Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிவரிசை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனிவரிசை

ஜெயமோகன்

IMG-20150511-WA0001.jpg

சென்ற மே 7 ஆம் தேதி அமெரிக்க விசா அலுவலகத்தில் இருந்த இரண்டுமணிநேரம் அற்புதமானது. அனேகமாக படித்த உயர்குடியினர், உயர்நடுத்தரவர்க்கத்தினர். கூடுமானவரை ஆங்கிலத்திலேயே தங்களுக்குள் பேசிக்கொள்பவர்கள். உயர்தர உடையணிந்தவர்கள். மென்மையான பாவனைகள் கொண்டவர்கள். பிற அனைவரையும் உடை, தோற்றம், நிறம் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ளும் விழிகள் கொண்டவர்கள்.

ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் எந்த வரிசையைக் கண்டாலும் இயல்பாகவே அதில் முண்டியடித்து ஊடுருவவே முயன்றனர். சிலர் நேராகச் சென்று வரிசையின் முன்னால் தனிவரிசையாக நின்றனர். பல இடங்களில் எழுதிவைக்கப்பட்டிருந்தும்கூட , கண்ணும்முன் வரிசை தெரிந்தாலும் கூட வரிசையில் சென்று இயல்பாக நின்றவர்கள் பாதிக்கும் கீழேதான்

சீருடை அணிந்த சிப்பந்திகள் கறாராக, சற்று அவமதிப்பு கலந்து, அறிவுறுத்தி வரிசையை தொடர்ந்து சீரமைத்துக்கொண்டே இருந்தனர். ’வரிசையை மீறாதீர்கள், சுவர் ஓரமாக நில்லுங்கள், வரிசையில் நில்லுங்கள்’ என்ற குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவர்கள் கூவிக்கொண்டே இருக்க லோஹிப் ஜீன்ஸும் சட்டையும் அணிந்த சலவைக்கல் நிறமான பெண்மணியும் கணவரும் வந்து வரிசையை பார்த்துவிட்டு நேராக முன்னால் சென்று நின்றுகொண்டனர். அவர்களிடம் வரிசை அறிவுறுத்தப்பட்டபோது கண்களில் ஒரு மின்னலாகச் சினம். ‘நாங்கள் அமெரிக்காவில்…’ என்று ஏதோ சொல்லவந்தனர்.

சிப்பந்தி அவர்களைப்போன்றவர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பவர். ‘வரிசைக்குச் செல்லுங்கள்’ என்று கூர்மையாகச் சொல்லப்பட்டதும் அவமதிக்கப்பட்டவர்களாக உணர்ந்து முகம் சிவக்க வந்து என்னருகே நின்றுகொண்டனர். இத்தனைக்கும் மிகச்சிறிய வரிசை. பன்னிரண்டே பேர்தான். எங்கும் பதினைந்து நிமிடம்கூட நிற்கவேண்டியதில்லை. முன்னரே இணையத்தில் நேரம் வகுக்கப்பட்டிருந்தது.

வரிசையில் நிற்க என்ன பிரச்சினை? அதற்கு இந்தியாவிற்கே உரிய சமூக உளவியல்பின்னணி உண்டு என எண்ணிக்கொண்டேன்.[ வரிசையில் நின்று தத்துவார்த்தமாக யோசிப்பது காத்திருப்பதற்கு நல்ல வழியும்கூட] முண்டியடித்தே அனைத்தையும் அடைந்துபழகிய நடுத்தவர்க்க இளைஞர்களைப்புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்த உயர்குடிகள்?

இந்தியாவில் சிறப்புக்கவனம் பெறுவது, நெறிமுறைகளை மீறுவது, முந்திச்செல்வது ஆகியவையே அதிகாரம், செல்வம், உயர்குடி, செல்வாக்கு ஆகியவற்றின் அடையாளம். ‘திருப்பதிக்குப் போனேன். அங்க நம்மாள் ஒருத்தன் இருக்கான். வாங்கய்யான்னு கூப்பிட்டு அப்டியே கொண்டுட்டுப்போய் சாமி முன்னாடி நிப்பாட்டிருவான்’ என்று பேசுவதே பெருமை. ‘ஒரு பெர்த்சர்டிபிகெட் வேணும். மேயரைக்கூப்பிட்டேன், குடுத்தனுப்பிச்சார்’ என்று சொன்னால்தான் மதிப்பு. வரிசையில் நிற்பதென்பது சாமானியராக, பிறருக்கு நிகரானவர்களாக உணரச்செய்கிறது. அவர்களின் அந்த வலியைப்புரிந்துகொள்ளமுடிகிறது.

