Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ.ஜே.என்றொரு மனிதன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஜே.என்றொரு மனிதன்!

-மு.பொ.-

* ஏ.ஜே. இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு நூல்கள் என தொகைக் கணகில் பார்க்கையில் சிறியதாயினும் மகத்தானது...

ஒரு முறை நான், யாழ்ப்பாணத்தில் ஏ.ஜே.யோடு பலதையும் பற்றிக் கதைத்தவாறு றோட்டில் நடந்துகொண்டிருந்த போது பின்வருமாறு கேட்டேன்.

"நீங்கள் ஏன் சிறுகதை, நாவல் போன்ற ஆக்க இலக்கியங்கள் எழுதுவதில் அக்கறைகாட்டுவதில்லை?"

இதைக் கேட்டதும் அவர் ஒருதரம் என்னைப்பார்த்து லேசாக சிரித்துவிட்டு இப்படிச் சொன்னார். "I Know My Limit And limitations' ( எனக்கு எனது எல்லைகளையும் போதாமைகளையும் நன்கு தெரியும்)

அவர் மிகக் குறைந்த சொற்களைப் பாவித்து, மிக நுட்பமான முறையில் அளித்த பதில் என்னை வியப்புற வைத்தது.

இன்று கவிஞர்கள், சிறுகதை ஆசிரியர்கள், நாவலாசிரியர்கள் என்று தமக்கென பல மகுடங்களைச் சூட்டிக் கொண்டு திரியும் பல இலக்கியக்காரர்கள் அறியாமல் போன விஷயம் இதுதான். அறிந்திருந்தால் இன்று நம் இலக்கிய உலகில் காணப்படும் பல சீரழிவுகள் இல்லாமல் இருந்திருக்கும்.

ஆனால் ஏ.ஜே.யைப் பொறுத்தளவில், அவரது சிறப்பானது அநேக எழுத்துலகவாசிகளுக்கு இந்த உண்மையை அழுத்துவதாகவே இருந்தது.

அவர் DAILY NEWS ஆசிரியர் குழுவில் இருந்தபோதும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனாசிரியராக இருந்தபோதும் சரி அதேகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த CO-OPERATUR இன் ஆசிரியராக இருந்தபோதும் சரி பின்னர் SATURDAY REVIEW இல் (எஸ்.சிவநாயகம் அவர்கள் விட்டுச் சென்ற பின்) காமினி நவரத்னவுடன் சேர்ந்து கடமையாற்றிய போதும் சரி அதேகாலத்தில் அதன் சகோதர இதழான `திசை'யில் எனக்கு ஒத்தாசை வழங்கிய போது சரி ஒவ்வொருவரது எல்லைகளையும் போதாமைகளையும் சுட்டுபவராகவே இருந்துள்ளார்.

ஒருவர் விமர்சன ரீதியாகவோ கருத்தியல் ரீதியாகவோ தவறான கருத்தொன்றை முன்வைக்கும் பட்சத்தில் அத்தவறைச் சுட்டிக் காட்டுவதற்கு ஏ.ஜே.நேரடியாக அவருக்குப் பதில் எழுதுவதில்லை. மாறாக அவருடைய தவறைச் சுட்டிக்காட்டுகின்ற வகையில் இன்னொரு படைப்பை மொழிபெயர்த்து அதே பத்திரிகையில் வெளியிடுவார். அது பற்றியாரும் பிரஸ்தாபித்தால், "இது அவருக்கு ஒரு சின்னக் குட்டு, இனி அவர் அந்தப் பிழையை விடமாட்டார்" என்பார் தனக்கே உரிய கவர்ச்சியான புன்முறுவலோடு அத்தகைய பரந்த வாசிப்பு அவருக்கு இருந்ததாலேயே அவருக்கு இவ்வாறு இயங்குதல் சாத்தியமாயிற்று.

இடது சாரிக் கொள்கையோடு தோழமை பூண்ட ஏ.ஜே., முற்போக்கு எழுத்தாளர்கள், விசேடமாக க.கை., சிவத்தம்பி ஆகியோர் இடத்தும் விசேட அபிமானம் பூண்டவராக இருந்தார். அதற்காக அவர்களது கொள்கைகளுக்கு எதிர்வினையாற்றிய மு.த.போன்றோரோடும் பகைமை பாராட்டியவர் அல்லர்.

