Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை (1876-1954)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை (1876-1954)

 

இருபதாம் நூற்றாண்டு தந்த இன் தமிழ்க் கவிஞர்களுள் நாஞ்சில் நாட்டுக் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை மிக முக்கியமானவராவார்.   சாதாரண குழந்தைக் கவிகளிலிருந்து, புத்தர் வரலாறு, சமுதாயப்புரட்சி போன்ற  மிகவுயர்ந்த சிந்தனைகளைத் தூண்டும் பாடல்கள்வரை அவர் பல ஆக்கங்களைத்; தமிழுலகிற்கு அளித்திருக்கிறார்.  கவிமணியின் நூல்கள்: மலரும்மாலையும், மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உமர் கையாம் பாடல்கள், தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச் செல்வம், கவிமணியின் உரை மணிகள் என்பனவாம்.   இதைவிடத் தனிப்பாடல்கள் பலவுமுண்டு. ஆண்டான் கவிராயன், ஐயம்பிள்ளை, கணபதி, நாஞ்சில் நாடன், மெய்கண்டான், யதார்த்தவாதி ஆகிய புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார்.  அவரது பாடல்கள் பாலர் பள்ளிகளிலிருந்து பல்கலைக் கழகங்கள் வரை பாடநூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.   சாதாரண அகவற்பாக்களிலிருந்து செய்யுள்கள் வரை அவரது கவித்துவம் விரிவுபட்டு நிற்பதை அந்த ஆக்கங்களிற் காணமுடிகின்றது. தற்போது அவரது ஆக்கங்களனைத்தும் அரசுடைமையாக்கப் பட்டுள்ளன.  கவிமணி பாரதிக்கு மூத்தவர் என்பதறிக.

நாம் மிகச்சிறு வயதிற் படித்த பாலர்பாடலொன்றைமுதலில் இங்கு தருகிறேன் அது சிறுவயதிலும் இப்போதும் என் நெஞ்சைத்தொட்ட பாடலாகும்.  
'அருணன் உதித்தனன் அம்புஜம் விண்டது அளிகளும் மொயத்தன பாராய்! அம்மா நீ எழுந்தோடி வாராய்...' என்று தொடங்கும் அப்பாடல் காலையில் கண்விழிக்கும் குழந்தைக்கு அப்பொழுதின் இயற்கையழகை மிக எளிமையாக உணர்த்துகின்றது.  இதைப் போல குழந்தைகளை மகிழ்விக்கும் பாடல்கள் பலவற்றைக் கவிஞர் எளிய தமிழில் இயற்றியுள்ளார்.

'பச்சைக்கிளியே வாவா பாலுஞ்சோறும் உண்ண வா..', 'தோட்டத்தில் மேயுது வெள்ளளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி..', 'காக்கா காக்கா பறந்துவா கண்ணுக்கு மை கொண்டுவா..' போன்ற நமக்குப் பரிச்சயமான பல குழந்தைப் பாடல்களும் கவிமணியினால் பாடப்பட்டவையே.

கவிமணியின் மலரும் மாலையும் ஒரு தொகுப்பு நூலாகும். கவிமணி தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழிபெயர்த்தார் என்கிறவோர் தவறான கருத்தை, மிகச் சிறுவயதில் வாசித்த,  அ.ந. கந்தசாமியவர்களால் எழுதப்பட்டவோர் கட்டுரை மூலம் மனதுள் இருத்தியிருந்தேன்.  தற்போது அது தவறென்று தெரிகின்றது.  அவரின் கூற்று பின்வருமாறு: '...அவர்(கவிமணி) எழுதிய நூல்களிலே 'ஆசிய ஜோதி' , 'கீதாஞ்சலி', 'உமர் கய்யாம்', 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் மான்மியம்' என்பன முக்கியமானவை. இவற்றுள் கடைசி ஒன்றைத்தவிர மற்றதெல்லாம் மொழிபெயர்ப்புகள்..."Ref:  http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1743:2013-09-27-04-03-44&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47" கீதாஞ்சலியுமொன்று. (பந்தி 2 வசனம்10).