ஆனால் இவர்கள் அமெரிக்காவில் என்ன செய்வார்கள்? அமெரிக்கா அவர்கள் வழிபடும் எஜமானர்களின் நாடு. வரிசையில் நின்றாலும் வெள்ளைக்காரன் வந்தால் இனிய புன்னகையுடன் வழிவிடத் தயாராக இருப்பார்கள். அந்தத் தம்பதியினர் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருந்தனர். ஏஸி குளிராக இருந்த அறையில் அந்த அம்மாள் விசிறிக்கொண்டாள். அங்கே பிறரே இல்லாததுபோல பாவனை செய்தனர். அந்த அம்மையார் நெற்றியைப் பிடித்துக்கொண்டு தலைவலிக்கிறது என்றார். அவர் அங்கிருக்கும் வியர்வை நாற்றத்தால்தான் என்றார்.

விசா அதிகாரி ஒரு வெள்ளைக்கார மாது. அனைத்து இடங்களிலும் விசா வழங்குவதற்கு வெள்ளைக்காரர்கள் என்பதே எனக்கு நிறைவை அளித்தது. என் இதுவரையிலான அனுபவத்தில் அவர்களின் இயல்பான மேட்டிமைநோக்குக்கு அப்பால் அடிப்படையில் நேர்மையும் நல்லெண்ணமும் கொண்டவர்களாகவே அவர்கள் இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. அப்படி இல்லை என்றால் விதிவிலக்கு. இந்திய அலுவலர்கள் நேர்மையும் நல்லெண்ணமும் கொண்டிருந்தால் அவர்கள் விதிவிலக்கு- கோயில்கட்டும் அளவுக்கு.

2000த்தில் கனடா விசாவுக்காக டெல்லி சென்றிருந்தேன். அங்கிருந்த பஞ்சாபிப்பெண்மணிக்கு தென்னிந்தியர்களையே பிடிக்காதென்று பார்வையிலேயே தோன்றியது. அந்த அம்மாள் ‘தென்னிந்தியர்கள் நிறையப்பேர் வெளிநாட்டுக்குச் செல்கிறீர்களே ஏன்?” என்றாள். ‘தெரியாது” என்றேன். ஆனால் வரிசையில் பெரும்பாலானவர்கள் சர்தார்ஜிகள் என்பதே நான் கண்டது.

நான் எழுத்தாளன் என்பதையே அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் எழுத்து என்பதை அவள் முன்பு கேள்விப்பட்டதில்லை . ‘என்ன எழுதுகிறாய்?” என்றாள். கதை, நாவல் என விளக்கினேன். ‘உன் அலுவலகம் எங்குள்ளது?” என்றாள். ‘எழுத்துக்கு என அலுவலகம் இல்லை’ என்றேன். ‘நீ எழுதுவதை யார் மேற்பார்வை இடுகிறார்கள்?” ‘அதை எப்படி விற்பாய்?’ ‘உன் வாடிக்கையாளர்கள் யார்?’. நான் விளக்க விளக்க ஐயம் பெருகிக்கொண்டே சென்றது. ‘அபப்டியென்றால் நீ எழுத்தாளன் என்பதற்கு நீ சொல்வதுதான் சான்று இல்லையா?” என்றாள். விசா கிடைக்கவில்லை

அந்த தோரணை என்னை கொந்தளிக்கச் செய்தது. நான் தோல்வி என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பவன். டெல்லியிலேயே தங்கி என் நண்பர் சந்தானம் உதவியுடன் அத்தனை வாசகர்களையும் அழைத்துப்பேசி அத்தனை சரடுகளையும் இழுத்து மறுநாளே மீண்டும் விண்ணப்பித்து மீண்டும் அந்த அம்மாள் முன்னால் சென்று அமர்ந்தேன். என் கண்களைப்பார்க்காமல் ‘அவரை எப்படித் தெரியும்?” என்றாள். ’நான் உன்னுடைய எந்தக்கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன்’ என்றேன். விசா கொடுத்துவிட்டாள்.

சென்றமுறை கனடா சென்றபோது வரும்வழியில் ஐரோப்பா செல்ல விசாவுக்காக ஜெர்மன் கான்சுலேட்டில் விண்ணப்பித்திருந்தேன். அங்கிருந்த இளம் மாமிக்கு மாமாக்கள் அல்லாதவர்கள் வெளிநாடு செல்வது தேவையற்ற வேலை என்பது எண்ணம். அலட்சியமாக உதட்டைச் சுழித்து ‘நீங்கள் எதற்காகப் போகிறீர்கள்?” என்ற வழக்கமான கேள்வி. நான் என்னை இலக்கியவாதி என்றும், என் நண்பர்கள் ஏற்பாடுசெய்யும் இலக்கியக்கூட்டத்திற்குச் செல்கிறேன் என்றும் சொன்னேன். ஐந்துநாட்கள் ஓட்டலில் தங்கியபின் பத்துநாட்கள் நண்பர்களுடன் தங்குகிறேன் என்றேன். உண்மையில் பாரீஸ் செல்ல திட்டமிட்டிருந்தொம்

