Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதில் மேற் பூனை அரசியல்? நிலாந்தன்

Featured Replies

cat%20on%20the%20wall_CI.jpg

 

ஜனாதிபதித் தேர்தல் குறித்து முஸ்லிம் கொங்கிரஸ் இது வரையிலும் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பும் அப்படித்தான். முதலில் தேர்தல் திகதி அறிவிக்கப்படட்டும் என்று சொன்னார்கள். அதன் பின்னர் இரு தரப்பினரதும் தேர்தல் விஞ்ஞானங்கள் வரட்டும் என்றார்கள். இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அதாவது, தேர்தலுக்கு ஏறக்குறைய மூன்று கிழமைகளே இருக்கும் ஒரு பின்னணியில் இரண்டு பெரிய சிறுபான்மைக் கட்சிகளினுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

முஸ்லிம் கொங்கிரஸ் அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கிறது. அவர்கள் புதிதாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதாக இருந்தால் அது நிபந்தனையுடனான இணக்க அரசியல் அல்லது பொது எதிரணியுடனான கூட்டு என்பதாகவே இருக்க முடியும். ஆனால், கட்சியின் உயர் மட்டம் அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கவே விரும்புவதாகத் தெரிகிறது. அதே சமயம் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியிலும் அரசாங்கத்திற்கு எதிரான உணர்வலைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, கட்சி தனது வாக்காளர்களுக்கும் தலைவர்களின் நலன்களுக்குமிடையே கிழிபடுகிறது.

ஆனால், கூட்டமைப்பின் நிலை முழுக்க முழுக்க இதை ஒத்ததல்ல. கட்சிக்குள் பல்வேறு வகைப்பட்ட தரப்பினரையும் காண முடிகிறது. ஒரு பகுதியினர் இரண்டு வேட்பாளர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அனைத்துலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்படும் வேட்பாளரை விட ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு வேட்பாளர் வெல்வராக இருந்தால் அது நீண்ட எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையும் என்று இத்தரப்பு நம்புகின்றது. எனவே, தேர்தலில் பார்வையாளர்களாக இருக்க இத்தரப்பு விரும்புகின்றது.  மற்றொரு தரப்பு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறது. பொது எதிரணியை நம்பி வாக்களிப்பது என்பதைவிடவும் வாக்காளிக்காமல் விடுவது என்பது மேற்கு நாடுகளிற்கு உவப்பானது அல்ல என்றவொரு நோக்கு நிலையிலிருந்து தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இதே தரப்பைச் சேர்ந்த ஒரு பகுதியினர் நம்புகிறார்கள், பொது எதிரணி வென்றால் இப்போது இருப்பதை விடவும் அதிகரித்த அளவில் ஒரு சிவில் வெளி கிடைக்கும் என்று.

மேற்கண்ட தரப்புக்களைவிட மற்றொரு தரப்பும் உண்டு. அது தேர்தலைப் பகிர்ஸ்கரிக்க வேண்டும் என்று கூறுகிறது. கட்சித் தலைவர்கள் பொது எதிரணிக்குச் சாதகமான ஒரு முடிவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எடுப்பதாக இருந்தால் அதன் பின் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று இத்தரப்பினர் கூறுகிறார்கள். சில வேளை பொது எதிரணி வென்று அதன் பின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என்றால் கூட்டமைப்பின் தலைமையானது அத்தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்று தனது இராஜதந்திரப் போர் வெற்றிபெறவில்லை என்பதை ஒப்புக்கொண்டு தலைமைப் பொறுப்பை துறக்க வேண்டும் என்றும் மேற்படி தரப்பினர் கூறிவருகிறார்கள்.

இதுதான் கூட்டமைப்பின் உட்கட்சி நிலவரம். இத்தகையதொரு பின்னணியில் தனது கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் பொறுப்புக் கூறவல்லதொரு முடிவை கூட்டமைப்பானது ஏற்கனவே எடுத்திருந்திருக்க வேண்டும்.

