Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இவ்வாறு இலக்கிய ஆய்வில் வந்து புகுந்த புது முறைகளில் ஒன்றே ஒப்பியல் ஆய்வு. இலக்கியத்துக்கு முன்னதாக ஒப்பியல் நோக்கு மொழியாராய்ச்சியின் சிறப்புப் பண்பாக இருந்தது. அதற்கும் முன்னதாக அறிவியற்றுறைகளின் தனிச்சிறப்புப் பண்பாகவிருந்தது. ஒப்புநோக்கு மொழியாராய்ச்சியை நெறிப்படுத்திய பின்னரே மொழி ஆய்வு, மொழியியல் ஆயிற்று. மொழியியல் அறிவியலின் (Science) அந்தஸ்தைப் பெற்றது. மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்குமுன் மானிடவியல், சமூகவியல், பொருளியல், புவியியல் முதலியவற்றிற்கு அறிவியல் அந்தஸ்தைக் கொடுத்தது ஒப்பியல் ஆய்வேயாகும். சுருங்கக் கூறின் அது சென்றவிடமெல்லாம் சிறப்புச் செய்துள்ளது என்று கூறலாம். ஒரு வகையிற் பார்த்தால் எமது மொழியில் மட்டுமன்றி வேறு பல மொழிகளிலும் ஒப்பியல் ஆய்வானது இலக்கியத் துறைக்குக் காலங் கடந்தே வந்து சேர்ந்திருக்கிறது. ஒப்பியற் சட்டம், ஒப்பியல் மதம், ஒப்பியற் கல்வி, ஒப்பியல் அரசியல் என்பன ஓரளவு வளர்ச்சிபெற்றவையாகக் காணப்பட ஒப்பியல் இலக்கியம் கடைக் குட்டியாக இருக்கிறது எனலாம். ஆகவே அதனைக் கவனமாக வளர்க்க வேண்டியுள்ளது.

ஆனால் இவ்வாய்வு தனியொரு மனிதரின் வல்லமையாகவோ, சிலருக்குத் திருப்தி தரும் முயற்சியாகவோ, இராமல் யாவரும் ஏற்றுத் தாமும் மேற்கொள்ளக்கூடிய ஆராய்ச்சியாக இருக்க வேண்டுமாயின், ஆராய்ச்சி முறை மயக்கமின்றியும் அறிவியல் சார்ந்ததாயும் இருத்தல் அவசியம். உதாரணமாக வடமொழிக்கண் வழங்கும் திராவிடச் சொற்களை நிருணயிக்க முனைந்த பறோ சில நடைமுறைகளை மேற்கொண்டார் வடமொழிக்கண் பயிலும் ஒரு சொல், திராவிடச் சொல்லாயிருக்கலாம் என்னும் ஐயமேற்பட்டதும் முதலில் அச்சொல் திராவிட மொழிக் குடும்பத்திலே எவ்வாறு பரந்து காணப்படுகின்றது என்பதனை நோக்கினார். வட திராவிட மொழிகளிலும் அச்சொல் வழக்காறுடையதாயின் அது திராவிடச் சொல்லாக இருத்தல் கூடுமென்று ஓரளவு துணிந்தார். அதன் பின்னர் அச்சொல் இந்தியாவிலுள்ள ஆரிய மொழிகளில் எத்தகைய வழக்காறுடையது என்பதனை நோக்கினார். அதன் பின்னர் பிற இந்தோ-ஆரிய மொழிகளில் எவ்வாறு வழங்குகிறது என்பதை ஆராய்ந்தார். ஆரிய மொழிகளிலும் இந்தியாவிற்கு வௌியேயுள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் அதன் வரலாறு திருப்திகரமாக இல்லா விட்டால் அது திராவிடத்திலிருந்தோ திராவிட மொழியொன்றிலிருந்தோ வட மொழிக்குச் சென்றிருத்தல் வேண்டும் எனத் துணிந்தார். அதன் பின்னரும் வட மொழி நூல்களிலே எக்காலத்திலிருந்து அச் சொல் பயின்று வருகிறது என்பதனை நிச்சயப்படுத்திக் கொண்டார். இவையாவற்றின் இறுதியாகவே அச் சொல் ஏறத்தாழ இன்ன காலத்திலே தமிழிலிருந்தோ அல்லது மூலத் திராவிடத்திலிருந்தோ வட மொழிக்குச் சென்றது என ஒருவாறு துணிந்து கூறினார்.

மேற்கூறிய ஆராய்ச்சியைக் கவனித்தால் பேராசிரியர் பறோவுக்கு "வடமொழி எனக் கருதப்படும் சில சொற்கள் தமிழ்ச் சொற்களே என நிறுவிக் காட்டும் வல்லமை" அன்றி ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் புடை பெயர்வதைக் கண்டறியும் முறை கைவரப் பெற்றமை புலனாகும். இதை இன்னுஞ் சிறிது விளக்குவோம். தனியொரு மனிதனுடைய தனிச் சிறப்பான ஆற்றலை மாத்திரம் இவ்வாராய்ச்சிக்கு அளவு கோலாகக் கொண்டால் அது பொதுவான நியதிகளுக்குக் கட்டுப்படாத தொன்றாகி விடுகிறது. அவ்வாறன்றிச் சில விதிகளினடிப்படையில் நடை முறைகள் அனுட்டிக்கப் பட்டால் அவ்விதிகளைப் பின்பற்றும் மாணவன் எவனும் அவ்வாராய்ச்சியைச் சிறிய அளவிலேனும் செய்தல் முடியும். முடிந்தால் அது பொதுவான பரிசீலனையாக அமைகிறது. விஞ்ஞானப் பரிசோதனைகளை எத்தனை பேரும் எத்தனை தடவையும் செய்யலாம்; அவ்வடிப்படையிலேயே படிப்படியாக அறிவு விருத்தியடைகின்றது.

