Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுன்னாகம் நிலத்தடி நீரும் ஆய்வுகளும்! வதந்திகளுக்குச் செவிசாய்க்காது எமது நீர்வளத்தை நாமே சீர் செய்வோம்


Recommended Posts

சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கலப்புச் சம்பந்தமாகப் பல்வேறுபட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. எமது சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சில படித்த மனிதர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
தங்களைச் சமூக அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இவர்களால் இதுவரையில் எந்த விதமான வெளிப்படையான ஆராய்ச்சிகளோ அல்லது மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்யும் முறை சம்பந்தமான ஆராய்ச்சிகளோ முன்னெடுக்கப்படாத நிலையில் சரியான முறையில் பரிசோதனைகளைச் செய்து வெளிவரும் முடிவுகளைப் பிழையென வாதிட்டு அதனைப் பிழையான வழியில் மக்களிடம் திணிக்க முயற்சிக்கின்றனர்.

சில விசமிகள் தாங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் பரிசோதனை முடிவாக வராத பட்சத்தில் பரிசோதனை முடிவுகளை எடுத்த வாக்கிலேயே பிழை என்று கூறுவதும் கூறப்பட்ட முடிவுகளைத் திரிபுபடுத்தி மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றனர்.

இவர்களது ஒரே நோக்;கம் வடமாகாணசபையால் முன்னெடுக்கப்படும் எந்த விதமான ஆய்வுகளையும் நிராகரிப்பதாகவே இருக்கிறது.

வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் முதற்கட்டப் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்ட உடனேயே இவர்களது அறிக்கைகள் பரிசோதனை முடிவுகளுக்கு எதிராகவும் பல்வேறு கோணங்களில் அதனைத் திரிபுபடுத்தியும் வெளிவர ஆரம்பித்து விட்டன.

அந்த வகையில் மக்களின்; சிந்தனைக்குச் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.

• ஒரு பரிசோதனை முடிவைப் பிழையென வாதிடும் இவர்கள் செய்யப்பட்ட பரிசோதனை முறையை ஆராய்ந்தார்களா?

• பரிசோதனை செய்யப்பட்ட கருவியின் அளவிடும் கூர்மையை (accuracy) அறிந்தார்களா?

• நிலத்தடி நீரில் பெற்றோலிய எண்ணெய் கலப்பு ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் முதற்கட்ட ஆய்வுகளைப் பற்றித் தெரிந்து கொண்டார்களா?

• பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வில் வெளியிடப்பட்ட முடிவைத் திரிபுபடுத்திக் கூறுவதன் நோக்கம் என்ன?

• இவர்கள் பரிசோதனை மேற்கொண்டதாகக் கூறும் ஆய்வுகூடங்களின் முடிவை ஏற்றுகொள்ளும் இவர்கள் மற்றைய ஆய்வுகூடங்களின் முடிவை முற்றுமுழுதாக மறுப்பது ஏன்?

• வடமாகாணசபை நொதேண் பவர் நிறுவனத்துடன் இணைந்து செயற்;படுகின்றது எனப் பொய் கூறும் இவர்கள் தண்ணீர்ப் போத்தல் விற்கும் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களா?

• பரிசோதனை முடிவு பிழை எனக் கூறும் இவர்கள் ஏன் வேறு ஒரு சரியான சாத்தியமான பரிசோதனை முறையைக் கூறவில்லை?

நிலத்தடிநீரில் எண்ணெய்க் கழிவு தொடர்பாக நேரில் அறிந்து கொள்வதற்காக அண்மையில் யாழ்ப்பாணம் சென்று பல தரப்பினரையும் சந்தித்திருந்தேன். அதன் அடிப்படையில், வடமாகாணசபை நியமித்த நிபுணர்குழுவால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டப் பரிசோதனை சம்பந்தமான விரிவான விளக்கத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

சுன்னாகம் நிலத்தடி நீரில் சில பகுதிகளில் பெற்றோலியக் கழிவு எண்ணெய் கலந்தமை எல்லோரும் அறிந்த விடயமே.இதுவரை மேற்கொள்ளப்பட்ட உலக ஆராய்ச்சிகளின்படி பெற்றோலிய எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்திருப்பின் ஏற்பட்டுள்ள பாதிப்பை அளவிடுவதற்கு முதலில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் BTEX & PAHs பதார்த்தங்களைக் கண்டறிவதற்கே. ((BTEX- பென்சீன், தொலுயீன், எதெயில் பென்சீன், சைலீன், PAHs- Polycyclic Aromatic hydrocarbons). வடமாகாண நிபுணர் குழுவால் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு BTEX பதார்த்தங்களின் செறிவை கண்டறிவதற்கே.

