Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தா - சயந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா

சயந்தன்

ஸ்ரீபெரும்புத்தூரில் முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலைசெய்யப்பட்டுச் சரியாக இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்தக் கதை ஆரம்பிக்கின்ற கும்மிருட்டில் தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டு நரம்பை நசித்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். மேடும் பள்ளமுமான பழங்காலத்துத் தரையில் நீர்வீழ்ச்சியிலிருந்து கிளைபிரிகிற அருவியென மூத்திரம் மற்றுமொரு பாதையில் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். நீரில் மெதுவாக முங்குவதைப்போல புலன்கள் வியர்வையும் மூத்திரமும் கலந்த நாற்றத்தில் இயல்படையலாயின. இருளை அளைந்தேன். கம்பிகள் கீலங்கீலமாப் புலப்பட்டன. புகையைப்போல குளிர் பரவிற்று.

வெளிச்சத்தின் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. தோலுரிந்ததுபோல பூச்சுக்கள் தொங்கும் பழங்காலத்துக் கட்டிடத்தில் தனியான பதினைந்து இரும்புக்கூடுகளில் ஒன்றிலிருந்தேன். உடனிருந்த இரண்டு தமிழர்களை ‘உண்மையாகவே’ தெரியவில்லை. பேசியதுமில்லை. ஆனால் உபாலி என்னோடு பேசுவான். உயிர் பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்த வெறும் கூடாக என்னைக் கொண்டு வந்து கொட்டிய இரவு விடிந்தபோது, பக்கத்துக் கூண்டிலிருந்த உபாலி “மச்சாங், நீ புலி தானே, சந்தையில் புதிதாக என்ன ஆயுதம் வந்திருக்கிறது என்று தெரியுமா..” என்று கேட்டான். நான் உடற்பாகங்களை அசைக்கையில் பிரியாதிருந்த வலியைச் சகித்துக்கொண்டு எழுந்து நின்றபோது, “உனக்குத் துப்பாக்கிகளைக் கையாளத் தெரியுமல்லவா.. நீ என்னோடு சேர்ந்து விடு” என்று கட்டளைத் தொனியில் சொன்னான்.

அவனுடைய அதிகாரத்திற்குப் பொலிஸார் பயந்தார்கள். கக்கூசிற்கும், முகம் அலம்பவும் காலையில் கூண்டுகளைத் திறக்கச் சற்றுத் தாமதமானாலும் உபாலி கெட்ட தூஷண வார்த்தைகளால் திட்டுவான். பவ்வியமாகத் திறந்து விட இடுப்பில் வழியும் சாரத்தை, ஆடும் விதைகள் தெரிய உயர்த்தியபடி கக்கூஸிற்குள் நுழைகையிலும் தூஷணத்தைப் பொழிவான். கூண்டுகளிலிருந்து பார்த்தாலே தெரிகின்ற திறந்த குழிக்கக்கூசிலிருந்து சமயங்களில் சிரிப்பான். அங்கு சிரங்கைப்போல பாசி படிந்த சிறிய பிளாஸ்ரிக் வாளி, நீர்க்குழாயின் கீழிருந்தது. ‘க்ளக்.. க்ளக்..’ என்று நீர் சொட்டும் ஓசை இரவில் அமானுஷமாகக் கேட்கும்.

