும் காவற்காடு என்ற சிறிய காட்டைச் சிலமைல் தொலைவுக்குப் பாதுகாப் புக்கென அக்காலத்தில் அமைத்தனர்.

கோட்டை முற்றுகைப் போர் அக்காலப் போர்முறைகளில் ஒன்று. கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு எவ்வித உணவுப் பொருளும் செல்லாமல் அவர்களைப் பட்டினிபோட்டுப் பணிய வைக்க முயற்சிசெய்வர். இக்காலப்போர்களில் இவ்வாறு செய்வது இயலாது என்பதை அறிவோம். நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையிலிருந்த போது நலங்கிள்ளி அக்கோட்டையை முற்றுகையிட்டமை தெரிகிறது. பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டபோதும் பட்டினிபோட்டுப் பணியவைக்க இயலவில்லை. வஞ்சகத்தால்தான் பாரி கொல்லப்பட இயன்றது.

ஆகவே பேரரசர்கள் உருவானபோதே வஞ்சகத்தினால் செய்யும் போர்முறையும் வந்துவிட்டது என்று கருதலாம்.

போர்ப்பண்புகள்:

sangakaala-pormurai5.jpg

நாட்டிற்காகப் போரிட்டு இறப்பது உயரிய பண்பு எனக் கருதப்பட்டது. இதனை இன்றுவரை நமது கவிதைகள் முதற்கொண்டு திரைப்படம் வரை வலியுறுத்தி வருகின்றன. போரில் புறமுதுகிடுவதும் முதுகில் புண்படுவதும் இழுக்கு எனக் கருதப்பட்டது. போரில் இறந்துபட்ட வீரர்களின் பெயரால் அவர்தம் உறவினர்களுக்கு ஊர்கள் பரிசளிக்கப்பட்டன. போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நடுவது வழக்கம். அக்கல்லில் அவ்வீரனைப் பற்றிய குறிப்புகள் பொறிக்கப்பட்டன.

போரில்பட்ட காயங்களை விழுப்புண்கள் எனப் போற்றினர். போரில் காயமுற்றோரைப் பேண மனைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு அடையாளமாக அங்கு வேப்பந்தழைகள் செருகப்பட்டிருக்கும். அவர்களுக்கு மருந்து அளிக்கப்பட்டதோடு மனச்சோர்வு நீக்க இசையும் இசைக்கப்பட்டது.

போரில் பகையரசர்களின் அரசுச் சின்னங்களான முரசு, குடை ஆகியவற்றைக் கவர்தல், காவல் மரத்தை வெட்டிவீழ்த்தல் போன்றவை நிகழும். நெடுஞ்சேரலாதன் கடம்பர்களின் காவல்மரத்தை வெட்டிவீழ்த்திய வீரச்செயல் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளது.

-தொடரும்

http://www.poornachandran.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும்- பகுதி 3

ஊதியம்:

சங்ககால மன்னர்கள் பெரிய அளவில் நிலையான படைகளை வைத்திருந்தார்களா என்பது தெரியவில்லை. எனவே போர்வீரர்களின் ஊதியம் பற்றியும் குறிப்புகள் இல்லை. போர் தொடங்குவதற்கு முன் அரசன் படைவீரர்களுக்கு வெகுமதிகள் அளிப்பதும் சிறப்பான விருந்தளிப்பதும் இயல்பு. மன்னனே அவர்களுக்குப் போர்ப்பூவைச் சூட்டுவதும் மரபு. போர்த் தொடக்கத்தின்போது கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் இறுதியில் வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. பகைப்புலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்திலும் பங்களிக்கப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பொற்பூக்கள் வழங்கப்பட்டன. இறையிலி நிலங்களும் வழங்கப் பட்டன.

போரின் நோக்கம்: கொள்ளையிடுதல்

பரஸ்பரம் போட்டி, பொறாமை, ஆதிக்க விரிவாக்கம், பிறர்நாட்டு ஆக்கிரமிப்பு, புகழ் எய்துதல் ஆகிய பல காரணங்களால் பண்டைத் தமிழ் மன்னர்கள் இடைவிடாமல் போர் புரிந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் கூர்ந்து நோக்கும்போது இன்னும் தெளிவாகப் போருக்கான காரணத்தை வரையறுக்க முடிகிறது.

