Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்பு என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கற்பு என்றால் என்ன? – இந்திரா பார்த்தசாரதி

 
 

அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, சமீபத்தில், மிகவும் அவதியுற்றச் சொல், ‘ கற்பு ‘.

‘கற்பு ‘ என்றால் என்ன ?

‘கல் ‘ என்ற வேர்ச்சொல்லினின்றும் பிறந்தவை ‘கற்பு ‘, ‘கல்வி ‘ போன்ற சொற்கள்.

‘கல் ‘ என்றால், ‘தோண்டுதல் ‘. ஆங்கிலச் சொல், ‘ cultivate ‘, ‘culture ‘ போன்ற சொற்களும் இந்தத் ‘ தோண்டுதலை ‘ ( ‘உழுதல் ‘- லத்தீன்-cultivatus) அடிப்படையாகக் கொண்டு பிறந்த சொற்கள்தாம்.

கற்பிக்கப்படுவது எதுவோ அது ‘கற்பு ‘. கல்வியினால் உண்டாகும் ஞானமும் ‘கற்பு ‘தான். ‘பெரிய திருமொழியில் ‘ (திருமங்கைமன்னன்), ‘கற்பு ‘ என்ற சொல் ‘பெரிய ஞானம் ‘ என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது.

‘ஆழி ஏந்திய கையனை, அந்தணர்

கற்பினை கழுநீர் மலரும் வயல்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே ‘.

‘அந்தணர் கற்பு ‘ என்றால் ‘சான்றோர் ஞானம் ‘ என்ற பொருள்.

அகத்திணை ஒழுக்கத்தில் ‘களவு ‘க்குப் பிறகு, ‘கற்பு ‘.

‘களவு ‘ என்றால் என்ன ?

தொல்காப்பியம் கூறுகிறது:

‘ இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே ‘

இன்பமும், பொருளும், அறனுமென்று கூறப்பட்ட மூவகைப் பொருள்களுள், முதன்முதல் சந்திக்கும், திருமணம் ஆகாத இளம் ஆண், பெண் ஆகிய இருவரிடையே தோன்றும் அன்பின் விளைவாக ஏற்படும் இன்பத்தின் பகுதியாகிய புணர்தல் முதலிய ஐவகைப்பட்ட ஒழுக்கம். ‘காமக் கூட்டம் ‘ என்பது, ‘புணர்தலை ‘க் குறிக்கும்.

வேதத்துள் குறிப்பிடப்பட்டுள்ள எட்டுவகை மணங்களுள், ‘களவு ‘, ‘கந்தர்வத் ‘ திருமணமாகும் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. ‘கந்தருவ குமரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தது போலத் தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது, ‘ என்கிறார் நச்சினார்க்கினியர். சகுந்தலையும் துஷ்யந்தனும் வனத்தில் சந்தித்துப் புணர்ந்தது கந்தர்வம்.

‘கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும்; ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாதென்றற்குத் ‘துறையமை ‘ என்றார் ‘ என்று மேலும் கூறுகிறார் நச்சினார்க்கினியர்.

‘கற்பின்றி ‘ என்றால் என்ன பொருள் ? ‘கற்பு ‘ என்றால் திருமணம். மக்களைப் பொருத்த வரையில், களவொழுக்கம் பயிலுகின்ற தலைவனும் தலைவனும் திருமணம் செய்துகொண்டாக வேண்டும். கந்தருவர்களுக்கு இந்தச் சட்டம் கிடையாது. அதே சமயத்தில், திருமணத்துக்கு முன்பு, களவொழுக்கத்தில் இருக்கும் தலைவனும் தலைவியும் புணர்தல்( உடலுறவு) குறித்துச் சமூகத் தடை ஏதுமில்லை.

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுமே ‘

தலைவன், தலைவி ஆகிய இருவருடைய பெற்றோர்கள், இருவருக்கும் களவுக்குப் பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கே ‘கற்பு ‘

எனப்படும். ‘கற்பியல் ‘ என்று தொல்காப்பியத்தில் வரும் பகுதியில், திருமணத்துக்குப் பிறகு, தலைவன், தலைவி, தோழி, போன்றோர் எந்தெந்தச் சூழ்நிலையில் பேசுவார்கள்

என்ற செய்திகள் அனைத்தையும் நாடகக் காட்சிகள் போல் சித்திரித்துக் கூறப்படுகின்றன.

