Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரல் சொடுக்கும் வடகொரியா

Featured Replies

விரல் சொடுக்கும் வடகொரியா

 
 
korea_2185881f.jpg
 

கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா.

‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு (தென் கொரியாவில் பாதிதான்)

ஒரு நாடு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன தப்பு? பிற நாடுகள் என்ன செய்யும்? பாராட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைப்படும். அப்படித்தானே?

2012 டிசம்பர் 12 அன்று வட கொரியா ஒரு புதிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தால் உங்கள் இஷ்டம். ‘க்வாங்ம்யாங்சாங்-3-யூனிட்-2’ - இதுதான் அதன் பெயர் (இனி பிடிவாதம் பிடிப்பீர்களா?)

அவ்வளவுதான், பல நாடுகள் இதைக் கண்டித்தன. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் இந்தச் செயற்கைக்கோளை ‘போருக்கான ஒத்திகை’ என்று வர்ணித்தன. இந்த நாடுகள் எப்போதுமே வட கொரியாவின் எதிரணியில் இருந்தவைதான்.

ஆனால் சீனா கூட இதைக் கண்டித்தது. இத்தனைக்கும் ‘வட கொரியா ஆக்கிரமிக்கப்பட்டால் சீனா தனது ராணுவத்தை அனுப்பி அதைப் பாதுகாக்கும்’ எனும் இருதரப்பு ஒப்பந்தம் அந்த நாடுகளுக்கிடையே இருந்தது.

போதாக்குறைக்கு ஐ.நா.வும் கண்டிக்க, வட கொரியா உறுமியது. ‘ஆமாம், செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஆர்வம் காட்டுவது வேறொரு காரணத்துக்காகத்தான்’ என்றது. அதோடு நிற்கவில்லை. அந்த ‘வேறொரு காரணம்’ எது என்பதையும் வெளிப்படுத்தியது. தங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தொழில் நுட்பத்தை பரிசோதிப்பதுதான் உண்மையான காரணம்.

அமெரிக்கா – இந்தப் பெயரைக் கேட்டாலே வட கொரியாவின் மக்கள் வைது தீர்க்கிறார்கள். என்ன காரணம்? அது ரொம்பவுமே அழுத்தமான காரணம்.

ஒரு காலத்தில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது கொரியா. பிறகு 35 வருடங்கள் ஜப்பானின் அதிகாரத்தில் அடங்கிக் கிடந்தது கொரியா. ஒன்றை கவனித்தீர்களா? கொரியா, கொரியா என்று மட்டும்தான் குறிப்பிட்டோம். ஆம். அப்போது கொரியா ஒரே நாடுதான். வடக்கு, தெற்கு என்று பிரிவினை கிடையாது.

முடிந்தது இரண்டாம் உலகப் போர். ஜப்பான் கொரியாவின் மீதான அதிகாரத்தை நீக்கிக் கொண்டது. சுதந்திரக் காற்றை கொரியா முழுமையாக அனுபவிப்பதற்குள் ‘இதோ நாங்கள் வந்துவிட்டோம் கவலை வேண்டாம்’ என்றபடி கொரியாவின் வடபகுதியில் நுழைந்தது சோவியத் யூனியன்.

சோவியத்தின் பரம்பரைப் பகைவன் சும்மா இருந்து விடுவானா? அமெரிக்காவும் தன் ராணுவத்தைக் கொரியாவுக்கு அனுப்பியது. இவர்கள் நுழைந்தது தென் பகுதியில். வட கொரியாவில் உலகப் போரினால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய இந்த இரண்டு வல்லரசுகளும் உதவியது உண்மைதான். ஆனால் இந்த உதவிகளைத் தொடர்ந்து அவர்கள் காட்டிய தொடர் அத்துமீறல் கொரியாவின் தலைவிதியை மாற்றி எழுதின.

அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இந்த இரு துருவங்களின் கையில் சிக்கிய கொரியா சீக்கிரமே இரண்டாக துண்டாடப்படுமென்று பல அரசியல் விமர்சகர்கள் அப்போதே கருத்து தெரிவித்தார்கள். அதுதான் நடந்தது. தான் ஆக்ரமித்துக் கொண்ட வடக்குப் பகுதியை கம்யூனிஸப் பாதையில் அழைத்துச் சென்றது சோவியத் யூனியன். அமெரிக்காவோ வருங்கால சுயநல நோக்கத்தையும் மனதில் கொண்டு தென் கொரியாவை ஜனநாயகப் பாதையில் இட்டுச் சென்றது.

பூனைகள்-குரங்கு-அப்பம் கதைதான் நடந்தது. ஆனால் ஒரு வித்தியாசம். பூனைக்குக் கிடைத்த அப்பத்தைத் தாங்கள் பிடுங்கிக் கொண்டு தங்களுக்குள் பிரித்துக் கொண்டன இரண்டு குரங்குகள். கொரியாவின் வடக்குப்பகுதித் தலைவர்கள் நாடு முழுவதும் கம்யூனிஸம் பரவ வேண்டுமென்று நினைத்தார்கள். சோவியத் யூனியனில் இருப்பது போன்ற கம்யூனிஸம்.