இவரைப்பற்றி எனக்குப் பிடித்தமான வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு பிறத்தியான்' (OUT SIDER). அதாவது எந்தப் போக்குகளோடும் `கும்பலில் கோவிந்தா' என்று சொல்லியவாறு ஒத்தோடாமல் எப்பொழுதுமே விடுபட்டு நிற்பவர். அதனால் தன்னைக் `கட்டியெழுப்புதல்' என்ற வாசனையே இல்லாதவர். அதனால்தான் யாழ்.பல்கலைக்கழகத்தில் இவரோடு கடமையாற்றிய மு.நித்தியானந்தன் இவரைப்பற்றிக் கூறுகையில், "யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ACADEMICS என்று பேர் பண்ணப்பட்டவர்கள் எல்லோருமே CAREERISTS களாக இருந்த அவலச் சூழலில் ஏ.ஜே.ஒருMISFIT ஆக இருந்தார். ஆனால் அவரே பல்கலைக்கழகத்தின் வரண்ட வெம்மையில் எங்களுக்கு குளிர்தரும் நிழலாக இருந்திருக்கிறார்" என்று கூறியது மிகப் பொருத்தமானதே.

ஏ.ஜே.இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு நூல்கள் என்ற தொகைக் கணக்கில் பார்க்கையில் சிறியதாயினும் மகத்தானது அறுபதுகளில் தமிழ் சிறுகதைகளை மொழிபெயர்த்து OBSERVER பத்திரிகையில் வெளியிட்டார். சாந்தினி என்பவரின் `நீறு பூத்த நெருப்பு' என்ற சிறுகதையை WONTED FIRE என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தார். டொமினிக் ஜீவாவின் ஞானம் சிறுகதையை MONARCH என்ற தலைப்பில் வெளியிட்டார். அன்று தொடங்கிய மொழிபெயர்ப்பு அண்மைக்காலம் வரை நீடித்தது. LUTESONG AND LAMENT என்ற தலைப்பில் பேராசிரியர் செல்வ.கனகநாயகத்தால் வெளியிடப்பட்ட இலங்கை எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் அடங்கிய நூலில் ஏ.ஜே.யின் மொழிபெயர்ப்புகளும் உண்டு. அவ்வாறே நுஃமான் வெளியிட்ட தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூலுக்கும் இவர் பெரிய பங்காற்றியுள்ளார். இந்தியாவில் இருந்து வந்துகொண்டிருக்கும் சிறந்த இலக்கிய ஏடான THE LITTLE MAGAZINE களிலும் இவரது இலங்கை எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகள் அச்சேற்றப்பட்டுள்ளன. சிங்கள புத்திஜீவிகள் மத்தியிலும் இவரது பெயர் நன்கு அறியப்பட்டது. றெஜி சிறிவர்தனவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஏ.ஜே.அவர் இறந்த பின் அவரது ஆக்கங்களைத் திரட்டி, தெரிவு செய்து "SELECTED WRITINGS OF REGI SIRIWARDANA' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியிட முன்னின்று உழைத்தவர் இவரே. நோய் வாய்ப்பட்டு அவர் கொழும்பில் அவரது சகோதரன் வீட்டில் தங்கியிருந்த போது அதன் இரண்டாவது தொகுப்பு தொடர்பாக அவர் எழுதிய முன்னுரையே அவரது கடைசி ஆங்கில ஆக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எவ்வாறு ஏ.ஜே.அநேக தமிழ் எழுத்தாளர்கள் அவரது உதவி வேண்டி வந்தபோதெல்லாம் அவர்களுக்கு உதவி செய்ய முன்னின்றாரோ அவ்வாறே ஆபத்தான நிலைக்குள் அகப்பட்ட எழுத்தாளர்களையும் புத்தி ஜீவிகளையும் அவர் காப்பாற்றியுள்ளார். எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் இயக்கங்களின் பிடியில் சிக்குண்ட சில பிரபல கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவரது தலையீட்டால் உயிர் தப்பியதும் உண்டு.

ஏ.ஜே.யிடம் இயல்பான நகைச் சுவை எப்போதும் உள்ளோடிக் கொண்டிருக்கும் என்பதற்கு உதாரணமாக பின்வரும் நிகழ்ச்சியை சொல்லலாம். 1977 இல் ஒரு கட்சி அபேட்சகருக்காக தீவுப் பகுதியில் வேலை செய்த பத்திரிகையாளர் ஒருவர் பற்றி ஏ.ஜே.பின்வருமாறு கேட்டார்.

