Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலந்து அவுட்விட்ஜ் சிறைக் கொட்டடி நினைவுகளும் சிறீங்கா சிறைகளும் ஒப்பீடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிறைகளில் கிடக்கும் தமிழருக்கும், அவுட்விட்ஜ் யூதர்களுக்கும் என்ன வேறுபாடு..?

யூதர்களைப் போல அறிவுள்ளவர்கள் இலங்கை தமிழர் என்று ஒரு காலத்தில் சொன்னார்கள்.. ஆனால் யூதர்களைப் போல சிறைக் கொட்டடிகளில் கிடந்து கொல்லப்படுவோரே தமிழர் என்ற வரலாற்றை பலர் பேச மறந்தார்கள்.

அன்று போலந்து சிறைக்கொட்டடிகளுக்குள் வாடிய யூதர்கள் போல தமிழர்களின் வாழ்வும் கண்ணீருடன் கரைந்து போகிறது.

ஆகவேதான் நேற்று நடைபெற்ற போலந்து சிறைக்கொட்டடி நினைவுகளுடன் சிறீலங்கா சிறையையும் ஒப்பிட வேண்டியுள்ளது.

போலந்து நாட்டில் இருந்த அவுஸ்விட்ஜ் என்னும் நாஜி படுகொலை முகாமில் இருந்து யூதர்களும், சிறுபான்மை மக்களும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் ரஸ்யப்படைகளால் விடுதலை செய்யப்பட்ட 70 வருட நிகழ்வு நேற்று அனுட்டிக்கப்பட்டது தெரிந்ததே.

இந்த முகாமில் மட்டும் சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் நாஜிகளால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது, முகாமில் இருந்து விடுதலையான சிலர் தமது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்த மதிப்பீட்டை டென்மார்க்கில் உள்ள டி.ஐ.ஐ.எஸ் அமைப்பின் முதுநிலை ஆய்வாளர் சிசிலியா பீலீசியா ஸ்ரொல்க்கோம் பங்க நடத்திய ஆய்வு தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளது சிந்திக்கத் தூண்டுகிறது.

அத்தருணம் 70 வருடங்கள் கடந்த பின்னராவது யூதப்படுகொலைகளின் உண்மையான பெறுமானங்களும், அதன் பாரதூரமும் பாதிக்கப்பட்ட யூதர்களால் புரிந்து கொள்ளப்பட்டதா.. என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

யூதர் என்ற ஒரேயொரு காரணத்தினால் குற்றமிழைத்தவர், குற்றமிழைக்காதவர் என்ற பேதங்கள் எதுவும் இல்லாமல் ஓர் இனத்தையே சர்வாதிகாரி ஹிட்லர் கொன்றொழித்தான்.

இவ்விதம் பொத்தாம் பொதுவில் மனிதர்களை சிறையில் அடைத்து நச்சுப் புகை அடித்துக் கொல்வது மனிதப்படுகொலை, சர்வதேச போர்க்குற்றமாகும்.

யூதர்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் எந்த இனத்தின் மீதும் நடத்தப்படக்கூடாத மாபெரும், மன்னிக்க முடியாத குற்றச் செயல் இதுவாகும்.

இதை இன்று ஐரோப்பாவில் வாழும் யூதர்கள் எந்தளவு தூரம் புரிந்து கொண்டார்கள் என்பது அவர் எழுப்பியுள்ள முக்கிய கேள்வியாகும்.

இன்று மத்தியகிழக்கில் இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் மீது பொத்தாம் பொதுவில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், அன்று சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கும் என்ன வேறுபாடு..

கடந்த யூன் மாதம் பாலஸ்தீனர் இருக்கும் இடங்களில் குண்டு வீசினால் அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று இஸ்ரேல் நியாப்படுத்தியது, சுமார் 2500 பேரை அது கொன்றது.