அமெரிக்காவின் ஆதரவில் செயல்பட்ட கொரியாவின் தெற்குப் பகுதி மக்கள், கம்யூனிஸ ஆட்சிக்கு இடவலமாகத் தலையசைத்தார்கள். 38-வது இணைக்கோடு (அட்சரேகை என்றும் கூறலாம்) - இதுதான் அமெரிக்க, சோவியத் ஆக்ரமிப்பு பகுதிகளைப் பிரித்த எல்லைக்கோடு. ராமாயணம் போலவே இதிலும் கோடு தாண்டும் படலம் நடந்தது. அதுவும் அடிக்கடி. தொடர்ந்தது யுத்தம்.

முக்கியமாக கொரியாவின் வடக்குப் பகுதி ராணுவம் தெற்குப் பகுதியில் நுழைந்தது. தொடங்கியது ‘கொரியப் போர்’. கொரியப் போர் உலகின் மிக மோசமான போர்களில் ஒன்று. மேலோட்டமாகப் பார்த்தால் அது கொரியா என்ற நாட்டின் இரண்டு பகுதி மக்களுக்கிடையே நடைபெற்ற உள்நாட்டுப் போர், அவ்வளவே. ஆனால் நிஜத்தில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் தங்கள் பலத்தைக் காட்டிக் கொள்வதற்கான களமாகவே இந்த யுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டன. பிறகென்ன அழிவு பலமாகவே இருந்தது.

http://tamil.thehindu.com/world/விரல்-சொடுக்கும்-வடகொரியா/article6561912.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

விரல் சொடுக்கும் வடகொரியா - 2

koreawar_2186994f.jpg
 

வட கொரியாவும் தென் கொரியாவும் மோதிய கொரியப் போரில் முதன்முதலாக வேறொரு திருப்புமுனையும் நிகழ்ந்தது.

இந்தப் போரில்தான் ஐ.நா.சபை தனது ராணுவத்தை முதன் முதலாக இறக்கியது. ஆம், ஐ.நா.சபைக்கென்று ராணுவம் உண்டு. ஆனால் இந்த ராணுவத்தினர் எல்லாம் பல்வேறு நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டவர்களே தவிர, ஐ.நா.வால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. உலக அமைதிக்காக இந்த ராணுவத்தினரைப் பயன்படுத் தப்போவதாக ஐ.நா.சபை குறிப்பி டுவதுண்டு.

அதை அப்போதும் குறிப்பிட்டது. கொரியாவின் வடக்குப் பகுதியை ஆட்சி செய்த கம்யூனிஸ்டுகளுக்கு ஐ.நா. அறிவுரை கூறியது. ‘’நீங்கள் உலக அமைதிக்கு இடைஞ்சல் ஏற்படுத் துகிறீர்கள். அமைதியாய் இருங்கள்’’ என்றது. ‘’முடியாது. என்ன செய்யணுமோ செஞ்சுக்க’’ என்று முறைப்பு காட்டியது வட கொரியா.

முடிந்ததைச் செய்து காட்டியது ஐ.நா. தனது உறுப்பினர் நாடு களுக்கு உடனடியாக ஓர் அறிக்கை விட்டது. ‘‘தெற்கு கொரியாவில் அமைதியை ஏற்படுத்த உங்கள் ராணுவ உதவி தேவை’’.

இதற்குத்தானே காத்திருக்கி றோம் என்கிற வகையில் 16 நாடுகள் தங்கள் ராணுவத்தை அனுப்பின. ‘’ராணுவம் இருக்கட்டும் எங்கள் போர்க் கருவிகளைத் தருகிறோம்’’ என்று முன்வந்த நாடுகளின் எண்ணிக்கை பலமடங்கு. மிக அதிகமான ஆயுதங்களை எந்த நாடு அளித்தது தெரியுமா என்று கேட்டால் அமெரிக்கா என்ற சரியான விடையை நீங்கள் கூறிவிடுவீர்கள்.

வால்டன் வாக்கர் குள்ளமான வர், குண்டானவர். ஒருவேளை இன்றைய அமெரிக்க ராணுவத்தில் தோற்றத்தின் காரணமாகவே தேர்வு செய்யப்பட்டிருக்கமாட்டாரோ என்னவோ! ஆனால் அன்று ஐ.நா. ராணுவத்தை (அதில் 80 சதவிகிதம் பேர் அமெரிக்க ராணுவத்தினர்) வழி நடத்தியவர் இவர்தான்.

இவர் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் பகுதியில் பிறந்தவர், படித்தவர். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் இரண்டிலுமே கலந்து கொண்டவர். அதுவும் இரண்டாம் உலகப்போரில் பிரபல ராணுவத் தளபதி பேட்டனின் மிக வீரமான பிரிவுக்குத் தலைமை தாங்கியவர். தன் படையை மின்னல் வேகத்தில் இயக்கக் கூடியவர் என்ற புகழ் கொண்டவர்.