"என்ன அவன் தன்ர நண்பனுடைய பொண்டாட்டியை கூட்டிக் கொண்டு ஓடி விட்டானாமே, உண்மையா?"

"உண்மை தான். என்ன செய்வது, தேர்தலில் அவன் வேலை செய்த அபேட்சகர் தோற்றுப் போன டென்ஷனில் இருந்தவனுக்கு அதைக் குறைக்க ஒரு Outlet என்றேன் விளையாட்டாக.

"No, no, He Found an inlet, rather' G?-?? H.??. ??-?-?z-u-????.

நான் உரத்துச் சிரித்தேன் அதிலிருந்த நகைச் சுவையை ரசித்து.

இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்கள் எவ்வாறான மன நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கு ஏ.ஜே.கூறிச் சென்ற பின்வரும் சங்கற்ப வடிவிலான கூற்று உதாரணம்.

ஆங்கில மொழியே வீட்டு மொழியாகவும் பயிலப்படும் சூழலில் பிறந்த ஏ.ஜே., பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டம் பெறுவதற்குரிய பாடமாக ஆங்கிலத்தையே தேர்ந்தெடுத்தவர். பட்டப் படிப்பிற்குப் பின்னர் Daily News பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்த காலத்தில் - 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் அவரிடம் புதிய விழிப்பை ஏற்படுத்திற்று. அந்த விழிப்பானது அவரிடம் புதிய சங்கற்பத்தை மேற்கொள்ள வைக்கிறது. இதோ அவரே அச் சங்கற்பம் பற்றி பின் வருமாறு கூறுகிறார்.

"ஆங்கிலம் அரச மொழியாகக் கொலுவீற்றிருந்த காலத்தில் கல்விப் பயிற்சி பெற்றவன் நான். எனவே தமிழை முறையாகக் கற்கும் வாய்ப்பு இல்லாது போய் விட்டது. சிங்களச் சட்டத்தின் அனுகூலம் - பிரதிகூலம் பற்றிய விசாரணை தேவையில்லை. ஆனால் அச் சட்டம் காரணமாகத் தமிழ் அபிமானம் மீதூர்தல் பெற்றவர்களுள் நானும் ஒருவன். அந்த அபிமானமே தமிழில் எழுதுதல் வேண்டும் என்ற முன் முனைப்பின் ஊக்கமாகவும் அமைந்தது".

இது "மத்து" என்ற அவரது நூலுக்கு 26-08-1970 இல் எழுதப்பட்ட என்னுரையில் காணப்படுவது.

இது அவரின் தமிழ் உணர்வைக் காட்டும் அதே நேரத்தில் இன்று தமிழ் மக்கள் சகலரும் உய்த்துணர வேண்டிய ஒன்றாகவும் நிற்கிறது.

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து இலக்கிய செழுமைக்கு பணிபுரிந்த விமர்சக அறிஞன் ஒருவனின் மறைவு

* ஏ.ஜே.கனகரத்னா பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு

-பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி-

சென்ற வாரம் ஏ.ஜே.கனகரத்னா கொழும்பில் தனது சகோதரர் இல்லத்தில் காலமானார். நீண்ட காலம் சுகவீனமாக இருந்த அவர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக வந்த பின்னர், தான் விரும்பியபடி யாழ்ப்பாணம் செல்ல முடியாது கொழும்பிலேயே காலமானார். அவரது வேண்டுகோளை நிறைவேற்ற விரும்பிய அவரது குடும்பத்தினர் மிகுந்த அமைதியான சூழலிலே இறுதிக் கடன்களை செய்ய விரும்பினர். உண்மையில் சில நண்பர்களின் வாய்மொழி மூலமாகவே தகவல் பரப்பப்பெற்றது. ஒருவர் மற்றவருக்கு கூறி பரவிய செய்தி தமிழ் வானொலிகளிலும் தமிழ் அச்சு ஊடகங்களிலும் ஆங்கில அச்சு ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்ட ஒரு செய்தியாக மாறிற்று. ஏ.ஜே.கரகரத்னாவின் பணிகள் வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய சமூக பிரக்ஞையே ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏ.ஜே.கரகரத்னாவுக்கு இலங்கையின் தமிழ் இலக்கிய வட்டாரங்களிலும் ஆங்கில இதழியல் வட்டாரங்களிலுமுள்ள தன் மதிப்பின் இயல்பான வெளிப்பாடாகும். ஏறத்தாழ கடந்த இரண்டு வருடங்களாக எழுத்துலகில் அவர் அதிக ஈடுபாடு காட்டவில்லையெனினும், அவர் பற்றிய சமூக மதிப்பீடு எத்துணை உண்மையானதாகவும் ஆழமானதாகவுமிருந்தது என்பதை இது காட்டுகின்றது.

