Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறுகிறதா மாலத்தீவு?

Featured Replies

மாறுகிறதா மாலத்தீவு?- 1

 
 
maldives_2334723h.jpg
 

நம் நாட்டுக்கு மிக அருகில் உள்ள ஒரு நாடு 2040-ல் முழுவதும் கடலில் மூழ்கிவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மாலத்தீவு குறித்த இந்தத் தகவலே பதற வைக்கிறது இல்லையா? அந்த நாட்டில் சமீபத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் பதற்றத்தை உண்டாக்கக் கூடியவைதான். .

மாலைத் தீவுகள் என்றும் அழைக்கப்படும் இந்நாடு, நமது நாட்டின் ஒரு பகுதியான லட்சத் தீவுகளுக்குத் தெற்கே உள்ளது. இலங்கையிலிருந்து தென்மேற்கே அமைந்துள்ளது.

கடல் சார்ந்த ஏரி. அந்தக் கடலையும் ஏரியையும் பிரிக்கும் வகையில் பவளப் பாறைகள். இப்படி அமைந்த பகுதியை பவளத் தீவு என்பார்கள். அப்படி மொத்தம் 26 பவளத்தீவுகளைக் கொண்ட தேசம் மாலத்தீவு.

தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் இதே அர்த்தத்தில் “மாலத்வீப்” (தீவுகளின் மாலை) என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த 26 பவளத் தீவுகளில் மொத்தம் 1192 தீவுகள். இத்தனை தீவுகளில் 200-ல் மட்டும்தான் மனிதர்கள் குடியேறியிருக்கிறார்கள். மீன்பிடிப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த நாட்டின் தலைநகரம் மாலே.

அருமையான சுற்றுலாத் தலம்தான். ஆனால் சமீப காலமாக அங்கு நிலவும் அரசியல் நிகழ்வுகள் பல சுற்றுலாப் பயணிகளை அங்கு செல்லவிடாமல் தடுத்துநிறுத்தியுள்ளன.

முக்கியமாக அந்த நிகழ்வுகள் இந்தியாவை சங்கடப்படுத்தி உள்ளன. காரணம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டின் தலைநகரான மாலேவுக்கு இந்த மாதத்தின் நடுவே செல்ல இருந்தார்.

மால்டீவ்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகம்மது நஷீத் மீது சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக அவர் மாலே நகரின் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் லேசானவை அல்ல. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர் செயல்பட்டதாக குற்றம் சுமத்தியது அந்த நாட்டின் இப்போதைய அரசு. இதற்காகத்தான் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அவர் பிப்ரவரி 21, 2015 அன்று அழைத்து வரப்பட்டார்.

அப்படி அவர் அழைத்து வரப்பட்டபோது அவரைச் சூழ்ந்து கொண்டனர் பத்திரிகையாளர்கள். அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு நீளமாகவே பதிலளித்தார் நஷீத். அவரைச் சுற்றி வளையமாக இருந்த பாதுகாப்புப் படையினர் இதைக் கொஞ்சமும் விரும்பவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நஷீத் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, அவரை (கொஞ்சம் காட்டுமி ராண்டித் தனமாகவே) இழுத்துச் சென்றனர். முரண்டு பிடித்த நஷீத் ஒரு கட்டத்தில் கீழே விழுந்தார். புகைப்படங்கள் ஊடகங்களில் பரவ, உலகம் முழுவதும் மாலத்தீவு தேசத்தை உற்றுநோக்கத் தொடங்கியது.

தன்னை இழுத்துச் செல்ல வேண்டாம் என்றும், தானாக நடந்து செல்வதாகவும் நஷீத் கூறியதை பாதுகாப்பாளர்களாக வந்த அரசுப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘’போலீஸாரின் வன்முறை காரணமாக என் கைகள் சேதமடைந்துள்ளன’’ என்று அவர் கூறியதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ‘’போதிய மருத்துவ சிகிச்சைகளை அவருக்கு அளிக்க வேண்டும்’’ என்று மட்டுமே நீதிமன்றம் கூறியது.

நீதிமன்றத்தில் நஷீதின் முகம் கடும் வலியை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அவர் சட்டையில் உள்ள பொத்தான்களைக் காணோம். மருத்துவ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது குறித்து காவல் துறை கவலைப்படவில்லை. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வில்லை. மாறாக அருகிலுள்ள தூனிதூ என்ற சிறிய தீவில் அமைந்த சிறைச் சாலைக்குப் படகில் அழைத்துச் சென்றது.

‘‘வழக்கு முடியும் வரை போலீஸ் கண்காணிப்பில் நஷீதை வைத்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்’’ எனும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ‘’ஜோடிக்கப்பட்ட குற்றங்களை நஷீத் மீது சுமத்துகிறது தற்போதைய அரசு. தீவிரவாதத்துக்கும் எங்கள் தலைவருக்கும் துளியும் தொடர்பில்லை’’ என்கிறார்.

நஷீதின் வழக்கறிஞர் இந்த வழக்கே அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட ஒன்று என்கிறார். தவிர சட்டப்பூர்வமாக இதை நஷீத் அணுகக் கூடிய வழிமுறைகளும் அரசால் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.

அவர் வழக்கறிஞர் அவருடன் பேச வேண்டுமென்றால் கூட இரண்டு நாட்கள் முன்னதாகவே அதற்குப் பதிவு செய்ய வேண்டுமாம்.

