Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்கள்

தத்தர்

cfe88f73-f9df-478c-ab5d-d48206ae0e341.jp

ஈழத்தமிழரின் வாழ்வில் பல விடயங்களை அடிப்படையிலிருந்தும் ஆரம்பத்திலிருந்தும் தொடங்க வேண்டியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்களை அவசர அவசரமாக உடனடியாக தொடங்க வேண்டியுள்ளது.

உதிரியாகவும் எதிரும் புதிருமாகவும் நாம் செயற்படுவதன் மூலம் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு அக்கிளையை வெட்டுவதுபோல் எமக்கு நாமே தீங்கை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கருத்தாக்கமும் அதனை செயற்படுத்துவதற்கான நிறுவன அமைப்புக்களும் இருக்குமேயானால் இத்தகைய தவறுகள் தோன்ற இடம் இருக்காது.

எல்லாவற்றிற்கும் மேலாக எம்மிடம் சரியான கருத்து மண்டலம் இருக்கவேண்டும். அவ்வாறான கருத்து மண்டலத்தை உருவாக்குவது என்பது இலகுவான காரியமல்ல. ஏற்கனவே எம்மிடம் இருக்கும் கருத்து மண்டலம் எமது விடுதலைக்கு ஏற்றதாக அமையவில்லை என்பதை வரலாற்று நடைமுறைகள் மெய்ப்பித்து நிற்கின்றன.

விடுதலைக்கான திறப்புக் கோவையாக தமிழீழ தேசிய அறிவியல் பணியகம் (Tamil Eelam National Science Bureau) அமைக்கப்பட வேண்டும். இக்கோவையில் சிந்தனையாளர் குழாம் (Think Tank), தகவல் மையம் (Information Centre), இராஜதந்திர அணி (The Diplomatic Corps), மொழிபெயர்புப் பிரிவு (Translation Bureau), கலை-இலக்கியத்திற்கான தேசிய அறிவகம் (National Academy for Art and Literature) என்பன பிரதான அங்கங்களாக அமையவேண்டும்.

தமிழீழ தேசிய அறிவியல் பணியகம் (Tamil Eelam National Science Bureau):

இன்றைய பொருளாதாரத்தை Knowledge Economy என அழைப்பர். அதாவது அறிவார்ந்த பொருளாதாரம் என்பதன் பொருள்: உற்பத்தி, விநியோகம்-நுகர்வு என்பன அறிவியலை முதலீடாகக் கொண்ட பொருளாதார செயற்பாடாகும். மேலும் தொழிலாளர்கள், பணியாளர்கள், விளம்பரதாரர்கள் என்போர் அறிவியல் தரம் கொண்டவர்களாய் அமைய வேண்டும் என்பதுமாகும். இவ்வகையில் பொருளாதார நடத்தைக்கு பிரதானமாக அறிவியலை முதலீடாகக் கருதும் ஒரு முறைமையேயாகும் இது.

இது பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் அரசியலுக்கும் மொத்தத்தில் மனித நடத்தை அனைத்துக்குமே பொருந்தும். மனிதன் ஏனைய பிராணிகளிடமிருந்து வேறுபடுவது எதிர்அடைப் பெருவிரலால். இந்த எதிர்அடைப் பெருவிரல்தான் பண்ட ஆக்கத்திற்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் அடிப்படையாகும். ஆக்கத்தில் அறிவும், அறிவில் ஆக்கமும் என இரண்டும் ஒன்றில் மற்றொன்று தங்கி சுழன்று வளர்கிறது. இவ்வகையில் அறிவு ஆக்கத்தின் முழுநீள பங்காளியாகிவிடுகிறது. இன்றைய நிலையில் அறிவு ஆக்கத்தை முன் உணரும் சக்தி என்ற வகையில் ஆக்கத்திற்கான வழிகாட்டியாய் அறிவு முன்னோக்கிப் பாய்ந்துள்ளது. ஆதலால் அனைத்துவிதமான ஆக்கத்திற்கும் அறிவு முன்வடிவமாகிறது (Blue Print). இந்நிலையில் அறிவியல் வடிவமே அனைத்து விதமான ஆக்கத்திற்குமான முன்நிபந்தனையாகிறது.

அறிவு கைப்பெருவிரலில் (கட்டைவிரல்) ஆரம்பமானாலும் அந்த அறிவு தர்க்கபூர்வ வளர்ச்சியின் பிரகாரம் பெருவிரலுக்கு தலைமைதாங்கும் பாத்திரத்தை பெற்றுவிட்டது. ஆதலால் இன்று மனிதகுலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைமை பாத்திரத்தை அறிவு வகிக்கத் தொடங்கிவிட்டது. இந்தவகையில் ஆள்வோரும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளும்; அதற்கான பிரதான கருவியாக அறிவியலை ஆயுதமாக கொண்டு செயற்படுகின்றனர்.

விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்திருக்கும் நாம் இதற்கான அறிவியல் ஆயுதத்தை முதலில் கையில் ஏந்த வேண்டும். அறிவியல் ஆயுதத்தை கையில் ஏந்துவதற்கு அறிவியல் அமைப்புக்கள் அவசியம். அறிவியல் அமைப்புக்கள் இன்றி எமக்கு வேண்டிய அளவில் நாம் அறிவியல் ஆயுதங்களை பெறமுடியாது. அந்த வகையில் தமிழீழ விடுதலைக்கான ஓர் அறிவியல் திறப்புக் கோவையாக தமிழீழ தேசிய அறிவியல் பணியகம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.

இத்தகைய மையம் அறிவியல்பூர்வமாக அதாவது விஞ்ஞான பூர்வமாக ஒரு பிரச்சனையை எடுத்துரைக்க ஏதுவாக அமையும் போது அதற்கு தமிழ்மக்களின் பல்தரப்பினரும் பொதுவாக கட்டுப்பட்டு ஒரு பொதுமுடிவுக்கு வருவது இலகுவாக அமையும். ஆதலால் எம்மத்தியில் குழு வாதங்களையும், கருத்து பேதங்களையும் இலகுவாக களைய இது உதவக்கூடியதாக அமைவதுடன் ஒரு சரியான வழியிலும் செல்வதற்கான ஊன்றுகோலாய் அமையமுடியும்.

சிந்தனையாளர் குழாம் (Think Tank):

அரசியல், போராட்டம், கொள்கைவகுப்பு, பொருளாதாரம், வரலாறு, பாதுகாப்பு, சமூக பிரச்சனைகள், தேசிய நிர்மாணிப்பு, வெளிவிவகாரம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் போன்ற முக்கிய விடயங்களைப் பற்றி முற்றிலும் விஞ்ஞானபூர்மான அறிக்கைகளை தயாரிக்கும் குழாமாக இச்சிந்தனையாளர் குழாம் அமையவேண்டியதுடன் இதுசார்ந்த அறிவியல் விடயங்களில் பொறுப்பேற்கவும், பொறுப்புக்கூறவும் வல்ல சிந்தனையாளர் குழாமாக இது அமையவேண்டும்.

பொதுவாக இது கூட்டுப்பொறுப்புடன் செயற்படக்கூடியதாக இருப்பதுடன் அவசியமான இடங்களில் ஒருவரின் தனித்துவமான அறிக்கை சமர்ப்பிப்பிற்கும் இதில் இடம் இருக்கவேண்டும். கூட்டுப்பொறுப்பும் அதேவேளை ஒருவர் தற்துணிவுடன் தனித்துவமான ஒரு கருத்தை சொல்லவும் இதில் இடம் இருக்கவேண்டும். இறுதி அர்த்தத்தில் ஒருவரின் தனித்துவமான அறிக்கையானது செயல்வடிவம் பெறவேண்டிய இடத்து அது கூட்டுப்பொறுப்பான தீர்மானத்திற்கு கீழ்பட்டதாகவே அமையமுடியும். இச்சிந்தனையாளர் குழாம் கருத்தியியல் வடிவத்தில் தமிழீழ விடுதலைக்கான விஞ்ஞான பூர்வ வழிகாட்டி நெறியாக அமையமுடியும்.

தகவல் மையம் (Information centre):

இன்றைய உலகில் தகவல் ஆக்கத்திற்கும் ஆதிக்கத்திற்குமான காவு வாகனமாக அமைகிறது.

ஆதிக்க சக்திகளும் ஆளும் உயர்குழாமும் தமது வடிவில் இந்த உலகத்தை படைக்க விரும்புகிறது. அதற்கு தகவலே ஆயுதமாக கொள்கிறது. இவ்வாதிக்கச் சக்திகள் தமது விருப்பத்தை மக்களின் விருப்பமாக்குவதற்கு பெயரே தகவல் ஆதிக்கமாகும். அதாவது தமது சொந்தத் தேவைகளையும் விருப்பங்களையும் மக்களின் விருப்பங்களாக அவர்கள் வடிவமைத்து காட்டுவதுடன் மக்களை தமது நலன்களுக்கான பண்டங்களாக்கி விடுகிறார்கள். அதாவது தமது தேவைக்கேற்ப வாழும் பொருட்களாக, பயன்படுத்தக்தக்க பண்டங்களாக மக்களை அவர்கள் தமது தகவல் ஆதிக்கத்தின் மூலம் வடிவமைத்து விடுகிறார்கள். இது அரசியல், பொருளாதாரம், வாழ்நிலை, போராட்டம் என்ற அனைத்திற்கும் பொருந்தும். ஒடுக்கும் சிங்கள அரசும் ஆளும் குழாமும் ஒடுக்குமுறைக்கு பொருத்தமாக கருத்துலகத்தை உருவாக்கி அதற்கேற்ப தமது சிங்கள மக்களை வடிவமைத்து அதன்வழி தமிழ்மக்களை ஒடுக்குவதில் வெற்றிபெறுகிறார்கள். அதேவேளை சிங்கள அரசு தகவல் ஆதிக்கத்தால் உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் தமிழ்மக்களை ஒடுக்குவதற்கான அரசியல், இராணுவ, இராஜதந்திர மற்றும் கருத்துலக இயந்திர அமைப்பை உருவாக்கி அந்த இயந்திரத்தால் ஒடுக்குமுறையை வெற்றிகரமாக்குகிறார்கள். இந்தவகையில் தகவல் ஆதிக்கத்தை சரிவர புரிந்து அதனை எதிர்கொள்ளவல்ல ஒரு யுத்த கருவியாக ஈழத்தமிழர்கள் ஒரு தகவல் மையத்தை உருவாக்க வேண்டும்.

