Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீகே விமர்சனம்

Featured Replies

இந்தியாவின் பெரிய பிரச்னைகளில் போலி சாமியார்களும் உண்டு. ஹிந்து மதத்தில் மட்டும் இல்லாமல் முஸ்லிம்கள், க்ரிஸ்தவர்கள், இன்னும் இருக்கும் எல்லா மதங்களிலும் இவர்களே அதிகம். இவர்களை முக்கியமாக எடுத்துக்கொண்டு இப்படிப்பட்டவர்களின் பணம் சேர்த்தல், இவர்களை நம்பும் மக்கள், அதனால் விளையும் பிரச்னைகள் என்பவற்றையெல்லாம் நகைச்சுவை கலந்த திரைக்கதையாகச் சொல்லியிருப்பதுதான் பீகே. நம்மூரில் பல படங்களில் வந்துவிட்ட சப்ஜெக்ட் இது. எம்.ஆர் ராதாவின் ஃபேவரைட் விஷயம். ஹிந்தியில் ‘Oh My God’ படத்துக்குப் பின்னர் இப்போது மறுபடியும் எழுந்திருக்கிறது.

பீகேவின் கதை இதற்குள் எல்லாருக்கும் தெரியும் என்பதாலும், அதைப்பற்றிப் பேசினாலும் படம் பார்க்காதவர்களை அது பாதிக்காது என்பதாலும் – வேறு கிரகம் ஒன்றில் இருந்து பூமிக்கு வரும் ஒரு ஏலியன், ஒரு பொட்டல்காட்டில் தனது கழுத்தில் இருக்கும் சாதனம் ஒன்றைத் திருட்டுக்கொடுக்கிறது. அந்த சாதனத்தால் மட்டுமே அவனால் அவனது கிரகத்தைச் சேர்ந்த விண்கலத்தை அழைக்க முடியும். அந்த சாதனத்தைத் தேடிச் சில இடங்களில் அலைகிறது. அப்போது பைரோன் ஸிங் என்ற நபரின் வண்டி இந்த ஏலியனின் மீது இடித்துவிடுவதால் பைரோன் ஸிங் இவனைத் தன்னுடன் சில நாட்கள் வைத்துக்கொள்கிறார். மெல்ல மெல்ல மனிதர்களைக் கவனித்து, போஜ்புரி மொழியைக் கற்கிறது அந்த ஏலியன். பின்னர் தனது தொலைந்துபோன சாதனத்தைத் தேடி தில்லிக்கு வருகிறது. அங்கே தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஜக்குவை சந்திக்கிறது (ஜெகத் ஜெனனி). இதன் பிறகு அந்த ஏலியனுக்கு அதன் சாதனம் கிடைத்ததா என்பதே படம்.