எதிர்த் தரப்புக்கு மட்டும் ஆதரவு இருக்காதா என்ன? சீனா தனது ராணுவத்தை வட கொரியாவுக்கு ஆதரவாகக் களம் இறக்கியது. சோவியத் யூனியன் நிறைய போர்க் கருவிகளை வட கொரியாவுக்குள் இறக்கியது.

சோவியத்தை ஆட்சி செய்த ஸ்டாலின் தங்களது ஆதரவு பெற்ற வட கொரியாவுக்கு நிச்சயம் வெற்றி என்றே கருதினார். அதற்குப் பல காரணங்கள்.

செப்டம்பர் 1949-ல் தங்கள் முதல் அணுகுண்டை வெற்றிகரமாக சோதனை செய்திருந்தது சோவியத் யூனியன். தவிர கொரியா விலிருந்து அமெரிக்கா தனது ராணுவ வீரர்களை அப்போது தவணைகளில் வாபஸ் பெற்றுக் கொண்டிருந்தது.

சீனாவில் கம்யூனிஸம் வேரூன்றத் தொடங்கியிருந்தது. அதில் அமெரிக்கா தலையிட்டதா கத் தெரியவில்லை. சீனா விஷயத்திலேயே அமெரிக்கா தலையிடவில்லை என்றால் கொரியாவில் அதற்கு அதைவிட ஈடுபாடு இருந்து விடுமா என்ன? அப்படியொன்றும் புவியியல் கோணத்தில் கொரியா அதற்கு இன்றியமையாத பகுதி இல்லையே! இப்படியெல்லாம் யோசித்த ஸ்டாலின் வட கொரியா வுக்கு ராணுவ, பொருளாதார உதவி களை நிச்சயம் அளிப்பதாக உறுதி அளித்தார்.

அதற்கு முன்னோட்டம் போல 1949 மற்றும் 1950ல் வட கொரியா வில் தன் போர்த்தடவாளங்களை நிரப்பியது சோவியத் யூனியன்.

1950 ஜூன் 25 அன்று தொடங்கியது கொரியப் போர். போர் தொடங்கிய முதல் இரு மாதங்களில் தென் கொரிய ராணுவம் கடும் இழப்புகளை சந்தித்தது.

ஐ.நா.வின் ஆதரவு, 21 நாடுகளின் பங்களிப்பு, ராணுவத் தில் 88 சதவிகிதம் பயிற்சி பெற்ற அமெரிக்க சிப்பாய்கள் - இத்தனையும் இருந்தும் தென் கொரிய ராணுவம் பூசன் பகுதிக்குப் பின்வாங்கும்படி ஆனது. (பூசன் என்பது தென் கொரியாவில் உள்ள ஒரே பெரிய இயற்கைத் துறைமுகம்).

இந்தக் காலகட்டத்தில் யாலு நதியைக் கடந்து சீன ராணுவம் வட கொரியாவின் உதவிக்கு வந்தது. இதன் காரணமாகவும் ஐ.நா. படைகள் பின்வாங்குவது அவசியமாகிவிட்டது.

வாக்கர் பதுங்கிப் பாய வேண்டும் என நினைத்தார். அந்தக் கால கட்டத்தில் தாக்குதலுக்கான எல்லா ஏற்பாடுகளை யும் முழு வீச்சில் செய்ய வேண்டு மென்று தீர்மானித்தார். முக்கியமாக பூசன் தென்கொரியாவின் கையைவிட்டு போய்விடக் கூடாது என்பதில் மிக உறுதியாகவே இருந்தார்.

ஜூலை 29 அன்று அவர் தன் வீரர்களிடம் ஆற்றிய உரை ‘’ஸ்டாண்ட் ஆர் டை’’ (அதாவது ‘வெற்றி அல்லது வீர மரணம்’) என்பது கொஞ்சம் பிரபலமானது.

‘’நாம் நேரத்துடன் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு மேல் நாம் சிறிதும் பின்வாங்க முடியாது. பின்வாங்க பின்புறமாக எந்தப்பகுதியும் இல்லை என்றே மனதில் கொள்ளுவோம். பூசனையும் தாண்டி பின் வாங்கினால் அது சரித்திரத்தின் மாபெரும் தற்கொலைகளில் ஒன்றாக இருக்கும். இறுதிவரை போராடுவோம். குழுவாகப் போரா டுவோம். இந்தப் பகுதியிலிருந்து ஓரடி கூட பின்வாங்கக் கூடாது. விரைவில் வெல்வோம்’’ என்றார்.

தொடர்ந்தது கடுமையான யுத்தம். ஐ.நா.ராணுவம் மெல்ல மெல்ல முன்னேறியது. வடகொரிய ராணுவத்தில் பெரும் சேதங்கள் உண்டாயின. எதிர்த்தரப்பிலும் இழப்புகள் கணிசமாகவே இருந்தன.

‘’பதினாறு லட்சம் கம்யூனிஸ்டு கள் இறந்தனர். அல்லது தொலைந்தனர். தென் கொரிய ராணுவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பலப்பல லட்சம். போரில் சம்பந்தப்படாத அப்பாவித் தென் கொரிய மக்களிலும் பத்து லட்சம் பேர் க்ளோஸ்’’. இப்படி ரத்தக்களரியான புள்ளி விவரங்கள் ஏராளமாக வெளியாயின. முதன்முறையாக ஜெட் விமானத் தாக்குதல் வேறு.

