Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களை மதிக்காத மியான்மர்

Featured Replies

மக்களை மதிக்காத மியான்மர் -1

 
இர்ரவடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான பகான் நகரம். பகான் மன்னராட்சிக் காலத்தில் 9-13ம் நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட இந்நகரமே பின்னாளில் நவீன மியான்மர் உருவாகக் காரணமாக இருந்தது.
இர்ரவடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான பகான் நகரம். பகான் மன்னராட்சிக் காலத்தில் 9-13ம் நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட இந்நகரமே பின்னாளில் நவீன மியான்மர் உருவாகக் காரணமாக இருந்தது.

இரும்புத்திரை நாடு என்று முன்பு சோவியத் யூனியனைச் சொல்வார்கள். இன்றைக்கு அந்தப் பட்டத்தை மியான்மருக்கு அளித்துவிடலாம்.

மியான்மர் குறித்த செய்திகள் எளிதில் வெளியே கசிந்து விடுவதில்லை. அப்படி ஒரு ராணுவ ஆட்சி (இப்போது ராணுவ ஆட்சி இல்லையென்பது பெயருக்குத்தான்). ஆனால் சமீபகாலமாக மியான்மர் தொடர் புள்ள சில செய்திகள் இந்திய ஊடகங்களில் அழுத்தமாகவே பதிவாகி வருகின்றன.

மியான்மரில் தமிழர்கள் பலர் உண்டு. (இது குறித்த பின்னணியைப் பிறகு பார்ப்போம்). மலேசியாவில் அதிக ஊதியத்துக்கு வேலை கிடைக்கும் என்று இவர்களில் சிலர் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கே கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்படுகிறார்கள். இப்படி ஒரு செய்தி.

மற்றொன்று இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் மியான்மருக்குள் தங்கியுள்ள தகவல் கிடைக்க, அதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் அங்கு புகுந்து நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம். இப்படி (பாகிஸ்தான் தவிர) வேற்று நாட்டு எல்லைக்குள் நம் ராணுவம் நுழைந்ததாக செய்திகள் வந்ததில்லை). (அதுகூட போரின்போதுதான் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம்

முன்னேறியதாகச் செய்திகள் வரும்). எனவே மியான்மருக்குள் நம் ராணுவம் நுழைந்தது ஒரு விதிவிலக்காகவே பலருக்கும் படுகிறது.

தேக்குக்குப் பெயர்போன பர்மாதான் இன்றைய மியான்மர். ரங்கூன் என்று நாம் அறிந்து வைத்திருக்கும் அதன் தலைநகரை அவர்கள் யாங்கூன் என்கிறார்கள். பதற வைக்கும் அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடாக விளங்குகிறது மியான்மர். சுற்றிலும் உள்ள மிகப்பல நாடுகள் ஜனநாயகத்துக்கு மாறியும்கூட 1962லிருந்து 2011 வரை ராணுவ ஆட்சி மட்டுமே தொடர்ந்து நடைபெற்ற நாடு இது.

20 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு பொதுத் தேர்தல் நடந்து ஜனநாயகம் அங்கு மலர்ந்ததாகக் கூறப்பட் டாலும் அதை உண்மையான மக்களாட்சியாக உலக நாடுகள் ஏற்கத் தயாராக இல்லை.

1824ல் தொடங்கி அடுத்தடுத்து மூன்று யுத்தங்கள். மியான்மரை (அன்றைய பர்மாவை) முழுவதுமாக தங்கள்வசம் எடுத்துக் கொண்டனர் ஆங்கிலேயர்கள்.

இதற்கு மியான்மரில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் முக்கிய மானவர் ஒரு புத்த பிட்சு. சாயா ஸான் என்ற பெயர் கொண்ட அவருக்குப் பெரும் ஆதரவு எழுந்தது. ஆயிரக்கணக்கான பர்மியர்கள் அவருக்குப் பின்னால் திரண்டனர்.

இதைத் தொடர்ந்து ஆங்கிலேயர் செய்த ஒரு செயல் மிகக் கடுமையான எதிர்ப்பை அங்கு விளைவித்தது. அது இந்தியா தொடர்பானது!

நிர்வாக வசதிக்காக தனது காலனி நாடுகளை இஷ்டத்துக்கு மாற்றி அமைத்தது ஆங்கிலேய அரசு. இந்தக் கோணத்தில் தன் பிடிக்குள் வந்த பர்மாவை இந்தியாவோடு இணைத்தது.

தங்கள் தனித்தன்மைய இழக்க யாருக்குத்தான் பிடிக்கும்? அதுவும் தாய் நாடு என்ற அடையாளத்தை இழந்தால் எப்படி? சாயா ஸான் தலைமையில் எதிர்ப்பு உச்சத்தை அடைந்தது.

பர்மிய மாணவர்களும் களத்தில் குதித்தனர். `அகில பர்மா மாணவர் யூனியன்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் இவர்களும் களம் இறங்கினார்கள்.

தாகின் நூ, தாகின் ஆங் சான் ஆகிய இருவரும் இந்த மாணவர் அமைப்பின் தலைவர்கள் ஆக்கப்பட்டனர். வலிமை மிக்கத் தலைவர்களாக தங்களை உருவாக்கிக் கொண்டனர். மொத்த மாணவர்களையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடச் செய்தனர்.

பர்மாவில் தனக்கெதிராக திரண்டெழுந்த எதிர்ப்பைக் கண்டு பிரிட்டிஷ் அரசு மலைத்தது. பர்மாவை மீண்டும் தனி நாடாக்க சம்மதித்தது. 1939ல் இந்தியாவிலிருந்து பர்மா பிரிந்து மீண்டும் தனி நாடானது. கூடவே `உங்களுக்கு ஓரளவு தன்னாட்சியும்கூட வழங்குகிறோம். சந்தோஷப்படுங்கள்’ என்றது பிரிட்டன்.

எதிர்ப்பாளர்கள் சந்தோஷப்படாதது மட்டுமல்ல, பதிலுக்கு உரத்துக் குரல் கொடுத்தார்கள். `எங்களுக்குத் தேவை கொஞ்சம் தன்னாட்சி அல்ல. முழு சுதந்திரம்’ என்று சீறினார்கள் பர்மாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்.

அந்தச் சமயத்தில் `பிரிட்டிஷ் ஆட்சியை உங்கள் நாட்டிலிருந்து அகற்றுவதற்கு நாங்கள் கை கொடுக்கிறோம்’ என்று குரல் கொடுத்தது வேறொரு நாடு. ஜப்பான்!

ஜப்பானும், பிரிட்டனும் தீவிர எதிரிகளாக விளங்கிய காலகட்டம் அது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-1/article7353461.ece?ref=relatedNews

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர் - 2

 
 
 
சுதந்திர தின விழாவில் பர்மாவின் முதல் அதிபர் தாகின் ஆங் சான் (நடுவில்).
சுதந்திர தின விழாவில் பர்மாவின் முதல் அதிபர் தாகின் ஆங் சான் (நடுவில்).

பர்மிய மாணவர் அமைப்பின் தலைவர்கள் என்று தாகின் நூ, தாகின் ஆங் சான் என்று இருவரைக் குறிப்பிட்டிருந்தோம். அந்த இரண்டு தாகின்களும் சேர்ந்து ‘’பர்மா சுதந்திர ராணுவம்’’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்.

ஜப்பானுக்கு நேசக்கரம் நீட்டியது இந்த அமைப்பு. எப்படியாவது சுதந்திரம் பெற வேண்டும் என்ற தீவிர முனைப்பு. ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற ஃபார்முலாவின்படி நம்மோடு இவர்கள் கைகோர்க்கிறார்கள். நல்லதுதானே’. இப்படித்தான் ஜப்பானின் ஆதரவை நினைத்தது பர்மா சுதந்திர ராணுவம். ஆனால் குட்டி நாடான ஜப்பானின் குள்ளநரித்தனத்தை பர்மா அப்போது உணர்ந்திருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

‘’பர்மா இனி சுதந்திர நாடு. பிரிட்டன் காலனி அல்ல’’ என்று அறிவித்தது ஜப்பான். அதன் ராணுவமும் பர்மா சுதந்திர ராணுவமும் அங்கு கைகோர்த்து கொக்கரித்தன. பிரிட்டன் திகைத்தது. உடனடி பதில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகக் கொஞ்சம் அமைதி காத்தது.

‘கிடைத்தது சுதந்திரம்’ என்று கூக்குரலிட்ட பர்மியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கிடைத்தது ஏமாற்றம்தான் என்பதை உணர்ந்தனர். பர்மாவைச் சுதந்திர நாடு என்று கூறிய ஜப்பான் அதைத் தன்பிடியில் கொண்டு வந்தது. பர்மா முழுக்க முழுக்க ஜப்பானின் கைக்குச் சென்றது. ‘அதனால் என்ன? பிரிட்டனின் பிடியிலிருந்து உங்கள் மீட்டோமா இல்லையா?’ என்று ஆணவமாகக் கேட்டது ஜப்பான்.

பர்மிய மக்கள் வெறுத்துப் போனார்கள். பிரிட்டனுக்குப் பதிலாக ஜப்பான், அவ்வளவுதானே, மற்றபடி சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடியவில்லையே. எதையாவது செய்ய வேண்டுமென்று யோசித்த பர்மியத் தலைவர்கள் பலருக்கும் விசித்திரமாகத் தோன்றக்கூடிய ஒரு முடிவை எடுத்தார்கள். பிரிட்டனின் உதவியையே நாடலாம்.

