Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏன் தெரியுமா?

Featured Replies

நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?

ஓவியம்: வெங்கி

 

ஜூன் மாதம் வந்துவிட்டாலும் வெயிலின் தாக்கம் மட்டும் இன்னும் தணியவில்லை. கோடையில் ஏற்படும் ஆரோக்கியத் தொல்லைகளுள் சிறுநீர்க் கடுப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

என்ன காரணம்?

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது; கடுக்கிறது.

கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும்.

சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

சிறுநீர்ப் பாதையில் கல்

சிறுநீரகத்தில் தொடங்கிச் சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.

கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும், வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறு கிற புறவழித் துவாரம்வரை பரவும்.

சிறுநீர்ப் பை பிரச்சினைகள்

சிறுநீர்ப் பையில் தொற்று ஏற்பட்டு வீக்கம் உண்டாகும்போது, நீர்க்கடுப்பு ஏற்படும். இங்கு கல், காசநோய், புற்றுநோய் என எது தாக்கினாலும் நீர்க்கடுப்புடன், சிறுநீரில் ரத்தம், சீழ் வெளியேறுதல், குளிர் காய்ச்சல், வாந்தி, வலி போன்ற துணைப் பிரச்சினைகளும் சேர்ந்துகொள்ளும்.

புராஸ்டேட் வீக்கம்

புராஸ்டேட் வீக்கமும் புற்றுநோயும், ஆண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்பட முக்கியக் காரணங்களாக அமைகின்றன. வழக்கத்தில் வழக்கமாக, நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கே இந்த மாதிரியான பிரச்சினைகளால் நீர்க்கடுப்பு வருகிறது. இவர்களுக்கு சிறுநீர் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகப் போகும்.

மிதமான வேகத்தில் போகும். ஒருமுறை சிறுநீர் கழிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். எத்தனை முறை போனாலும் சிறுநீர் முழுவதுமாகப் போய்விட்ட திருப்தி இருக்காது. இன்னமும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

சுய சுகாதாரம் முக்கியம்

சிறுநீர் வெளியேறுகிற பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தவறினால், சிறுநீர்க் கடுப்பு ஏற்படும். குறிப்பாக, குழந்தைகளுக்கும் புதுமணத் தம்பதிகளுக்கும் இந்தக் காரணத்தால்தான் அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. மேகவெட்டை (கொனோரியா) போன்ற பால்வினை நோய்கள் தாக்கினாலும், சிறுநீர்ப் புறவழி அழற்சி அடைந்து நீர்க்கடுப்பை உண்டாக்கும்.

சிறுநீர்த் தாரையில் கல் அடைத்துக்கொண்டாலும், அந்தப் பாதை சுருங்கிவிட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. இவர்களுக்குச் சிறுநீர் சொட்டுச் சொட்டாகப் போகும். சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாகவோ, கருப்பாகவோ மாறும்.

பெண்களுக்குரிய பிரச்சினைகள்

கர்ப்பப்பைக் கட்டிகள், சினைப்பைக் கட்டிகள், அடி இறங்கிய கருப்பை போன்றவை சிறுநீர்ப் பையை அழுத்தும்போது பெண்களுக்கு அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுவதுண்டு. மேகவெட்டை நோய் வந்த பெண்களுக்குச் சிறுநீர்க் கடுப்பு நிறைய தொல்லை தரும்.

மாத்திரை மருந்துகள் கவனம்!

வலி நிவாரணி மாத்திரைகள், சல்பா மருந்துகள், ஆக்சாலிக் அமிலம் கலந்த மருந்துகள், வீரியம் மிகுந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை நீர்க்கடுப்பை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட வழி அமைக்கும். அதன் விளைவாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு நீர்க்கடுப்பும் அடிக்கடி தொல்லை தரும்.

பரிசோதனைகள் என்ன?

சிறுநீர்க் கடுப்புக்குச் சிறுநீரைப் பரிசோதித்தாலே காரணம் புரிந்துவிடும். இத்துடன் வயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் முழுமையான காரணங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இதைக்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம். அடிப்படைக் காரணத்தைக் களையும் சிகிச்சைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

aa_2445647a.jpg

http://tamil.thehindu.com/general/health/நீர்க்கடுப்பு-ஏற்படுவது-ஏன்/article7336565.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சின்ன வருத்தத்துக்கு ஆயிரம் காரணம் சொல்லுற காலத்திலை இருக்கிறம் எண்டதை நினைக்க உடம்மெல்லாம் புல்லரிக்குதையா...:(

  • தொடங்கியவர்

குதிகால் வலி ஏற்படுவது ஏன்?

ஓவியம்:வெங்கி
ஓவியம்:வெங்கி

தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் ‘சுள்’ ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!

ஆனால், இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு ‘பிளான்டார்ஃபேசியைட்டிஸ்’ (Plantar Fasciitis) என்று பெயர்.

என்ன காரணம்?

குதிகால் எலும்பிலிருந்து ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்’ (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.

குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க ‘பர்சா’ (Bursa) எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல்ஸ்பர்’ (Calcaneal Spur) என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.

சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். முடக்குவாதம், தன்தடுப்பாற்றல் நோய், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் இது வரலாம்.

யாருக்கு வருகிறது?

முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்தப் பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு.

நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி ‘வார்ம்அப்’ பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.

கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சார்பர்’ வேலை செய்வதுபோல, நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப் பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் ( ஹவாய் செருப்புகள் ) இதற்கு உதவும்.

இன்றைய பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.

இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீதச் சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்குக் குதிகால் வலி வரும்.

என்ன சிகிச்சை?

குதிகால் எலும்புக்கு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், யூரிக் அமிலம், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளைச் செய்து காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனித்துவிட்டால் சிகிச்சை சுலபமாகும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், நீங்களாகவே கடையில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். இவற்றால் பக்க விளைவுகள் உண்டு. ஆரோக்கியத்துக்கு ஆபத்தும் உண்டு.

வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம். அப்படியும் வலி எடுத்தால், காலையில் எழுந்த உடனேயே கால்களைத் தரையில் வைக்கக் கூடாது. கால் விரல்களைச் சிறிது நேரம் நன்றாக உள்ளே மடக்கிப் பிறகு விரியுங்கள். கெண்டைக்கால் தசைகளையும், இதுபோல் மடக்கி விரியுங்கள். இதனால் அந்தப் பகுதிக்குப் புது ரத்தம் அதிகமாகப் பாயும். குதிகாலுக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும், சிலருக்குக் குதிகால் வலி ஏற்படும். இந்த ரகத்தில் வலி ஏற்படுபவர்களுக்கு, மேற்கண்ட எளிய பயிற்சியிலேயே வலி மறைந்துவிடும்.