மொழியாராய்ச்சி பற்றிய இவ்வுதாரணம் அறிவியல் முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பதை ஓரளவு விளக்குகிறது என எண்ணுகிறேன். இலக்கியத்தில் இம்முறை பெருமளவு செயற்படுவது ஒப்பியல் ஆய்வியலாகும் எனினும் அதை விவரிக்குமுன் மேற்கூறிய விஞ்ஞான முறையாது எனச் சுருக்கமாகக் கூற வேண்டும்.

ஒரு பொருளை அல்லது நிகழ்வை விஞ்ஞானி கூர்ந்து நோக்கிக் குறித்துக் கொள்வனவற்றைத் தரவுகள் என்கிறோம். ஒரு பொருளைப் பற்றிய தரவுகளுடன் பிறிதொருதொகுதித் தரவுகளை ஒப்புநோக்கும் பொழுது இயற்கையான ஒருமைப்பாடுகள் சிலவற்றையும் பொதுக் குணங்களையும் காண்கிறோம். அதாவது பல முறை அவதானித்த தரவுகளின்றும் சில பொது முடிவுகள் அன்றி விதிகள் வகுக்கப்படுகின்றன. சில சமயங்களில் தரவுகளைப் பெற முன்னரே ஏதாவதொரு பொதுமுடிவை அல்லது விதியை ஊகமாகக் கொள்கிறோம். அதனையே கருதுகோள் என்பர். பரிசோதனையின்போது கிடைக்கும் முடிவு முதற்கொண்ட கருதுகோள் சரியா தவறா என்பதைக் காட்டும். ஆயினும் கருதுகோள், ஆய்விற்கு முதற்றேவையாக அமையும். விஞ்ஞானத்துக்கு ஒவ்வும் இவ்வாய்வு முறையை ஒப்பியல் ஆராய்ச்சியின் மூலம் கலை இலக்கியத்துறைக்கும் ஏற்றதாக நாம் அமைத்துக் கொள்ள இயலும். இதனைச் சிறிது விரித்துரைக்கலாம்.

விஞ்ஞான ஆராய்ச்சியிலே எடுகோள் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக விஞ்ஞானிகள் இரு அடிப்படை மெய்ம்மைகளைத் தமது ஆராய்ச்சிகளுக்கு முதற்படியாக ஏற்றுக் கொள்வர். நடப்பவைக் கெல்லாம் காரணம் இருக்கிற தென்பதும் ஒரே தன்மையான காரணங்கள் நிலைமைகள் மாறாதிருக்குமானால் ஒரே மாதிரியான பயனையே அளிப்பன என்பதும் அவர்கள் ஏற்கும் இரு எடுகோள்கள். முதலாவது எடுகோள் முடிவற்ற ஆராய்ச்சிக்கு ஏதுவாகவும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் சக்தியாகவும் அமைகிறது. இரண்டாவது எடுகோளினடிப்படையில் வெவ்வேறு விஞ்ஞானிகள் குறிப்பிட்ட பரிசோதனைகளைத் திரும்பச்செய்து சரிபார்க்க வழி பிறக்கிறது

இவ்விரு எடுகோள்களை இலக்கிய ஆராய்ச்சியாளனும் முன்கூட்டியே ஏற்றுக் கொள்வதற்கு தடையெதுவுமில்லை. ஒரு நூல் குறிப்பிட்ட காலப்பகுதியிலே தோன்றுவதற்கு ஏதுக்கள் இருத்தல் வேண்டும். உலகம் உய்ய வேண்டுமென்பதற்காகத் திருவுளங் கொண்ட பெரியார் திடீரென அருளிச் செய்வது இலக்கியம் என்ற ஐதீகத்தை நீக்கி, காரண காரிய நியதிக்குள் இலக்கியத்தை அடக்க இவ்வெடுகோள் உதவுகிறது. அது முதற் பயன். காரணம் இருத்தல் வேண்டும் என்று நம்பினால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க அயராது உழைத்தலவசியம். உதாரணமாகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே சான்றோர் செய்யுள்கள் சித்திரிக்கும் வீரயுகத்தை யடுத்து, அறவியல் நூல்களும் அவற்றுக்கு அடிப்படையான தீமைக் கோட்பாடும் அதன் வௌிப்படையான சிணுங்கித்தனமும் தோன்றக் காண்கிறோம். வீரயுகத்திற் காணப்பட்ட நன்னம்பிக்கைக் கோட்பாடுகள் அதன் வௌிப்படான புலனின்ப வேட்கையும் களிப்பார்வமும் இலக்கியத்தினின்றும் மறைந்து விடுகின்றன. அவை தோன்றுமிடத்தும் இழித்துரைக்கப்படுகின்றன. இத்தகைய ஒழுக்கவியல் உரைக்கும் நூல்கள் தோன்றத்தக்க காரணம் இருத்தல் வேண்டும். அதனை ஒப்புக் கொண்டால் அக்காரணத்தைக் கண்டறிய வாய்ப்பேற்படும். பிரயாசைப் பட்டால் காரணத்தை அறிவது உறுதி. காரணத்தைத் தேட முயலவும் வரலாற்றுப் பார்வை தவிர்க்க முடியாதவாறு வந்தமைந்து கொள்கிறது. அது மட்டுமல்லாது வரலாற்று அடிப்படையிற் காரணகாரிய ஆய்வைப் பயன் படுத்தும்பொழுது குறிப்பிட்ட நூல்களின் தோற்றத்திற்குப் பொருளாதார சமூக அரசியல் நிலைமைகள் காரணிகளாக அமைகின்றன. இக் காரணிகள் புறநிலையில் வைத்து நோக்கியாராயத்தக்கன. இயற்கை அறிவியற்றுறைக்குரிய முறைகளாம் 'சோதித்தறியும் தன்மை,' 'தற்சார்பற்ற நிலை,' 'மயக்கமின்மை' முதலியன இக்காரணிகளுக்குப் பண்பாயமைகின்றன. இவற்றைத் தரவுகளாகக் கொள்ளுவோம். கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அற நூல்கள் தோன்றற்குரிய சூழமைவையும் உந்தல்களையும் நியதிகளாகக் கருதிக் கொள்கிறோம்.

