Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • தொடங்கியவர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசு மனுவை ஏற்பதில் சிக்கல்: குறைபாடுகளை சுட்டிக்காட்டியது உச்ச நீதிமன்றம்

 
 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தலைமையிலான குழு மனுவை திருத்தி வருவதால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாகும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ல் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பில் பல அடிப்படை தவறுகளும் கணித பிழைகளும் இருப்பதால் க‌ர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

மேல் முறையீட்டு மனு தாக்கல்

இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையிலான ச‌ட்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஜெயலலிதாவுக்கு எதிரான‌ மேல்முறையீட்டு மனுவை தயாரித்தனர். இதில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிய ஆதாரங்கள், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள், அரசு சான்று ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்தனர். மேலும் குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை யும், குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள பாதகமான அம்சங்களையும் குறிப்பிட்டனர்.

இதையடுத்து 2,377 பக்க மேல்முறையீட்டு மனுவை கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் மற்றும் ஆச்சார்யாவின் உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் கடந்த ஜூன் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் தாக்கல் செய்தனர். 9 தொகுதிகளாக விவரிக் கப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற பதிவுத்துறை, குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த 6 பேரை நியமித்தது.

இந்த சட்ட நிபுணர்கள் குழு கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆராய்ந்ததில் 10 முக்கிய குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மனுவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தலைமை பதிவாளரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. எனவே மேல்முறையீட்டு மனுவில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டார்.

10 முக்கிய குறைபாடுகள்

அதில், ''க‌ர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் 1,223 மற்றும் 1,453 ஆகிய 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது. இதேபோல 1,605-ம் பக்கத்தில் இருந்து 1,629-ம் பக்கம் வரை தாளின் மேற்பகுதியில் முறையாக பக்க எண் குறிப்பிடப்படவில்லை. மனுவை விசாரணைக்கு ஏற்கும் வகையில் அசல் பிரமாணப் பத்திரத்தை இணைக்கவில்லை. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை மற்றும் ரத்து செய்யக்கோரும் முக்கிய வேண்டுகோளில் ஆணை வெளியான தேதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி குன்ஹா மற்றும் குமாரசாமி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய அரசு சான்று ஆவணங்களை மனுவில் இணைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும் வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு, மனு மீதான தீர்ப்பாணைகள், விசாரணை நீதிமன்றத்தின் முக்கிய‌ குறிப்புகள், வெளியிடப்பட்ட‌ அரசாணைகள், பின்இணைப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவை இணைக்கப்படவில்லை.

குறிப்பாக 28-4-2015 அன்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டது தொடர்பான கர்நாடக அரசின் அரசாணை தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக மேல்முறையீட்டு மனு தயாரிக்கப்பட்ட தேதி, தாக்கல் செய்யப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை''என உச்சநீதிமன்றம் 10 குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.

திருத்தப்படும் மனு

கர்நாடக அரசின் முக்கிய சட்ட நிபுணர்கள் தயாரித்த மேல்முறையீட்டு மனுவில் குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனு தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய சந்தேஷ் சவுட்டா, கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப்பா ஆகியோரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து ஆச்சார்யா தலைமையிலான குழு மேல் முறையீட்டு மனுவை பல பிரிவுகளாக பிரித்து திருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.

http://tamil.thehindu.com/india/தமிழக-முதல்வர்-ஜெயலலிதா-விடுதலைக்கு-எதிரான-கர்நாடக-அரசு-மனுவை-ஏற்பதில்-சிக்கல்-குறைபாடுகளை-சுட்டிக்காட்டியது-உச்ச-நீதிமன்றம்/article7394419.ece?homepage=true&ref=tnwn

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
ஜெ. வழக்கு: கர்நாடக அப்பீல் மனுவில் தவறுகள், பேப்பர் மிஸ்சிங்! அதிர்ச்சியில் ஆச்சாரியா
 
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவில் சில முக்கிய தகவல்களை அரசு தரப்பு சேர்க்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தவறு எப்படி நடந்தது என்ற புரியாத நிலையில், தவறுகளை திருத்தி சரி செய்து தரப்படும் என்று அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை மற்றும், 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது, கர்நாடக ஹைகோர்ட்.
 
சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 23ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அரிஸ்டாடில் இம்மனுவை தாக்கல் செய்தார். கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பில் குளறுபடிகள் உள்ளதாக கர்நாடக மனுவில் கூறப்பட்டுள்ளது. கணித கூட்டல் தவறுகளும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
அன்பழகனும் அப்பீல் இந்நிலையில், திமுகவின் அன்பழகன் சார்பிலும், நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவிலும், கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள தவறுகள், குழறுபடிகள் சுட்டிக்காண்பிக்கப்பட்டன. இம்மனுவையும், அரசு தரப்பு மனுவோடு சுப்ரீம்கோர்ட் இணைத்து விசாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
தகவல்கள் மிஸ்சிங் இந்த மனு அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனுவில் தவறுகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் அரசு தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ளார். ஆச்சாரியாவை இவ்வழக்கில், ஆஜராக கர்நாடக அரசு உத்தரவிட்ட வக்காலத்து ஆணையை கூட மனுவில் இணைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
காலி பேப்பர்கள் என்னென்ன தவறுகள் என்பது குறித்து கர்நாடக அரசு தரப்பில் பெயர் தெரிவிக்கவிரும்பாத சிலர் கூறியதாவது: அப்பீல் மனுவின் 1223ம் பக்கம் மற்றும் 1453ம் பக்கங்கள் காலி பேப்பர்களாக உள்ளன. அதில் இருந்த தகவல்கள் மிஸ் ஆகியுள்ளன. ஒரிஜினல் பிரமாணப் பத்திரம் இணைக்கப்படவில்லை இதுபோன்ற சில தவறுகள் உள்ளன. இவ்வாறு அந்த தரப்பு தெரிவித்தது.
 
சகஜம்தான் இதுகுறித்து வழக்கறிஞர் ஆச்சாரியாவை, 'தட்ஸ்தமிழ்' தொடர்பு கொண்டு கேட்டபோது, "மனு தாக்கலின்போது சிறு தவறுகள் ஏற்படுவதும், அதை சரி செய்து கொடுப்பது வழக்குகளில் சகஜமான ஒன்றுதான். இதிலும், கேட்டிருக்கும் தகவல்கள் இணைத்து கொடுக்கப்படும்" என்றார். இருப்பினும், என்னென்ன விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
 
மர்மம் நீடிப்பு மனுத்தாக்கலின்போது சில தவறுகள் நடப்பது சகஜம் என்ற போதிலும், ஆச்சாரியா, சந்தேஷ்சவுட்டா, அரிஸ்டாடில் போன்ற மூத்த வழக்கறிஞர் குழுவின் மேற்பார்வையில் தயாரான மனுவில், வெற்று காகிதம் இருப்பது, முக்கிய தகவல் சில விடுபட்டிருப்பது போன்றவற்றுக்கு வாய்ப்பு மிக குறைவு. எனவே, இதில் நடந்த தவறு மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறுகளை திருத்தி கொடுத்ததும், அடுத்தவாரத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
Read more at: http://tamil.oneindia.com/news/india/defects-are-found-the-the-disproportionate-assets-case-appeal-petitionya-230462.html
  • தொடங்கியவர்

ஜெ. விடுதலைக்கு எதிரான மனுவில் 10 குறைபாடுகள்: விசாரணை தாமதமாகும்!

புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில், 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது உள்பட 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால்,  விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது.
 

sasikala-%20elavarasi-%20jaya-%20sudhaka

வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, நான்கு பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

இதை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, கடந்த மே 11ஆம் தேதி நான்கு பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பில் பல அடிப்படை தவறுகளும், கணித பிழைகளும் இருப்பதால் க‌ர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையிலான ச‌ட்ட நிபுணர்கள் அடங்கிய குழு, ஜெயலலிதாவுக்கு எதிரான‌ மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 2,377 பக்கங்கள் கொண்டதாக இந்த மேல்முறையீட்டு மனு இருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை ஆராய்வதற்காக, குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த 6 பேரை உச்ச நீதிமன்ற பதிவாளர் நியமித்தார். இந்த சட்ட நிபுணர்கள் குழு, கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆராய்ந்ததில், 10 முக்கிய குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மனுவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, தலைமை பதிவாளரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. எனவே மேல்முறையீட்டு மனுவில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டார்.