அதேபோலக் கீழ்க்கண்ட பயிற்சியையும் செய்யலாம். காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். அப்போது வலியை உணரச் செய்கிற பொருட்கள் அங்கிருந்து விலகிவிடும். இதனால் குதிகால் வலி குறையும். இதைப் பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும். அப்போதுதான் வலி நிரந்தரமாக விடைபெறும்.

பிசியோதெரபியும் இந்த வலியைப் போக்க உதவும். குறிப்பாக, ESWT எனும் ஒலி அலை சிகிச்சையும் IFT எனும் வலி குறுக்கீட்டு சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் குதிகால் வலியைப் போக்கும் சிறந்த பிசியோதெரபி சிகிச்சைகள்.

இதுபோன்ற எளிய சிகிச்சை முறைகளில் வலி சரியாகவில்லை என்றால், வலி உள்ள இடத்தில் ‘ஹைட்ரோகார்ட்டிசோன்’ (Hydrocortisone) என்ற மருந்தை ’லிக்னோகைன்’ எனும் மருந்துடன் கலந்து செலுத்தினால் வலி குறையும். எலும்பு நோய் நிபுணரின் ஆலோசனைப்படி இதைச் செய்ய வேண்டும். என்றாலும், இந்த ஊசியை ஒன்றிரண்டு முறைக்கு மேல் செலுத்தக்கூடாது. இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன. மேற்சொன்ன சிகிச்சைகளில் குதிகால் வலி குறையவில்லை என்றால், கடைசியாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது.

தடுக்க என்ன வழி?

குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவது தடுக்கப்படும்.

குதிகால் வலி உள்ளவர்கள் இதற்கென்றே உள்ள தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சைக்கிள் ஓட்டும் பயிற்சி, குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி. காரணம், முன் பாதத்தில் அழுத்தம் கொடுத்துப் பெடல் செய்வதால், மொத்தப் பாதத்துக்குமே ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வலி குறையும்.

உடல் பருமன் இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்குப் பாரம் குறைந்து வலி சீக்கிரத்தில் விடைபெறும்.

குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. தெருவில் மட்டுமல்ல; வீட்டுக்குள்ளும் தான். எப்போதும் மிருதுவான ஹவாய் செருப்புகளை அணிந்து நடக்க வேண்டும்.

“எம்.சி.ஆர்.” (Micro Cellular Rubber) செருப்புகளை அணிந்து நடப்பது இன்னும் நல்லது. கரடுமுரடான செருப்புகளை மறந்தும் அணிந்துவிடக்கூடாது. நீரிழிவு நோய், ‘கவுட்’ (Gout) போன்ற நோய்கள் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும்.

பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டியது முக்கியம். அழுத்தமான ஷூக்களையும் அணியக்கூடாது. லூசான ஷூக்களையும் அணியக்கூடாது. இந்த இரண்டிலும் தீமை உள்ளது. முக்கியமாக, குதிகால் தசை நாணுக்கு அதிக உராய்வைக் கொடுத்து வலியை ஏற்படுத்த இவை துணைப் போகும்.

புகைபிடிக்கக் கூடாது. புகையிலையில் உள்ள நிகோட்டின் ரத்தக்குழாய்களைச் சுருக்கி ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இயற்கையாகவே நம் குதிகால் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவு. இதில் புகைபிடிப்பது என்பது, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரிதான்!

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

http://tamil.thehindu.com/general/health/குதிகால்-வலி-ஏற்படுவது-ஏன்/article7312599.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

கோடையில் பழங்களை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?

watermelon_2370853g.jpg

இயற்கையின் பின்னணியில் நம் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பைத் தருவது, காய் - கனிகளே! அதிலும், ருசியையும், உடலுக்குச் சத்துகளையும் தாராளமாகத் தருவது இயற்கையாக விளையும் பழங்களே! ஆனால், ‘நாகரிக உணவுக் கலாசாரம்’ என்ற பெயரில் இயற்கை உணவு வகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, செயற்கை உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் உடலை நாமே கெடுத்துக்கொள்கிறோம்.

முக்கனிகளை மறந்த தலைமுறை

மா, பலா, வாழை என முக்கனியைப் போற்றி கொண்டாடிய தமிழகத்தில்தான் பழங்களைச் சாப்பிடுவதையே குறைத்துக்கொண்ட தலைமுறையைக் காண்கிறோம். அதிலும் குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறை கோடையில் மென்பானங்களை அருந்துவதற்குத் தருகிற முக்கியத்துவத்தைப் பழங்களைச் சாப்பிடுவதற்குத் தருவதில்லை என்பது கவலைக்குரிய செய்தி.

தோல் தரும் பாதுகாப்பு

ஒரு போர்வைபோல் போர்த்தி உடலைப் பாதுகாக்கிற தோல்தான், நம் உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு. நம் மொத்த உடல் எடையில் 12-ல் ஒரு பங்கு தோலின் எடை. இதில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்தான் இருக்கிறது. தோலுக்கு அழகூட்டுவதும் பாதுகாப்பு தருவதும் தண்ணீர்தான்.

உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் தோலுக்குப் பங்கு இருக்கிறதென்றால், வியர்வை மூலம் அந்த வெப்பத்தைத் தணிப்பதற்கு உதவுவது இந்தத் தண்ணீர்ச் சத்துதான். உடலில் தண்ணீரின் அளவு எப்போதும் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் உள்ள நீர்ச்சத்தும் உப்புகளும் குறைந்துவிடும். அப்போது பல வழிகளில் ஆரோக்கியம் கெடும்.

கோடையின் கொடுமை

கோடையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வியர்வையின் அளவும் அதிகரிப்பதால், உடலில் நீரிழப்பு (Dehydration) ஏற்படுகிறது. வியர்வை வழியாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், யூரியா எனப் பல உப்புகள் அளவுக்கு அதிகமாக வெளியேறிவிடுவதால், ரத்த ஓட்டமும் ரத்தஅழுத்தமும் குறைகின்றன. சிறுநீர் வெளியேறுவது குறைகிறது. அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போகிறது. தண்ணீர்த் தாகம் அதிகரிக்கிறது.

வாய் உலர்ந்து போகிறது. தலைவலி, கிறுகிறுப்பு ஏற்படுகின்றன. தசைகள் சோர்வடைகின்றன. உடல் உற்சாகத்தை இழக்கிறது. தெளிவில்லாத மனநிலை ஏற்படுகிறது. செய்யும் வேலையில் தொய்வு உண்டாகிறது. தோல் வறட்சி, வெப்பத் தளர்ச்சி, வெப்ப மயக்கம் போன்றவை தொல்லை தருகின்றன.