இனி, மேலே கூறிய இரண்டாவது எடுகோளைக் கவனிப்போம்: ஒரே மாதிரியான காரணங்கள் ஒரே மாதிரியான பயனையே அளிக்கும் என்பது. இது பரிசோதனைக்கு எம்மைத் தூண்டுவது தமிழ் வீரயுகத்தைப் போலவே கிரேக்கரது வீரயுகமும் அமைந்திருந்தது. அவ்வாறாயின் அங்கும் வீரயுகத்தையொட்டி அறநூல்கள் எழுந்தனவா எனப் பார்க்கலாம். அதாவது ஒத்த காரணங்கள் ஒத்த பயனையளித்துள்ளனவா எனச் சரிபார்க்கலாம். அங்கும் அறநூல்கள் தோன்றியிருக்கக் கண்டால் எமது ஊகம் அல்லது கருதுகோள் பிழையற்றது எனக் கொண்டு அதனை இலக்கிய வரலாற்று விதிகளிலொன்றாக்கலாம். உண்மையில் வீரகாவியங்கள் பாடிய சான்றோன் ஹோமரை யடுத்து ஹீசியொட் போன்ற அறநூற்புலவர் கிரேக்கத்திலே தோன்றினர். எமது அறநூலாசிரியரைப் போல அவரும் பெண் வெறுப்பு, புலனடக்கம், இறை பக்தி முதலியவற்றைப் பெரிதும் வற்புறுத்தினர்;புராணக் கதைகள் பெருவழக்குப் பெற்றன. கவிஞர் போதகர்களாக மாறினர். இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது தமிழிலும் கிரேக்கமொழியிலும் ஒரே தன்மையான சூழ்நிலைகள் ஒரே மாதிரியான இலக்கிய வகையைத் தோற்றுவித்தமை உறுதிப்படும். இதன் பயனாக இலக்கியத்துக்கு ஓர் உலகப் பொதுமை ஏற்படுகிறது. இவ்வடிப்படையிலேயே ஒப்பியல் இலக்கியம் உலகப் பொதுவான இலக்கியத்தோடு ஒன்றுபடுகின்றது.

ஒப்பியல் இலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான தெயின்(Hippolyte Taine, 1828-1893), ஒப்பியல் இலக்கியம் இறுதியில் உலக இலக்கியக் கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச் செல்லல் வேண்டும் என்றே கருதினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெயின், ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளன் கவனஞ் செலுத்த வேண்டிய பொருள்களைக் குறிப்பிடுமிடத்து, இனம், சூழமைவு, காலம், மனத்திறன் என்பனவற்றை வற்புறுத்தினார். சூழமைவிலே புவியியற் காரணிகள் அடங்கும். இவற்றிற் சில இன்று அத்துணைச் சிறப்புடையவனாகக் கொள்ளப்படுவதில்லை. சில புதிய காரணிகளை நாம் இன்று சேர்த்துக் கொள்ளுதல் கூடும். ஆனால் "இலக்கிய ஆராய்ச்சியை ஒரு விஞ்ஞானப் பரிசோதனை போல நடத்தவும், அதனைச் சரிபார்க்கவும், மேலும் மேலும் திருத்தமுறச் செய்யவும்" முடியும் என்று ஆணித்தரமாகக் கூறியவருள் ஒருவர் தெயின்.

இக்கூற்றிலும் முறை, அழுத்தம் பெறுவதைக் கவனிக்கலாம். இதன் முக்கியத்தை எவ்வளவு வற்புறுத்தினாலும் தகும். பழைய விஞ்ஞானத்துக்கும் புதிய விஞ்ஞான நோக்குக்குமுள்ள வேறுபாட்டை இங்குக் கூறுதல் பொருத்தம். தொகுத்தறிமுறை முற்காலத்திலிருந்தே வெவ்வேறு வகையில் வழங்கி வருகிறது. எமது பண்டை நூலோர் கூறும் காட்சியளவை தொகுத்தறிமுறையைச் சேர்ந்ததே. ஆனால் பழைய தொகுத்தறிமுறையில் கருதுகோள் முக்கியம் பெறவில்லை. அம்முறையில் இயற்கையில் யாவும் மறைந்து கிடப்பதாகவும், அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஒருவர் செய்யக் கூடியதாகவும் கருதப்பட்டது. இவ்வடிப்படையிலேயே பண்டைய அறிவாராய்ச்சி இயல் (Epistemology) அமைந்தது. இது விஞ்ஞானத்தின் தோற்றத்தைப் பெற்றிருப்பது போலக் காணப்பட்டாலும் உண்மையில் விஞ்ஞானத்துக்கு முற்பட்ட நோக்கேயாம். ஏனெனில் பண்டைய தொகுத்தறிமுறையும் அறிவு ஆராய்ச்சி இயலும் நவீன விஞ்ஞானத்துக்குப் போதிய அடிப்படையும், நெறியும் ஆகா. நவீன விஞ்ஞானத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று இடையறாத பரிசோதனையாகும். இப்பரிசோதனைகளுக்கு அநுசரணையாகத் துணிகரமான கருதுகோள்கள் கைக்கொள்ளப் படுகின்றன. இவற்றின் பயனாகத் தாமாகத் தோன்றும் உண்மைகளேயன்றிப் புதிய உண்மைகளும் நிலை நாட்டப் படுகின்ற தொகுத்தறிமுறையும் அறிவாராய்ச்சி இயலும் மூட நம்பிக்கைகளையும் இறைக் கோட்பாடுகளையும் விமர்சனஞ் செய்ய உதவக் கூடும். ஆனால் புதிய புதிய கருதுகோள்களின் அடிப்படையில் தொடர்ந்து பரிசோதனைகள் நடாத்திப் பொருள்களுக்கிடையே புதிய உறவுகளையும் தொடர்புகளையும் காண்பதற்கு மட்டுமின்றிப் புதிய பொருள்களையே கண்டுபிடிக்க அவை உதவா. இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட விஞ்ஞானப்புரட்சியானது அதற்கு முற்பட நிலவிய விஞ்ஞான முறைகளை வழக்கறச் செய்தது. சார்புக் கொள்கையும், சொட்டுக் கொள்கையும், உளப் பகுப்பாய்வியலும் புதிய ஆராய்ச்சி முறைகளை இன்றியமையாதனவாக்கின.