Acharya%202.jpgஅதில், ''க‌ர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் 1,223 மற்றும் 1,453 ஆகிய 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது. இதேபோல 1,605ஆம் பக்கத்தில் இருந்து 1,629ஆம் பக்கம் வரை தாளின் மேற்பகுதியில் முறையாக பக்க எண் குறிப்பிடப்படவில்லை. மனுவை விசாரணைக்கு ஏற்கும் வகையில் அசல் பிரமாணப் பத்திரத்தை இணைக்கவில்லை. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை மற்றும் ரத்து செய்யக்கோரும் முக்கிய வேண்டுகோளில் ஆணை வெளியான தேதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி குன்ஹா மற்றும் குமாரசாமி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய அரசு சான்று ஆவணங்களை மனுவில் இணைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு, மனு மீதான தீர்ப்பாணைகள், விசாரணை நீதிமன்றத்தின் முக்கிய‌ குறிப்புகள், வெளியிடப்பட்ட‌ அரசாணைகள், பின்இணைப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவை இணைக்கப்படவில்லை.

குறிப்பாக 28.4.2015 அன்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டது தொடர்பான கர்நாடக அரசின் அரசாணை தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக மேல்முறையீட்டு மனு தயாரிக்கப்பட்ட தேதி, தாக்கல் செய்யப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை என 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தலைமையிலான குழு, மேல் முறையீட்டு மனுவை பல பிரிவுகளாக பிரித்து திருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாகும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://www.vikatan.com/news/article.php?aid=49120

  • தொடங்கியவர்

ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் திமுக மனுவில் 9 குறைபாடுகள்: மனுவை திருத்தி தாக்கல் செய்ய உத்தரவு

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறை யீட்டு மனுவைத் தொடர்ந்து, திமுக தாக்கல் செய்த மனுவிலும் குறை பாடுகள் இருப்பதாக உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்ப‌ழகன் தரப்பில் கடந்த 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பக்கங்களில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக தரப்பு மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அதி காரிகள், அதில் பல குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற‌ தலைமைப் பதிவாளர், மனுவில் உள்ள 9 முக்கிய குறைபாடுகளை சரி செய்து, திருத்தப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு திமுக தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதில், “திமுக தாக்கல் செய் துள்ள மனுவில் இணைக்கப்பட்டு இருக்கும் பிரமாணப்பத்திரத்தில் கோரப்பட்டுள்ள முக்கிய விவரங் கள் விடுபட்டுள்ளன. பரிந்துரைக்கப் பட்டுள்ள ஆவணங்களை தர வரிசைப்படி குறிப்பிடப்பட‌ வில்லை. வழக்கில் அன்பழகன் தொடர்பாக உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் தீர்ப்பாணைகள் முழுமையாக இணைக்கப்பட வில்லை. வழக்கு தொடர்பான அர சாணைகள், வழிகாட்டுதல்கள், விசாரணை நீதிமன்றத்தில் முக்கிய குறிப்புகள், அரசு சான்று ஆவணங் கள் மனுவுடன் இணைக்கப்பட‌ வில்லை'' என்பன உள்ளிட்ட 9 குறைபாடுகளை சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.

திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற பதிவா ளர் அலுவலகம் மீண்டும் சரிபார்த்த பிறகே குற்றவியல் வழக்கு எண் கள் ஒதுக்கப்பட்டு, வழக்கை விசாரிக்கப் போகும் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படும். இந்த நடைமுறைகள் முடிய ஒரு மாத காலம் வரை கால அவகாசம் தேவைப்படும். இதனால் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
 
 
  • தொடங்கியவர்

ஜெ. விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

மனுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இந்த வழக்குக்கு 11477/2015 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கு எண் வழங்கப்பட்டு விட்டதால் அடுத்த வாரத்திலேயே வழக்கு விசாரணைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சகிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ல் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

இதை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி சி.ஆர். குமாரசாமி கடந்த மே 11-ம் தேதி ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்தார்.

இந்தத் தீர்ப்பில் பல அடிப்படை தவறுகளும் கணித பிழைகளும் இருப்பதாக பல்வேறு தரப்பினர் சுட்டிக் காட்டினர்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் கடந்த ஜூன் 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை ஆராய்வதற்காக 6 பேர் குழுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் நியமித்தது. அந்த குழு நடத்திய ஆய்வில், கர்நாடக அரசின் மனுவில் 10 முக்கிய குறைபாடுகள் இருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.

இதையடுத்து கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தலைமையிலான குழுவினர் மேல்முறையீட்டு மனுவை திருத்தும் பணியை மேற்கொண்டனர்.

