Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா முள்ளிவாய்க்கால்?


Recommended Posts

                                                                                                                                                       3.jpg
 
2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவின், முள்ளிவாய்க்கால் கரையோரத்தில், முதல் முறையாக ஒரு சர்வதேசப் பிரமுகர், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
இம்மாதம் முதல்வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்திய முதல் சர்வதேசப் பிரமுகராவார்.

இவர் முள்ளிவாய்க்கால் கரையோரமாக நடந்து சென்று, விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு, தரைதட்டி நின்ற பாரா-–3 என்ற கப்பலின் எச்சம் இன்னமும் காணப்படும், பகுதியை அண்டிய கடற்கரையில் தான், மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினார்.

போரில் உயிரிழந்தவர்களுக்காக தான் அஞ்சலி செலுத்தியதை, அவர் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போதும் கூறியிருந்தார்.

அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்திலும் அந்தப் படத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

tom%201.jpg
 
ஆனாலும், இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில், இந்தச் செய்தி அவ்வளவாக இடம்பிடிக்கவில்லை.
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத் தும் படம் கூட, பல ஊடகங்களில் வெளியாகவில்லை.
அமெரிக்கா சார்பில், அந்த நாட்டின் உயர்நிலை அதிகாரி ஒருவர், முள்ளிவாய்க்காலில் மலரஞ்சலி செலுத்தியது முக்கியத்துவமற்றதாகி விட்டதா? அல்லது, முள்ளிவாய்க்காலே முக்கியத்துவம் அற்றதாகி விட்டதா?
பொதுவாகவே, முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவது என்பதைவிட, போரில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் விடயத்தில், கூட, இலங்கைத் தீவைப் போலவே, ஊடகங்களும் இரண்டுபட்டு நிற்பது உண்மை.
சிங்கள ஊடகங்கள், போரில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த முயன்றால், அதனை விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சித்திரித்து சர்ச்சை யைக் கிளப்புவது வழக்கம்.
ஆங்கில ஊடகங்களில் சிலவும், அதே கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பது வழமை. அதேவேளை, தமிழ் ஊடகங்களோ, போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு- புலிகளாக இருந்தாலும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களின் கடமை என்றே கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கின்றன.
ஆனால், அமெரிக்கா சார்பில், முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தப்பட்டதை பெரும்பாலும் மூன்று மொழி ஊடகங்களுமே முக்கியத்துவம் கொடுக்காதமை ஆச்சரியமளிக்கும் விடயம் தான்.
இலங்கைத் தமிழர் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான இடம்.
அரசாங்கத்தையும், அரச படைகளையும் பொறுத்தவரையிலும் அது முக்கியமான தொரு இடம்தான். ஆனால், இருதரப்புக் கும் அது வேறு வேறு வகைகளில் முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஒருவருக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுத்த இடம் அது. இன்னொருவருக்கு தோல்வியையும், துன்பங்களையும், வரலாற்றுப் பாடத்தையும் கொடுத்த இடம் அது.
எவ்வாறாயினும், ஆயிரக்கணக்கானோரை பலியெடுத்த பூமி என்ற வகையில், அது எல்லோருக்கும் பொதுவான இடம். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான படையினரும், இரத்தம் சிந்திய நிலம் அது.
அந்தவகையில் தான், முள்ளிவாய்க்காலில், மலர் அஞ்சலி செலுத்தியிருந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளை, இலங்கையில் ஒரு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
முல்லைத்தீவுக்கும் சென்ற அவர், போரில் உயிரிழந்த அனைவ ரையும் நினைவு கூரும் வகையில், முள்ளி வாய்க்காலில் மலர்வளையம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார்.
அதுகுறித்து அரசாங்கத்துக்குத் தகவல் தெரிந்ததும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும், அவருக்கு அழுத்தம் கொடுத்தன.
அவ்வாறு அஞ்சலி செலுத்தினால், அது பக்கசார்பாகவே கருதப்படும் என்றும் அரசாங்கத் தரப்பில் இருந்து நவநீதம்பிள்ளைக்கு எடுத்துக் கூறப்பட்டது.
தனது பயணத்தின் நோக்கம், நடுநிலையானதாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு நவநீதம்பிள்ளை, அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