புலம்பெயர் உறவுகளின் நன்கொடையால் அமெரிக்காவில் இருந்து (BTEX அளவிடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவியின் பெயர் FROG 4000. இரசாயன மூலங்களின் பகுப்பாய்வுகளில் 30 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவமுள்ள புலம்பெயர் எம் உறவுகளில் ஒருவர் அமெரிக்கா சென்று அக்கருவியை செயன்முறைப்படுத்துவது சம்பந்தமாக பயிற்சி பெற்று வந்து முதற்கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.

தேர்வு செய்யப்பட்ட 40 கிணறுகளில்இருந்து நீர் மாதிரிகள் சுத்திகரிக்கப்பட்ட போத்தல்களில் பெறப்பட்டு உடனடியாகவே தொண்டைமானாறு நீரியல் ஆய்வு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அன்றைய தினமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைகளின் ஆரம்பத்திலும் ஒவ்வொரு 5 நீர் மாதிரிகளின் பரிசோதனைகளின் பின்பும் கருவியின் பரிசோதனை முடிவை மீள் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்;பட்டன.

1. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட BTEX இன் செறிவு அறியப்பட்ட(standard sample) நீர்மாதிரியின் பரிசோதனை. (40ppb)

2. வடிகட்டப்பட்ட கொதிநீராவியின் (distilled water) நீர்மாதிரியின் பரிசோதனை (zero ppb)

இவ்வாறாக மிகவும் கவனமாகவும் சரியான முறையிலும் அனுபவம் மிக்க ஒருவராலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவே நிபுணர் குழுவால் அறிவிக்கப்பட்டது. நீரில் உள்ள ஆபத்தான உலோகங்களைக் கண்டறியும் செயன்முறையை செய்யக்கூடிய வசதி தற்போது வடமாகாண நீரியல் ஆய்வு மையத்தில் இல்லை.

இதன் காரணமாக மேற்குறிப்பிட்;ட 40 கிணறுகளில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகள் கொழும்பில் உள்ள கைத்தொழில் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (ITI) கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதன் பரிசோதனை முடிவு ஆபத்தான உலோக மூலங்கள் ;(heavy metals), இல்லை என்றே குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வுகளின் அடிப்டையிலேயே பரிசோதிக்கப்பட்ட எந்தவொரு நீர்மாதிரியிலும் BTEX உடைய அளவுகள் சர்வதேச நியம அளவுக்கு மேற்பட்டு இருக்கவில்லை, மாறாக 85 சதவீதமான மாதிரிகளில் முற்றாக இல்லாமலும் 15 சதவீதமான மாதிரிகளில் நியம அளவிலும் 200 மடங்கு குறைவான அளவிலும் காணப்பட்டது என்றும் ஆபத்தான உலோக மூலங்கள் இல்லை என்றும் சொல்லப்பட்டது.

இங்கு யாரும் பெற்றோலிய எண்ணெய் கலப்பு இல்லை என்று கூறவில்லை. ஆனால்,சில பொறுப்பு வாய்ந்த படித்த மனிதர்கள் திரிவுபடுத்தி எண்ணெய் கலப்பே இல்லை என்று நிபுணர் குழு கூறியதாகக் கூறிவருகின்றனர்.

பெற்றோலியத்தில் உள்ள அல்க்கேன்கள் (Alkanes) பற்றி பல்வேறுபட்ட கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில் உலக ஆராய்ச்சிகளின் படி கூறப்பட்டுள்ள சில தகவல்களை இங்கே குறிப்பிடப்படுவது பொருத்தமானதாக இருக்கும்.