1853இல் கார்ல் மார்க்ஸ் பண்டைய இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி எழுதிய கூற்று இது:

“பண்டைக்காலத்திலிருந்து ஆசியாவில் (ஆசியாவில் என்று மார்க்ஸ்

குறிப்பிடுவது இந்தியாவைத்தான்) மூன்று அரசாங்கத் துறைகள்

இருந்துவந்திருக்கின்றன. ஒன்று நிதித் துறை, அதாவது உள்நாட்டுக்

கொள்ளை. இரண்டு போர், அதாவது வெளிநாட்டுக் கொள்ளை.

மூன்றாவது பொதுப்பணித் துறை. பாசனவசதிகள் முதலியவற்றை

அமைத்துத் தருதல்… இந்தியாவின் கடந்த காலத்தின் அரசியல் தோற்

றங்கள் மாறியிருப்பதாகத் தோன்றினாலும் அதன் சமூக நிலைமை

மிகப்பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல்

பத்தாண்டு வரை மாறாமலே இருந்துவந்துள்ளது”.

போர் என்பதை வெளிநாட்டுக் கொள்ளை என்றே கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. கோப்பெருஞ்சிங்கனும் இரண்டாம் ராஜராஜனும் போரிடும் சிறிய சண்டையானாலும், அணுகுண்டினால் இருபெரு நகரங்களையே அழித்து இறுதிகண்ட உலகப் போரானாலும், அடிப்படை நோக்கம் பொருளாதாரம் தான் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இந்தப் பொது மானிடநிலைக்குத் தமிழகத்தின் நிலையும் வேறாக இருந்திருக்க இயலாது.

பகைவீரர்களைக் கைப்பற்றல்:

பகைவீரர்களைக் கைப்பற்றிப் போர்க்கைதிகளாகப் பழங்காலத்தில் வைத்திருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, அவர்களைத் தம் நாட்டுக்கு அழைத்துவந்து பல்வித வேலைகளுக்காகக் குடியமர்த்தியிருக்கிறார்கள். அசோகன் கலிங்கத்துப் போரில் ஒன்றரை லட்சம் போர் வீரர்களை அடிமையாக்கிக் கொணர்ந்தான் என்று அவனுடைய சாசனங்கள் குறிப்பிடுகின்றன. தரிசு நிலங்களில் விவசாயத்திற்கென அவர்கள் குடியேற்றப்பட்டனர் என்று நாம் யூகிக்கலாம் என்று ரொமிலா தாப்பர் குறிப்பிடுகின்றார். (வரலாறும் வக்கிரங்களும், ப.51. தமிழில் நா. வானமாமலை. அலைகள் வெளியீடு, சென்னை). இதேபோல் கரிகால் சோழனும் இலங்கைமீது படையெடுத்துப் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டு வந்து காவிரிக்குக் கரைகட்டினான் என்று சங்க இலக்கியத்தின் வாயிலாக அறியமுடிகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தோற்றுப்போன யவனவீரர்களைப் பின்கட்டாகக் கட்டி தலையில் எண்ணெய் ஊற்றி அழைத்துவந்தான் என்ற குறிப்பு வருகிறது. இவ்வாறே பகைமன்னர்களின் அந்தப்புரப் பெண்களைக் கைப்பற்றி ஏவல் மகளிராக ஆக்கிக்கொள்வதும் வழக்கம். இவர்கள் கொண்டிமகளிர் எனப் பட்டனர்.

போர் நடந்தது பகலிலா, இரவிலா?:

“எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்

ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை ஆகலின்”

என்று கரிகாற்சோழனைக் கருங்குழலாதனார் பாடுகின்றார் (புறநானூறு 7). இந்த அடிகளில் இரண்டு செய்திகள் தெளிவாகின்றன. ஒன்று, மேலே கார்ல் மார்க்ஸ் கூறியதுபோல, போர் என்பது வெளிநாட்டுக் கொள்ளை என்ற விஷயம். (உள்நாட்டுக் கொள்ளைதான் நேர்முக, மறைமுக வரிவிதிப்பு.) இன்னொன்று, ‘எல்லையும் இரவும் எண்ணாய்’ என்பதனால் வெளிப்படுகிறது. அதாவது போருக்கு இரவோ பகலோ, அதைப்பற்றிக் கவலையில்லை என்பது. இரவிலும் போர் நடைபெற்றதை இந்தப் பாடலின் வாயிலாக அறியமுடிகிறது.