யூத இனப்படுகொலை போலவே இன்று இஸ்ரேலிய அரசு நடத்தும் கொலைகளும் இருக்கின்றன, இதை இன்றைய ஐரோப்பா வாழ் நாகரிக யூதர்கள் ஏன் கண்டிக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமக்கு ஓர் அநீதி இழைக்கப்பட்டால் அதை அநீதி என்று பிரகடனப்படுத்தும் ஒருவன் மறுபுறம் தானும் அதே அநீதியை இழைக்கும்போது அவனை ஆதரிக்கும் அறிவுடையோர் ஏன் அது தவறு என்று சுட்டிக் காட்ட தவறுகிறார்கள்.

ஹிட்லரால் அன்று பாதிக்கப்பட்ட யூதர்களே… இன்று இஸ்ரேலிய அரசின் செயல்களை மௌனமாக அங்கீகரிக்கும் யூதர்களாக இருக்கிறார்கள்.

இன்றுள்ள ஐரோப்பிய யூதர்கள் இஸ்ரேலின் செயல்களை பார்க்காது கண்களை மூடிக்கொண்டு, போலந்து மனிதப்படுகொலைகளை மட்டும் குற்றமாகப் பார்ப்பது ஒருதலைப்பட்சமான பார்வை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே கருத்து சிறீலங்காவில் உள்ள சிங்கள மக்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது, சிங்கள இனவாத அரசு சேகுவேரா போர் நடந்தபோது சுமார் 60.000 சிங்கள இளையோரை கொன்று தள்ளியது.

சிங்கள அரசு பல சிங்கள இளைஞர்களைச் சிறைக்குள் போட்டுக் கொன்றது..

இதிலிருந்து மேலும் உச்சகட்டத்திற்கு சென்று வெலிக்கடைச் சிறையில் செயற்கையான கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் அரசியல் கைதிகள் 52 பேரை கொன்று தள்ளியது.

இன்றும் வெலிக்கடை, மகசீன், கழுத்துறை, பூஸா முகாம்களிலும், வேறு பெயர் தெரியாத முகாம்களிலும் எண்ணற்ற தமிழர்களை அடைத்து வைத்துள்ளது.

வெள்ளை வான்களில் அள்ளிச் செல்லப்பட்ட தமிழர்களின் பட்டியல் என்ன.. யாருக்குமே தெரியாது ஐ.நா உட்பட அனைவரும் மௌனமாக இருக்கிறார்கள்.

போலந்து அவுஸ்விட்ஜ் நாஜி முகாம் இப்போதும் சிறீலங்காவில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இறுதிப்போரின்போது சரணடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள், சரணடைந்தவர்கள் யார்.. என்னவானார்கள்.. என்ற தகவல்கள் இதுவரை இல்லை.

வடக்கு மகாணசபை உறுப்பினர் அனந்தி தானே நேரில் ஒப்படைத்த கணவரை மீட்க முடியாது தவிக்கிறார், இவருடைய நிலையே இப்படியென்றால் சாதாரண ஏதிலிகள் என்ன செய்வது..?

நேற்று மன்னார் ஆயர் வெளியிட்ட தகவலில் சுமார் 400 அரசியல் கைதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார், இவர்களில் பலர் 19 வருடங்களாக சிறைக்கொட்டடிகளில் இருக்கிறார்கள், ஓர் ஆயுட்கால தண்டனை 12 முதல் 14 வருடங்கள் என்கிறார்கள் ஆனால் 19 வருடங்கள் ஆயுள் தண்டனையை விட பெரிய தண்டனையாகும்.

ஒரு நாட்டில் போர் முடிந்தால் அதன் அடையாளம் உடனடியாக கைதிகள் மன்னித்து விடுவிக்கப்பட வேண்டும், ஆனால் இந்த ஆண்டு முடிவுக்குள் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக சிறீலங்கா ஜனாதிபதி கூறியதாக மன்னார் ஆயர் தெரிவிக்கிறார்.

கைதிகள் விடுவிக்கப்படாத வரையில் போர் தொடர்கிறதென்பதே பொதுவான அர்த்தமாகும்.

குடும்பத்தினரால் கையளிக்கப்பட்ட பல போராளிகளை எங்கு இருக்கிறார்கள் என்று தமக்குத் தெரியாதென சிறீலங்கா இராணுவம் கூறியிருக்கிறது, இவர்களை தேடி போராடும் குடும்பங்களின் கண்ணீர் நிறைந்த போராட்டம் தொடர்கிறது.