http://www.tamilnation.org/literature/eela...code/mp0102.htm

  • தொடங்கியவர்

தமிழ் வீர யுகத்திலே அரசருக்கும் புலவருக்கும் அத்தியந்த உறவு நிலவியது. புலவரைப் போற்றி வாழ்ந்தனர் மன்னர். அவர்களுக்கு வரையாது வழங்கினர். பாணர், விறலியர், புலவர் முதலியோரைப் புரத்தலைப் பாண்டகன் எனக் கொண்டனர். இச் செய்திகள் சான்றோர் செய்யுட்களிலிருந்து பெறப்படுவன. இவற்றைக் கண்ணுற்ற தற்கால எழுத்தாளர் சிலர் புலவரைப் பேணுதலும் கொடையும் கற்றோரைப் போற்றுதலும் பழந்தமிழ் மன்னரது தனிச் சிறப்பியல்புகள் எனக் கூறவராயினர். அம்மட்டில் நில்லாது புலவரைப்போற்றி வாழ்ந்த பண்பு பழந்தமிழ் மன்னரிடத்து மாத்திரம் காணப்படுவது என்றும் தேற்றமாகக் கூறினர். இத்தகைய எண்ணமும் கூற்றும் இனப்பற்றிலிருந்தும் மொழிப்பற்றிலிருந்தும் எழுவன. ஆனால் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சி வழி நின்று நோக்கும்போது தமிழ் வேந்தர்க்கே உரிய இம்மரபு பிற சமுதாயங்களிலும் காணப்படும்.

பண்டைத் தமிழ் மன்னர்கள் புலவரைப் போற்றியதைப் போலவே பழங்கால வெல்ஷ், ஐரிஷ், ஜெர்மானிய, கிரேக்க அரசரும் பிறரும் புலவரைப் பெருமதிப்புடன் நடாத்தினர். எனவே தமிழ் வேந்தரது அருங்குணத்தைப் புகழ்ந்து வீண் பெருமை கொள்ளுவதற்கப் பதிலாகப் புராதன சமுதாயங்களிலே மண்ணாள் வேந்தரும் பிறரும் புலவரைச் சிறப்பித்தமைக்குக் காரணம் காண முற்படுதல் விவேகமான செயலாகும். உலக இலக்கியங்கள் பலவற்றை நுணுகியாராய்ந்த திருமதி. நோரா சாட்விக் கூறுகிறார்: எழுத்துக்கலைப் பயிற்சியற்றுப் பெரும்பாலும் வாய் மொழி இலக்கியத்தையே பயன்படுத்தும் மக்கள் கவிதையையும் சொல் வன்மையையும் மிக உயர்வாக மதித்தல் இயல்பே. அது மட்டுமல்லாது எமது காலத்தில் வழங்கும் வெகுஜன சாதனங்களுக்குப் பதிலாக அச்சமுதாயங்களிற் புலவரே விளங்கினர். இக்கூற்றைக் கருதுகோளாகக் கொண்டு எமது சான்றோர் செய்யுட்களை ஆராய்ந்தால் உண்மையாயிருக்கக் காண்போம். புராதன சமுதாயங்களிலே மனிதனது அறிவு முழுவதும் செய்யுள் வடிவிலேயே இருந்தது. மந்திரம், மாயம், வானநூல், வரலாறு, புராணம், அறிவியல், இயற்கையறிவு முதலிய யாவும் பன்னெடுங்காலமாகச் செய்யுள் வடிவிலேயே வழங்கி வந்தன. புலம் என்ற சொல்லின் பொருளைக் கவனித்தால் இச்செய்தி புலனாகும். புலம் என்றால் இந்திரியம், இந்திரிய உணர்வு, அறிவு, கூர்மதி, துப்பு, நூல், வேதம், இடம் என்றெல்லாம் பொருள்படும். புலமை என்பதற்குக் கல்வி, மெய்ஞ்ஞானம் செய்யுளியற்றும் ஆற்றல் என்ற பொருளுண்டு. புலமையோர் என்றால் கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்வியாளரும், கற்றோரும், நிபுணரும் கருதப்படுவர். புலவரை அறிவர் என்றும் அழைத்தனர். அது மட்டுமல்லாது கிரேக்கர் அபோலோவும், தமிழர் முருகனுமே புலமைக் கடவுளர் என நம்பினர். இது காரணம் பற்றியே திருமுருகாற்றுப்படையில், "புரையநர் இல்லாப் புலமையோய்", "நன்மொழிப் புலவரேறே", "அறிந்தோர் சொன் மலை", "நூலறி புலவ" என்றெல்லாம் பெரும் பெயர் முருகன் துதிக்கப்படுகின்றான். புலமைத் தெய்வத்திடம் புலவர் ஆற்றுப் படுத்தப்படுதல் இயல்பே. இவ்வாறு முருகனது பக்தர்களாகவும் வாய்மொழி வல்லவராகவும் கட்டுரையாளராகவும் விளங்கிய புலவரைச் சர்வக்ஞராகக் கருதிப் புராதன சமுதாயம் போற்றியதில் வியப்பெதுவுமில்லை. ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சி இவ்விளக்கம் பிறக்க வழி செய்கிறது. அதை விடுத்துத் தமிழபிமானத்தால் மன்னரின் சிறப்பியல்பு பேசுவது மடமை மட்டு மல்லாது உண்மைக்குப் புறம்பானதுமாகும். பற்று கண்ணை மறைக்காவிடின் பழமைக்கும் புது விளக்கம் காணலாம்.