மெதுவான வெளிச்சத்தில் தூசுகள் அலைகின்றன. மூத்திரம் மூன்று கிளைகளாக வழிந்திருந்தது. இரவு தொடையிடுக்கில் சரித்துப் பெய்த வாளியை காற்பாதத்தால் தள்ளியிருந்தேன். அது ஒரு கோடாக வெடித்திருந்தது. இல்லை வெடித்த வாளியைத்தான் அவன் தந்திருந்தான். மூத்திர நெடி ஊறிய சாரத்தைக் கால்களில் உரித்துச் சுருட்டி கையெட்டும் தூரத்தில் வழிந்திருந்ததை ஒற்றியெடுத்தேன். கக்கூஸிலிருந்து உபாலி ‘காலை வணக்கம்’ என்பதுபோலக் கையசைத்தான். நேற்றிரவு, சலக்கடுப்புத் தாங்கவியலா வலியில் விலங்கை அசைத்துச் சத்தமிட்டு யாரையாவது அழைக்க முயற்சித்த அந்த அகாலவேளையில் “நான் இங்கே ஒவ்வொரு சிறைகளாகக் கிடந்தலைகிறேன். அவள் வருடத்திற்கொரு பிள்ளை பெறுகிறாள்” என்று மனைவியைத் தூசித்துக்கொண்டிருந்தவன் நான் மறுபடியும் மறுபடியும் மணிக்கட்டை அசைத்துச் சப்தமெழுப்பவும். “யாரடா என்று” உறுக்கினான். “மாத்தயா, எனக்குச் சலம் கடுக்கிறது. திறந்து விடவேண்டும்” என்று மெதுவாகச் சொன்னேன். அவன் மறுபேச்சின்றி “அடே, பத்துப்பேர் சேர்ந்து புணர்ந்து பெற்ற பொலீஸ்காரப் பயல்களே, எங்கேயடா இருக்கிறீர்கள்” என்று குரலுயர்த்தினான். சட்டென்று டோர்ச் விளக்கு ஒளிர்ந்து சூரியன் நகர்வதுபோல அருகாக வந்தது. உபாலியிருந்த திசையை நான் வாஞ்சையுடன் பார்த்தேன். அவன் “நீ படுத்தெழும்புகின்ற அத்தனை பேரையும் என்னால் சொல்லமுடியுமடி” என்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

முகத்தில் வெள்ளை ஒளியைப் பாய்ச்சியவன்,“மூத்திரமா” என்று கேட்டான். தலையைக் குனிந்து ஆமோதித்துவிட்டு தொடையிரண்டையும் நெருடியபடி “திறந்துவிடுங்கள் மாத்தயா” என்றேன்.

“நீ புலி என்பதில் எனக்கு இப்பொழுது உண்மையாகவே சந்தேகமாயிருக்கிறது” என்றவன் நீர்ப்பற்று அற்ற உலர்ந்த வாளியொன்றை உள்ளே தள்ளினான். “இதிலே பெய்து தொலை.” என்றான்.

10689524_10153346791279951_8737033188617

முன்னரென்றால் அழைத்துச்சென்று கக்கூசில் ஏற்றிவிட்டு நான் குந்தவும், விலங்கைப் இழுத்தபடி அருகிலேயே நிற்பவன், அந்தப் பழக்கத்தை இன்றைக்கு விட்டொழித்தான். ஒருவேளை குழியில்பட்டுச் சிதறும் நீர் அவன் கால்களில் தெளிப்பதை அவன் விரும்பாதவனாயிருக்கலாம். வெளிச்சத்தை அணைத்துவிட்டு விலகியபோது “மாத்தையா வெளிச்சம்..” என்று இழுத்தேன்.

“நீ புணரும் போதும் நான்தான் வெளிச்சம் பாய்ச்ச வேண்டுமா..” என்ற குரல்மட்டும் வந்தது. நான் கால்களை விரித்து இடது கையினால் தொடைகளின் இடையில் வாளியை நகர்த்தினேன். விடுதலை என்ற சொல்லின் பரிபூரண அர்த்தமது. வாளியை நிமிர்த்தி, இரண்டு காற்பாதங்களிலும் கவ்வி ஒரு வேவுப்புலியின் அவதானத்தோடு சுவரோரமாகத் தள்ளிவைத்தேன்.

சற்று முன்னர் வாளியைத் தள்ளியவன் “வெறும் மூத்திரத்தை அடக்கத்தெரியாதவர்களா புலிகளிலிருந்தார்கள்.. ?” என்று தனக்குள்ளே முணுமுணுப்பது கேட்டது.

