Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிப்பாயும் போராளியும் - அ. முத்துலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சிப்பாயும் போராளியும்  
அ. முத்துலிங்கம்
ஓவியங்கள்: மணிவண்ணன்

ராணுவவீரன் போராளியின் தலையில் குறிவைத்துக் கைத்துப்பாக்கியின் விசையை இழுத்தான். அது வெடிக்கவில்லை. பின்னுக்குக் கைகள் கட்டப்பட்ட நிலையில் போராளி முழங்கால் இட்டிருந்தான். துப்பாக்கி சுடாதபோது தலையை உயர்த்தி சிப்பாயைச் சினத்துடன் பார்த்தான். அவன் பார்வையில் ஏளனம் இருந்தது. ‘என்ன, மறுபடியும் உன் துப்பாக்கி வேலை செய்யவில்லையா? உன்னுடைய ராணுவ அதிகாரிகள் உடைந்துபோன துப்பாக்கிகளையா சிப்பாய்களுக்குக் கொடுப்பார்கள்? அல்லது உன்னைப்போல உதவாக்கரைகளுக்குப் பழுதான துப்பாக்கிகள் போதுமென்று நினைத்தார்களா?’

Sippayum-pooraliyum.jpg

சிப்பாய்க்குக் கோபம் வந்தது. ‘உன்னுடைய புத்தி கட்டையானது; ஆனால் வாய் நீளமோ அளக்க முடியாதது. இந்த துப்பாக்கியைத் திருத்தியவுடன் குண்டு உன் வாய்க்குள்ளால் பாயும். அதுவரைக்கும் பொறுமையாக இரு’ என்றான் சிப்பாய். அவனுக்கு வயது இருபதுக்குள் இருக்கும். தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. சலவை செய்த ராணுவ உடை கச்சிதமாக அவன் உடலில் பொருந்தியிருந்தது. மூன்று நேரமும் சாப்பிட்ட செழிப்பான முகம். சுறுசுறுப்பான கைகள். ரிவால்வரைத் திறந்து அதைச் சரிசெய்ய முயன்றான்.

போராளிக்கு நடுத்தர வயது இருக்கும். மெல்லிய தாடியில் ஒன்றிரண்டு நரைமுடி காணக்கூடியதாக இருந்தது. முழங்கால்களில் அவன் உட்கார்ந்திருந்தபோதும் அவன் உயரமானவன் என்று ஊகிக்கமுடியும். தலைமயிர் கலைந்து சிக்குப்பட்டுக் கிடந்தது. பட்டினியால் மெலிந்த உடம்பு. சாப்பிட்டு இரண்டு நாட்கள் இருக்கலாம். தூக்கத்தில் பாதியில் எழுப்பப்பட்டவன்போல களைப்பாகக் காணப்பட்டான். ஆனால் கண்களில் பயம் கிடையாது. அவை இரண்டு பக்கமும் சுழன்றுகொண்டிருந்தன.

போராளி சொன்னான். ‘நீ துப்பாக்கியைச் சரிசெய்யும் வரைக்கும் என்னால் காத்திருக்க முடியாது. போ, உன் ராணுவ அதிகாரிகளிடம் கேட்டு இன்னொரு துப்பாக்கி கொண்டு வா. ஆயுள் முடிந்த துப்பாக்கியால் என் ஆயுளை முடிக்கப் பார்க்கிறாய். இந்த துப்பாக்கியால் மரணம் ஏற்படுவது எனக்கு அவமானகரமானது. துருப் பிடிக்காத நல்ல துப்பாக்கி கிடையாதா? எனக்கு இப்படி இறப்பது சம்மதமில்லை.’

