Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 123

 

கறுப்பு வெள்ளி

 

அந்தப் புதன்கிழமை என் நண்பனின்

யாதுமாகிய காதலிக்குத் திருமணம்.

முகூர்த்த நேரத்தில் மலைக்கோட்டை மீதேறி

அந்தத் திருமண மண்டபத்தை

வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளுடன் பேசிய அலைபேசியை

ஒரு பாறையில் மோதிச் சிதறிடச் செய்தான்.

இறங்கி வருகையில் ஒவ்வொரு படியிலும் நின்று

சங்கல்பம் எடுப்பதுபோல் எதையோ முணுமுணுத்தான்.

திரும்பி வருகையில் திருச்சி சாரதாஸில்

அம்மாவுக்கு நூல்புடவை வாங்கினான்.

என்னிடம் பைக்கைப் பிடுங்கி

ஜோடியாக நடப்பவர்கள் மீது

மோதுவதுபோல் நெருங்கி கிறீச்சிட்டு நிறுத்தினான்.

பிளஃபி என்று அவள் பெயர்வைத்த

அவனுடைய செல்ல நாய்க்குட்டியை

அது திரும்பி வரக்கூடாதென்று

நாற்பது மைல் தள்ளி, விட்டு வந்தான்.

என்னதான் காதலிக்குத் திருமணம் என்றாலும்

இப்படியெல்லாமா செய்வார்கள்?

அந்தக் கறுப்பு வெள்ளிக்கிழமையில்

எதுவும் செய்யாமல் நான் என்னவோ

அமைதியாகத்தான் இருந்தேன்.

(நன்றி: கணையாழி)

 

  • Replies 228
  • Views 34k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 124

 

சிறுவர்களின் வீடு 

 

சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன்

பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான்.

வாசலில் ஒரு சிறுவன்

பாண்டி விளையாடுகிறான்.

முற்றத்தில் ஒரு சிறுவன்

மழையிலாடுகிறான்.

கூடத்தில் ஒரு சிறுவன்

பல்லாங்குழி விளையாடுகிறான்.

சமையலறையில் ஒரு சிறுவன்

சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான்.

கழிப்பறையில் ஒரு சிறுவன்

கதவைத் திறந்துவைத்துப் போகிறான்.

குளியலறையில் ஒரு சிறுவன்

சத்தமாகப் பாடுகிறான்.

படுக்கையறையில் ஒரு சிறுவன்

அம்மாவின்மேல் கால்போட்டுத்

தூங்குகிறான்....

ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில்

சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்!

(நன்றி: ஆனந்த விகடன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 125

குழந்தையும் தெய்வமும்

 

குழந்தைகள் இருக்கும்போது

கடவுள் இல்லையென்று சொல்வதற்கு

கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது!

 

குழந்தையின் ‘சூ மந்திரக்காளி’க்கு

மயங்கி விழுந்து

மீண்டும் ஒரு மந்திரத்தில்

உயிர்த்தெழுவான்

நாத்திகத் தந்தையும்!

 

எல்லாக் கடவுள்களுக்கும்

இஷ்ட தெய்வம்

ஒன்று தான் -

குழந்தை!

 

கடவுள்களின் வாகனங்களில்

‘குழந்தைகள் துணை’

என்றுதான் எழுதியிருக்குமாம்.

நீங்கள் கடவுளைக் காணநேர்ந்தால்

கவனித்துப் பாருங்கள்!

 

கடவுள்களின் இப்போதைய

திருவிளையாடல்களில் ஒன்று

குழந்தைகளின் பென்சில் ரப்பரை

பிடுங்கி வைத்துக்கொள்வதுதான்!

அழுதுகொண்டு வரும்

கடவுள்களை நீங்கள்

அடிப்பதைப் பார்த்துத்தான்

நமக்கேன் வம்பு என்று

கடவுள் வரவே மாட்டேனென்கிறார்!