இந்த கண்ணீர் கதைகளுக்கும் போலந்து அவுஸ்விட்ஜ் முகாமுக்கும் என்ன வேறுபாடு, அது சர்வதேச போர்க் குற்றமென்றால் இது போர்க்குற்றம் இல்லையா.. கேள்விகள் எழுகின்றன.

மனிதன் எல்லாம் புரிந்து கொண்டான் வாழும் வகை தெரிந்து கொண்டான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கே தெரியவில்லை என்பதன் அடையாளமே இன்றய மனிதகுல காட்சியாக இருக்கிறது.

இதுபோல இந்திய சிறைக்கொட்டடிகளில் வாடும் பேரறிவாளன், முருகன், நளினி போன்றோரின் கதை மனித குலத்தின் சிறைவாழ்வின் கருமைப் பக்கங்களாக இருக்கின்றன.

ஈரான் நாட்டிலும், சிரியாவிலும் அரசியல் எதிரிகள் கைதாகிறார்கள், அவர்களை யார் கைது செய்தார்கள் என்ற தகவல்கள் வழங்கப்படுவதில்லை.

தினசரி பலரை நயவஞ்சகமான முறையில் தூக்கில் போட்டு கொன்று வருகின்றன இந்த அரசுகள், கேட்கப்பார்க்க நாதியில்லை.

சிரிய சர்வாதிகாரி ஆஸாட் தினசரி தூக்கில் போடும் எண்ணிக்கை உலகிற்கு தெரியாது, இவர்களுக்கு வழக்கும் இல்லை.. கணக்கும் இல்லை.

எகிப்திய நீதிமன்று என்ன குற்றம் என்று தனித்தனியாக காரணம் கூறாமல் பொத்தாம் பொதுவில் ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை விதித்துள்ளது, இவர்களில் சிறு பிள்ளைகளும் அடக்கம்.

கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை காந்தி இருந்ததும் சிறைச்சாலை, அது ஒரு கலைக்கூடம் என்று தமிழ் பாடலொன்று கூறும், ஆனால் அது உண்மையில்லை இன்றைய சிறைச்சாலைகள் மனித குலத்தின் விரோத இடங்களாக பல நாடுகளில் இருக்கின்றன.

சீன சிறைக்கொட்டிகளுக்குள் இருப்போரின் கண்ணீர் கதைகளை இன்னமும் உலகம் எட்டியும் பார்க்கவில்லை.

மெக்சிக்கோவிலும், பிரேசிலிலும் சிறைச்சாலைகளில் நடைபெறும் கொலைகளின் கதைகளை கேட்டால் அவை இரத்தத்தை உறைய வைக்கும்.

இதிலிருந்து மேலே சென்று ஆபிரிக்க கொங்கோ சிறைக்கொட்டிகளுக்குள் சிறையுண்டுள்ளோர் நிலை 70 வருடமாகியும் இந்தக் கொடுமைகள் முடியவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்த நூற்றாண்டின் பேரவலமாக ஒரு நாட்டின் மக்கள் குழுவினரே ஒட்டு மொத்தமாக கைதாக்கி அவமானப்படுத்தப்பட்ட திறந்தவெளி சிறைக்கூடம் சிங்கள இராணுவத்தால் வன்னியில் அமைக்கப்பட்டது.

யூதர்களின் விடுதலையை அஞ்சலிக்கும் இவ்வேளை அதேபோல இஸ்ரேலிய சிறைக் கொட்டடிகளுக்குள் இருக்கும் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கையை இஸ்ரேல் வெளியிட்டு தன்னை மாற்றிக் கொண்டதா என்றால் அதுதான் இல்லை.

சிறைகளுக்குள் இருப்பது வெறுமனே அரசுகள் கூறுவதைப் போல பயங்கரவாதமல்ல அங்கு நடைபெறுவது திரை மறைவிலான அரச பயங்கரவாதம் என்பதற்கு போலந்து அவுஸ்விட்ஸ் மட்டுமல்ல சிறீலங்கா, இஸ்ரேல், இந்திய, ஈரானிய, சீன, பாகிஸ்தான் சிறைக்கொட்டிகளும் கண்டிப்பாக நல்லதோர் சான்றாகும்.