அவர்கள் ஒன்றில் முடிவெடுக்க முடியாத ஒரு நிலையிலிருக்கிறார்கள் அல்லது ஒரு முடிவை எடுத்துவிட்டு அதை வெளிப்படுத்துவதற்குரிய ஒரு காலச் சூழலுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அவர்களால் ஒரு முடிவை இதுவரையிலும் எடுக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் என்ன? அல்லது எடுத்த ஒரு முடிவை கட்சி உறுப்பினர்களுக்கும் வாக்காளர்களுக்கும் வெளிப்படையாகக் கூறமுடியவில்லை என்று சொன்னால் அதற்கு என்ன காரணம்?

இக்கேள்விகளுக்கான விடைகள் பின்வருமாறு அமைய முடியும்.

விடை ஒன்று: ஒரு முடிவை எடுக்க முடியாத அளவிற்கு இலங்கைத் தீவின் இனவாதச் சூழல் உக்கிரமாகக் காணப்படுகிறது என்று பொருள். பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களைப் பற்றி எதுவுமே கிடையாது. எது எரியும் பிரச்சினையோ அதைப் பற்றி அங்கே எதுவும் இல்லை. ஆனால், அந்த பிரச்சினையின் விளைவைப் பற்றியும் விளைவின் விளைவுகளைப் பற்றியும் தேர்தல் விஞ்ஞாபனம் பேசுகிறது. நாடு இன்று எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளுக்கும் மூல காரணம் இனப்பிரச்சினைதான். கார்ல் மார்க்ஸ்; கூறியதுபோல, ஒடுக்கும் இனமானது என்றைக்குமே நிம்மதியாக இருக்க முடியாது. தமிழர்களை ஒடுக்கிய அரச இயந்திரமே முடிவில் சிங்களவர்களையும் ஒடுக்குவதாக மாறியது. எனவே, இன ஒடுக்குமுறையைப் பற்றிக் கதைக்காமல் ஏனைய எதைப் பற்றியும் கதைக்க முடியாது.

அதேசமயம், இன ஒடுக்குமுறையின் விளைவாகிய போர்க் குற்றங்களைப் பற்றி அந்த அறிக்கை மறைமுகமாகப் பேசுகிறது. எந்தவொரு குற்றச்சாட்டப்பட்ட நபரையும் வெளிச் சக்திகளிடம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்றவோர் உத்தரவாதத்தையும் அது வழங்குகிறது.

எவ்வளவு கொடுமை? ஒடுக்கப்பட்டவர்கள்  பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத அவ்வறிக்கை ஒடுக்குமுறையாளர்களை அவர்களுடைய போர்க் குற்றங்களிலிருந்து பாதுகாப்பது பற்றிய வாக்குறுதிகளை வழங்குகிறது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து தமிழ் எதிர்ப்;பானது பூச்சியமாக்கப்பட்டுவிட்ட சுமார் ஐந்தே முக்கால் ஆண்டுகளுக்குப் பின்னரும் தென்னிலங்கையின் அரசியல் நிலைவரம் அதுதான். இத்தகையதொரு பின்னணியில் கூட்டமைப்பானது மகிந்தவையும் நெருக்க முடியாது, மைத்திரியையும் நெருக்க முடியாது என்றவொரு நிலையே காணப்படுகிறது. இது காரணமாகவே அவர்கள் துலக்கமான முடிவுகளைக் கூறத் தயங்கக் கூடும்.

விடை இரண்டு: சக்தி மிக்க வெளிநாடுகளின் ஆலோசனைகளை அல்லது அறிவுறுத்தல்களை மீறிப் போக முடியாதவொரு காரணத்தால் அவர்கள் தேர்தலை பகி~;கரிப்பது பற்றி சிந்திக்கவே முடியாதுள்ளது.

விடை மூன்று: பொது எதிரணியோடு ஏதும் கனவான் உடன்படிக்கைக்குக்கூட வந்திருந்தாலும் கூட அதைப் பகிரங்கப்படுத்த முடியாது. அது அதன் இறுதி விளைவாக அந்த உடன்படிக்கைக்கே எதிராக மாறலாம்.