இந்த முடிவுக்குக் காரணம் இருந்தது. பர்மாவின் எதிர்ப்பைக் கண்டு அதை மீண்டும் தனிநாடாக ஒத்துக் கொண்ட பிரிட்டன் தன்னாட்சியையும் அதற்கு அளித்திருந்தது. ஆனால் ஜப்பானின் ஆட்சி வெறி அதை ஒரு கொடுங்கோல் சாம்ராஜ்யமாகவே அப்போது தோன்ற வைத்தது.

‘ஜப்பானுக்கு எதிராக களமிறங்க நாங்கள் தயார்’ என்று முன்வந்தது பிரிட்டன். ஆனால் பர்மியத் தலைவர்கள் ஒரு நிபந்தனையை விதித்தனர். ‘ஜப்பானை விரட்டிய பிறகு எங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்’.

இது பிரிட்டனுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் எதிரியான ஜப்பானை எப்படி விட்டு வைக்க முடியும்? பர்மியத் தலைவர்களின் கோரிக்கைக்கு ஒத்துக் கொண்டார்கள். இம்முறை பர்மிய ராணுவம் பிரிட்டனுக்கு ஆதரவாக இருந்தது. ஜப்பான் வெளியேற்றப்பட்டது.

‘முதலில் ஜப்பானை வெளியேற்றலாம். பிறகு மெல்ல மெல்ல பர்மாவை மறுபடியும் நம் வசம் கொண்டு வந்துவிடலாம்’ இதுதான் பிரிட்டனின் திட்டம். ஆனால் அது தன் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது. காரணம் அது நினைத்ததைவிட பர்மாவில் விடுதலை இயக்கம் மிக பலமுள்ளதாக உருவாகி இருந்தது. அதைப் பகைத்துக் கொண்டு அரசு அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

‘’பர்மாவுக்குச் சுதந்திரம் அளித்துவிடலாம். சுதந்திர பர்மாவின் முதல் அதிபராகும் வாய்ப்பை தாகின் ஆங் சானுக்கே அளித்துவிடலாம்’’. இப்படித்தான் 1947ல் பிரிட்டிஷ் அரசு தீர்மானித்தது.

ஆங் சான் நவீன பர்மிய ராணுவத்துக்குத் தலைவராகக் கருதப்படுபவர். நவீன பர்மாவுக்கேகூட தலைவராக எண்ணப்படுபவர். பர்மாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியவர்.

பர்மாவின் சுதந்திரத்தை நோக்கி ஒவ்வொரு அடியையும் செதுக்கிய சிற்பி எனலாம். பர்மிய மக்கள் அவரை ‘’போக்யோகே’’ என்று அன்புடன் அழைத்தார்கள். இதற்குப் பொருள் தளபதி என்பது.

ஆங் சான் புத்த பள்ளி ஒன்றில் படித்தவர். பின்னர் ரங்கூன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஆனவர். அப்போதே மாணவர் தலைவர். ‘கோவே’ (மயிலின் அழைப்பு) என்ற மென்மையான தலைப்பு கொண்ட பத்திரிகையின் ஆசிரியராகி, அதில் அடக்குமுறைக்கு எதிரான

கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார். ‘’இந்தப் போக்கு தொடர்ந்தால் பல்கலைக்ழகத்திலிருந்தே உங்களை நீக்கிவிடுவோம்’’ என்றனர் அதிகாரிகள். அதுவும் ஒரு மூத்த பல்கலைக்கழக அதிகாரியைக் கடுமையாக விமர்சித்து எழுதிய ஒரு கட்டுரை அந்த இதழில் வெளி வந்ததும் அதிகார வர்க்கமே கொதித்தது.

அந்தக் கட்டுரையை எழுதியவர் யார்? பதிலளிக்க மறுத்தார் ஆங் சான். அவரை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க முயற்சித்தது. (அப்போது ஆங் சானுக்குத் தோள் கொடுத்த சக மாணவர் மூ நூ பின்னர் மியான்மர் வரலாறிலும் முக்கிய இடம்பிடித்தார்). தொடர்ந்தது மாணவர்களின் ஸ்ட்ரைக். ஆங் சான் மிகப்புகழ் பெற்றார். அகில பர்மா மாணவர் யூனியனுக்குத் தலைவர் ஆனார்.

1938ல் தேசிய அரசியலில் புகுந்தார். பிரிட்டனுக்கு எதிராக வலிமையாகக் குரல் கொடுத்தார். ‘’எங்கள் பர்மா யூனியன்’’ என்ற அமைப்பில் சேர்ந்து விரைவிலேயே அதன் பொதுச் செயலாளர் ஆனார்.

பிரிட்டனின் கெடுபிடிகள் காரணமாக பர்மாவை விட்டு தலைமறைவானார். சீனாவுக் குச் சென்று அந்த அரசின் உதவியைப் பெற லாம் என்று திட்டமிட்டார். ஆனால் ஜப்பான் தடையிட்டது. ‘எங்கள் நாட்டுக்கு வாருங்கள். உங்கள் ஆசைகளை நிறைவேற்றுகிறோம்’’ என்றது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-2/article7357332.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர் - 3

 
 
 
கணவர் மைக்கேல் ஹாரிஸுடன் ஆங் சாங் சூச்சி. (கோப்புப் படம்)
கணவர் மைக்கேல் ஹாரிஸுடன் ஆங் சாங் சூச்சி. (கோப்புப் படம்)

ஜப்பானுக்குச் சென்ற ஆங் சான் பின்னர் ரகசியமாக பர்மாவுக்கு வந்து சேர்ந்தார். ரகசிய உளவுத்துறை ஒன்றை உருவாககினார்.

ரங்கூன் 1942ல் பிரிட்டனிடமிருந்து ஜப்பான் கைக்குச் சென்றது. அப்போது மீண்டும் ஜப்பானுக்கு வரவழைக்கப்பட்ட ஆங் சானுக்குப் பெரும் கவுரவம் அளித்தது அந்த அரசு.

புதிய பர்மாவில் போர் அமைச்சர் பதவியை ஆங் சானுக்கு அளித்தது ஜப்பான். ஆனால் ஆங் சானுக்கு சந்தேகம் முளைவிடத் தொடங்கியது. உண்மையாகவே முழு சுதந்திரம் அளிக்கும் எண்ணம் ஜப்பானுக்கு இருக்கிறதா? விரைவிலேயே தனது சந்தேகம் நியாயமானதுதான் என்பதைப் புரிந்து கொண்டார். “பிரிட்டிஷார் எங்கள் ரத்தத்தைக் குடித்தார்கள் என்றால் ஜப்பானியர்கள் எங்கள் எலும்புகளை உடைத்தார்கள்’’ என்று ஆங் சான் கூறியதாக அவரது தளபதி ஒருவர் பின்னர் கூறியதுண்டு.

இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார் ஆங் சான். அப்போது இரண்டாம் உலகப்போரும் நடைபெற்றது. பிரிட்டனுக்கு உதவ ஒப்புக் கொண்டார் ஆங் சான்.

பதிலாக அவர் கேட்டது பர்மாவுக்கு முழு சுதந்திரம்.

ஜப்பானிடமிருந்து பர்மா மீட்கப்பட்டது. ஆங் சான் அதிபராக விளங்குவார் என்பது பரவலான எதிர்பார்ப்பாக இருந்தது.

ஒரு நாள் அவரும் வேறு ஆறு பேரும் (இந்த ஆறு பேரை தனது அமைச்சரவையில் ஆங் சான் சேர்த்துக் கொள்வதாக இருந்தார்) வருங்கால மியான்மர் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சில ராணுவ வீரர்கள் உள்ளே புகுந்து அத்தனை பேரையும் கொன்றனர். கொன்றது யார்? முன்னாள் ராணுவப் பிரதமர் யு ஸாவின் சதித் திட்டம்தான் இது என்று கருதப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு தொடுக்கப்பட்டது. தூக்கில் ஏற்றப்பட்டார். இந்த வழக்கில் வேறொரு விஷயமும் வெளியானது. கீழ் மட்டத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் பர்மிய ராணுவத்தினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் துப்பாக்கிகளை விற்றார்கள் என்பதுதான் அது.

ஆக பர்மாவுக்கு அதிகாரப் பூர்வமான சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்பாகவே ஆங் சான் படுகொலை செய்யப்பட்டார். இதை அறிந்ததும் நாடே துக்கத்தில் ஆழ்ந்தது.

சுதந்திரம் பெற்ற பர்மாவில் ராணுவ ஆட்சிதான் அமைந்தது. என்றாலும் ஆங் சான் குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த ராஜ மரியாதையை அரசு உணர்ந்தது. ஆங் சானின் மனைவியை பர்மாவின் இந்தியத் தூதராக நியமித்தது.

தனது இரண்டு வயது மகளோடு டெல்லி வந்து சேர்ந்தார் அந்த இளம் விதவைத் தாய். அங்கு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நட்பு கிடைத்தது அவர்களுக்கு.

குழந்தையை நேருவுக்கு மிகவும் பிடித்து விட்டது. “தேவதைபோல இருக்கிறாள்’’ என்று அவளை அடிக்கடிக் குறிப்பிட்டார். அந்த தேவதை டெல்லியில்தான் தன் பள்ளிப் படிப்பை முடித்தாள்.