என்றாலும், நவநீதம்பிள்ளை, முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முயன்றதாகவும், அதனை அரசாங்கம் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், சிங்கள, ஆங்கில ஊடகங்கள், அப்போது பரபரப்பாக செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தளவுக்கும், நவநீதம்பிள்ளை, தான் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில், போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களால் பலியானோருக்காக அஞ்சலி செலுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஒருவர் என்பது பலருக்கும் தெரியாத விடயம்.
அதே நடைமுறையை அவரால், இலங்கையில் அப்போது கடைப்பிடிக்க முடியாமல் போனது. இந்தச் சர்ச்சை ஓய்ந்து இன்னொரு சர்ச்சை எழுந்தது.
2013ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்தார், கனடாவின் இணையமைச்சராக இருந்த தீபக் ஒபராய்.
அவர் தனது இலங்கைப் பயணத்தின் போது, வடக்கிற்கும் சென்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
அவர், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பும் வழியில், தனது வாகனத்தில் எடுத்துச் சென்றிருந்த மலர் வளையம் ஒன்றை, ஆனையிறவில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வன்முறைகளில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும் என்று மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட வெள்ளை நிறப்பட்டியுடன், அந்த மலர் வளையத்தை வைத்திருந்தார்.
அவர் தனது மலர் வளையத்தில், போரில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக் கும் என்று குறிப்பிட்டே, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இருந்தாலும், அவர், விடுதலைப் புலிகளுக்கே ஆனையிறவில் அஞ்சலி செலுத்தியதாக, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.
அதுபோலவே, முள்ளிவாய்க்காலிலோ அல்லது, வடக்கு கிழக்கு மாகாணத்தின் எந்த இடத்திலோ, மரணமான பொதுமக்களுக்குக் கூட அஞ்சலி செலுத்த முடியாத நிலையே, முன்னைய ஆட்சியில் இருந்து வந்தது.
மட்டக்களப்பில், படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் நிகழ்வைக் கூட பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆனால், இப்போது அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலரே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அதுவும், அவர் போரில் மரணமான இரண்டு தரப்பினருக்கும், மரியாதை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததும், தெரிந்தோ தெரியாமலோ, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கூக்குரலிடாமல் இருந்ததும், முக்கியமானதொரு மாற்றமே.
ரொம் மாலினோவ்ஸ்கி கூட, தான் ஒரு ஆண்டுக்கு முன்னர் இங்கு வந்திருந்தால் பல விடயங்களுக்கு அனுமதி கிடைத்திருக்காது என்றும், ஆட்சிமாற்றத்தின் விளைவாக பலவற்றை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் அவ்வாறு குறிப்பிட்டதற்கு, மலரஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
முன்னைய அரசாங்கமாக இருந்திருந்தால், இதையே பெரிய விவகாரமாக்கி, அமெரிக்காவுடன் ஒரு மோதலுக்குச் சென்றிருக்கும்.
அதேவேளை, அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலருக்கு அளிக்கப்பட்டது போன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தும் உரிமை, தமிழ்மக்களுக்கு அளிக்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.
தற்போதைய அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, நல் லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறி வருகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், போரில் மரணமானவர்களை நினைவு கூருவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவு நாள் இன்னும் இரண்டு மாதங்களில் வரவுள்ள நிலையில், அந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் இடமளிக்குமா என்று பார்க்க வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் அமெரிக்கா சார்பில் அஞ்சலி செலுத்த முடியுமாயின், தமிழ் மக்கள் சார்பில் ஏன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படக் கூடாது என்ற கேள்வி நிச்சயம் எழும்பும்.
அதேவேளை, முன்னைய அரசாங்கமே, இந்தகைய நினைவு கூரல்களை திசை திருப்பும் வகையில், செயற்பட்டுள்ளது, ஊடகங்களை தவறாக வழி நடத்தியுள்ளது என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.
அதுபோன்று தற்போதைய அரசாங்கமும் செயற்படாதிருக்குமா அல்லது வழக்கம் போலவே, தமிழ் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw1E.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.