இந்த நீரிழப்பை ஈடுகட்டப் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக ஒருவருக்கு நாளொன்றுக்குத் தேவையான தண்ணீரின் அளவு மூன்று லிட்டர். இதையே கோடை காலத்தில் இரண்டு மடங்காகக் குடிக்க வேண்டும். எவ்வளவுதான் தண்ணீரைக் குடிப்பது என்று அலுத்துக் கொள்கிறவர்களும், சுத்தமான குடிநீருக்குச் சிரமப்படுபவர்களும் தண்ணீர்ச் சத்து மிகுந்த பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இப்படிப் பழங்களை அதிகமாகச் சாப்பிடும்போது நீர்ச்சத்துடன் பல வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் கிடைப்பதால், உடலில் ஏற்படும் பல வெப்பப் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன.

கொடை வள்ளல் தர்பூசணி

வெயில் காலத்துக்கு ஏற்ற பழங்களில் முதலிடம் வகிப்பது, தர்பூசணி. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என்று பல சத்துகள் காணப்பட்டாலும் இதில் 90 சதவீதம் தண்ணீர்ச் சத்துதான் இருக்கிறது. கோடையில் உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்து, நீர்ச்சத்தைச் சமநிலைப் படுத்துவதும் தாகத்தை உடனடியாகத் தணிப்பதில் முன்னிலை வகிப்பதும் இதுவே. எந்த வயதினரும் இதைச் சாப்பிடலாம் என்பது ஒரு கூடுதல் நன்மை.

கோடையில் தினமும் தர்பூசணியைச் சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆற்றல் 25 சதவீதம் அதிகரிக்கிறது. உடலின் வெப்பநிலை குறைகிறது, ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. தர்பூசணியில் உள்ள ‘ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ்’ எனப்படும் இயற்கைச் சத்துகள் நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகின்றன. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது.

வெப்பத்தை விரட்டும் வெள்ளரி

வெயிலின் கொடுமையிலிருந்து நம்மைக் காக்கும் இயற்கையின் வரப்பிரசாதம், வெள்ளரி. இதன் முக்கியப் பலனே உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுதான். அதிக அளவு நீர்ச்சத்தும் குறைந்த கலோரிகளும் கொண்ட வெள்ளரி, உடலில் நீரிழப்பால் ஏற்படுகிற சிறுநீர்க்கடுப்பைக் குறைக்கிறது. வெயில் காலத்தில் அதிகப்படுகிற சிறுநீர் கல் கரையவும் உதவுகிறது. பிஞ்சு வெள்ளரிக் காயில் உப்பும், மிளகாய்த் தூளும் சிறிதளவு கலந்து சாப்பிடுவது நம் வழக்கம்.

இந்த உப்பில் உள்ள சோடியம் தாது வியர்வையில் இழக்கும் சோடியத்தை ஈடுகட்ட உதவுகிறது. மேலும், வெள்ளரிக்காயுடன் தக்காளி சேர்த்துச் சுவையான ‘சாலட்’ ஆகவோ, பச்சடியாகவோ செய்து வைத்தால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இனிப்புச் சுவையை விரும்புபவர்கள் வெள்ளரிப் பழத்தைச் சாப்பிடலாம்.

வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்குக் கண்களில் எரிச்சல் ஏற்படும். இந்த எரிச்சலைப் போக்க, வெள்ளரித் துண்டுகளைக் கண் இமைகளின் மீது சிறிது நேரம் வைத்திருந்தால் கண் அயர்ச்சி நீங்கிப் புத்துணர்வு ஏற்படும்.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com/general/health/கோடையில்-பழங்களை-ஏன்-அதிகம்-சாப்பிட-வேண்டும்/article7092863.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நீரிழிவு நோய் வருவது ஏன்?

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி

நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.

இன்சுலின் சுரப்பைத் தடுப்பதற்கெனப் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. நீரிழிவு நோய் உருவாவதற்கு முன்பே இவை நம் உடலில் காணப்படுகின்றன; பின்னொரு நாளில் நீரிழிவு நோய் வருவதைத் தூண்டுகின்றன. இவற்றை ‘சர்க்கரை நோயின் முன்காரணிகள்’ ( Diabetes Risk Factors ) என்கிறோம். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும், நீரிழிவு நோய் வரலாம்.

பரம்பரைத் தன்மை

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. நம் உடலில் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில்தான் மரபணுக்கள் (Genes) உள்ளன. இவைதான் செல்கள் எப்படி உருவாக வேண்டும், எப்போது உருவாக வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுத் தருகின்றன.

உதாரணமாக, ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் கணையத்தில் பீட்டா செல்கள் எப்போது, எவ்வளவு இன்சுலினைச் சுரக்க வேண்டும் என்று இந்த மரபணுக்கள்தான் கற்றுத்தரும். அதன்படி அந்தச் செல்கள் இன்சுலினைச் சுரந்து, ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்துக்கொள்ளும். அதனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவது இல்லை.

புத்தகங்களை அச்சிடும்போது பிழைகள் ஏற்படுவதைப்போல, சிலருக்கு இந்த மரபணுக்கள் உருவாகும்போது பிழைகள் ஏற்பட்டுவிடும். அப்போது, உடலில் நடைபெற வேண்டிய இயல்பான பணிகள் நடைபெறாது. உதாரணமாக, இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற மரபணுவில் பிழை உண்டானால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படும்.

நீரிழிவு நோய் வந்துவிடும். இந்த மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து இவர்களுக்கு வந்திருக்கும். இனி, இவர்கள் வாரிசுகளுக்கு அவை கடத்தப்படும். அப்போது, அவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும். இவ்வாறு, அந்தப் பரம்பரையின் வம்சாவளியில் வருபவர்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் கடத்தப்படுகிறது.

உடல் பருமன்

சர்க்கரை நோயை வரவேற்கும் அடுத்த காரணி, உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது.

இன்னொரு வழி இது: உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது. அப்படியே சென்றாலும், செல்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால், இன்சுலின் தனது இயல்பான பணியைச் செய்ய முடிவதில்லை. இதன் விளைவாகவும் நீரிழிவு நோய் ஏற்படும்.

இன்சுலின் எதிர்ப்பு உணர்வு

உடலில் கொழுப்பு சேரச் சேர, கொழுப்புத் திசுக்களில் உள்ள செல்கள், இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை; இன்சுலினை எதிர்க்கின்றன. இன்சுலின் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.