‘’இனி என்ன செய்யப் போகிறாய்?’’ என்று அம்மா கேட்க, பளிச்சென்று பதில் வந்தது மகளிடமிருந்து. “ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது’’ என்றாள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தூய ஹக் கல்லூரியில் சேர்க்கப்பட்டாள் ஆங் சான் சூச்சி.

அங்கு அறிமுகமானார் மைக்கேல் ஹாரிஸ். சக மாணவர். திபெத் மற்றும் இமயமலைப் பகுதிகளை தன் ஆராய்ச்சிப் பொருளாக எடுத்துக் கொண்டிருந்தார் மைக்கேல். இதன் காரணமாக ஆசிய நிலவரங்கள் அவருக்கு அத்துபடியாகி இருந்தன. ஆங் சூச்சியும் அரசியல் கவுரவம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் பல விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். இருவரும் தொடர்ந்து மணிக்கணக்காக உலக நடப்புகளைப் பேசுவதும், விமர்சிப்பதும் வழக்கமாயின. ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக மாறியது. திருமணம் செய்து கொண்டனர்.

இதை அறிந்ததும் பல பர்மியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். “நமது பேரபிமானத்தைப் பெற்ற ஆங் சானின் மகள் ஒரு வேற்று நாட்டவனையா கல்யாணம் செய்து கொள்வது? அதுவும் நம்மை அடிமையாக வைத்திருந்த பிரிட்டனைச் சேர்ந்தவனையா?’’

இந்த விவரம் காதுகளை எட்டியதும் மைக்கேல் சற்று கவலைப்பட்டார். “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டதைப்பற்றி உன் நாட்டு மக்களில் பலருக்கும் அதிருப்தியாமே’’ என்று மனைவியிடம் கேட்டார்.

‘’இருக்கலாம். ஆனால் என்னைப் பற்றிய எந்த உண்மையையும் நான் மக்களிடமிருந்து மறைக்க விரும்பவில்லை. எனக்கு நேரடியாகவும், நேர்மையாகவும்தான் எதையும் அணுகிப் பழக்கம். என் நாட்டு மக்கள் என்னைப் பற்றி போகப்போக புரிந்து கொள்வார்கள்’’ என்றார் கம்பீரமாக.

தன் தனி வாழ்வைத் தீர்மானிப்பது தானாகவே இருக்க வேண்டுமே தவிர, பொது மக்களல்ல என்று நினைத்தார் ஆங் சான் சூச்சி. ஆனால் அப்போது அவர் உணரவில்லை, தன் வருங்கால வாழ்வு மியான்மரின் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கப் போகிறது என்பதை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-3/article7360824.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர் - 4

 
 
 
பர்மாவின் முதல் பிரதமர் யூ நூ. - ராணுவ ஆட்சியாளர நெ வின்
பர்மாவின் முதல் பிரதமர் யூ நூ. - ராணுவ ஆட்சியாளர நெ வின்

பர்மாவின் விடுதலை இயக்கத் தலைவர் ஆங் சான் படுகொலை செய்யப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் உதவித் தலைவராக விளங்கிய யூ நூ சுதந்திர பர்மாவின் முதல் பிரதமர் ஆனார். மாணவப் பருவத்திலிருந்தே இவர் ஆங் சானுக்குத் தோள் கொடுத்தவர். அடுத்தடுத்து நடை பெற்ற இரண்டு பொதுத் தேர்தல்களில் இவரது கட்சிதான் மெஜாரிட்டியைப் பெற்றது.

மூன்றாவது முறை அவர் பிரதமராகப் பதவியேற்றபோது ஒரு சிக்கல். அவரது இயக்கத்தில் பிளவு தோன்றியது. யூ நூவுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பாளர்கள் தோன்றினார்கள். யூ நூவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நூலிழை யில் அதில் தப்பித்தார் யூ நூ. நிலைமையை சமாளிக்க யூ நூ எடுத்த ஒரு முடிவு பர்மாவின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது.

‘’நான் தொடர்ந்து நாட்டின் தலைவனா கவே இருக்கிறேன். ஆனாலும் இந்த நாட்டின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டுமானால், ராணுவ ஆட்சி நடைபெற்றால் மட்டும்தான் அது சாத்தியம்’’ என்று அறிவித்தார். எதிரணி பிரமித்தது. ராணுவத் தளபதி நெ வின் என்பவர் அதிகாரத்தைக் கைப்பற்றத் தொடங்கினார். ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகார ருசியைக் கண்டது. யூ நூவும் ‘நாட்டின் தலைவராக இருக்கிறோம். நம் இயக்கத்தில் எனக்கு எதிராகக் கிளம்பியவர்களின் வாயை அடைத்து விட்டோம்’ என்பதில் திருப்தி அடைந்தார்.

1960ல் பொதுத் தேர்தல்கள் நடந்தன. மீண்டும் யூ நூ தேர்தலில் வென்றார். அவரிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைத்தார் நெ வின்.

ஆனால் அடுத்த இரண்டாவது வருடமே ராணுவப் புரட்சியை நடத்தி மீண்டும் ஆட்சியைத் தன்வசம் கொண்டு வந்தார் நெ வின். ‘’வேறுவழியில்லை. பர்மாவின் அரசியல் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இரும்புக்கரம் வேண்டும். எனவே முழுமையான ராணுவ ஆட்சி இருந்தால்தான் பர்மாவுக்கும் நல்லது’’ என்று விளக்கமும் அளித்தார்.

தன்னைப் பிரதமராகவும் அறிவித்துக் கொண்டார். ‘ரத்தம் சிந்தாத புரட்சி’ என்று தன் ஆட்சிப் பறிப்பை அவர் விவரித்துக் கொள்ள, பல சர்வதேச ஊடகங்களும் அதை வழிமொழிந்தன!

‘என்னவோ தெரியவில்லை, நாடாளு மன்ற ஜனநாயம் எங்கள் நாட்டுக்கு ஒத்து வரவில்லை’ என்று பொய்யாக ஆதங்கப் பட்டார் நெ வின். அரசியலமைப்பு சட்டம் தூக்கி எறியப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

நாட்டில் ஆங்கங்கே புரட்சி வெடித்தது. முக்கியமாக ரங்கூன் பல்கலைக்கழக மாணவர்கள் கொதித்தெழுந்தனர். அங்குள்ள சில பேராசிரியர்களும்தான். நெ வின் அரசு நடவடிக்கை எடுத்தது. அந்தப் பேராசிரியர்கள் கொல்லப்பட்டனர். மாணவர் சங்கக் கட்டடம் இடிக்கப்பட்டது.

‘’வாளுக்கு வாள், ஈட்டிக்கு ஈட்டி என்பதுதான் எங்கள் செயல்படாக இருக்கும்’’ என்று வானொலியில் கர்ஜித்தார். மாணவர் களுக்கெதிரான கோபம் அப்போதும் அவருக்கு அடங்கவில்லை. நாட்டின் அத்தனை பல்கலைக்கழகங்களையும் காலவரையின்றி இழுத்து மூடினார். இரண்டு வருடங்களுக்கு மாணவர்களுக்கு மேல்படிப்பு என்பதே இல்லாமல் போனது.

ஒன்று இரண்டல்ல, 26 வருடங்கள் ஆட்சி செய்த பிறகு போனால் போகிறது என்று பதவியை ராஜினாமா செய்தார் நெ வின். போகிற போக்கில் ‘’பர்மாவின் அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கலாம்’’ என்றும் அறிவித்தார்.

அடுத்து தலைமை ஏற்றவர் தளபதி ஸா மவுங். பழைய ராணுவப் பிரதமர் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் ‘ஜனநாயக அமைப்புதான் எங்களுக்கு வேண்டும். அப்படித்தான் பர்மாவின் அரசியல் அமைப்பு இருக்கவேண்டும்‘’ என்று குரல் கொடுத்தனர்.

ராணுவ ஆட்சி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ‘’மக்களே தீர்மானிக்க லாம் என்று கூறிவிட்டு எங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் எப்படி?’’ என்று போராட்டங்கள் எழுந்தன. ராணுவம் அடக்குமுறையை ஏவிவிட்டது. அதிகமாகக் குரல் கொடுத்த மக்கள் ஆட்சி ஆதரவாளர்கள் சத்தம் போடாமல் கொலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தளபதி ஸா மவுங் ஒரு அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பின் பெயர் ‘ஸ்லார்க்’. இதன் விரிவாக்கம் தேசிய சட்ட ஒழுங்கு மீட்புக் குழு. பெயர் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதன் மூலமாக அவர் காட்டியதெல்லாம் பலாத்காரம்தான்.