  • தொடங்கியவர்

கிரேக்க ஆதி கவியாம் ஹோமர் தமது இதிகாசத்தை எழுதினார் என்ற நம்பிக்கையே பல காலமாகக் கிரேக்க இலக்கிய அறிஞரிடையே நிலவி வந்தது. அவ்வாறுதான் அது இருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினார். உயர் தனிக் காவியமாகிய இலியாது, ஒதீசி முதலியன நனிமிகு நாகரிகம் செழித்து வளர்ந்த காலப் பகுதியில் மகாகவியால் எழுதப் பெற்றிருக்க வேண்டும் எனக் கொண்டனர். ஆனால் கிரேக்க உயர் தனிக் காவியங்களை கேவலம் யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுடன் தற்செயலாக ஒப்பு நோக்கிய ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர் அவ்விரு தொகுதிப் பாடல்களும் பெரிதும் ஒத்திருக்கக்கண்டார். வாய் மொழிப் பாடல்களை அவர் காதாரக் கேட்டு அவற்றைப் பாடிய புலவர்களது உத்திகளைக் காட்சியளவையால் அறிந்திருந்தார். உறுதியாகத் தெரிந்த வாய் மொழி இலக்கியப்பண்புகள் பலவும் எழுதியனவாக நம்பப்பட்டு வந்த செம்மைசான்ற காவியங்களில் காணப்படும் போது என்ன செய்வது? கிரேக்க காவியங்களும் வாய்மொழிப் பாடல்களாக வழங்கி வந்து பிற்காலத்திலே எழுத்தில் பொறிக்கப்பட்டிருத்தல் கூடும் என்ற எண்ணத்தைக் கருதுகோளாகக் கொண்டு, இரு தொகுதி நூல்களையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ந்தார். ஐயத்துக்கிடமின்றிக் கிரேக்க காவியங்கள் வாய் மொழிப் பாடல்களே என்று தெரிய வந்தது. வரவும் அதைப் புதுக் கொள்கையாக வகுத்தார்.

நம்பிக்கையில் வாழ்ந்த கிரேக்க இலக்கிய உலகம் நம்ப மறுத்தது. ஆனால் புதிய கொள்கையை வெகுகாலம் எதிர்க்க முடியவில்லை. புதுக் கொள்கையைக் கூறிய மில்மன் பரி விஞ்ஞான முறையை-ஒப்பியல் ஆய்வு முறையைக் கையாண்டமையாலேயே அவரது விளக்கம் உண்மையாயமைந்தது. முதலிலே ஏளனஞ் செய்தவர்கள் பின்னர் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பரிக்குப் பின் வந்தோர் அவரை விஞ்ஞானியாகவே போற்றுகின்றனர். வேட்ஜெரி என்பார் "பரி ஹோமர் ஆராய்ச்சிக்கு வாய்ந்த டார்வின்" என்றார். காப்பென்றர் என்பர், "அவரது கண்டுபிடிப்பின் மெய்ம்மை இயுகிளிட் நிறுவிய மெய்ப்பீடுகளின் உண்மை போன்றது" என்றார். இப்பாராட்டுகளுக்கு விளக்கம் வேண்டாம்.

  • தொடங்கியவர்

யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுக்கிடையே ஆராய்ச்சி செய்துள்ள பேராசிரியர் லோட் இது குறித்துப் பின் வருமாறு கூறியுள்ளார். "அக்கவிஞரைப் பார்த்து சொல் என்பதற்குப் பொருள் யாது என்றால், தெரியாது, என்பர்; அல்லது ஒரு தனிச்சொல்லையோ, சொற்றொடர்களையோ உதாரணங் காட்டுவர். அவை கூற்று எனப்படும். அதாவது கவிக் கூறுகளும், முழுக்கவிதையும் 'கிளவி' அல்லது 'கூற்று' என்றே வழங்கப்படும்.

வாய்மொழிப் புலவரது கலையை உடனிருந்து அவதானித்து ஆராய்ந்த பேராசிரியரின் கண்டுபிடிப்பு, தொல்காப்பியர் கருத்தை ஒத்ததாகவே உள்ளது. சான்றோர் செய்யுட்கள் வாய்மொழி இலக்கியங்கள் என்பது இதனால் உறுதிப்படுகின்றதன்றோ?