‘கற்பியலில் ‘, ஊடல் பற்றியும்( கணவனுடைய பரத்தையர் தொடர்பின் காரணமாக அவனுக்கும் அவன் மனைவிக்குமிடையே உண்டாகும் பூசல்கள்) , கணவன் பொருள் தேடவோ அல்லது உயர்கல்வி படிப்பதற்கோ அல்லது அரசு காரியமாகவோ மனைவியிடமிருந்து பிரிந்தால் அப்பிரிவு பற்றியும், பிரிந்திருக்கும் காலத்தில் மனைவியின் பொறுமை காத்து இருத்தல் பற்றியும் பேசப்படும். புணர்ச்சியைப் பற்றிய செய்தி ‘கற்பியலில் ‘, நினைவு கூர்தலாகக் கூறப்படுமே யன்றி, நிகழும் செயலாகச் சித்திரிக்கப்படவில்லை. . அதாவது, திருமணத்துக்கு(கற்புக்கு) அடிப்படையான, தலைவன் -தலைவிக்கிடையே நிகழும் புணர்ச்சி (உடலுறவு) திருமணத்துக்கு(கற்பு) முந்திய ஒழுக்கமாகிய ‘களவிலேயே ‘ கூறப்பட்டுவிடுகிறது என்பது பொருள்.

‘ மெய்தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்

இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்

நீடுநினைந்திரங்கல் கூடுதலுறுதல் ‘

எண்று கூறுகிறார் தொல்காப்பியர்.

இதற்குச் சான்றாகக் குறுந்தொகைப் பாடலை எடுத்துக் காட்டுகிறார் நச்சினார்க்கினியர்.

‘ஒடுங்கீரோதி ஒண்ணுதற் குறுமகள்

நறுந்தண் ணீர ளாரணங் கினளே

இனையள் என்றவள் புனையளவு அறியேன்

சிலமெல் லியவே கிளவி

அணைமெல் லியள்யான் முயங்குங் காலே ‘

இப்பாடல், புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது

‘தலைவியைத் தழுவும் போது , கூந்தலாலும், நெற்றியாலும், மெய்யெங்கும் பரவியுள்ள இனிமையாலும் கண்ணிற்கும், நல்ல நறுமணத்தால் மூக்கிற்கும், தண்ணிய நீரின் தன்மையால் வாய்க்கும் மெல்லிய சொற்கள் பேசுதலால் செவிக்கும், மெல்லிய இயல்பால் உடம்பிற்கும் கண்டு, கேட்டு,உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலன் இன்பங்களையும் ஒருங்கே தந்தாள். அவளைத் தழுவதழுவ, மேலும் தழுவ வேண்டுமென்ற வேட்கை உண்டாகின்றது.. ‘

இதைப் பார்க்கும்போது, களவொழுக்கம் வெறும் platonic love தான் என்று சொல்லமுடியுமா ?

இதனால், ஒருவரை யொருவர் விரும்புகின்ற ஆணும் பெண்ணும் அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு உடலுறவு கொள்ளுவதில் தமிழ் மரபில் எந்தவிதமான சமூகத் தடையும் இருந்தததாகத் தெரியவில்லை. கட்டில், கல்யாணத்தில் முடியவேண்டும் என்பதுதான் கட்டளை.

தொடக்கக் காலத்தில், ஓர் ஆணும் பெண்ணும் திருமணமாகி ஒருவரை யொருவர் புரிந்து கொண்டு, இல்லறம் என்ற நல்லறம் பயிலுதலைச் கூற வந்த ‘கற்பு ‘ என்ற சொல், பிற்காலத்தில், பெண்ணைச் சார்த்தியே பேசப்பட்டு, அவளுடைய பதிவிரதா தன்மையும், ‘பொறுமையும் ‘ ( முல்லைத்திணை ஒழுக்கமாகிய ‘இருத்தல் ‘ என்ற பண்பு)

குறிக்க வந்த சொல்லாக மாறிவிட்டது.

இதற்கு என்ன காரணம் ?

பெண்ணைக் கண்டு ஆண் அஞ்சுகிறான். அவளுடைய சக்திக்கு எல்லையில்லை என்ற பயம். அவளை அடக்கி ஆளுதல்தான் தனக்குத் தற்காப்பு என்று நினைக்கின்றான். ‘இயற்கையைப் பெண்ணாக பாவிக்கும் மனிதன், அவளைக்கண்டு அஞ்சிய நிலையில்,

சுற்றுப்புறச் சூழலை அழிப்பதின் மூலம், அவளைக் கற்பழிப்பதாக நினைத்துத் தன்

ஆளுமையையும் ஆக்ரமிப்பையும் உணர்த்துகிறான் ‘ என்கிறார் காப்ரா.