மூன்று வருடங்கள் கழித்து 1953 ஜூலை 27 அன்று ஒரு வழியாகப் போர் நின்றது. எந்தத் தரப்புக்குமே முழு வெற்றி இல்லை. நிரந்தரமான சமாதான ஒப்பந்தம் எதுவுமேயில்லாமல் ஒரு முடிவுக்கு வந்தது கொரியப் போராகத்தான் இருக்கும்.

http://tamil.thehindu.com/world/விரல்-சொடுக்கும்-வடகொரியா-2/article6564656.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

விரல் சொடுக்கும் வடகொரியா - 3

 
vada_korea_2188958h.jpg
 

கொரியப் போர் 1950-ல் தொடங்கி 1953-ல் முடிவுக்கு வந்தது என்று பார்த்தோம். வட கொரியாவின் இன்றைய நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், கொரியப் போருக்கு முன்னால் நடந்த சில நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும். 38வது இணைக்கோடுதான் (அட்ச ரேகை எனலாம்) வட, தென் கொரியாக்களைப் பிரித்தது. யார் இந்தக் கோட்டைத் தீர்மானித்தார்கள்? பார்ப்போம்.

1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரின் மீதும், அதே மாதம் 9 அன்று நாகசாகி நகரின் மீதும் அணுகுண்டு வீசி ஜப்பானுக்குப் பேரழிவை உண்டாக்கியது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து ஜப்பானியச் சக்ரவர்த்தி ஹிரோஹிடோ தனது தோல்வியை ஒத்துக் கொண்டு சரணடைந்தார். இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.

ஜப்பான் சரணடைவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்க அதிகாரிகளான டீன் ரஸ்க் என்பவருக்கும் சார்லஸ் போன்ஸ்டீல் என்பவருக்கும் ஒரு வேலையை அமெரிக்கா அளித்திருந்தது. கிழக்காசியாவில் அமெரிக்கா ஆக்ரமித்துள்ள இடங்களைத் தனிமைப்படுத்த வேண்டும்!

மேற்படி இருவரின் பணி கொரியாவிலும் நடந்தேறியது. கொரியாவை கிட்டத்தட்ட இரண்டாகப் பிரித்தார்கள் – 38வது இணைகோட்டினை ஒட்டி. கொரியாவின் தலைநகர் சியோல் தங்கள் பாதியில் வரும்படி ஜாக்கிரதையாகத்தான் பிரித்தார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. வட கொரியாவில் இருந்த ஜப்பானிய ராணுவம் சோவியத்திடம் சரணடைந்தது. தென் கொரியாவில் இருந்த ஜப்பானிய ராணுவம் அமெரிக்காவிடம் சரணடைந்தது. போதாக்குறைக்கு வட கொரியாவில் சோவியத் ராணுவமும், தென் கொரியாவில் அமெரிக்க ராணுவமும் ஏற்கனவே தங்கள் கால்களைப் பதித்திருந்தன.

பொதுவான ஒரு ட்ரஸ்ட் அமைப்பு உருவாக்கப்பட்டு அது இரு கொரியாக்களும் இணைவதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கியது. சம பலத்துடன் இருந்த சோவியத்தும் அமெரிக்காவும் இதற்கு சம்மதிக்குமா? முழு கொரியாவுமே சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்துக்குத் திரும்ப வேண்டும். இது அமெரிக்காவின் நிபந்தனை.

ஒட்டு மொத்தமாக கொரியா கம்யூனிஸப் பாதைக்குத் திரும்ப வேண்டும். இது சோவியத்தின் கட்டளை. பிறகு தெளிவாகவே இரு தரப்பும் அறிவித்துவிட்டன – பிரிவினைதான் ஒரே வழி. தன்னைத் தனி நாடாக முதலில் அறிவித்துக் கொண்டது தென் கொரியாதான். இது நடந்தது மே, 1948-ல். சிங்மேன் ரீ என்பவர் இதன் முதல் தலைவரானார்.

ஆக தானாகவே வட கொரியா தனி நாடாக உருவாகிவிட்டது. கிம் இல் சுங் என்பவரை சோவியத் யூனியன் அதற்குத் தலைவராக்கியது. சோவியத் யூனியனின் செம்படையில் பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1948 செப்டம்பரில் இவர் வட கொரியாவின் அதிபரானார். சிங்மேன் ரீ, கிம் இல் சுங் ஆகிய இருவருமே ஒருவரையொருவர் சீண்டிப் பார்த்தனர். பிரிவினை எல்லைக் கோட்டைத் தாண்டத் தலைப்பட்டனர்.