தன் திறமைகளை தானே தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்ள முயன்ற ஒரு நுண்ணிய நெஞ்சினை மிகச் சரியான முறையில் தமிழ் இலக்கிய உலகு மதிப்பிட்டிருந்தது. இந்த சம்பவத்தினால் தெரிய வந்தது. இந்த மதிப்பின் தளமாக அமைந்த அவரது சாதனைகள் யாவை? அவைபற்றிய விபரிப்பில் இறங்குவதற்கு முன்னர் அவர் தொழிற்பட்ட காலம் அந்தப் பணிகளின் வீச்சு பற்றி ஓர் அறிமுக குறிப்பு அவசியமாகின்றது.

ஏறத்தாழ 1960களில் மலரத் தொடங்கிய ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பல்துறைப்பட்ட வளர்ச்சி வரலாற்றில் ஏ.ஜே.கனகரத்னா என்பது ஒரு முக்கியமான பெயராகும். அந்தக் காலத்து வரலாறு எழுதப்படும் பொழுது கரகரத்னாவின் பணிகள் பற்றிய குறிப்புகள் இல்லாமல் அந்த வரலாற்றையே நிறைவு செய்ய முடியாது. அந்த இலக்கிய வளர்ச்சிகளின் முக்கிய உந்து சக்திகளில் ஒருவராக அவர் விளங்கினார்.

இன்று பின்நோக்கி பார்க்கும் பொழுது ஏ.ஜே.கனகரத்னாவின் மிகப் பெரிய பங்களிப்பு, அவர் வளரும் ஈழத் தமிழ் இலக்கியத்தின் செழுமையை ஆங்கிலம் மூலமாக உலகறியச் செய்தார். அதேவேளையில், தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கிய உலகின் வளர்ச்சிகளை தமது எழுத்துகளின் மூலமும் தமது கலந்துரையாடல்கள் மூலமும் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்தப் பணியினை, குறிப்பாக இரண்டாவது பணியினை அவர் நடத்திய முறைமை அவரை அக்காலத்தில் நிலவிய இலக்கிய விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாலான ஒருவராக வைத்திருந்தது. உண்மையில் வேறுபடும் கருத்து நிலையினர் ஒவ்வொருவரும் அவரை தம்பக்கத்து ஆள் என்றே கூறிக் கொண்டனர். இதற்கு நல்ல உதாரணமாக அமைவது `மல்லிகை' வழியாக ஜீவாவுடனும் அவரது நண்பர்களுடனும் வைத்திருந்த தொடர்புகளும் எஸ்.பொ., இளம்பிறையுடனும் அவருக்கிருந்த தொடர்புமாகும்.

அவருடைய ஒரே ஒரு பிரசுரமாக இன்றுள்ள `மத்து' கட்டுரைத் தொகுதி எஸ்.பொ.வே முன்னின்று வெளியிட்டிருந்தார். ஆனால், ஏ.ஜே.யோ இந்த சர்ச்சைகளுக்கு அப்பாலானவராய், முகில்களுக்கு மேலேயுள்ள மலை விளக்குப்போல பிரகாசித்துக் கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறிப்பாக இப்பொழுது மேல் நாடுகளிலே உள்ள சில இலக்கிய ஆர்வலர்களும் புரவலர்களும் அவரை முற்போக்கு வாதத்தின் எதிர்நிலை விமர்சகராக காட்டுவதில் மிகுந்த சந்தோசப்பட்டனர்.

மேலே கூறியதைப் போல இந்த முகில்கள் அந்த சூரியனை பாதிக்கவில்லை.