“எல்லுப்படவிட்ட சுடுதீ விளக்கம்

செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்

புலம்கெட இறுக்கும் வரம்பில் தானை” (புறம் 16)

என்ற பாண்டரங்கண்ணனார் பாட்டிலும் இரவிலும் அக்காலப் போர்கள் நடந்தன என்பதை அறியமுடிகிறது. சில அறிஞர்கள் ஆநிரைப்போர் மட்டுமே இரவில் நடைபெறும், பிற போர்நிகழ்வுகள் யாவும் பகலிலேயே நடைபெறும் என்று கூறியுள்ளனர். மேற்கண்ட புறநானூற்று அடிகள் அக்கருத்தை மறுக்கின்றன.

போரில் ஈடுபடும் சிறுவர்கள்:

உலகமுழுவதும் இன்று சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பலசமயங்களில் அவர்கள் கடத்தப்பட்டும் கட்டாயமாகப் படைகளில் சேர்க்கப்படுகின்றனர். பழங்காலத்தில் சிறார்கள் இப்படி கடத்தப்பட்டுப் படைகளில் சேர்க்கப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை. என்றாலும், சிறுவர்களும் போரில் ஊக்கத்துடன் அக்காலச் சமூகத்தினால் ஈடுபடுத்தப்பட்டதை இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. சான்றாக,

“இரு தினங்களுக்கு முன் தன் தந்தையைப் பறிகொடுத்த ஒரு பெண் முந்திய

தினத்தில் கணவனைப் பறிகொடுத்தாள். இன்று போர்ப்பறை கேட்டதும்

அவள் தன் ஒரே மகனை, இளஞ்சிறுவனைக் கையில் வேல்தந்து போருக்கு

அனுப்பிவைத்தாள்”

என்றசெய்தி புறநானூற்றில் வருகிறது.

“போரில் என் மகனுக்கு முதுகில் காயம் பட்டிருந்தால் அவனுக்குப்

பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன்”

என்று சூளுரைத்தாள் ஒரு பெண். தன் மகன் மார்பில் காயம் பட்டு மாண்டு கிடப் பதைக் கண்ட பெண் ஒருத்தி அவனைப் பெற்ற நாளில் உற்ற மகிழ்ச்சியைவிட அதிகமான உவகை கொண்டாள் என்றும் சங்க இலக்கியக் கவிதை சொல்கிறது. இன்னொரு தாய் சொல்கிறாள்:

sangakaalappor5.jpg

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டுளனோ என வினவுதி என்மகன்

யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலிசேர்ந்து போகிய கல்லளைபோல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன்மாதோ போர்க்களத்தானே.

“என் மகன் எங்கிருக்கிறான் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவன் போர்க்களத்தில்தான் நிச்சயமாக இருப்பான்” என்கிறாள். இவையனைத்தும் அக்காலத்தில் சிறுவர்கள் போரில் ஈடுபட்ட அல்லது ஈடுபடுத்தப்பட்ட செய்தியைத் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள், கட்டாயமாகப் போர்புரிய அனுப்பப்பட்டிருந்தால் போரைவிட்டு ஓடி வந்துவிடுவதும் நிகழ்ந்திருக்கக்கூடும்.

“ஆய்பெரும் சிறப்பின் சிறுவன் பெயரத்

தாய்தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்”

என்ற தொல்காப்பியத் தொடருக்கு “போர்க்களத்தில் சிறுவன் புறமுதுகிட்டான் எனக் கேட்டுத் தாய் வருந்தி வரும் தலைப்பெயல்நிலைக் காஞ்சியும்” என்று உரையாசிரியர்கள் பொருள் தருகின்றனர்.

மன்னர்களே சிறுவயது முதலாகப் போரில் ஈடுபட்டனர் என்று சங்கப் பாக்கள் குறிப்பிடுகின்றன. சான்றாக, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறுபிள்ளையாக இருந்தபோதே போர்செய்தவன் என்று புறநானூறு 77 குறிப்பிடுகிறது. “இவ்வளவு இளஞ்சிறுவனாக இருக்கும்போதே மிக்க வீரத்தோடு போர் செய்கின்றானே யார் இவன்?” என்று கேட்கும் புலவர் இடைக்குன்றூர் கிழார்,

“தார்பூண்டு தாலி களைந்தன்றும் இலனே,

பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே”

என்று கூறுவதை மிகையான கூற்று என்று வைத்துக் கொண்டாலும், பாண்டியன் சிறுவனாகவே இருந்ததை இப்பாட்டு அழுத்தமாகக் குறிப்பிடுகிறது என்று கருதலாம். மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பார்கள். அரசனே சிறுவயது முதல் போரிட்டான் என்றால், குடிமக்களும் அவ்வாறே இருக்க முனைந்ததில் ஆச்சரியமில்லை.