 

குழந்தையைக் காணாமல்

நீஙகள் பதைபதைத்துத் தேடும்போது

தூக்கிவைத்திருந்த குழந்தையை

இறக்கி விட்டு விட்டு

சட்டென அங்கே ஒரு

சிட்டுக்குருவியாகவோ பூனைக்குட்டியாகவோ

கடவுள் உருமாறிக்கொள்கிறார்!

(நன்றி: பரணி ஜனவரி-மார்ச் 2016 காலாண்டிதழ்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 126

ரகசியங்கள்

-    சேயோன் யாழ்வேந்தன்

ஆண் பெண் அவரவர்க்கான ரகசியங்களில்

பொதுத் தன்மைகள் இருக்கின்றன.

ஆண்களின் ரகசியங்களில்

அதிக வேறுபாடுகள் இல்லை.

மறைக்கப்பட்டிருக்கும் பெண் ரகசியங்களை

மனக்கண்ணில் பார்த்துவிடுகிறார்கள் ஆண்கள்.

கணவன் மனைவியிடமும்

மனைவி கணவனிடமும்

மறைக்கும் ரகசியங்கள்

இல்லறத்தைவிடப் புனிதமானவை.

தன் ரகசியங்களைச்

சட்டைகளில் எழுதிவைத்திருக்கும்

பைத்தியங்களைப் பார்த்திருக்கிறேன்.

என் ரகசியங்கள்
என்னை அறிந்திடாத வண்ணம்

எனக்குள் ஒளிந்துகொள்கிறேன்.

குழந்தைகள் உங்கள் காதோரம்

கிசுகிசுக்கும் ரகசியங்கள்

ஒரு புதிய உலகத்தை உருவாக்க வல்லவை!

(நன்றி. திண்ணை.காம்)

தன் ரகசியங்களைச்

 

சட்டைகளில் எழுதிவைத்திருக்கும்

 

பைத்தியங்களைப் பார்த்திருக்கிறேன்.

அருமையான வரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, கவிப்புயல் இனியவன் said:

தன் ரகசியங்களைச்

 

சட்டைகளில் எழுதிவைத்திருக்கும்

 

பைத்தியங்களைப் பார்த்திருக்கிறேன்.

அருமையான வரி

நன்றி தோழர்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 127

தூண்டில் மீன்கள்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

ஒவ்வொரு

கணப்பொழுதும்

ஏதாவதொரு மீன்

தூண்டிலில் மாட்டிக்கொண்டுதானிருக்கிறது.

ஒவ்வொரு

கணப்பொழுதும்

எவனாவதொருவன்

மீன் எதுவும் சிக்காத விரக்தியில்

தூண்டிலை சுருட்டிக்கொண்டும் இருக்கிறான்.

மீன் கிடைத்தவன்

கடவுளுக்கு நன்றி சொல்கிறான்

மீன் கிடைக்காதவன்

கடவுளைச் சபிக்கிறான்

சிக்கிய மீன்

கடவுளை சபிப்பதுமில்லை

தப்பிய மீன்

கடவுளுக்கு நன்றி சொல்வதுமில்லை!

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி. கீற்று.காம்)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 128

 

வாழ்க்கை என்று நம்பிக்கொண்டிருப்பது...

-    சேயோன் யாழ்வேந்தன்

 

சொர்க்கத்தின் ஆச்சரிய வனம் தவிர்த்து

பழகிய நரகத்தின் பாலையில் பயணித்து,

நமக்குப் பொருத்தமானதாய்,

மற்றவரைவிடச் சிறந்தததாய்,

விலை உயர்ந்ததாய்,

பார்ப்போரைச் சுண்டி இழுக்கும் வண்ணத்தில்

ஒரு தூக்குக் கயிற்றைத் தேர்ந்தெடுத்து,

சுருக்கிட்டுத் தொங்குவதை

வாழ்க்கை என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்!

(நன்றி: கீற்று இணைய இதழ்)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 129

 

மரணத்தை உண்பவர்கள்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

ஒரு மரணம்

ஒரு கூட்டைக் கலைத்துவிடுகிறது

ஒரு வாழ்வைத் தொலைத்துவிடுகிறது

ஒரு கனவைக் கலைத்துவிடுகிறது.