பன்மொழிகளிலுள்ள வீரயுகப் பாடல்களை நன்கு ஆராய்ந்துள்ள பேராசிரியர் சி.எம்.பௌரா அவற்றிற்குப் பொதுவாகப் பின்வரும் எட்டு அம்சங்கள் இருப்பதைக் காட்டியுள்ளார்.

1. ஒரு நிகழ்ச்சியை அல்லது கதையை எடுத்துக் கூறுவதாக இருத்தல்.

2. பெரும்பாலும் வீரயுகத்திலே தோன்றியனவாக இருத்தல்.

3. சிறிய விஷயங்களையும் நுணுக்கமாக வருணிப்பதாயிருத்தல்; உதாரணமாக வருவோர் போவோரை உபசரிக்கும்முறை ஆடை, அணிகலன்கள், உண்டாட்டு, புரவி, யானை ஆகியன இயற்கையோடமைய வருணிக்கப்படுதல், சுருங்கக் கூறின் பருப்பொருள்கள் நன்கு சித்தரிக்கப்படுதல்.

4. கவிஞன் தன் கூற்றாகக் கவிதை பாடியிருப்பினும் பெரும்பகுதிப்பாடல்கள் பாத்திரங்களின் கூற்றாக இருத்தல்.

5. தொடர்கள், கருத்துக்கள் ஒரே தன்மையனவாக மீண்டும் மீண்டும் வருதல். (அவை ஒரேவழி மாறியும் விரவியும் வரும்)

6. பாடல்கள் அடியுடன் அடிசேரப் பொருள் நிறை பெறுமட்டும் நிமிர்ந்து செல்லுதல்.

7. பாடலின் தலைமகன் வீரபுருடன், புகழெனின் உயிருங் கொடுக்கம் அவனது ஆண்மையும் புகழுமே பாடலின் விழுமிய பொருளாயிருத்தல்.

8. உண்மையை உரைப்பதாகவே அமைந்திருத்தல்; செவிவழியாகவோ அன்றிக் கண்ணாற் கண்ட புலக்காட்சியினாலோ நிகழ்ந்தவற்றைக் கூறுவதாகவே அமைந்துகிடப்பன. அதனாலே பிற்காலக் காவியங்களிலும், முற்காலப் பாடல்கள் வரலாற்றுச் செய்திகளை அதிகம் உடையனவாக உள்ளன.

திரு. பௌரா கூறியுள்ள எட்டு அம்சங்களும் சான்றார் இலக்கியத்திற் சரிவரப் பொருந்தியிருக்கக் காணலாம். மேற்கூறிய அம்சங்கள் எட்டினையும் இருபெரும் பிரிவிற்குள் அடக்கிக் கொள்ளுதல் கூடும்.

(1) ஒன்று, பாடல்களின் மொழி நடை, யாப்பு, காலம் இலக்கிய நெறி முதலியன சம்பந்தமானது.

(2) மற்றொன்று, பாட்டுடைத் தலைவர்கள், அவர்தம் வாழ்வியல், குறிக்கோள் உடைமை முதலியன சம்பந்தமானது. சுருங்கக் கூறின் வீரப்பாடல்களின் உருவமும் உள்ளடக்கமும் ஒப்புமையுடையன வாயுள்ளன. கிரேக்க மொழியுட்படப் பிறமொழிகள் பலவற்றில் உள்ள வீரயுகப் பாடல்கள் சில தலையாய நாயகர்களது வீரத்தையும் புகழையும் விதந்து கூறுவனவாயிருப்பதைக் காண்கிறோம். அதுபோலத் தமிழ் வீரப்பாடல்களிலும் கரிகாலன், நெருஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் முதலிய சிலரே முழுமையான பாத்திரங்களாக வார்க்கப்பட்டுள்ளமை நோக்கத் தக்கது. உதாரணமாக, தமிழ் வீரப் பாடல்களிலும் இடம்பெறும் தலைமக்கள், பெரியோர் ஒழுக்கத்துக்கு மாறானவற்றிற்கு நாணுபவராய், பழியஞ்சுவராய்த் தமக்கென ஓர் அறக் கோட்பாடுடையவராய்க் காணப்படுகின்றனர். நாண், பழி, அறன் ஆகிய சொற்கள் ஈண்டுக் கவனிக்கத்தக்கன. கிரேக்க காவியங்களிற் பயிலும் Aidos Nemesis, Dike ஆகிய சொற்கள் முற்கூறிய தமிழ்ச் சொற்களுக்கு நேரான பொருளுடையன. அது போலவே சான்றோர் செய்யுட்களில் பால்வரை தெய்வம் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றுள்ளது. கிரேக்கச் சொல்லான Moira எல்லா வகையிலும் இதனை ஒத்துள்ளது. இவற்றை எல்லாம் உற்று நோக்கும் பொழுது உலகின் பல பகுதிகளிலே தோன்றிய வீரயுகப் பாடல்களுக்கு நிகராகத் தமிழிலக்கியத்திற் சிறப்புப் பொருந்திய சான்றோர் செய்யுட்கள் அமைந்துள்ளமை உறுதிப்படும். இறுதியாகக் குறிப்பிட்ட சான்றோர் என்னும் சொல்லையே எடுத்து நோக்கின், அது வீரர், உயர்ந்தோர், சிறந்தவர் என்று பொருள் படுவதைக் காணலாம். பண்டைக் கிரேக்கப் பாடல்களிலும் வழங்கும் Agathos என்ற சொல் இதற்கு நேர்ப் பதமாகும்.