மாலத்தீவு நாட்டில் முதன் முதலாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நஷீத் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர அவர் இந்தியாவுக்கு நெருக்கமானவர். தற்போதைய மாலத்தீவு அரசு இந்தியாவுக்கெதிரான நிலைப்பாடை எடுக்கிறதா? இந்தக் கேள்வி எழப் பல காரணங்கள் உண்டு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மாறுகிறதா-மாலத்தீவு-1/article6971589.ece?ref=relatedNews

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மாறுகிறதா மாலத்தீவு?- 2

 
 
1988-ல் மாலத்தீவுக்கு இந்திய வீரர்கள் சென்ற ஐஎல்-76 ரக விமானம்
1988-ல் மாலத்தீவுக்கு இந்திய வீரர்கள் சென்ற ஐஎல்-76 ரக விமானம்

நஷீத் அதிபராக இருந்தபோது மாலத்தீவு - இந்தியா இடையிலான உறவு மிகச் சிறப்பாக இருந்தது. ராடார் வசதிகளை மாலத்தீவு நாட்டின் ஊடாகச் செல்ல இந்தியாவுக்கு அனுமதியளித்தார் நஷீத். தங்களது பகுதியில் அமைதியும், பாதுகாப்பும் தொடர்ந்து நிலவ இரு நாடுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன.

எதிர்க்கட்சியான பிறகும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி இந்தியாவுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வருகிறது.

மாலத்தீவு களேபரம் தொடர் பாக இந்தியா கொஞ்சம் மவுனம் காத்தது. நஷீத் கைது செய்யப் பட்டது குறித்து தொடக்கத்தில் கருத்து கூறவில்லை.

மாலத்தீவு நாட்டின் வெளியுறவு அமைச்சர் துன்யா மமூன் “இந்தியா பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. எங்களது உள்நாட்டு விவகாரங்களில் அது தலையிடாது என நம்புகிறோம்’’ என்றார். சாமர்த்தியம்!

ஆனால் கருத்து சொல்ல வேண்டிய நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டது. “மாலத்தீவு நாட்டில் சமீபகாலமாக நடைபெற்று வரும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக உள்ளது. முக்கியமாக முன்னாள் அதிபர் நஷீதைக் கைது செய்ததும், அவரைத் தவறாகக் கையாண்டதும்’’ என்று அறிக்கை வெளியிட்டது இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம்.

தான் கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்ததும் தன் நாட்டி லுள்ள இந்தியத் தூதரகத்தில் முதலில் சரணடைந்தார் நஷீத். இதையே காரணம் காட்டி அவ ருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வாதாடியது அரசுத் தரப்பு.

“இங்கு நடப்பது குறித்து இந்தியா கவலைப்படுவதை நாங் கள் வரவேற்கிறோம். ஆனால் அது செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்’’ என்று கருத்துக் கூறியிருக்கிறார் நஷீத் கட்சியின் பொது மக்கள் தொடர்பாளர் ஹமீது அப்துல் கஃபூர். இந்தியாவிலிருந்து இது தொடர்பாக உடனடியாக ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இப்படி எதிர்பார்க்கும் உரிமை அவர்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டால், சில பின்னணிகளை அறிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத் தீவுகளின் தெற்கே அமைந்துள்ளது மாலத்தீவு. நம் நாடு பிரிட்டனிடமிருந்து 1947-ல் சுதந்திரம் அடைந்தது என்றால், மாலத்தீவு 1966-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போதிலிருந்தே இரு நாடுகளும் மிகுந்த நட்போடுதான் இருந்து வந்திருக்கின்றன. 1976-ல் இரு நாடுகளும் தங்களுக்கிடையே உள்ள நீர் எல்லைகளை சிக்கலின்றி பிரித்துக் கொண்டன.

1982-ல் ஒரு சலசலப்பு. மாலத்தீவு அதிபர் மமூன் அப்துல் கயூம் என்பவர் இந்தியாவுக்குச் சொந்தமான மினிக்காய் தீவு உண்மையில் மாலத்தீவுக்கு உரியது என்றார். பரபரப்பு கிளம்பியது. உடனடியாக மாலத்தீவு அரசு அறிக்கை வெளியிட்டது - ‘நாங்கள் மினிக்காய் தீவுக்கு உரிமை கோரவில்லை’ என்று.

பிறகு 1981-ல் இரு நாடுகளுக் கும் இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சார்க் அமைப்பு உருவானதிலிருந்தே இந்தியாவும், மாலத்தீவும் அதன் உறுப்பினர்கள்.

மாலத்தீவு இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் அருகி லுள்ள நாடு. இதையும் மனதில் கொண்டுதான் இந்தியா, மாலத்தீவு உடனான நல்லுறவைத் தொடர வேண்டியிருக்கிறது. 1988 நவம்பரில் இலங்கையிலிருந்து ஆயுதங்களுடன் 80 தமிழ் ஈழத்துக்கான மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலத்தீவில் ஊடுருவினார்கள்.

மாலே நகரிலுள்ள விமான நிலை யத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்களது மற்றொரு முக்கிய நோக்கமான `அதிபர் முமூன் அப்துல் கயூமைக் கைது செய்வது’ என்பதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார்.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ராஜீவ்காந்தி. மாலத்தீவு அரசுக்கு ஆதரவாக 1600 ராணுவ வீரர்களை அனுப்பினார். மாலத்தீவு அரசு உதவி கோரிய அரை நாளிலேயே அந்த உதவி அளிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே மாலத்தீவு அரசைப் பற்றியிருந்த ஆபத்து நீங்கியது. இலங்கை தீவிரவாதிகளை இந்திய ராணுவம் ஒடுக்கியது.