இது உண்மையில் ஒரு மிகவும் சாதாரணமான கதைதான். கதையில் பல இடங்களில் லாஜிகலாக இல்லாமல் சீன்கள் சொருகப்பட்டிருப்பதும் புரிகிறது. ஆனால் இதனாலெல்லாம் படம் அலுத்துவிடுவதில்லை. மாறாக, ஒரு தரமான கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது பீகே. காரணம் இதில் கேட்கப்படும் கேள்விகள்தான். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி ஏற்கெனவே 3 Idiots படத்தில் கல்விமுறையைக் கேள்வி கேட்டிருந்தார்; அதற்கும் முன்னர் முன்னாபாய் எம்.பி.பி.எஸ்ஸில் மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் விமர்சித்திருந்தார் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதே பாணியில் இப்போது இந்தியாவின் போலிச்சாமியார்களை விமர்சித்திருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் இந்தக் கேள்விகளைக் கேட்கலாம். இருந்தாலும் ஒரு ஏலியன் வந்து பூமியில் நிலவும் மடத்தனங்களைப் பட்டியலிட்டு அவற்றைப்பற்றிக் கேட்கும்போது அந்த விஷயங்களின் பரிணாமமே மொத்தமாக மாறிவிடும்தானே? எக்கச்சக்கமான கடவுள்களும் ஏராளமான மதங்களும் இருப்பது பீகேவுக்குப் புரிவதில்லை. சாதனம் கிடைப்பது கடவுளின் அருளில்தான் இருக்கிறது என்பதால் கடவுள் என்னும் வஸ்துவைப் புரிந்துகொள்ள அந்த ஏலியன் முயல்கிறது. கடவுளிடம் கேட்டால் எல்லாமே நடந்துவிடும் என்று அதனிடம் மனிதர்கள் சொல்கிறார்கள். இதனாலும், பசிக்கிறது என்னும்போது டகாலென்று கையில் சமோசா விழுவதாலும் உடனடியாக நம்பிக்கை வைக்கிறது பீகே. அதன் உலகத்தில் யாரும் பொய் சொல்வதே இல்லை என்பதால் யார் என்ன சொன்னாலும் அதை முழுமையாக நம்புகிறது. கடவுளின் கோயில்களில் (மசூதிகள் & சர்ச்களிலும்தான்) இழந்துவிட்ட தனது சாதனம் வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறது. கடவுள் பீகேவின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதில்லை என்பதால் முழுமையாக முதலில் இருந்து ஹிந்து, முஸ்லிம், க்ரிஸ்துவ மதங்களையும் பின்பற்றிப் பார்க்கிறது. எதுவும் நடப்பதில்லை. ஒரு கட்டத்தில் கடவுளிடம் அழுது புலம்பியும் பார்க்கிறது. பிரயோஜனம் இல்லாததால், கடவுள்கள் தொலைந்துவிட்டதாகவும், கண்டுபிடித்துத் தகவல் தரும்படியும் ஊரெங்கும் போஸ்டரும் ஒட்டுகிறது.

இப்படி ஒரு பாத்திரம் இருந்தால் என்ன ஆகும்? படமெங்கும் பீகே நம்மைச் சிரிக்க வைக்கிறது. அது எழுப்பும் கேள்விகளால் சிந்திக்கவும் வைக்கிறது. ஜாலியாக அவ்வப்போது போலீஸ் ஸ்டேஷன்களின் சிறையில் போய்த் தங்கிக் கொள்கிறது. கிடைத்த உடுப்புகளைப் போட்டுக்கொண்டு ஊர்சுற்றுகிறது (உடுப்புகளும் பணமும் எங்கே எளிதில் கிடைக்கும் என்பதற்கு இந்த ஏலியன் ஒரு அட்டகாச விளக்கம் வேறு வைத்திருக்கிறது). எதாவது புது விஷயத்தை யாரேனும் சொல்லிவிட்டால் உடனடியாகத் தனது பழைய புரிதல்களுடன் அதைப் போட்டுக் குழப்பி இதுவாகவே ஒரு விளக்கத்தை உருவாக்குகிறது. அது வெளியுலகத்தினரின் பித்தலாட்டத்தை அம்பலமும் படுத்துகிறது.

இந்தக் கதாபாத்திரத்தை அமீர்கானை விடவும் வேறு யாரும் சிறப்பாகச் செய்திருக்கமுடியாது என்ற அளவுக்கு நடித்திருக்கிறார் அமீர். மஹாத்மா காந்தியின் முகத்தை வைத்துக்கொண்டு இவர் செய்யும் ஒரு சேஷ்டை உண்மையிலேயே நல்ல முயற்சி. அதில் சற்றே உண்மையும் உள்ளது; சிந்திக்கவும் வைக்கும். இது மட்டுமில்லாமல் அந்த ஏலியனின் பார்வையில் இந்தியா எல்லாருக்கும் தெரிந்த – ஆனால் பலமுறை மறக்கப்பட்ட சில பகடிகளோடு காண்பிக்கப்படுகிறது.