சுமார் 29 வருடங்கள் சிறையில் கிடந்த நெல்சன் மண்டேலா மனித குல சிறை வாழ்வின் சின்னமாக இருக்கிறார்… ஆனால் அவரால் கூட உலக சிறைச்சாலை கொடுமைகளை மாற்றும் ஓர் உலகப் பேரணியை உருவாக்க முடியாமல் போய்விட்டது.

தென்னாபிரிக்கக் கறுப்பர்கள் அயல்நாட்டு கறுப்பர்களை துவேஷத்துடன் அடித்துக் கொன்றபோது அவர் வாய் மூடி மௌனியாகக் கிடந்தார்.

இராணுவ ஜிந்தாக்களால் சிறை வைக்கப்பட்ட பர்மீய தலைவர் அவுங்சாங் சுகி அம்மையார்.. பார்மா புத்த பிக்குகள் முஸ்லீம்களின் மீது மதக்கலவரம் நடத்தி அவர்களை கொன்று தள்ளியபோது மௌனமாக இருந்தார், தேர்தல் வாக்குகளுக்காக பெரும்பான்மையோர் செய்த குற்றங்களை கண்டிக்கத் தவறி ஊமையாக இருந்தார்.

மிருகங்களாக வாழும் மனிதர்களை விட மனித உரிமைக்காக போராடிய தலைவர்களே அதிகாரத்திற்காக நீதி கேட்க தவறும் நிலையும் உலகத்தின் சிறைக் கொட்டிகளில் இரத்தக்கறையை படிய வைக்கிறது.

உலகத்திற்கே நீதி சொல்ல வந்த அமெரிக்கா குவான்ரநோமா சிறைக் கொட்டடியில் நடத்தியிருக்கும் மனித உரிமை மீறல்கள் அதனுடைய குரலில் இருக்கும் போலித்தன்மையின் அடையாளமாக இருக்கிறது.

மாறாக தன்னை நம்பி போராட வந்தவர்கள் போராட்டத்தின் மீது விருப்பில்லை என்ற போது அவர்களுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டிய கொடுமைகளையும் இத்தருணம் நாம் மறந்துவிடலாகாது.

ஐ.எஸ். ஜிகாத்தில் போராட மூளைச்சலவைக்கு உள்ளாகி சிரியா சென்று ஆயுதம் தூக்கிய மேலை நாடுகளில் வாழ்ந்த அப்பாவி இளையோர் ஜிகாத் போர் தவறு என்று வெளியேற முயன்றபோது 125 பேரை பகிரங்கமாக தூக்கில் போட்டார்கள்.

அரசு, போராட்டம் என்ற பேதமின்றி அளவுக்கு மீறிய அதிகாரம் சர்வாதிகார வடிவம் பெற்று, ஒரு கட்டத்தில் மனித குலத்தின் விரேதியாக மாறிய கதைகள் உலகம் முழுவதும் தொடர்கதையாக நீண்டு செல்கின்றன.

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

உண்மையில் சிறைச்சாலை என்பது மனிதனை திருத்தும் பள்ளிக்கூடமல்ல, பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அப்டி குலிபலி சிறைச்சாலைக்குள் இருந்து மூளைச்சலவை செய்யப்பட்டுத்தான் பயங்கரவாதியாக மாறினான்.

யூத சூப்பமாக்கற்றுக்குள் நுழைந்து நால்வரை கொன்றான், ஒரு பெண் போலீசாரை கொன்று வீசினான்.. மத நம்பிக்கையாளனாக இருந்த இவன் பயங்கரவாதியானது பிரான்சிய சிறைக்குள் இருந்துதான்.