’இலக்கியம் என்றால்?” என்று கேட்டாள். கதை என்று விளக்கினேன். ’சாதியைப்பற்றியா?” என்றாள். மீண்டும் விளக்கினேன். ‘நீங்கள் எழுத்தாளர் என்பதற்கு என்ன ஆதாரம்?’ என்றாள். புத்தகங்களைக் காட்டினேன். கையில் வாங்கவில்லை. தமிழில் ‘இதெல்லாம் யார் வாசிக்கறா?” என்றாள். ’நெறையபேர் வாசிக்கறாங்க’ என்றேன்

என் கண்களையே அவள் சந்திக்கவில்லை. முத்திரை அடித்து பாஸ்போர்ட்டை அப்பால் வைத்தாள். ‘ஓக்கே’ என்று வேறெங்கோ பார்த்தபடி சொன்னாள். நான் ’என்ன செய்யவேண்டும்?” என்றேன். ‘Go’ என்றாள். விசா கிடைத்தது– நான்கு நாட்களுக்கு. நான் ஐரோப்பியப்பயணத்தை ரத்துசெய்தேன். டிக்கெட் ரத்துசெய்து மீண்டும் போடவேண்டியிருந்தது. முப்பதாயிரம் ரூபாய் மேலும் செலவாகியது. விசாவுக்கான கட்டணமும் போயிற்று. ஜெர்மன் கான்சலுக்குப் புகார் செய்தேன். வழக்கம்போல பதிலே வரவில்லை.

விசா அளிக்க இந்தியர்களை அமர்த்தினால் மிக எளிதாக ஓரு கண்ணுக்குத்தெரியாத அமைப்பு உருவாகி வரும். எல்லாமே எளிதாக ஆகும். இன்ன விசாவுக்கு இவ்வளவு, அவசரமாக எடுக்க இவ்வளவு, வரிசையில் நிற்காமலிருக்க இவ்வளவு என்று வகுக்கப்பட்டு அதற்கான அடிப்படை தரகர்கள், மேல்நிலை தரகர்கள் ,பங்கீட்டுமுறைகள் உருவாகிவிடும். என்னருகே நின்றிருக்கும் இவர்கள் நேராக விமானநிலையம் போய் இறங்குவார்கள். அங்கே விசாவுடன் ஒருவன் காத்திருப்பான். பல்லிளித்து வணங்கி விசாவை அவர்களிடம் கொடுப்பான். அவன் முகத்தைக்கூட பார்க்காமல் வாங்கிக்கொண்டு உள்ளே செல்வார்கள்

அமெரிக்கத் தூதரகத்தில் விசா அம்மையார் என்னிடம் புன்னகையுடன் ‘ஹல்லோ’ என்றார் ‘நீங்கள் எழுத்தாளர் அல்லவா? உங்களை எதற்கு அழைக்கிறார்கள்?” என்றார். ‘இலக்கியச் சொற்பொழிவுக்காக’ என்றேன். ’இவர்கள்தான் உங்கள் மனைவியா? அழகாக இருக்கிறார்கள்” என்றாள். ‘என் மனைவியை எங்கும் கூட்டிச்செல்வதுண்டு. இது நான் அவளுக்கு அளிக்கும் பரிசு’ புன்னகையுடன் ‘கூட்டிச்செல்லாவிட்டால் என்ன செய்வார்கள்?” என்றார். ‘கோபித்துக்கொள்ளமாட்டாள்’ என்றேன்.

‘மகள் என்ன படிக்கிறாள்?’ என்றார். ‘ஆங்கில இலக்கியம்’. ‘அற்புதம்…ஆனால் இலக்கியம் கஷ்டமான பாடம்’ ‘ஆம், ஆர்வமிருந்தால் எளிதுதான்’ ‘கண்டிப்பாக’ என்றார். கத்தை கத்தையாக ஆவணங்கள் கைவசம் இருந்தன. என்னைப்பற்றியவை, என்னை அழைப்பவர்களைப்பற்றியவை. எதையும் கேட்கவில்லை. அழைப்பிதழைக்கூட. ‘உங்களுக்கு விசா அளிக்கப்பட்டுவிட்டது’ என்றபின் ‘அமெரிக்காவில் நல்ல அனுபவங்கள் வாய்க்கட்டும். அமெரிக்காவுக்கு நல்வரவு. அது எழுத்தாளர்களின் நாடு. வாழ்த்துக்கள்’ என்று புன்னகைசெய்தார். பத்துவருட பல்நுழைவு விசா கிடைத்துவிட்டது