போர்க்குற்றங்கள்:

sangakaalappor4.jpg

மிகப்பெரிய போர்க்குற்றங்களுக்கு உதாரணமாக ஜெர்மனியின் ஹிட்லர் உருவாக்கிய ஆஷ்விட்ஸ் படுகொலையையும், அண்மையில் தமிழர்களைச் சிங்கள அரசு அழித்த படுகொலையையும் கூறலாம். எதிரி நாட்டில் போரில் ஈடுபடாத சாதாரண மனிதர்களை (சிவில் சொசைட்டி) பாதிக்கும்படியாக காரியங்களைச் செய்வது போர்க் குற்றங்கள் என்பதில் பெரும்பான்மையும் அடங்கும்.

ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின்படி, போர்க் குற்றங்கள் என்பன போரின் சட்டங்கள் அல்லது மரபுகளை மீறுதல் என்று வரையறுக்கப்படுகின்றன. அவை சாதாரண மக்களைக் கொலை செய்வது, அடித்துத் துன்புறுததுவது, ஆக்கிரமித்த இடத்தில் வாழும் குடிமக்களைக் கீழ்த்தரமாக நடத்துவது, அடிமை முகாம்களுக்கு மக்களை இடம்பெயர்ப்பது போன்றவை. போர்க்கைதிகளைக் கொலைசெய்தலும் தரக்குறைவாக நடத்துதலும், பிணைக்கைதிகளைக் கொலைசெய்தல், தேவையின்றிப் பெருநகரங்களையும் ஊர்களையும் அழித்தல், பிறவகையான குற்றங்கள் எனப் பலவும் போர்க்குற்றங்களில் அடங்கும்.

தமிழக அரசர்கள் இவற்றில் குறைந்தபட்சம் இரண்டு குற்றங்களையேனும் செய்தனர் என்பது இலக்கியத்தின் வாயிலாகத் தெரிகிறது. ஒன்று, ஆக்கிரமித்த இடங்களின் அரசர்களையும், அவற்றில் வாழும் குடிமக்களையும் கீழ்த்தரமாக நடத்துதல், இன்னொன்று நகரங்களையும் ஊர்களையும் அழிததல். இந்தக் குற்றங்களை அக்காலப் புலவர்கள் கண்டிக்கவில்லை, பலர் ஆதரிக்கவே செய்தார்கள், சிலர் அதைத் தவறென உணர்ந்தாலும், ஒரு புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டனர் என்றே தோன்றுகிறது.

எதிரி நாடுகளை எரிபரந்து அழித்தல்:

தோற்ற நாட்டில் ஏர்பூட்டி உழுது அதில் எருக்கு, கொள் போன்றவற்றை விதைத்து, தன் வெற்றியைப் பறைசாற்றுவது அக்கால அரசர் வழக்கம். பதிற்றுப்பத்து-13இல், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாராட்டும் குமட்டூர்க் கண்ணனார்,

“கூற்றடூஉ நின்ற யாக்கைபோல

உள்ளுநர் பனிக்கும் காடு ஆயினவே

பூத்தன்று பெரும நீ காத்த நாடே”

என்று பாராட்டுகின்றார். அதாவது, “உன் பகைவர்களின் நாடுகள் எமன் உயிரைக் கவர வந்த மக்களின் உடல்கள் போலக் காண்பவர் நினைத்தாலும் கண்ணீர் விடக் கூடிய காடுகள் ஆயின, ஆனால் நீ காக்கும் நாடு மட்டும் பூத்து வளத்தோடு இருக் கிறது” என்பது கருத்து.

எரியூட்டி எதிரி நகரங்களை அழிப்பதும் வழக்கமாக இருந்தது.