அந்தப் பணிகள் நிறைவடைந்து கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11-ம் தேதி தாக்கல் செய்தார்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/india/ஜெ-விடுதலைக்கு-எதிரான-கர்நாடக-அரசின்-மேல்முறையீட்டு-மனுவை-ஏற்றது-உச்ச-நீதிமன்றம்/article7429548.ece

  • தொடங்கியவர்
ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முன்னுள்ள 6 வாய்ப்புகள்...
 
தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரை 66.65 கோடி ரூபாய் சொத்து குவிப்பு ஊழல் வழக்கிலிருந்து கர்நாடக உயர்நீதி மன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.
 
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் வரும் 24 ம் தேதி உச்ச நீதி மன்றத்தில் முதல் விசாரணைக்கு வருகிறது. 2014 ம் ஆண்டு செப்டம்பர் 27 ம் நாள் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் நான்காண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா தீர்ப்பளித்தார். 
 
22 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் அக்டோபர் 17 ம் நாள் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி சி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் மே 11 ம் தேதி விடுதலை செய்தார். இந்த விடுதலையை எதிர்த்துதான் கர்நாடக அரசும், திமுக வும் மேல் முறையீடு செய்துள்ளன.
 
தற்போது எல்லோரது பார்வையும் உச்ச நீதிமன்றத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அனேகமாக ஜூலை 24 ம் தேதி, இம் மனுக்கள் விசாரணைக்கு வரவிருக்கின்றன. சரி. உச்ச நீதி மன்றம் என்னவெல்லாம் செய்ய வாய்ப்பிருக்கிறது?
 
பின் வரும் ஆறு சாத்தியக் கூறுகள் உள்ளன..
 
1. உச்ச நீதிமன்றம் உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கலாம். அவ்வாறு விதித்தால் ஜெ வும் மற்றவர்களும் மீண்டும் சிறைக்குப் போக வேண்டிய வாய்ப்பு உருவாகும் - ஆனால் இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
 
2. உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு தடை போடாது, ஆனால் தண்டனைக்கு தடை போடும். இதனால் ஜெயலலிதா சிறைக்குப் போகமாட்டார், ஆனால் உடனடியாக அவரது எம்எல்ஏ மற்றும் முதலமைச்சர் பதவி பறி போய் விடும்.
 
3. உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுக்களை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளும், ஆனால் தீர்ப்புக்கு தடை விதிக்காது. மாறாக ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள், அதாவது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்கி விடும்.
 

4. உச்ச நீதி மன்றம் மேல் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளும். ஜெ உள்ளிட்டோருக்கு வெறும் நோட்டீஸ் மட்டும் அனுப்ப படும். விசாரணை முடிய பல ஆண்டுகளாகும்.

5. உச்ச நீதி மன்றம் மீண்டும் இந்த மனுவை புதிய வழி காட்டு நெறிகளின்படி விசாரிக்கும் படி உத்திரவிட்டு கர்நாடக உயர்நீதி மன்றத்துக்கு அனுப்பி வைக்கும்.

6. எடுத்த எடுப்பிலேயே இந்த மேல் முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம், ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிக, மிக குறைவு.

இந்த ஆறு சாத்தியக் கூறுகள்தான் ஜெயலலிதா மேல் முறையீட்டு மனுவில் உச்ச நீதி மன்றத்தின் முன்னுள்ளவையாகும். இவற்றில் ஏதாவது ஒன்றுதான் நடக்கப் போகிறது. வழக்கமாக கீழமை நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட்டு, உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப் பட்ட ஒருவருக்கு எதிரான மேல் முறையீட்டு மனு விசாரணையில் அவ்வளவு சுலபமாக உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது கிடையாது.

இந்த விவகாரத்தில் சட்டம் மெளனமாகவே இருக்கிறது. தடை கொடுக்கக் கூடாதென்று எந்த விதியும் இல்லை.

ஆனால் வழக்கமாக தடை கொடுக்கப் படுவதில்லை. இருந்த போதிலும் அரிதினும் அரிதான தருணங்களில் உச்ச நீதிமன்றம், சட்டத்தில் சொல்லப் படாத விஷயங்களை, நீதியையும், தர்மத்தையும் நிலை நாட்ட சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.

 

ஜெயலலிதா வழக்கு வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, நீதிபதிகளுக்கும் பல விஷயங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று இந்தாண்டு ஏப்ரல் மாதம், அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதி மதன் பி லோகூர் கூறினார்.