‘உன் சம்மதத்தை யார் கேட்டார்கள்? ராணுவம் போய்விட்டது. இந்தக் காட்டில் நீயும் நானும்தான். நீதான் இன்று என்னுடைய இரை. இந்தத் துப்பாக்கிதான் உன் உயிரைக் குடிக்கும். குண்டு துளைத்து நீ சாவாய் என்று நான் திட்டமாகச் சொல்லமாட்டேன். வௌவால் செட்டைகளில் தெரியும் எலும்புகள்போல உன் உடம்பில் தூக்கிநிற்கும் எலும்புகளை ஒவ்வொன்றாக என் துப்பாக்கியால் உடைப்பேன். முதலில் கன்ன எலும்புகள். அவைதான் உடைக்க லேசானவை. அடுத்து விலா எலும்புகள். விலாவின் கடைசிக் கீழ் எலும்புகள் தொடுக்கப்படாமல் தொங்கிக்கொண்டு நிற்கும். ஆதாமின் உடம்பிலிருந்து கடவுள் முறித்தெடுத்ததுபோல நான் அவற்றை உடைத்தெறிவேன்.. விரைவில் துப்பாக்கி வேலை செய்யவேண்டும் என்று நீ பிரார்த்தித்துக்கொள்.’

‘உன்னைப்போல அனுபவமில்லாத, புத்தியில்லாத, பச்சை சிப்பாயை அனுப்பியிருக்கிறார்கள் என்னைப் போல தேர்ந்த போராளியைக் கொல்வதற்கு. நேரத்தை வீணடிக்காதே. துப்பாக்கியை அடிக்கடி திறந்து மூடினால் அது வேலை செய்யத் தொடங்குமா? இதுதான் உன் ராணுவ பயிற்சிப் பள்ளியில் உனக்கு சொல்லித் தந்ததா? இனிமேலும் உன்னை நம்பி இருக்க முடியாது. நீ என்னை இன்றைக்குக் கொல்லப்போவதே இல்லை.’

‘சரி, இத்தனை அவசரப்படுகிறாய். உன்னைக் காக்க வைக்கக்கூடாது. நீ இந்தப் பூலோகத்தில் சாதித்ததைக் காட்டிலும் இறந்து முடிந்ததும் அதிகமாகச் சாதிப்பாய்.. நீ இறந்த பின்னர் உன்னை இங்கேயே விட்டுவிட்டுப் போவேன். புதைக்கமாட்டேன். நாலு கல்லை பெயர்த்து அடையாளமாக வைக்க மாட்டேன். உன் மரணத்தைக் கொண்டாட யாருமே இருக்க மாட்டார்கள். உன் உடலை ஓநாயும் நரியும் கழுகும் பிய்த்துப்பிய்த்து உண்ணும். மீதியைக் காகம் வந்து தோண்டியெடுக்கும். அதிலே மிஞ்சிய சதைத் துணுக்குகளை எறும்புகளும் பூச்சிகளும் புழுக்களும் தின்னும். உன் எலும்புகள் வெண்ணிறமாக மாறி ஒளிவிடும். காற்று எலும்புத் துண்டுகளை எற்றி விளையாடும். உனக்கு எத்தனை வயசு?’

‘நாற்பது.’

‘நாற்பதா? .பார், நாற்பது வருடம் வாழ்ந்த நீ இன்று சாகப்போகிறாய். உன் மாரணத்துக்கு உன் பாதி வயதான நான் காரணமாக இருக்கிறேன். எத்தனை பரிதாபம். உன் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்ன சாதித்தாய்? உனக்குக் குடும்பம் இருக்கிறதா? அவர்களுக்கு நீ இறந்து போன செய்திகூட போய்ச்சேராதே!’

‘இருக்கிறது. உன்னைப்போல ஒரு மகனும் இருக்கிறான். உன்னளவு உயரம். உன்னளவு பருமன். எடையும் ஏறக்குறைய அப்படியேதான் இருக்கும். உன் கண்களைப் போல அவனுடைய கண்களும் பழுப்பு நிறம்தான். ஆனால் உன் தலைமுடி ஒட்ட வெட்டியிருக்கிறது. அவனுடையது அடர்த்தியாக சடைத்து வளர்ந்திருக்கும். அவன் அதை எண்ணெய் பூசி அழகாக அழுத்தி வாரி

விட்டிருப்பான்.’

