Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேச நாடா நேபாளம்?

Featured Replies

நேச நாடா நேபாளம்? - 1

 
 
நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆலயம்
நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆலயம்

சமீபத்தில் பூகம்பத்தால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த நாடு நேபாளம். ரிக்டர் அளவுகோலில் 7.9 என்பது மிக அதிகம்தான். சாலைகளில் மட்டுமல்ல சரிவுகளிலும் பலர் இறந்திருக்கிறார்கள் பூகம்பத்தால் எவரெஸ்டில் ஏற்பட்ட பனிச் சரிவு! இந்தியாவின் சில பகுதிகளையும் இந்த பூகம்பம் பாதித்ததால், இந்தியர்களின் முழுக் கவனத்தையும் நேபாளம் பெற்றது. மற்றபடி நேபாளம் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?

இமய மலையின் மிக உயரமான சிகர மான எவரெஸ்ட் இந்தியாவில் உள்ளது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலக நாடுகளின் தேசியக் கொடிகள் எல்லாமே நீள்சதுரத்தில் அமைந்தவை என்றும் சிலர் எண்ணிக் கொண்டிருக் கிறார்கள்.

மக்கள் தொகையில் அதிக சதவீதம் இந்துக்களைக் கொண்ட நாடு எது என்றால் ‘இந்தியா’ என்று உரத்துக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரின் எண்ணங்களுமே தவறானவை. எவரெஸ்ட் இருப்பது நேபாளத் தின் எல்லைக்குள். அதுமட்டுமல்ல, உலகின் மிக உயரமான எட்டு மலைச் சிகரங்கள் உள்ளது நேபாளத்தில்தான். அவற்றில்தான் சாகர்மாதாவும் அடக்கம் சாகர்மாதா என்பது எவரெஸ்டின் மறுபெயர். ஏதோ இரண்டு முக்கோணங்களை இணைத்துபோல காட்சி அளிக்கிறது நேபாளத்தின் தேசியக் கொடி.

மக்கள்தொகை சதவீதத்தில் இந்துக்களை அதிகமாகக் கொண்ட நாடு நேபாளம்தான். எண்பது சதவீதம் பேர் இந்துக்கள்.

பறவைகள் மிகுந்த நாடு நேபாளம். உலகில் உள்ள பல்வேறு வகைப் பறவைகளில் சுமார் எட்டு சதவிகிதப் பறவைகள் நேபாளத்தில் வசிக்கின்றன. இது மிகவும் அதிகம்தான்.

உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு (பெயர் அருண் பள்ளத்தாக்கு) நேபாளத்தில் உள்ளது.

புத்தரின் பிறந்த இடமான (லும்பினி என்ற பகுதியில் உள்ள) கபிலவஸ்து நேபாளத்தில்தான் உள்ளது. இந்து மதத்துக்கு அடுத்ததாக புத்த மதம் பரவியுள்ள நாடு நேபாளம்.

புத்த மதம் இப்பகுதியில் பரவியிருக்க மாமன்னர் அசோகரும் ஒரு காரணம். அவர் புத்த மதத்தைப் பரப்புவதற்காக பல்வேறு இடங்களுக்குத் தன் பிரதிநிதிகளை அனுப்பினார். மஜ்ஜிமா என்ற தனது பிரதிநிதியை அவர் அனுப்பிய இடம் ஹிமவந்தா (நேபாளம் அன்று அப்படி அழைக்கப்பட்டது).

ஒருவிதத்தில் பார்த்தால் நேபாள மக்கள்தான் நமக்கு தொப்புள்கொடி உறவோ என்னவோ! இந்தியர்கள் அங்கு செல்ல விசா தேவையில்லை.

இமய மலையில் அமைந்துள்ள நேபாளம், தன்னுடைய குறிக்கோள் ‘ஜனனி ஜன்ம பூமிஷ்ச ஸ்வர்கதபி கரியாஸி’’ என்று கூறுகிறது. அதாவது ‘தாயும், தாய் நாடும் சொர்க்கத்தைவிட மேலானவை’ என்று பொருள்.

தன்னை ஹிமாலய ராஜ்யம் என்றும் பெருமையுடன் அழைத்துக் கொள்கிறது இந்த நாடு. இதன் வடக்கே உள்ளது சீனா. மற்ற மூன்று திசைகளிலும் இந்தியா.

எவரெஸ்ட், சீனாவுடனான எல்லைப் பகுதியில் உள்ளது. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே திபெத்திய மியான்மியர் இன மக்கள் இங்கு வசித்திருக்கிறார்கள். பின்னர் இந்தோ - ஆரிய மக்கள் கி.மு. 1500ல் இங்கு வசித்தனர்.

சித்தார்த்தர் (புத்தர் இளவரசராக இருந்தபோது அவர் பெயர்) பிறந்த வருடம் கி.மு. 623 என்கிறது ஒரு கணிப்பு. நேபாளத்தில் 10.74 சதவீதம் பேர் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். நேபாளத்தின் பல ஆலயங்களில் இந்து தெய்வங்களின் திருவுருவங்களோடு புத்தரின் திருவுருவமும் உள்ளன. முக்கியமாக முக்திநாத். ஹெலிகாப்டரில் சென்று இக்கோவிலை அடையலாம். ஜீப் வசதியும் உண்டு.

முக்திநாத் ஆலயம் மிகப் பெரியது என்பதில்லை. அதன் அருகில் உள்ள கண்டகி நதி புனிதமாகக் கருதப்படுகிறது. முக்திநாத் ஆலயத்தில் உள்ள சாளக்ராமத்தில் (விஷ்ணுவின் தெய்வீக அம்சம் பொருந்திய கல்லை அப்படிக் குறிப்பிடுவார்கள்) திருமாலின் தசாவதாரங்களும் அடங்கியுள்ளதாக ஐதீகம். இதன் அருகில் உள்ளது ஜ்வாலாமுகி ஆலயம். முக்திநாத்தில் சங்கு சக்கரத்தோடு திருமால் தரிசனம் தருகிறார். அதற்குப் பின்னால்தான் அவரது அம்சமான சாளக்ராமம் உள்ளது. ராமானுஜருக்கும் இங்கு சன்னதி உண்டு. 108 திவ்ய தேசங்கள் என்று வைணவப் பிரிவில் அழைக்கப்படும் சிறப்பான வைணவத் தலங்களில் முக்திநாத்தும் ஒன்று. இப்படி ஒரு வைணவச் சிறப்பு கொண்ட ஆலயத்தில் புத்தரின் உருவமும் வைத்து வணங்கப்படுகிறது. சொல்லப்போனால் இந்த இரு மதங்களுக்கான பிரிவுக்கோடு என்பது நேபாளத்தைப் பொருத்தவரையில் மிகத் தெளிவாக இல்லை. ஆக நேபாளத்தின் முக்கிய இரு மதங்களும் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இருப்பதால் மதம் தொடர்பான கலவரங்கள் நேபாளத்தில் மிகக் குறைவுதான்.