அந்தபின் புலத்திலும், ஜெயலலிதாவுக்கு அக்டோபர் 17 ம் தேதி, எதிர்தரப்பைக் கூட கேட்காமல் வெறும் 30 நிமிடத்திலேயே உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கியதையும் கவனத்தில் கொண்டு பார்த்தால் இந்த மேல் முறையீட்டு மனு விசாரணையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
 
ஜெயலலிதா வழக்கு அரிதினும் அரிதான வழக்கென்பது ஊரறிந்த உண்மைதான். அப்படியென்றால் அதில் ஒவ்வோர் கட்டத்திலும் வழங்கப்படும் தீர்ப்புகளும், வழக்கத்திற்கு மாறான, புதிய, புதிய சட்டப் பாதைகளை வகுக்கக் கூடிய தீர்ப்புகள்தான் என்பதும் புரிந்து கொள்ளக் கூடிய உண்மைகள்தான்.
 
இதில் மற்றோர் சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியுள்ளது. இதே போன்று 14 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம். அது. 2001 ம் ஆண்டில் ஜெயலலிதா எம் எல் ஏ வாக இல்லாமல், அஇஅதிமுக வெற்றிப் பெற்றதால் பதவியேற்றார். எம்எல்ஏ வாக போட்டியிட தகுதியில்லாத ஒருவர் எவ்வாறு முதலமைச்சராக இருக்கலாம் என்று திமுக உச்சநீதி மன்றம் சென்றது. டான்சி வழக்கிலும், பிளெசெண்ட்ஸ்டே வழக்கிலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா எம்எல்ஏ வாக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
 
2001 ம் ஆண்டு மே 14 ம் தேதி ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது உச்சநீதி மன்றம் கோடை விடுமுறையில் இருந்த நேரம். விடுமுறை முடிந்ததும் திமுக உச்ச நீதி மன்றம் சென்றது. ஜூலை 20 ம் தேதி, வெள்ளிக் கிழமை இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதி மன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு அதனை அனுப்பியது. இந்த மனுக்களின் மீது விசாரணையை செப்டம்பர் 6 ம் தேதி துவக்கிய உச்ச நீதிமன்றம், 21 ம் தேதி ஜெயலலிதா பதவியேற்றது செல்லாதென்று அறிவித்தது. பின்னர் டான்சி மற்றும் பிளெசெண்ட் ஸ்டே வழக்குகளில் வென்று ஜெயலலிதா மீண்டும் முதல்வாரானார், அது வேறு கதை.
 
ஆனால் தற்போதும் கிட்டத்தட்ட அதே மாதிரி சூழல்தான். மே 11 ம் தேதி ஜெயலலிதா வை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தபோது, உச்ச நீதிமன்றம் அடுத்த சில நாட்களில் கோடை விடுமுறைக்குச் சென்று விட்டது. 2001 ம் ஆண்டைப் போலவே இந்தாண்டு ஜூலையில் தான் திமுக மனு விசாரணைக்கு வருகிறது. 24 ம் தேதி விசாரணைக்கு வந்தால், 2001 ம் ஆண்டைப் போலவே அதுவும் ஒரு வெள்ளிக் கிழமைதான். ஆனால் 2001 ம் ஆண்டைப் போலவே 2015 ம் ஆண்டிலும் உச்ச நீதி மன்றம் ஜெயலலிதாவுக்கு எதிரான மனுவை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்கப் போகிறதா? அல்லது தேங்கி கிடக்கும் பல்லாயிரக் கணக்கான மேல் முறையிட்டு மனுக்களுடன் இந்த மனுவும் ஊறப் போடப்பட்டு விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகப் போகிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!
  • தொடங்கியவர்
ஜெ. விடுதலையை எதிர்த்த கர்நாடகாவின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் வரும் 27-ல் விசாரணை
 
 
 டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் வரும் 27-ந் தேதி விசாரணைக்கு நடைபெற உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிநீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
 
இந்த தீர்ப்பினால் முதல்வர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவும், மற்றவர்களும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி கடந்த மே மாதம் 11-ந் தேதி தனிநீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தும், ஜெயலலிதாவையும், மற்றவர்களையும் விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை தொடர்ந்து ஜெயலலிதா கடந்த மே மாதம் 23-ந் தேதி முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார்.
 
