Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கப்பூரின் பொன்விழா

Featured Replies

singapore_2502838f.jpg

சிங்கப்பூர் நிகழ்த்திவரும் சாதனைகளும் அதன்முன் உள்ள சவால்களும்.

சிங்கப்பூர் தனி நாடானது ஆகஸ்ட் 9, 1965. ஆனால், யாரும் ஆடவில்லை பள்ளுப் பாடவில்லை. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று கொண்டாடவும் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் பிரதமராக இருக்கப்போகும் லீ குவான் யூ மிகுந்த கலக்கத்திலிருந்தார். இந்த நகரை எப்படி ஒரு தனிநாடாக மாற்றப்போகிறோம் என்று மலைத்துப்போயிருந்தார். மழை நசநசத்துக்கொண்டிருந்தது. எங்கும் புழுக்கம். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் செய்தியாளர் சந்திப்பை 20 நிமிடங்கள் தள்ளி வைத்தார். சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருப்பதையே லீ விரும்பினார். ஆனால், மலேசியா விரும்பவில்லை. அது சிங்கப்பூரை வெளியேற்றியது.

ஓர் இந்தோனேசியத் தலைவர் காழ்ப்போடு குறிப்பிட்டார்: ‘உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிவப்புப் புள்ளி’ என்று! பரப்பளவு வெறும் 718 ச.கி.மீ. சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் குறைவு. தண்ணீரே மலேசியாவிலிருந்துதான் வர வேண்டும். அன்று தொழிலும் வணிகமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மொழியால், இனத்தால், பண்பாட்டால், வேறுபட்ட சீனர்களையும் மலேசியர்களையும் இந்தியர்களையும் உள்ளடக்கிய நாடு. இனக் கலவரம் தொட்டால் பற்றிக்கொள்ளும் நிலையிலிருந்தது. அண்டை நாடுகளான மலேசியாவுடனும் இந்தோனேசியாவுடனும் நல்லுறவு இல்லை. லீ-யின் கவலையில் நியாயமிருந்தது.

ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே

50 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்போது தேசிய தினத்தின் பொன்விழா கோலாகலமாக நடக்கிறது. வாண வேடிக்கை, கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள்... அரசு ஊழியர்களுக்கு போனஸ், பள்ளிப் பிள்ளைகளுக்கு லீகோ விளையாட்டுப் பெட்டி, ஒவ்வொரு வீட்டுக்கும் நினைவுப் பரிசு. நான்கு நாள் கொண்டாட்டங்களை அறிவித்திருக்கிறார் லீ குவான் யூ-வின் மகனும் இப்போதைய பிரதமருமான லீ சியன் லூங்.

இந்தக் கொண்டாட்டங்களுக்குக் காரணம் இருக்கிறது. இன்று சிங்கப்பூர் உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பொதுத் துறைகள் திறமையானவை. வரிகள் குறைவானவை. சேவைகள் தரமானவை.

சிங்கப்பூரும் ஹாங்காங்கும்

ஆய்வாளர்கள் ஹாங்காங்கையும் சிங்கப்பூரையும் எப்போதும் ஒப்பிடுவார்கள். இரண்டு இடங்களிலும் உள்ள துறைமுகங்களும், விமான நிலையங்களும், உள்கட்டமைப்பும் உலகத் தரமானவை. குற்றச் செயல்கள் குறைவானவை. ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. அதனால், முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், சில முக்கியமான புள்ளிகளில் சிங்கப்பூர் வேறுபடுகிறது. ஹாங்காங், மக்கள் சீனக் குடியரசின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்குகிறது; பாதுகாப்புக்காக ஒரு சதவீதம்கூடச் செலவழிப்பதில்லை. ஆனால், சிங்கப்பூர் தனது உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதத்துக்கும் மேல் பாதுகாப்புக்காக ஒதுக்குகிறது. 18 வயது நிரம்பிய நிரந்தரக் குடியுரிமை பெற்ற ஆண்கள் அனைவரும் இரண்டு வருட ராணுவப் பயிற்சி பெற வேண்டும். இன்னொரு முக்கிய வேறுபாடு ஹாங்காங் ஜனநாயகத்தில் எதிர்க் குரலுக்கு இடமுண்டு. சிங்கப்பூரில் அது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

சிங்கப்பூரின் வெற்றிக்குப் பின்னால் உள்ள காரணிகளில் மூன்றை இங்கே குறிப்பிடலாம். முதலாவதாக வீட்டுவசதி. சிங்கப்பூரில் சேரிகள் இல்லை. 1974-ல் 40% மக்களுக்குச் சொந்த வீடு இருந்தது. இப்போது 80% ஆக உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் வைப்பு நிதி. நிரந்தரக் குடியுரிமை பெற்ற ஊழியர்கள் தமது ஊதியத்தில் 20%-ஐ வைப்பு நிதியில் செலுத்த வேண்டும். முதலாளிகள் 17% செலுத்துவார்கள். இதை வீடு வாங்கப் பயன்படுத்தலாம். குடியுரிமை உள்ள அனைவரும் வீடு வாங்கிவிடுவது அதனால்தான்.