அசோகரின் ஆட்சிக் காலத்தில் அவர் சார்பாக நான்கு ஸ்தூபிகள் அந்தப் பகுதியில் நிறுவப்பட்டன. அவற்றில் புத்தரின் உபதேசங்கள். நேபாளப் பகுதியில் புத்த மதம் தழைக்க மவுரிய சாம்ராஜ்யம் பெரிதும் பாடுபட்டது எனலாம்.

ஆனால் தொடர்ந்த சில நூற்றாண்டுகளில் இந்து மதம் செழித்துப் பரவ பெளத்தம் தன் முக்கியத்துவத்தை இழந்தது. ஃபாஹியான், ஹுவாங் சுவாங் ஆகிய பிரபல சீன (புத்தமத) யாத்ரிகர்கள் இங்கு வந்திருந்தபோது புத்த மதம் வீழ்ச்சி கண்டிருந்ததையும் லும்பினியில் உள்ள பெளத்த மடாலயங்கள் சிறப்பை இழந்திருந்ததையும் விவரித்துள்ளனர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நேச-நாடா-நேபாளம்-1/article7315042.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருவிதத்தில் பார்த்தால் நேபாள மக்கள்தான் நமக்கு தொப்புள்கொடி உறவோ என்னவோ! இந்தியர்கள் அங்கு செல்ல விசா தேவையில்லை.

சித்தார்த்தர் (புத்தர் இளவரசராக இருந்தபோது அவர் பெயர்) பிறந்த வருடம் கி.மு. 623 என்கிறது ஒரு கணிப்பு. நேபாளத்தில் 10.74 சதவீதம் பேர் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். நேபாளத்தின் பல ஆலயங்களில் இந்து தெய்வங்களின் திருவுருவங்களோடு புத்தரின் திருவுருவமும் உள்ளன. 

 

தாயும் சேயும் தொப்புள் கொடியால் இணைந்திருந்து பின்பு பிரிந்துவிட்டாலும் அது தொப்புள் கொடி உறவாகத் தொடர்கிறது. அதுபோலவே இன்றைய தமிழ்நாடும், இலங்கையும் ஒரு காலத்தில் நிலப்பரப்பால் இணைந்திருந்து பின்பு பிரிந்தது. நேபாளமும் தமிழ்நாடும் அப்படியல்ல. இந்துமதம் தமிழரால் தழுவப்பட்டது, அல்லது தமிழரிடம் திணிக்கப்பட்டதே தவிர இந்துமதம் தமிழருடைய மதமல்ல என்பதை ஆராச்சியாளர்கள் பலர் நிறுவியுள்ளனர். 


இலங்கையில், தமிழ், சிங்களம் என்ற மொழி வேறுபாடு பெரிதளவில் இருந்தாலும், இந்துமதம், புத்தமதம் என்ற வேறுபாடுகளின் தாக்கம், மக்களிடம் இல்லையென்றே கூறலாம். இந்துக் கடவுள்களை சிங்களரும் கடவுளாகவே வணங்குகிறார்கள். புத்தரைத் தமிழர்களும் கடவுளாகவே வணங்குகிறார்கள்.

  • தொடங்கியவர்

நேச நாடா நேபாளம்? - 2

 
 
 
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள குமாரி கோயில்.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள குமாரி கோயில்.

வட இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு வந்த லிச்சாவிக்கள் இந்து மதம் நேபாளத்தில் வேரூன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். நான்கில் இருந்து எட்டாம் நூற்றாண்டுவரை கலை களில் நேபாளம் மிகச் சிறந்து விளங்கியது. முக்கியமாக கட்டடக்கலை. இந்துமத ஸ்தூபிகள் பல இடங்களில் நிறுவப்பட்டன. அன்று எழுப்பப்பட்ட சங்கு நாராயணன் கோயிலின் மீதம் இன்னமும் காணப்படுகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் அமைந்த காரணத்தால், வணிகத்தின் காரண மாகவும் நேபாளம் பொருளாதாரத்தில் மேம்படத் தொடங்கியது.

கி.பி.602-ல் அம்சுவர்மன் என்பவர் நேபாளத்தின் மன்னர் ஆனார். இவர் லிச்சாவி வம்சத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் இவரது மாமனார் லிச்சாவி வம்சத்தைச் சேர்ந்தவர். மகன் இல்லாததால் மருமகன் மன்னர் ஆனார்.

அம்சுவர்மன் ஒருவிதத்தில் படு சாமர்த்தியக்காரர். தன் சகோதரியை இந்திய இளவரசர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தன் மகளை அப்போது திபெத்தின் பிரபல மன்னனாக விளங்கிய கோம்ப்போ என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

கோம்ப்போவுக்கு ஏற்கெனவே சீன தேசத்தைச் சேர்ந்த மனைவி ஒருத்தி இருந்தாள். அவரும் இரண்டாவது மனைவியுமாகச் சேர்ந்து கோம்ப்போவை புத்த மதத்துக்குத் திருப்பினார்கள். இதைத் தொடர்ந்து திபெத்தில் புத்தமதம் வேரூன்றத் தொடங்கியது. பிறகு நேபாளத்திலும் அது கொஞ்சம் அதிகமாகப் பரவியது.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரை நேபாளத்தில் என்ன நடந்தது? எந்தச் சான்றும் கிடைக்கவில்லை. அது ஒரு இருண்ட காலம். பத்தாம் நூற்றாண்டில் மன்னர் குணகமாதேவா என்பவர் காந்திபூர் என்ற நகரை உருவாக்கினார். அதுதான் இன்றைய காத்மாண்டு.

பின்னர் மல்லர்களின் ஆட்சி. இவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். மகாபாரதத்தில்கூட இவர்கள் பற்றிய குறிப்பு உண்டு. இவர்கள் ஆண்ட 550 வருடங்களும் நேபாளம் பொருளாதாரத்தில் செழித்திருந்தது. திபெத்துடன் மட்டும் அவ்வப்போது வணிக உரசல்கள். ஆனால் 1255ல் நேபாளத்தில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் அந்த நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கை பூமிக்குள் புதைத்தது.

பிறகு சுல்தான்களின் ஆக்கிரமிப்பு. என்றாலும் காஷ்மீரில் நடந்ததுபோல நேபாளத்தில் இஸ்லாமியத் தாக்கம் நிரந்தமில்லாமல் போனது. பதிமூன்றாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் நேபாளத்தை ஆண்டது மகாராணி தேவலா தேவி. நேபாளச் சரித்திரத்தின் சக்தி மிகுந்த பெண்ணாக இவர் விளங்கினார்.