‘இன்னொரு நாட்டின் ஊடுரு வல்’ என்று இந்தியாவை அப் போது பிற நாடுகள் விமர்சிக்க வில்லை. மாறாக இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அப் போதைய அமெரிக்க அதிபர் ரீகன், “இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ இந்தியா மதிக்கத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது’’ என்றார்.

“ மாலத்தீவு ஆட்சி காப்பாற்றப் பட்டது. எங்களால் ராணுவத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு அனுப்பியிருக்க முடியாது. இந்தியாவுக்கு நன்றி’’ என்றார் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர்.

சோவியத் யூனியன், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இந்தியாவின் உதவியைப் பெரிதும் பாராட்டின.

இதற்குப் பிறகு இந்தியாவும், மாலத்தீவும் மேலும் நெருக்க மாயின. இலங்கை அரசுடன் உரசல்கள் ஏற்படும்போதெல்லாம் இந்தியாவின் ஆதரவைப் பெரிதும் நம்பி வந்தது மாலத்தீவு.

இந்திய அரசின் பொருளா தார உதவியுடன் மாலத்தீவின் கட்டமைப்புகள் விரிவாக்கப்பட் டன. தலைநகர் மாலேவில் இந்திராகாந்தி நினைவு மருத்துவ மனை எழுப்பப்பட்டது.

ஏப்ரல் 2006-ல் இந்திய கடற் படை ஒரு மிகச்சிறந்த போர்க்கப் பலை மாலத்தீவுக்குப் பரிசாக அளித்தது. மாலத்தீவு அரசின் வேண்டுகோள் காரணமாக இந்தியா அந்த நாட்டில் தனது 2 ஹெலிகாப்டர்களை நிரந்தரமாக நிறுத்தி வைத்தது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டா என்பதை இந்த ஹெலி காப்டர்கள் அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருக்கும். மாலத்தீவின் முழுக் கடல் எல்லைகளையும் பாதுகாப்பதற் கான ஒரு திட்டத்தையும் இந்தியா வடிவமைத்ததுடன், செயல்படுத்துதலிலும் இறங்கியது. ஆனால் இந்த நல்லுற வில் உண்டானது ஒரு பெரிய பின்னடைவு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மாறுகிறதா-மாலத்தீவு-2/article6977682.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மாறுகிறதா மாலத்தீவு?- 3

 
 
மாலே சர்வதேச விமான நிலையம்.
மாலே சர்வதேச விமான நிலையம்.

ஜிஎம்ஆர் குழுமத்துக்கும், மாலத்தீவு அரசுக்கும் இடையே ஏற்பட்ட உரசல் மாலத்தீவு - இந்தியா உறவிலும் பெரும் பின்னடைவை உருவாக்கியது.

ஜிஎம்ஆர் குழுமத்தின் தலைமை அலுவலகம் இருப்பது பெங்களூரில். கிரந்தி மல்லிகா அர்ஜுனராவ் என்பவரால் 1978-ல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சணல், சர்க்கரை போன்ற விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களில்தான் ஈடுபட்டார்கள்.

ஆனால் மெல்ல மெல்ல கட்டமைப்புத் துறையில் தங்களை விரிவுபடுத்திக் கொண்டார்கள். விமான நிலையங்கள், மின் நிலையங்கள், நெடுஞ்சாலைகள், நகர கட்டமைப்பு என்று பல இடங்களில் அழுத்தமாகவே கால்பதித்தார்கள். இந்தியாவில் மட்டுமல்ல தெற்கு ஆப்பிரிக்கா, துருக்கி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில்கூட இவர்கள் பல வெற்றிகரமான செயல் திட்டங்களை செய்து காட்டினர்.

அந்த விதத்தில்தான் மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள விமான நிலையத்தை நவீனமயமாக்க அந்நாட்டு அரசுடன் ஜிஎம்ஆர் குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டது. (ஏற்கெனவே துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் விமான நிலையத்தை இவர்கள் நவீனப்படுத்தி இருக்கிறார்கள். நம்நாட்டில் ஹைதராபாத், டெல்லி விமான நிலையத்தை குறைந்த கால அவகாசத்திலேயே நவீனப்படுத்தி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்கள்).

ஒப்பந்தப்படி விமான நிலையத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் 25 டாலர் தொகை வசூலிக்கப்பட்டு அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஜிஎம்ஆர் குழுமத்துக்கு வந்து சேர வேண்டும். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை இப்படி வசூலாகவில்லை என்றால் அதை மாலத்தீவு அரசு ஈடுகட்ட வேண்டும்.

ஆனால் மாலத்தீவு அரசு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்பதோடு ஒப்பந்தத்தையும் குறித்த காலத்துக்கு முன்பாகவே முடிவுக்குக் கொண்டு வந்தது.

தொடங்கியது சட்டப்பூர்வமான யுத்தம். ஜிஎம்ஆர் குழுமம் சிங்கப்பூரில் வழக்கு தொடுத்தது. (ஒப்பந்தப்படி இருதரப்புக்கும் இடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனை சிங்கப்பூர் சட்டத்துக்குட்பட்டுதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்).

பேச்சு மூலம் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும் என்று கூறினார் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன். அதே சமயம் நஷ்டஈடு குறித்து பேசினாரே தவிர தொடர்ந்து விமான நிலையப் பணிகளை மேற்படிக் குழுமமே செய்யலாம் என்பது குறித்து அவர் வாயைத் திறக்கக் காணோம்.