சில வேளைகளில், கையில் சாவி இருந்தாலும், அது பூட்டைத் திறக்கச் சண்டித்தனம் செய்யும் அல்லவா? அதுபோல, சிலருக்கு இன்சுலின் சரியாகச் சுரந்தாலும், அது சரிவர வேலை செய்யாது. காரணம், இவர்களுடைய செல்களில் ‘இன்சுலின் ஏற்பான்கள்' (Insulin Receptors) குறைவாக இருக்கும். இதனால், செல்களுக்குள் குளுகோஸ் நுழைய முடியாமல் ரத்தத்தில் தங்கிவிடும். இதன் விளைவாக, ரத்தச் சர்க்கரை அதிகமாகி, இவர்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிடும். இதைத்தான் ‘இன்சுலின் எதிர்ப்பு உணர்வு' (Insulin Resistance) என்கிறோம்.

அதிக உடல் எடை உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுகிறவர்கள் ஆகியோருக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு, பரம்பரை காரணமாகவும் இது வரக்கூடும்.

மன அழுத்தம்

நீரிழிவு நோய்க்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கவலை, கோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படும்போது, நம் உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாகச் சுரந்து, இன்சுலின் செயல்படுவதைத் தடுக்கின்றன.

இதனால் நீரிழிவு நோய் வருகிறது. மன அழுத்தம் காரணமாக, ஒருவருக்கு நீரிழிவு நோய் புதிதாகவும் வரலாம் அல்லது ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்தால் அது அதிகப்படலாம்.

அடிக்கடி கர்ப்பம் அடைதல்

கர்ப்பமான பெண்களுக்கு, கர்ப்பப்பையில் குழந்தை வளர்ந்து வரும்போது சில ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இதன் காரணமாக நீரிழிவு நோய் வருகிறது. இந்த ஹார்மோன் பிரச்சினை பிரசவத்துக்குப் பிறகு பல பேருக்குச் சரியாகிவிடுகிறது. இதனால், குழந்தை பிறந்த பின்னர், இவர்களுக்கு நீரிழிவு நோய் மறைந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது.

அதிலும் அடிக்கடி கர்ப்பமாகும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினையும் அடிக்கடி வருவதால், நீரிழிவு நோய் நிலைத்துவிடுகிறது. குறிப்பாகச் சொன்னால், கர்ப்பத்தின்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று கிலோவுக்கு மேல் எடை கொண்ட குழந்தையைப் பெற்ற பெண்கள், பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

உயர் ரத்த அழுத்தம்

சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்த மும் மிக நெருங்கிய ‘நண்பர்கள்’. சர்க்கரை நோயை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும் என்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, ரத்த அழுத்தம் 140/90 மி.மீ. பாதரச அளவுக்கு அதிகமாக உள்ளவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ரத்த மிகைக் கொழுப்பு

உடல் பருமன் உள்ளவர்களில் பெரும்பாலோருக்கு ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகவே இருக்கிறது. ஒருவருக்குத் திசுக் கொழுப்பும் ரத்தக் கொழுப்பும் அதிக அளவில் இருக்கும்போது, அவருக்குக் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகிவிடும். இந்தக் கொழுப்பு அமிலங்கள் கணையத்தைப் பாதிக்கும். அப்போது நீரிழிவு நோய் வரும்.

சினைப்பை நீர்க்கட்டிகள்

பெண்களுக்குச் சினைப்பையில் உருவாகின்ற ஒரு வகை நார்க்கட்டிக்கு ‘சினைப்பை நீர்க்கட்டி' (Poly Cystic Ovary Syndrome - PCOS) என்று பெயர். இந்த நோய் ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) எனும் ஹார்மோன் அதிகமாவதால் வருகிறது. உடல் பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களுக்கு முகத்தில் பருக்களும், முடியும் அதிகமாக இருக்கும். மாதவிலக்கு சரியாக நிகழாது. கழுத்தின் பின்புறத் தோல் கறுப்பாக, தடிப்பாக, வரிவரியாக இருக்கும் (Acanthosis nigricans). இந்த நோய் உள்ள பெண்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது.

சோம்பலான வாழ்க்கை முறை

உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிக்கும்போது, அந்த அதீதச் சர்க்கரையைச் செலவழிக்க வழியில்லாமல், கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை அதிகரிக்கிறது. இந்த மாதிரி அதிகரித்த எடைக்கும் சேர்த்துக் கணையம் இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கிறது. இப்படித் தொடர்ந்து சுரக்கும்போது, கணையம் சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. நாளடைவில் இன்சுலின் சுரப்பது குறைந்துவிடுகிறது அல்லது நின்றுவிடுகிறது. இதனால், இவர்களுக்குச் சீக்கிரமே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது.

சர்க்கரை நோயைத் தடுக்க முடியுமா?

மேற்சொன்ன வழிகளில் நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் வருவதைத் தள்ளிப்போடலாம்.

# மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளையும் இனிப்புப் பண்டங்களையும் குறைத்துச் சாப்பிட வேண்டும்.

# எண்ணெயில் பொரித்த, வறுத்த பண்டங்களையும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

# நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

# குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

# தினமும் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி / உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

http://tamil.thehindu.com/general/health/நீரிழிவு-நோய்-வருவது-ஏன்/article7018545.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்?

pitham_2408316f.jpg
 

மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.

சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது.

பித்தநீர்ச் சுரப்பு

நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000-த்திலிருந்து 1500 மி.லி.வரை பித்தநீர் சுரக்கிறது. பித்தநீர் என்பது ஒரு திரவக் கலவை. 97 சதவீதம் நீரும், 1 சதவீதம் பித்த நிறமிகளும், 1 முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன.

கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், வலது மற்றும் இடது பித்தநீர்க் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளைக் குழாய் வழியாகக் கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் (Gall bladder) பித்தப்பையினுள் அது செல்லும். அப்போது பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு, அதன் அடர்த்தியை அதிகரித்து, உணவு செரிமானத்துக்குத் தயாராக வைத்திருக்கும்.

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டுப் புறப்பட்டதும், `பித்த நீர் தேவை’ என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப் பைக்கு வந்து சேரும். உடனே பித்தப்பையானது, தன்னைத்தானே சுருக்கி, பித்தநீரைப் பித்தக் குழாய்க்குள் அனுப்பிவைக்கும். அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.

பித்தநீர்க் கற்கள்

சாதாரணமாகத் திரவ நிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும்தான் கற்கள் உருவாகின்றன. ஏன்? பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும்போது, அதில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) அதன் அடியில் படியும். பித்த உப்புகள் என்பவை கொழுப்புத்தன்மை வாய்ந்தவை. அவை கொழுப்பால் ஆனவை. பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும்.

இது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்றுதான் தோற்றமளிக்கும். மென்மையாக இருக்கும். கல்லின் அளவும் எண்ணிக்கையும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.

காரணம் என்ன?

1. உடல் பருமன்

2. அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள்.

3. பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.

4. பரம்பரைக் கோளாறு.

5. கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.

6. நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.

7. மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.

8. குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.

9. ஹார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது.

10. பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது.

11. கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது.

12. அடிக்கடி விரதம் இருப்பது.

13. கர்ப்பம்.

14. முறையான உடற்பயிற்சி இல்லாதது.

15. ‘சிக்கில் செல்’ ரத்தசோகை.

வகைகள்

பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர். இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இது காணப்படும். அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன. கடைசி வகைக்குக் கலப்படக் கற்கள் என்று பெயர். பெரும்பாலான பித்தப்பைக் கற்கள் கலவைக் கற்களால் ஆனவையே.

கொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் போன்றவற்றால் உருவானவை. இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.

இங்குக் கற்களின் வகை குறித்துப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. குறிப்பிட்ட நபருக்கு எந்த வகை கல் இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் அந்தக் கல்லுக்குரிய வேதிப்பொருட்கள் அதிகமுள்ள உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் பித்தப்பைக் கற்களை மீண்டும் வரவிடாமல் தடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள கற்களை, இன்னும் அதிகம் வளர விடாமலும் தடுத்துக்கொள்ள முடியும்.

அறிகுறிகள்

பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுத்துவது அடுத்த வகை. மூன்றாவது வகையானது, வலது புற விலா எலும்புகளைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் வரைக்கும் சென்று, தோள்பட்டைவரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும்.

முக்கியமாகக் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டதும் இந்த வலி ஏற்படும், பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் அழற்சியை ஏற்படுத்துமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதுகுப்புறம் வரும். பித்தநீர்க் கற்கள் பித்தப்பையை அடைத்துவிடுமென்றால் நோயாளிக்கு மஞ்சள் காமாலை வரும். இதற்கு 'அடைப்புக் காமாலை' என்று பெயர். சில பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. வேறு பாதிப்புகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது, பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவரும்.

பரிசோதனைகள்

வயிற்றை ‘அல்ட்ரா சவுண்ட்' அல்லது சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து பித்தக் கற்களின் எண்ணிக்கை, அளவு, பித்தப்பையில் வீக்கம் உள்ளதா, கற்கள் பித்தப்பையை அடைத்துள்ளதா, கல்லீரலைப் பாதித்துள்ளதா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

சாதாரணமாக வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் பித்தப்பைக் கற்களில் 10 சதவீதம் மட்டுமே தெரியும். அதேநேரத்தில், பித்தநீரில் கரைகிற ஒரு சாயக் கரைசலை மாத்திரை வடிவில் வாய்வழியாக உட்கொள்ள வைத்து, வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் இந்தக் கற்கள் இருப்பது தெளிவாகத் தெரியும்.

இவை தவிர, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் 'கோலாஞ்சியோகிராபி' (Cholangiography) எனும் பரிசோதனைகள் மூலமும் இவற்றைக் கண்டறியலாம். இதுதவிர, ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனைகளை மேற்கொண்டு பித்தப்பைக் கற்களால் கல்லீரலின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிகிச்சை என்ன?

சிறிய அளவில் உள்ள பித்தப்பைக் கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்றுப் பெரிய அளவில் உள்ள கற்களை உடைத்து (Lithotripsy) வெளியேற்றலாம். என்ற போதிலும் 'பித்தப்பை நீக்கம்' (Cholecystectomy ) எனப்படும் அறுவை சிகிச்சை பித்தப்பைக் கற்களைத் தடுப்பதற்குச் சிறந்த வழி. பித்தப்பையை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைகளில் 'லேப்ராஸ்கோப்பி' அறுவை சிகிச்சை முக்கியமானது. இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட அடுத்த நாளில் வீட்டுக்குத் திரும்பி விடலாம். அடுத்த ஒரு வாரத்தில் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ள முடியும்.

இப்போது இதற்கு எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சை செய்யும் நவீன முறை அறிமுகமாகியுள்ளது. ‘ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோஸ்கோப்பி’ (SpyGlass cholangioscopy) என்று அதற்குப் பெயர். இந்த முறையில் பித்தப்பையை நீக்காமல், பித்தப்பைக் கற்களை மட்டுமே அகற்றுகிறார்கள்.

இது அடைப்புக் காமாலை உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் தருகிறது. வாய்வழியாக இந்தக் குழாயை உள்ளே அனுப்பி உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல்…. ஆகியவற்றை எல்லாம் கடந்து, பித்தக் குழாய் வழியாகக் கற்கள் உள்ள பித்தப்பையை அடைந்ததும், மின்நீர்க் கதிர்களை (Electrohydraulic lithotripsy) செலுத்தி, அந்தக் கற்களை நொறுக்கி, அவற்றின் துகள்களை உறிஞ்சி வெளியில் எடுத்துவிடுகிறார்கள். இதனால் பித்தநீர்ப் பாதை சரிசெய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகிவிடுகிறது.

பித்தப்பை அழுகிய நிலையில் சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் போன்ற உறுப்புகளோடு அது ஒட்டிக்கொள்ளும் நிலைமையில் நோயாளி சிகிச்சைக்கு வந்தார் என்றால், அப்போது பித்தப்பைக் கற்களையும் பித்தப்பையையும் நீக்குவதற்கு வயிற்றைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வதுதான் நல்லது.

பித்தப்பையை நீக்கினால் பிரச்சினையா?

"பித்தப்பையை நீக்கிவிட்டால் பித்தநீர் சுரக்காது. பிறகு உணவு சரியாகச் செரிமானம் ஆகாது" என்று பல பேர் தவறாக நினைத்துப் பித்தப்பையை நீக்குவதற்கு அஞ்சுகின்றனர். உண்மை என்னவென்றால், கல்லீரலில் மட்டுமே பித்தநீர் சுரக்கிறது. அது பித்தநீர்க் குழாய் மூலமாக முன்சிறுகுடலை வந்தடைகிறது. அதற்கு முன்பு அது பித்தப்பையில் தங்கிச் செல்கிறது, அவ்வளவுதான். பித்தப்பையை நீக்கியவர்களுக்குப் பித்தநீரானது நேரடியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேர்ந்துவிடும். இவர்களுக்கு உணவுச் செரிமானம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. பித்தநீருக்குக் கல்லீரல் என்பது பிறந்த வீடு. பித்தப்பை என்பது விருந்தினர் வீடு. விருந்தினர் வீடு இல்லாவிட்டாலும், இனிதாக வாழ முடியும் அல்லவா? அதுமாதிரிதான். பித்தப்பை இல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக வாழலாம். என்ன…. ஒரே ஒரு நிபந்தனை. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்புள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், 
பொதுநல மருத்துவர். 
தொடர்புக்கு: gganesan95@gmail.com

http://tamil.thehindu.com/general/health/பித்தப்-பையில்-கல்-உண்டாவது-ஏன்/article7211463.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்
தைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்?
 
ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி

‘உடல் எப்போதும் அசதியாகவே இருக்கிறது; கொஞ்சமாக உணவைச் சாப்பிட்டாலும், உடல் எடை கூடிக்கொண்டே போகிறது; மாதவிலக்கு சுழற்சி ஒழுங்காக ஏற்படுவதில்லை’... இப்படிச் சொல்பவர்களிடம், ‘உங்களுக்குத் தைராய்டு கோளாறு இருக்கிறதா?’ என்றுதான் கேட்கத் தோன்றும்.

இன்றைய பெண்களிடம் அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சினைகளில், தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் பிரச்சினை முக்கியமானது. பிறக்கும் குழந்தை முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று பெண்களில் பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக இன்றைக்கு இது உருவெடுத்துள்ளது. இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்துச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், பின்னால் ஏற்படுகிற அறிவாற்றல் குறைவு, மலட்டுத்தன்மை போன்ற பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

தைராய்டு என்பது என்ன?

நம் தொண்டைப் பகுதியில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது. இதன் எடை 12-லிருந்து 20 கிராம்வரை இருக்கும். சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம்.

தைராக்சின் ஹார்மோன்

தைராய்டு சுரப்பி, ‘தைராக்சின்' (T4), ‘டிரைஅயடோதைரோனின்' (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது. தைராய்டு செல்களில் ‘தைரோகுளோபுலின்' எனும் புரதம் உள்ளது. இதில் ‘டைரோசின்' எனும் அமினோ அமிலம் உள்ளது. தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினை இணைத்து வினைபுரிந்து T4 மற்றும் T3 ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. இத்தனைச் செயல்பாடுகளையும் முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற 'தைராய்டு ஊக்கி ஹார்மோன்' ( TSH ) கட்டுப்படுத்துகிறது.

தைராக்சின் பணிகள்

குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, முழுமையான உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்திக்கூர்மை எனப் பலவற்றுக்குத் தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிராணவாயுவைப் பயன்படுத்தி வேதிவினைகள் புரிவதற்குத் தைராக்சின் தேவை.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், புரதச் சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவுக் கூழிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன் செய்கிற அற்புதப் பணிகள்.

மேலும் இதயம், குடல், நரம்பு, தசை, பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகளையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது, உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது, பருவமடைவதற்கும் கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்பதுபோல், தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சியடையாது என்றால் மிகையில்லை.

குறை தைராய்டு

தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருக்கும். செயல்கள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது. முகம் வீங்கும். முடி கொட்டும். இளநரை தோன்றும். தோல் வறட்சி ஆகும். பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். அடிக்கடி மலச்சிக்கல் உண்டாகும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கை, கால்களில் மதமதப்பு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும். ரத்தசோகை, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்ற பாதிப்புகள் குறை தைராய்டு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியமான அறிகுறிகள்.

என்ன காரணம்?

நாம் உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து இருப்பதில்லை. தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்குத் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கத்தில் ஒரு கழலைப் போன்று தோன்றும். அதற்கு ‘முன்கழுத்துக் கழலை' (Goitre ) என்று பெயர்.

சண்டித்தனம் செய்து படுத்துக்கொண்ட மாட்டை என்னதான் தார்க்குச்சி கொண்டு சீண்டினாலும், அது எழுந்து வண்டியை இழுக்காது; மாட்டுக்குக் காயம் ஆவதுதான் மிச்சம். அதுபோலத்தான் இதுவும். இந்த நிலைமை நீடிப்பவர்களுக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது.

இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவீதம் பேருக்கு இந்தத் தைராய்டு பிரச்சினை உருவாகிறது என்கிறது புள்ளிவிவரம். முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாழ் மக்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது.

இது ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease) ஏற்படலாம் என்கிறது மருத்துவம். அதாவது, நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் செல்கள், சொந்த உடலின் செல்களையே, வெளியிலிருந்து வரும் நோய்க் கிருமிகளாகக் கருதி அழித்துவிடுகின்றன. பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், இதைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது. இப்படித் தைராய்டு செல்கள் அழிக்கப்படுபவர்களுக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது.

இது தவிரப் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்படுவது, தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது, முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைவது போன்ற காரணங்களாலும் குறை தைராய்டு ஏற்படலாம். இளம் வயதில் புற்றுநோய் தாக்கி, கதிரியக்கச் சிகிச்சை பெற்றிருந்தால், தைராய்டு சுரப்பி சிதைவடைந்து, குறை தைராய்டு ஏற்படலாம்.

இன்றைய தலைமுறையினருக்குக் குறை தைராய்டு ஏற்படுவதற்கு மன அழுத்தம்தான் முக்கியமான காரணம். பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்பு உண்டு.

குழந்தைக்கும் குறை தைராய்டு

பிறந்த குழந்தைக்கும் குறை தைராய்டு (Cretinism ) ஏற்படுவதுதான் வேதனைக்குரியது. கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன், சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காதபோது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது.

இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது. பிறந்தவுடன் குழந்தை வீறிட்டு அழவில்லை என்றால், மூன்று நாட்களில் தாய்ப்பால் அருந்தவில்லை என்றால், மஞ்சள் காமாலை நீடித்தால், குட்டையாக இருந்தால், மூக்கு சப்பையாக இருந்து, நாக்கு வெளித் தள்ளி, வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கம் காணப்பட்டால், அந்தக் குழந்தைக்குக் குறை தைராய்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது.

பொதுவாக, குழந்தைக்கு வயது ஏற ஏற அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். ஆனால், குறை தைராய்டு உள்ள குழந்தைக்கு 'வளர்ச்சி மைல்கல்' தாமதப்படும். உதாரணமாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்பது, குரல் கேட்டுத் திரும்புவது, நடக்கத் தொடங்குவது, பல் முளைப்பது, பேச்சு வருவது, ஓடியாடி விளையாடுவது போன்ற வளர்ச்சி நிலைகளில் பின்னடைவும் பாதிப்பும் ஏற்படும். வயதுக்கு ஏற்ற அதன் செயல்பாடுகளில் மந்தமான நிலை உண்டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் தோன்றலாம்.

பள்ளி வயதில் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் (I.Q. ) குழந்தை பின்தங்கும். முக்கியமாக, கற்றலிலும் நினைவாற்றலிலும் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். அல்லது மாதவிலக்கு அதிக நாட்கள் நீடிக்கும். இவ்வாறு ஏற்படும் நிலையில் குழந்தையை உடனடியாக டாக்டரிடம் காண்பித்துத் தகுந்த சிகிச்சை பெற்றால், பாதிப்புகள் குறையும்.