இதே செயல் டென்மார்க் சிறைகளிலும் நடப்பதால் சிறைச்சாலைகளில் மாற்றம் செய்து கைதிகளை தரம் பிரிக்க வேண்டிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய சிறைச்சாலைகள் அரச பயங்கரவாதங்களின் வடிவமாக ஒரு புறமும், பயங்கரவாத உருவாக்கத்தின் கருவூலமாக இன்னொரு புறமும் காணப்படுகின்றன.

மிற்நைற் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படம் துருக்கிய சிறைக் கொட்டடிக்குள் போனால் ஒரு மனிதன் பைத்தியமாவதைவிட வேறு வழி இல்லை என்பதை தெளிவாக உலகின் முன் போட்டுடைத்தது.

சிறைச்சாலை உளவியல் என்பது மிகப்பெரிய கொடுமையாக இருக்கிறது, பத்தொன்பது ஆண்டுகள் சிறீலங்கா சிறையில் வாழ்வை தொலைத்தவன் மறுபடியும் வெளியில் வந்து வாழ என்ன இருக்கிறது.

வாழ்க்கை என்ற புத்தகத்தில் பல பக்கங்களை வெற்றுத்தாளாக மாற்றி வெளியில் வரும்போது தகவல் இல்லாத பக்கங்களை வைத்து தடுமாற வைக்கும் சிறை வாழ்வு.

மரண தண்டனை கொடியது, அதைவிட கொடியது சிறையில் அடைக்கப்படுவதுதான் என்பதே சிறைச்சாலை உளவியலாக இருக்கிறது.

போலந்து சிறைச்சாலையின் எழுபதாண்டு நினைவுகள் மனித குலம் சுதந்திரம் பெற்றுவிட்டதென்ற உலக சுதந்திரப் பாடல்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது என்பதே யதார்த்தமாகும்.

இன்றைய யூதர்கள் 70 வருடங்களில் தமது வரலாற்றை மறந்து வாழ்வதைப் போல தமிழ் மக்களும் தமது வரலாற்றை மறந்து வாழக்கூடாது என்பதே போலந்து சிறை தரும் பாடமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மக்காளாகிய நாம் போரின் அழிவுகளில் இருந்து இனி வரும் சந்ததியை காப்பாற்ற உறுதி கூறுகிறோம் என்று ஐ.நாவின் சாசனத்தின் முன்னுரை கூறுகிறது.

பேச்சுக்கும் எழுத்துக்கும் சுதந்திரம் – வழிபாட்டு சுதந்திரம் – சமாதான வாழ்வை வழங்கும் சுதந்திரம், மக்கள் பயத்தை நீக்கும் விடுதலை இவைகளை மக்களுக்கு வழங்க வேண்டுமென பிராங்ளின் டி ருஸ்வெல்ட் தெரிவித்தார்.

இரண்டாவது உலகப் போர் முடிந்து 70 வருட நினைவுகள் சுமந்த இவ்வேளையில் சொந்த நாட்டிற்கே திரும்பப் பயப்படும் உலக அகதிகளின் நிலை ஐ.நாவிற்கு சவாலாகவே இருக்கிறது.

உலகத் தலைவர்களின் சுதந்திரப் பாடல்கள் காதுகளில் முழங்குகிறது ஆனால் யதார்த்தம் அப்படியில்லை..

இருந்தாலும் போலந்து சிறைக்கொட்டடி நமக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது.. இருளில் நடக்கும் எல்லா அநீதிகளும் ஒரு நாள் அம்பலத்திற்கு வரும்.. மனித குலம் முழுமையான நம்பிக்கை பெறும்.. என்ற மன பலத்தையும் தருவதை மறுக்க இயலாது..

நாட்கள் அதிகம் இல்லை.. சிறீலங்காவின் இருள் சிறைக் கொட்டடிகளின் கதைகளும்.. அம்பலத்திற்கு வரத்தான் போகின்றன..

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..

இருட்டினில் நீதி மறையட்டுமே..

தன்னாலே வெளி வரும் தயங்காதே.. ஒரு

தலைவன் இருக்கிறான் மயங்காதே..

என்ற நம்பிக்கையை இழக்காது இவைகளை சீர்தூக்குவோம்…

அலைகள் மனித உரிமைகள் பார்வைக்காக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.