அமீரை விட்டுவிட்டுப் பார்த்தால் படத்தில் பல திரைக்கதைப் பிரச்னைகள் இருக்கின்றன. இடைவேளையில் பீ.கேவின் சாதனம் ஒருமுறை காட்டப்படும். அது எங்கே இருக்கிறது என்பதும் அப்போது பீ.கேவுக்குத் தெரிந்துவிடும். ஆனால் இரண்டாம் பாதியில் அதைத் திருடிய திருடனைப் பிடிக்கும் பைரோன் ஸிங் சொல்வதால்தான் பீகேவுக்கு அது நியாபகம் வருகிறது என்பது துளியும் நம்ப முடியவில்லை. அதேபோல் பீகேவின் ஏலியன் திறன்களைப் பற்றிக் கதாநாயகி ஜக்கு எப்படி நம்புகிறாள் என்ற சம்பவம் மிகவும் க்ளிஷேடான பழைய சம்பவம். அதற்குப்பதில் சுவாரஸ்யமாக, ஜாலியாக ஏதேனும் காட்சிகள் வந்திருக்கலாம். இழந்த சாதனத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதில்தானே எந்த ஏலியனின் விருப்பமும் இருக்கும்? ஆனால் இடைவேளைக்குப் பின்னர் அது போய்விடுகிறது. ஏலியனுக்கு ஜக்குவின் மீது காதல் வருகிறது; பூமியிலேயே தங்கிவிடுகிறேன் என்றெல்லாம் சொல்கிறது என்றாலும் அது ஒரு ஏலியன்தானே? சாதனம் இருக்குமிடம் தெரிந்தும் ஏன் இப்படி இருக்கிறது? இதற்கெல்லாம் பதில் இல்லை. ஆனாலும் இதுபோன்ற கேள்விகள் தேவையும் இல்லை. பீகே என்ற ஏலியன் செய்யும் சேஷ்டைகளே இந்தப் படத்தை ரசிக்கப் போதுமானது. கதாபாத்திரங்களைப் பற்றிய தகவல்களோ, திரைக்கதையோ சரியாக இல்லையென்றாலும், நடிப்பும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் கருவும் கதையில் ஜாலியாகச் சொல்லப்பட்டாலே போதும் என்பதற்கு இப்படம் உதாரணம் (உடனேயே ‘வேலையில்லா பட்டதாரி’ அப்படித்தானே?’ என்று யாராவது கேட்டால், அது ஒரு சூப்பர்ஹீரோ படம். பேட்மேன், சூப்பர்மேன், அவெஞ்சர்ஸ் போன்றது. அதில் தனுஷ்தான் தோர். அவர் நினைத்தால் அது நடந்துவிடும். தனுஷின் கதாபாத்திரம் இயல்பானது அல்ல. இதனால் வே.இ.பவுக்கும் பீகேவுக்கும் துளிக்கூட சம்மந்தம் இல்லை).

படத்தில் நடித்திருக்கும் அனுஷ்கா ஷர்மா, சஞ்சய்தத், போமன் இரானி, சுஷாந்த் சிங் ராஜ்புத், ஸௌரப் ஷுக்லா (ஹேராம் குண்டர்) ஆகிய அனைவரும் வழக்கமான ராஜ்குமார் ஹிரானி படம் ஒன்றில் வரும் கதாபாத்திரங்களையே அப்படியே நினைவுபடுத்துகிறார்கள் (மோசமாக அல்ல. நன்றாக).