பரிசோதனைகள் என்ன?

ரத்தத்தில் T3, T4 மற்றும் TSH அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும். இது தவிர அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பைக் கணிக்க முடியும். இன்றைய நவீன மருத்துவத்தில் 'ஐசோடோப் ஸ்கேன்' பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது.

சிகிச்சை என்ன?

குறை தைராய்டு பாதிப்புக்குத் தைராக்சின் மருந்தைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த மருந்தின் அளவு, அதற்கான கால அளவு ஆகியவற்றை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை நிறுத்தக்கூடாது. அயோடின் குறைவால் வரும் முன்கழுத்துக் கழலை நோய்க்குப் போதுமான அளவு அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும். இப்படி முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது அறிவு மந்தம், மாதவிலக்குக் கோளாறுகள், மலட்டுத்தன்மை, பிரசவகால சிக்கல்கள் போன்றவற்றைத் தடுத்துக்கொள்ள முடியும்.

முறையான உணவு

நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். கடல் சார்ந்த உணவு வகைகளில் அயோடின் சத்து அதிகம் என்பதால் மீன், நண்டு போன்ற உணவு வகைகள் நல்லது. பால், முட்டை, இறைச்சி சாப்பிட வேண்டியது முக்கியம். பசலைக்கீரை, முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், டர்னிப் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். சமையலுக்குச் சாதாரண உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனையோடு, கழுத்துக்கு உண்டான உடற்பயிற்சி / யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டால், குறை தைராய்டு பிரச்சினைகளைத் தடுக்க முடியும்; தள்ளிப்போடவும் முடியும்.

சுரப்பைப் பாதிக்கும் உணவுகள்

நாம் வழக்கமாகச் சாப்பிடும் சில உணவு வகைகளின் அளவு அதிகமாகிவிட்டால், அவை தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும். அப்போது தைராய்டு சுரப்பி உணவிலுள்ள அயோடின் சத்தைப் பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக, தைராக்சின் ஹார்மோனைத் தேவையான அளவுக்குச் சுரக்காது. இதனால் குறை தைராய்டு ஏற்படும். தைராய்டை பாதிக்கிற கீழ்க்காணும் உணவு வகைகளை அளவோடு சாப்பிடுங்கள். ஏற்கெனவே ‘குறை தைராய்டு' உள்ளவர்கள் இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

http://tamil.thehindu.com/general/health/தைராய்டு-குறைவாகச்-சுரப்பது-ஏன்/article7164620.ece?ref=relatedNews

Edited by Athavan CH

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?

malachikkal_2280854f.jpg

காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மலத்தை வெளியேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள்.

இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை.

எது மலச்சிக்கல்?

வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது. மலம் இறுகிப்போவது. மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்' என்று அழைக்கிறோம். மருத்துவ மொழியில் சொன்னால் ஒருவருக்கு வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் போவது ‘மலச்சிக்கல்'.

அடிப்படைக் காரணம்

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். இப்படித் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது. அந்தக் காரணங்கள்?

தூண்டும் காரணிகள்

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.

அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.

பொதுவாகவே வயது ஆகஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.

கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.

வேறு உடல் பிரச்சினைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகளும் மலச்சிக்கலுக்குக் காரணமாகலாம். எடுத்துக்காட்டாக, வயிற்றுப் புண்ணுக்குச் சாப்பிடப்படும் ‘அலுமினியம்’, ‘கால்சியம்’ கலந்துள்ள ‘ஆன்டாசிட்’ மருந்துகள், இரும்புச்சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்த மருந்துகள், ‘ஓபியம்’ கலந்த வலிநிவாரணிகள் மலச்சிக்கலை ஏற்படுத்துகிற மருந்துகளில் முக்கியமானவை. இன்னொன்று, மலச்சிக்கலைப் போக்குவதற்காக பேதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பேதி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் உண்டாகும்.

காய்ச்சல், வாந்தி, பசிக் குறைவு போன்ற பொதுவான பிரச்சினைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது மலச்சிக்கல் ஏற்படும். மூல நோய், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், ‘டைவர்ட்டிகுலைட்டிஸ்’ எனும் குடல் தடிப்பு நோய், சர்க்கரை நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, பேரா தைராய்டு அதிகமாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், மூளைத் தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும்போது மலச்சிக்கல் ஒரு முக்கிய அறிகுறியாக வெளிப்படும்.

இளம் பெண்களுக்குப் பெருங்குடல் சுவரில் தளர்ச்சி ஏற்பட்டு ‘இடியோபதிக்டிரான்சிட் கோலன்’ எனும் நோய் வரலாம். அப்போது அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரப்படும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தை களுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம்.

வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு.

எப்போது கவனிக்க வேண்டும்?

மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும். அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம். எனவே, மலச்சிக்கலுடன் கீழ்க்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்:

1. மூன்று வாரத்துக்குமேல் மலச்சிக்கல் பிரச்சினை தொடரும்போது.

2. மலம் போவதில் சிக்கல் உண்டாகி வயிறு வலிக்கும்போது.

3. குமட்டல் மற்றும் வாந்தி வரும்போது.

4. மலம் கழிக்கும்போது ஆசனவாய் வலித்தால்.

5. மலத்துடன் ரத்தம், சீழ், சளி வெளியேறும்போது.

6. உடல் எடை குறையும்போது.

7. காய்ச்சல், தலைவலி, வாய்க் கசப்பு இருந்தால்.

8. மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி வந்தால்.

9. வயிற்று உப்புசம், பசிக் குறைவு இருந்தால்.

10. சுவாசத்தில் கெட்ட வாசனை வந்தால்.

சிசிச்சை என்ன?

மலச்சிக்கலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், நிரந்தரமாகக் குணப்படுத்தலாம். இப்போது மலச்சிக்கலுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேலை செய்கிறது. வயதைப் பொறுத்து, அடிப்படை நோயைப் பொறுத்து, மலச்சிக்கலின் தன்மையைப் பொறுத்து மருந்து தேவைப்படும். ஆகவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிடுங்கள். மலச்சிக்கலுக்குச் சுயசிகிச்சை செய்ய வேண்டாம். குறிப்பாக, பேதி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடும்போது பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை அவை பாதிக்கும். பிறகு, சாதாரணமாக மலம் கழிப்பதும் சிரமமாகிவிடும். ‘எனிமா’ தர வேண்டிய அவசியம் ஏற்படும். அடிக்கடி `எனிமா’ தருவதும் நல்லதல்ல.

தவிர்ப்பது எப்படி?

மலச்சிக்கலைத் தவிர்க்க, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். தினமும் சரியான / முறையான நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும். இதன் பலனால், அவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும்.