இந்தப் பிரச்சினை அரசியல் வடிவத்தை பெற்றுவிட்டது. எங்கள் கட்சி மற்றும் உள்ளூர் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது என்று மழுப்பினார்.

இதில் எங்கிருந்து அரசியல் நுழைந்தது என்கிறீர்களா? ஜிஎம்ஆர் குழுமம் மாலத்தீவு விமான நிலையத்தை நவீனமாக்கும் ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டபோது அங்கு இருந்தது நஷீத் தலைமையிலான அரசு. ஆனால் பின்னர் அங்கு ஆட்சி மாறிவிட்டது. ஜிஎம்ஆர் குழுமத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்று கூறியது புதிய அரசு. அதிபர் கூறியபடி நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் ஏற்படவில்லை.

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் நீதிமன்றம் ஜிஎம்ஆர் குழுமத்துக்கு சாதகமாக சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. இதன்படி வழக்கு செலவுக்காக மட்டுமே 40 லட்சம் டாலர் தொகையை மாலத்தீவு அரசு அளிக்க வேண்டும். ஜிஎம்ஆர் குழுமம் நஷ்டஈடாக கேட்ட தொகை 1.4 பில்லியன் டாலர். இதற்காக தனி ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

50 கோடி டாலர் மதிப்பு கொண்ட மாலே விமான நிலைய திட்டம் முழுமை அடையாமல் பாதியில் கைவிடப்பட்டதில் மாலத்தீவுக்கு அவப்பெயர் உண்டாகி இருக்கிறது. இந்த விஷயத்தில் அந்நாட்டு அரசு நடந்து கொண்ட விதம் பல முதலீட்டாளர்கள் அங்கு செல்ல தயங்கும் நிலையை ஏற்படுத்தியது.

ஜிஎம்ஆர் பிரச்சினையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் உள்ள உறவு கொஞ்சம் சரிந்தது. தவிர ஆளும் கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராக கூறிய சில விமர்சனங்கள் இந்தியாவைக் கோபம் கொள்ள வைத்தது.

இரண்டரை கோடி டாலர் அளவுக்குச் செய்வதாக இருந்த உதவிகளை இந்தியா நிறுத்திக் கொண்டது. மாலத்தீவில் தேசிய போலீஸ் அகாடமி ஒன்றை எழுப்பித் தரவும் இந்தியா ஒப்புக்கொண்டிருந்தது. அதையும் நிறுத்தி வைத்தது.

எனினும் 2014 இறுதியில் மாலே நகரில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது (காரணம் அந்தத் தீவின் ஒரே தண்ணீர் சுத்தம் செய்யும் கருவி செயலிழந்ததுதான்) இந்தியாவின் உடனடி உதவியைக் கோரியது மாலத்தீவு. இந்தியாவும் இம்முறை மறுக்காமல் உதவி செய்தது. கடல் நீரிலிருந்து குடிநீரைப் பிரித்தெடுக்கும் திட்டங்களிலும் உதவி செய்ய ஒத்துக் கொண்டது. மாலத்தீவு வெளிப்படையாகவே நன்றியை தெரிவித்துக் கொண்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மாறுகிறதா-மாலத்தீவு-3/article6981527.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மாறுகிறதா மாலத்தீவு?- 4

 

 
மாலத்தீவு சுல்தான் மன்னர் குடும்பத்துடன் பிரெஞ்சு ராணுவ வீரர்கள்.
மாலத்தீவு சுல்தான் மன்னர் குடும்பத்துடன் பிரெஞ்சு ராணுவ வீரர்கள்.

முன்னொரு காலத்தில் மாலத்தீவு தேசத்துக்கு தனி முக்கியத்துவம் இருந்தது. இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கியமான கடல் வழிகளில் மாலத்தீவும் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகவே அதன் அண்டை நாட்டுக்காரர்களான இந்தியாவும், இலங்கையும் அந்த நாட்டுடன் கலாசார மற்றும் பொருளாதாரத் தொடர்புகள் கொண்டிருந்தார்கள்.

ஆரம்பகால சரித்திரம் என்று பார்த்தால் மாலத்தீவுகளில் முதலில் வந்து தங்கியவர்கள் இந்தியர்கள்தான். மரத்தினாலான வீடுகளில் வசித்தார்கள் என்பதால், காலப்போக்கில் அவை அழிந்து மண்ணோடு மண்ணாகி சான்றுகளைத் துடைத்தெறிந்து விட்டன.

கி.மு.2000-லிருந்தே மாலத்தீவு தனது இருப்பைக் காட்டிக் கொண்டது என்கிறார் கள் சில தொல்லியல் நிபுணர்கள். எகிப்தியர் கள், ரோமானியர்கள், சிந்து சமவெளி வணிகர்கள் போன்ற பலருக்கும் ஓர் வணிக சந்திப்பு மையமாக விளங்கியது. சூரிய வழிபாடு உள்ளூர் மக்களுக்கு இருந்தது. பின்னர் இலங்கையிலிருந்து புத்த மதத்தின ரும், வடமேற்கு இந்தியாவிலிருந்து இந்துக் களும் மாலத்தீவை அடைந்தனர். அப்போது அங்கு பல புத்த ஸ்தூபிகள் எழுப்பப்பட்டன.