உண்மையில் கவிமணி கீதாஞ்சலியை முற்றிலுமாக மொழிபெயர்க்கவில்லை.  மலரும் மாலையும் தொகுப்பில் உள்ள அஞ்சலி என்னும் பிரார்த்தனைப் பகுதியில் வரும் எட்டுப் பாடல்களே கீதாஞ்சலியைத் தழுவியவை. தாகூரின ஆங்கிலக்; கீதாஞ்சலியின் முதற்பாடல் பின்வருமாறு:

 

Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life.  This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new.  At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable.  Thy infinite gifts come to me only on these very small hands of mine. Ages pass, and still thou pourest, and still there is room to fill.


இவ்வரிகளின் தழுவல் வடிவம் தமிழில் பின்வருமாறு தரப்படுகின்றது:

 

என்றுமெனை அழிவிலாப் பொருளா யியற்றினை, ஈதுனது திரு வுள்ளமே;
ஈடற்ற கலமித கவிழ்த்திக் கவிழ்த்தியுயிர் ஏனோ திருத்தி வைப்பாய்?
குன்றினொடு குழியெலாம் இச்சிறிய வேயின்வரு

குழல் கொண்டு சென்ற நீயுன்
குமுதவாய் வைத்துநவ நவமான இசைகள் செவி குளிரவே ஊதி நிற்பாய்


பொன்றுத லிலாதநிலை தரவல்ல உன்கரப் புனிதமுடல் தீண்ட லாலே,
பூரித்த உள்ளமகி ழெல்லையற மாய்ந்ததும், போற்றமொழி யற்று நின்றேன்;
நன்றுதவு கொடைகோடி இக்குழவி கைகளில் நாளும்நீ அள்ளி யிடினும்,
நான்குறைகள் சொல்லி அருள் வேண்டா திருந்திடேன், ஞானஒளி வீசு மதியே!


இக் கவிதைகள் கீதாஞ்சலியின் ஆரம்பக் கவிதைகளின்; தழுவலே ஆயினும், சிறு வேற்றுமை கருதி கவிமணியின் கவிதைத் தொகுப்புகளில் அது அஞ்சலியென்றே குறிக்கப்பட்டுள்ளது.

அக்கால  நாஞ்சில் நாட்டுச் சமுதாயத்திலிருந்தவோர் பாரம்பரியச் சொத்துரிமை முறைமையை விமர்சிக்கும் நூலே நாஞ்சில் நாட்டு மருமக்கள் மான்மியம்;. அது மிகச்சாதாரண தமிழ்நடையில் அகவற்பாவில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவரே.  அங்கிருந்த சொத்துரிமை மருமக்கள் தாய முறைமை எனப்பட்டது.  அதன்படி, குடும்பச் சொத்து மருமக்களுக்கேயுரியது.  குடும்பத் தலைவனின் மக்களுக்கு அதில் எவ்வித பாத்தியதையுமில்லை.  குடும்பச் சொத்தை யாரும் பிரிக்க முடியாது.  குடும்பத் தலைவன் இறந்ததும் மருமக்கள் வந்து எல்லாவற்றையும் தமதாக்கிக்கொள்வர்.  அதனால், குடும்பத்தலைவனின் மனைவியரும் பிள்ளைகளும் நடுத்தெருவில் விடப்படுவர்.  

