Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவரை புலிகள் முழுமையாக அழிந்திருக்க வேண்டும்

Featured Replies

விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்களா?

[12 - October - 2006] [Font Size - A - A - A]

-சங்கரன் சிவலிங்கம்-

சமாதானத் திருவிழாவிற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன. நோர்வே தரகர்கள் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகள் இரு தரப்பிற்கும் அழுத்தங்களை சற்று அதிகமாகவே கொடுக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தருக்கு சற்று காட்டமாகவே உலக ஆதிக்க சக்திகள் "சமாதான வழிமுறைக்கு செல்லுங்கள், நோர்வேயின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்" எனக் கூறிவிட்டன.

பிராந்திய எஜமானான இந்தியாவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் "போர் தீர்வு அல்ல" என்பதை சற்று இறுக்கமான தொனியுடன் ஜனாதிபதி மகிந்தருக்கு தெரிவித்து விட்டார். "போன மச்சான் திரும்பி வந்தான் வெற்றுக் கையோட" என்பதற்கு இணங்க அறுபது பரிவாரங்களுடன் ஆறு கோடி ரூபா மக்களின் பணத்தினை செலவிட்டு பேரின வாதத்தின் நியாயப்பாடுகளை உலகத்திற்கு கூற வெளிக்கிட்ட மகிந்தர், அமெரிக்க, ஐரோப்பிய இந்திய சக்திகளின் சமாதானப் போதனைகளை மட்டும் பெற்றுக் கொண்டு நாடு திரும்பி வந்திருக்கின்றார். கூடவே மனித உரிமைக்காரர்களையும் முதுகில் சுமந்து வரவேண்டிய இக்கட்டான நிலை அவருக்கு.

மகிந்தர் சமாதானப் போதனைகளோடு திரும்பி வர சிங்கள தேசமோ யுத்தப் பேரிகையை முழக்கிக் கொண்டிருக்கிறது. போரில் வென்று கொண்டிருக்கின்றோம் என்ற போலித்தோற்றப்பாட்டை அரசும் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் சிங்கள தேசத்திற்கு அள்ளிக்கொடுத்ததால் வெற்றிப்போதை தலைக்கேறி ஆனையிறவை கைப்பற்றும் கனவில் அது மிதந்து கொண்டிருக்கின்றது. இந்தக் கனவில் மிதக்கச் செய்வதில் முற்போக்கு ஊடகவியலாளர்கள் எனக்கூறிக் கொள்பவர்களும் விதிவிலக்காக இருக்கவில்லை. புலிகளிடம் தோற்றுப்போய்விட்டோம் என்ற வெப்பெரிச்சலில் இருந்தவர்கள் தமது விருப்பங்களையே கருத்துகளாக தெரிவித்து வருகின்றனர். இதற்கு குமார் ரூபசிங்க தொடக்கம் விக்டர் ஐவன் வரை விதிவிலக்காக இருக்கவில்லை. உலகிற்கு தங்கள் இனவாத முகத்தை மறைப்பதற்காக "தமிழ் மக்களை ஆதரிக்கின்றோம், ஆனால், புலிகளை எதிர்க்கின்றோம்" எனக்கூறி வார்த்தை ஜாலங்களினால் தமது உண்மை முகத்தை மறைக்கப்பார்க்கின்றனர்.

புலிகள் இயக்கம் என்பது தமிழ்த் தேசிய அரசியலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தலைமையேற்று நடாத்துவதற்காக தமிழ்த்தேசம் வன்மையாகப் பிரசவித்த இயக்கம் என்பதும் புலிகள் பலவீனம் அடைந்தால் தமிழ் மக்களும் பலவீனம் அடைந்து விடுவார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியாததல்ல. தெரிந்து கொண்டேதான் அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய உண்மையான விருப்பமெல்லாம் தமிழ்த் தேசம் பலவீனம் அடைய வேண்டும் என்பதுதான். இதுதான் வடிகட்டின இனவாதம். தமிழ் மக்களை அழிப்போம் எனக்கூறுவது பச்சை இனவாதம். தமிழ் மக்களை ஆதரிப்போம். ஆனால், புலிகளை அழிப்போம் எனக்கூறுவது வடிகட்டின இனவாதம். இரண்டினதும் நோக்கம் ஒன்றுதான். தமிழ் மக்களை அழிப்பதே அந்த நோக்கம். பச்சை இனவாத முகத்தினைக் காட்டினால் தமது முற்போக்கு முகமூடி கிழிந்துவிடும் என்பதற்காக வடிகட்டின இனவாத முகத்தை அவர்கள் காட்டுகின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கு உள்ள ஆதரவுகளைப்பற்றி அண்மைக்கால கிழக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கறாராக நிரூபித்த பின்னர் கூட இந்தக் கூட்டம் உண்மைகளைத் தரிசிக்க மறுக்கின்றது. "விருப்பங்கள் உண்மைகளை தரிசிக்க விடாது" என்பது இயற்கை விதி.இவ்விதி இக்கூட்டத்திற்கு நன்றாகவே பொருந்துகின்றது.