பர்மா கொந்தளிக்கத் தொடங்கியது. அதே சமயம் அது கடும் சித்ரவதைக்கும் உட்பட்டிருந்தது. அதே சமயம் ஆங்கிலேயரான மைக்கேல் ஹாரிசைத் திருணம் செய்து கொண்டிருந்த ஆங் சான் சூச்சியின் திருமண வாழ்வு இனிமையாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர், கின் என்று அடுத்தடுத்துப் பிறந்த இரண்டு மகன்கள் அந்த வாழ்வை மேலும் இனிமையாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அவருக்கு வந்து சேர்ந்தது ஓர் அழைப்பு. அனுப்பியவர் அவரது தாய். ‘’நான் மிகவும் நோய்வாய் பட்டிருக்கிறேன். உடனே பர்மாவுக்குத் திரும்பு’’. பதற்றத்துடன் பர்மாவை அடைந்தார் ஆங் சான் சூச்சி. மிகமிக மோசமாகத்தான் இருந்தது – அவரது தாயின் உடல் நிலையும், பர்மாவின் நிலையும்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-4/article7361855.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர்- 5

 
 
ஆங் சான் சூச்சி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பூட்டிய வாயிலில் நின்றபடி மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
ஆங் சான் சூச்சி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பூட்டிய வாயிலில் நின்றபடி மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

நெ வின் தலைமையில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஆங் சான் சூச்சி நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக பர்மா வந்து சேர்ந்தார்.

மகளைப் பார்த்தவுடன் தாயாருக்கு மகிழ்ச்சி. அந்த மகளைப் பார்த்தவுடன் மக்களுக்கும் மகிழ்ச்சி. அந்த அளவுக்கு மறைந்த ஆங் சானை மக்கள் நேசித்தனர்.

தாயின் உடல்நிலை சரியானவுடன் மீண்டும் கணவரிடமே திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் பர்மாவுக்கு வந்திருந்தார் ஆங் சான் சூச்சி. ஆனால் சூழல் மாறியது. தினமும் கூட்டம் கூட்டமாக பர்மிய மக்கள் அவரின் வீட்டுக்கு வந்தனர். “உங்கள் தந்தை அந்தக் காலத்தில் விடுதலை இயக்கத்துக்குத் தலைமையேற்றார். இப்போதுள்ள ராணுவ ஆட்சியிலிருந்து பர்மாவை மீட்க வேண்டும். அதற்கு மீண்டும் ஒரு விடுதலை இயக்கம் தேவை. அதற்கு நீங்கள்தான் தலைமை ஏற்க வேண்டும்’’ என்று வற்புறுத்தினர். இது உங்கள் கடமை என்பதுபோல் சிலர் அழுத்தம் கொடுக்க, எங்களுக்காக இதைச் செய்யுங்கள் என்று சிலர் கண்ணீர் வடித்தனர். ஆங் சான் சூச்சி முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார்.

இந்த நிலையில்தான் ஒரு கொடூர நிகழ்வு பர்மாவில் நடைபெற்றது. அது நடந்த தேதி 8-8-88. இதன் காரணமாக அது பின்னர் உலக அரசியல் மேடையில் `துரதிருஷ்டமான நாலெட்டு’ என்று குறிப்பிடப்பட்டது.

அன்றுதான், விடுதலை வேண்டுமென்று கோரிக்கை விடுத்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களை ராணுவ அரசு கொன்று குவித்தது. இந்த விஷயம் முடிந்தவரை நாட்டைவிட்டுப் பரவாமல் பார்த்துக் கொண்டது. இந்தக் கொடூரம் பற்றி விரிவாகவே பிறகு பார்க்கலாம்.

பர்மிய மக்களின் அதிர்ச்சி எல்லை மீறியது. ஆங் சான் சூச்சி கொந்தளித்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க அவரால் முடியவில்லை. போதாக்குறைக்கு உள்ளூர் மக்களின் நெருக்கடி வேறு. அவரது முயற்சியால் ஜனநாயக தேசிய அணி உருவானது. அதன் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராணுவ அரசை விமர்சிக்கத் தொடங்கினார்.

அதற்கு அடுத்த மாதம் ஆங் சான் சூச்சியின் தாயார் இறந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இதைப் பார்த்தவுடன் ராணுவ அரசுக்கு கிலி உண்டானது. `எதனால் இப்படியொரு மாபெரும் அளவில் மக்கள் திரள வேண்டும். மறைந்த ஆங் சான் மீது அவர்கள் கொண்ட மரியாதையை அவரது மனைவி மீதும் காட்டுகிறார்களா? இந்த ஆதரவு அவர்களின் மகள் ஆங் சான் சூச்சிக்கும் சென்று விடுமோ? அப்படியானால் நமது ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு அதிகமாகுமோ?’ என்று யோசிக்கத் தொடங்கியது.

ஆங் சான் சூச்சி அமைதியான முறையில்தான் போராடினார். `பர்மாவில் ஜனநாயகம் திரும்ப வேண்டும்’ என்பதுதான் அவரது முக்கிய போராட்டமாக இருந்தது. அதற்கே ராணுவ அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இதே சமயம் பிற உலக நாடுகளிலும் ஆங் சான் சூச்சியின் அமைதி வழிப் போராட்டம் பாராட்டுகளை குவித்துக் கொண்டிருந்தது. திடீரென அவரை `வீட்டுச் சிறையில்’ அடைத்தது ராணுவ அரசு. பூடானிலிருந்த ஆங் சான் சூச்சியின் கணவர் இதைக் கேட்டு வருந்தினார். பர்மாவுக்கு வர முடிவெடுத்தார். ஆனால் அவருக்கு தனது மனைவியைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

இப்படியெல்லாம் செயல்பட தங்கள் நாட்டின் ஒரு விதியைப் பயன்படுத்திக் கொண்டது ராணுவ அரசு.

வேற்று நாட்டைச் சேர்ந்த சோனியாவை ராஜீவ் காந்தி திருமணம் செய்து கொண்ட பிறகும், அவர் பிரதமர் ஆவதை நமது அரசியலமைப்புச் சட்டம் தடுக்கவில்லை. சொல்லப்போனால் பின்னொரு காலத்தில் சோனியா காந்தியே பிரதமராகும் கட்டம் வந்ததும் கடைசி நிமிடத்தில் அவரே அதை மறுத்ததாகச் செய்திகள் வந்ததும் நமக்குத் தெரியும். ஆனால் பர்மாவில் இதெல்லாம் நடக்காது.

வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்ட யாருமே அங்கு நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இருக்க முடியாது. இந்த சட்டப் பிரிவை கையில் எடுத்துக் கொண்டுதான் ஆங் சான் சூச்சி நேரடியாக அரசியலில் நுழையாமலும் தேர்தலில் நிற்க முடியாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறது ராணுவ அரசு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-5/article7367802.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர் - 6

 
 
 
நோபல் பரிசு உரையாற்றிய ஆங் சான் சூச்சி. (கோப்புப் படம்)
நோபல் பரிசு உரையாற்றிய ஆங் சான் சூச்சி. (கோப்புப் படம்)

ஆறு வருடங்கள் ஆங் சான் சூச்சியை வீட்டுக் காவலில் வைத்த பிறகு அரசு அவரை விடுவித்தது. என்றாலும் பர்மா முழுவதும் அவர் பயணம் செய்ய முடியாமல் பலவித தடங்கல்களை ஏற்படுத்தியது. எனவே தன் வீட்டின் கதவுக்குப் பின்னால் இருக்கிற மேடையில் ஏறி ஒவ்வொறு ஞாயிற்றுக்கிழமையும் ஆங் சான் சூச்சி பேச, சாலையில் இருந்த வண்ணம் அதைக் கேட்டு உத்வேகம் பெறத் தொடங்கினார்கள் மக்கள். (எழுபது வயதான ஆங் சான் சூச்சி ‘ஜனநாயகம், அடிப்படை உரிமைகள்’ ஆகிய தலைப்புகளில் பேசினால் இன்றளவும் சாலைப் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கூடிக் கேட்கிறார்கள்).

ஆங் சான் சூச்சியின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்தது. 1991-ல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது உலக நாடுகளின் கவனம் பர்மாவின்மீது அழுத்தமாகவே விழத் தொடங்கியது. (இதற்கு அடுத்த வருடம் அவருக்கு சைமன் பொலிவர் பரிசு வழங்கப்பட்டது. 1993-ல் அவருக்கு ஜவஹர்லால் நேரு விருது அளிக்கப்பட்டது.

2008-ல் அமெரிக்க அரசு அவருக்கு ‘அமெரிக்க பாராளுமன்றத்தின் தங்கப் பதக்கத்தை’ வழங்கியது. அமெரிக்க சரித்திரத்திலேயே சிறையில் இருக்கும் ஒருவருக்கு இந்தப் பதக்கத்தை வழங்கியது இதுவே முதல் முறை).

நோபல் பரிசு பெற்ற பல்வேறு அறிஞர்கள் வேறொரு விஷயத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூட்டாக ஓர் அறிக்கையைத் தயார் செய்து பர்மாவின் ராணுவ அரசுக்கு அனுப்பினார்கள். அந்த அறிக்கையில் பல கோரிக்கைகள். அவற்றில் முக்கியமானவை ‘ஆங் சான் சூ கி விடுதலை செய்யப்பட வேண்டும். பர்மாவில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்’ ஆகியவைதான்.

ராணுவ அரசு நேரடியாக இந்த அறிக்கையைப் பெற ஒத்துக்கொள்ளவில்லை. எனவே இந்தக் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளை தாய்லாந்து - மியான்மர் எல்லையில் நின்று கொண்டு அவர்கள் விநியோகிக்க, ராணுவ அரசு சிறிது சங்கடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆங் சான் சூச்சிக்கு அளிக்கப்பட்ட இடைஞ்சல்கள் கொஞ்சமல்ல. அவருக்கு எண்ணிலடங்காத இழப்புகள் ஏற்பட்டன. அவரது கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தது ராணுவ ஆட்சி. அதைவிடக் கொடுமை சத்தம் போடாமல் பலரை ‘மறைய வைத்த’ கொடூரம்.