சோற்றைப் பிசைகையில்

அறிந்தவன் ஒருவனின் மரணம்

மனதைப் பிசைகிறது.

மரணத்தை உண்டு வாழும்

ஒரு வெட்டியான்

ஒரு சவக்கிடங்கு காவலாளி

ஒரு பிரேதம் அறுப்பவன்

கூலி அதிகம் கேட்கிறான் என்று

குறைப்பட்டுக்கொள்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 130

 

எனக்குப் பிடிக்காத கவிதை

-    சேயோன் யாழ்வேந்தன்

 

எனக்குக் கவிதை பிடிக்காது

பிடிக்காத கவிதை படித்து

பிடிக்காத கவிதை எழுதி

கவிதை எனக்குப் பிடித்துவிட்டது

 

பிடித்த கவிதை

படிப்பதும் இல்லை

எழுதுவதும் இல்லை

 

இரவைப் பற்றிய ஒரு கவிதையை

அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்

இரவு முடிகையில் இந்தக் கவிதை

நினைவில் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில்.

 

(நன்றி. திண்ணை.காம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 131

 

 

மேல்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

பிரபஞ்சத்தின் மேல்

மிதந்த ஒரு புள்ளியின் மேல்

சுழன்ற பூமியின் மேல்

அமைந்த ஒரு மலையின் மேல்

நின்ற ஒரு மரத்தின் மேல்

விரிந்த ஒரு கிளையின் மேல்

அமர்ந்த ஒரு பறவையின் மேல்

விழுந்த ஒளியின் மேல்

வந்தமர்ந்தது

ஒரு கவிதை!

(நன்றி. திண்ணை.காம்)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 132

தோழா

-    சேயோன் யாழ்வேந்தன்

 

மலிவுப் பதிப்பு தோழர்

ஒரு தேநீர்க் காசில்

புத்தகம் படிக்கலாம்.

காசில்லையா தோழர்

கடன் வாங்கி

புத்தகம் வாங்கு

நாடே கடனில் தானே

நடக்குது தோழர்

சட்டையைக் கிழித்து

கொடியை ஏற்று

அலுமினியக் குண்டானை விற்று

உண்டியல் வாங்கு

பசி தீர்ந்த பின்பு

நாம் உண்ணும் பிரியாணி

நிச்சயமாக

அடுத்தவனுடையதில்லை தோழர்

சும்மாவா வைத்தோம்

சிவப்பை,

விடியலில்

வானம் மட்டுமல்ல

வாழ்க்கையும் சிவப்புதான் தோழர்

புரட்சி வெடித்தால்

நம் வாழ்வு செழிக்கும்

......

எழுந்து நில் தோழர்

தலைவரின் கார் வருகிறது!

 

(நன்றி: கீற்று இணைய இதழ்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 133

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவன்

-    சேயோன் யாழ்வேந்தன்

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவனை

தேடிச்சென்று கேட்டேன்,

‘நேற்றென்ன கண்டாய் உன் கனவில்?

ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவுநோக்கிச்

செல்லும் பயணத்தின் இடைவேளையில்

உன்னைக் காண வரும் ஒருவன்,

உன் கனவுக்குப் பொருள் கேட்பான் என்றா?

 

கனவுபோல் வாழ்வு கலைவது கண்டு

கவலை கொள்ளா ஒருவன்,

உன் கனவு கலைத்து

உன்னைக்காண வந்த தன் கனவை

சொல்லாமல் செல்வான் என்றா?

 

என்ன கண்டாய் உன் கனவில்

சொல் முதலில்!’

 

(நன்றி. திண்ணை.காம்)

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 134

 

பழைய கள்

-    சேயோன் யாழ்வேந்தன்

நிச்சயமாக இவை பழைய நாற்காலிகள்தாம்.

பலர் அமர்ந்து பார்த்தவைதாம்.

