Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல நிறுவனம்  ஒன்று தயாரிக்கும் நூடுல்ஸில் குறிப்பிட்ட வேதிப் பொருள் அதிக அளவில் இருந்ததுடன் அதில் காரீயமும் (lead) கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்ப்ட சில மாநிலங்களில் அதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது   மேலும் பல மாநிலங்களில் அந்த நூடுல்ஸ் சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பற்றி செய்தி வெளியிட்ட சில தமிழ் டிவி சேனல்கள் காரீயம் வேறு, ஈயம் வேறு என்பது தெரியாமல் நூடுல்ஸ் சாம்பிள்களில் ஈயம் இருந்ததாகத் தெரிவித்தன. ஒரு பத்திரிகை  lead  என்பதை அலுமினியம் என்று மொழி பெயர்த்தது.

noodles.jpg  நூடுல்ஸ். படம்:விக்கிபிடியா

இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ உடலில் ஈயம் கலந்தால் ஆபத்து என்பதாக செய்தி வெளியிட்டது. ஈயத்தையும் காரீயத்தையும் குழப்பிக் கொண்டதால் ஏற்பட்ட வினை இது. Lead  என்றால் ஈயம் என்று தவறாகப் புரிந்து கொண்டதே அதற்குக் காரணம்.

உண்மையில் ஈயம் வேறு, காரீயம் (Lead) வேறு, அலுமினியம் வேறு. ஈயம் என்பது  Tin  ஆகும். ஈயம் உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியது அல்ல.  Lead  அதாவது காரீயம் கெடுதல் செய்வதாகும்.

காரீயம் நுண்ணிய துகள் வடிவில் காற்றில் கலந்து சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்றாலும் சரி, தண்ணீர் அல்லது உணவில் கலந்து உடலுக்குள் சென்றாலும் சரி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்

காரீயம்   குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். காரீயம் காரணமாக மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.

பொதுவில் காரீயம் சிறு நீரகம், கல்லீரல் போன்று உடலில் பல உறுப்புகளையும் பாதிக்கக்கூடியதாகும். எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி பாதிக்கப்படும். சில தீங்கான பொருட்கள் உடலுக்குள் சென்றால் காலப் போக்கில் வெளியே கழித்துக் கட்டப்படும். ஆனால் காரீயம் உடலுக்குள் செல்லச் செல்ல மேலும் மேலும் சேர்ந்து கொண்டே போகும்.

  இப்போது ஈயத்துக்கு வருவோம். எவர்சில்வர் எனப்படும்  Stainless Steel  வந்ததற்கு முன்னர் வீடுகளில் சமையலுக்கு பித்தளைப் பாத்திரங்களே பயன்படுத்தப்பட்டன. பித்தளைப் பாத்திரங்களில் உணவை வைத்தால் கெட்டு விடும். ஆகவே பித்தளைப் பாத்திரங்களின் உட்புறத்தில் ஈயம் பூசிப் பயன்படுத்தினர். அந்த நாட்களில் ஈயம் பூசுவதற்கு என்றே தொழிலாளர்கள் இருந்தனர். "ஈயம் பூசலையா" என்று கூவியபடி தெருவில் செல்வர். முற்றிலும் ஈயத்தால் ஆன பாத்திரங்களும் (ஈயச் சொம்பு) இருந்தன.

இதல்லாமல் ஈயம் பூசப்பட்ட தகர டப்பாக்களில் பல பொருட்களும் அடைக்கப்பட்டு விற்கப்பட்டன. ஈயம் உடலுக்கு கெடுதல் செய்கிற உலோகமே அல்ல.

ஆனால் காரீய உலோகம் நிச்சயம் கெடுதல் செய்யக்கூடியது. சிறிதளவு காரீயம் சேர்ந்தால் பரவாயில்லை என்று கூடச் சொல்ல முடியாது. எந்த உணவுப் பொருளிலும் மிகச் சிறு அளவுக்குக் கூட காரீயம் இருத்தல் ஆகாது.

ஒரு காலத்தில் வாஷ் பேசின் குழாய், தண்ணீர் குழாய் போன்றவற்றை செய்ய காரீயம் பயன்படுத்தப்பட்டது.  விளையாட்டுப் பொருட்கள் காரீயம் கலந்த பெயிண்ட் பூசப்பட்டவையாக இருந்தன. டார்ச் செல்கள் காரீயத்தில் செய்யப்பட்டவையாக இருந்தன.

இதல்லாமல் பெட்ரோலில் குறிப்பிட்ட காரணத்துக்காக சிறிதளவு காரீயம் சேர்க்கப்பட்டது. காரீயம்  தீங்கானது என்பது தெரிய வந்ததும் பெட்ரோலில் காரீயத்தைக் கலக்கக்கூடாது என்று மேலை நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.

அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. உலகில் இன்னமும் சில நாடுகளில் காரீயம் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.
 

ஒரு கால கட்டத்தில் காரீயம் எந்த அளவுக்கு உலகைப் பாதித்தது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம். அமெரிக்க விஞ்ஞானி கிளேர் பேட்டர்சன் பூமியின் வயதைக் கணக்கிட மிக வயதான பாறையைத் தேடினார். ஆனால்  அவர் உலகில் எந்தப் பாறையைத் தேர்ந்தெடுத்தாலும் அது காரீயத் துணுக்குகள் படிந்ததாக இருந்தது. உலகில் கார்களிலிருந்து வெளிப்படும் புகையில் அடங்கிய காரீயத் துணுக்குகள் பூமியின் பாறைகளில் படிந்திருந்ததே காரணம். கடைசியில் அவர் விண்ணிலிருந்து விழுந்த விண்கல்லை வைத்துத் தான் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்று 1956 ஆம் ஆண்டு வாக்கில் கண்டுபிடித்தார்.
 