விடை நாலு: கூட்டமைப்பின் தலைமை பலவீனமாகவுள்ளது. அதாவது, தனது முடிவுகளை கட்சிக்குள்ளும் வாக்காளர்கள் மத்தியிலும் எடுத்துக்கூறி கட்சியையும் வாக்காளர்களையும் நம்பவைக்கத் தக்க ஆற்றல் அவர்களிடம் இல்லை.

விடை ஐந்து: கூட்டமைப்பின் உட்கட்சி ஜனநாயகச் சூழல் மிகப் பலவீனமாகக் காணப்படுகிறது. அதாவது முடிவுகள் பொதுக் குழுவிலோ அல்லது மையக்குழுவிலோ கூடிப் பேசி எடுக்கப்படுவதில்லை. மாறாக, அவை சில தனிநபர்களுக்குள், மூடிய அறைகளுக்குள் எடுக்கப்படுகின்றன.

விடை ஆறு: முஸ்லிம் கொங்கிரஸைப் போலவே கூட்டமைப்பும் பொது எதிரணிக்குள்ள வெற்றி வாய்ப்புக்களைக் குறித்து முழு அளவு நம்பிக்கை வைக்க முடியாத நிலையிலிருக்கிறது. மகிந்த தோற்பார் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு முடிவெடுப்பது வேறு. அது பற்றிய சந்தேகங்கள் இருக்கும்போது முடிவெடுப்பது வேறு. இது விசயத்தில் மதில் மேல் பூனையாக இருப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது. இல்லையென்றால் மகிந்த வெல்வராக இருந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் அதன் பின்விளைவுகளை கூட்டமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மேற்கண்ட விடைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். கூட்டமைப்பின் தலைமையானது தனது கட்சி உறுப்பினர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் முழு அளவு வெளிப்படையாக இருக்க முடியாத ஓர் அரசியல் நிலைப்பாட்டோடு காணப்படுகிறது என்பதே அது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள எனது நண்பர் ஒருவர் கேட்டார், கூட்டமைப்பு யாருக்கு உண்மையாக இருக்க வேண்டும். வாக்களித்த மக்களுக்கா? அல்லது சக்தி மிக்க வெளித் தரப்புக்களுக்கா? என்று. கடந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் மகத்தான மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு கட்சி தனது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தலைக் குறித்து அத்தேர்தலுக்கு மூன்று கிழமைகளே உள்ள ஒரு பின்னணியில் இன்று வரையிலும் எதையுமே துலக்கமாக கூறியிருக்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த வியாழக்கிழமை தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.அது கூடப் பிந்திவிட்டது. ஆனால், கூட்டமைப்போ அல்லது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டோடு காணப்படும் தமிழ் சிவில் அமைப்புக்களோ இன்று வரையிலும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளை அறிவித்திருக்கவில்லை.

இம்மாதம் 7ஆம் திகதி யாழ் மறைக்கல்வி நிலையத்தில் இது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது .தமிழ் சிவில் சமூகங்களின் அமையம் அதை ஏற்பாடு செய்திருந்தது. இம்மாதம் 15ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கிறது. தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அதை ஏற்பாடு செய்திருந்தது.

ஒப்பிட்டளவில் தமிழ் ஊடகங்கள் இது தொடர்பாக ஏற்கனவே வாதப் பிரதிவாதங்களைத் தொடங்கிவிட்டன. அரசியல் வாதிகளும், சிவில் அமைப்புகளும் முடிவுகளை எடுக்க தயங்கிக் கொண்டிருந்த ஓரு பின்னணியில் இது தொடர்பில் அச்சு ஊடகங்களிலும் இணைய ஊடகங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு எழுதப்பட்டிருக்கிறது. இதுவொரு நல்ல வளர்ச்சி. வாக்காளர்களுக்கு வழி காட்ட வேண்டிய பெரிய கட்சி மதில் மேல் பூனையாக மௌனம் காக்கும்போது அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல சிவில் அமைப்புகள் துலக்கமான முடிவுகளை மக்கள் முன் வைக்கத் தவறிய ஒரு பின்னணியில் தமிழ் ஊடகப் பரப்பில் பத்தி எழுத்துக்களாகவும், ஆய்வுக் கட்டுரைகளாகவும், ஆசிரியர் தலையங்கங்களாகவும் நேர்காணல்களாகவும் இது தொடர்பில் ஆரோக்கியமான ஒரு விவாதப் பரப்பு ஏற்கனவே திறக்கப்பட்டிருக்கிறது.