ஆங் சான் சூச்சியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரை கடும் காவலில் வைத்தது அரசு. அவர்மீது எந்தக் குற்றச்சாட்டுமே சுமத்தப்படவில்லை. இருந்தும் சிறைவாசம். ஆங் சான் சூச்சியின் அந்தரங்கப் பணியாளர் ஒருவர் திடீரென ‘மாயமாக மறைந்தார்’. அவரை பின்னர் சிறைச்சாலையில் பார்த்ததாக ஒரு தகவல் கசிந்தது.

ஆங் சான் சூச்சியின் ஆலோசகரான லீயோ நிகோலஸ் என்பவருக்கு மூன்ற வருட சிறை தண்டனையை அளித்தது அரசு. கூறப்பட்ட காரணம் - அவர் வைத்திருந்த ஃபாக்ஸ் கருவி ஒன்றுக்கு லைசன்ஸ் பெற்றிருக்காததுதான். விடுதலைக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருந்தபோது அவர் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரிய ஆங் சான் சூச்சியின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்தது ராணுவ அரசு.

வீட்டுச் சிறையில் இருந்த ஆங் சான் சூச்சிக்கு ‘கருணையுடன்’ ஒரு வாய்ப்பு அளித்தது ராணுவ அரசு. ‘’நீங்கள் நாட்டை விட்டு வெளியேற சம்மதித்தால் உங்களை விடுவித்து விடுகிறோம்’’ என்றது. சூச்சி மறுத்தார். ‘ராணுவ ஆட்சி மக்களாட்சி ஆக வேண்டும். அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப் பட வேண்டும்’ என்று பதிலுக்கு நிபந்தனைகளை விதித்தார். இவற்றை அரசு ஏற்கவில்லை.

1990-ல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. சூச்சியின் ஆதரவைப் பெற்ற ஜனநாயக தேசியக் கழகம் பெரும்பாலான தொகுதிகளில் (80 சதவீதத்துக்கும் அதிகம்) வென்றது. ஆனால் இதை ஏற்க மறுத்து ராணுவ ஆட்சி தொடர்ந்தது.

இந்த நிலையில் ‘’1990 தேர்தலில் மக்கள் பெருவாரியாகத் தேர்ந்தெடுத்த எங்கள் கட்சிதான் அரசமைக்க வேண்டும். பர்மாவில் ராணுவ ஆட்சி மறைய வேண்டும்’’ என்று ஆங் சான் சூச்சி போராடினார்.

ஆங் சான் சூச்சியைத் தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மியான்மரின் ஜனநாயகக் காற்றை ஒட்டுமொத்தமாக நிறுத்தி விடுவார்களோ?’ என்று பதைபதைப்பு அந்த நாட்டு மக்களுக்கு.தவிர, வேகமாக அதிகரித்து வரும் சீரழியும் (போதை வன்முறை) சிறுவர்களின் எண்ணிக்கையும் அவர்களைக் கவலை கொள்ள வைத்தது.

ஆனால், மியான்மரை ஆண்ட ஸ்லார்க் அமைப்பு, தன் அடக்குமுறையினாலேயே நாட்டை அமைதிப்படுத்திவிட முடியுமென்று நம்பியது. அதே சமயம் வெளிநாட்டு முதலீடுகளையும், நன்கொடைகளையும் வரவேற்கத் தொடங்கியது.

‘ஜனநாயகத்துக்கு எதிரான ஓர் அரசு வெளிநாட்டு உதவிகளைக் கேட்ப தென்பது சீனாவின் டெக்னிக். எனவே, ஸ்லார்க்கை வழிநடத்துவதில் சீனர் களுக்கும் பங்கு இருக்க வாய்ப்பு உண்டு’ என்று சில அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றார்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-6/article7373784.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர்- 7

 
8-8-88 போராட்டத்தின் 25 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2013-ம் ஆண்டு ரங்கூனில் மாணவிகள் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)
8-8-88 போராட்டத்தின் 25 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2013-ம் ஆண்டு ரங்கூனில் மாணவிகள் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)

துரதிருஷ்டமான நான்கு எட்டு (8.8.88) குறித்துக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம்.

1962-ல் துப்பாக்கி முனையில் ஆட்சியைக் கைப்பற்றினார் நெ வின். அப்போது ஆசியாவின் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்றாக விளங்கியது பர்மா. தேக்கு என்றால் பர்மா தேக்குதான். அரிசி விளைச்சலோ அமோகம்.

ஆனால் ராணுவ ஆட்சியில் ஊழல் மலிந்தது. அரசின் கொள்கைகள் நீர்த்துப் போயின. உலகின் மிக வறுமையான நாடுகளில் ஒன்றாக பர்மா மாறியது. தவிர மக்களின் குரலை நசுக்குவதிலேயே முழு முனைப்பு காட்டியது ராணுவ ஆட்சி.

அடக்கப்படும் எதுவும் ஒரு நாள் பீறிட்டெழுவது இயல்புதானே!

1985 நவம்பரின் போதே மாணவர்கள் அணி திரண்டனர். ‘உள்ளூர் கரன்சி நோட்டுகள் இனி செல்லாது’ என்று அரசு கூறியதற்கு பலமான எதிர்ப்பு தெரிவித்தனர்.

1987 செப்டம்பர் 5 அன்று நெ வின் வேறொரு அறிவிப்பை வெளியிட்டார். ‘’இனி 100, 75, 35, 28 மதிப்பு கொண்ட கியாத் கரன்சி நோட்டுகள் செல்லுபடியாகாது. எனவே உங்களிடம் இருக்கும் அத்தகைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளுங்கள்’’ என்றார்.

45 மற்றும் 90 கியாத் நோட்டுகள் மட்டும் இதிலிருந்து தப்பி விட்டன. இதற்குக் காரணம் இந்த இரண்டு எண்களும் 9 என்ற எண்ணால் முழுமையாக வகுபடக் கூடியவை என்பதுதான். நெ வின் தனது அதிஷ்ட எண் 9 என்று கருதியவர்.

தவிர கல்விக் கட்டணமும் உயர்த்தப்பட்டது. காரணம் கல்வி என்பதையே அரசு அவசியமில்லை என்று கருதியதுதான்.

ரங்கூன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற அமைப்பின் மாணவர்கள் இவற்றிற்கு எதிராக கடும் கலவரங்களில் ஈடுபட்டனர். ரங்கூன் நகரம் முழுவதுமே பற்றி எரிந்தது. ரங்கூனில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

பர்மாவின் பிற பகுதிகளில் உழைப்பாளர்களும், துறவிகளும்கூட அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சில அரசுக் கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.

ஒருவழியாக 1987 அக்டோபரில் கல்விக் கூடங்கள் திறந்தன. ஆனால் அதே ஆண்டு டிசம்பரில் அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை மீண்டும் பலரது எதிர்ப்பைத் தூண்டியது. ‘’அரசுக்கு நிதி தேவை. எனவே விவசாயிகள் தங்கள் விளைச்சலை சந்தை விலையைவிட கணிசமாகக் குறைந்த விலையில் அரசுக்கு விற்க வேண்டும்’ என்ற அறிவிப்பு கிராம மக்களை முழுமையாக அரசுக்கு எதிராகத் திருப்பியது.

ஆனால் 1988 கலவரங்களுக்கான விதை தொடர்பில்லாத ஒரு விஷயத்தில் தொடங்கியதுதான்.

1988 மார்ச் 12 அன்று ரங்கூன் மாணவர்கள் சிலர், கல்லூரி மாணவர்கள் அல்லாத சிலருடன் டீக்கடை ஒன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். கடையில் எந்த கேசட்டைப் போட வேண்டும் என்பதில் தகராறு தொடங்கியது. கைகலப்பில் முடிந்தது. ஒரு மாணவன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான். காவல்துறைக்கு எதிராக மாணவர்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர். 500க்கும் அதிகமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். மீண்டும் கலவரங்கள். ஃபோன்மா என்ற மாணவன் குண்டடிபட்டு இறந்தான். எதிர்ப்பு தொடர்ந்தது. பின்னர் நேரடித் தொடர்பில்லாத மாணவர்கள்கூட இந்த எதிர்ப்பில் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

காவல்துறையின் மிருகத்தனமான அடக்குமுறை, அரசு இயந்திரத்தில் நிலவிய ஊழல், நாட்டின் பொருளாதாரத்தை அரசு சீர்குலைத்தது போன்ற காரணங்கள் மாணவர்களுக்குக் கடும் கோபத்தை அளித்தன. அவ்வப்போது பர்மாவில் ஆங்காங்கே மாணவர் போராட்டங்கள் வெடித்தன. பல மாணவர்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையினரால் பல மாணவிகளும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர்,

நாட்டில் பல கட்சிகள் கொண்ட மக்களாட்சி வேண்டுமென்ற கோரிக்கை உரத்து ஒலிக்கத்தொடங்கியது.

இவற்றின் தொடர்ச்சியாக நெ வின் 1988 ஜூலை 23 அன்று ராஜினாமா செய்தார். பலகட்சிகள் கொண்ட மக்களாட்சியை அளிக்கிறேன் என்று ஒப்புக்குச் சொன்னார். ஆனால் அவர் புதிய அரசுக்குத் தலைமை தாங்க அழைத்தது ஸெயின் லுவின் என்பவரை. இவர் ‘ரங்கூனின் கசாப்புக் கடைக்காரர்’ என்று பெயர் வாங்கியவர்.