யட்சமல்லன் என்ற மன்னர் 1482ல் இறந்தவுடன் நேபாள சாம்ராஜ்யத்தை அவனது மகன்கள் மூன்றாகப் பிரித்து ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அவற்றை இன்றைய பக்தபூர், காத்மாண்டு, பத்தான் என்று தோராயமாகக் குறிப்பிடலாம். எல்லை களைப் பிரித்துக் கொண்டதில் ஒற்றுமையாக இருந்தவர்களுக்கு திபெத்துடனான வணிகப் பாதையை யார் வைத்துக் கொள்வது என்பதில் தகராறு உண்டானது.

இப்படி மூன்றாகப் பிரிந்ததில் ஒரு நன்மையும் உண்டானது. போட்டி போட்டுக் கொண்டு ஆலயங்களையும் கட்டடங்களையும் தங்கள் பகுதியில் இவர்கள் எழுப்பினார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மிளிர்ந்தது.

நாளடைவில் காஸா பரம்பரையைச் சேர்ந்த மன்னர்கள் நேபாளத்தைத் தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டில் அந்தப் பகுதியை ஆண்ட இவர்கள் அந்த நாட்டில் தங்கள் முத்திரையை மறக்கவே முடியாத வகையில் பதித்துவிட்டுப் போனார்கள். அவர்கள் அறிமுகப்படுத்திய நேபாளி மொழிதான் இன்றளவும் அங்கு தேசிய மொழியாக விளங்குகிறது.

காஸா பரம்பரை என்பது மன்னர்கள் பரம்பரையிலேயே ஒரு மாறுபட்ட கிளை தான். அவர்கள் மன்னர் பிராப் மல்லா என்பவரைத் தங்கள் குலதெய்வமாகவே ஏற்றுக் கொண்டு அவருக்குச் சிலை எல்லாம் எழுப்பினார்கள். காத்மாண்டுவில் உள்ள குமரி ஆலயமும் இந்தக் காலகட்டத்தில் எழுந்ததுதான். இந்தியாவின் முகலாயர் ஆட்சி உடை விஷயத்தில் நேபாள மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

மூன்று பகுதிகளுமே சீனாவுடன் நல்லுறவு வைத்துக் கொள்ள விரும்பின. மூன்று ராஜாக்களுமே பெய்ஜிங்கிற்கு அவ்வப்போது பரிசுப் பொருள்களை அனுப்பிக் கொண்டே இருந்தனர்.

1768-ல் அடுத்த பெரிய மாற்றம் நடந்தது. நேபாளத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்த ஒரு மிகச் சிறிய மண்டலமான கோர்க்கா என்ற பகுதியை ஆட்சி செய்த பிரிதிவி நாராயண்ஷா என்பவர் தனது நெடுநாள் கனவான ஒன்றுபட்ட நேபாளத்தை சாத்தியமாக்கினார். இதற்கு உதவியது பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆக்கிரமிப்பு.

ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்கு வகித்த மன்னர் தனது தலைநகரை கோர்க்காவிலிருந்து காத்மாண்டுவுக்கு மாற்றிக் கொண்டார். ஷா என்ற பெயர் கொண்ட அவரது பரம்பரைதான் சமீபத்திய காலம் வரை நேபாளத்தை ஆட்சி செய்தது.

தொடக்கத்தில் சீனாவுடன் உரசலைக் கொண்டிருந்த நேபாளம் ஒருகட்டத்தில் அதோடு அமைதி உடன்படிக்கைக்கு வந்ததோடு 1912 வரை அதற்குக் கப்பமும் கட்டியது. ஆனால் அதே சமயம் பிரிட்டனுடன் அதற்குப் பகைமை அதிகமானது. போர் எழுந்தது. தன்வசமிருந்த சிக்கிம், கார்வா போன்ற சில பகுதிகளை இழந்தது நேபாளம்.

ஆனால் இதில் வேறு சில முக்கிய விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். கோர்க்கா வீரர்களின் வீரத்தைப் பார்த்து பிரமித்த பிரிட்டிஷ்காரர்கள் அவர்களில் சிலரைத் தங்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொண்டார்களாம்.

கடைசிவரை நேபாளத்தை தனது காலனி நாடாக ஆக்கிக் கொள்ள பிரிட்டனால் முடியவில்லை. காரணம் மலைப்பாங்கான நேபாளத்தை தன்னால் சரிவர நிர்வகிக்க முடியாது என்று பிரிட்டன் கருதியது. ‘இந்தியாவையே காலனி நாடாக்கிய பிரிட்டனால் எங்களை அப்படிச் செய்ய முடியவில்லை’ என்ற பெருமை பல நேபாளிகளுக்கு இன்றும் உண்டு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நேச-நாடா-நேபாளம்-2/article7321356.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நேச நாடா நேபாளம்? - 3

 
 
nepal_2441598f.jpg
 

பிருத்வி நாராயண் ஷா 1775ல் இறந்தார். வாரிசுப் போராட்டங்கள் தொடர்ந்தன. நாளடைவில் 1846-ல் நேபாளத்தை உலுக்கிய `கோட் படுகொலைகள்’ அரங் கேறின. இவற்றுக்கான சதி திட்டத்தைத் தீட்டியவர் செட்ரி வம்சத்தைச் சேர்ந்த ஜுங் பகதூர் என்பவர். இதன் காரணமாக அவரது குடும்பம் பதவியில் அமர, ஷா பரம்பரை பின்னுக்குத் தள்ளப்பட்டது.

அதென்ன கோட் படுகொலைகள்? காத்மண்டுவில் தர்பார் சதுக்கம் என்ற பகுதியில் இருந்தது கோட் என்று அழைக் கப்பட்ட பிரம்மாண்டமான அரசவைப் பகுதி. அங்கு ஒரு நாள் அரசாங்கத்தைச் சேர்ந்த மந்திரிகள், ஆலோசகர்கள், முக்கிய ராணுவ வீரர்கள் அனைவரும் வர வழைக்கப்பட்டனர்.

ராணியின் சம்மதத் தோடு, ஜுங் பகதூர் தனது வீரர்களை விட்டு அங்கு குழுமியிருந்த பல நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தார். அதுமட்டுமல்ல 6000க்கும் மேற்பட்ட அவர்களின் குடும்பத்தினர்களை நாடு கடத்தினார். பழிவாங்குகிறேன் என்று அவர்கள் கிளம்பிவிடக் கூடாது இல்லையா?

பின்னர் தன்னை நாட்டின் பிரதமராக அறிவித்துக் கொண்டார். தவிர தனக்கே மகாராஜா பட்டம் என்றும் கூறிக் கொண்டார். பின்னர் இவரது பரம்பரையில் வந்தவர்கள் மிக அதிகாரம் பெற்றவர்களாக விளங்கினார்கள். அதுமட்டுமல்ல இவர்கள் ஷா பரம்பரையைச் சேர்ந்தவர்களுடன் திருமணமும் செய்து கொண்டார்கள்.