இதைத் தொடர்ந்துதான் கொரியப் போர். போர் முடிந்த கட்டத்தில் இரண்டு நாடுகளுமே ஒருவிதத்தில் தொடங்கிய இடத்திலேயே நின்றன. பிரிவினைக் கோடு தொடர்ந்தது. அதாவது இரு கொரியாக்களின் எல்லைப் பரப்பும் சிறிதும் மாறவில்லை. இன்றைக்குக் கூட உலகிலேயே மிகவும் பதற்றமான எல்லைக் கோடு எது என்று கேட்டால் பல அரசியல் மூக ஆராய்ச்சியாளர்கள் வட கொரியா-தென் கொரியா எல்லைக்கோட்டைத்தான் குறிப்பிடுவார்கள்.

1953-ல் கொரியப் போர் ஒரு முடிவுக்கு வந்தபோது அமெரிக்கா ‘’இனி போருக்கான ஆயுதங்களை கொரியாவுக்கு அனுப்ப மாட்டேன்’’ என்று ஓர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் 1957-ல் இந்த ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்கா. தென் கொரியாவுக்கு ஆயுதங்களை அனுப்பியது. அதுவும் அணு ஆயுதங்கள்.

வட கொரியா சாமர்த்தியமாகச் செயல்பட்டது. தன் ராணுவத்தை ஒட்டுமொத்தமாக தனது தென் எல்லைக்கு அனுப்பியது. அதாவது அணு ஆயுதம் வீசப்பட்டால் தங்கள் ராணுவம் மட்டுமல்ல, தென் கொரியாவின் ஒரு பகுதியும், அங்கு குவிக்கப்பபட்டிருக்கும் தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவத்தினரும் சேர்ந்தே இறக்கட்டும் என்ற போர் தந்திரம்.

கொரியாவில் தேர்தல் நடக்க வேண்டும். முழுக் கொரியாவுக்கும் ஒரே அரசு அமைய வேண்டும் என்று அறிவித்த ஐ.நா., தேர்தல் சூழலை உண்டுபண்ண தனது பிரதிநிதிகளையும் அனுப்பியது. வட கொரியாவுக்குள் அவர்களை நுழையவே விடவில்லை சோவியத் யூனியன்.

சமர்த்துப் பிள்ளையாக தென் கொரியா தங்களுக்கென்று ஒரு பாராளுமன்றத்தை தேர்தலின் மூலம் தேர்ந்தெடுத்துக் கொண்டது. வடக்கு தெற்கு உறவு தேய்ந்து கொண்டே வந்தது. வட கொரிய ராணுவம் அமைதிப் பகுதியில் (‘நியூட்ரல் ஸோன்’) நுழைந்து தென் கொரிய ராணுவத்தை அவ்வப்போது தாக்கியது.

‘பார்க்’ மீது குண்டு வீசியது (பார்க் என்பது பசுமைப் புல்வெளி அல்ல. தென் கொரியாவை 1961 முதல் ஆண்டு வந்த அப்போதைய ஜனாதிபதியின் பெயர்). ஆனால் அந்தக் கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.

தங்களது கடல் பகுதியில் அமெரிக்கக் கப்பல் ஒன்று காணப்பட, அதை உடனே சிறைப்படுத்தியது வட கொரியா. வேவு பார்க்கவே அந்தக் கப்பல் வந்தது என்று வட கொரியா கூற, அதை மறுத்தது அமெரிக்கா. பிறகு பெரிய மனது பண்ணி கப்பல் பயணிகளை விடுவித்த வட கொரியா கப்பலை மட்டும் தானே வைத்துக் கொண்டது.

நாளடைவில் இரண்டு கொரியாவின் பிரதிநிதிகளும் கலந்து பேசினார்கள். மீண்டும் கொரியா இணைய வழியிருக்கிறதா என்று கூட அலசினார்கள். வாய்ப்பேயில்லை என்றானதும் தனித்தனிப் பெயரில் ஐ.நா.வில் உறுப்பினர் ஆயின வட கொரியாவும், தென் கொரியாவும்.

http://tamil.thehindu.com/world/விரல்-சொடுக்கும்-வடகொரியா-3/article6568429.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

விரல் சொடுக்கும் வடகொரியா - 4

 
 
கிம் ஜாங் இல் - கிம் ஜாங் உன்
கிம் ஜாங் இல் - கிம் ஜாங் உன்

ஐ.நா.வில் வட கொரியாவும், தென் கொரியாவும் உறுப்பினர்கள் ஆனதே ஒரு தனிக் கதை.

1953-ல் கொரியப் போர் முடிவடைந்தது. அப்போதிலிருந்தே ‘’நாங்கள்தான் உண்மையான கொரியா’’ என்று கூறியது வட கொரியா அரசு. அங்கிருந்த சிலர் ‘’தென் கொரியா தனக்குப் புதிய பெயர் எதையாவது வைத்துக் கொள்ளட்டும். கொரியா என்ற பெயர் நமக்கே நமக்கு’’ என்று கூறத் தொடங்கினார்கள். தென் கொரியா சம்மதிக்கவில்லை. ஐ.நா வும்.