சிங்கமலை லெட்சுமணன் என்கிற நான் பதுளையில் படுகும்பரவில் பிறந்தவன் என்பதையும் எழுபத்தியேழுக் கலவரத்தில் என்னுடைய தந்தை தோளிலேயே காவிச்சென்று முல்லைத்தீவின் காட்டுக்கிராமமொன்றில் தஞ்சம் புகுந்தார் என்பதையும் ஏழு வயதில் மனதில் பதிந்த சிங்கள மொழியை என்னால் இன்னமும் சரளமாகப் பேசமுடியும் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடிந்த நிலாம்தீனுக்கு, நான் சிறுவயதில் நித்திரைப்பாயிலேயே மூத்திரப்பழக்கத்தைக் கொண்டிருந்தேனென்பதையும், வளர்பருவத்தின் விழிப்புணர்ச்சி, அதைத்தடுக்க அது அடிவயிற்றில் தேங்கி கடுக்கச் செய்யும் வலியை ஏற்படுத்திற்று என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னை ‘அமத்திய’ மூன்றாவது நாள் அவன் துப்பாக்கி சுடும் பொஷிசனில் எனக்கு முன்னால் வந்தமர்ந்தான். மெல்லியதும் நெடிதுமான உருவத்தின் ஊடுருவுகின்ற கண்களை ஒருகட்டத்திற்கு மேல் எதிர்கொள்ள முடியவில்லை. “பெயர் என்ன என்று சொன்னாய்..”

“சோமையா ராசேந்திரன், சொந்த ஊர் ஹட்டன். பிழைக்கவந்த இடத்தில் எப்படியோ இந்தத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. பணம் தருகிறோமென்றார்கள். ஆனால் இன்னமும் தரவில்லை”

நிலாம்தீன் சட்டென்று என்னுடைய தாடையைப் பற்றிக்கொண்டு கேலியாகச் சிரித்தான். “நடிகனடா நீ” என்றான். பின்னரெழுந்து கதிரையில் கிடந்த கோப்பைப் புரட்டியவன் “முழுப்பெயர் சிங்கமலை லெட்சுமணன்” என்றபோது நான் எனது கடைசி நம்பிக்கைகளை வழிந்தோட அனுமதித்தேன். இரண்டு முழங்காலையும் கையால் இறுக்கிக் குந்தியிருந்தேன். என் உயரத்திற்குக் குனிந்தான். “என் சனங்களின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது அப்பனே” என்று தூய தமிழில் சொல்லி முடித்தான். அவனைப் போலவே தமிழில் பேசிய மற்றுமொருவன் “தோட்டக்காட்டு நாய்க்கு முல்லைத்தீவுக் காட்டுக்குள்ளை என்ன வேலை” என்று கேட்டான். ஆனால் விஜேயரத்ன அவ்வளவாகப் பேசுவதில்லை. பின்னொருநாளில் அவனுக்கு பேத்தையன் என்றும் ஒரு பெயர் உண்டென்பதை அறிவேன். ஒரேயொரு முறை கையை ஓங்கியவன் சுளீரென்று வலிப்பு வந்தவன் போலை கையை இறக்கினான். “வேசை மகனே, அடிக்கும்போது அப்படிப் பார்க்காதே, அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள்” என்றான். அவன்தான் என்னுடைய முதல் விசாரணையாளன்.

அன்றைக்கு ஒடுங்கிய பாதையால் இருளான விசாரணை அறைக்கு என்னை அழைத்துச் சென்றபோது குறடு, ஆணி, முள்ளுக்கம்பி, சோடாப்போத்தல், கொட்டான்தடி.. ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டேயிருந்தேன். இருள்தான் விசாரணையாளர்களின் துணை. இருட்டு நம்பிக்கைகளைச் சிதைத்துவிடுகிறது. ஒளியின் கீறைக்கூடப் பார்க்கமுடியாத இருட்டில் தற்கொலை எண்ணங்கள் துளிர்விடும். இவர்கள் என்னைத் தற்கொலை செய்ய அனுமதிக்கவில்லை.

உருண்டைத் தலையில் நறுக்கிய மயிரும் உட்புதைந்த தூக்கமில்லாத கண்களும் கொண்ட விஜேயரத்ன தடித்த புத்தகத்தைக் கையில் சுழற்றியபடி வந்தான். கதிரையை இழுத்துப்போட்டு உட்கார்ந்தவன் கதிரைக் காலருகாக புத்தகத்தை பொத்தென்று வைத்தான். காவி நிற அட்டைப்புத்தகம். ஓவியத்திலிருந்தவர் புத்தரா..? சற்றே தலையைச் சரித்த முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. துயரத்தைப் பிதுக்கும் வல்லமை அந்தக் கண்களுக்கிருந்தன.