படத்தில் ஒரு குறிப்பிட்ட போலி சாமியார் ஒரு நகையை சிருஷ்டித்து ஒரு பக்தருக்கு வழங்கும்போது, ‘இந்த சக்தியால் இந்தியாவின் ஏழ்மையை நீங்கள் எளிதில் போக்கிவிடலாமே?’ என்று ஒரு பக்தர் கேள்வி எழுப்புவார். இதுபோன்ற கேள்விகளை நிஜமாகவே இந்தியாவின் சாமியார்களைப் பற்றிப் பெரியார் எழுப்பியிருக்கிறார். அவரைப்போலவே இலங்கையைச் சேர்ந்த ஆப்ரஹாம் கோவூர், இந்தியாவின் டாக்டர் நரஸிம்மையா போன்றவர்கள் எழுபதுகளின் துவக்கத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவைப் பற்றிப் பத்திரிக்கைகளில் எழுப்பியவை இவை. இந்த சம்பவங்களைப் பற்றிச் சில வருடங்களுக்கு முன்னர் விரிவாகப் படித்திருந்தேன். சாய்பாபாவுக்கு நரஸிம்மையா எழுதிய கடிதங்களை அவரே பத்திரிக்கைகளில் வெளியிட்டார். ஆனால் இதற்கு சாய்பாபாவின் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. அப்போது மிகப்பிரபலமாக விளங்கிய ‘ப்ளிட்ஸ்’ பத்திரிக்கையின் அதிபர் கரஞ்சியா சாய்பாபாவை மிக விரிவாகப் பேட்டிகண்டு அப்போது வெளியிட்டார். அந்தப் பேட்டியில் நரஸிம்மையாவின் எல்லாக் கேள்விகளுக்கும் சாய்பாபா தனது கருத்துகளைப் பதிலாகச் சொல்லியிருந்தார். அந்தக் கேள்விகளும் பதில்களும் இணையம் முழுக்கவே உள்ளன. படம் பார்க்கையில் இந்தச் சம்பவம் நினைவு வந்தது.

படத்தில் தீவிரமான மெஸேஜ்கள் எதுவும் இல்லை. எல்லாமே ஏற்கெனவே தமிழ் மக்களுக்குப் பெரியாரின் மூலமாகவும் எம்.ஆர்.ராதாவின் மூலமாகவும் தெரிந்தவையே. அவைதான் கமல்ஹாஸனால் சில படங்களில் சொல்லப்பட்டன. அதையே இப்போது நகைச்சுவையாக ஹிந்தியில் எடுத்துள்ளனர். பெரியார் தயவில் கடவுளைப் பற்றியும் போலி சாமியார்களைப் பற்றியும் தமிழ்நாட்டில் பல வருடங்களாகத் தெளிவான கருத்துகள் உண்டு. எனவே இந்தப் படம் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இன்னும்கூட எளிமையாக இருக்கும் என்று தோன்றியது. தற்போது பாக்ஸ் ஆஃபீஸையே மையமாகக்கொண்டு வெளிவரும் சல்மான்கான், ஷா ருக் கான், ரஜினிகாந்த் படங்களின் தரத்துக்கு பீகே எவ்வளவோ பரவாயில்லை. கதையையும் திரைக்கதையையும் ஓரளவு நம்பி வெளியாகியிருக்கிறது. அவசியம் நன்றாக ஓடவும் போகிறது. யாரேனும் எங்காவது மதங்களை அவமானப்படுத்தியதாக இப்படத்தின்மீது வழக்குத் தொடரலாம். இருப்பினும் கடவுளின் பெயரால் நடைமுறையில் இருக்கும் அபத்தங்களையே இப்படம் கிண்டலடிக்கிறது என்பதால் அனைவரும் பார்க்கலாம்.

பி.கு:

1. ’பீகே’ என்ற பெயருக்குக் குடித்திருப்பவன் என்று பொருள் (பீக்கே – ’தும் பீக்கே ஆயா க்யா?’ – இன்னாடா குஷ்ட்டு வந்துனுகீறீயா?). இந்த ஏலியன் செய்யும் சேட்டைகள் அப்படி இருப்பதால் அதற்கு மக்களாக வைத்த பெயர் அது.

2. இப்படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், ‘The Man who sued God’ (2011) படமும், ஹிந்தியின் ‘Oh My God’ (2012) படமும் பார்க்கலாம். இந்த இரண்டுக்கும் சம்மந்தம் உண்டு.

3. இந்தப் படம் ஹிந்து உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று யாரேனும் சொன்னால் நம்பாதீர்கள். இதில் எல்லா மதங்களும்தான் கிண்டலடிக்கப்படுகின்றன. யாரேனும் ஒரு தீவிர ஆர்.எஸ்.ஸின் புலம்பலாக அது இருக்கக்கூடும்.

http://karundhel.com/2014/12/pk-2014-hindi-review.html

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.