Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயை காத்த தனயன்களுக்கு பதிலாக தனயனை காத்த தாய்களே வடக்கு கடலில் எந்நாளும் மூழ்குகின்றனர்

Featured Replies

son_CI.jpg

 

தாயை காத்த தனையன்களுக்கு பதிலாக தனயனை காத்த தாய்களே வடக்கு கடலில் எந்நாளும் மூழ்குகின்றனர். இந்த தாய்மாரிடம் துடுப்புக்களுக்கு பதிலாக வடுக்களே காணப்படுகின்றன. அன்பை அனுபவிப்பதற்கு பதிலாக வாழ்க்கையை தொலைத்து தேடித் திரிபவர்களையே காண முடிந்தது. வடக்கு கடல் நீரின்  உவர்ப்புச் சுவை அதிகமாக இருப்பதற்கு இந்த மக்களின் சூடான கண்ணீர்த் துளிகளே காரணமாகும். சீவியத்தின் நெருக்கடியான தருணங்களில் தனது கண்ணை பறித்துக் கொண்ட அரச படையினரின் முன்னால் இந்த தாய் மண்டியிடத் தயாரில்லை, தொடர்ந்தும் போராடவே விரும்புகின்றார். மகன் பற்றி நாடும் ஊரும் என்ன சொன்னாலும் இந்த மெலிந்த தாயின் வலிய அன்பிற்கு அவை பொருந்தக்கூடியதல்ல. உண்மையைக் கண்டு கொண்டு கண்களை மூடிக் கொள்ளும் நாட்டில் வாழும் இந்த தாய், கண்களைத் திறந்து கொண்டே தனது கனவை காண்கின்றார். புஸ்பாம்பாள் அம்மா ஒரே எதிர்பார்ப்புடன் தனது வாழ்க்கையை தொடர்கின்றார் என்பது இங்கு முதன்மையானதாகும்.
 
 
சுழற் காற்றினாலும் எறிகணைத் தாக்குதலினாலும் வாழ்க்கையின் எல்லாமே அடித்துச் சென்ற நிலையிலும் கனிந்த பார்வையுடன் தனபாலசிங்கம் புஸ்பாம்பாள் அம்மா எம் முன்னிலையில் இருக்கின்றார். அபரிமிதமான தாய் அன்புடன் நினைவுகளை மீட்டுகின்றார். சற்றே காது கொடுப்போம்.
 
 
“கொழும்பிலிருந்து சீ.ஐ.டி. என்னுடன் பேசியது. வந்து மகனின் மரண சான்றிதழை எடுத்துச்செல்லுமாறு அழைத்தார்கள். பணத்துடன் வீடு கட்டித் தருவதாக உறுதியளித்தார்கள். நான் ஒன்றை மட்டுமே சொன்னேன். எனக்கு எதுவும் வேண்டாம், எனக்கு எனது பிள்ளையைத்தாருங்கள். எனது பிள்ளை உயிருடன் இருப்பதாகவே நான் இன்னமும் உணர்கின்றேன்.”
 
 
பலவந்தமான முறையில் உயிர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியை கடந்த இந்த தாய், மகனின் பிறப்புச் சான்றிதழை நினைவுகளினால் தழுவிகொள்கின்றார்.
 
 
“தனபாலசிங்கம் விஜயபாஸ்கர்” 1977ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி வடக்கு வானிலிருந்து பூமியை ஸ்பரிசிக்கின்றார். வாழ்க்கையின் சிரமமான, வேதனை மிகுந்த காட்சிகளை விழிகளில் வாங்கிக் கொண்டு அம்மாவின் சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு விஜயபாஸ்கர் வளர்கின்றார். எனினும், தங்களது பிரதேசத்தில் தமக்கேயான கனவுகளை காண முடியாத பாரிய அடக்குமுறைகளின் உள்ளே பல விஜயபாஸ்கர்கள் மௌனப்படுத்தப்படுகின்றனர். புஸ்பாம்பாள் அம்மாவின் குரல் வழியாக நினைவுகளில் சஞ்சரிக்கின்றார்.
 