விஜேயரத்ன நிதானமாக எழுந்து என்னைச் சுற்றினான். மூன்றாவது தடவை கையிரண்டையும் முறுக்கிப் பின்னிழுத்து மின்சாரக் கம்பியினால் இறுக்கினான். பின்னாற் சென்று சாரத்தை அவிழ்த்து விழுத்தினான். முட்டியில் உட்கார்ந்து உள்ளாடையை உருவி இறக்கினான். அது உரித்த கோழியைப் போல காற்பாதத்தில் சுருண்டு கிடந்தது.

என்னுடைய குதிக்கால்கள் மெதுவாக உந்த முயற்சித்தன. கால்களை மடித்து குந்தியிருக்கச்சொல்லி மனது உறுத்தியது. ஆடைகளைக் களையும் விசாரணையாளன் அப்பொழுது அதிகாரத்தைத் தனக்குள் ஊற்றிக்கொள்கிறான். ஆடையிழந்தவன் அடிமையைப் போல தன்னைக் குறுக்குகிறான். பின்வரும் நாட்களில் ஆடையிழந்த பல தமிழர்கள் ஓடிப்போய்ச் சுவரோடு ஒட்டிநிற்பதையும் அவர்களுடைய தோளினைத் தொட்டுத் திருப்பும் விசாரணையாளர்கள் ‘தமிழனின் சாமான்’ என்று வெடித்துச் சிரிப்பதையும் நான் காணுவேன்.

விஜேயரத்ன கொடுப்புச் சிரிப்புடன் என்னை முழுதாக அளந்தான். நான் கண்களைத் தாழ்த்தி வெட்கப்படப் பழகிக்கொண்டேன். தொடைகளை ஒன்றோடொன்று உரசி இடுப்பை முன் வளைத்து நெளிந்தேன். அவன் சீழ்க்கையொலியோடு கதிரையை மேலும் முன்னால் நகர்த்தி உட்கார்ந்தான். அப்பொழுது புத்தகத்தின் மேலேறி கால் நெரிக்க, குனிந்து இழுத்தான்.

“சோமையா ராசேந்திரன்.. உனக்குத் தெரிந்த வேறு யாரெல்லாம் புலிகளிடம் சூப்பிக்கொண்டு இப்படியான ஊத்தை வேலை செய்கிறீர்கள்..” உண்மையை முதலில் தானே கண்டுபிடிக்கவேண்டுமென்ற முனைப்போடு கேட்டான்.

“எனக்குத் தெரியவில்லை. அவர்களில் ஒருவரைக்கூட நான் நேரே சந்தித்ததில்லை. கடிதங்களும் முகவரிகளோடு வருவதில்லை. உண்மையில் நான் என்ன செய்யவேண்டுமென்பதை அவர்கள் இன்னமும் எனக்குச் சொல்லவில்லை.”

“இந்திய நாய்.. ” என்றான் விஜேயரத்ன. புழுதி கிளறும் காலக் குதிரையொன்றில் காற்று நெஞ்சிலறையத் தலைமுறைகளைக் கடந்து பயணித்து மீண்டேன்.

“மன்னித்துக்கொள்ளுங்கள் மாத்தையா..”

அவன் உந்தி எழுந்த வேகத்தில் கதிரை ஓரடி பின்நகர்ந்தது. புத்தகத்தைக் கையிலெடுத்தவன் அதனை வகிடு பிரித்துத் தலையில் கவிழ்த்தான். கூரையைப்போல அது பொருந்தி நின்றபோது தரையிற்கிடந்த இரும்புக் குழாயைத் தூக்கினான். சற்றுமுன் வரையிலான மெதுவான வேகத்திற்குத் துளியும் பொருந்தாமல் கையை ஓங்கியபோது காற்று விசுக் என்றது. ஷக் என்ற சத்தம் அட்டையிலிருந்த புத்தரை? கடந்து, தாள்களைக் கடந்து நடு மண்டையில் ஊடுருவியபோது கண்கள் செருகிக்கொள்ள ஒளிரும் வண்ண அரிசித் துணிக்கைகள் விசிறின. புத்தர்? அநாதரவாகக் கிடந்தார். புத்தா என்று வாஞ்சையோடொலிக்கும் குரல் கிணற்றுக்குள் ஒலிப்பதுபோலக் கேட்டது.