1988 ஆகஸ்ட்டில் எதிர்ப்புகள் உச்சத்தை அடைந்தன. மாணவர்கள் அனைவருமே தேசிய அளவில் ஒன்றுபட்டு அரசுக்கு எதிரான எதிர்ப்பைத் தெரிவிக்க 8-8-88 என்ற தேதியைத் தேர்ந்தெடுத்தனர்.

ரங்கூன் தெருக்களில் புதிது புதிதாக போஸ்டர்கள் தோன்றின. அவற் றிலெல்லாம் மயிலின் உருவம் காணப்பட்டது. அகில பர்மா மாணவர் கூட்டமைப்பின் குறியீடுதான் மயில்.

அதிசயமாக சில நாளிதழ்களும்கூட எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்தன. (அவை அப்படிச் செய்யாது என்று நம்பி அரசு அவற்றை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை).

மாணவர்கள் தங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி ரங்கூன் மற்றும் மண்டலே ஆகிய பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்களையும், துறவிகளையும் கேட்டுக் கொள்ள, அவர்களின் ஆதரவு கிட்டியது. கொஞ்சம் எதிர்பாராத வகையில் அரசு ஊழியர்கள்கூட மாணவர்களுக்கு ஆதரவு அளித்தனர். பல்வேறு தளங்களில் இருந்த மக்களும் தங்கள் ஆதரவை அளிக்கத் தொடங்கினார்கள். பர்மா

முழுவதுமே தீப்பற்றி எரிந்ததுபோல அரசுக்கு எதிரான உணர்வில் கனன்று கொண்டிருந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-7/article7378010.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர் - 8

 
 
1888-ம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த சிறுமியை தூக்கிச் செல்லும் டாக்டர் (இடது). (கோப்புப் படம்)
1888-ம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த சிறுமியை தூக்கிச் செல்லும் டாக்டர் (இடது). (கோப்புப் படம்)

மாணவர்களில் தொடங்கி பொது மக்கள் வரை அரசுக்கெதிராகத் தங்கள் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்த, அரசு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இரவு எட்டு மணியிலிருந்து காலைவரை ஊரடங்குச் சட்டம். எங்குமே எப்போதுமே ஐந்து பேருக்குமேல் சேர்ந்து இருக்கக் கூடாது.

1988 ஆகஸ்ட் 8 அன்று ஒரு பொது வேலை நிறுத்தம் திட்டமிடப்பட்டது. சிறுபான்மையினர், புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர், மாணவர்கள், உழைப்பாளிகள் போன்றவர்கள் இதில் அதிக அளவில் பங்கேற்றனர்.

செப்டம்பர் 19 வரை தினமுமே எதிர்ப்பு ஊர்வலங்கள் இருக்குமென்று அறிவிக்கப்பட்டது. எதிர்ப்பின் அளவு கண்டு அரசு அதிர்ச்சியடைந்தது.

“துப்பாக்கிகள் மேலே சுடுவதற்காக அல்ல’’ என்று முழக்கமிட்டார் நெ வின்.

எதிர்ப்பு பலமானதாகவே இருந்தது. காவல் நிலையம் ஒன்று தீக்கிரையானது. பதிலுக்கு ராணுவ வீரர்கள் ரங்கூன் பொது மருத்துவமனைக்கு நெருப்பு வைத்தனர். அங்கிருந்த நோயாளிகளுடன், டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோரும் அதில் இறந்தனர்.

8-8-88 அன்று சுமார் 10,000 பேர் இறந்ததாக எதிர்ப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட, 95 பேர் மட்டுமே இறந்ததாக ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர். (சீனாவில் நடைபெற்ற தியானன்மென் சதுக்கப் படுகொலைகளை பலவிதங்களில் நினைவுபடுத்துகிறது மியான்மரின் 8.8.88 படுகொலைகள் - மாணவர்களுக்கெதிரான அடக்குமுறையிலிருந்து இறந்தவர்கள் எவ்வளவு பேர் என்பதில் வெளியான மலையளவு வேறுபாடு உட்பட).

திடீரென எதிர்பாராத வகையில் லூவின் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து டாக்டர் மாங் மாங் என்பவர் நாட்டின் தலைவரானார்.

இவர் முன்னாள் அதிபர் நெ வின்னின் வாழ்க்கை வரலாறை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் இருந்திராத ஒரே தலைவர்.

8-8-88 படுகொலைகளைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஆகஸ்ட் 22 அன்றும் நாடு தழுவிய பெறும் எதிர்ப்புகள் நடைபெற்றன.

ஆகஸ்ட் 26 அன்று ஆங் சான் சூச்சி அரசுக்கு எதிரான முதல் பொது உரையை நிகழ்த்தினார். 5,000க்கும் அதிகமானவர்கள் அதைக் கேட்டனர். ஆங் சான் சூச்சி அரசியலில் நுழைந்தார்.

1988 செப்டம்பர் 18 அன்று மீண்டும் ராணுவம் ஆட்சியைத் தன்வசம் எடுத்துக் கொண்டது. சட்டங்களை மேலும் கடுமையாக்கியது. இனி ராணுவ ஆட்சிதான் என்று அறிவித்தது. ராணுவ ஆட்சி அரியணை ஏறிய ஒரே வாரத்தில் 1,000 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஐ.நா. ஏனோ ராணுவ ஆட்சிக்கான அங்கீகாரத்தை மறுக்கத் தயங்கியது. மியான்மரின் அண்டை நாடுகளிலேயே அதன் ராணுவ ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்தது இந்தியாதான். மியான்மருடனான தனது எல்லைகளை மூடியது. அந்த எல்லைப் பகுதியில் அகதிகள் முகாம்களைத் திறந்தது. சுமார் 10,000 பேர் இங்கு அகதிகள் ஆயினர். அவர்களில் உடல் தகுதி கொண்ட ஆண்கள் பின்பு ராணுவ வீரர்களாக மாறினர்.

1988லிருந்து 2000க்குள் மியான்மர் அரசு அந்த நாட்டில் சுமார் 20 அருங்காட்சியகங்களைத் தொடங்கியது. இவை அனைத்துமே மியான்மர் சரித்திரத்தில் ராணுவத்தின் (கொடூரமான) பங்களிப்பை விவரிக்கின்றன.

1988 புரட்சி இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் நியூஸ்வீக் இதழ் தனது அட்டைப் படத்தில் பிரசுரித்த ஒரு புகைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு டாக்டர் ஒரு சிறுமியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். ரத்த வெள்ளத்தில் அந்தச் சிறுமி காணப்பட, டாக்டரின் உடலெங்கும் பரபரப்பு, பயம். அவரது மூக்குக் கண்ணாடி மூக்கில் இருந்து நழுவிய நிலையில்.

அந்த டாக்டர் (அவர் பெயர் வின் ஜா) சமீபத்தில் அந்தக் கறுப்பு தினத்தைப் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். (இதுவே பெரிய விஷயம்தான். இன்று கூட தங்கள் வலி மிகுந்த கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ள பல பர்மியர்களுக்கும் அச்சம்.)

“இப்போதும் கூட மியான்மரின் கதவுகள் மிக மிகக் கொஞ்சம்தான் திறக்கப்பட்டிருக்கின்றன. சரித்திரத்தில் பதியவேண்டும் என்பதற்காகவும், இறந்த பல ஆத்மாக்களின் அமைதிக்காகவும் நான் பேசுகிறேன். மற்றபடி இப்போதும் கூட எனக்கு பாதுகாப்பில்லாத உணர்வுதான்” என்கிறார் அவர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-8/article7386164.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர் - 9

 
மியான்மர் பிரதமர் தெயின் ஸெயினுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா (கோப்புப் படம்)
மியான்மர் பிரதமர் தெயின் ஸெயினுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா (கோப்புப் படம்)

இருபது வருடங்களுக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் மியான்மரில் 2010-ல் நடை பெற்றது. ராணுவ ஆட்சியிலிருந்து மக்கள் ஆட்சிக்கு அந்த தேசம் மாறுவதற்கான ஒரு குறியீடு இது என்று கருதப்பட்டது. ஆனால் எதிர்க் கட்சிகள் இந்த தேர்தல் ஒரு கண்துடைப்பு என்றன. முழுவதும் அநீதிகள் நிறைந்த தாகத்தான் அந்த தேர்தல் இருக்கும் என்றுதான் அவை கணித்தன.

ஆங் சான் சூச்சி தலைமை வகித்த ஜனநாயக தேசிய கூட்ட மைப்பு தேர்தலைப் புறக்கணித்தது. (அந்த புறக்கணிப்பில் புதைந் திருந்த ரவுத்திரம் புரிந்து கொள் ளத்தக்கதுதான். அதற்குமுன்பு 1990-ல் நடைபெற்ற தேர்தலில் அந்த கட்சி மாபெறும் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி செய்ய அனுமதிக்கப் படவில்லை).