பின்னர் வேறொரு வழியை முன்வைத்தது வட கொரியா. ‘’ஐ.நா.சபையில் கொரியா என் பதற்குள்ள ஒரே உறுப்பினர் இருக்கையை நாங்களும் தென் கொரியாவும் சுழற்சி முறையில் வைத்துக் கொள்கிறோம்’’ என்றது. நடைமுறை சாத்திய மில்லை என்பதால் அதுவும் கைவிடப்பட்டது. எனவே இரண்டு கொரியாக்களுமே ஐ.நா.உறுப்பினராக இல்லாமலேயே பல வருடங்கள் இருந்தன. அதாவது கொரியா என்ற அதன் உறுப்பினருக்கான இருக்கை வருடக்கணக்கில் காலியாகவே இருந்தது.

இப்படி இருப்பதை இரண்டு கொரியாக்களுமே விரும்ப வில்லை. ஒரு பாதுகாப்பற்ற உணர்வு இருந்தது. கொரியப் போரில் ஐ.நா.ராணுவம் வட கொரியாவுக்கு எதிராக போரிட்ட போதிலும் ஐ.நா.உறுப்பினராக இருப்பதில் வேறு சில வசதிகள் உண்டு என்ற எண்ணம் இருந்தது வட கொரியாவுக்கு. தவிர வீட்டோ அதிகாரம் உள்ள சோவியத் யூனியனும், சீனாவும் தனக்கு ஆதரவாக இருக்கும்போது ஐ.நா.சபையில் தனக்கெதிரான தீர்மானங்கள் எதையும் எடுத்துவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை.

ஆனால் ஒரு கட்டத்தில் சோவியத் யூனியன் கைவிரித்து விட்டது. தென் கொரியா தன் பெயரிலேயே உறுப்பினராக வேண்டும் என்று விண்ணப்பித்தால், இனியும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டது. இந்த அறிவிப்பைக் கேட்டதும் சியோலில் (சியோல்தான் தென் கொரியாவின் தலைநகர்) ஒரே கொண்டாட்டம்.

1991-ல் வட கொரியத் தலைநகருக்கு சீனப் பிரதமர் விஜயம் செய்தார். அப்போது இருதரப்புக்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஐ.நா.சபையில் வட கொரியா உறுப்பினராவது குறித்தும் கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். செப்டம்பர் 1991-ல் ஐ.நா.வில் உறுப்பினராவதற்காக வட கொரியா, தென் கொரியா இரண்டுமே தங்கள் விண்ணப்பங் களை அனுப்பின. அவை இரண்டு தனி நாடுகளாக ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்டு, உறுப்பினர்க ளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

வட கொரியாவை யார் ஆட்சி செய்கிறார்கள்? இதை அறிய இதற்கு முன்பாக இதை ஆட்சி செய்த இருவரை அறிய வேண்டும். 1948 செப்டம்பர் 9 அன்று வட கொரியா தன்னை ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு என்று அறிவித்துக் கொண்டது. இதற்குத் தலைமை ஏற்றார் கிம் இல் சுங்.

வட கொரியாவில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே கட்சிதான். கொரியாவின் உழைப்பாளர் கட்சி என்று அதற்குப் பெயர். இப்போது ஓரிரு உதிரிக் கட்சிகள் அங்கு உண்டு என்றாலும் அவையும் உழைப்பாளர் கட்சிக்கு அடங்கி ஒடுங்குபவைதான்.

இந்தக் கட்சியின் தலைவராகவும் விளங்கினார் கிம் இல் சுங். இவர் சோவியத் யூனியனின் ஆதரவு பெற்றவர். தொடக்கத்தில் சேர்மென் என்றுதான் தன்னை அழைத்துக் கொண்டார் (கம்யூனிஸம்!). ஆனால் 1972 டிசம்பர் 28ல் தன்னை ஜனாதிபதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். இறக்கும்வரை அவர்தான் வட கொரியாவின் தலைவர். 1994ல் அவர் இறந்தபோது கட்சி அவரைத்தான் ‘’கொரியக் குடியரசின் நிரந்தரத் தலைவர்’’ என்று அதிகார பூர்வமாகவே அறிவித்தது.

அவருக்கு அடுத்து ஆட்சியைப் பிடித்தவர் கிம் ஜாங் இல். பெயரில் நிறைய ஒற்றுமை இருக்கிறதே என்கிறீர்களா? இயல்புதான். கிம் இல் சுங்கின் மகன்தான் இவர். “தான் இருக்கும் போதே தனக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் தன் மகனுக்குதான்’’ என்று தலை வர் முன்பே ஏற்பாடு செய்திருந்தார். (கம்யூனிஸத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாட்டில் வாரிசு பட்டமேற்க வழி செய்த கூத்து வட கொரியாவில் நடந்தது!).

ஆனால் மகன் கிம் ஜாங் சுலபத்தில் அரசுப் பொறுப்பை ஏற்கவில்லை. கட்சியின் தலைமை யையும் ஏற்கவில்லை. வட கொரியாவின் ராணுவத் தலைவர் பதவியை மட்டும் முதலில் ஏற்றுக் கொண்டார். ‘தனிச்சிறப்பு மிக்க தலைவர்’ (Great Leader) என்று அன்புடன் வட கொரிய மக்களால் அழைக்கப்பட்ட இவருக்கு இந்தப் பொறுப்பும் ரோஜா மெத்தையாக இருக்கவில்லை. அவருக்குப் புற்றுநோய், அவர் உடலில் சிறுநீரகக் கற்கள் என்பதுபோல் பலவித வதந்திகள். அதிபரிடம் நேரிடையாக இதுபற்றியெல்லாம் கேட்டு தெளிவு பெற முடியாது என்பதால் வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன.