பஞ்சகல்யாணிப்பிள்ளையென்ற பட்டப்பெயரைக் கொண்ட குடும்பத்தலைவனுக்கு வாழ்க்கைப்பட்ட  ஐந்து மனைவியரில் கடைசியான ஓர் ஏழைப்பெண், இந்த மருமக்கள் தாயமுறையினால் தனக்கும் தனது பிள்ளைக்கும் நேர்ந்த அவலத்தைப் பற்றி சமூகத்தின் முன் முறையிடுவதே மருமக்கள் வழி மான்மியமாகும். வீட்டிலிருந்த அத்தனை பேருக்கும் ஓர் வேலைக்காரியாகத் தான் பட்டபாட்டை நகைச்சுவையும், சோகமும், இகழ்ச்சியும் கலந்து அவள் சொல்லுகின்றாள். அதனால் இதுவோர் அங்கத இலக்கியமாகக் காணப்படுகின்றது.  இந்த மருமக்கள் தாயமுறை நாஞ்சில் நாடு சேரர் ஆதிக்கத்தின்கீழ் இருந்ததால் ஏற்பட்டதென்றும், உண்மையில் சோழ, பாண்டிய வம்சத்தவர்களான நாஞ்சில் வேளாண்குடியினர், மக்கள் தாய முறைமையையே கடைப்பிடிக்க வேண்டியவர்களென்றும் எஸ்.வையாபுரிப்பிள்ளையென்னும் சென்னை சர்வகலாசாலை தமிழாராய்ச்சித்துறைத் தலைவர் அந்நூலுக்கான முன்னுரையிற் குறிப்பிடுகின்றார்(பக்கம் 16-15).  

மட்டக்களப்பிலும் வேளாண்மை செய்பவர்கள் வாழும் கிராமங்களில் இந்த மருமக்கள் தாய முறைமையின் எச்ச சொச்சங்கள் காணப்படுகின்றன.  அங்கும் பல குடிகளும் கோத்திரங்களுமுண்டு.  ஒரு குடியைச்சேர்ந்தவர்களின் பரம்பரைக்கோயிலின் ஆட்சி, நிர்வாக உரிமையை வைத்திருக்கும் வண்ணக்குமார் இறந்ததும் அவர்களின் மருமகப் பிள்ளைகளுக்கே அப்பதவி போய்ச் சேரும்.  இதை வேறுவிதமாகக் கூறுவதாயின் எனது மகன் எனது குடியைச் சேர்ந்தவனல்ல, எனது மனைவியின் குடியைச் சேர்ந்தவனாகவேயிருப்பான்.  ஆகவே எனது குடிக் கோயிலில் அவனுக்கு யாதொரு பாத்தியதையும் கிடையாது.  அது என் மருமக்களுக்கேயுரியது.  மகன் தனது தாய்வழிக் கோயிலேயே அதிகாரம் செலுத்த முடியும். மேலும், மட்டக்களப்பிற் பாவிக்கப்படும்  அனேக கிராமியச் சொற்கள் இந்நூலிலும் பாவிக்கப்பட்டுள்ளன.  (உ-ம்: வாருகோல் - விளக்குமாறு பக்கம் 43, வரி 81, மரக்கால் - பக்கம்: 67, சூடு – 74). இனிக் கதைக்கு வருவோம்:

 

தான்பட்ட அவலங்களைச் சொல்லும் அப்பெண் அவையெல்லாவற்றையும்விடத் தன்னை வருத்திய ஒன்றைக் குறிப்பிடுகிறாள்: 

நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்ததால் அங்கு மலையாளமே கற்பித்தல் மொழியாயிருந்தது. அதனால் கணவன் இறக்கும் தறுவாயில் மகனைத் திருவாசகம் பாடச் சொல்ல வாசிக்கத் தெரியாதென்றான்.  அதுவே அவளை மிகவும் வருத்தியதாகக் கூறுகிறாள்.

 

நாஞ்சில் நாட்டு மக்கள் மலையாளத்துடன் நெருக்கமானவர்களாயிருந்தாலும் தமிழின்மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்களென்பதைக் கவிஞர் இங்கு சூசகமாக உணர்த்துகிறார்.