‘அவனை எப்போது கடைசியாகப் பார்த்தாய்?’

‘இரண்டு வருடம் இருக்கும். ராணுவத்தின் குண்டு வீச்சில் அவர்கள் புலம்பெயர்ந்து வேறு கிராமத்துக்குப் போய்விட்டார்கள். எங்கேயோ உயிருடன் இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.’.

‘அவர்களைப் பார்க்க உனக்கு விருப்பமில்லையா?’

Sippayum-pooraliyum-illustration2.jpg

‘விருப்பம் என்று சொன்னால் நீ என்னைக் கொல்லாமல் விட்டுவிடுவாயா? ஒரு பழுதடைந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்னைக் கொல்லப்போவதாக மிரட்டுகிறாய். என்னைக் கொல்வதால் உனக்கு என்ன பயன்? அடுத்த நாள் உன் ராணுவத்துக்கு வெற்றி கிட்டி விடுமா? போரை நிறுத்திவிடுவார்களா? என்னைப் போல எத்தனை போராளிகள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனைபேரையும் நீ தேடித்தேடிக் கொல்வாயா? இந்த வயதுக்குள் நீ இதுவரை எத்தனை கொலைகள் செய்திருப்பாய். உன் எதிரிகள் எதற்காகப் போரிடுகிறார்கள் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா? அவர்களுக்குக் குடும்பம் மேல் பற்றில்லையா? பெண்சாதி, பிள்ளைகள் வாழவேண்டும் என்று ஆசைப்படமாட்டார்களா? ஆனாலும் எதற்காக மரணத்தைக் கண்டு அஞ்சாமல் போர் புரிகிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்து அந்த வெறி வருகிறது? அடிமைகளாக வாழ அவர்களுக்குப் பிடிக்கவில்லை. உலகத்தில் பிறந்த எந்த மிருகத்துக்கும் பறவைக்கும் சுதந்திரம் வேண்டியதாய் இருக்கிறது. ஒரு புழுவுக்குக்கூட சுதந்திரம் தேவை. அப்படியிருக்க மனிதன் சுதந்திரத்துக்குப் போராடுவதில் என்ன தப்பு இருக்கிறது. அதை யோசித்துப் பார்த்திருக்கிறாயா?’

‘நான் என்னுடைய நாட்டுக்காகப் போராடுகிறேன்.’

‘உன்னுடைய நாடா? அதிலே எனக்கு எங்கே இடமிருக்கிறது. எனக்கு விடுதலை வேண்டும் என்று போராடு வது குற்றமா/ அதற்காக ஓர் ஓட்டைத் துப்பாக்கியால் என்னைச் சுட்டுவிடப்போகிறாயா?’

‘நான் தேசப்பற்றைப் பற்றிப் பேசுகிறேன். நீ அதை இழிவாக நினைக்கிறாய்.’

‘தேசப்பற்றா? உனக்கா? சம்பளம் வாங்கிக்கொண்டு நீ கொலைத் தொழில் செய்கிறாய். . நீ மணமுடித்து நாலு பிள்ளைகள் பெற்றபின்னர் ஓய்வாக இருக்கும் ஒருவேளையில் உன் பிள்ளைகளை அழைத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நீ ஒருகாலத்தில் கொலைத் தொழில் செய்தாய் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள். ராணுவ வாழ்க்கையில் எத்தனை பேரைக் கொன்றாய் என்று கணக்கு வைத்திரு. உன் சுயசரிதையை எழுதும் போது பயன்படும். நாடு உன்னைப் பாராட்டும். ஒரு தனிக்காட்டில் நாற்பது வயது போராளியைக் கைகளைப் பின்னே கட்டிவிட்டு முழங்காலில் உட்காரவைத்து 10 அடி தூரத்தில் அவனைச் சுட்டு வீழ்த்தினாய் என்று சொல்ல மறக்காதே. அவனுக்கு ஒரு மனைவியும் 18 வயது மகனும் இருந்தார்கள் என்பதையும் சொல்லு. அவனுடைய உடலைக் காட்டு விலங்குகளுக்கு எறிந்து விட்டுப் போனதையும் சொன்னால் உன் மதிப்பு கூடும்.’