பிற மொழிகளிலுள்ள வீரயுகப் பாடல்களைப் படிப்பதாலும், அவை பற்றிய ஆராய்ச்சிகளைத் தெரிந்து கொள்வதாலும் ஆரம்ப நிலையிலிருக்கும் தமிழ் வீர யுகம் பற்றிய ஆராய்ச்சி பெரிதும் பயனடையும், அதே சமயத்திற் பிற மொழியாராய்ச்சியாளர்களும் தமிழிலக்கியச் சான்றுகளிற் பயன்பெறுவர் என்று கூறவதில் தவறிருக்காது என்றே எண்ணுகிறேன். ஏனெனில், வீரயுகப் பாடல்களின் ஆராய்ச்சியானது தொடக்கத்திலிருந்தே ஒப்பிலக்கிய ஆய்வாகவே இருந்து வந்துள்ளது.

  • தொடங்கியவர்

விஞ்ஞானம் என்பது சடப்பொருள்களைப் பரிசோதித்து ஆராய்வதின் மூலம் அவற்றிற்கிடையே சில உறவு முறைகளைக் கண்டறிவதாகும். உறவுகளைக் காண்பதற்குச் சில கோட்பாடுகள் அவசியமாகின்றன. நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகள் உண்மைகளாகின்றன. அவ்வுண்மைகளைக் கோட்பாடுகளாகக் கொண்டு மேலும் புதிய பரிசீலனைகளைச் செய்யவும் அவற்றினை நிரூபிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இத்தகைய ஒரு தொடர் நிலையாகவே விஞ்ஞான அறிவு முன்னேறுகிறது. எனவே சடப்பொருள்களை ஏற்றுக்கொள்வதும், அவற்றினை ஆய்வதும் விஞ்ஞான நோக்கின் முதற்படியாகும். ஆனால், இந்தியாவிலே தோன்றி வளர்ந்த பெரும்பாலான தத்துவ தரிசனங்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. பொருட்களும் பிரபஞ்சமும் அநித்தியமானவை என்றும், இறைவன் அல்லது பிரமமே முழுமுதற் பொருள் என்றும், அது சடப்பொருள்களுக்கு அப்பாற்பட்டது என்றும் அத்தத்துவங்கள் கூறும். இவ்வாதமானது கருத்துக்களின் பிரதிபலிப்பே பொருள்கள் என்னும் கருத்து முதல் வாதமாகும். இவ்வாதம் விஞ்ஞான நோக்கிற்கும் அதன் அபிவிருத்திக்கும் உகந்தது அன்று என்பது வௌிப்படை. சுருங்கக் கூறின், உலகிலே கருத்து முதல் வாதத்திற்கும் பொருள் முதல் வாதத்திற்குமிடையே நிலவிவரும் முரண்பாட்டினை இங்குத் தௌிவாகக் காணலாம். காண்பனவற்றைக் கணக்கெடுத்துப் பஞ்சபூதங்களின் நுட்பத்தை நுணுகி அறியவைப்பது விஞ்ஞானம் எனில், 'காண்பனவெல்லாம் பொய்: காணாதது ஒன்று உண்டு; அதனை மனத்தின் துணைகொண்டு தேடு' எனக் கூறுவது இலட்சியவாதத் தத்துவம். வேத, உபநிடத காலத்திலேயே இப்போராட்டந் தொடங்கிவிட்டது. இன்றுவரை பல சந்தர்ப்பங்களில் பொருள் முதல் வாதமும் விஞ்ஞான நோக்கும் ஆங்காங்குத் தலை தூக்கின. சான்றோர் இலக்கியங்களிலே இதனைக் காணலாம். நல்வினை, பிறவாநிலை முதுலியவற்றிலே நம்பிக்கை இல்லாதவரை மனத்திற் கொண்டு கோப்பெருஞ்சோழன் ஒரு பாடலைப் பாடியுள்ளான். இது புறநானூற்றிற் காணப்படும். சாங்கியம், சமணம், பௌத்தம், யோகம் முதலிய தத்துவ சமயக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் விஞ்ஞானச் சாயல் பொருந்திய பல சிந்தனைகள் இலக்கிய நூல்களிலும் தத்துவங்களிலும் எதிரொலிக்கலாயின. எனினும், வைதிக சமயக் கருத்துக்களும் சநாதன தருமமுமே பெருவழக்காக நிலவின. இவற்றின் மத்தியிலே தம்மாலியன்றளவு உணர்ச்சி பூர்வமாகவேனும் விஞ்ஞானப் பண்பினை வளர்க்க முனைந்தவர் சிலரிருந்தனர். அவரைச் சித்தர் என்றழைக்கலாயினர். சித்தர்கள் என்றால் 'அறிவர்' என்பது பொருள்; விளங்கிய அறிவுரையடைவர் எனலாம்.

  • தொடங்கியவர்

தமிழ் நாட்டிலே பதிணென் சித்தரைப் பற்றிய வழக்கும் செவிவழிச் செய்திகளும் உள்ளன. சில பொதுப் பண்புகளையே குறிக்கலாம். தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், இரேகை சாத்திரம், வான சாத்திரம் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன. இவற்றிற் பல இன்னும் ஓலைச்சுவடிகளாகவே கிடக்கின்றன.

வேதாந்தச் சார்புள்ள இறைத் தத்துவங்கள் யாவும், "காயமே பொய்; உடலை விடுத்து உயிரின் ஈடேற்றத்திற்காக உழை' என்றே மாயாவாதம் பேசின. இப்போக்கை வன்மையாகக் கண்டித்து மறுத்தனர் சித்தர். தமிழிலே திருமூலர் முதன் முதலாக இவ்வெதிர்க் குரலுக்கு உருவங்கொடுத்தார் எனலாம். திருமந்திரத்திலே பலவிடங்களில் உடம்பின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார் திருமூலர்.