ராணா பரம்பரையினர் என்று தங்கள் வம்சத்தின் பெயரை மாற்றிக் கொண்ட இவர்கள், சில நல்ல காரியங்களையும் செய்தார்கள். கணவனுடன் மனைவி உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்தார்கள். அடிமைகளாக நியமிக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் பேரை விடுவித்தார்கள். முதல் முறையாக குழாய் மூலம் தண்ணீர் பரவலாக்கப்பட்டது. பிர் மருத்துவமனை என்ற ஒரு பெரிய மருத்துவமனையும் உருவானது.

நேபாளத்தை தனது காலனி நாடு ஆக்கவில்லையே தவிர பிரிட்டன் அதைத் தனது கட்டுக்குள்தான் வைத்திருந்தது. 1923-ல் நேபாளத்துக்கு முழுமையான சுதந்திரத்தை அளித்தது பிரிட்டன். 1930-ல் (கோர்க்கா ராஜாங்கம் என்று இடையில் சூட்டிக் கொண்டிருந்த பெயரை மாற்றி) நேபாள அரசாங்கம் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டது.

அதே சமயம் இந்தியாவில் ரயில்கள் அறிமுகமாயின. நேபாள எல்லைவரை இந்த ரயில்கள் இயங்கியது நேபாளத்துக்கு ஒருவிதத்தில் வசதியாக இருந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றது. சீனாவில் கம்யூனிஸப் புரட்சி வெடித்தது. சீனாவின் அடக்குமுறை தாங்க முடியாமல் திபெத்தைச் சேர்ந்த பலரும் நேபாளத்துக்குள் குடிபுகுந்தனர்.

இந்தக் கலவரத்தில் ராணா அரசாட்சி கவனம் செலுத்தியபோது சத்தமில்லாமல் அந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் அரியணை ஏற முயற்சித்தார் மன்னர் திரிபுவன். தனக்கு உதவ இந்தியத் தூதரகத்தையும் நாடினார்.

அதே சமயம் கொய்ராலாவின் தலைமை யில் நேபாளி காங்கிரஸ் கட்சி உருவாகி மக்களின் ஆதரவையும் பெறத் தொடங்கி இருந்தது. இவர்கள் ராணாக்களை ஒடுக்கத் தொடங்கினர்.

இந்தியா அங்கு அமைதி நிலவ உதவி யது. 1951ல் மன்னர் திரிபுவன் அங்கு ஆட்சி அமைத்தார். 1955-ல் அவர் இறந்துவிட, மன்னர் மகேந்திரா அரியணையை நாடினார்.

ஆனால் அப்போது பாராளுமன்ற அரசியல் அமைப்புக்கான நெருக்கடி நேபாளத்திற்கு அளிக்கப்பட்டது. 1959-ல் தனது முதல் பொதுத் தேர்தலை சந்தித்தது நேபாளம். நேபாளி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. கொய்ராலா புதிய பிரதமர் ஆனார்.

எனினும் மன்னருக்கும், அரசாங்கத்துக்கும் ஒத்துப்போகவில்லை. மன்னர் தன்னிச்சையாகச் செயல்பட்டார். அமைச்சர்களைக் கைது செய்தார். `இனி மன்னர் பதவி என்பது கவுரவப் பதவியல்ல. நேபாளத்தின் கட்டுப்பாடு என் கையில்தான்’ என்று அறிவித்தார். கட்சிகளைக் கலைத்தார்.

மகேந்திரா 1972-ல் இறக்க, தனது 27-வது வயதில் பீரேந்திரா நேபாள மன்னர் ஆனார்.

நேபாளத்தை 2001-லும் ஒரு பூகம்பம் தாக்கி அந்த தேசத்தை நிலைகுலைய வைத்தது. ஆனால் அது அரசியல் பூகம்பம்.

2001 ஜூன் 1 அன்று அந்நாட்டு அரண்மனையில் நிகழ்ந்தது அது.

பீரேந்திரா இளம் வயதிலிருந்தே பிறரிடம் அன்பு செலுத்துபவராக இருந்தாராம். இளவரசன் என்ற பந்தா அவருக்கு இல்லை. நேபாளம் உண்மையாகவே ஜனநாயக நாடாக வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு இருந்தது. அவர் ஒருபோதும் சர்வாதிகார ஆட்சியை ஆதரிக்கவில்லை.

அதேசமயம் அரசரின் எளிமையான அணுகுமுறையைச் சிலர் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற பேச்சும் இருந்தது. சொல்லப்போனால் நேபாளத்தில் `மக்கள் இயக்கம்’ வலிமை பெற்றதற்கு அரசரின் இந்த இயல்பும் ஒரு காரணம்.

ஆசியாவில் உள்ள கூட்டு சேரா நாடுகள் அமைப்பை (சார்க்) அறிமுகப்படுத்தியதில் இந்த மன்னருக்கு முக்கியப் பங்கு உண்டு.

மன்னர் மகேந்திராவின் முதல் மனைவி ராஜ்யலட்சுமிக்குப் பிறந்தவர் பீரேந்திரா. தன் சகோதரன் ஞானேந்திராவுடன் அவர் எட்டு வருடக் கல்வி பயின்றது இந்தியாவில்தான்.

டார்ஜிலிங்கில் உள்ள தூய ஜோசப் கல்லூரியில் இருவரும் படித்தனர். இவரது தாத்தா (மன்னர் திரிபுவன்) மறைவுக்குப் பிறகு இவரது அப்பா அரியணை ஏற, நேபாளத்தின் இளவரசர் ஆனார் பீரேந்திரா. நேபாளத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வர விரும்பினார். ஆனால் அவர் நேபாளத்தை மாற்றங்களால் புரட்டிப் போடுவதற்கு முன் அவரையே ரத்த வெள்ளத்தில் சாய்த்தது அவரது ரத்தத்தின் ரத்தம்!

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நேச-நாடா-நேபாளம்-3/article7325108.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நேச நாடா நேபாளம்? - 4

 
nepal_2442770f.jpg
 

இளவரசர் பீரேந்திரா இங்கிலாந்தில் உள்ள இடோன் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். பிறகு தாய்நாட்டுக்குத் திரும்பினார். என்றாலும் கல்வியின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக டோக்கியோ பல்கலைக் கழகம், ஹார்வார்டு பல்கலைக் கழகம் போன்றவற்றில் சேர்ந்து அரசியல் பாடத்தைப் படித்தார். அவருக்கு கலைப்பொருட்களின் மீது மிகவும் விருப்பம். ஹெலிகாப்டர் ஓட்டவும் தெரியும்.

பின்னர் ஐஸ்வரியா ராஜலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 1970 பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற அந்தத் திருமணம் உலகச் செய்தியானது. அந்தக் காலத்திலேயே 95 லட்சம் டாலர் செலவில் திருமணத்துக்கான மேடை மட்டுமே அமைக்கப்பட்டது.

தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் அடுத்தடுத்துப் பிறந்தார்கள். தீபேந்திரா, ஸ்ருதி, நிரஞ்சன்.

1972 ஜனவரி 31 அன்று தந்தை மன்னர் மகேந்திரா இறந்ததும், மன்னர் பதவி பீரேந்திராவுக்கு வந்து சேர்ந்தது. பதவியேற்ற போது அந்த நாட்டின் முழுமையான, போட்டியற்ற தலைவராகவே அவர் விளங்கினார். அந்தக் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு நேபாளத்தில் முழுத்தடை நிலவியது.

நாடெங்கும் பரவிக் கிடந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் ஆட்சி செய்து வந்தார் மன்னர். ஆனால் நாட்டின் ஒரே தலைவராக தான் இருப்பதை அவரால் சங்கடத்துடன்தான் ஏற்க முடிந்தது. மக்களின் பிரதிநிதிகள் ஆட்சி செய்ய வேண்டும் என விரும்பினார்.

அதே சமயம் பொருளாதாரப் பின்னடைவில் உள்ள நேபாளத்தில் அரசியல் கட்சிகளை அனுமதித்தால் அதற்கு ஈடு கொடுத்து உறுதியாக நிற்குமா என்பதில் அவருக்குச் சந்தேகமும் இருந்தது.

1973ல் முதலில் இந்தியாவுக்கும், அடுத்து சீனாவுக்கும் விஜயம் செய்தார். “நமது நாட்டின் அண்டை நாடுகளாக இருக்கும் இவை இரண்டுடனும் நாம் நல்லுறவு கொள்ள வேண்டும்” என்றார்.

நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆதரவான இயக்கம் அதிகமாகிக் கொண்டு வந்தது. மன்னர் பீரேந்திரா ஓர் அறிவிப்பை வெளி யிட்டார். “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேவைதான். ஆனால் அவர்களுக்கு அரசியல் கட்சி எனும் பின்னணி தேவையா?’’. இந்தக் கேள்விகளுடன் நாட்டில் ஒரு அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

“அரசியல் கட்சிகள் தேவையில்லை. எங்கள் நேரடிப் பிரதிநிதிகளே போதும்” என்று மக்களில் 55 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் 1980-களில் அரசியல் கட்சிகள்மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டன. 1990-ல் நேபாளத்தில் பல எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டன. “நாட்டில் ஜனநாயகம் முழுமையாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என்ற கோஷங்கள் வெடித்தன.

நாட்டின் ‘அரசியலமைப்பு சட்ட அமைப்பின் தலைவராக’ (Constitutional monarch) இருக்க மன்னர் ஒப்புக் கொண்டார். புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒரு பரிந்துரைக் குழுவை நியமித்தார். இதன்படி நாட்டின் தலைவராக மன்னர் இருப்பார். அதே சமயம் பல கட்சிகள் கொண்ட ஜனநாயகம் நேபாளத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

1990 நவம்பர் 9 அன்று பீரேந்திரா நேபாளத்தில் இந்த மாறுதலுக்கு அனுமதி அளித்தார். பிரதமராகப் பொறுப்பேற்ற கிருஷ்ண பிரசாத் பட்டராய் அமைச்சரவையை உருவாக்கினார். என்றாலும் நாட்டின் பல்வேறு கட்சிகள் கடுமையான பகைமை கொண்டிருந்தன.

இதன் காரணமாக நேபாளத்தில் உள் நாட்டுப் போர் தொடங்கியது. இதில் முக்கிய மாக அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட் புரட்சிக் காரர்கள் செயல்பட்டனர். 1996-லிருந்து 2006 வரை இந்தக் கலவரம் ஓயவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே மன்னர் இறந்து விட்டார் - அதாவது கொல்லப்பட்டார்.

பலரும் அன்று (2001 ஜூன் 1) நடந்த சம்பவத்தை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். அன்று அரண்மனையில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களோடு சில விருந்தினர்களும் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மன்னரின் முதல் மகனான இளவரசன் தீபேந்திரா அன்று எக்கச்சக்கமாக குடித்திருந்தார். போதாக்குறைக்கு போதைப் பொருளையும் (ஹஷீஷ்) அன்று நிறைய புகைத்திருந்தார். அரண்மனைக்கு வந்திருந்த விருந்தாளி ஒருவரிடம் நிதானம் தவறி நடந்து கொண்டார். இதனால் கோபமடைந்தார் மன்னர்.

தீபேந்திராவை விருந்து நடக்கும் அரங்கிலிருந்து வெளியேறச் சொன்னார். இளவரசரும் தட்டுத்தடுமாறி தன் அறைக்குச் சென்றார். விருந்து தொடங்கியது. எல்லோருமே மகிழ்ச்சியும் கலகலப்புமாக இருந்தனர் - தொடரவிருக்கும் விபரீதத்தை அறிந்து கொள்ளாமல்.

சுமார் ஒரு மணி நேரத்தில் இளவரசர் தீபேந்திரா மீண்டும் விருந்து நடக்கும் அரங்கத்துக்கு வந்தார். அவரிடம் அப்போது மூன்று துப்பாக்கிகள் இருந்தன. ஒரு துப்பாக்கியின் மூலம் முதலில் உத்தரத்தைச் சுட்டான். விருந்தில் கலந்து கொண்ட அனைவருமே திகைத்துப் போனார்கள். இளவரசன் நிதானம் தவறிய நிலையில் இருக்கிறான் என்பதை அனைவருமே உணர்ந்திருந்தார்கள். ஆனால் இளவரசனைத் தடுப்பதற்கு முன் மின்னலென சம்பவங்கள் நடந்தன. தந்தை பீரேந்திராவை நோக்கிச் சுட்டார் தீபேந்திரா.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நேச-நாடா-நேபாளம்-4/article7328883.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நேச நாடா நேபாளம்? - 5

 
படுகொலைகள் நடைபெற்ற காத்மாண்டு நாராயண்ஹிதி அரண்மனை.
படுகொலைகள் நடைபெற்ற காத்மாண்டு நாராயண்ஹிதி அரண்மனை.

தந்தையான மன்னரை நோக்கிச் சுட்ட இளவரசன் தீபேந்திராவின் வெறி அடங்கவில்லை. அவனது அடுத்த குறி தனது அத்தைக்கானதாக இருந்தது. பின்னர் தன் மாமனின் மார்பிலும் சுட்டான். மாமன் அப்போது செய்த தவறு துப்பாக்கியோடு இருந்த இளவரசனை தடுக்க முற்பட்டதுதான்.

இதற்கு நடுவே உறவினர் ஒருவர் அங்கிருந்த சோபாவின் கீழ் இரண்டு குழந்தைகளைத் தள்ளி விட்டார். இந்த ஒரே காரணத்தால் அந்தக் குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.