இனியபுன்னகை. 2000 ல் எனக்கு அமெரிக்க விசா அப்படித்தான் கிடைத்தது. என் நண்பர் தீனதயாளன் நான் கான்சல் ஜெனரலைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். ஒரு சிறிய உணவகத்தில் இலக்கியம் பற்றிப்பேசிக்கொண்டோம். எனக்குப் பிரியமான ஐசக் பாஷவிஸ் சிங்கரைப்பற்றிப் பேசியதும் அவர் பரவசமடைந்தார். பில்லை அவரே கொடுத்தார். நேராக அவருடன் அவர் அறைக்குப்போனேன். பத்து நிமிடத்தில் விசாவை அவரே அடித்துக்கொண்டுவந்து கையில் தந்துவிட்டு எஞ்சிய இலக்கியவிவாதத்தில் தீவிரமாக இறங்கினார். சிங்கரின் கவித்துவம் அவருக்குப்பிடிக்கும், ஒழுக்கவியல் பிடிக்காது என்றார்.

அன்று அவர் சொன்னார் ‘அமெரிக்கா என்று எதையும் வகுத்துக்கொள்ளவேண்டாம். அது ஒரு பன்மைச்சமூகம். எல்லாவகையான பண்பாடுகளும் உள்ள நாடு. எழுத்தாளர்களின் நாடு’ நான் கேட்டிருந்தது மூன்றுமாத விசா. பத்துவருட பலநுழைவு விசா அளித்திருந்தார் ‘முடிந்தவரை அமெரிக்கா செல்லுங்கள்…. நீங்கள் அந்நிலத்தை விரும்புவீர்கள்’ வேடிக்கையாகக் கண்களைச் சிமிட்டி ‘நீங்கள் குடியேறுவதுகூட சிறப்பானதே” ஆனால் அம்முறை என்னால் நுழைய முடியவில்லை. இரட்டைக்கோபுரத்தாக்குதல். 2009 ல்தான் சென்றேன்.ஒரே ஒருமுறை.

ஜெயகாந்தனுக்கு அந்த கான்சல் ஜெனரல் வீட்டுக்குத் தேடிச்சென்று விசா கொடுத்தார் என்றார்கள்.சமீபத்தில் நல்லக்கண்ணுவுக்கும் அப்படி வீடுதேடிச்சென்று விசா கொடுக்கப்பட்டது என அறிந்தேன். திரும்பும்போது அதே குரல் ‘வரிசையில் நில்லுங்கள்… வரிசையில்’ அமெரிக்காவுக்கும் ஒரு தனிவரிசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் அறிந்த தனிவரிசை அல்ல.

(படம் இணையத்தில் இருந்து எடுத்து அமரிக்க நண்பரால் அனுப்பப்பட்டது,பொருத்தம் கருதி இணைக்கப்படுகிறது :)) – இணையதள நிர்வாகி )

http://www.jeyamohan.in/75076#.VVbqqOl0yM8

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா.....

" 2000 ல் எனக்கு அமெரிக்க விசா அப்படித்தான் கிடைத்தது. என் நண்பர் தீனதயாளன் நான் கான்சல் ஜெனரலைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். ஒரு சிறிய உணவகத்தில் இலக்கியம் பற்றிப்பேசிக்கொண்டோம். எனக்குப் பிரியமான ஐசக் பாஷவிஸ் சிங்கரைப்பற்றிப் பேசியதும் அவர் பரவசமடைந்தார். பில்லை அவரே கொடுத்தார். நேராக அவருடன் அவர் அறைக்குப்போனேன். பத்து நிமிடத்தில் விசாவை அவரே அடித்துக்கொண்டுவந்து கையில் தந்துவிட்டு எஞ்சிய இலக்கியவிவாதத்தில் தீவிரமாக இறங்கினார். சிங்கரின் கவித்துவம் அவருக்குப்பிடிக்கும், ஒழுக்கவியல் பிடிக்காது என்றார்".

"இவரும் திருப்பதிக்குப் போனேன், நம்மாள் ஒருத்தன் இருக்கான் பெருமாளின் பிட்டத்திலே கொண்டே நிப்பாட்டி விட்டான் "

எனும் ரேஞ்ச் அலப்பறையைத் தானே செய்கிறார்.

Once an Indian, always an Indian. ரத்ததில் ஊறியது.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக எழுதியுள்ளார். அத்தனையும் உண்மை..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.