 
“யுத்தத்தின் இறுதி நாட்களில், 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முல்லைத்தீவு வட்டுவால் பிரதேசத்தில் வைத்து எம்மை கைது செய்தனர். அங்கு அவர்கள் எங்களை இரண்டாக பிரித்தார்கள். எனது மகனுடன் மேலும் 40 பேர் கொண்ட பிரிவினர் பஸ்ஸில் ஏறிச்சென்றனர். எங்கள் பிள்ளைகளிடம் விசாரணை செய்து மீள அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தனர்.”
 
எனினும் இதுவரையில் விஜய பாஸ்கர் இரகசியமாகவேனும் வீட்டுக் கதவைத் தட்டவில்லை. கதவு திறந்து இருந்த போதிலும் மகன் கதவை தட்டவில்லை, பாதுகாப்பு இராட்சதகர்களே கதவை தட்டினார்கள்.  வாசுதேவ நாணயக்கார சொன்னது போன்று விஜய பாஸ்கர்கள் இந்த தாய்மாருக்கு தெரியாமல் யுவதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி சந்தோசமாக வாழ்கின்றார்கள் என நாம் எண்ணிக்கொள்வோம். உண்மை நிதா்சனமாகியும் நாம் முழுக்க முழுக்க பொய்யையே தழுவிக் கொண்டிருக்கின்றோம், இதனால்  பொறுமையை மேலும் வளர்த்துக்கொள்வோம். தேவையான நேரத்தில் எங்கள் வேதனைகளை வெடிக்கச் செய்வோம். புஸ்பாம்பாள் அம்மா போன்றே இந்த சம்பவம் தொடர்பிலான மற்றுமொரு சாட்சி எனக்கு கை அசைக்கின்றது. நாம் அந்த இடத்திற்கு செல்வோம்.
 
 
இதுதான் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான “யோகரட்னம் யோகி”யின் மனைவி “ஜயவதி”யின் மனச்சாட்சியே..
 
 
“அன்று 2009 மே மாதம் 18ம் திகதி எனது கணவர் யோகீ, புதுவை ரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்ரமணியம் உள்ளிட்ட மேலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முல்லைத்தீவு வட்டுவாலில் பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் கிடையாது.”
 
அந்தத் தருணம் தொடர்பில் குறித்த இடத்திலிருந்த 63 வயதான பெண் ஒருவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
 
 
“அந்த இடத்தில் மக்களை ஏற்றிச் சென்ற பதினாறு வாகனங்களை நான் எண்ணிணேன்”
 
 
ஜயவதியினதும், இந்தப் பெண்ணினதும் சாட்சியங்களை பொதுவாக இவ்வாறு பகிர்ந்துகொள்ள முடியும்.
 
 
“இவ்வாறு பஸ்களில் ஏற்றிக் கொண்டு சென்றவர்களில் யோகி, இளம்பரிதி (புதுக்குடியிருப்பு அரசியல்துறைப் பொறுப்பாளர்), ரூபன், பாபு, வேலவன், கவிஞர் புதுவை ரத்தினதுரை, கல்வித்துறைப் பொறுப்பாளர் பேபி சுப்ரமணியம், ஒரு காலத்தில் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக கடமையாற்றிய திலகர் ஆகிய தலைவர்கள் இருந்தார்கள். இவர்களுடன் 50 பேர் வரையில் அரசாங்கத்திடம் சரணடைந்தார்கள். இவர்கள் இராணுவ பஸ்களில் ஏற்றிச் சென்றதனை நாம் கண்களால் பார்த்தோம்.”
 
 
இந்த தருணத்தில்தான் வடக்கிலிருந்து தெற்கை சரியாக புரிந்து கொண்ட தமிழ் கவிஞனான புதுவை ரத்தினதுரையையும் இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்றனர்.
 