தீபேந்திராவின் தாக்குதல்கள் ஓயவில்லை. அறைக்குள் செல்வதும் வருவதுமாக மீண்டும் மீண்டும் அங்கு தோன்றி தாக்குதல்களை நடத்தினான்.

நிலைமை கைமீறுவதை அறிந்த மன்னர் தன் காயத்தையும் பொருட்படுத்தாமல் மகனைக் கொல்ல முயன்றார். காரணம் கன்னாபின்னாவென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் இளவரசன் கொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான்.

இரண்டாவது முறை தன் அறைக்குள் சென்றபோது தீபேந்திரா ஒரு துப்பாக்கியை விருந்தறையின் மூலையில் இருந்த பில்லியர்ட்ஸ் மேஜையில் வீசிவிட்டுச் சென்றிருந்தான். அதைக் கையில் எடுத்தபடிதான் மன்னர் தன் மகனுக்கு குறிவைத்தார்.

இதற்குள் உறவினர் ஒருவர் இளவரசனின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி விட்டார். அவர் முகத்தில் தோன்றிய வெற்றிப்புன்னகை சீக்கிரமே மறைந்தது. காரணம் இளவரசனின் கையில் வேறொரு துப்பாக்கியும் இருந்ததுதான்.

தாறுமாறாகச் சுட்டுவிட்டு அருகில் இருந்த நந்தவனத்தை நோக்கி நடந்தான் இளவரசன். அவனுக்குப் பின்னாலேயே ஓலமிட்டபடி ஓடினார் அரசி ஐஸ்வர்யா. கூடவே சிறிய இளவரசன் நிரஞ்சனும் ஓடினான். திரும்பிப் பார்த்த தீபேந்திரா இருவரையும் பலமுறை துப்பாக்கியால் சுட்டான். அவர்கள் துடித்து இறந்தனர்.

நந்தவனத்தைச் சுற்றி ஒரு சிறிய நீரோடை இருந்தது. அதன்மேல் ஒரு சிறிய பாலமும் இருந்தது. அந்தப் பாலத்தின் அருகே சென்ற இளவரசன் தீபேந்திரா தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டான்.

ஆக இந்தப் படுகொலைச் சம்பவத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இறந்தனர். மன்னர் பீரேந்திரா, அரசி ஐஸ்வர்யா, அவர்கள் இளைய மகன் நிரஞ்சன், இளவரசி ஸ்ருதி, அரசரின் சகோதரன் தீரேந்திரா, அரசரின் சகோதரிகள் சாந்தி மற்றும் சாரதா, சாராதாவின் கணவர் குமார், மற்றும் இந்தக் கொலைகளைச் செய்தபின் தற்கொலை செய்து கொண்ட இளவரசன் தீபேந்திரா என்று இந்தச் சம்பவத்தில் மொத்தம் 11 பேர் இறந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட தீபேந்திரா உடனடியாக இறந்துவிடவில்லை. மூன்று நாள் கோமாவில் கிடந்தான்.

நேபாள நாட்டுச் சட்டப்படி மன்னர் இறந்தால் மூத்த இளவரசனுக்குதான் மணிமகுடம். எனவே நினைவிழந்த நிலையில் இருந்தாலும் தீபேந்திராதான் நேபாளத்தின் மன்னர் என்றுஅறிவிக்கப்பட்டது. அவன் சார்பாக அவரது சித்தப்பா ஞானேந்திரா தற்காலிகமாக ஆட்சி செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.

நினைவு திரும்பாமலேயே தீபேந்திரா இறந்துவிட, அந்த மூன்று நாட்களுக்குப் பிறகு நேபாளத்தில் அரியணை ஏறினார் இளவரசர் ஞானேந்திரா.

ஆனால் மேற்கூறியவாறு அரசு தரப்பில் விவரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பலரும் ஏற்கவில்லை. எந்த வி.ஐபி. இறந்தாலுமே சந்தேகக் கேள்விகள் எழுப்பப்படுவது இயல்பு. அதுவும் ராஜவம்சத்தைச் சேர்ந்த இவ்வளவு பேர் ஒரே சமயத்தில் இறந்தது பலவித கேள்விகளை எழுப்பியது. “குடித்திருந்தால்கூட இவ்வளவு கொடூரமான செயலைச் செய்யக் கூடியவர் அல்ல’’ என்றார்கள் இளவரசன் தீபேந்திராவுக்கு நெருக்கமான சிலர்.

பொது மக்கள் இந்தத் திருப்பங்களால் நிலைகுலைந்து போனார்கள். “நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்பதையெல்லாம் தாண்டிய நிலையை அடைந்திருக்கிறோம். அனாதை ஆக்கப்பட்டதாக உணர்கிறோம்’’ என்றே பலரும் கருத்து தெரிவித்தனர்.

படுகொலைகளுக்குப் பின்னால் இருந்தது வேறொரு விஷயம் என்ற கிசுகிசுவும் கிளம்பியது. தேவயானி!

தேவயானி என்ற பெண்ணை இளவரசன் மணக்க விரும்பியதாகவும் அதற்கு ராஜாவும், ராணிவும் ஒத்துக்கொள்ளவில்லை என்றும், அந்தக் கோபமே இவ்வளவு விபரீதங்களுக்கு வித்திட்டது என்றும் கூறப்பட்டது. முக்கியமாக ராணி ஐஸ்வர்யா மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார் என்றும் “நீ தேவயானியைத் திருமணம் செய்து கொண்டால் அடுத்து உன்னை மன்னனாக முடியாமல் செய்து விடுவேன்’’ என்று அவர் மிரட்டல் விடுத்ததாகவும் செய்திகள் பரவின.

நேபாளத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இப்படிச் செய்வது சாத்தியமல்ல என்றாலும் தன் தாயின் `எதையும் சாதிக்கக் கூடிய தன்மை’ குறித்து இளவரசருக்கு ஒருவித அச்சம் இருந்தது. இதன் விளைவுதான் மதுவினால் தைரியத்தை உண்டாக்கிக் கொண்டு அவர் புரிந்த விபரீதங்கள் என்ற அழுத்தமான சந்தேகம் எழுந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நேச-நாடா-நேபாளம்-5/article7332643.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நேச நாடா நேபாளம்? - 6

 
ஞானேந்திரா
ஞானேந்திரா

நாட்டு வழக்கப்படி இறந்த அரசர் பீரேந்திராவின் ஆவி மீண்டும் நேபாளத்துக்குள் நுழையாமல் இருப்பதற்காக ஒரு சடங்கு விரிவாக நடத்தப்பட்டது. துர்கா பிரசாத் என்ற பிராமணர், மன்னர் பீரேந்திராவைப் போல வேடமிட்டு யானை ஒன்றின் மீது ஏறிக் கொண்டார். அரசரின் சில உடமைகளும் அந்த யானையின்மீது ஏற்றப்பட்டன. அந்த யானை காத்மாண்டுவை தாண்டிச் சென்றது.