கவிமணி தீண்டாமையைச் சாடிப் பல கவிதைகளை எழுதியுள்ளார். அவரது தீண்டாதார் விண்ணப்பம், தீண்டாமைப்பேய் போன்ற கவிதைகள் சாதிக் கொடுமையைச் சாடுகின்றன.

'பூவாரம் அணிந்தபிரான் பொன்னடிக்கீழ் நின்றெளியேம்
தேவாரம் பாடில் அவர் செவிக்கின்பம் ஆகாதோ?..'
'..ஆலயத்திற் சென்றுதொழ ஆணையிடும் ஒளவைமொழி
ஞாலமிசை எங்களுக்கும் நன்மைதராப் புன்மொழியோ?..' 

 

என்றும், தீண்டாமைப்பேய்:

'கூடியிருக்க வொட்டாது - நண்பர் கொண்டு தருவதை உண்ண வொட்டாது
தேடி வருவோரை அன்பாய் - வீட்டுத்

திண்ணையில் உட்கார வைக்க வொட்டாது.
இப்பெரும் பேய்இனி மேலும்-நமது இந்திய நாட்டில் இருந்திட லாமோ?
கப்பலில் ஏற்றுவோம், ஐயா!-நடுக் காயல் கடல்கண்டு தள்ளுவோம், ஐயா!'  


என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அவர் வாதிடுகிறார்.  

சுத்தத்தைப் பேணுமாறு கூறும் கவிமணி:
'மாசொ டறியாமை நேசமாகித் - தம்முள் வாய்த்த மணஞ்செயும் காரணத்தால்
பேசும் உலகினில் நோய்கள் எனும்பல பிள்ளைகள் வந்து பிறக்குதம்மா.'
என்று அழகாக எடுத்துரைக்கிறார்.

கவிமணியின் ஆசிய ஜோதி புத்தரின் சரித்திரத்தை மிகவும் சுருக்கமாக எடுத்தியம்புகிறது.  புத்தரின் பிறப்பிலிருந்து தொடங்கி அவர் சுஜாதையென்னும் பெண்ணுக்கு உலகத்தின் இயற்கையை மாற்ற முடியாது என்று உபதேசிப்பது வரை அச்சரித்திரம் சுருக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும் புத்தர் இளவயதில் பிணி, மூப்பு, சாக்காட்டைக் கண்டு அத்துன்பங்களுக்கு விடைகாணச் சென்ற முக்கிய விடயம் ஆசிய ஜோதியில் சிலாகிக்கப்படவி;லை.  காற்றினால் அதிர்ந்த தந்தியொன்றின் இசையில் லயித்து அவ்விசை கூறிய சங்கேத மொழியினால் புத்தர் தன் லௌகிக வாழ்வைத் துறந்ததாகவே கூறப்படுகிறது.   புத்தர் இறைவழிபாட்டை எதிர்க்கின்றார்.  ஜனனமரணச் சக்கரத்தை ஏற்கின்றார்.  
 

'...வெறுத்தற் கரிய விண்ணமு தே!- என-; அன்பின் உருவே! அசோதரை நங்காய்!-உன்னையும்,

மறந்து செல்ல மனந்துணி கின்றேன்;
-ஆயினும்,- நீள்நிலம் உய்ந்திட நீயும் உய்குவை

காரிகை யேநம் காதலில் மலர்ந்த
மலரென உன்தன் வயிற்றினில் வளரும்

மகவினைக் கண்டு வாழ்த்துதற் குரிய
காலம் வரும்வரை காத்து நிற்போனேல், - மனத்தில்  
கொண்ட உறுதி குலைந்து போய்விடும்....'  