கூட்டமைப்பு எத்தகையதொரு முடிவையும் எடுக்கலாம். அதை அவர்கள் ஏற்கனவே எடுத்துமிருக்கலாம். அதை வெளிப்படையாகக் கூறுவதில் அவர்களுக்கு நடைமுறைச் சிக்கல்களும் இருக்கலாம். ஆனால், அப்படி வெளிப்படையாக பேச முடியாத ஒரு சூழலே இலங்கைத்தீவில் காணப்படுகிறது என்பதையாவது அவர்கள் வெளிப்படையாகப் பேசியிருந்திருக்க வேண்டும். அரசியலில் தீர்மானங்களை ஒத்திவைப்பது அல்லது மறைப்பது என்பது கூட ஓர் அரசியல் தீர்மானம் தான் என்பதை இக்கட்டுரை புரிந்துகொள்கிறது. ஆனால், அதற்காக வாக்களித்த மக்களுக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிச் செல்ல முடியாது. மக்களே சிந்தித்து முடிவெடுக்கட்டும் என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டால் வாக்காளர்கள் முடிவு எடுக்கத்தக்க விதத்தில் அவர்களை அறிவூட்ட வேண்டும். அதற்கு வேண்டிய பிரசுரங்களையும் அறிக்கைகளையும் வெளியிட வேண்டும். அது தொடர்பிலான கருத்தரங்குகளை ஓழுங்கு செய்யவேண்டும். ஆனால், அப்படி எதுவும் இதுவரையிலும் நடந்திருக்கவில்லை. அதிகம் போவான் ஏன்? தனது கட்சி உறுப்பினர்களுக்கே இது தொடர்பிலான விளக்கக் கூட்டங்களையோ கருத்தரங்குகளையோ கூட்டமைப்பு இதுவரையிலும் ஒழுங்குபடுத்தியிருக்கிறதா?

சில கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பட்டும் பாடமாலும் பூடகமாகவும் பேசிவருகிறார்கள். ஒரு மாகாண அமைச்சர் பொது எதிரணிக்கு சாதகமான தொனியில் உரையாற்றியும் இருக்கிறார். மற்றும்படி கூட்டமைப்புக்கும் சேர்த்து மனோ கணேசனே அவ்வப்போது கருத்துக்களைக் கூறிவருகிறார்.

உன்னதமான தலைமைகள் தீர்க்க தரிசனம் மிக்க முடிவுகளை எடுக்கின்றன. அம்முடிவுகளின் உடனடி விளைவுகள் எவ்வாறு இருப்பினும் இறுதி இலக்கை நோக்கி பின்வாங்காது மக்களை வழி நடத்திச் செல்வதன் மூலம் உன்னதமான தலைமைகள் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைத்தெடுக்கின்றன.

ஐந்தே முக்கால் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆயுதப் போராட்டத்தின்போது ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் எல்லா முடிவுகளையும் மக்களைக் கேட்டு எடுக்கவில்லை. ஆனால், அந்த முடிவுகளில் அநேகமானவை படைத்துறை சார்ந்த முடிவுகளாக இருந்தன. அல்லது படைத்துறை நோக்கு நிலையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளாகவிருந்தன. தமிழ் மக்கள் அநேகமாக அதைக் கேள்வி கேட்கவில்லை. அவை இராணுவ ரகசியங்களோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள். அந்த முடிவுகளை ரகசியமாக வைத்திருப்பதன் மூலம் உயிர்களையும் போர்க்கள வெற்றிகளையும் பாதுகாக்க முடியும் என்றும் ஒரு நம்பிக்கை இருந்தது.  ஆனால், இப்பொழுது கூட்டமைப்பிடம் படையும் இல்லை. நிலமும் இல்லை. இராணுவ ரகசியங்களும் இல்லை.