“வாடுக இறைவ நின் கண்ணி, ஒன்னார்

நாடுசுடு கமழ்புகை எறித்தலானே”

என்று பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடுகிறார் காரிகிழார் (புறம். 6). “பிறருடைய நாட்டைச் சுடுகின்ற புகையினால் உன் மாலை வாடட்டும்” என்று பாடுவது பிறர் நாட்டை அழிப்பதைக் கவிஞர் ஏற்றுக்கொள்வதைக் காட்டுகிறது.

“நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு

இறங்குகதிர்க் கழனிநின் இளையரும் கவர்க.

நனந்தலைப் பேர் ஊர் எரியும் நைக்க

நின் நெடுவேல் ஒன்னார் செகுக்கினும் செகுக்க”

என்று பாண்டியன் நன்மாறனைக் காரிக்கண்ணனார் புறநானூறு 57இல் பாடுகிறார். “நீ பிறர் நாட்டைக் கைப்பற்றும்போது, உன் இளைஞர்கள் அவர் நாட்டுக் கழனிகளைக் கொள்ளையடிக்கட்டும். பெரிய ஊர்களைக் கொளுத் தினாலும் கொளுத்தட்டும். உன் வேலும் பகைவரைக் கொன்றாலும் கொல்லட்டும்” என்று சொல்வது போர்க் குற்றங்கள் இயற்றுவதைப் பாராட்டும் செயலே ஆகும்.

“தாய் இல் தூவாக் குழவிபோல

ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே”

என்று பரணர், இளஞ்சேட்சென்னியைப் பாராட்டுவது, (புறநானூறு 4) உள்ள நிலையை அப்படியே காட்டுகிறது.

ஒரு புன்முறுவலோடு இக்கொடுமைகளைப் புலவர்கள் ஏற்றுக்கொண்ட நிலையை நெட்டிமையார் பாட்டில் காண்கிறோம்.

பாணர் தாமரை மலையவும், புலவர்

பூநுதல் யானையடு புனைதேர் பண்ணவும்

அறனோ மற்றிது விறல்மாண் குடுமி,

இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு

இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே? (புறம் 12)

என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடும்போது, “பிறரைக் கொடுமைப்படுத்தி, உனக்கு வேண்டிய புலவர் பாணர் போன்றோருக்கு ந்னமை செய்கின்றாயே, இது நியாயமா” என்று கேட்கும் தொனியில் இதை நாம் உணர்கிறோம்.

வேறு சில போர்க்குற்றங்கள்:

தமிழ் அரசர்கள் நடத்தியபோர், நாட்டை விரிவு படுத்துவதற்காகவும், கொள்ளையடிப்பதற்காகவும் மட்டுமன்று. போர்க்கைதிகளான எதிரிமன்னர்களைத் தங்கள் முன் காலில் விழவைத்துப் பெருமிதம் அடைதலும் காரணமாக இருந்தது. போரில் தோற்ற பகைமன்னர்களைக் கைப்பற்றி அழைத்துவருவது வழக்கம். இவர்கள் கொண்டி மன்னர் எனப் பட்டனர்.

போர் எதிரிகளைக் குறிக்கும் சொல்லாகச் சங்ககாலத்தில் பயன்படும் வட்கார் என்ற சொல், வணங்காதவர்கள் அல்லது தனக்கு அடங்காதவர்கள் என்பதைக் குறிக்கும். வட்காரை (வணங்காதவர்களை) வணங்கவைப்பது சங்ககாலப் போர்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இன்றைய மதிப்புகளின் அடிப்படையில் இதுவும் தவறான செயலே. இன்னொரு நாட்டின் அரசன் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வது குற்றமா என்ன?

ஆனால், தமிழ் அரசர்களின் ஒரு நல்ல பண்பு, எக்காலத்திலும் தமிழ் அரசர்கள் போரில் வென்ற நாட்டைத் தாங்களே வைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. (அதாவது காலனியப் படுத்தவில்லை.) எதிரி அரசனைத் தோற்கடித்து அவமானப்படுத்தினாலே போதும் என்று கருதினார்கள் போலும்!

“வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின் தண்டமும் தணிதி”

என்று இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் புறநானூறு 10இல் பாடியுள்ளார். இதனால் காலில் விழுந்து இறைஞ்சினால் வேறு தண்டனை எதுவுமின்றிப் பிற அரசர்களை விட்டு விடுதல் வழக்கமாக இருந்தது என்று கருதலாம்.