பிற்காலத்தில் அவர், குறிப்பாக இளைப்பாறியதன் பின்னர் ஈழத்து இலக்கிய படைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பைச் செய்துள்ளார். நண்பர் மு.பொ.வின் `பொறிக்குள் அகப்பட்ட தேசம்' என்ற நீண்ட அற்புதமான கவிதையை அவர் ஆங்கிலத்திலே மொழி பெயர்த்துள்ள முறைமை அந்த மொழியின் பண்பாட்டுக் கூடாக மு.பொ.வின் கருத்தை, கவித்துவத்தை வெளிக்கொணர்வதாகவுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக இவருடைய எழுத்துக்கள் ஒன்று சேர்க்கப்படவில்லை. `மத்து' தொகுதியை கொண்டு வந்ததற்காக எஸ்.பொ. போற்றப்பட வேண்டும். அவருடைய தமிழ் எழுத்துகளை தொகுப்பது ஒரு புறமாக, மறுபுறத்தில் அவர் செய்த ஆங்கில மொழி பெயர்ப்புக்களை ஒரு தொகுதியாக்கி பிரசுரிக்க வேண்டுவது அவசியமாகும். கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இத்துறை ஆர்வலர்கள் ஈடுபட வேண்டுமென்பது எனது பெரு விருப்பமாகும்.

ஏ.ஜே.பற்றி வெளிவரவிருந்த மலர் ஒன்று இதுவரை எனது கைக்குக் கிட்டவில்லை. அதற்கு நான் எழுதிய கட்டுரை பற்றியும் பின் தகவல்கள் எதுவுமில்லை.

பரந்து நின்ற ஆலமரம் விழுந்ததன் பின்னர் அது நிறைந்திருந்த இடம் `வெளி'யாக தெரிவதுபோன்று ஏ.ஜே.யின் மறைவு அவருடைய முக்கியத்துவத்தை இப்பொழுது உணர்த்துகின்றது.

ஏ.ஜே.யின் இலக்கிய ஆளுமைக்குள் முக்கியத்துவம் அவரது ஆசிரிய பணிக்கும் உண்டு. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 15 வருடங்களுக்கு மேல் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பிக்கும் ஆங்கில போதனாசிரியராக அவர் கடமையாற்றினார். அவரது வகுப்புகளை மாணவர்கள் பெரிதும் விரும்பினர். அவருடைய பிரிவுக்கு சாராதவர்கள் கூட அவரது வகுப்புக்கு செல்வதுண்டு. உண்மையில் அவரது ஆங்கில மாணவர்கள் பலருக்கு அவருடைய இலக்கிய ஆளுமை பற்றித் தெரியாது. அவரையொரு தலைசிறந்த ஆசிரியராக கருதினர். பெரு மதிப்பும் வைத்திருந்தனர். தொழில் நிலையில் அவர் ஆசிரியராகவும் இதழியலாளராகவும் சிறப்புற்று விளங்கினார்.

இவருடைய சிறப்புக்கான தளம் இவருக்கு இருந்த ஆழமான ஆங்கில அறிவும் தமிழ் இலக்கிய பரிட்சயமும் ஆகும். தன்னுடைய ஆங்கில அறிவை தமிழிலே தமிழ் நிலைப்பட எடுத்துக் கூறும் ஆற்றல் அவரிடத்து இருந்தது.

இதனால் அவர் வழியாக ஆங்கில இலக்கிய பரிச்சயம் தமிழ் மொழி வழிவந்த எழுத்தாளர்களுக்கு கிட்டிற்று. இந்த எடுத்துரைப்பும் தொடர்பாடலும் இத்துணை நேச நிலைப்பட்டதாகவும் நட்பிறுக்கம் கொண்டதாகவும் அமைந்தமைக்கு காரணம் அவரது ஆளுமையின் இயல்பே ஆகும்.

ஏ.ஜே.கனகரத்னா என்றுமே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவரல்ல. தன் பாதையிலே போவார். ஆனால், அதற்காக எந்த விதமான புறவெளிப்பாடுகளையும் காட்டிக் கொள்ள மாட்டார்.