போதாக்குறைக்கு “மனைவி மறைந்துவிட்டது’’ வேறு இவரது இமேஜை பலவீனப்படுத்தியது. தீவிர கம்யூனிஸ்ட் குடும்பத் தில் பிறந்தவர் ரிம். ஒரு நடிகை யாக தன் வாழ்க்கையைத் தொடங் கினார். பிறகு ஒரு டாக்டரை மணந்து கொண்டார். காலப் போக்கில் கிம் ஜாங்கைச் சந்தித்தவுடன் மனம் மாறியது. டாக்டரை விவாகரத்து செய்தார்.

கிம் ஜாங் - ரிம் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனரா? விடை கிடையாது. ஆனால் இரு வரும் தம்பதியாகவே வாழ்ந்தனர். ஒரு குழந்தையும் பிறந்து வளர்ந்தது. இந்த நிலையில் ரிம் மறைந்து விட்டார். சியோலுக்கு தப்பியோடி விட்டார் என்பரே பலரது ஊகமாக இருந்தது.

வட கொரிய ஆதரவு நிலையி லிருந்து தென் கொரிய ஆதர வாளராக மாறிய மூத்த அரசியல் நோக்கரான வாங் ஜாங் யாப் என்பவர் ஒரு குண்டை வீசினார் (வார்த்தைகளின் மூலமாகத்தான்). “இப்போது வட கொரியாவை ஆளும் கிம் ஜாங் இல் தனது அணு ஆயுதங்களின் மூலம் தென் கொரியாவை விரைவில் அழிக்கத் திட்டமிட்டிருக்கிறார்’’ என்றார்.

நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. என்றாலும் தென் கொரியாவை எப்போதும் ஒருவித கலக்கத்துடனேயே இருக்க வைத்தது இது போன்ற பேச்சுகள். இப்போது வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன். உங்கள் ஊகம் சரிதான். கிம் ஜாங் இல்லின் மகன் இவர்.

http://tamil.thehindu.com/world/விரல்-சொடுக்கும்-வடகொரியா-4/article6573416.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

விரல் சொடுக்கும் வடகொரியா - 5

 
 
 
வட கொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் வெண்கலச் சிலை.
வட கொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் வெண்கலச் சிலை.

வட கொரியாவைப் பற்றிய ஒரு ரகசியம் தெரியுமா? அது மிகவும் ரகசியமான நாடு என்பதுதான் அந்த ரகசியம். அதன் மக்கள் சட்டென்று வெளி நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று விடமுடியாது.

வட கொரியத் தலைநகரில் அமைந்துள்ளது ஒரு சிலை. அது வட கொரியாவை நிறுவியரான கிம் இல் சுங் என்பவருடையது. 20 மீட்டர் உயரம் கொண்ட வெண்கலச் சிலையான இது தினமும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. சில வருடங் களுக்கு முன் இதற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. ஆனால் சீனாவின் ஆலோசனை யின் பேரில் (கம்யூனிஸத் தலைவருக்கு இவ்வளவு ஆடம்பரம் செய்தால் பார்ப்ப வர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்?) தங்க முலாமை நீக்கி விட்டார்கள்.

வட கொரியாவைப் பற்றிய ரகசியங்களும் இப்படித்தான் முலாம் நீங்கியத்தைப்போல வெளிப்பட்டு வருகின்றன. அந்த நாட்டுக்குச் சுற்றுலா செல்பவர்கள் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே பார்க்க முடியும். உள்ளூர் மக்களுடன் அவர்கள் மனம்விட்டுப் பேசிவிட முடியாது. ஆனால் வேறொரு ஊடுருவலை வட கொரியாவால் தடுக்க முடியவில்லை. அது செயற்கைக் கோள் மூலமாக மேலிருந்தபடி வட கொரியாவைப் படமெடுத்துத் தள்ளும் கேமராக்கள்தான். இதன் மூலமாக வட கொரியாவின் பல பகுதிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

எழுபதுகளில் தென் கொரியாவை மிஞ்சி நின்றது வட கொரியப் பொருளாதாரம். இப்போது நிலைமை தலைகீழ். வட கொரியாவில் கடும் உணவுப் பஞ்சம். ஐ.நா.வின் உலக உணவு திட்டம் என்ற அமைப்பு ‘‘வட கொரியாவிலுள்ள பல லட்சம் மக்கள் உணவுக்கான தேவையில் இருக்கிறார்கள்’ என்று அறிவித்துள்ளது.