தகவல் பற்றிய ஒரு பகுப்பாய்வு புரிதலை இங்கு நாம் மேற்கொள்வது மிக அவசியம்.

FACTSஐ புள்ளிகள் அல்லது புள்ளிவிபரம் என்று கூறுவர். புள்ளிவிபரங்கள் அடிப்படையில் தூய்மையானவையும் தகவலுக்கு மிகவும் அடிப்படையானவையும் ஆகும். அதாவது பத்துக் குழந்தைகள் அந்த அறையில் இருக்கிறார்கள் என்பது ஒரு தூய்மையான புள்ளிவிபரமாகும். இந்த புள்ளிவிபரத்ததை ஒரு நோக்குநிலையில் திரட்டும் போது அது தரவுகளாகிவிடுகிறது (Data). அதாவது போசாக்கு குறைவான குழந்தைகள் என்ற தலைப்பில் இங்கு புள்ளிவிபரங்களைத் திரட்டினால் அதற்கு தரவுகள் என்று விளக்கம் ஏற்படுகின்றது. அதன்படி பத்துக் குழந்தைகளில் 4 குழந்தைகள் போசக்கு அற்றவர்கள் என்று கூறும்போது அது தரவுகளாகிவிடுகிறது. இத்தரவு முதல்நிலைத்தகவல் (Primary Information) எனப்படும்.

ஒரு புள்ளிவிவரமோ அல்லது ஒரு தரவோ அபிப்பிராயத்திற்கு (opinion) அல்லது விளக்கத்திற்கு interpretation, அல்லது ஒரு நோக்குநிலைக்கு (View) அல்லது மதம் மற்றும் அரசியல் சார்ந்த ஏதாவது ஒரு நம்பிக்கைக்கு (beliefs) அல்லது எதிர்பார்கைகளுக்கு (expectation) உட்படுத்தப்படும் போது அது தகவலாகிவிடுகிறது (Information).

இந்த வகையில் தகவல் என்பது பரந்த, ஆழமான ஒரு கருத்து ஆதிக்க பதமாகும். இதனை இவ்வகையில் ஆழமான பொருளில் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

தமிழீழ விடுதலைப் போராட்டமானது எதிர்நிலை கருத்தாக்கத் தகவலால் சுற்றி மூடிக் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய தவறான எதிர்நிலைத் தகவல் வலையமைப்பை தகர்த்தெறியாமல் நம் விடுதலை சாத்தியப்படாது. உண்மையில் பெரும் இழப்புபுக்களுக்கும் அழிப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கும் மக்கள் அரும்பெரும் தியாகங்களைச் செய்துள்ளபோதிலும் உலக அரங்கில் எதிர்கணியமாகவே பார்க்கப்படுகின்றனர். எம்பக்கம் நீதியும், நியாயமும், உண்மையும் உண்டு. ஆனால் அது சரியான கருத்து ஆக்கத்தையோ பொருத்தமான தகவல் வலையமைப்பையோ பெறவில்லை. திண்ணைப் பேச்சுக்களை விடுத்து சர்வதேச அரங்கிற்கு பொருத்தமான ஒரு தகவல் வலைப்பின்னலை அமைக்க நாம் தயாராக வேண்டும்.

இராஜதந்திர அணி (The Diplomatic Corps):

சுமாராக ஐந்து நூற்றாண்டுகளாக அரச பராம்பரியத்தை இழந்த மக்களாக உள்ளோம். ஆதலால் தொழில்சார் இராஜதந்திர மரபு எம்மிடம் இல்லை. அதேவேளை பொதுவாக எமது பாரம்பரிய அரசியல் தலைவர்கள்கூட முழுநேர அரசியல்வாதிகளாக அல்லாமல் பகுதிநேர அரசியல்வாதிகளாக காணப்பட்டமையால் இராஜதந்திர கலாச்சாரம் உருப்பெற முடியாது போய்விட்டது.