".................உடம்பொடு

செத்திட்டு இருப்பர் சிவயோகிகள்

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்."

"உறுதுணையாவது உயிரும் உடம்பும்."

"உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்."

திருமூலரின் இக்கருத்துக்கள் மாயாவாதத்திற்கு நேர் முரணான மெய்ம்மை வாதத்தை அடி நிலையாகக் கொண்டவை. திருமூலர் ஒரு சித்தர். திருமந்திரத்தை 'தந்திரம்' என்றும் கூறுவதுண்டு. தந்திரம் என்பது இந்தியாவிலே பண்டுதொட்டு வளர்ந்து வந்த ஒரு வழிபாட்டு முறை. இவ்வுடலின் துணைக்கொண்டே இவ்வுடலின் மூலமாகவே-பேரின்பத்தை அடையும் உண்மையைக் காட்டுவன யோகம், தந்திரம் முதலியன. கிரியைகள், சடங்குகள், மந்திர உச்சாடனங்கள், உடற்பயிற்சி, உடல்வலிமை முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. யோகமும், தந்திரமும், மனித உடலுக்கு உண்மை- மெய் என்னும் பெயரை மெய்யாகக் கூறியவர்கள் தந்திரவாதிகள். அந்தளவிற்கு அவர்கள் மெய்மை வாதிகள்.

சித்தர்களின் இப்பண்புகளைப் பற்றி, சாமி சிதம்பரனார் கூறுவது வருமாறு:

"சித்தர் பாடல்களை ஆழ்ந்து படித்தால், அவர்கள் வைதிக மதத்திற்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். வைதிக மதக் கொள்கைகள் பலவற்றைத் தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் தங்களை நாத்திகர் என்றோ, உலகாயதர்கள் என்றோ வௌிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. வௌிப்படையாகப் பாடவில்லை. கடவுள் அன்பர்கள் போலவே காட்சியளிக்கின்றனர். ஆயினும் சித்தர்களின் பாடல்களிலே உலகாயதத்தை - நாத்திகத்தைப் பற்றிய கண்டனங்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விஞ்ஞானிகளும், ஆன்மா தனித்த ஒரு பொருள் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆன்மா என ஒன்று தனியாக மதவாதிகள் சொல்லுகின்ற படி அழியாத தனிப்பொருளாக இல்லையென்பதே பல விஞ்ஞானிகள் கருத்து. சித்தர்களின் கொள்கை இதற்கு ஒத்திருப்பதைக் காண்கிறோம்."

சித்தர்களைப் பற்றிக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்தவர்கள் யாவரும் ஏகோபித்த குரலிற் கூறுவது இதுதான். சித்தர்களைப் பற்றியும் அவர்களது இரசாவாதத்தைப் பற்றியும் எழுதிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையிலே, கும்பகோணம் கே.சி. வீரராகவ ஐயர் இவ்வாறு கூறியுள்ளார்:

"பெரும்பாலான சித்தர்கள் சங்கரரின் ஒருமைவாதத் தத்துவத்தையும் இந்துக்களின் விக்கிரக வழிபாட்டையும் எதிர்த்து மறுத்தவராகவே காணப்படுகின்றனர்."

இவ்வாறு சித்தர்கள் வைதிக சமயத்தை எதிர்த்து நிற்கவும், வைதிக நெறியினரும் அவர்களைத் தள்ளி வைத்தனர். மிகச் சமீபகாலம் வரை சைவ சித்தாந்திகளும் சித்தர் நூல்களை விலக்கி வைத்திருந்தனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய கா.சு. பிள்ளை முதலிய சிலரே சித்தர் பாடல்களும் கற்கத் தகுந்தன எனக் கூறுத் தொடங்கினர். மரபு வழி வரும் கருத்துக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் இரு மேற்கோள்கள் அமையும்.

  • தொடங்கியவர்

இதுகாறும் சைவ சாத்திர வரிசையிலே நுழைவதற்கு இடம் பெறாத பஞ்சம நிலையிலே நிற்கும் சித்தர் நூல் அவ்வியாசத்தில் அக்கிரஸ்தானம் பெற்றுவிட்டது.

"சைவ சமயத்தைத் தாபித்து உபகரித்த சைவ சமய குரவர்கள் கற்பித்த வழியைக் கைப்பிடித்து ஒழுகும் சைவ மக்களும் சித்தர் நூலை நோக்கவும் இசைவாரா? ஒருகாலும் இசையார்."

மேற்கூட்டிய இரு கூற்றுக்களும் முறையே வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, திருநெல்வேலி மா. சாம்பசிவ பிள்ளை ஆகியோரால் திருநான்மறை விளக்க ஆராய்ச்சி என்னும் நூலிற் கூறப்பட்டவை.

தமிழரிடையே நிலவிய சாதியமைப்பின்படி, பஞ்சமர் நால் வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்; சித்தர்களைப் பஞ்சம நிலையில் உள்ளோர் என்று கூறுவது உற்று நோக்கத்தக்கது. சுருங்கக் கூறின், வைதிக சமய எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்துக் கூறப்படுகிறது. வைதிக சமயிகளின் கோபாவேசத்திற்குக் காரணம் எமக்குத் தெரிந்ததே. இடைக்காலச் சமுதாயம் வேத வாழ்க்கையை மூலாதாரமாய்க் கொண்டு வருணாசிரம தருமத்தின் அடிப்படையிற் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. வேத வழக்கொடு மாறுபடும் எதுவும் ஆக்குரோசத்துடன்கண்டிக்கப்ப

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கட்டுரை.

இணைத்ததுக்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.