நாட்டில் அவ்வப்போது வெள்ளமும், பஞ்சமும் மாறிமாறி தலைவிரித்தாடுகின்றன. நிலம் சத்திழந்துபோய் விட்டது. ‘வடகொரியா ஒரு பயனில்லாத நிலமாகி விட்டது’’ என்கிறார்கள் நில இயல் நிபுணர்கள். பசியின் காரணமாக வட கொரியாவில் உள்ள ஆடுகளில் பாதிக்கும் மேல் வெட்டப் பட்டு உணவாகிவிட்டன. உரத்தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன - அவற்றிற்குத் தேவையான கச்சாப் பொருள் கிடைக்காததால்.

வருமானத்திற்காக சில ஆபத்தான விஷயங்களுக்கும் கதவைத் திறந்தது வட கொரியா. ‘ உரிய கட்டணம் செலுத்தினால் பிற நாடுகள் தங்கள் கழிவுகளை தங்கள் நாட்டில் குவிக்கலாம் என்று அறிவித்தது. அவ்வளவுதான், தைவானும் ஜெர்மனியும் டன்டன்னாக குப்பையை கப்பல்களில் கொண்டு வந்து வட கொரியாவில் போட்டது. இதில் கதிரியக்கம் மிக்க குப்பைகளும் கலந்திருப்பதுதான் கவலைக்குரிய விஷயம். இதையெல்லாம் எதிர்ப்பதற்கு எந்தப் பசுமை இயக்கமும் வட கொரியாவில் இல்லை.

உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியது வட கொரியா. அது மட்டுமல்ல அணு ஆயுத தடுப்பு தொடர்பான எந்தவித ஒப்பந்தத்திலும் எந்த நாட்டுடனும் கையெழுத்திட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. அப்போதிலிருந்தே விதவிதமான பொருளாதாரத் தடைகளை அது பல நாடுகளிலிருந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அக்டோபர் 2012-ல் வட கொரியா ஓர் அறிவிப்பைச் செய்தது. ‘‘எங்களிடம் மிகச் சிறந்த ஏவுகணைகள் உள்ளன. அவை அமெரிக்காவையே அடைந்து அழிக்கும் ஆற்றல் பெற்றவை’’. இந்த நிலையில்தான் 2012 டிசம்பரில் வட கொரியா செயற்கைக்கோள் ஒன்றை வானில் செலுத்தியதும் அதற்கு எழுந்த கண்டனங்களும்.

வட கொரியாவின் உடனடித் தேவைகளில் ஒன்று பெட்ரோல். தொடக்கத்தில் கொரிய நாணயத்தைப்பெற்றுக் கொண்டு பெட்ரோல் சப்ளை செய்து வந்த ரஷ்யா, சோவியத் துண்டாடப்பட்ட பிறகு ‘தங்கத்துக்குப் பதிலாகத்தான் பெட்ரோல்’ என்று நிபந்தனை விதித்து விட்டது. தங்கத்தைக் கொண்டு போர்க் கருவிகள் போன்ற ‘உபயோகமான’ பொருள்களை வாங்கத்தான் வட கொரியாவுக்கு விருப்பம். கொஞ்ச காலத்துக்கு பெட்ரோல் வழங்கிய அமெரிக்காவும் சப்ளையை நிறுத்திக் கொண்டு விட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வட கொரியாவில் நிறைய மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ.நா. விசாரணைக் குழு கூறியதுடன் இதற்கு வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்-தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியதில் அதிபருக்குக் கடும் எரிச்சல்.

புதிதாகப் புறப்பட்டிருக்கும் புதிய ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பானின் அறிக்கை மேற்படி விசாரணைக் குழுவின் அறிக்கையை வழிமொழிவதோடு அதை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து வழக்கு தொடர வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ஆனால் இப்படி ஏதாவது நடந்தால் அதை சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்துவிடும் என்பது உண்மை. என்றாலும் பழைய கதை தோண்டியெடுக்கப்படுவது வட கொரியாவின் தலைமையை எரிச்சல்பட வைத்துள்ளது.

அக்டோபர், 2014-ல் வட கொரியா விடுத்த அழைப்பு பல உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த அழைப்பு ஐரோப்பிய யூனியனுக்கு. ‘உங்கள் பிரதிநிதி எங்கள் நாட்டுக்கு தாராளமாக வந்து பார்க்கலாம்’’ என்றது வட கொரியா. மனித உரிமை குறித்த பேச்சுவார்த்தை 2013-ல் தடைபட்டுப் போயிருந்தது. இது தொடரப் போகிறது என்பதில் ஐரோப்பிய யூனியன் நேரடியாகவும், ஐ.நா. சபை மறைமுகமாகவும் மகிழ்ந்தன. ஐரோப்பிய யூனியன் இந்த அழைப்பை கொஞ்சம் சந்தேகத்துடன் ஏற்றுக் கொண்டது.

உலகின் பல நாடுகளில் கம்யூனிஸம் வலிமையை இழந்ததும் வட கொரியாவுக்கு சிக்கலைத் தோற்றுவித்தது. தவிர தனது வருமானத்தில் பெரும் பகுதியை ராணுவத்துக்கே செலவழிக்க வேண்டிய கட்டாயம் வேறு அதற்கு. இத்தனை பிரச்னைகளையும் வட கொரியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

http://tamil.thehindu.com/world/விரல்-சொடுக்கும்-வடகொரியா-6/article6577431.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.