‘உனக்கு வாழும் ஆசை வந்துவிட்டது. நீ என் மனதை மாற்றப்பார்க்கிறாய்.’

‘உன்னுடைய மனதை நான் எப்படி மாற்ற முடியும்? மனிதன் ஒரு லட்சியத்துக்கு வாழவேண்டும். அது முடியாவிட்டால் ஒரு லட்சியத்துக்காகச் சாகவேண்டும். நீ ஒரு கொள்கைக்காகவோ லட்சியத்துக்காகவோ போராடவில்லையே. பணத்துக்காகத்தானே கொலைத் தொழில் செய்கிறாய். என்னிடம் போதிய பணம் இருந்தால் நான் உன்னிடம் தருவேன். நீ என்னை விடுதலை செய்வாய். ஏனெனில் நீ பணத்துக்காகக் கொலை செய்பவன். அதே பணத்துக்காகக் கொலை செய்யாமலும் விடுவாய்.’

‘நீ புலம்பிக்கொண்டே இரு. நான் துப்பாக்கியைச் சரிசெய்துவிடுகிறேன். அதன் பின்னர் உன் பேச்சு துப்பாக்கியுடன் தொடரட்டும்.’

‘உனக்குத் துப்பாக்கிபற்றி ஒன்றுமே தெரியாது. அதன் தொழில்நுட்பம் உனக்கு புரிபடவில்லை. நீ துப்பாக்கியைப் பிடித்த விதம், குறிவைத்த பாங்கு, விசையை அழுத்திய வேகம், அதைத் திறந்து பின்னர் மூடியது எல்லாவற்றையும் நான் அவதானித்தபடியே இருந்தேன். எனக்கு துப்பாக்கியில் 20 வருட அனுபவம் உண்டு. நான் முதல் துப்பாக்கியைத் தூக்கிக் குறிபார்த்தபோது நீ பிறக்கக்கூட இல்லை. அதைக் கொடு. நான் நிமிடத்தில் திருத்தி தருகிறேன். பின்னர் நீ என்னைச் சுடலாம்.’

‘நல்லது. இந்தக் காட்டில் ஒரேயொரு புத்திமான் இருக்கிறார். அது நீதான். உன்னுடைய கட்டை அவிழ்த்து விட்டு நான் உன்னிடம் துப்பாக்கியைத் தரவேண்டும். நீ அதைத் திருத்திவிட்டு என்னிடம் தருவாய். நான் உன்னைச் சுடுவேன். அப்படித்தானே.’

‘வெடிக்காத துப்பாக்கியால் நீ எப்படி என்னைச் சுடுவாய்? அது உன்னிடம் இருந்தாலும் என்னிடம் இருந்தாலும் ஒன்றுதான். நேரம் நாலு மணியாகிவிட்டது. காட்டிலே சீக்கிரம் இருட்டிவிடும். நீ துப்பாக்கியைத் திருத்தி என்னைச் சுட்டாலும் திரும்பி உன் ராணுவ முகாமுக்கு உன்னால் போகமுடியாது. காட்டிலே பாதை தவறிச் சுற்றிச்சுற்றி வருவாய். நீயும் மிருகங்களுக்கு இரையாவாய். என் மகன் போலவே இருக்கிறாய், இன்று ஒரு சா போதும். நீ என்னை விரைவில் சுட்டுவிட்டுப் புறப்படு.’