பின்னர் புத்தமதத்தினரின் கோட்டையாக விளங்கத் தொடங்கியது. சக்ரவர்த்தி அசோகரின் காலத்தில்தான் புத்தமதம் மாலத் தீவில் நுழைந்திருக்க வேண்டும் என்கிறார் கள். இலங்கையிலிருந்து புத்தமதம் பரவி யிருக்க வேண்டும் என்று கூறும் சரித்திர ஆய்வாளர்களும் உண்டு.

இன்று தொல்லியல் சான்றுகளாக மாலத் தீவில் கிடைப்பதெல்லாம் புத்த ஸ்தூபி களும், புத்தமதத் துறவிகளின் மடாலயங் களும்தான்.

தொலைகிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற அரேபிய வணிகர்கள், தங்கள் பயணத்தின் நடுவே மாலத்தீவில் தங்கிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். மாலத்தீவில் கவ்ரி கிளிஞ்சல்கள் (சோழி) நிறைய கிடைத்தன. இவை அரேபியர்களுக்கு மிகவும் பிடித்து விட்டன.

எக்கச்சக்கமாக அள்ளிச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் சில பகுதிகளில் இந்த கிளிஞ்சல்கள் கூட நாணயமாகப் பயன்பட்டன. இன்றுகூட மாலத்தீவு நாணயங்களில் இந்தக் கிளிஞ்சலின் உருவமும் அச்சிடப்படுகிறது).

ஒருகட்டத்தில் பல சுல்தான்கள் வாரிசு முறையில் மாலத்தீவை ஆட்சி செய்தார்கள். பின்னர் இஸ்லாம் இங்கு வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது.

பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள வணிகத்தில் பெரும் பகுதியை தாங்கள் கைவசமாக்கிக் கொண்டார்கள். மாலத்தீவு உள்நாட்டு அரசியலில் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலில் தலையிட்டனர் போர்ச்சுக்கீஸியர்.

ஏற்கெனவே மேற்கிந்தியாவில் இருந்த கோவாவில் அழுத்தமாகவே அவர்கள் காலூன்றி விட்டிருந்தனர். இந்தியப் பெருங்கடலில் லாபத்தை ஈட்டும் வணிக வழித்தடங்களில் தங்களுக்கு நிச்சயம் பங்கிருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அவர்கள் ஏற்கனவே வந்திருந்தார்கள்.

உங்களுக்காக சின்னதாக ஒரு கோட்டையும், தொழிற்சாலையும் கட்டிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார் அப்போதைய மாலத்தீவு மன்னர். போர்ச்சுக்கீஸிய ஒட்டகம் மாலத்தீவில் தலையை நுழைத்தது.

விரைவிலேயே போர்ச்சுக்கீஸியர்கள் மாலத்தீவு மீது படையெடுத்தனர். வென்றனர். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு அவர்கள் ஆட்சிதான் மாலத்தீவில் நடைபெற்றது.

முகம்மது தகுருஃபானு என்பவர் தனது சகோதரர்களையும், நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு மாலே நகரில் ஆட்சி செய்த போர்சுக்கீஸியர் மீது மீண்டும் மீண்டும் கெரில்லாத் தாக்குதல் நடத்தினர். இதில் அத்தனை போர்ச்சுக்கீஸிய ஆட்சியாளர்களும் கொலை செய்யப் பட்டனர்.

இந்த வெற்றியை, அந்த நாளை (சந்திர வருடக் கணக்குப்படி மூன்றாவது மாதத்தின் முதல் நாள்) தேசிய தினமாக இன்றளவும் மாலத்தீவு கொண்டாடுகிறது. முகம்மது தகுருஃபானுவுக்கு ஓர் நினைவகமும் எழுப்பப்பட்டது. இவர்தான் அடுத்த சுல்தான் சாம்ராஜ்யத்தை நிறுவினார்.

உதீமு என்ற பெயர் கொண்ட அந்த சாம்ராஜ்யம் அடுத்த 120 வருடங்களுக்கு மாலத்தீவை ஆட்சி செய்தது. அந்தக் காலகட்டத்தில் நீதித் துறையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் நடைபெற்றன. பாதுகாப்புப் படையில் கவனம் செலுத்தப்பட்டது.

தென்னிந்தியாவில் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ராஜாக்கள் தொடக்கத் தில் முகம்மது தகுருஃபானுவுக்கு ராணுவ உதவி செய்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு தங்களுக்கும் மாலத்தீவு ஆட்சியில் பங்கு இருந்தால் நல்லது என்று யோசிக்கத் தொடங்கினார்கள். போதாக்குறைக்கு போர்ச்சுக்கீஸியர்களும் அடிக்கடி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

பிறகு டச்சுக்காரர்கள், அதற்குப் பிறகு பிரெஞ்சு என்று பலரும் முற்றுகையிடத் தொடங்கினர். என்றாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனின் பாதுகாப்பில் அமைந்த நாடுகளில் ஒன்றாக மாலத்தீவு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. பிரிட்ட னும் போனால் போகிறது என்று மாலத்தீவை ஆண்டு வந்த அடுத்தடுத்த மன்னர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கியது.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/மாறுகிறதா-மாலத்தீவு-4/article6985580.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மாறுகிறதா மாலத்தீவு?- 5

 
 
 
மாலத்தீவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்.
மாலத்தீவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்.

இரண்டாம் உலகப்போரில் மாலத்தீவு பெரும் துன்பங்களை அனுபவித்தது. இலங்கையுடனான வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அரிசியைப் போதிய அளவு இறக்குமதி செய்ய முடியவில்லை. பலரும் நோய்க ளாலும், சத்துக் குறைவினாலும் இறந்தனர்.