நார்ச்சத்து உதவும்!

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் (தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்). வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்தவேண்டும். உதாரணம்: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி.

தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.

தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மலம் கழிப்பதற்கு என்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலை அவசரம் காரணமாகக் குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக் கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்காதீர்கள். காலை நேரமானாலும் சரி, மாலை நேரமானாலும் சரி தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதே நேரத்தில் மலம் வந்துவிடும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com/general/health/மலச்சிக்கல்-ஏற்படுவது-ஏன்/article6794825.ece?homepage=true&ref=tnwn

 

  • தொடங்கியவர்

மூக்கில் ரத்தம் வடிவது ஏன்?

ஓவியம்: வெங்கி

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' (Epistaxis ) என்று அழைக்கிறார்கள்.

மூக்கு ஒரு தொட்டாற்சிணுங்கி!

சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.

மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப் பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்தப் புறநாசித் துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு ‘மூக்குப் பெட்டகம்' (Nasal box) என்று பெயர். இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன.

இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா ' (Little’s area) என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்று பொதுவாகச் சொல்வார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.

என்ன காரணம்?

குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்துக் குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும்.

சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் வரலாம்.

மூக்கில் சதை வளர்ச்சி!

குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்புச் சதை' (Nasal Polyp) வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் ‘அண்ணச்சதை' (Adenoid) வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்கக் குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்.

வினையாகும் விளையாட்டு!

குழந்தைகள் விளையாட்டாகக் குச்சி, பேப்பர் துண்டு, ரப்பர் துண்டு, பல்பம், பஞ்சு, பயறு, பொத்தான், நிலக் கடலை, பருத்தி விதை, ஆமணக்கு விதை, வேப்பமுத்து, பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை மூக்கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அப்புண்ணிலிருந்து ரத்தம் கசியும்.

வெப்பச் சூழல்!

படிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வடியும். மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித்தால், மூக்கில் ரத்தம் வடியும்.

கோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசிக்க நேரிட்டாலும் இதே பிரச்சினைதான். மூக்கின் உட்பகுதிகள் இந்த வெப்பத்தால் உலர்ந்து, அங்குள்ள சவ்வுகளில் விரிசல் ஏற்படும். இதன் காரணமாக மூக்கில் ரத்தம் வடியும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கிற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் ரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம்.

நோய்களும் காரணமாகலாம்!

ஒவ்வாமை, தடுமம், மூக்குச்சளி, மூக்குத்தண்டு வளைவு, காசநோய், கல்லீரல் நோய், தொழுநோய், இதயநோய், காளான்நோய், புற்றுநோய் கட்டி, ‘ஹீமோபிலியா' போன்ற ரத்த உறைதல் கோளாறுகள், சைனஸ் பிரச்சினை, டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைட்டமின் சி, கே சத்துக்குறைவு, ரத்தசோகை, பரம்பரை ரத்தக் கோளாறுகள், கபாலக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், மது அருந்துவது போன்ற காரணங்களாலும் மூக்கு வழியாக ரத்தம் வடியலாம்.

அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிபவர்களும், நடுத்தர வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், `இது சாதாரண சில்லுமூக்குத் தொல்லைதான்’ என்று அலட்சியமாக இருக்காமல் காலத்தோடு மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

காரணம், இவர்களுக்குச் சாதாரணக் காரணங்களைவிட உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோய், புற்றுநோய் கட்டி ஆகிய மூன்று காரணங்களால் மூக்கில் ரத்தம் வடிவது உண்டு. இவற்றுக்கான முறையான சிகிச்சையை நோயின் ஆரம்ப நிலையிலேயே பெற்றுவிட்டால்தான், ஆரோக்கியத்துக்கு ஆபத்து வருவதும் தடுக்கப்படும்.

என்ன பரிசோதனை?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எண்டாஸ்கோப்பி எடுத்துப் பார்த்தால் மூக்கில் ரத்தம் வடிவதற்குக் காரணம் தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால், முழு நிவாரணம் கிடைக்கும்.

என்ன முதலுதவி செய்வது?

பாதிக்கப்பட்ட நபரை லேசாகத் தலையைக் குனிந்துகொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள்.

இப்போது மூக்கின் இரண்டு துவாரங்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக்கொள்ள, ரத்தம் வடிவது நின்றுவிடும்.

மூக்கைப் பிடித்திருப்பதால், வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் சொல்லுங்கள்.

இந்த முயற்சியில் ரத்தம் நிற்கவில்லை என்றால், குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை முக்கி எடுத்துப் பிழிந்துகொண்டு, மூக்கின்மேல் பத்து நிமிடம் வைக்கவும்.

ஐஸ் கட்டி கைவசமிருந்தால், அதையும் மூக்கின் மீதும் மூக்கின் இரண்டு பக்கங்களிலும் வைக்கலாம்.

பஞ்சு அல்லது சுத்தமான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, திரி போல் செய்து, மூக்கினுள் அழுத்தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம்.

இத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால், அது மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று அர்த்தம். அதற்கு ரத்தக் குழாயைப் பொசுக்கி ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். இதற்கு மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

என்ன செய்யக் கூடாது?

மூக்கிலிருந்து ரத்தம் கசியும்போது எந்தக் காரணத்தைக்கொண்டும் மூக்கைச் சிந்தக்கூடாது.

விரலை நுழைத்து மூக்கை அடைக்கக் கூடாது.

மூக்கிலிருந்து ரத்தம் வடியும்போது, தலையை நிமிர்த்தக் கூடாது. காரணம், மூக்கிலிருந்து ரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.

மருத்துவர் சொல்லாமல் எந்த ஒரு மூக்கு சொட்டு மருந்தையும் மூக்கில் விடாதீர்கள்.

தடுப்பது எப்படி?

குளிக்கும்போது தினமும் மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.

தேவையில்லாமல் மூக்கைக் குடையும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

மூக்குக்குள் குச்சி, ரப்பர் போன்ற பொருட்களை நுழைத்து விளையாடக் கூடாது.

மிகவும் குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது. மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது.

அதிக வெப்பச் சூழல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

ஒவ்வாமை நோய் உள்ளவர்கள், அதற்குரிய சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அடிக்கடி மூக்கடைப்பு ஏற்பட்டால், அலட்சியமாக இருக்கக் கூடாது. காரணம் அறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.

குளிர் காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் யோசனைப்படி மட்டும் மூக்கு சொட்டு மருந்து விடலாம்.

சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, சத்துக் குறைவு நோய்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளவும். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com/general/health/மூக்கில்-ரத்தம்-வடிவது-ஏன்/article7437990.ece?widget-art=four-rel

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.