வரலாற்றில் ஏ.ஈ.குணசிங்கா, என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, சந்திரிகா குமாரதுங்க, டியூ.குணசேகர, தயான் ஜயதிலக்க என பலரைச் சந்தித்ததால் இந்த முகமூடிகளைப்பற்றிய தமிழ்த் தேசம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், தமிழ்த்தேசத்தின் அரசியல் நியாயப்பாடுகள் தொடர்பாக சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை கொள்கை நிலைப்பாடாகக் கொண்டு சிங்கள தேசத்தில் பணியாற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு இது தர்மசங்கடமான நிலையினை உருவாக்கியுள்ளது. "உது ஒரு தேவையற்ற வேலை" என தமிழ் மக்களில் பலர் அபிப்பிராயம் கொண்டிருந்தபோதும் சிவராம் போன்ற தமிழ்த்தேசத்தின் ஆய்வாளர்கள் தமிழ் மக்களின் அக்கருத்தினை வலியுறுத்திய போதும் விடாப்பிடியாக தமிழ் ஆர்வலர்கள் பலர் சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றுகின்றனர்.

"ஒரு மொழி இரு நாடு" எனக் கோஷமிட்ட சமசமாஜிகள் பின்னர் 1972 ஆம் ஆண்டு பேரினவாத யாப்பில் கரைந்து போனபோதும் தமிழ்த்தேசப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தலைமறைவு வாழ்க்கை நடாத்திய தயான் ஜயதிலக போன்றவர்கள் பின்னர் ஒடுக்குமுறை அரசாங்கத்தின் கருவிகளானபோதும் தடுமாறாமல் சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றியவர்கள் இன்று சங்கடப்படுகின்றனர். ஆனாலும், விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க, வாசன அஜித் பராக்கிரம, நிர்மல் ரன்ஜித் போன்ற கொள்கை நிலைப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிங்கள தேசத்தில் வாழ்வதால் அவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

இனி நடைமுறை விடயத்திற்கு வருவோம். இன்று அனைவர் மத்தியிலும் எழுகின்ற பிரதான கேள்வி உண்மையில் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்களா என்பதேயாகும். புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்களென சிங்கள தேசமும் அவற்றுடன் கூடவே இந்திய பிராமணிய சக்திகளும் மாபெரும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர், மாவிலாறு பிரதேசங்களில் இருந்து புலிகள் பின் நகர்ந்து விட்டதனாலும், யாழ். குடாநாட்டில் முகமாலை பிரதேசத்தில் 800 மீற்றர் பின்னகர்ந்து விட்டதனாலும், ஒவ்வொரு பெரிய, சிறிய மோதல்களிலும் இறந்த புலிகளின் எண்ணிக்கையினை `ஷ்ரீ லங்கா அரசு பாரிய எண்ணிக்கை கணக்கில் பிரசாரப்படுத்துவதனாலும், (இவ்வெண்ணிக்கை கணக்கினை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புலிகளின் மொத்த எண்ணிக்கை 7000 எனக் கூறியவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இதுவரை புலிகள் முழுமையாக அழிந்திருக்க வேண்டும்.) புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல், நேரடி விமானத்தாக்குதல் என்பவற்றை மேற்கொள்ளாததனாலும் வன் தாக்குதலிலிருந்து மென் தாக்குதலுக்கு அவர்கள் மீண்டும் இறங்கி விட்டதனாலும் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டனர் என்ற தோற்றம் கொடுக்கப்படுகின்றது.