அரசியலமைப்புச் சட்டம் புதுப் பிக்கப்பட்டது. இதன்படி பிரதமரானார் முகம் மது அமீன் தீதி. மீன் ஏற்றுமதித் தொழிலை தேசியமயமாக்கினார். புகையிலை பிடிப் பதற்குத் தடை விதித்தார். இந்தத் தடைக்கு மட்டும் பரவலான அதிருப்தி எழுந்தது.

1948-ல் இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. மாலத்தீவு பிரிட்டனுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதன்படி மாலத்தீவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பிரிட்டனுக்குப் பங்கு உண்டு. ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் அது தலையிடக் கூடாது. பதிலுக்கு பிரிட்டிஷ் ராணுவத்துக்கு அத்தனை வசதிகளையும் தன் பகுதியில் செய்து கொடுத்தது மாலத்தீவு. இந்தியா மீது கொண்ட ஆளுமையை இழந்திருந்த நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரிட்டனுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது மாலத்தீவு.

மாலத்தீவில் 1953-ம் ஆண்டு சுல்தான் ஆட்சி முழுமையாக ஒழிக்கப்பட்டது. குடியரசு உருவானது. முதல் அதிபர் என்னவோ அமீன் தீதிதான். ஆனால் ஒரு வருடத்துக்குள் அவர் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. மறுபடியும் சுல்தான் ஆட்சி. மாலத்தீவு நாட்டின் 94-வது சுல்தானாகப் பதவியேற்றார் முகம்மது ஃபரீட் தீதி.

ஒப்புக் கொண்டபடி மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்களில் பிரிட்டன் தலையிடவில்லைதான். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட கான் தீவு என்பதில் தன்னை அழுத்தமாகவே காலூன்றிக் கொண்டது. அங்கு உருவாக்கப்பட்ட ராயல் ஏர்ஃபோர்ஸ் அமைப்பில் நூற்றுக் கணக்கான உள்ளூர்வாசிகள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.

1957-ல் மாலத்தீவு பிரதமராகப் பதவி யேற்றார் இப்ரஹிம் நாசிர். பிரிட்டனுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த காலத்தைக் குறைக்க வேண்டும் என்றார். தவிர இதற்காக ஆண்டுதோறும் 2,000 டாலர் என பிரிட்டன் அளித்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகளை வேலைக்கு எடுப்பதை பிரிட்டனின் விமான சர்வீஸ் மிகவும் குறைத்துக் கொண்டது. உள்ளூர் மக்கள் பதறிப் போனார்கள்.

மாலத்தீவு அரசு தந்திரமாகச் செயல்பட்டது. பிரிட்டனுக்கு “நீங்கள் தாராளமாக எங்கள் நாட்டுப் பகுதியை உங்கள் ராணுவ கேந்திரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கொடுத்து விடுங்கள்’’ என்றது.

பாதுகாப்பு என்ற பெயர் இருந்தாலும் பிரிட்டனின் காலனி நாடு போலவே நடத்தப்பட்டதை சுதந்திர வேட்கை கொண்டவர்களால் ஏற்க முடியவில்லை. எதிர்ப்பை பலமாகவே தெரிவித்தார்கள். ஒருவழியாக ஜுலை 26, 1965 அன்று சுதந்திரம் பெற்றது மாலத்தீவு.

என்றாலும் அடுத்த பத்து வருடங்களுக்கு பிரிட்டன் தனது விமானப்படைப் பிரிவை மாலத்தீவில் தொடர்ந்து நிறுத்தி வைத்தது. 1976-ல்தான் முழுமையாக மாலத்தீவில் இருந்து நகர்ந்தது பிரிட்டன்.

1965-ல் மாலத்தீவுக்கு முழு விடுதலை கொடுத்து அங்கிருந்து தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை விலக்கிக் கொண்டது பிரிட்டன். இதைத் தொடர்ந்து ஐ.நா.சபையில் உறுப்பினரானது மாலத்தீவு.

1968-ல் மீண்டும் சுல்தான் முறை ஆட்சி ஒழிக்கப்பட்டது. நசீர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுற்றுலாத் தலங்கள் பிற நாட்டினருக்கு பரவலான முறையில் திறந்துவிடப்பட்டன. ஆனால் உடனடியாக நிதி கிடைத்து விடவில்லை. விலைவாசி அதிகமானது.

ஆட்சியாளர் நசீரைக் கொல்லப் புரட்சியாளர்கள் திட்டமிட்டனர். உயிருக்குப் பயந்து 1978-ல் சிங்கப்பூருக்குப் பறந்தார் அவர். சும்மா இல்லை, 40 லட்சம் அமெரிக்க டாலரை மாலத்தீவு கஜானாவிலிருந்து எடுத்துக் கொண்டுதான் பறந்தார்.

நசீரின் இடத்தைப் பிடித்தார் மமூன் அப்துல் கயூம். ஒரு காலத்தில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவர். மாலத்தீவின் ஐ.நா. தூதராக பணியாற்றியவர். 1983-ல் மீண்டும் இவரே ஆட்சிக்கு வந்தார். காமன் வெல்த், சார்க் போன்ற அமைப்புகளில் மாலத்தீவு உறுப்பினரானது.

மூன்றாம் முறையாக 1988-ல் ஆட்சியைப் பிடித்தார் கயூம். அந்தத் தேர்தலில் அவருக்குப் போட்டியே இல்லை. 1993-ல் நான்காம் முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார் கயூம். இந்த முறை பொதுத் தேர்தல் கிடையாது. ஆலோசகர்களின் கணக்கெடுப்பு மூலம் மட்டுமே தேர்வு நடைபெற்றது.