 
“சிவனொளிபாத மலை உச்சியின் ஊடாக மட்டுமே நான்
சூரிய உதயத்தை காண பிரியப்படுகின்றேன்
 
 
அந்த உரிமையை என்னிடமிருந்து பறிக்காதீர்கள்”
 
 
என புதுவை ரத்தினதுரை கவி வரிகளினால் உரிமைக்காக குரல் கொடுக்கின்றார். எனினும் தெற்கின் பெரும்பாலான சிங்கள கவிஞர்களினால், இந்த தமிழ் சகோதரனின் உரிமைக் குரலுக்கு வலு சேர்க்க கரம் கொடுக்க முடியவில்லை.
 
 
இப்போது உண்மையிலும் உண்மை எது என்பது உங்களுக்குத் தெரியும். எனினும், எதனையும் சொல்லவோ செய்யவோ முடியாது உண்மை எம்மை பார்த்துக்கொண்டிருக்கின்றது. நான் அப்படித்தான் உணர்கின்றேன். ஜயவதி, அந்தப் பெண்ணைப் போன்றே புஸ்பாம்பாள் அம்மாவின் மனச்சாட்சிகளை மூன்று இடங்களில் சந்தித்தேன். எனினும், ஒரே நேரத்தில் நடந்தவற்றை உண்மையாக வெளிப்படுத்தினார்கள். முல்லைத்தீவு வட்டுவாலில் ஜயவதியைப் போன்றே அந்த அம்மாவின் மூச்சும் கலந்துவிடும்.
 
 
எந்த மாற்றமும் இன்றி காலத்தை கடத்துகின்றனர். புஸ்பாம்பாளின் இருதய வேதனை தொடர்ச்சியாக ரணத்தை எற்படுத்த அந்த ரணம் கண்களின் ஊடாக பிரவாகிக்கின்றது.
 
 
 “சில காலத்தின் பின்னர் மகனுடன் அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் வீடு திரும்பினார். அவர் சொன்னார், எங்களை கொழும்பிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து அவர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளனர். இறுதியாக இந்தப் பிள்ளையை மட்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அது எனக்கு மகிழ்ச்சிதான். எனினும். எனது மகன்.........???”
 
 
புஸ்பாம்பாள் அம்மா என்னை கேள்வி கேட்கின்றார். என்றைக்குமே மன்னிப்பு கிடைக்காத மெய்யான சிங்கள வெட்கத்துடனும், வேதனையுடனும் நான் என் உதடுகளை கடித்துக்கொள்கின்றேன். அந்த தாய் கண்களை துடைத்துக்கொள்கின்றார்.
 
 
“நாம் 2009ம் ஆண்டில் செட்டிக்குளம் சொன்பார் அகதி முகாமில் தங்கியிருந்தோம். அந்த ஆண்டு ஜூலை மாதம் முகாமிலிருந்து வெளியே வந்தோம். அதுவரையில் முகாமிலிருந்து எவருக்கும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. வெளியே வந்தவுடன் நான் முதலாவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் முறைப்பாடு செய்தேன். LKC.431198  என்ற முறைப்பாட்டு இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்தேன். அதன் பின்னர் கணனியில் தகவல்களை பரிசீலனை செய்து அவ்வாறு எவரும் பதிவு செய்திருக்கவில்லை என கூறினார்கள்”
 
 
தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பினை வார்த்தைகளினால் வரையறுத்துவிட முடியாது. அந்த உறவை நாம் மதிக்க வேண்டும். இந்தப் பேரிடரை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். தாய் அனுபவித்த வேதனைகளை மேலும் விபரிக்கின்றார்.
 