நிச்சயமாக இவர்களும் பழைய ஆட்கள்தாம்.

பல நாற்காலிகளைப் பார்த்தவர்கள்தாம்.

பழைய நாற்காலிகளில்

பழைய ஆட்களையே

அமரவைத்து

புதியதோர் உலகு செய்வோம்!

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி. திண்ணை.காம்)
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 135

 

இதனைப் போல்

-    சேயோன் யாழ்வேந்தன்

இதனைப் போல் காயப்படுத்தப்பட்டது

வேறெதுவும் இல்லை

இதனைப் போல் சந்தேகிக்கப்பட்டது

வேறெதுவும் இல்லை

இதனைப் போல் தண்டிக்கப்பட்டது

வேறெதுவும் இல்லை

இதனைப் போல் மறைக்கப்பட்டது

வேறெதுவும் இல்லை

இதனைப் போல் புறக்கணிக்கப்பட்டது

வேறெதுவும் இல்லை

இதனைப் போல் மாசுபடுத்தப்பட்டது

வேறெதுவும் இல்லை

இதனைப் போல் தனிமைப்படுத்தப்பட்டது

வேறெதுவும் இல்லை

அன்பே,

அன்பாலான இந்த உலகில்

அன்பைப் போல் வெறுக்கப்பட்டது

வேறெதுவும் இல்லை!


(நன்றி. கீற்று.காம்)
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 136

கோடைமழைக்காலம்

-    சேயோன் யாழ்வேந்தன்

தன் ஆளுகைக்குள் மழைக்காலத்தை

ஒருபோதும் அனுமதிக்காத

வைபரைப் போல் உறுதியாக இருந்த

இந்த கோடைக்காலத்தை

சற்றே ஊடுருவிய

இந்தக் குட்டி மழைக்காலம்

ஊடிய காதலி அனுப்பிய

குறுஞ்செய்தி போன்றது

பிணங்கிய மனைவி

கூடுதல் ருசியுடன் சமைத்தனுப்பிய

மதிய உணவு போன்றது

சண்டையிட்ட மகவு

தன் சிறு கரங்களைக் கூப்பி

உங்களுக்காகவும் பிரார்த்தித்துக்கொள்வது போன்றது.

 

(வைபர்- wiper)

(நன்றி. திண்ணை.காம்)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 137

 

யாதுமாகியவள்

காவல்காரியாய் சில நேரம்

எங்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும்

புலனாய்வு அதிகாரியாய் சில நேரம்

எங்களுக்காக அப்பாவிடம் வாதாடும்

வழக்கறிஞராய் சில நேரம்

எங்கள் பிணக்குகளை விசாரித்து

தீர்ப்பு சொல்லும் நீதிபதியாய் சில நேரம்

பல வேடம் போடும் அம்மா

எப்போதும் வீட்டுச் சிறையில்

கைதியாய்!

Edited by seyon yazhvaendhan

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 138

 

கடவுள் தப்பிவிடக்கூடாது

-சேயோன் யாழ்வேந்தன்

உன் கடவுளை உள்ளே வைத்துப்

பூட்டுவது எதற்கு,

எவரும் களவாடுவதைத் தடுக்கவா?” என்றேன்.

ன் கடவுளின் மேல் கைவைக்கும் துணிச்சல்

இங்கு வனுக்கும் இல்லைன்றான்.

பின் எதற்கு பூட்டு?

‘யாருமில்லாதபோது

அவர் தப்பித்து விடக் கூடாது!”

seyonyazhvaendhan@gmail.com

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 139

 

சாகும் ஆசை....

-    சேயோன் யாழ்வேந்தன்

 

“எங்கு வேண்டுமானாலும் போ

நான் சாகும்போது பக்கத்தில் இரு”

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற

எனக்கும் ஆசைதான்....

நான் சாக நேரும்போது

அவள் மடியில் சாகவேண்டுமென்பதும்

நான் சொல்லாத ஆசைதான்.