வளரும் நாடுகளுக்கு இருக்கும் பல பிரச்னைகளை மாலத்தீவும் சந்தித்து வருகிறது. என்றாலும் 1998-ல் உண்டான எல் நினோவும் (கடல் பரப்பு வெப்பநிலை பாதிப்பு), பின்னர் உண்டான சுனாமியும் மாலத்தீவின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டன.

செப்டம்பர் 2003-ல் தெற்கு மாலே பகுதியில் இருந்த சிறைச்சாலையில் தொடங்கியது ஒரு கலவரம். அங்கு கைது செய்து அடைக்கப்பட்டிருந்த 19 வயது ஈவான் நசீம் என்ற இளைஞன் காவலாளிகளால் கண்மூடித்தனமாக அடிக்கப்பட்டு உயிரிழந்தான்.

இறந்தவனின் பெற்றோர் அந்தப் பிரதேதத்தை பொது இடத்தில் வைத்துக் கதற, நகரமே கொதித்தெழுந்தது. கலவரங்கள் தொடங்கின. மக்கள் மஜ்லிஸ் எனப்படும் அந்த நாட்டுப் பாராளுமன்றம் கடுமையான கல்வீச்சுக்கு உள்ளானது. காவல் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

எதிர்ப்பு மிகவும் அதிகமாக, கயூம் சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார். இனி ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் போட்டி இருக்கும் என்றார். அதிபரின் ஆட்சிக்காலம் இரண்டு வருடங்கள்தான் என்றார். பிற அரசியல் கட்சிகளுக்கும் சட்ட அந்தஸ்து கொடுப்போம் என்றார்.

ஆனால் இவையெல்லாம் சொல்லளவில் நின்றன. உச்சமாக அமைந்தது 2004 ஆகஸ்ட் 13 அன்று அமைந்த ஒரு சம்பவம். இதை `கருப்பு வெள்ளி’ என்றே அங்கு குறிப்பிடுகிறார்கள்.

அன்று மாலத்தீவு தலைநகரின் முக்கிய சதுக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்களும், புரட்சியாளர்களும் குழுமியிருந்தனர். திடீரென காவல்துறையினர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அடித்து துவம்சம் செய்தனர். பெண்களும், குழந்தைகளும்கூட தப்பவில்லை. அவர்களில் பலர் தனியான இடத்தில் பல மாதங்களுக்கு வைக்கப்பட்டனர். மாலத்தீவு வரலாறில் சந்தேகமில்லாமல் இது ஒரு கருப்பு தினம்தான்.

அடுத்த விபரீதம் 2004 டிசம்பர் 26 அன்று காத்திருந்தது. சுனாமியால் 83 பேர் இறந்ததாக உடனடியாக அறிவிக்கப்பட்டது. நாட்டின் 21 தீவுகள் முழுவதுமாக அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர்.

இந்தக் களேபரத்தைத் தொடர்ந்து `கருப்பு வெள்ளி தின’ புரட்சியாளர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. என்றாலும் பேச்சுரிமை எழுத்துரிமை என்பதெல்லாம் இன்னமும் அங்கு கேள்விக்குறியாகவே உள்ளன.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மாறுகிறதா-மாலத்தீவு-5/article6989701.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மாறுகிறதா மாலத்தீவு? - 6

 
 
 
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் அப்துல் கயூம்.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் அப்துல் கயூம்.

2008-ல் பொதுத் தேர்தல் நடந்தது. கயூமுக்கு 40 சதவீத வாக்குகளும், நஷீதுக்கு 25 சதவீத வாக்குகளும் கிடைத்தன. எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை. இந்தச் சூழலில் பல உதிரிக் கட்சிகளும் நஷீதை ஆதரிக்க, அவர் அணிக்கு 53.65 சதவீதம் வாக்குகள் என்று ஆனது. நஷீத் தலைவரானார் - முழுவதும் ஜனநாயகமுறையில் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர்.

முகம்மது நஷீத் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு கடல்வாழ் உயிரின விஞ்ஞானியும்கூட. சுற்றுப்புற சூழல் தொடர்பான செயல்பாடுகளில் நிறைய ஆர்வம் காட்டியவர். மாலத்தீவு ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.

நஷீத் ஆட்சியில் தாராளமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டது. சுறா வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஏறுமாறாக நடந்து கொண்டிருந்த இருபதுக்கும் அதிகமான அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. உயர்ந்து கொண்டிருக்கும் கடல் மட்டத்தில் நாட்டின் பல பகுதிகள் வருங்காலத்தில் அழியலாம் எனும் நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி உருவாக்கப்பட்டது. மாலத்தீவு சுதந்திரப் பெருமூச்சு விட்டது - கொஞ்ச காலத்துக்கு மட்டும். 2012 வரை மாலத்தீவின் நான்காவது அதிபராக ஆட்சி செய்தார் நஷீத்.

அதற்கு முன்பு மமூன் அப்துல் கயூம் சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒரு சர்வாதிகாரியாகவே மாலத்தீவை ஆட்சி செய்திருக்கிறார். அவர் ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் அதிகம்.

2012-ல் பிப்ரவரி 7 அன்று தனது பதவிக்காலம் முடிவடையாத போதும், நஷீத் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளின் கட்டாயம் காரணமாக ‘துப்பாக்கி முனையில் தான் பதவி விலக நேரிட்டது’ என்றார்.