ஒரு விடுதலைப் போராட்ட அரசியலின் அடிப்படை இயக்க விதிகளைப் புரிந்து கொள்ளாமையும் விடுதலை இயக்கத்தின் செயற்பாடுகளிலுள்ள மூலோபாயம், தந்திரோபாயம் என்பவற்றை புரிந்து கொள்ளாமையுமே இந்தக் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம் என்று நினைக்கின்றேன். ஒரு விடுதலை இயக்கம் இரு வழிகளில் மட்டுமே பலவீனமாகிவிட முடியும். ஒன்று விடுதலைப் போராட்டத்துக்கு காரணமாக இருக்கின்ற மக்களின் அபிலாஷைகளை ஒடுக்கும் அரசு தீர்த்து வைக்கின்றபோது அது சாத்தியமாக இருக்கும். மக்களின் அபிலாஷைகள் தீருகின்றபோது ஒரு விடுதலை இயக்கத்துக்கான தேவையில்லாமல் போவதனாலேயே இது சாத்தியமாகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கான எந்தவொரு முழுமையான முயற்சிகளிலும் சிங்கள தேசம் இதுவரை இறங்கவில்லை. அதற்கு எதிரான முயற்சிகளிலேயே இதுவரை இறங்கி வந்திருக்கின்றது. பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் தொடக்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள், மாகாண சபைகள் என்பவற்றினூடாக கடல்கோள் பொதுக்கட்டமைப்பு வரை இதுவே வரலாறாக இருந்திருக்கின்றது. சிங்கள தேசம் பேரினவாத கருத்து நிலைகளினால் பீடிக்கப்பட்டு இருக்கும் வரை சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்க முன்வரும் எனக் கூற முடியாது. இதனால் இன்றைய காலத்திலோ அல்லது அண்மைய எதிர்காலங்களிலோ அரசியல் தீர்வுகள் வருவதற்கான சாத்தியங்கள் இல்லை. இந்நிலையில் போராடுகின்ற விடுதலை இயக்கம் பல வீனமடையும் எனக் கூற முடியாது. உலக வரலாறுகளிலும் அதற்கான சான்றுகள் இருக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதாயின், பேரினவாதம் நடைமுறையில் இருக்கும் வரை புலிகளை ஷ்ரீலங்கா அரசினால் சில பின் நகர்வினை செய்விக்க முடியுமே தவிர ஒரு போதும் அழிக்க முடியாது. பின் நகர்வுகள் கூட தற்காலிகமாக இருக்குமே தவிர அது ஒரு போதும் நிரந்தரமாக இருக்க முடியாது. இது விடயத்தில் அனுருத்த ரத்வத்தைக்கு ஏற்பட்ட அனுபவம் சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்டு விடாது எனக் கூறி விட முடியாது.

இரண்டாவது வழியில் பல வீனம் என்பது வேறொரு விடுதலை இயக்கம் எழுச்சியடைவதாகும். அவ்வாறு எழுச்சியடைந்து புலிகளிலும் பார்க்கத் தீவிரத்துடன் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்கும் போதே புலிகளை அழிப்பது சாத்தியமாக இருக்கும். ஆனால், இன்றைய நிலையில் புலிகளுக்கு மாற்றாக எந்தவொரு இயக்கமும் இல்லை. இருப்பவை எல்லாம் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் முன்னாள் போராட்டக் குழுக்களே. ஒடுக்கும் அரசுடன் இணைந்து கொண்டு செயற்படுபவர்கள் ஒரு போதும் புலிகளுக்கு மாற்றாக வர முடியாது. எதிர்காலத்தில் அவ்வாறான இயக்கம் தோன்றுமென இப்போதைக்கு கூற முடியாது. புலிகள் எதுவித சமரசமும் இல்லாமல் போராட்டத்தை முன்னெடுப்பதால் புதிய இயக்கத்துக்கான தேவை இன்னமும் உருவாகவில்லை. புலிகளை ஏக இயக்கமாக ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறும் குரல்களெல்லாம் தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்துவதற்காக முன்வைக்கப்படுகின்ற குரல்களே. இக் குரல்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு எதுவும் இருக்கப் போவதில்லை. மக்களைப் பொறுத்தவரை தமது அபிலாஷைகளுக்காக யார் விடாப் பிடியாக போராடுகிறார்களோ அவர்களைத் தான் ஆதரிப்பர். இது உலக அரசியலின் பொது விதியாகும்.