இந்திய ஆணின் பெண்ணைப் பற்றிய அடிமன அச்சந்தான் துர்க்கையின் உருவகம்.

அவளுடைய சீற்றம் அடங்கிய நிலையில், ஆணின் ஆளுமைக்குட்பட்ட நிலையில்,

உமாவாகி, சாந்தத்தின் உறைவிடமாகத் திகழ்கிறாள். இந்தியாவில் பெண்களுடைய ‘தீட்டு ‘ பற்றிய சிந்தனையும் அச்ச உணர்வின் அடிபடையில் உருவானதுதான் என்று சில மேல்நாட்டு அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தமிழில், ‘அணங்கு ‘ என்ற சொல், ‘ பேயை ‘ யும், ‘பெண் ‘ ணையும் குறிக்கின்றது என்பது சிந்தித்தற்குரியது.

ஆகவே, பெண்ணைக் கண்டு அஞ்சும் ஆண், அவளுக்குக் ‘கற்பு ‘ என்ற பொன் விலங்கைப் பூட்டியிருக்கிறான் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அவளை ‘ ‘பத்தினி ‘ யாக்கி அடக்குவதாகும். அநியாயத்தைப் பொறுக்கமுடியாத சீற்றத்தில், மதுரையை எரித்த கண்ணகி, தன் நாட்டு எல்லைப்புறத்துக்கு வந்து சொர்க்கம் எய்தினாள் என்று கேட்டு, அவள் சீற்றம் இன்னும் எஞ்சியிருக்கமோ என்று அஞ்சி, அவளை ‘ ‘பத்தினிக் கடவுளாக்கி ‘ அவள் சினத்தைத் தணிக்க முயல்கிறான் சேரன் செங்குட்டுவன்

பெண்களுடைய ‘கற்பு ‘ப் பற்றிய விவாதத்தை முதலில் தொடங்கி வைத்தவன்,

சேரன் செங்குட்டுவன். சாத்தனாரிடமிருந்து கண்ணகி வரலாற்றைக் கேட்டபின்,

தன் கணவன் உயிர் நீத்தவுடன் அவனைத் தொடர்ந்து உயிர்நீத்த பாண்டிய மாதேவி,

கோவலன் கொல்லப்பட்டவுடன் அவனைத் தொடராமல், வழக்காடி வென்ற பிறகு அவனோடு சொர்க்கம் புகுந்த கண்ணகி ஆகிய இருவர்களில் யார் சிறந்தவர் என்று தன் மனைவியை வினவி, இக்காலப் பட்டிமன்ற வீரர்களுக்கு முன்னோடியாக

விளங்குகிறான்! இக்காலப் பட்டிமன்ற வீரர்களும் அவனை ஏமாற்றிவிடவில்லை.

‘அறக்கற்பு ‘, ‘ மறக்கற்பு ‘ போன்ற சொற்களை வீசிச் சொற்சிலம்பம் ஆடி

வருகின்றனர்.

திருமணத்துக்கு முன் தலைவனும் தலைவியும் உள்ளப் புணர்ச்சியாகிய இயற்கைப் புணர்ச்சிப் பழகினார்களே தவிர( platonic love) உடல் உறவு கொண்டிருக்க இயலாது என்று தமிழ்ப் பெண்களுடைய கற்புக் காவலர்கள் இப்பொழுது கூறுகிறார்கள். அப்படி உடல் உறவு கொண்டிருந்தால், திருமணம் ஆவதற்கு முன் கருவுற்றார்கள் என்பதற்குச் சான்றுகள் சங்கப் பாடல்களில் இருந்திருக்கும் என்பது அவர்கள் வாதம்!

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப ‘

என்கிறார் தொல்காப்பியர்.