* * *

“புத்தா.. இங்கே வந்து பாரேன்..” என்று கியோமாக் கிழவி பதற்றத்தோடு அழைக்க அறையிலிருந்து ஓடிச்சென்றேன். சந்திரசேகரனைக் கைது செய்துள்ளதாக ரூபவாஹினி சொல்லிக்கொண்டிருந்ததை கியோமா வைத்தகண் வாங்காது பார்த்தபடியிருந்தாள். “என்ன புத்தா.. இப்படியுமா உங்களுடைய தலைவர்கள் செய்வார்கள்..” நான் கிழவியின் கண்களை நேராகப் பார்த்தேன். உள்ளிருந்தொரு மிருகம் அவளுடைய சொற்களைக் கணக்கிட்டுக்கொண்டிருந்தது. முன்பொருதடவை “புத்தா.. ரஞ்சன் விஜேயரத்னாவைக் கொன்றுவிட்டார்கள் பாவிகள்” என்று அலறியடித்துச் சொன்னபோதும், பிறிதொருநாள் “ஐயோ புத்தா, தொலைக்காட்சித் திரை முழுவதும் இரத்தமும் மனிதத் துண்டங்களும்.. ராஜீவைக் கொன்றுவிட்டார்கள்” என்று கத்தியபோதும் அவளுடைய கண்களில் இப்போதிருந்ததைப்போன்ற அச்சமிருந்தது.

கொழும்பின் புறநகர்ப்பகுதியில் வாடகைக்கு விடப்பட்டிருந்த அந்த வீடு பற்றிய தகவல் கிடைத்த மாலை நான் கியோமாக் கிழவியைச் சந்தித்தேன். நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகிய தெருவின் முடிவில் சிங்களப் பாரம்பரியமான கட்டிடக்கலையில் மிளிர்ந்த வீடு. கொடித்தாவரமொன்று முற்றத்தில் மேலே பரவிநின்றது. கியோமாவிற்கு அறுபது வயதிருக்கலாம். தென்பகுதியின் ஏழைக்கிராமமொன்றிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்னர் கணவரும் கியோமாவும் இந்நகரத்திற்கு வந்தார்களாம். ஓரளவு நல்ல நிலையில் இந்நிலத்தைச் சொந்தமாக வாங்கி வீடு கட்டிக்கொண்டார்கள். கணவர் இறந்துவிட, இரண்டு மகன்களும் திருமணத்தின் பிறகு நகரத்தின் அடுக்கு மாடிகளுக்குப்போய்விட, வீட்டின் விறாந்தையோடியிருந்த அறையை யாரேனும் படிக்கின்ற மாணவர்களுக்கு வாடகைக்கு விட கியோமா தீர்மானித்தாள்.

“படிக்கின்ற பிள்ளைக்கு வசதியாயிருக்கும் புத்தா.. உங்களுக்கு அல்ல, குறை நினைக்க வேண்டாம்” என்று அவள் எனக்குச் சொன்னாள்.

“நானும் படிக்கவே ஆசைப்பட்டேன் அம்மா. வசதியிருக்கவில்லை. இப்பொழுது வெளிநாடுகளிலிருந்து பொதிகளை இறக்கும் ஒரு கார்கோ கொம்பனியில் வேலை கிடைத்திருக்கிறது. இதில் காலூன்றி விட்டேனாயின் ஹட்டனிலிருக்கின்ற என் தம்பியைப் படிக்க வைத்துவிடுவேன். வேறிடங்களில் அதிக வாடகை கொடுக்க வசதியில்லை. மனது வையுங்கள்.” சரளமாகக் கோர்த்த சிங்களச் சொற்களுக்கு கியோமா அடிபணிந்தாள். அடுத்த நாள் காலை அவள் என்னைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று பொலிஸ் பதிவுத் துண்டில் சோமையா ராஜேந்திரன் என்ற பெயரைச் சேர்த்தாள். அதிலொரு பிரதியெடுத்து நான் வைத்துக் கொண்டேன்.