‘இந்த விசையைப் பார். எப்படி இழுத்துவிட்டாலும் இங்கே ஒரு சிறு தடங்கல் ஏற்படுகிறது. இதை நிமிர்த்தி விட்டால் சரியாகிவிடும். கொஞ்சம் பொறுமையாக இரு. ஒரு கல்லைப் பொறுக்கிவந்து இதைச் சரி பண்ணி விடுகிறேன். உன்னை இத்தனை நேரம் காக்க வைத்ததற்கு என்னை மன்னித்துவிடு.’

‘பரவாயில்லை. நீ மரியாதை தெரிந்தவனாக இருக் கிறாய். நல்ல குடும்ப பின்னணி என்பது தெரிகிறது. உனக்கு மணமாகிவிட்டதா?’

‘இல்லை. என் தாயாருக்கு நானும் என் தங்கையும்தான். அவள் படிக்கிறாள். மிகப்பெரிய படிப்புக்காரி. நிச்சயமாக ஒரு விஞ்ஞானியாகவோ பேராசியராகவோ வருவாள். எனக்கு படிப்பு பெரிதாக ஓடவில்லை.’

‘அதுதான் ராணுவத்தில் சேர்ந்தாயோ?’

‘உண்மையான காரணம் வறுமைதான். எங்களுக்கு அப்பா இல்லை. ஆகவே நான் ஏதாவது வருமானம் தேட வேண்டியதாகிவிட்டது. ஆனால் அந்தப் பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடும். அடுத்தவாரம் எனக்கு லீவு கிடைக்கிறது. நான்

மகிழ்ச்சியாயிருக்கிறேன். என் அம்மாவின் திருமணத்

துக்கு நான் போக வேண்டும்.’

‘அம்மாவின் திருமணம்பற்றி இத்தனை மகிழ்ச்சியாகச் சொல்கிறாயே. உனக்கு திருமணம் என்றல்லவா நான் நினைத்தேன். அம்மாவை உனக்கு நிரம்பப் பிடிக்குமோ?’

‘இது என்ன கேள்வி? அம்மாதானே எனக்கு உயிர் கொடுத்தவர். பிடிக்காமல் இருக்குமா? சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு கிராமத்தை நாங்கள் முற்றுகையிட்டு சுற்றி வளைத்தோம். போராளிகள் சிலர் தப்பி ஓடினர். சிலர் சரணடைந்தார்கள். பல உடல்கள் சிதறிப்போய்க் கிடந்தன. ஆடு ஒன்று நடுவீதியில் துடிதுடித்து இறந்தது. ஓர் இளம் பெண் கை துண்டான குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். ஒரு கிழவர் குண்டுபட்டுக் கதறிக் கொண்டிருந்தார். அவருக்கு 90 வயது இருக்கும். அவரை ஒருவரும் கவனிப்பாரில்லை. ‘அம்மா, அம்மா’ என்று அலறினார். 90 வயதிலும் அவர் அம்மாவைத்தான் அழைத்தார். இரண்டு நூற்றாண்டுகளை அந்த அலறல் இணைத்தது. நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன்.’

‘அம்மாவை யார்தான் மறக்கமுடியும்? உனக்குத் திருமணம் எப்போ?’

‘எனக்கு ஒரு காதலி இருக்கிறாள். சென்றமுறை நான் லீவில் போனபோது அவளுடைய தலைமுடியை வாரிவிட்டேன். ஒவ்வொரு ஆண்மகனும் ஒரு நாளாவது ஒரு பெண்ணின் முடியை வாரவேண்டும். அது சுகமான அனுபவம். நீ அப்படி செய்திருக்கிறாயா?