இனி புலிகளின் அண்மைய பின்நகர்வினைப் பற்றி பார்ப்போம். புலிகளின் பின்நகர்வுகளில் முகமாலைப் பின் நகர்வு பெரிய பின் நகர்வு எனக் கூற முடியாது. தமது முன்னரங்க பிரதேசத்துக்கு வந்த படையினரை அழித்து விட்டு அடுத்த நிலையினை எடுப்பதற்காக அவர்கள் சிறிது தூரம் பின் நகர்த்திருக்கின்றனர். மாவிலாறு பின் நகர்வும் பெரிய நகர்வல்ல. ஏற்கனவே மாவிலாறு அணைப் பகுதி புலிகளின் முன்னரங்க காவலரணை ஒட்டியே இருந்தது. இங்கு குறிப்பிடத்தக்க பின்நகர்வு எனக் கூறக் கூடியது சம்பூர் பின்நகர்வே ஆகும். சம்பூர் பிரதேசம் திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தினைத் தாக்கக் கூடிய கேந்திர இடத்தில் இருந்தமையினாலேயே சம்பூர் பின்நகர்வு முக்கிய பின் நகர்வாகப் பிரசாரப்படுத்தப்படுகின்றது. இங்கே தான் ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்ட வழிமுறைகள் பற்றிய சிந்தனைகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்ட அணுகு முறைகள் ஒரு போதும் நேர் கோட்டில் செல்வதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் வளைந்தும் நெளிந்தும் செல்வதே வழக்கமானதாகும். இந்தவளைவு நெளிவுகளைப் பார்த்து விடுதலை இயக்கம் பல வீனமடைந்துள்ளது என ஒடுக்கும் அரசும் ஆதிக்க சக்திகளும் கூக்குரலிடக் கூடும். அதைப் பற்றியெல்லாம் விடுதலைக்காக போராடும் மக்கள் அலட்டிக் கொள்வதில்லை.

புலிகள் சம்பூரில் பின் நகர்ந்தமைக்கு அரசியல் ரீதியான காரணங்களும் இராணுவ ரீதியான காரணங்களும் இருக்கின்றன. அரசியல் ரீதியான காரணங்களைப் பொறுத்தவரை யுத்தம் தொடங்கி முதற் சில நாட்கள் புலிகள் முன்னேறிக் கொண்டிருந்தனர். மூதூர் கிழக்கில் பல முகாம்களை தாக்கி அழித்ததோடு அல்லாமல் மூதூர் நகரப் பகுதியையும் கைப்பற்றி இரண்டு நாட்கள் தங்களது பூரணக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இதனை அச் சமயத்தில் முழுமையாக நிராகரித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பின்னர் குற்றவாக்கு மூலம் அளிப்பது போல அதனை ஏற்றுக் கொண்டார். யாழ். குடாநாட்டிலும் புலிகள் பல வெற்றிகளைக் கண்டனர். புலிகளின் "மரைன் படை" மண்டைதீவிலும் கிளாலியிலும் தரையிறங்கித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. மண்டை தீவு ஆட்லறித் தளம் அழிக்கப்பட்டதோடு கிளாலியில் 25 இற்கும் மேற்பட்ட இராணுவக் கமாண்டோக்கள் இறந்ததாக சிங்கள இராணுவ ஆய்வாளர்கள் சிலரே கூறியிருந்தனர். புலிகள் முழுப் போராக இதனை நடத்தாமல் அரசின் தயாரிப்புகளை நிர்மூலம் செய்யும் போராகவும் களநிலையை பரிசீலனை செய்யும் போராகவுமே நடாத்தினர். அரசாங்கப் படைகள் நீண்ட நாட்களாகவே புலிகளின் பிரதேசங்களை நோக்கி பெரியதொரு படைநகர்வை நடாத்த திட்டமிட்டிருந்தனர். இந்த திட்டமிடல்களை நிர்மூலமாக்குவதோடு 5 வருடங்களாக போரில்லாமல் இருந்த சூழலில் களநிலைமையைப் பரிசீலிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கிருந்தது. எப்போதும் களநிலைமையை நடைமுறையில் பரிசீலித்தே முழுப் போரைத் தொடங்குவது புலிகளின் வழக்கமாகும். அதாவது, பல சிறிய போர்கள் நடைபெற்றே பெரிய போர் நடைபெறுவது வழக்கமானதாகும்.

(தொடரும்)

http://www.thinakkural.com/news/2006/10/12...s_page12778.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.