மேலும் கடந்த 27-ந் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று கடந்த 4-ந் தேதி சட்டசபை உறுப்பினராக பதவியேற்றார். இந்நிலையில் இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இதில் உச்சநீதிமன்றம் சில திருத்தங்களை செய்யக் கோரியது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவை கடந்த 16-ந் தேதி உச்சநீதிமன்ற பதிவாளர் ஏற்றார். இந்த மேல்முறையீட்டு மனு மீது வரும் 27-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனும் இதேபோல் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து அப்பீல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதிலும் சில திருத்தங்களை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் பின்னர் அன்பழகன் சார்பில் திருத்தபட்ட மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு அதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யப் போவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sc-will-hear-the-karnataka-s-appeal-against-jaya-s-acquittal-231502.html
  • தொடங்கியவர்
ஜெ. விடுதலைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் சு.சுவாமியும் அப்பீல் மனு தாக்கல்!
 
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது கர்நாடக ஹைகோர்ட். இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
சில திருத்தங்கள், விவரங்களை கேட்ட சுப்ரீம்கோர்ட் பதிவாளர் அலுவலகம், அரசு தரப்பு விளக்கம் அளித்த பிறகு, அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதேபோல, அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த மனுவும், சில குறைபாடுகள் களையப்பட்ட பிறகு ஏற்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு வரும் 27-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா உட்பட 4 பேர் விடுதலைக்கு எதிராக மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கர்நாடகா மற்றும் தி.மு.க. தரப்பு தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின் போது தம்மையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/swamy-files-appeal-sc-against-jayalalithaa-s-acquittal-231543.html
  • தொடங்கியவர்

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அறிவிப்பு!

 

புதுடெல்லி: ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 

 

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடந்த மே 11ஆம் தேதி நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக‌ அரசு தரப்பில், சிறப்பு மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் விடுதலையை ரத்து செய்யக் கோரியும், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து 6 தனியார் நிறுவனங்கள் விடுவிக்கப்பட் டதை எதிர்த்தும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களில் உள்ள குறைகள் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு, இரு தரப்பும் திருத்தப்பட்ட மனுக்களை தாக்கல் செய்தன. இம்மனுக்களுக்கு குற்றவியல் வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டன.

ஜெயல‌லிதாவின் விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மனுவின் விசாரணை விவரங்கள் குறித்த பட்டியல் வரும் 27ஆம் தேதி வெளியிடப்படும் என பதிவாளர் அலுவலகம் அறிவித்திருந்தது. இதனால் அன்றைய தினமே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=49982

ஜெயலலிதா குவித்த சொத்தை விட அண்ணன் நவீனன் இங்கு குவித்து வைத்திருப்பது அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா குவித்த சொத்தை விட அண்ணன் நவீனன் இங்கு குவித்து வைத்திருப்பது அதிகம்

ம்ம்ம்  நானும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்

அவரது பொறுமைக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

ஜெயலலிதா குவித்த சொத்தை விட அண்ணன் நவீனன் இங்கு குவித்து வைத்திருப்பது அதிகம்

ஓம் அண்ணை சேவையர், ஜெயலலிதா சேர்த்தது 66 கோடி நான் 100 கோடி சேர்த்து குவித்து விட்டேன்.:grin:

ம்ம்ம்  நானும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்

அவரது பொறுமைக்கு வாழ்த்துக்கள்

இது சம்மந்தமான செய்திகளை காணும்போது இணைப்பது அவ்வளவுதான் விசுகு. இதில் எனது பொறுமை என்பது எல்லாம் ஒன்றும் இல்லை:)

ஓம் அண்ணை சேவையர், ஜெயலலிதா சேர்த்தது 66 கோடி நான் 100 கோடி சேர்த்து குவித்து விட்டேன்.:grin:

இது சம்மந்தமான செய்திகளை காணும்போது இணைப்பது அவ்வளவுதான் விசுகு. இதில் எனது பொறுமை என்பது எல்லாம் ஒன்றும் இல்லை:)

வாழ்த்துக்கள் அண்ணன்....

தொடர்ந்தும் அள்ளிக்குவிக்காவிட்டாலும் கிள்ளிக்குவியுங்கள்....பயனுள்ளதாக இருக்கும்

  • தொடங்கியவர்

ஜெயலலிதா விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு விசாரணையை மேற்கொண்டது.

ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்

ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த இந்த உச்ச நீதிமன்ற அமர்வு, முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரித்தார். அவர் கடந்த மே 11-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மனுவை கர்நாடக அரசு கடந்த மாதம் 23-ம் தேதி தாக்கல் செய்தது. அதில், சொத்து விவரங்களை கணக்கிட்டதில் தவறு நடந்துள்ளது என்றும் கர்நாடக அரசின் வாதம் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. மனுவில் உள்ள சில தவறுகளை சுட்டிக் காட்டியதன் பேரில் அந்த மனு வாபஸ் பெறப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழ கனும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மொத்தம் எட்டு புத்தகங்களாக 2300 பக்கங்களில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களை விடுவித்ததை எதிர்த்தும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/india/ஜெயலலிதா-விடுதலைக்கு-இடைக்கால-தடை-விதிக்க-உச்ச-நீதிமன்றம்-மறுப்பு/article7469821.ece

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்
 
டெல்லி: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. அதில், லெக்ஸ் புராப்பர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களை வழக்கில் சேர்க்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்தது கர்நாடக ஹைகோர்ட். இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
 
திமுகவின் அன்பழகனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் இன்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த மனுவில், லெக்ஸ் புராப்பர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களையும், இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 6 நிறுவனங்களும் ஜெயலலிதாவுடையதுதான் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அன்பழகன் தரப்பும் இதே கோரிக்கையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/government-files-new-petition-the-jayalalitha-case-232696.html
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

 

தமிழக் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட லெக்ஸ் ப்ராப்பட்டீஸ், மெடோ அக்ரோஃபார்ம் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மேலும், வழக்கில் இருந்து லெக்ஸ் ப்ராப்பட்டீஸ், மெடோ அக்ரோஃபார்ம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி, கர்நாடக அரசு முறையிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து, அடுத்த 2 வார காலத்திற்குள் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து 6 நிறுவனங்களை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://tamil.adaderana.lk/news.php?nid=71876

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
குமாரசாமி தீர்ப்பு தெளிவாக இருக்கிறது.... சொத்து குவிப்பு அப்பீல் வழக்கில் ஜெ. பதில் மனு!
 

 டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தமது தரப்பு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு தெளிவாகவே இருப்பதால் தாம் உட்பட 4 பேரையும் விடுதலை செய்தது சரியே என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

 

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தனிநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

 இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பான 6 நிறுவனங்களை விடுவித்ததற்கு எதிரான மனு ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு ஏற்று கொண்டது.

 

மேலும் பா.ஜ.க.வின் சுப்பிரமணியசாமி இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு ஏற்று கொள்ளபட்டது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இதனடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், சொத்து குவிப்புவழக்கில் சட்டரீதியான எந்த கேள்வியும் எழவில்லை; நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது; வழக்கில் இருந்து 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஜெயலலிதா வழக்கில் அக்.12-ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

 
supreme_court3_2484889h.jpg
 

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது வரும் அக்டோபர் 12-ம் தேதி விசாரணை தொடங்க வாய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 23-ம் தேதி கர்நாடக அரசு தரப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே. அகர்வால் அடங்கிய அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 12-ம் தேதி நடைபெற வாய்ப்பு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. அன்றைய தினமே வழக்கின் வாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/india/ஜெயலலிதா-வழக்கில்-அக்12ல்-விசாரணை-உச்சநீதிமன்றம்-அறிவிப்பு/article7636038.ece

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு: ஜெயலலிதா தரப்புக்கு எதிராக கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்

 
 
 
ஜெயலலிதா, துஷ்யந்த் தவே (வலது)
ஜெயலலிதா, துஷ்யந்த் தவே (வலது)

த‌மிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் தரப்பில் கூடுதலாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நியமிக்கப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் விடு தலையை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனுவும் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 8 வார காலக் கெடுவுக்கு பிறகு வரும் 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையொட்டி மூத்த அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது இறுதிவாதத்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளார். அவருக்கு உதவியாக கர்நாடக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், உதவி அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் ஆவணங்களை திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், “இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வாதிட கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும். இந்தப் பணிக்கு டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வை பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா கடந்த மாதம் கடிதம் எழுதினார். இந்தக் கோரிக்கை குறித்து ஆலோசனை வழங்குமாறு மாநில தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமாருக்கு சட்டத் துறை கடிதம் அனுப்பியது.