‘செய்யவில்லை. ஆனால் இந்த இக்கட்டிலிருந்து நான் தப்பும் பட்சத்தில் அதை தவறாமல் செய்துவிடுவேன். ஆனால் நீ கடமை தவறாத போர்வீரன். உனக்கு விதிக்கப்பட்ட கட்டளையை நீ நிச்சயம் நிறைவேற்றுவாய். நான் உன்னிடம் விடுதலை செய் என்று கெஞ்சமாட்டேன். அதுவும் உனக்குத் தெரிந்திருக்கும்.. உன் காதலிக்கு முடி நீளமா? கொஞ்சம் வர்ணி பார்க்கலாம்?’

‘வேறு என்ன கேட்பாய்? சாகப்போகும் ஒருவன் என்ன என்ன கேட்பான் என்று ஒரு வரைமுறை இல்லையா?’

‘இதிலே என்ன வரைமுறை? நீ உன் துப்பாக்கியை இப்போதைக்குப் பழுதுபார்க்கப் போவதில்லை. ஏதாவது பேசினால் மனதுக்கு அமைதியாக இருக்கும். உன் காதலி அந்த மகிழ்ச்சியைத் தருவாள்.’

‘நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். அவளை முழுவதுமாக என்னால் வர்ணிக்க முடியாது. 16 முக வைரத்தைப் பகுதிபகுதியாகத்தான் பார்க்க முடியும். முழு வடிவத்தை ஒருவர் கற்பனையில்தான் உண்டாக்கி கண்டு மகிழவேண்டும். அப்படித்தான் அவளும். என் கைகளைப் பிடித்து முறுக்குவாள். நான் திரும்பும்போது என் முகத்தைப் பார்ப்பாள். தோள்கள் கொஞ்சம் முன்னுக்கு வளைந்திருக்கும். ஏக்கமான கண்கள். தண்ணீர் பாம்புகள்போல கேசம் நீளமாகவும் ஈரமாகவும் பளபளப்பாகவும் தொங்கும். சிறிது சிறிதாகத்தான் சிரிப்பாள். நடக்கும்போது யாரோ அவளைத் திருகுவதுபோல இடம் வலமாகச் சுழன்றபடி நடப்பாள். அந்த இடம் அவளுக்குச் சொந்தமாகிவிடும்.’

‘அற்புதம். அற்புதம். நீ ஒரு கவிஞன். அழகு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் உன் காதலி அழகானவள் என்பதைச் சொல்லிவிட்டாய். அவளுடைய உடையையோ ஆபரணத்தையோ ஒப்பனையையோ நீ வர்ணிக்கவில்லை. உண்மையான உன் காதல் வெளிப்பட்டது. இன்றிரவு நீ ராணுவ முகாமுக்குப் போனபின்னர் இரவு உணவு மேசையில் உட்கார்ந்து சுட்ட கிழங்கும் ரொட்டியும் வாட்டிய இறைச்சியும் சாப்பிடுவாய். புளித்த வைனை பருகுவாய். அப்போது அந்தப் பெண்ணை நினைப்பாய். என் நினைவும் உனக்கு வருமல்லவா?’

‘உன்னை நம்புவது எனக்கு கடினமாக இருக்கிறது. சாகவேண்டும் என்று துடிக்கிறாய். அதே சமயம் என் காதலியை வர்ணிக்கச் சொல்லிக் கேட்கிறாய். உன் தோற்றம் பரிதாபகரமானதாக இருக்கிறது. மெலிந்து களைத்துப்போய்க் காணப்படுகிறாய். ஆனால் புத்தி சாலித்தனமாகப் பேசுகிறாய். உன் கண்களில் அச்சமே கிடையாது.’

‘அச்சமா? அது போராளிகளுக்கு இல்லை. சோக் கிரட்டீஸ் கேள்விப்பட்டிருக்கிறாயா? கிரேக்க அறிஞர். அவர் சொன்னார். ‘உண்மையான வீரன் களத்திலிருந்து கடைசிவரை ஓடமாட்டான். தன் நிலையில் நின்று இறுதிவரை போர் புரிவான்.’ அப்படித்தான் நாங்கள் போர் புரிந்தோம்.’