சாப்பாட்டை நான் வெளியில் கவனித்துக்கொண்டேனென்றாலும், காலையில் சுடுநீர்ப் போத்தலில் தேநீர் எடுத்துவந்து “புத்தா எழுந்துகொள்” என்று சொல்ல கியோமா தவறியதில்லை. வெளியில் செல்லாது வீட்டிலிருந்த நேரங்களில் வற்புறுத்திச் சாப்பிட அழைப்பாள். ஈரப்பலாக்காயின் கறிச்சுவை என்னில் குற்ற உணர்ச்சிகளைக் கிளறப்பார்த்தது. அப்படியொருநாள் “உன் வேலைகள் எப்படிப்போகிறது புத்தா.. தம்பி எப்படியிருக்கின்றான்..” என்று அவள் கேட்டபோது கையிலேந்திய சோற்றுக் குழையல் உதறித் தட்டில் விழுந்தது. அவளை நடுங்கும் கண்களால் பார்த்தேன்.

ஹவ்லொக் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த குண்டு நிரப்பிய கார், தீயின் நாவுகளால் சூழப்பட்டுப் பேரோசையோடு எழுந்து விழுந்ததும், வீதிச் சுவரெங்கும் கொத்திக்கிளறப்பட்டதும், கண்ணாடி முகப்புக்கள் நொருங்கித் தெறித்ததுமான அன்றைய இரவு கியோமா மேலே எனக்கு முதற்தடவையாகக் கோபம் வந்தது. அவள் தொலைக்காட்சியைக் காட்டி “பார் புத்தா.. இந்த அழிவுகளை, மனச்சாட்சியில்லாதவர்களால் இந்த அழகிய நாடு அழியப்போகிறது” என்றாள். அப்பொழுது அவளுடைய கண்கள் கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்தன.

“ஆம், மனச்சாட்சி இல்லாதவர்களால் இந்த நாடு அழியப்போகிறது என்பது சரிதான்” என்றேன்.

“ஏன் புத்தா, இப்படியான அநியாயங்களைச் செய்ய வேண்டாமென்று தமிழர்கள் புலிகளிடம் சொல்ல மாட்டார்களா..”

நான் சோற்றுத் தட்டை நகர்த்தி விட்டு எழுந்துகொண்டேன். வெளிப்படுத்த முடியாத கோபம் பதற்றமாக உருமாறியிருந்தது. “பசிக்கவில்லையா புத்தா..”

“இல்லை” என்றுவிட்டு அறைக்கு வந்தேன். “அவள் எனக்கும் தான்” என்றாள்.

அடுத்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியற்ற கெட்ட கனவுகள் வந்தன. கைகளைப் பிணைத்து தெருவில் என்னை இழுத்துச் செல்கிறார்கள். திரண்ட மனிதர்கள் பிரகாசிக்கும் கண்களோடு என் மீது கற்களை எறிகின்றார்கள். அவர்களிடையில் நான் பார்த்ததும் தன்னை மறைத்துக்கொள்ளும் விருப்பில் கிழவி கியோமா நழுவிச்செல்கிறாள். நான் “மெத்த நன்றி கிழவி” என்று உரத்துக் கத்துகிறேன். காட்டுப் பகுதியொன்றில் என்னைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். நான் மூத்திரம் நனைந்த ஆடைகளோடு “எனக்குப் பசிக்கிறது” என்கிறேன். அப்பொழுது கியோமா தட்டைப்பொத்தென்று வைத்தவள் வெறும் ஈரப்பலாக்காய்க் கறியை ஊற்றுகிறாள். “சாப்பிடு புத்தா..” என்று சொல்கிறாள்.

கதவினைப் பலமாகத் தட்டுகிறார்கள். பிறகு இடிக்கிறார்கள். நான் சரேலென்று விழித்தேன். கியோமா இப்படித் தட்டுவதில்லை. மூளைக்குள் சுளீரென்றது. ‘கிழவி வேலையைக் காட்டிவிட்டாள்..’ அரைஞான் கொடியிலிருந்த குப்பியில் கை வைத்து இழுத்தேன். அப்பொழுது கதவு ஓவென்று திறந்தது. அணை உடைந்ததும் பாய்கிற நீர் போலப் பாய்ந்தார்கள். விழுத்தி மேல், ஏறிக்கொண்டார்கள். தலைமயிரில் கைகளைச் செருகி கோதினார்கள். அரைஞான் கொடியை பிளேற்றால் கீறி வெட்டியெடுத்தான் ஒருவன். பிளேற் பட்ட இடத்தில் ரத்தம் கசிந்தது. காதுமடல், காதுக்குழி, அக்குள், வாய், குதமென்று விடாமல் தேடினார்கள்.