எமது பாரம்பரிய அரசியல் தலைவர்களின் செயற்பாட்டில் அரசியல் சார்ந்த நிர்வாக நிறுவன அமைப்புக்கள், அதற்கான அதிகாரிகள் அமைப்புக்கள் என்பன தோன்றவில்லை. இதனால் இராஜதந்திர அணி உருப்பெறுவது சாத்தியமற்றுப் போனது. அதேவேளை அறிவியல் அர்த்தத்தில் பன்னாட்டு உறவுகள், மற்றும் சர்வதேச அரசியல் சார்ந்த கற்கை நெறிகளில் பொதுவாக தமிழ்த்தரப்பு ஈடுபட்டது அரிது.

ஒருபுறம் சிங்கள அரசு சார்ந்து இத்துறைகளுக்கான நலன்கள் காணப்பட்டமையால் தமிழ்த்தரப்பு இதில் ஈடுபடுவது சாத்தியமற்று இருந்தது அல்லது இத்தகைய கற்கை நெறிகளில் ஈடுபடுவதினால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தமிழ்த்தரப்புக்கு கிடைக்கமுடியாது என்பதனால் ஆரம்பத்திலிருந்தே தமிழ்த்தரப்பால் இத்துறை பெருமளவு புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.

ஆனால் இரத்தம்தோய்ந்த, பெரும் தியாகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தின் பின் இத்துறையின் அவசியம் பெரிதும் உணரப்படுகிறது. இதற்கு துறைசார்ந்த நிபுணர்களை உணர்வுபூர்வமாக உருவாக்க வேண்டியுள்ளது. இதுவும் எமக்கு மிகவும் அவசரமான அவசியப்பணியாகும்.

மொழிபெயர்ப்பு பிரிவு (Translation Bureau):

ஈழத்தமிழர்கள் தமக்கான நீதி, நியாயம், உண்மைகளை வெளி உலகத்திற்கு சொல்வதற்கும் தமக்கு பொருத்தமான பிறமொழியில் உள்ள சிந்தனைகளை தமிழில் படிப்பதற்கும் ஒரு மொழிபெயர்ப்புப் பிரிவு அவசியம். இப்பிரிவானது தமிழில் இருந்து ஆங்கிலம், இந்தி, மலையாளம், பிரஞ்சு, டொச்சு ஆகிய மொழிகளில் முதலும் பின்பு சாத்தியமான அவசியமான மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்வதற்கான ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். கூடவே பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு சிறந்த சிந்தனைகளை மொழியாக்கம் செய்ய வேண்டும். இத்துடன் ஒரு வெளியீட்டுப் பிரிவும் இணைந்து செயற்படவேண்டும்.

கலை இலக்கியத்திற்கான தேசிய அறிவகம் (National Academy for Art and Literature)

இரண்டாம் உலகமகா யுத்த அழிவுகளும், அனுபவங்களும், துயரங்களும் இற்றைவரையான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் கலை இலக்கிய படைப்புக்களுக்கான கருவூலமாக காணப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவும் இனப்படுகொலையும் ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இலங்கை இந்தியா மற்றும் மனித உண்மை தழுவிய வரப்போகும் பல பத்தாண்டுகளுக்கான கலை இலக்கிய படைப்புக்களுக்கான கருவூலமாக அமையவல்லது.

ஈழத்தமிழர்கள் உலக நாகரிகத்திற்கும் மனிதநேயத்திற்கும், விடுதலை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்யவல்ல பொக்கிஷமான அனுபவத்தை இரத்தமும் தசையுமாக கொண்டுள்ளனர். இதனை கலை, இலக்கிய படைப்புக்களாக்கி உலகளாவிய மனித நாகரீகத்திற்கு பங்களிப்புச் செய்யவேண்டிய, செய்யக்கூடிய நிலையிலும் பொறுப்பிலும் ஈழத்தமிழர் உள்ளனர். அதற்கான அறிவார்ந்த அமைப்பாக இதனை கட்டியெழுப்ப வேண்டும்.

மேற்கூறிய அனைத்தின் பொருட்டும் உணர்வுபூர்வமாகவும், விசுவாசமாகவும், புத்திபூர்வமாகவும் நாம் செயற்படத்தவறினால் இதற்கான மேற்கூறப்பட்ட அமைப்புக்களை உருவாக்க தவறினால் இக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை எதிர்காலம் எள்ளி நகையாடும்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=cfe88f73-f9df-478c-ab5d-d48206ae0e34

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக பேசப்படுபவை தான்

பேசப்படுபவையாக மட்டுமே உள்ளன...

செயல்.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.