என்று இரவில் வெளியேறிச் செல்லும் புத்தர் நீண்டதூரம் நடந்து களைத்து விழுகிறார். உதவ முன்வந்த ஓர் ஆட்டிடையனிடம் ஓர் கிண்ணத்தில் பால்கறந்து தரும்படி கேட்கிறார்.  இடையனோ தான் தாழ்ந்த சாதியினன் தனது பாத்திரத்தில் தாங்கள் வாய்வைக்கலாகாது என்கிறான். புத்தரோ:

'ஓடும் உதிரத்தில் - வடிந்து ஒழுகும் கண்ணீரில், தேடிப் பார்த்தாலும் - சாதி தெரிவ துண்டோ அப்பா? பிறப்பினால் எவர்க்கும் - உலகில் பெருமை வாராதப்பா! சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
செய்கை வேண்டும், அப்பா!'


என்று இடையனுக்குக் கூறிக் கலத்தில் பாலை வாங்கிக் குடித்துக் களையாறுகிறார்.

பிம்பிசார மன்னன் கடவுளின் பேரால் செய்த யாக வேள்வியைக் கண்ணுற்று அங்கே பலியிடப்படவிருந்த ஆடுகள்மீது இரக்கப்பட்டு அவற்றை மீட்பதும் மன்னன் மனந்திருந்தி நாடு முழுவதும் உயிர்ப்பலிகளைத் தடைசெய்வதும் மிக நயமாக எடுத்தியம்பப்படுகின்றது.

'...ஏழைப் பிராணிகளின் - இடர்களைந்து இன்ப மளிப்பதுபோல்,
வாழும் உலகிதனில் - செயுமொரு மாதவம் வேறுமுண்டோ?..'
'..மீளாத் துயர்க்கடலில் - உயிரெலாம் வீழ்ந்து முழுகையிலே,
பாழாங் குகைதேடிச் செயுந்தவம் பாவமே ஆகுமம்மா!'  


என்று சிந்தித்த புத்தர் யாகசாலைக்கு நடத்திச் செல்லப்பட்ட ஓர் நொண்டியான குட்டியாட்டைத் தூக்கித் தன் மார்பில் அணைத்தவாறு வேள்வி நடக்குமிடத்திற்கு விரைகிறார்.  அவர் வருகையால் அந்தச் சூழலே புத்துணர்ச்சி பெறுகிறது.

'..செங்கதிர் வெம்மை தணிந்ததடி! - வாசத் தென்றல் உலாவி எழுந்ததடி!
பொங்கி வருஞ்சோணை மாநதியும் - ஒரு பொன்னிறம் பெற்றுப் பொலிந்ததடி!   முல்லை மலர்ந்து மகிழ்ந்ததடி! - ஆம்பல் மூடிய வாயும் திறந்ததடி!
எல்லை யிலாமலர்ச் சோலையிலே - வண்டும் இன்னிசை பாடித் திரிந்ததடி!..'  


என்று அந்தக் காட்சியை வர்ணிப்பது இதயத்தைத் தொடுவதாயிருக்கிறது.  வேள்வி ஆரம்பிக்கும்போது குறுக்கிடும் புத்தர்:

'..ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச் செல்வ தொருநாளு மில்லைஐயா!
முன்னைப் பிறப்பினில் செய்தவினை - யாவும்

முற்றி முதிர்ந்துமுளைத்தெழுந்து
பின்னைப் பிறப்பில் வளர்ந்திடும் என்பது பித்தர் உரையென எண்ணினீரோ?    
நெஞ்சினில் வாயில் கையினில் - செய்திடும் - நீதி அநீதிகள் யாவையுமே
வஞ்சமி லாது மறுபிறப்பில் - உம்மை வந்து பொருந்தாமற் போய்விடுமோ?..'  


என்று கர்மாவை இத்தகைய பலிகளால் அழிக்க முடியாது என்பதை வேள்வி செய்வோருக்கு எடுத்துரைக்கிறார்.  மன்னனோ நாடுமுழுவதும் உயிர்ப்பலியைத் தடைசெய்ய ஆணையிடுகிறான்.