அதே பேட்டர்சன் பின்னர் பெட்ரோலில் காரீயத்தைத் கலப்பதைத் தடுக்க வேண்டும் என சர்வ வல்லமை படைத்த பன்னாட்டு பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனிகளுக்கு எதிராக பெரிய இயக்கத்தைத் தொடங்கி அதில் வெற்றி பெற்றார்.

பெயிண்டுகளில்   குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இருக்கக்கூடாது என்று அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தடை உள்ளது. இது கண்டிப்புடன் அமலாக்கப்படுகிறது. இந்தியாவில் அப்படி இல்லை.

பெயிண்டுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வெறும் அறிவுரை மட்டும் கூறப்பட்டுள்ளது. நடைமுறையில் அறிவுரை கூறப்பட்ட அளவை விட பல மடங்கு காரீயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஜார்ஜ் பவுண்டேஷன் என்னும் அமைப்பு காரீய ஆபத்து பற்றிக் கரடியாகக் கத்தி வருகிறது. 1995 ஆண்டிலிருந்து செயல்படும் அந்த அமைப்பு உடல் நலத்துக்கான செயிண்ட் ஜான்ஸ் அகாடமியுடன் சேர்த்து பல நகரங்களிலும் குழந்தைகளிடம் ரத்த பரிசோதனை நடத்தி வந்துள்ளது.

 பல நகரங்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இப்படி நடத்தப்பட்ட ரத்த சோதனைகளில் அவர்களில் 51 சதவிகிதத்தினரிடம் ரத்தத்தில் காரீய அளவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, குறிப்பிட்ட பிராண்ட் நூடுல்ஸ் மீது தடை விதிப்பதால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. இந்த நூடுல்ஸ் பற்றிய டிவி விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாலும் பிரச்சினை தீரப் போவதில்லை.

 சினிமாத் துறை, விளையாட்டுத் துறை பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்கள் பற்றி ஒரு வார்த்தை. இவ்வித விளம்பரங்கள் பற்றி ஒரு தமிழ் டிவி சேனலில் விவாதம் நடந்தது. மாடல் அழகி ஒருவர் கலந்து கொண்டார். பிரபலங்கள் இவ்விதம் விளம்பரங்களில் நடிப்பது அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து உத்தரவாதம் அளிப்பது போல் ஆகாதா என்ற கேள்வி எழுந்தது. அந்த மாடல் அழகி உடனே பத்திரிகைகளில் வருகின்ற பல விளம்பரங்களைக் குறிப்பிட்டு, பத்திரிகைகள் அந்த விளம்பரங்களில் இடம் பெறுகின்ற பொருட்களுக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூற முடியுமா என்று பதிலுக்கு கேட்டார். நியாயமான கேள்வி.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வித விள்ம்பரங்களில் தோன்றுகின்ற பிரபலங்கள் விளம்பரத்தில் தோன்றித்தான்  சம்பாதித்தாக வேண்டும் என்ற அவசியமில்லாத கோடீஸ்வரர்கள்.

மறுபடி நூடுஸ்ஸுக்கு வருவோம்.  நூடுல்ஸ் மாதிரி எவ்வளவோ உணவு சமாச்சாரங்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஒரு மளிகைக் கடை வாசலில் தோரணங்கள் போல பாக்கெட்டுகள் தொங்கும். இவை அனைத்தும் கொரிப்பதற்கான உணவு வகைகள். இவை எல்லாம் எவ்விதக் கலப்படமும் இல்லாத தரமான தயாரிப்புகளா?

நூடுல்ஸ் போன்றவற்றைப் பலகாரமாக்கக் குறைந்தபட்சம் வெந்நீர் தயாரிக்க அடுப்பை மூட்டியாக வேண்டும். அப்படியின்றி கடையில் வாங்கியவுடன் சாப்பிடக்கூடிய கேக், ஐஸ் கிரீம் போன்று  பல வகைகள் உள்ளன. இவை அல்லாமல் ஓட்டல் பலகாரங்கள். இவற்றின் தரம் என்ன?

இவை எதுவும் வேண்டாம் என வீட்டிலேயே பலகாரம் பண்ணலாம் தான். அதற்கென மளிகைக் கடையில் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி என பல பொருட்களை வாங்க வேண்டும். இவற்றின் தரம் என்ன? இவற்றில் கலப்படமே இல்லையா?

இந்தியாவில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதற்கான பொருட்களைத் தயாரித்து அளிப்பதே பெரிய தொழிலாக மாறியுள்ளது.

ஆனால், இவற்றையெல்லாம் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கடுமையான சட்டங்கள் இல்லை .மத்திய அரசிலிருந்து முனிசிபாலிடி வரை ஒவ்வொரு அதிகார அமைப்பும் வெவ்வேறான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில்  நாடு முழுவதுக்குமாகப் பொருந்துகிற தகுந்த ஏற்பாடு இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு மாநிலமும் நூடுல்ஸை சோதிக்க தனித்தனியே நடவடிக்கை எடுக்கிறது. 

மொத்தத்தில் பிரச்சினை நூடுல்ஸோடு மட்டும் நிற்பதல்ல. பிரச்சினை நூடுல்ஸை விட அதிக சிக்கல் கொண்டது.

http://www.ariviyal.in/2015/06/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.