பெருவேந்தர்கள் சிலர் மட்டும் எதிரி அரசர்களைக் கைப்பற்றிச் சிறையில் அடைத்ததாகத் தெரிகிறது. சான்றாகக் கணைக்கால் இரும்பொறை என்ற சேர அரசனைச் சோழன் செங்கணான் சிறையில் அடைத்திருந்தான். அச்சேர அரசன் கேட்டபோது உடனே குடிக்கும் நீர் கிடைக்கவில்லை. அதனால் அவன் நீர் குடிக்காமலே உயிர் துறந்தான் என்ற செய்தி கிடைக்கிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைச் சிறையில் அடைத்த செய்தியும் சங்க இலக்கியத்தில் வெளிப்படுகிறது.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் திருமுடிக்காரியை வென்றதுடன் நிற்காமல், அவனுடைய மக்களை யானைக்காலில் இட்டு இடற நினைத்தான். இதுவும் போர்க்குற்றமே. அச்சமயத்தில் கோவூர்கிழார் என்னும் புலவர் மலையமானின் பெருமையை எடுத்துக்கூறி, அந்த இளஞ்சிறுவர்களைக் காப்பாற்றிய செய்தியை புறநானூறு 46ஆம் பாடல் தெரிவிக்கிறது.

எதிரிநாட்டு ஒற்றர்களுக்கு மரணதண்டனை வழங்குவது அக்காலத்திய செயல். அதனால் நலங்கிள்ளியிடமிருந்து வந்த இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனக் கருதி நெடுங்கிள்ளி கொல்லப்புகுந்ததில் தவறில்லை என்றாலும், அவன் கோவூர் கிழாரின் அறிவுரையை ஏற்று அப்புலவனைக் கொல்லாமல் விட்டான் என்ற செய்தி கிடைக்கிறது.

sangakaalappor2.jpg

பிறர் நாட்டைக் கைப்பற்றாமை:

பெரிய நிலைப்படை இருந்தால்தான் இன்னொரு நாட்டைக் கைப்பற்றித் தாங்களே வைத்துக்கொள்வது (‘காலனி ஆக்குவது’) சாத்தியம். அதனால் தான் சங்ககால அரசர்கள் கொள்ளையோடு நிறுத்திக்கொண்டார்கள் என்று தோன்று கிறது. ஆனால் இதனை முடிந்த முடிபு எனக் கொள்வதற்கில்லை.

ஏனெனில், நிலைப்படை வைத்திருந்த பிற்கால மன்னர்களும் காலனி யாதிக்கத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. வஞ்சினத்திற்கென சாளுக்கிய அரசன் புலிகேசியை வென்ற மாமல்ல பல்லவனும் சாளுக்கிய நாட்டைத் தன் காலனி ஆக்கிக்கொள்ளவில்லை. வணிக நோக்கில் ஸ்ரீவிஜய அரசைக் கைப்பற்றிய இராசேந்திர சோழனும், அதனைத் தனது காலனியாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பிறர் நாட்டைக் கைப்பற்றி ஆள்வது ஒருகாலத்திலும் தமிழர்களின் இலட்சியமாக இருந்ததில்லை என்பது முன்பே கூறியதுபோல குறிப்பிடத்தக்க ஒரு தமிழர் நற்பண்பு.

தூது:

போரைத் தொடங்குமுன் பகைநாட்டு அரசனுக்குத் தூது அனுப்பும் வழக்கம் இருந்தது என்பதனை அதியமான் சார்பாக ஒளவையார் தூது சென்றதிலிருந்து அறியலாம். தூதுவர்களுக்கு இருக்கவேண்டிய சிறப்பான குணங்கள் பற்றித் திருக்குறள் குறிப்பிட்டுள்ளது. போர்செய்ய வேண்டாம் என்று எந்தப் புலவரும் எந்த அரசனுக்கும் அறிவுரை கூறியதாகத் தெரியவில்லை. அரசர்களும் எவரும் போர் வேண்டாம் என்று மறுத்ததாகவும் தெரியவில்லை.