அவரிடத்து மிகுந்த அபிமானம் கொண்டவர்களே அவரது நண்பர்களாகினர். மிகச் சிறிய ஒரு தொகையினரே அவரது நண்பர்களாக விளங்கினர். அவருக்காக பல பணிகளைச் செய்தவர்கள், அவரை தமது பெற்றோரைப் போல பாதுகாத்து வந்த திரு.திருமதி கிருஷ்ணகுமார் அவர்கள், அந்த அளவில் ஏ.ஜே.புண்ணியம் செய்தவரும் கூட. தனி மரமாக நின்ற அவரை கிருஷ்ணகுமார் தம்பதியினர் நன்கு பராமரித்தனர். அவரது மிக நெருங்கிய இன்னொரு நண்பர் ஆங்கிலத் துறையில் கடமையாற்றும் சிவகுருநாதன் ஆவார். சிவகுருநாதன் இல்லாவிட்டால், ஏ.ஜே.எப்பொழுதோ பல்கலைக்கழக பணியைக் கூட விட்டெறிந்திருப்பார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அவரை ஆங்கில இலக்கிய துறைக்கான விரிவுரையாளராக நியமிக்க முடியாது போனமை உண்மையில் பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்ட ஒரு நஷ்டமாகும். நியமன விதிகள் தடை செய்தன. ஆனால், அங்கு ஆங்கில இலக்கியம் கற்பித்த செல்வா கனகநாயகம் முதல் சுரேஷ் கனகராஜா வரை பலர் அவரது ஆங்கில அறிவை மெச்சிப் போற்றியவர்களாவர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏ.ஜே.க்கு இருந்த இந்த இடம் பல அசௌகரியங்களை ஏற்படுத்திற்று. அவருடைய நண்பர்கள் பலர் பேராசிரியர்களாகவும் அவரது புலமையால் பயன் பெற்ற பலர் விரிவுரையாளர்களாகவும் கடமையாற்ற இவர் ஆங்கில போதனாசிரியர் என்ற நிலைக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டு உலவி வந்தார். ஏ.ஜே.யிடமிருந்த மிகப் பெரிய பலவீனம் அவர் தன்னைத் தான் மறைத்துக் கொள்வத்றகுப் பயன்படுத்திய பழக்கம் ஆகும். ஏ.ஜே.யின் நீராகார பழக்கம் பிரசித்தமானது. அவர் தன்னை அதற்குள் மறைத்துக் கொண்டாரா அல்லது அது அவரை மறைத்துக் கொண்டதா என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. நான் அறிந்த வரையில் இரண்டுமே நடைபெற்றன. ஆனால், எக்காலத்திலும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

`டெயிலி நியூஸ்'ஸில் உதவி ஆசிரியராக இருந்த பொழுது அவருக்கு ஒரு திடீர் பதவியேற்றம் வழங்கப் பெற்றது. அனுபவ பதவியேற்றம் வழங்கப்பெற்றது. அனுபவஸ்தர்களான பல பத்திரிகையாளர்களுக்கு மேலே அவர் நியமிக்கப் பெற்றார். ஏ.ஜே.தான் அந்தப் பதவியை வகிக்க முடியாதென்று கூறினார். இறுதியில் இருந்த பதவியையும் இராஜிநாமா செய்து விட்டு `லேக் கவுஸு'க்கு வெளியே வந்தார்.

ஏ.ஜே.யின் அறிவுப்புலமையில் நிலவிய தன்னடக்கம் மிகப் பெரியது. ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பிலே இத்தகைய ஒருவரைக் காண்பது அரிது.

ஏ.ஜே.க்கும் எனக்கும் மிகுந்த நட்புறவும் புலமை ஊட்டம் பற்றி குறிப்பிடுவது என் நிலையில் முக்கியமாகவே படுகின்றது.

எனக்கு ஏ.ஜே.யை. பேராதனைப் பல்கலைக்கழக காலத்திலிருந்தே (1953௫6) தெரியும். அவர் எங்களுக்கு ஜூனியர். ஆங்கிலத்தை சிறப்புப் பாடமாகக் கொண்டிருந்தார். அக்காலத்து ஆங்கில சிறப்பு மாணவர்கள் சிங்களம், தமிழிலே பேசவே மாட்டார்கள். ஆனால், ஏ.ஜே.முற்றுமுழுதான விதிவிலக்கு. மெய்யியல் சிறப்புத் துறை மாணவர் கனகரத்னத்துக்கும் இவருக்கும் தெரியாத கந்தானை குடிநீர் நிலையங்கள் இல்லையென்றே கூறலாம். அத்தனையும் சுதேசிய மாத்திரமல்ல உள்ளூர் கலப்புத் தயாரிப்புகள். கனகரத்னாவின் உறவுகள் தமிழினை நிராகரிப்பனவாக அமையவில்லை.