மார்ச் 2011-ல் ராணுவ ஆட்சியே ஒரு அரசை அமைத்தது. தெயின் ஸெயின் என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் அதற்கு முன் ராணுவ தளபதியாக இருந்தவர். ஆனால் தாங்களே அறிமுகப்படுத்திய இந்த சிறிய மாறுதலைக்கூட ராணுவ ஆட்சிக்கு தொடரப் பிடிக்கவில்லை. 2008-ல் புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதன்படி பாராளுமன்றத்தில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களாவது ராணுவத்தை சேர்ந்தவர்களாக இருந்தாக வேண்டும். தவிர மூன்று அமைச்சர்கள் பதவி ராணுவ அதிகாரிகளுக்குத்தான் அளிக் கப்படும். ஏதோ அமைச்சர்கள் அல்ல, மிக முக்கியமான மூன்று துறைகளுக்கான அமைச்சர்கள் - உள் துறை, பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதி விவகாரங்கள்.

ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் வகையில் இவ்வளவு கோளாறுகள் இருந்த போதிலும் இந்த அளவு மாறுதலாவது மியான்மரில் ஏற்பட்டது கொஞ்சம் பாராட்டுகளைப் பெற்றது.

ஐரோப்பிய யூனியன், கனடா, அமெரிக்கா ஆகியவை நெடுங் காலமாகவே மியான்மர் மீது பொருளாதாரத் தடை விதித்துள் ளன. அதில் சின்ன மாறுதல்கள் உண்டாயின.

2011-ல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மியான்மருக்கு விஜயம் செய்தார். அங்கு பிரதமர் தெயின் ஸெயின் மற்றும் ஆங் சான் சூச்சி ஆகியோரை சந்தித்துப் பேசினார். 2012-ல் ஒபாமா அமெரிக்காவில் மீண்டும் அதிபரான பிறகு மியான்மரின் பிரதமர் தெயின் ஸெயின் வாஷிங்டனுக்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்க ஒன்று. உலக அளவில் மியான்மர் தன்னை இணைத்துக்கொள்ளத் தொடங்கியது என்று சிலர் கருதினார்கள். இதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் மியான்ம ருக்கு பெரும் கடன் தொகையை வழங்க முன் வந்தது.

மியான்மருக்குள்ளேயே உண்டான வேறொரு அமைதி ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்கது தான். மியான்மரில் உள்ள முக்கிய இனம் பர்மன் எனப்படுவது. திபெத்தியர்களுக்கு இவர்கள் ஒரு வகையில் தூரத்து சொந்தம். மற்றபடி சின்னச் சின்னதாக நிறைய இனங்கள் மியான்மரில் உண்டு. இவர்களில் பலரும் அரசுக்கெதிராகச் செயல்பட்டனர். இதன் காரணமாக தீவிரவாதக் குழுக்களும் உருவாயின.

2015 மார்ச்சில் இந்த விதத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். 60 கலவரக் குழுக்களுடன் மியான்மர் அரசு ஓர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மியான்மருக்குப் பல சிறப்புகள் உண்டு. அடர்ந்த காடுகளை மியான்மரில் நிறைய பார்க்கலாம். எண்ணிலடங்கா தேக்கு மரங்கள். தேக்கு ஏற்றுமதியில் உலக அளவில் மியான்மர்தான் முன்னணியில் இருக்கிறது. முத்துக்கள் முதல் ரூபி வரை பல வகை ரத்தினக் கற்கள் மியான்மரில் அதிக அளவில் உள்ளன. மியான்மரில் உள்ள பிரம்மாண்டமான பல புத்த ஆலயங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியவை.

ஆனால் ராணுவ அவலங்களில் மியான்மர் ராணுவத்தில் 18 வயது நிறையாத மிக இளம் வயதினர் பலர் உண்டு. வெறும் 40 டாலர் தொகைக்கும் ஒரு மூட்டை அரிசிக்கும் தங்கள் குழந்தைகளை ராணுவத்துக்கு விற்கிறார்கள். மியான்மர் ராணுவம் வேறொரு அநியாயத்துக்கும் பெயர் போனது. மனித உரிமை மீறல்களை எக்கச்சக்கமாக நடத்துகிறது. இவர்களால் பாலியல் பலாத் காரத்துக்கு உள்ளான பெண்கள் ஏராளம். தவிர இதற்காக பல பெண்களை ராணுவம் வைத்திருந்தது. 2012 வரை இந்தப்போக்கு பரவலாகவே அங்கு காணப்பட்டது.

மின் வெட்டு என்பது மியான் மரில் மிக மிக சகஜம். சொல்லப் போனால் அந்த நாட்டில் நான்கில் ஒரு பகுதியினரின் வீடுகளில் மின் இணைப்பே கிடையாது. ஆனால் தங்கள் ‘ஜனநாயக வெட்டைத் தான்’ அவர்களால் இன்னமும் ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-9/article7388910.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர் - 10

 
 
 
மியான்மர் தலைநகர் நே ப்யி தாவில் உள்ள பிரம்மாண்டமான புத்த மத கோயில்.
மியான்மர் தலைநகர் நே ப்யி தாவில் உள்ள பிரம்மாண்டமான புத்த மத கோயில்.

மியான்மர் குறித்த பல சுவாரஸ்யங்கள் உண்டு. மியான்மர், பர்மா ஆகிய இரண்டு வார்த்தைகளுமே அங்கு பல நூற்றாண்டுகளாக நிலவி வருபவைதான். என்றாலும், மியான்மர் என்பது அதிகாரபூர்வ பெயராக இருந்தது. ஆங்கிலேயர்கள் இதை தங்களது காலனி நாடாக ஆக்கிக் கொண்ட பிறகு பர்மா என்றே அதை குறிப்பிடத் தொடங்கினார்கள் ஆவணங்களிலும். விடுதலை அடைந்தவுடன் பர்மா தன்னை மீண்டும் மியான்மர் ஆக்கிக் கொண்டது. ரங்கூன் யாங்கூன் ஆனது. (ஒரு முக்கியத் தகவல். மியான்மரின் தற்போதைய தலைநகர் யாங்கூன் எனப்படும் ரங்கூன் அல்ல. 2005 நவம்பரிலிருந்து அதன் தலைநகர் நே ப்யி தா).

மியான்மர், அமெரிக்கா, லைபீரியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சம் என்ன தெரியுமா? மெட்ரிக் அளவீடை ஏற்றுக் கொள்ளாத நாடுகள் இவை.

கிரெடிட் கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு மியான்மருக்குச் செல்வது புத்தி சாலித்தனம் அல்ல. அவற்றை பல வணிக நிறுவனங்களும் அங்கு ஏற்றுக்கொள்வ தில்லை. அதனால் என்ன? ஏடிஎம் கருவிகளி லிருந்து பணம் பெறலாமே என்கிறீர்களா?

பெறலாம். ஆனால் மியான்மரில் குறை வான எண்ணிக்கையில்தான் ஏடிஎம்கள் உண்டு.

முடி வெட்டிக்கொள்ள திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். காரணம் இந்த நாட்களி லும் தங்கள் பிறந்த நாளிலும் முடிவெட்டிக் கொண்டால் ஆகவே ஆகாது என்ற நம்பிக்கை உள்ளூர் மக்களிடையே நிலவு கிறது. எனவே சாவகாசமாக உங்கள் ரோம சாம்ராஜ்யத்தை செப்பனிட்டுக் கொள்ளலாம்.

மியான்மரின் கொடி முன்பு அசப்பில் தைவானின் கொடியைப் போலவே இருக்கும் (சீனாவிலிருந்து பிரிந்து தன்னைத் தனி குடியரசாக அறிவித்துக் கொண்டது தைவான். ஆனால் தைவான் தன்னில் ஒரு பகுதிதான் என்கிறது சீனா. ஐ.நா.வைப் பொறுத்தவரை தைவான் தனி நாடல்ல. ஆனால் விளையாட்டு, அழகிப் போட்டி போன்றவற்றில் தைவான் தனியாகத்தான் பங்கு பெறுகிறது.) பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸின்போது தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தைவான் ஆதரவாளர்கள் மியான்மர் தேசியக் கொடியை அசைத்துக் கொண்டிருந்தார்கள்! (பெய்ஜிங்கில் தைவானின் தனிக் கொடிக்குத் தடை.)

இப்படி நினைத்துப் பார்க்கக் கூடிய வித்தியாசமான விஷயங்கள் மியான்மர் தொடர்பாக நிறைய உள்ளன என்றால் நினைத்துப் பார்க்க முடியாத கற்பனைகள்கூட சரித்திரத்தில் நடைபெற வாய்ப்பு உண்டு என்பதும் மியான்மர் விஷயத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சீன அரசு ஆங் சான் சூச்சிக்கு அழைப்பு விடுக்க அவரும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்!

மியான்மரை ஆட்சி செய்த ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வந்திருக்கிறது பெய்ஜிங். இந்த ராணுவ ஆட்சி ஆங் சான் சூச்சியை தொடர்ந்து வீட்டுச் சிறையில் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் ஆங் சான் சூச்சிக்கான சீன அழைப்பு. மியான்மர் அரசு குறித்த பிம்பம் சீனாவைப் பொறுத்தவரை சிதைந்திருக்கிறது என்பதற்கான ஓர் அடை யாளமாக இதை எடுத்துக் கொள்ள முடியும்.