இந்தச் சடங்கின் மூலம் அரசரின் ஆவி சாந்தி அடைந்ததாகவும் இனி நேபாளத்துக்கு வராது என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மாவுக்கு சாந்தி செய்யாவிட்டால் அந்த ஆத்மா பலவித பழிவாங்கல்களில் ஈடுபடும் என்ற தீவிர நம்பிக்கை கொண்ட நேபாள மக்கள் அதற்குப் பிறகு கொஞ்சம் அமைதி அடைந்தார்கள்.

நேபாள படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த இளவரசன் குறித்து அரச குடும்பத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்த, ராணுவத் தளபதி விவேக் குமார் ஷா என்பவரின் கருத்து இது. ‘‘இளவரசர் தீபேந்திரா சிறுவயதிலிருந்தே ஒருபுறம் மென்மையானவராக இருந்தாலும் மறுபுறம் கொடூர குணம் கொண்டவராகவும் வளர்ந்தார். தனக்குப் போதிய அன்பு கிடைக்கவில்லை என்பது அவரது எண்ணம்.

எப்போது நேபாள ராணுவம் தனக்குப் புதிய ரக துப்பாக்கியை வாங்கிக் கொண்டாலும் அதில் ஒன்றை அரண்மனைக்கும் அனுப்ப வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். எனவே அரண்மனையில் - முக்கியமாக இளவரசர் தீபேந்திராவின் அறையில் - நிறைய துப்பாக்கிகள் இருந்தன. இதுவும் படுகொலைகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது’’ என்றார்.

ஆனால் நெடுநாட்களுக்கு வேறு ஒரு சந்தேகம் கசிந்து கொண்டிருந்தது. இந்தப் படுகொலைகளில் ஞானேந்திராவுக்குப் பங்கு உண்டு என்பதுதான் அது. இளவரசர்கள் தீபேந்திராவும் நிரஞ்சனும் இறந்தால் மட்டுமே ஞானேந்திரா மன்னராக முடியும் என்பதால் இந்த திட்டத்திற்கு களம் அமைத்தார் ஞானேந்திரா என்று கூறப்பட்டது. இதற்குப் பின்னணியாக அமெரிக்க உளவுத்துறை இருந்தது என்று சிலரும் இந்திய உளவுத்துறை இருந்தது என்றும் சிலரும் கூறத் தொடங்கினர்.

ஞானேந்திராவின் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே அந்த சம்பவத்தில் இறக்கவில்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. (ஆனால் இது முழு உண்மையல்ல. ஞானேந்திராவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது என்பதுடன் ஞானேந்திராவின் மனைவியின் உடலில் குண்டு பாய்ந்திருந்தது. அவர் இறக்கவில்லையே தவிர, அவர் பிழைத்தது அதிர்ஷ்டம்தான் என்றனர் டாக்டர்கள்).

படுகொலைகள் சம்பவத்தின்போது ஞானேந்திரா வெளிநாட்டில் இருந்தார். கொலைகள் நடந்த பிறகு தேவயானி நேபாளத்தைவிட்டு ஐரோப்பாவுக்கு வெளியேறினார்.

இந்தப் படுகொலைகளுக்குப் பிறகு ராஜாவாக்கப்பட்ட ஞானேந்திராவுக்கு மக்கள் ஆதரவு பெரிதாகக் கிடைக்கவில்லை. எதிர்ப்பு அதிகமானது. அவரது ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் மிகவும் பறிக்கப்பட்டது. எதிர்த்த பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருகட்டத்தில் நாடாளுமன்றத்தையே அவர் கலைத்தார். மொத்தத்தில் பழைய மன்னர் ஆட்சியை நேபாளத்துக்குக் கொண்டுவர விரும்பினார்.

ஆனால் இந்த நடவடிக்கை நேரெதிர் பலனை அளித்தது. மாவோயிஸ்ட்டுகள் அரசுக்கு எதிராக செயல்பட்டபோது மக்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கினர்.

இதன் காரணமாக நவம்பர் 2001-ல் அவசர நிலைச்சட்டம் அமலுக்கு வந்தது. எனினும் எதிர்ப்பு அடங்கவில்லை. “மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளை எங்களால் அடக்க முடியவில்லை’’ என்று வெளிப்படையாகவே அறிவித்தது நேபாள அரசு. ஐ.நா.மனித உரிமை கமிஷன் “உடனடியாக ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தி, நடக்கும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்’’ என்று 2006-ல் வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து நேபாள அரசு சில ஏற்பாடுகளுக்கு ஒப்புக் கொண்டது. மன்னருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அரச குடும்பம்கூட இனி வரிகட்ட வேண்டும் என்று ஆனது. ராணுவம், நாடாளுமன்றத்தின் வசம் வந்தது. மன்னரின் வாரிசு யார் என்பதைத் தீர்மானிப்பதில் நாடாளுமன்றத்துக்கும் பங்கு உண்டு என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஞானேந்திரா பதவி இறக்கப்பட்டார். காத்மாண்டுவில் ஒரு சராசரி குடிமகன்போல அவர் வசித்து வருகிறார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நேச-நாடா-நேபாளம்-6/article7345307.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நேச நாடா நேபாளம்? - 7

 
 
 
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அங்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அங்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள்.

இந்தியாவின் உருவத்தை ஒரு மனிதனாகக் கொண்டால் அதன் இடது தோள்பட்டையில் உள்ள பேட்ஜ் போலக் காட்சியளிக்கிறது நேபாளம்.

நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் “இந்தியா மிகவும் நட்பான நாடு. பூகம்பத்தைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , எங்கள் அதிபர், பிரதமரைத் தொடர்பு கொண்டார். இந்தியாவிடமிருந்து பல உதவிகள் கிடைத்தன. இந்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்’’ என்றார்.

நிலநடுக்கத்துக்குப் பிறகு நேபாளத்தில் சாலைகளை மீண்டும் சரியாக்குவதில் சீனா ஈடுபட்டது. நேபாளத்தில் கல்வி, தொலைத் தகவல் போன்ற கட்டமைப்புகளை சரி செய்ய இந்தியா பெரிதும் உதவுகிறது.

சீனாவுடன் கடந்த காலத்தில் பல கசப் புணர்வுகள் நேபாளத்துக்கு ஏற்பட்டதுண்டு.

1814-ல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாள யுத்தத்தில் சீனா நேபாளத்துக்கு உதவ மறுத்துவிட்டது. இந்த யுத்தத்தில் நேபாளத்துக்குத் தோல்வி ஏற்பட்டது.