சாகும் நாளில் அங்கிருக்க வேண்டுமென்றால்

இரண்டு நாள் முன்னதாக

இங்கிருந்து கிளம்ப வேண்டும்

சாவு தெரிந்து விட்டால் வாழ்வேது?

seyonyazhvaendhan@gmail.com


(நன்றி. திண்ணை.காம்)

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 140

 

பழக்கம்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

கவிதை ஏடெங்கே என்றால்

காகிதக் கூடையாயிற்று என்கிறாள்

பாட்டுப் படிக்கிறேன் என்றால்

காதைப் பொத்திக்கொள்கிறாள்

கித்தாரை எடுத்து வைத்தால்

கதவைச் சாத்திக்கொள்கிறாள்

சித்திரமும் கைப்பழக்கம்,

செந்தமிழும் நாப்பழக்கம்,

இப்படிக் கதவடைப்பதும்

காதைப் பொத்துவதும்

என்ன பழக்கம்?

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி. திண்ணை இணைய இதழ்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 141

 

மோசடி

-    சேயோன் யாழ்வேந்தன்

 

தாமரை பூத்த தடாகத்தில்

நீராடி எழுந்த புனிதப் பசுக்களின்

கொம்புகளில் மனிதக் குருதி

***

எரித்த சாம்பலையும்

தன்னார்வத் தொண்டர்கள்

சுத்தமாகத் துடைத்துவிட்டனர்

குடிசைகளின்றித் தூய்மையாக இருக்கிறது

நகரம் இப்போது.

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி. கீற்று.காம்)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 142

பகீர் பகிர்வு

-    சேயோன் யாழ்வேந்தன்

 

அவளிடம் பகிர்ந்துகொள்ளும்

எந்த விஷயமும்

அவளது மூன்று நெருங்கிய தோழிகளிடம்

உடனே பகிரப்பட்டு விடும்.

பகீரதப் பிரயத்தனம் செய்தும்

பிறரிடம் அவள் பகிரக்கூடாதவற்றை

என்னால் சொல்லாமல் இருக்கமுடிவதில்லை,

சொல்லாமல் மறைக்கவும் தெரிவதில்லை

‘யாரிடமும் சொல்லாதே’ என்று

சொல்வதில் இருக்கிறது –

மறக்காமல் சொல்லவேண்டும் என்ற அடிக்குறிப்பை

அவள் மனதில் எழுதிவிடும் பேராபத்து!

seyonyazhvaendhan@gmail.com

 

(நன்றி. திண்ணை இணைய இதழ்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 143

 

காற்றுக்காக அவர்கள் விசிறிக்கொண்டிருக்கும்

மின் மட்டைகளில்

கொசுக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கின்றன?

-சேயோன் யாழ்வேந்தன்

 

(புழல் சிறையில் தற்கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 144

 

ஒளிப்பந்தாக இருந்த முகம்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

முகம் மனம் காட்டும் கண்ணாடியாக இருந்தது

கண்ணாடி உருகும்முன் மணலாக இருந்தது

மணல் அலை கரைக்கும்முன் பாறையாக இருந்தது

பாறை மழை குளிர்விக்கும்முன் நெருப்பாக இருந்தது

நெருப்பு வெடிக்கும்முன் ஒளிப்பந்தாக இருந்தது

ஒளிப்பந்து பிறக்கையில் என் முகமாக இருந்தது.

(நன்றி. திண்ணை இணைய இதழ்)

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 145

கோடிக்கும் ஒன்று கூடுதல்

-    சேயோன் யாழ்வேந்தன்

கோடி அற்புதரே

இந்த அற்பனின் ஒரு கேள்வி,

கோடி அற்புதத்துக்குக்

கூடுதலாய் ஒன்றும்

அற்புதம் செய்வதில்லை என்று

ஏன் முடிவெடுத்தீர்?

 

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள்

உம்மிடம் வந்தால்தான்

வருத்தம் குறைப்பீராம்.

எம் வருத்தமே அதுதான்.

(நன்றி: கீற்று.காம்)
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.