முகத்தைத் தரையோடு அழுத்திப்பிடித்திருந்தவனின் விரல்கள் சிங்கத்தின் காலைப்போல கன்னத்தில் முழுவதுமாகப் பரவியிருந்தன. அறையைச் சல்லடையிட்டபிறகு அகப்பட்ட சோமையா ராசேந்திரன் பெயரிட்ட அடையாள அட்டையோடு வெளியே தள்ளி வந்தார்கள். நான் கியோமாவைத் தேடிக்கொண்டிருந்தேன். கிழவி எங்கேயோ ஓடிவிட்டாள். இரண்டு பக்கங்களிலும் பொலிஸார் என்னை இழுத்து வாசலைக் கடந்து தெருவில் நடத்தியபோது முகப்பில் நான் கிழவியைக் கண்டேன்.

கியோமாவிற்குப் பக்கத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் நின்றார்கள். அவர்களுக்கு நடுவில் அவள் முழந்தாளில் நின்றாள். முதுமையில் தளர்ந்த அவளுடைய கைகளிரண்டும் முதுகின் கீழ் மடிக்கப்பட்டு நைலோன் கயிற்றினால் இறுக்கப்பட்டிருந்தன. சுருக்கங்கள் விழுந்த முகத்தின் உட்புதைந்த கண்கள் இரக்கமும் பரிதாபமுமாயிருந்தன. அவள் என்னைப் பார்த்தாள். நான் சரேலென்று தலையைத் தாழ்த்தினேன். கால்கள் தொய்ய, அவளை நெருங்கினேன். கியோமா கிழவி, தன்னருகில் நின்ற படைவீரனை நிமிர்ந்து பார்த்தாள் “புத்தா, இவன் நீங்கள் நினைப்பவன் மாதிரியானவன் இல்லை. அவனை வீணாகக் கொடுமைப்படுத்தாதீர்கள்..” என்று இறைஞ்சினாள். அப்பொழுது கியோமாவின் நரைத்ததும் நீண்டதுமான தலைமயிரைப் பற்றியிழுத்து கீழே விழுத்திய படைவீரன் அவளுடைய மார்புக்கு நேரே வலது காலை ஓங்கி அந்தரத்தில் நிறுத்தினான். “ஒரு வாய் பேசினாயென்றால் கிழட்டுப் பன்றியே.. மிதித்தே கொன்றுவிடுவேன்” என்றவன் “எதிரிகளை மன்னித்துவிடலாம். துரோகிகளை மன்னிக்கவே முடியாது” என்று பற்களை நருமியபடி சொல்வதை சிங்களத்தில் முதற் தடவையாகக் கேட்டபடி அவளைக் கடந்தேன்.

* புத்தா – சிங்களத்தில் மகனே என அர்த்தம் தருமொரு சொல்

(காலம் 45வது இதழில் வெளியானது. ஓவியம் கார்த்திக் மேகா)

http://sayanthan.com/?p=1061

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்..!

 

இது போன்ற நிஜங்களை கதை எனச் சொல்லத் தயக்கமாய் இருக்கு...!

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தனின் எழுத்தில் இருந்து வெளிவரமுடியவில்லை வெளிவரத்தெரியாமல் எத்தனையோ கதைகள் பலரின் மனச்சுவர்களுக்குள் முடக்கப்பட்டிருக்கின்றன. மறுக்கப்பட்ட உரிமைகளிலும் வேதனைகளிலும் மூழ்கிக் கிடக்க எல்லா வழிகளாலும் அழுத்தப்படுகின்றன புலன்கள். காலம் விட்ட வழி என்று அழிவுகளையும் கட்டாயத்திணிப்புகளையும் ஏற்கப் பழகும் இடத்தில் நின்று கொண்டு ஓவென்று கதறவேண்டும்போல் இருக்கிறது. அந்தக்கதறல்களுக்கும் கூட திராணியற்றவர்களாக இருக்கும் வெட்கம் மௌனிக்கவும் தலை கவிழவும் மட்டுமே வைக்கிறது... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.