அவ்வப்போது சீனாவுக்கு தான் கப்பம் கட்டியதை நேபாளம் மறந்துவிடவில்லை. என்றாலும் ஒரு பிரம்மாண்டமான அண்டை நாட்டை (நேபாளத்திற்கு உள்ள இரண்டே அண்டை நாடுகள் சீனாவும், இந்தியாவும் தான்) பகைத்துக் கொள்ள நேபாளம் முன்வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

சீன ராணுவம் 1950-51-ல் திபெத்தை ஆக்கிரமித்தபோது நேபாளத்தில் பலரும் கலவரம் கொண்டனர். காரணம் திபெத்துடன் நல்லுறவு கொண்டிருந்தது நேபாளம். தவிர எல்லைகளை அதிகரிக்கும் பேராசையுடன் இயங்கும் சீனா தன் நாட்டின் மீதும் கைவைக்காது என்று என்ன நிச்சயம்?

திபெத்தை ஆக்ரமித்த கையோடு நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் திபெத்துக்கு புனித யாத்திரை வருவதற்குப் பலவிதத் தடைகளை விதித்தது சீனா. அந்த நாட்டின் கம்யூனிஸப் பாதையும் அப்போது நேபாளத் தில் நிலவிய மன்னர் ஆட்சியும் நேரெதிர் பாதையாக இருந்தன. தவிர 1950-ல் உரு வான இந்திய - நேபாள அமைதி உடன்படிக் கையும் சீனாவுக்கு எரிச்சலை ஊட்டியது.

1950-ல் இந்தியாவும் நேபாளமும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த இரு நாட்டில் எதன் பாதுகாப்புக்கு வெளிசக்திகளால் பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றொரு நாடு அதைப் பொறுத்துக் கொள்ளாது'. ஆக இந்தியாவுக்கும் நேபாளத்துக்குமிடையே ஒரு சிறப்பு உறவு இருப்பதை உணர முடியும்.

ஆனால் நாளடைவில் காட்சிகளில் மாற்றம். 1975-ல் சிக்கிம் தன்னை இந்தியாவின் ஒரு பகுதி என அறிவிக்க, அதை இந்தியா ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்த மாற்றத்தை நேபாளத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்திய அரசை இதற்காக நேபாளம் விமர்சித்தது.

பின்னர் தன்னை அமைதிப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளை அணுகியது நேபாளம். சீனாவும் பாகிஸ்தானும் இதற்கு ஆதரவளித்தன. ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்துக்கு மாறான வகையில் நேபாளம் நடந்து கொள்வதாக எண்ணிய இந்தியா, நேபாளத்தின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ள மறுத்தது.

1978-ல் நேபாளத்துடன் தனி வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தானபிறகு இரு நாடுகளின் உறவில் மேம்பாடு காணப்பட்டது. எனினும் 1988-ல் சீனாவிலிருந்து நேபாளம் போர் ஆயுதங்களைப் பெற்றதில் இந்தியாவுக்கு அதிருப்தி. ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்தியாவின் ஒப்புதல் இன்றி இப்படி ஒரு செயலில் நேபாளம் ஈடுபட்டிருக்கக் கூடாது என்பது இந்தியாவின் கருத்து.

நாளடைவில் மீண்டும் இரு நாடுகளுக்கிடையேயும் புரிந்து கொள்ளல் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் அரசைத் தொடர்ந்து எதிர்த்தனர். பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இது மிகப் பெரிய அளவில் 2004-ல் வெளிப்பட்டது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் தீவிரமாகக் கலந்து கொண்டது.

மாவோயிஸ்டுகள் பல இடங்களில் கலவரங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து மன்னர் ஞானேந்திரா நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதைத் தொடர்ந்து பல நாடுகள் (இந்தியா உட்பட) மன்னரின் நடவடிக்கையைக் கண்டித்தன. நேபாளத்தில் இருந்து வெளியாகும் செய்திகளை கடுமையான தணிக்கைக்கு இவர் உட்படுத்தியது பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. `நாடாளுமன்ற தேர்தலை நடத்தவில்லை, மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை அடக்கவில்லை' ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்திதான் மன்னர் அரசை கலைத்தார்.

மாவோயிஸ்டுகளை பற்றி இந்தியா கவலைப்படுவதற்குப் பின்னணி உண்டு. ஆந்திராவிலுள்ள மக்கள் போர்க்குழு, பிஹாரிலுள்ள மாவோயிஸ கம்யூனிஸ மையம் போன்ற சில இந்தியக் குழுக்களுடன் நேபாள மாவோயிஸ குழுவுக்குத் தொடர்பு உண்டு என்று கருதப்படுகிறது.

எனினும் `மன்னர் ஞானேந்திரா பிற நேபாள அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்பதை இந்தியா அழுத்தமாகவே தெரிவித்தது.

நேபாள அரசின் அடக்குமுறையால் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இறந்துபோக, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நேபாளத்துக்கு ராணுவ உதவி செய்வதை நிறுத்திக் கொண்டன. பின்னர் இந்தியா இதை ஓரளவு தளர்த்திக் கொண்டது. முழுமையாக ஆதரவை விலக்கிக் கொண்டால் நேபாளத்தை பாகிஸ்தான் மற்றும் சீனாவின் திசையை நோக்கித் தள்ளியதாக ஆகிவிடக் கூடாதே.

ஆக இந்தியாவும் நேபாளமும் ஒன்றையொன்று நேச நாடுகளாகத்தான் கருதுகின்றன. உரசல்கள் உண்டானாலும் அவை ஒட்டவைக்கப்படுகின்றன.

அரசியல், மதம், சமூக நல்லுறவு, வரலாறு, ரூபாய் நாணயம் போன்ற பல கோணங்களில் இந்தியாவுடன்தான் நேபாளத்திற்கு ஒட்டுறவு அதிகம். ஆனால் அங்குள்ள மாவோயிஸ்டுகள் தொடர்ந்து இந்தியாவின் பிம்பத்தைச் சீரழிப்பதில் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். இந்தியாவின் தரப்பிலும் தொடர்ந்து பல வருடங்களுக்கு நேபாள உறவு குறித்து அதிகமான சிரத்தை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

17 வருடங்களுக்குப் பிறகு நேபாளத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது ஒரு பில்லியன் டாலர் கடனாக நேபாளத்துக்கு அளித்தது இந்தியா. உள்நாட்டு முன்னேற்றம் போலவே அண்டை நாடுகளின் நல்லுறவும் நமக்குத் தேவை. நேபாளமும் இதை உணர்ந்திருக்கிறது. ஆக்கிரமிப்பு ஆசை கொண்ட சீனாவை வெளிப்படையாக எதிர்க்காவிட்டாலும் இந்தியாவுடன் தொடர்ந்து நேச நாடாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்பதை நேபாளம் உணர்ந்திருக்கும் என்று நம்பலாம்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நேச-நாடா-நேபாளம்-7/article7349663.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.