சூழல் சார்பாகவோ அல்லது நீர் சார்ந்த நச்சுவியல் சார்பாகவோ பிரதியீடு செய்யப்படாத அல்க்கேன்கள் பொதுவாக நச்சுத்தன்மை உடையனவாகக் கொள்ளப்படுவது இல்லை. (உலக ஆராய்ச்சியிலிருந்து) ‘’Related to environmental or aquatic toxicology, (unsubstituted) alkanes are generally not of much toxicological concern’’ [ROY J. IRWIN, NATIONAL PARK SERVICE, 1997]

மாசுபட்ட நீரில் உள்ள மொத்த ஓயில் கிறீஸ் அளவைக் கண்டறிவதற்கே இதுவரையான காலப்பகுதியில் பல்வேறுபட்ட அமைப்புகளால் பல்வேறுபட்ட ஆய்வுகூடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவொரு சரியான அணுகுமுறையா என்று உற்றுநோக்க வேண்டியுள்ளது. பெற்றோலிய கழிவு எண்ணையால் பாதிக்கப்பட்ட நீர் மற்றும் நிலம் சம்மந்தமாக அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்த prof.Roy Irwin இன் கருத்துக்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

• எண்ணெய் அல்லது பெற்றோலிய ஐதரோகாபன்கள் நீரில் கலந்திருப்பின் அதனை ஆய்வு செய்வதற்குநீரில் இருக்கும் ஓயில் கிறீஸ் அளவை ஒரு அளவீடாகப் பயன்படுத்த முடியாது.

Oil and grease should not be used as a measure for most oil pollution studies or other studies where petroleum hydrocarbons are the main concern (Roy Irwin, National Park Service, 1997)

• மாசுபட்ட நீரின் நச்சுதன்மையை ஆராய்வதற்கு நீரில் இருக்கும் ஓயில் கிறீஸ் அளவை ஒரு பிரதான அளவீடாகக் கொள்வது ஒரு பொருத்தமற்ற முறையென்று பல நிபுணர்கள் கருதுகிறார்கள்

In general, oil and grease is an inappropriate measurewhen considering hazard, toxicity, or risk. There aresome clearly wrong ways to go about it, and using oil andgrease as a primary measure is one of ways many riskexperts would consider inappropriate. However, definingclearly right ways is more difficult. Petroleumcontamination is usually typified by complex mixtures ofPAHs, alkyl PAHs and BTEX compounds. Perhaps the most unambiguous thing that can be said about such complex mixtures is that they are often hazardous in many ways, including carcinogenicity and phototoxicity. (James Huckins, National Biological Survey/USGS, and Roy Irwin, National Park Service, 1996)

பெற்றோலிய எண்ணெய் கலப்பின் ஆபத்தான நச்சுத்தன்மையை ஆராய்வதற்குச் சிக்கலான மூலக்கூறுகளின் குழுமங்களான BTEX & PAHs ஐயும் அளவீடு செய்வதே முதற்கட்ட ஆய்விற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

அடுத்தகட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் ஏனைய பெற்றோலிய மூலங்கள் மாசுபடுத்தப்பட்ட நீரில் எந்த அளவுகளில் உள்ளன என்றும் அதன் ஆபத்தின் தன்மைபற்றியும் அறியப்படும். ஒரு குறுகிய காலத்தில் அனைத்து வகையான மூலங்களையும் மாசுக்களையும் பரிசோதனை செய்வது என்பது இயலாத காரியமே.

பெற்றோலியக்கழிவு எண்ணெய் கலப்பினால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் நீரினைப் பூரண ஆய்விற்கு உட்படுத்துவதற்காக உலக தரத்தில் அங்கிகரிக்கப்பட்ட ஆய்வு கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாசுபட்ட நீரினை சுத்திகரிக்கும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன. எந்தவொரு ஆய்வையும் பூரணமாக உடனடியாக செய்துவிட முடியாது என்பதை நாம் அறிவோம்.

பல்வேறு நாடுகளில் இருந்து சேவை அடிப்படையில் யாழ்ப்பாணத்துக்கு வருபவர்களும் உள்நாட்டில் விசேட நிபுணத்துவம் பெற்றவர்களும் தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுபட்டே வருகின்றனர்.

இவர்களின் ஒரே நோக்கம் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரின் பாதிப்பை அளவீடு செய்வதும் பொருத்தமான தீர்வை கொடுப்பதுமே. வடமாகாணசபை இவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

எம்மால் தேர்வு செய்யப்பட்ட முதல் மாகாண சபையே எமது மக்களுக்கு எதிராகச் செயலாற்றாது என்ற பூரண நம்பிக்கையோடு தனிநபர்களின் வதந்திகளுக்குச் செவிசாய்க்காது எமது நீர் வளத்தை நாமே சீர்செய்வோம் என்ற உறுதியோடு பயணிப்போம்.

 

water-testig-01.jpg

 

water-testig-02.jpg

 

water-testig-03.jpg

 

நடராசா ஸ்ரீபிரகாஸ்
சுற்றாடல் பொறியியலாளர்

http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw2H.html
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.