ஆனால் சிலவகைப் போர்களைப் புலவர்கள் தடுத்துள்ளனர். புறம் 26இல் கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் பாடும்போது,

“காவுதொறும் கடிமரம் தடியும் ஓசை

தன் ஊர் நெடுமதில் வரைப்பின் கடிமனை

இயம்ப, ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு

மலைத்தனை என்பது நாணுத் தகவுடைத்தே”

என்று சொல்கின்றார். எதிரிநாட்டு அரசன் வந்து தன் காவல் மரங்களை வெட்டு கின்ற நிலையிலும் காணாதிருப்பதுபோல் பாவனை செய்யும் அரசனோடு போர் செய்வது வெட்கத்திற்குரியது என்பது கருத்து.

உள்நாட்டுப் போரா?:

நாட்டைக் காப்பாற்றுவது அரசர்களின் பணி என்பதை அரசர்களும் யாவரும் ஏற்றுக்கொண்ட போதிலும், தங்கள் எல்லைக்குட்பட்ட பாலைநிலங்களில் வாழ்ந்த, கொள்ளையடித்து வாழ்க்கை நடத்திவந்த எயினர், வேடுவர், மறவர் போன்றவர்களை அரசர்கள் கண்டித்துத் திருத்தியதாகவோ தண்டித்ததாகவோ தெரியவில்லை. மாறாக, அவர்களைத் தக்க நேரத்தில் படைகளில் சேர்த்துக் கொண்டதற்கான சான்றுகளே உள்ளன. (இவர்களை ஆங்கில அரசாங்கம், குற்றச் சாதியினர் என்று கூறி அவமரியாதை செய்தது.)

“செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்

அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் …

துன் அருங்கவலை நின் நசை வேட்கையின்

இரவலர் வருவர், … அவர்

இன்மை தீர்த்தல் வண்மையானே” (புறம் 3)

என்று இரும்பிடர்த்தலையார் கூறும்போது அவர் இரவலர்கள் வண்கண் ஆடவர் களுடைய அம்பினால் வீழ்ந்ததைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. அவர்களைத் தண்டிக்கவேண்டும் என்று அரசனிடம் வேண்டவுமில்லை. ஆனால் எப்படியேனும் அவர்களிடம் தப்பிப்பிழைத்துவந்த இரவலர்களுடைய வறுமையைத் தீர்க்க வேண்டும் என்றுமட்டும் வேண்டுகின்றார் என்பது விசித்திரமாகத் தெரிகிறது.

பொதுவாக, நீர்நிலைகளைப் பெருக்கவேண்டும் என்றும், விவசாய மக்க ளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் புலவர்கள் வேண்டியுள்ளனர். விவசாயம் இல்லாவிட்டால் போர் நடைபெற இயலாது என்பதையும் புலவர்கள் மன்னர்க ளுக்கும் எடுத்துரைத்துள்ளனர்.

“பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே,..

பகடுபுறந்தருநர் பாரம் ஓம்பிக்

குடிபுறந்தருகுவை ஆயின் நின்

அடிபுறந்தருகுவர் அடங்காதோரே”

என்று வெள்ளைக்குடி நாகனார் கிள்ளிவளவனுக்குக் கூறும் தெளிவான அறிவுரை யினால் இதனை அறியலாம்.

தனியொழுக்கமும் பொது (சமூக) ஒழுக்கமும்:

இந்திய ஒழுக்க மரபுகள் யாவுமே தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவனவாகவே உள்ளனவே அன்றி, பொது அல்லது சமூக ஒழுக்கத்தை வலியுறுத்து வனவாக இல்லை. எனவே புலவர்கள் அரசர்களுக்கு அறிவுரை கூறும்போதும் தனி மனித நிலையில் நின்று ஒழுக்கத்திற்கான அறிவுரைகள் கூறியுள்ளனரே அன்றி, பொதுவாக மக்களை பாதிக்கின்ற சமூக ஒழுக்கங்கள் பற்றி எவரும் கூறவில்லை. போர் தொடர்பான விதிகள் வரையறுத்துச் சொல்லப்படாமைக்கு நம் நாட்டின் இந்த மரபும் காரணமாகலாம்.