அதன் பின்னர் 2010 பெப்ரவரி மாதம் 4ம் திகதி ஜோசப் முகாமில் பதிவு செய்து கொண்டேன். வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பொலிஸ் பரிசோதகர் கே.எல்.டி. தல்பதாதுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. அங்கு எமக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. முகாமில் இருக்கும் போது புலனாய்வுப் பிரிவினர் வந்து மகனின் பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, குடும்ப விபரங்கள் அடங்கிய கடிதங்கள், கிராம சேவகரின் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணமொன்றுடன், சத்தியக்கடதாசி ஒன்றையும் எம்மிடமிருந்து பெற்றுக்கொண்டனர். கொழும்பு புலனாய்வு பிரிவினர் என்னைத் தொடர்பு கொண்டு விஜய பாஸ்கர் எனது மகனா? என கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன்.”
 
 
புஸ்பாம்பாள் அம்மாவின் பொறுமை மிகவும் வியக்கத்தக்கது. தனது மகன் பறந்து சென்ற தருணம் வரையில் நினைவுகளை சலனமின்றி பகிர்ந்துகொண்டார். எந்தவிதமான கோபமும் இன்றி கடுமையான வேதனையுடன் என்னை பார்க்கின்றார். அவரது கண்களிலிருந்து என் கண்களை விடுவித்து, விஜய பாஸ்கர் சகோதரனின் புகைப்படத்தில் அவரது அம்மாவைத் தேடுகின்றேன். இந்த வேதனை நெருப்பிலிருந்து எனக்கு எவ்வித விடுதலையும்  இல்லை. ஆம் இந்த வேதனை நெருப்பு என்னைக் கடுமையாக சுடுகின்றது. உங்களுக்கு..........?
 
 
 “ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பிள்ளைகள் உயிரிழந்துவிட்டனர் எனத் தெரிவித்து மரண சான்றிதழக்ளை எடுத்துச் செல்லுமாறு சொல்கின்றார்கள். எனினும் எமக்கு நம்பிக்கையுண்டு. எங்கள் பிள்ளைகள் எங்காவது வாழ்வார்கள் என்று. அவர்களினால் உயிரிழந்தார்கள் என தெரிவிக்க முடியும். அழைத்துச் சென்ற போது நன்றாக இருந்த பிள்ளைகள் எவ்வாறு இறந்திருக்க முடியும். அதனை எப்படி நாம் நம்புவது. அழைத்துச் சென்றவர்கள் இயற்கையாக மரணித்தார்களா? அஹ் அது தானே உண்மை?
 
 
புஸ்பாம்பாள் அம்மா, பவுலின் தாய்க்கும் அப்பாற்பட்ட போர்க்குணமுடையவர். ஒருமித்த பேரன்பினாலும் எதிர்பார்ப்புடனும் மகனைத் தேடி வருகின்றார். இந்த தாய்க்கு அயர்வு கிடையாது. ஏனெனில், தனது மகன் சுவாசிக்கின்றார் என்பது இந்த தாய்க்கு தெரிகிறது இந்தத் தாய் அதனை உணர்கின்றார்.
 
 
 “நாம் மனித உரிமை இல்லம், ஜனாதிபதி காாியாலயத்திலும் பதிவு செய்து கொண்டோம். நவனீதம்பிள்ளை இலங்கை விஜயம் செய்திருந்த போது எனது மகன் விஜய தொடர்பில் முழு விபரங்களையும் ஒப்படைத்தேன். எனினும் அவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை. முன்னரைப் போன்று அம்மா பசிக்குது என சொல்லவில்லை. எனினும் எனது கண்கள் மூடுவதற்கு முன்னதாக எனது மகனை நான் கண்டு பிடிப்பேன்”
 
 
புஸ்பாம்பாள் அம்மா, உயிரற்ற குழந்தையை தேடும் திசா கோதமியல்ல, அவர் தேடுவது உயிருள்ள பிள்ளையையேயாகும்.
 
 
நீ தனித்திருக்கவில்லை தாயே, போவம், நாமும் அங்குதான் செல்கின்றோம். தனபாலசிங்கம் விஜயபாஸ்கர் சுவாசிக்கும் இடத்திற்கு......
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.