இரண்டாவதாக, பல் இன மக்களிடையே நிலவும் இணக்கத்தைச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் சொந்தக் கூரையின் கீழ் வசிக்கிறார்கள். வேலையில்லாதவர்கள் 2%-க்கும் குறைவு. அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிடுவதால் பூசல்கள் இல்லை. 2013 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சீனர்கள் 74%, மலேசியர் 13%, இந்தியர்கள் 9%. இந்தியர்களில் 58% தமிழர்கள். மெட்ரோ ரயிலில் ஆங்கிலமும் சீனமும் மலாயும் கேட்கலாம். கூடவே, தேமதுரத் தமிழோசையையும் கேட்கலாம். நான்கும் ஆட்சி மொழிகள். தாய்மொழிக் கல்வி கட்டாயம். தமிழ்ப் பாடநூல்கள் தரமானவை.

சிங்கப்பூர் வெற்றிக்கு இன்னொரு காரணி, வெளியுறவுக் கொள்கை. 1967-ல் துவங்கப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளின் ஒருங்கிணைப்பான ஆசியானில் சிங்கப்பூர் முன்கை எடுத்துச் செயலாற்றிவருகிறது. இது பிராந்திய ஒத்துழைப்புக்கு உதவுகிறது. இன்று மலேசியாவுடனும் இந்தோனேசியாவுடனும் உறவு சுமுகமாக இருக்கிறது.

சிங்கப்பூரின் சவால்கள்

இந்த இடத்தில் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றியும் பேச வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக லீ குவான் யூ-வின் மக்கள் செயல் கட்சிதான் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுவருகிறது. தூய்மையான, திறமையான ஆட்சி என்பது முக்கியமான காரணம். எதிர்க் கட்சிகள் பலவீனமானவை என்பதும் ஒரு காரணம். கடுமையான தேர்தல் விதிகளும், கட்டுப்பாடுகளுடன் கூடிய பேச்சுச் சுதந்திரமும் நிலவுவதால் எதிர்க் கட்சிகளால் ஒரு சக்தியாக உருவாக முடியவில்லை. 2011 தேர்தல் இதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தலிலும் ஆளுங்கட்சி 93% இடங்களைப் பிடித்தது. ஆனால் 60% வாக்குகளையே பெற்றது. கடந்த 50 ஆண்டுகளில் இது மிகக் குறைவானது.

அரசியல் நோக்கர்கள் இந்தப் பின்னடைவுக்குச் சொல்லும் காரணங்களில் பிரதானமானதாகச் சொல்வதைக் கேட்டால், அது விநோதமாகத் தோன்றலாம் - சிங்கப்பூரின் தரமான கல்வி. உலகத் தரமான பல்கலைக்கழகங்களில் நவீன கல்வி கற்ற இளைஞர்களுக்கு அரசின் கடுமையான சட்ட திட்டங்கள் உவப்பாக இல்லை; கூடுதல் சுதந்திரத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்கள். சிங்கப்பூர் அரசு இதை உணர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. மாற்றங்களுக்கு அது எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் தனது 91-வது வயதில் லீ குவான் யூ காலமானார். மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று மரியாதை செலுத்தினார்கள். அவரது மரணம் ஒரு வகையில் சிங்கப்பூர் மக்களிடையே உள்ள இணைப்பை வலுவாக்கியிருக்கிறது என்றார்கள். நாளைய பொன்விழாக் கொண்டாட்டங்கள் அதை மேலும் உறுதிப்படுத்தும்.

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

ஆகஸ்ட் 9, 2015 சிங்கப்பூரின் 50-வது தேசிய தினம்

http://tamil.thehindu.com/opinion/columns/சிங்கப்பூரின்-பொன்விழா/article7515398.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

சாம்சுய் பெண்கள்': சிங்கப்பூரை கட்டியெழுப்பிய உழைப்பாளிகள்

150806150056_samsui_women_640x360_bbc_no

சிங்கப்பூர், அதன் ஐம்பதாவது சுதந்திர தினத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகின்றது.
அந்தச் சிறிய தீவு-நாட்டைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியவர்கள் சாம்சுய் பெண்கள்.
அந்தக் கடும் உழைப்பாளிகளைப் பற்றிய பிபிசியின் சிறப்பு குறிப்பு இது.

http://www.bbc.com/tamil/global/2015/08/150806_singapore_samsui_women

  • கருத்துக்கள உறவுகள்

இரு வாரங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றபொழுது இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் காணக்கூடியதாக இருந்தது..

ஆனால் சிங்கப்பூரின் கொண்டாட்டங்களின் நேர்த்தியும், ஆடம்பரமும், அமீரக விழாக்களில் காணப்படும் மிகப் பகட்டான ஆடம்பரத்தோடு(Richness) ஒப்பிடுகையில், சிங்கப்பூர் ஒரு ஜுஜுபி..

ஆனால் சிங்கப்பூரின் தூய்மை, மாசில்லாத பசுமையான சூழல், நட்புடன் பழகும் மக்கள், கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரம், பல்வேறு நாட்டு மக்களிடையே நல்லிணக்கம் வேறெங்கும் காண இயலாது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.