1988லிருந்து 2013 வரை மியான்மரில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளில் 42 சதவிகிதம் சீனாவினுடையது. எனினும் கூட மியான்மர் மக்களிடையே சீனாவுக்கு நல்ல பெயர் இல்லை. நிலப்பறிப்பு, மிகக் குறைவான கூலிக்கு வேலை செய்ய அங்கு வரும் சீனர்கள் போன்றவை முக்கியக் காரணங்கள். மியான்மரின் ராணுவத் தளவாடங்களில் 60 சதவிகிதம் சீன இறக்குமதிதான்.

எதனால் இப்போது சீன - மியான்மர் உறவுகளில் ஒரு சிறிய பின்னடைவு? இராவதி நதியில் ஓர் அணை கட்டித்தர சீனா ஒப்புக் கொண்டிருந்தது. அந்தத் திட்டத்தை சீனா வாபஸ் பெற்றது. காரணம் மியான்மர் ராணுவத்தின் வான்வெளித் தாக்குதலில் புரட்சியாளர்களோடு சேர்ந்து சீனர்கள் ஐந்து பேரும் இறந்து விட்டனர். இது தற்செயலானது என்று சீனா நினைக்கவில்லை.

இத்தனை வருடங்களாக இல்லாமல் பிற நாடுகளுடன் அதிக அளவில் பொருளாதாரத் தொடர்புகள் வைத்துக் கொள்ளலாம் என்று மியான்மர் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது. இதையும் சீனா முழு மனதோடு ஏற்கவில்லை. தன்னை அண்டியே மியான்மர் இருக்க வேண்டும் என்பது அதன் எண்ணம்.

மியான்மர் தனிமைப்பட்டே இருந்ததால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்தது. 2013ல் ஒரு நாளைக்கு 1000ம்பேர்கூட அங்கு சுற்றுலாவுக்கு வரவில்லையாம்.

இப்போது மியான்மரிலிருந்து வெளியேறியவர்களில் கணிசமானவர்கள் மீண்டும் மியான்மருக்குத் திரும்புகின்றனர். இந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட 70 அரசியல் கட்சிகள் அங்கு பதிவு செய்து கொண்டிருக்கின்றன. சில வெளிநாட்டு ஊடகங்களுக்குக்கூட மியான்மரில் இப்போது அனுமதி உண்டு.

சீனாவுக்கும், மியான்மருக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளி இந்தியாவுக்குப் பயன் அளிக்குமா? பலன் என்று இல்லாவிட்டாலும் கசப்புகள் குறைய வாய்ப்பு உண்டு. மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து (அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த) தீவிரவாதிகளை இந்திய ராணுவம் வீழ்த்தி இருக்கிறது. இதற்கு அந்த நாட்டின் மறைமுக சம்மதம் இருக்க வாய்ப்பு உண்டு.

மியான்மரில் வசிக்கும் இந்தியர்கள் இனியாவது தங்களுக்கு கொஞ்சம் அங்கீகாரம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். ஏன், என்ன ஆயிற்று அவர்களுக்கு என்கிறீர்களா? பார்ப்போம்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-10/article7394919.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மக்களை மதிக்காத மியான்மர் - 11

 

 
ரங்கூனில் உள்ள தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்.
ரங்கூனில் உள்ள தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்.

 

ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைவசப்படுத்திய பிறகுதான் இந்தியர்களில் கணிசமானவர்கள் பர்மாவுக்குச் சென்றார்கள். அதுவும் இந்தியாவுடன் பர்மா இணைக்கப்பட்டபோது அங்கு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது. இப்படிச் சென்ற இந்தியர்களில் மிகமிக அதிகமானவர்கள் தமிழர்கள். இவர்கள் மியான்மரில் விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டனர்.

முதலாம் உலகப் போர் முடியும் கட்டத்தில் இந்தியர்களுக்கு எதிரான போக்கு பர்மாவில் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியது. காரணம் இந்தியர்களின் எண்ணிக்கை வகைதொகை இல்லாமல் பெருகியதுதான். ஒரு கட்டத்தில் ரங்கூனில் பாதி மக்கள்தொகை இந்தியர்கள்தான் என்றானது.

தவிர நகரங்களில் வசித்த தமிழர்கள் (செட்டியார்கள்) வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். அதிக வட்டி வசூலிக்கிறார்கள் என்ற எண்ணம் பர்மியர்களுக்கு ஏற்பட்டது. தவிர நிலத்தை அடமானம் வைத்து உள்ளூர்வாசிகள் கடன் பெறுவது சகஜமானது. கடனை திருப்பித்தராதபோது நிலத்தைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும் செயலை பர்மியர்கள் விரும்பவில்லை (ஒப்பந்தப்படி அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தாலும்).

மே 1930-ல் ரங்கூன் துறைமுகத்தில் இயங்கி வந்த ஓர் ஆங்கிலேயே நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. அங்கு வேலை செய்த இந்தியத் தொழிலாளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையைச் சமாளிக்க பர்மியத் தொழிலாளிகளை அவர்களுக்கு மாற்றாக ஏற்பாடு செய்தது அந்த நிறுவனம். இது தற்காலிக ஏற்பாடுதான்.

என்றாலும் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டு இந்தியத் தொழிலாளிகள் மீண்டும் வேலைக்குத் திரும்பியபோது, அவர்களுக்குப் பதிலாக வேலையில் அமர்த்தப்பட்டிருந்த பர்மியர்கள் வாக்குவாதத்திலும், கைகலப்பிலும் ஈடுபட்டனர். இது நகரமெங்கும் பரவியது. இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு உச்சத்தை அடைந்தது. 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொலை செய்யப்பட்டு அவரகள் உடல்கள் நதிகளில் வீசப்பட்டன. பின்னர் கலவரம் அடங்கியது. ஆனால் மனங்களில் இதன் தழும்பு தொடர்ந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் பர்மாவை ஆக்ரமித்தது. பர்மாவில் வசித்த சுமார் 5 லட்சம் இந்தியர்கள் உயிர்பயம் காரணமாக அசாமுக்கு வந்து சேர்ந்தனர் அதுவும் கால்நடையாகவே. இந்தப் பயணத்தின்போது ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர்.

பின்னர் பர்மா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்தியர்களை அவர்கள் குடிமக்களாக ஏற்கவில்லை. `வசிக்கும் வெளி ஆட்கள்’ என்றுதான் குறிக்கப்பட்டார்கள். 1823-க்கு முன்பாகவே பர்மாவில் வசித்தவர்கள்தான் பர்மியக் குடிமக்கள் என்று புதிய விளக்கத்தைக் கொடுத்தார்கள்.

அதுவும் ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து நெ வின் தலைமை ஏற்றபோது இந்தியர்கள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேற்றினார். இந்தியர்களின் பல நிறுவனங்களை தேசியமயமாக்கியது ராணுவ அரசு. இதைத் தொடர்ந்து பலரும் இந்தியாவுக்கு வரத் துடிக்க, இந்திய அரசு படகுகளையும், விமானங்களையும் அனுப்பி இந்தியர்கள் தாய்நாட்டுக்கு வர உதவியது. இந்தியாவுக்கும், மியான்மருக்கும் உள்ள உறவு அப்போதிலிருந்து சீர்குலையத் தொடங்கியது.

என்றாலும் கலாச்சாரம் என்கிற அடிப்படையில் இந்துக்களின் தாக்கம் பர்மியர்களிடையே இன்னமும் இருக்கிறது. அது கல்யாணம் மற்றும் காதுகுத்தும் விழாக்களில் அதிகமாகவே எதிரொலிக்கிறது.

ஒருகாலத்தில் (முக்கியமாக 1869-ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டு மியான்மர் ஒரு விவசாய மையம் ஆன பிறகு) தமிழர்கள் பர்மாவில் உள்ள அரசு விளைநிலங்களில் மூன்றில் ஒரு பங்கை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். இப்போது இந்தியர்கள் அங்கே நாலாந்தரக் குடிமக்கள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.

மியான்மரில் 1962-ல் ராணுவ ஆட்சி தொடங்கியபோது லட்சக்கணக்கான தமிழர்கள் அந்த நாட்டிலிருந்து கிளம்பி தாய்நாட்டுக்கு வந்தார்கள். என்றாலும்கூட கணிசமான தமிழர்கள் இன்னமும் அங்கே இருக்கிறார்கள் சுமார் 10 லட்சம்பேர். அங்கு வாழும் தமிழர்கள் சரளமாக பர்மிய மொழியைப் பேசுகிறார்கள். பர்மியர்களைப் போலவே லுங்கி அணிகிறார்கள். பலரும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

என்றாலும் பர்மியர்களோடு சீனர்கள்தான் அதிகம் இணைந்து கலந்திருப்பதாக அங்கு சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.

மியான்மரில் வாழும் தமிழர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படிக் காட்டினால் ஆபத்து என்கிற எண்ணமும் இதற்கு அடிப்படையாக இருக்கலாம்.

அவர்கள் சங்கடமான நிலையில்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் மூன்று தலைமுறைகளைத் தாண்டி அவர்கள் அங்கு வாழ்ந்தும்கூட `வெளி ஆட்கள்’ என்று அவர்களை நினைக்கும் நிலை இன்னமும் இருக்கிறது. அதே சமயம் ராணுவத்தின் ஆதரவையும், சீனாவின் நட்பையும் பெரிதும் நாடுகிற தேசம் என்பதால் இந்தியாவும் மியான்மரைப் பொறுத்தவரை பட்டும் படாமலும்தான் நடந்து கொள்கிறது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மக்களை-மதிக்காத-மியான்மர்-11/article7398453.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.