Jump to content

காட்சிக்கேது எல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காட்சிக்கேது எல்லை

 

என்னிலும் மேலொரு சக்தி
இருப்ப துறுதி யென்றாகிடில் - அஃதை
பின்னமிலாதுடன் பற்றி - அது
பேயதென்றாலும் பிரமமென்றாலும்
பொன்னடி போற்றிடுவேன் யான் - எந்தப்
போழ்திலும் அஃதின் நினைவகலாதே
சின்னத்தனங்கள் விடுத்தே - என்றும்
சிந்தையினை அஃதின் மீதினில் வைத்தே

 

வாழுவன் யான் என நெஞ்சில் - ஒரு
வன்மம் எனக்கு இருந்தது கண்டீர்
நாழும் பொழுதும் இதுவே - நான்
நாடிய தேடிய உண்மை அதுவே
பாழும் மனதினில் என்றும்
பணம், புகழ், நாரியர் ஆசையை வென்றும்
ஆழும் பிரமத்தியல்பை - நன்கு
ஆழவுணர்ந்து அதில் மனம் போக்கின்

 

முத்தியெனப் பல பேர்கள்
முழக்கமிட்டே பல சொல்லுவார்கள்
கற்றிடலாமதை இன்றே - உடன்
கண்டிடலாமக் கடவுளை நன்றே
என்று இருந்திடுங்காலை
இவன் ஒருவன் வந்து வாரினன் காலை
நன்றது தீயது காணேன்-அந்த
ஞானத்தின் மேலெது உண்டென்றும் காணேன்

 

உன்னிலும் மேலொரு சக்தி - இவ்
உலகினிலும் அப் பிரபஞ்சம் மீதில்
கண்ணில் தெரிகின்றவைக்கும் - அந்தக்
காடசிக்கப்பாலும் கடலடி மீதும்
எண்ணத்தின் எல்லைக்கும் மேலாய்
இருப்பவைக்கும் பல் இயல்கள் உரைக்கும்
திண்ண விதிகளி னிலும்-எந்தத்
தீ, புனல், மண், வளி, ஆகாயம் யாவும்

 

பண்ணிடும் விந்தைகள் மீதும்
பர ஞானியரின் உயர் சிந்தனை மீதும்
காணவும் கூடுவதில்லை - சுய
காட்சிக்கப்பாலொரு காட்சியுமில்லை
வீணில் வெளியினில் தேடி - இந்த
வேசத்தினோடு உலகினில் ஆடி
ஊணும் உறக்கமும் இன்றி - அந்த
உண்மையை விட்டுத் தொலைவினிற் சென்று

 

உன்னைத் தொலைத்திட வேண்டா - உயிர்
தன்னைத் தொலைத்துத் தவிக்கவும் வேண்டா
என்று உரைத்தனன் கண்டீர் - அவன்
ஏற்றிய தீபத்தை வெளியினில் விண்டேன்
ஒன்றுளதுண்மை அஃதெங்கள்
உயிரினுள் ஓடும் வெளியினில் எங்கும்
கண்டிடல் என்பதொன்றில்லை - அந்தக்
காட்சிக்கு நாம் எங்கு காண்பதோர் எல்லை

 

-By Karu-

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.