அக இலக்கியத்திற்கு மட்டும் அறநோக்கு வகுக்கப்பட்டமையும், புற இலக்கி யத்திற்கு அறநோக்கு வகுக்கப்படாமையும் தமிழர்களின் பண்பினை இன்றுவரை பாதித்துள்ளது. இன்றும் நாம் தனிப்பட்ட ஒழுக்கத்தை மட்டுமே மதிக்கிறோம். ஒருவன் குடிப்பதில்லை, புகைபிடிப்பதில்லை, பிறபெண்களை நோக்குவதில்லை என்பதைப் பாராட்டுகிறோம். ஆனால் அவன் லஞ்சம் வாங்குகிறானா, கொள்ளையடிக்கிறானா, பிறரது நிலங்களைக் கவர்ந்துகொள்கிறானா, தவறான வழிகளில் சொத்து சேர்க்கிறானா என்பதையெல்லாம் கவனிப்பதில்லை என்பது மட்டுமல்ல, தவறான வழிகளில் சொத்து சேர்ப்பதையும் வரிகொடுக்காமல் ஏய்ப்பதையும், பொது நலனை பாதித்தாவது கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பதையும் பாராட்டவே செய்கிறோம். சமூக ஒழுக்கம் என்பது நமக்கு (பொதுவாக இந்தியர்களுக்கும்தான்!) அறவே கிடையாது. பெரியபெரிய செயல்களைக்கூட விடுங்கள், சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதில், போக்குவரத்தில் வரிசையில் செல்வதில், கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில்…இவைபோன்றவற்றில் பொதுவிதிகளைக் கருதும் மனிதர்கள் எத்தனை பேர்?

சங்க இலக்கியமும் தனிப்பட்ட ஒழுக்கம்பேணும் மரபையும் சமூகஒழுக்கம் பேணாத் தன்மையையும் வரையறுப்பதாக அக்காலத்திலேயே அமைந்துவிட்டது.

போர் என்பது கொடிய செயல். எந்தக் காலப்போராயினும் மனிதர்களை அழித்தலும், கொள்ளையிடுதலும், மகளிர்-சிறார்-முதியோர் போன்றவர்களைத் துன்புறுத்தலும் இயல்பாக நடப்பவையே. தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்துகின்ற, தனிமனிதக் கொலையைக் கேவலமாக நினைக்கின்ற இக்காலப் பண்பட்ட சமூகங்கள், ஒட்டுமொத்தமான மனிதப் பேரழிவைப் போர் என்ற பெயரில் வரவேற்கின்றன. இக்காலத்தில் போருக்கென ஐ.நா. போன்ற அமைப்புகள் துல்லியமான விதிகளை வரையறுத்து வைத்திருந்தபோதிலும் போரில் ஈடுபடும் எந்த நாடும் அவற்றைச் சட்டைசெய்வதே இல்லை. மாறாக, பெரும் வல்லரசுகள் உலகத்தைப் பன்முறை அழிக்கக்கூடிய பலவகை ஆயுதங்களைத் தம்மிடம் வைத்துள்ளன. அக்காலப் போர்கள் தனிமனித அழிப்பில் நிறைவு கொண்டன, இக்காலப் போர்கள் வெகுஜன அழிப்பில் ஈடுபடுகின்றன என்பது ஒன்றுதான் வித்தியாசமாக உள்ளது. போரினால் ஏற்படும் நாடழிவு தொழிலழிவு முதலியவை அவ்வக்காலப் போர்க் கருவிகளுக்கேற்ப மாறுபடுகின்றன.

போரே இல்லாத சமுதாயம்தான் மிகவும் மேம்பட்ட சமுதாயம் ஆகும், மனிதன் பண்பட்டவன் என்பதைக் காட்டுவதும் ஆகும். போரினால் ஏற்படும் அழிவு ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்கெனச் செலவிடும் தொகை யினை ஆக்கபூர்வச் செயல்களுக்கெனச் செலவிட்டால் உலகில் எங்கும் வறுமையும் கல்வியறிவின்மையும் வேலையின்மையும் போன்ற கொடுமைகளே இருக்கமாட்டா என்பதனை எத்தனையோ சான்றோர்கள் எத்தனையோ விதங்களில் அறிவுறுத்தியுள்ளனர். போர்விதிகள், ஒழுங்குமுறைகள் பற்றிய ஆய்வெல்லாம் இறுதியில் போரற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கே பயன்படவேண்டும்.

http://www.poornachandran.com/சங்ககாலப்-போர்முறைகளும-2/

ஆசையும் வன்மமும் இல்லையென்றால் மனிதன் ஏது? 

 

காதலுக்கும் போருக்கும் எந்த வரைமுறைகளும் கிடையாது.   

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தேவையான பதிவு

நன்றி  கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.