இவர் `டெயிலி நியூஸ்'ஸில் கடமையாற்றிய பொழுது ஈழத்து தமிழ் சிறுகதைகளை வழக்கத்திலே மொழி பெயர்க்குமாறு என்னை ஊக்குவித்துள்ளார். டானியலின் `தண்ணீர்'க் கதையை நான் மொழி பெயர்த்தது இப்பொழுதுபோல இருக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நான் கடமையாற்ற சென்றதிலிருந்துதான் (1978) அவருடனான எனது உறவு இறுக்கமானது.

நான் ஆங்கிலத்தில் எழுதிய அத்தனை நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்து பார்ப்பதற்கும் மெய்ப்புப் பார்ப்பதற்கும் நான் அவருடைய உதவியையே நாடுவதுண்டு. இதனை நான் எனது நூல்களில் எடுத்துக் கூறியுள்ளேன். உண்மையில் எனது பண்டைய தமிழ் நாடகம் பற்றிய ஆங்கில ஆராய்ச்சி நூலிலே காணப்பெற்ற அச்சுப் பிழைகளை தொகுத்து திருத்தி தந்தவர் அவரே. அது மாத்திரமல்லாமல், ஆங்கில இலக்கியத்தின் அவ்வக்கால வளர்ச்சிகள் பற்றி அவருடன் கலந்துரையாடும் வழக்கத்தினை தவறாமல் மேற்கொண்டிருந்தேன். என்னுடன் அவர் தமது புலமைத்துறைகள் பற்றி மனம் திறந்து உரையாடியதுண்டு. தன்னுடைய விமர்சனங்களையும் வாழ்த்துகளையும் அவர் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் நான் ஏ.ஜே.யை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நமது காலத்தில் புலமைத் தூண்களில் ஒன்றாகவே மதித்து வந்துள்ளேன். போற்றிவந்துள்ளேன். அந்தளவில் நம்மிருவரிடையேயும் ஓர் ஆள்நிலை ஊட்டம் நிலவி வந்தது. நான் கொழும்புக்கு வந்த பின்னர் தடைப்பட்டுப் போயிருந்த அந்த உறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. தொலைபேசியில் பேசிக் கொள்வேன். கடந்த ஒன்றரை மாதங்களாக பேசவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

ஏ.ஜே.யினுடைய அறிவுத் திறத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. அவர் ஐ.சி.ஈ.எஸ்.க்காக பதிப்பித்துள்ள றெஜி சிறிவர்தனாவின் எழுத்து திரட்டின் முதலாம் பாகமாகும். அந்

நிறுவனத்தின் பொறுப்பாளரான திரு.தம்பிராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க ஏ.ஜே.அந்த பதிப்பு பணியை மேற்கொண்டார். அத்தொகுதிக்கு அவர் எழுதியுள்ள பதிப்பாசிரியர் உரை மிகச் சிறந்ததொன்றாகும். திரு.தம்பிராஜா அவர்களுக்கு ஆங்கில தமிழ் இலங்கை இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது.

அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா என்ற அவரது முழுப்பெயர் விபரம் பலருக்குத் தெரியாத ஒன்றாகும். ஆனால், ஏ.ஜே. என்ற முதலெழுத்துக் குறுக்கமோ எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. இது ஓரளவுக்கு அவரது ஆளுமையின் இயல்பினைக் காட்டுகின்றது. தன்னைப் பற்றி அதிகம் சொல்லாமல் அதேவேளையில் பிறருடைய சுக துக்கங்களில், நலன்களில் அவர் எப்போதுமே ஆர்வம் கொண்டிருந்தார்.

ஏ.ஜே.யை மறப்பது சுலபமே அல்ல. அவரோடு ஊடாடியவர்களுக்கு அது முடியாத காரியம். ஏனென்றால், தான் ஊடாடியவர்களின் ஆளுமைகளில் அவரின் செல்வாக்கு நிறைய உண்டு. தன்னைத்தான் மறைத்துக் கொள்ள விரும்பியவனை, இலக்கிய உலகம் மறக்கவில்லை. இனியும் மறக்காது.

-தினக்குரல்

பதிவுக்கு நன்றி கந்தப்பு,

இதோ ஏ.ஜே பற்றி சிவத்தம்பியின் நினைவுப்பகிர்வு

http://kanapraba.blogspot.com/2006/10/blog...og-post_12.html

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.