தாம் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்று தமது கனவை நோக்கி யதார்த்தத்தை வளைத்து எடுக்கலாம் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் நம்புவார்களாக இருந்தால் வியாட்நாமிய விடுதலைப் போரின் பெரும் தலைவரான கோசிமின் கூறியதை அவர்கள் பின்பற்றுவார்களா?

சக்மி மிக  அமெரிக்காவை எதிர்த்து போராடி உங்களால் எப்படி வெற்றிபெற முடிந்தது என்று கோசிமினிடம் ஒரு முறை கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார்... ‘‘எந்த உண்மையையும் மக்களிடம் மறைக்காதீர்கள். அவை கசப்பான உண்மைகளாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்.”

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114642/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சகல விடயங்களையும் தெளிவாகப் புரியவைக்கும் நிலாந்தனின் கட்டுரையை எத்தனை பேர் படிக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

கூட்டமைப்பு ஒரு முடிவை அலசி ஆராய்ந்து எடுக்கத் துணிவற்ற தலைவர்களைக் கொண்டிருக்கின்றது என்பதும் மக்களின் ஆணையைப் பெற்றிருந்தும் அவர்களை வழிநடத்த முடியாத பலவீன நிலையில் இருப்பதும் அப்பட்டமாகத் தெரிகின்றது.

"எந்த உண்மையையும் மக்களிடம் மறைக்காதீர்கள். அவை கசப்பான உண்மைகளாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்"

இந்தக் கோசிமினின் வார்த்தைகளின்படி செயற்படுமளவிற்கு கூட்டமைப்பு மக்களை ஒருபோதும் நம்பியதில்லை. அவர்கள் தாங்கள் நினைப்பதுதான் சரி என்று நம்புவார்கள் அல்லது பலம் மிக்க சக்திகளின் செய்திகளையும், முடிவுகளையும் காவும் தூதுவர்களாக இருப்பார்கள். உண்மைகளை சொல்லுவதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை. விரும்பவும் மாட்டார்கள்.

நிலாந்தனின் கட்டுரைகள் யதார்த்தமானது. அதே வேளை எனக்கு பிடித்த அம்சம் எவரையும் தனிப்பட்ட ரீதியிலோ அரசியல் ரீதியிலோ காயப்படுத்தாது சொல்ல வந்த விடயத்தை மிக தெளிவாக அவர் சொல்லும் பாங்கு.

தோல்வியடைந்து மனவேதனைகளை சுமந்து நிற்கும் ஒரு சமுதாயம் தனக்குள் நடைபெற்ற தவறுகள் தொடர்பாக சுயவிமர்சனம் செய்வதற்கு அவரின் இந்த விமர்சன பாங்கு மிக அவசியமானது. வேதனையுடன் தன்னம்பிக்கை இழந்து நின்றும் இனத்தில் விமர்சன கட்டுரைகள் என்ற போர்வையில் மேலும் பிரிவினைகளை வளர்தது அரசியல் செய்ய அல்லது தாம் ஏதோ மேதாவிகள் என்று காட்ட சிலர் முற்படுகையில் எல்லா தரப்பையும் சம்மாக மதித்து அவர்களின் தவறுகளைக் கூட கெளரவமான கண்டனங்களுடன் சுட்டிக்காட்டி பொறுப்புணர்வுடன் தனது விமர்சனக் கட்டுரைகளை எழுதிவருகின்றார் திரு நிலாந்தன். இவரைப்போல போன்ற விமர்சகர்களே நொந்து நொடிந்து போயுள்ள எமது இனத்தில் தன்னம்பிக்கையை உருவாக்க உதவும்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.