மருமக்கள் வழிமான்மியத்தோடு ஒப்பிடுகையில் ஆசிய ஜோதி மிகச் சிறந்த சந்தங்களைக் கொண்ட அழகிய விருத்தப் பாக்களால் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறுமுக நாவலரை கவிமணி வாழ்த்தும் கவிதையிலொன்றும் கீழே தரப்படுகின்றது:

'ஆடும் தில்லை யம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன்,
பீடு பெறவே செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன்,
நீடு சைவம் இவ்வுலகில் நிலவச் செய்த குருநாதன்,
நாடு புகழும் ஆறுமுக நாவ லன்பேர் மறவோமே.' 
  என்பதது.

சுன்னாகம் - இணுவில் இராமநாதன் கல்லூரியைப் பின்வருமாறு கவிஞர் வாழ்த்துகிறார்: உ-ம்:

'குன்றை வில்லாய் வளைத்தபிரான் குகனை ஈன்ற கண்ணுதலான்
மன்றுள் நடனம் செய்கின்ற மங்கை பாகன் திருவருளால்
என்றும் என்றும் தழைத்தோங்கி இராம நாதன் கல்லூரி
நன்று நாடும் சுன்னாக நகரில் வாழ்க! வாழ்கவே!' 
என்பதது.

இலங்கை பாரதி சங்கம் பற்றிய கவிதை பின்வருமாறு :
'சீரியநல் லறப்பணிகள் பலவும் செய்து

செந்தமிழை வளம்பெருகத் தினமும் பேணி
வீரசுதந் திரங்காத்துக் காந்தி யண்ணல்

விதித்திடும் மெய் யன்புநெறி கடைப்பிடித்து,
தாரணியில் புகழோங்கும் தில்லைக் கூத்தன்

தண்ணருளால் அழகியதென் இலங்கைத் தீவில்
பாரதியின் பெயர் போற்றும் இளைஞர் சங்கம்

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மாதோ!' என்பதது.

மேற்கண்ட இரு கவிதைகளை கவிமணி இலங்கைக்கு விஜயம் செய்தபோது பாடியிருக்கக் கூடும். அதுபற்றிய விபரம் தெரியவில்லை.

கவிமணியின் அடுத்த படைப்பு உமர் கையாமின் மொழிபெயர்ப்பாகும்:

'எழுதிச் செல்லும் விதியின்கை எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு வார்த்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீ ராறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?..'
 

 

என்னும் பாடலுடன்,  

'வெய்யிற் கேற்ற நிழலுண்டு; வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு; கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு; தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ?..'


போன்ற பல பாடல்கள் சினிமாவிலும் இசைக்கேற்ப மாற்றிப் பாடப்பட்டுள்ளன.  உமர் கையாமிற்குக் கம்பனைத் தெரியாதாயினும் அவன் குறித்த வேறொரு கவிஞனை கவிமணி கம்பனாக்கியிருக்கிறார்.

கவிமணியின் இனிய கவிதைகள் நிறையவுள்ளன அவற்றையெல்லாம் சிலாகிக்க நேரம் இல்லாமையால் ஒரு சிலவற்றை மட்டும் தொட்டு> மற்றையவர்களுக்கு இடம் விட்டு இத்துடன் முடிக்கிறேன்.

 

- By Karu -
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியம் படிக்கும்.. போது உந்தாளை பேசாத பேச்சில்ல. கம்பன் அவையடக்கம்.. நாவடக்கம் என்று நம்ம உயிரை வாங்கிச்சு இந்தாள்..!  :)  :lol:

 

இருந்தாலும் தமிழுக்கு ஆற்றிய பணிக்கு பாராட்டலாம்.  :icon_idea:


கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை.. என்று தான் தமிழ் நூலில் எழுதப்பட்டிருந்த ஞாபகம்.  :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி
இரண்டும் சரி.  வினாயகரை விநாயகரென்றும் சொல்துண்டு. வினாயகம் பிள்ளை பிள்ளையாரைக்குறிக்கும்.

Edited by karu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.