களவொழுக்கத்தில், பொய்யும், குற்றமும் ஏற்படத்தொடங்கிய பிறகு, குடும்ப மூத்தவர்கள் திருமணச் சடங்குக்குத் தான் முன்னுரிமை தந்தார்கள் என்பது இதன் கருத்து. ‘பொய் ‘, ‘வழு ‘ என்று குறிப்பிடப்படுபவை யாவை ? ‘பொய்யாவது செய்த ஒன்றனைச் செய்திலேன் என்றல்; வழுவாவது சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகல் ‘ என்று உரை எழுதுகிறார் நச்சினார்க்கினியர். திருமணச் சடங்குக்குச் சான்றாக, அகநானூற்றுப் பாடலொன்றை எடுத்துக் காட்டுகிறாரேயன்றி, ‘பொய் ‘ ‘வழு ‘ ஆகியவற்றுக்கு அவர் எடுத்துக் காட்டு ஏதும் தரவில்லை. காரணம், அத்தகையப் பாடல்கள் இருந்திருந்தாலும், தொகை நூல்களில் இடம் பெறாமல் தணிக்கைச் செய்யப் பட்டிருக்கக் கூடும். அல்லது, உரையாசிரியர்களே இதற்கு உதாரணம் காட்ட விரும்பாமலும் இருந்திருக்கலாம்.

திருமணச் சடங்குக்கு நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியிருக்கும் அகச்செய்யுள், வாயில் மறுத்த தோழிக்குத் தலைவன் கூறுவதாக மருதத் திணையில் வருகின்றது. பரத்தையரிடமிருந்துவருகின்ற தலைவனை வீட்டுக்குள் அணுமதிக்கத் தோழி மறுப்பதுதுதான் ‘வாயில் மறுத்தலா ‘கும். தலைவி ஊடலைச் சொல்வதுதான் மருதத்திணை. வாயில் மறுக்கப்பட்ட தலைவன், தனக்கும் தலைவிக்கும் நடந்த திருமணச் சடங்கை நினைவு கூர்ந்து தோழியிடம் சொல்லுகிறான். ஆகவே இதுவும் திருமணச் சடங்கை விளக்குவதற்காகஅமைந்த பாடல் என்றும் கூறமுடியாது. ‘களவொ ‘ழுக்கத்துக்குப் பிறகு, தலைவனும் தலைவியும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஒன்று கூடி வாழும் தோழமையைத்தான் ‘கற்பு ‘ என்று கருதினார்களோ என்று நினைக்க இடமிருக்கிறது.

திருமணச் சடங்கை வேதநெறிக்குள் அடக்கப் பார்க்கிறார் நச்சினார்க்கினியர். கரணம்

‘நிகழுங்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பாயெனவும், இவனுக்கு நீ குற்றேவல் செய்து ஒழுகுவாயாக எனவும், அங்கியங்கடவுள் அறிகரியாக( அக்னிச் சாட்சியாக)

மந்திரவகையாள் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் ‘கற்பு ‘ என்றார் ‘ என்பது நச்சினார்க்கினியர் வாக்கு. வேத நெறியைப் பற்றியோ அல்லது அக்னிக் கடவுள் சாட்சியாக இருப்பது பற்றியோ தொல்காப்பியர் எதுவும் கூறவில்லை.

தலைவன் நினைவுகூர்வதாகக் கூறப்படும் திருமணச் சடங்கு என்ன ?

‘ அந்நாள், தீய கோள்கள் நீங்கப்பெற்ற, வளைந்த வெண்மையான திங்களைத் தீமையற்ற, புகழையுடைய உரோகிணி நட்சத்திரம் வந்து கூடும் நன்னாள்.அதுவே எங்கள் திருமண நாள்.உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவாக வெந்த பொங்கலோடு பெரும் சோற்றுத் திரளை உண்பது இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது. வரிசையாகக் கால்களை நட்டுக் குளிர்ந்த பெரிய பந்தலை அமைத்தனர். அப்பந்தலில், கொண்டு வந்த மணலைப் பரப்பினர். மனையின்கண் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டனர். பொழுது புலர்ந்ததும், முதிய

மகளிர், தலையில் நீர்க்குடத்தினைச் சுமந்தவராய்க் கைகளில் புதிய மண்டை எனும்

கலத்தினை ஏந்தியவராய் ஒருங்கு கூடினர்..முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறை முறையாக் எடுத்துத் தந்த வண்ணமிருந்தனர். தேமல் படர்ந்த அழகிய வயிற்றினையுடைய தூய அணிகலன்களை அணிந்த மகனைப் பெற்றெடுத்த