அவரது பரிந்துரையின்படி துஷ்யந்த் தவே-வை கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

http://tamil.thehindu.com/india/சொத்துக்-குவிப்பு-வழக்கு-மேல்முறையீடு-ஜெயலலிதா-தரப்புக்கு-எதிராக-கூடுதல்-அரசு-வழக்கறிஞர்-நியமனம்/article7737566.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு!

 

jayalalitha%20cm.jpgபுதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை, வரும் நவம்பர் மாதம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பிலும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததோடு, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதன்படி, கர்நாடக அரசு மற்றும் அன்பழகனின் மேல்முறையீட்டு மனுக்களின் மீது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பதில் மனு தாக்கல் செய்ய்யப்பட்டது.

இந்நிலையில்  இவ்வழக்கு  இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கோரி, கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைட்யை வருகிற நவம்பர் 23 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=53607

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


அப்பீல் - மேல் முறையீடு

நீதி மன்றம் - ஞாய மன்றம்

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

சொத்துக்குவிப்பு வழக்கு: குன்ஹா தீர்ப்பை உறுதி செய்ய அன்பழகன் பதில் மனு!

 

jaya-%20anbalagan.jpgபுதுடெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். மேலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்தார். 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகளை நீதிபதி குமாரசாமி கணக்கிட்டதில் தவறு உள்ளது. பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55202

  • தொடங்கியவர்
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து அப்பீல்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
 
 
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது.
 
12 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி 4 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா தனது முதல்வர்பதவியை இழந்தார். அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது.
 

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பையும், தண்டனையையும் எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த கார்நாடக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, பெங்களூரு தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த மே மாதம் விடுதலையடைந்தனர். ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றார். இதனிடையே ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுகவின் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திரு. பினாக்கி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் முன்னிலையில் கடந்த அக்டோபர் 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பு பதில் தருமாறு உத்தரவிட்டனர். அப்போது தங்களுக்கு கூடுதல் ஆவணங்களை தர வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பும், வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து கர்நாடக அரசு தரப்புக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை நவம்பர் 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன்பின் ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்தனர். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா மற்றும் நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் கர்நாடக சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கினை தொடர்ந்து தினந்தோறும் விசாரிக்க வேண்டும் என்ற திமுக மற்றும் கர்நாடக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கோர்ட் எண் 11ல் 67வது வழக்காக இவ்வழக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. வழக்கின் விசாரணையை எந்தெந்த நாட்களில் நடத்தலாம் என்பது இன்று இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடிக்க உள்ளது. வழக்கின் விசாரணை தினசரி நடைபெற்று சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தினமும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

 

jaya.jpgபுதுடெல்லி: ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை  தினமும் விசாரிப்பதற்கான தேதி ஜனவரி 8-க்குப் பின் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நால்வரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு, தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது, வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய விஷயங்களைத் தொகுப்பாக அளிக்குமாறு கர்நாடக அரசு, அன்பழகன் தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், விசாரணை குறித்த விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் வழக்கினை விரைவாக விசாரிக்க முடியும் என்றும், வழக்கை தினமும் விசாரிப்பதற்கான தேதி ஜனவரி 8-க்குப் பின் அறிவிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=55442

  • தொடங்கியவர்

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: பிப்.2 முதல் உச்ச நீதிமன்றத்தில் தினசரி விசாரணை

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 2016 பிப்ரவரி 2-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும், 2016 ஜனவரி 15-ல் இந்த வழக்கில் முடிவு செய்யப்பட வேண்டிய விவாகரங்கள் என்னவென்பதை உச்ச நீதிமன்றம் வகுக்க உள்ளது.

கடந்த மே மாதம், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உட்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. திமுக சார்பில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனுடன் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 6 நிறுவனங்களை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்ததை மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. கடைசியாக கடந்த அக்டோபர் 12-ல் இந்த மனுக்கள் விசாரணை வந்தன. அப்போது கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் திமுக செயலாளர் க.அன்பழகன் சார்பில் 6 வார காலம் அவகாசம் கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று (நவ.23-திங்கள்கிழமை) இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரங்களை தொகுப்பாக அளிக்குமாறு அன்பழகன் தரப்புக்கும், கர்நாடக உயர் நீதிமன்ற தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

மேலும், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

2016 ஜனவரி 15-ல் இந்த வழக்கில் முடிவு செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் என்னவென்பதை உச்ச நீதிமன்றம் வகுக்க உள்ளதாகவும் 2016 பிப்ரவரி 2-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article7908457.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.