நஷீத் ஆட்சியில் நீதிபதி முகமது கைது செய்யப்பட்டதால், அதைத் தொடர்ந்து காவல் துறையும், ராணுவமும் நஷீத்துகு எதிராகத் திரும்ப, அதைத் தொடர்ந்துதான் ராஜினாமா. எனினும் அவர்மீது சுமத்தப்பட்ட கிரிமினல் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

ஆனால் சமீபத்தில் நஷீத் மீண்டும் கைது செய்யப்பட்டபோது அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் மேலும் கடுமையானவை. தீவிரவாதத்துக்கு எதிரான சட்டங்களின்படி, அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அவருக்கு நேற்று 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2013-ல் ஆட்சிப் பொறுப்பேற்றார் அப்துல்லா யமீன் அப்துல் கயூம். இவரது தேர்தல் வெற்றி பலத்த விமர்சனங்களைக் கிளப்பின. பிரபல தொழில் அதிபர் காசிம் இப்ரஹிம் என்பவர் இவர் ஆட்சிக்கு வரப் பெரிதும் (பலவிதங்களில்) உதவினாராம்.

அரசுக்கு எதிரான பல எதிர்ப்புப் பேரணிகளை மாலே நகரில் ஆங்காங்கே தொடர்ந்து நடத்தி வருகிறது எதிர்க்கட்சி. ஆனால் உரிய நேரத்தில் நடைபெறும் என்றால் அடுத்த பொதுத் தேர்தல் என்னவோ 2018-ம் ஆண்டில் பிற்பகுதியில்தான்.

முன்னாள் அதிபர் நஷீதின் கைது மட்டுமல்ல. வேறொன்றும் இந்தியாவை உற்று கவனிக்க வைத்துள்ளது. கைது, இது தொடர்பான கலவரம் ஆகியவை நடந்த சில நாட்களிலேயே மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயூம் பாகிஸ்தானுக்குச் சென்றார். மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு வர இருப்பதற்கு முன்னால் பாகிஸ்தான் விஜயம் எதற்கு? பின்னணி உண்டா? (தனது மாலத்தீவு பயணத்தை இந்தியப் பிரதமர் சமீபத்தில் ரத்து செய்து விட்டார் என்பது வேறு விஷயம்).

அதைவிட யோசிக்க வைக்கிறது இன்னொரு செய்தி. சீனாவுக்கும் விஜயம் செய்யப் போகிறாராம் மாலத்தீவு அதிபர். இருநாடுகளுக்கும் விஜயம் என்றால் அது மூன்றாவது நாட்டுக்கு எதிரானதாக இருக்க வேண்டுமா என்ன? அவசியமில்லைதான். ஆனால் அந்த விஜயங்கள் எப்போது நடக்கிறது என்பதுதான் பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கின்றன.

பாகிஸ்தானுக்கு யமீன் செல்வதைவிட அதில் சீனாவின் பின்னணி என்ன என்பதுதான் இந்தியாவை யோசிக்க வைக்கிறது.

மாலத்தீவில் சர்வாதிகார ஆட்சியை நீண்ட காலம் நடத்திய அப்துல் கயூமுடன் சீனா அப்போதே தொடர்பில் இருந்தது. சத்தம் போடாமல் தனது கடற்படையை மாலத்தீவின் ஒரு பகுதியான மரோவா தீவில் அமைக்க திட்டமிட்டது சீனா. அப்போதைய அதிபர் கயூம் இந்தத் தீவை சீனாவிடம் ஒப்படைக்கக்கூட தயாராகி விட்டார். ஆனால் 2008-ல் நடைபெற்ற அந்த நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் நஷீத் அதிபர் ஆகிவிட்டார். அவர் பதவிவிலகலுக்குப் பிறகு இப்போது மீண்டும் மரோவா தீவில் பெரும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறது சீனா.

தனது பட்ஜெட்டில் கடற்படைக்கான செலவை மட்டும் சமீப காலமாக அதிகமாக்கி வரும் சீனா, இந்தியப் பெருங்கடலிலுள்ள சில நாடுகளில் தனது கடற்படைத் தளங்களாக தேர்ந்தெடுத்திருக்கிறது. அவற்றில் முக்கியமானவை செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை மற்றும் மாலத்தீவு.

சமீபத்தில் சீனாவுக்கு ஓர் அதிர்ச்சி. சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்த ராஜபக்ச இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தோற்றுப் போனார். தனது ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்பாகவே தேர்தலை அறிவித்ததால் முன்னதாகவே ஆட்சியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது அங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் மைத்ரிபால சிறிசேனா சீனாவுக்கு ஆதரவாகப் பேசியதில்லை. சொல்லப் போனால் தேர்தலின்போது சீனாவின் சுயநலத்தைக் கொஞ்சம் தாக்கவும் செய்தார்.

ஒருவேளை இலங்கை சீனாவுக்கு எதிரான, இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடை அறிவித்து விட்டால்? இப்படி யோசித்த சீனா இந்த இழப்பை சரி செய்ய மாலத்தீவை இந்திய ஆதரவு நிலையிலிருந்து விலக்க நினைக்கிறதோ?

முன்னாள் அதிபர் நஷீத் இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் பலமுறை பேசி இருக்கிறார். தற்போது மாலத்தீவில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும் என்பதை மாலத்தீவை விட அதிக உன்னிப்பாக கவனித்து வருகிறது சீனா.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/மாறுகிறதா-மாலத்தீவு-6/article6995801.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.