மகளிர் நால்வர், ‘ தோழமையினின்றும் வழுவாது நீங்கள் இருவரும் ஒருவரையொருவர்

பேணுவதில் பெரும் விருப்பத்துடன் இருப்பீர்களாக ‘ என்று வாழ்த்தி, மலருடன் கூடிய

நெல்லை அவள் கரிய கூந்தலின்மீது தூவினர். சுற்றத்தினர் கல்லென்ற ஒலியினராய் விரைந்து வந்து, ‘பெருமனைக் கிழத்தி ஆவாய் ‘ என்று கூறி, ஓர் அறையினில் என்னுடன் அவளைக் கூட்ட, அன்றிரவு நாங்கள் புணர்ந்தோம். பிறகு, முதுகினை

வளைத்துக் கொண்டு அவள் புடவைக்குள்ளே ஒடுங்கிக் கிடந்தாள். அவளை அணுகி அவள் முதுகை அணைத்துக் கொள்ளும் விருப்பத்துடன் முகத்தை மூடியிருந்த ஆடையை விலக்கினேன். அவளோ அச்சத்துடன் பெருமூச்சு விட்டாள். அவளை மகிச்சியுடன், இருக்கையில் அமர்த்தி, ‘ உன் நெஞ்சத்து நினைத்ததை மறையாது உரைப்பாயாக ‘ என்றேன். மானின் மடப்பத்தினையும், செருக்கிய பார்வையையும் கொண்ட கண்களையும், குளிர்ந்த கூந்தலையும் உடைய மாமை நிறமுடைய என் தலைவி, உள்ளம் நிறைந்த உவகையளாகி, முகம் தாழ்த்தி என்னை வணங்கினாள் ‘

தோழி வாயில் மறுத்தபோது, தலைவன் அவளிடத்து இவ்வாறு கூறியதாகப் பாட்டில் ஒரு குறிப்பும் இல்லை. அவன் இதை தலைவியிடத்தும் கூறியிருக்கக்கூடும். இல்லறக் காட்சி என்பதாலும், நெல், உழுத்தம் பருப்பு முதலியவற்றால் மருதத் திணையாகி, அந்நிலத்து ஒழுக்கமாகிய ஊடலுக்கேற்ப, வாயில் மறுக்கப்பட்ட நிலையில் தலைவன்

கூறுகின்றான் என்ற நாடகக் காட்சி, தொகுத்தவர்களின் கற்பனையாகக் கூட இருக்கலாம். இப்பாட்டில், திருமணச் சடங்கு சமயச் சார்பு ஏதுமில்லாமல், ஒரு secular

நிகழ்வைக் கூறுவதைப் போலத்தான் அமைந்திருக்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். சடங்கு கூட இங்கு அவ்வளவு முக்கியமாகத் தெரியவில்லை. கற்பு நிலையாக, தலைவந்தலைவிக்குமிடையே தோழமைதான்( companionship ) வற்புறுத்திப் பேசப்படுகிறது. இங்குத் திருமணத்துக்குப் பிறகு, தலைவனும் தலைவியும் பெற்றோர்

ஒப்புதலுடன் ஓர் அறையில் இணைவதும், ‘ புணர்ச்சி ‘ என்றுதான் கூறப்படுகிறது.

‘ஓர் இற் கூடிய புணர் கங்குல் ‘ , (அதாவது, இல்லத்தில், ஓர் அறையில், இரவில் அதிகாரப் பூர்வமாகக் கூடுதல்) என்பது அகநானூற்று வரி.

ஆகவே, களவொழுக்கத்தின்போது கூறப்படும் ‘புணர்ச்சி ‘, உடலுறவைக் குறிக்காது என்று சொல்வது தவறு. புணர்ச்சிப் பழகுகிறவர்கள் திருமணம் செய்துகொண்டாக

வேண்டும் ஒரு கட்டாய நியதி இருந்தது. இக்கால ஆணினத் தமிழ்ப் பண்பாளர்களுக்கு, உடலுறவைப் பற்றிப் பொதுவாகவே இருக்கிற ஒரு.விசுவரூப மனச்சிக்கல்( magnificent obsession) அக்காலத் தமிழர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

பக்தி இயக்கத்தின்போது பேசப்பட்ட, பக்தனுக்கும் இறைவனுக்குமிடையே ஏற்படுகின்ற தலைவி- தலைவன் உறவு( உடலுறவு உட்பட- bridal mysticism) தொன்மைத் தமிழிலக்கியங்களில் கூறப்படும் களவொழுக்கத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

http://thoguppukal.wordpress.com/2012/01/07/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.