‘எங்கே உன் போராளிக்குழு? எப்படி தனியனாக மாட்டினாய்?’

‘நான்தான் போராளிக் குழு. என் குழுவில்

மிஞ்சியது நான் ஒருவன்தான். இரண்டுநாள் முன்னர் நடந்த போரில் நான் மட்டுமே உயிர் பிழைத்தேன். ஓர் இரவில் இருபது மைல் தூரம் ஓடிக் கடந்தேன்.’

‘நம்பமுடியாது. 20 மைல் தூரமா? ஒரு விலங்குகூட அத்தனை தூரம் தாண்டமுடியாது.’

‘அது உண்மை. மனிதன் மட்டும்தான் அப்படி ஓடலாம். உனக்குத் தெரியுமா’ விலங்குகளுடைய மூச்சும் காலடியும் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறுத்தையோ நாயோ யானையோ ஓடும்போது ஒவ்வொரு மூச்சுக்கும் ஒவ்வொரு பாய்ச்சல் பாயும். மனிதன் அப்படியல்ல. இரண்டு மூன்று பாய்ச்சலுக்கு ஒரு மூச்சு என்று ஓடுவான். அவனால் நெடுந்தூரம் ஓடமுடியும். நான் களைப்பில் ஒரு மரத்தின் கீழ் இளைப்பாறியபோது பிடிபட்டுவிட்டேன். அவமானம். என் குழுவுடன் நானும் இறந்துபோயிருக்கலாம். உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும். என்னைக் கொல்வதற்கு எப்படி நீ தெரிவு செய்யப்பட்டாய்?’

‘நான் படையில் சேர்ந்து ஒரு வருடமாகிவிட்டது. இன்னும் ஒருவரைக்கூட கொல்லவில்லை. மேஜர் எனக்கு இந்தக் கட்டளையை இட்டிருக்கிறார். நான் கடமையை நிறைவேற்றினால்தான் எனக்கு மதிப்பு. இதுதான் என்னுடைய முதல் கொலையாக இருக்கும்.’

‘அப்படியா? சந்தோசம். எனக்கும் இதுதான் முதல் தடவை சாவது.’

‘உனக்குப் பயமே இல்லையா? அல்லது நடிக்கிறாயா?’

‘நான் யாரைக் கொலை செய்கிறேனோ அவர்களால் எனக்கு நிம்மதி கிடைக்கிறது. யாரைக் கொலை செய்யாமல் விடுகிறேனோ அவர்களால் எனக்குப் பயம் ஏற்படுகிறது. என் போர் வாழ்க்கையில் நான் கண்டது இதுதான். போரில் ஒருவரையொருவர் கொல்வதில் ஒரு தர்மம் இருக்கிறது. இருவரிடமும் ஆயுதம் உள்ளது. ஒன்றில் கொல். அல்லது கொல்லப்படு. இது வேறு. உன்னிடம் ஆயுதம் இருக்கிறது. என்னிடம் இல்லை. கைகளை வேறு கட்டிப் போட்டிருக்கிறாய். இந்தக் கொலையில் என்ன பெருமை? இதுவும் ஓர் எறும்பைக் கொல்வதும் ஒன்றுதான். வீரம் இல்லாத ஒருவனை உன்னுடைய மேஜர் வீரனாக்கப் பார்க்கிறார்.’

‘வீரத்தைப்பற்றி இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். இந்தப் பாழாய்ப்போன துப்பாக்கி இடுக்கிக்கொண்டு நிற்கிறது. இதை உன்னால் பழுதுபார்க்க

முடியுமா?’’

‘ஒரு நிமிடத்தில் திருத்திவிடுவேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ சுடும்போது என்னைக் கருணையோடு பார்க்க வேண்டும். நான் முழங்காலில் நிற்கமாட்டேன். எந்த மண்ணுக்காக நாங்கள் போராடினோமோ அந்த மண்ணில் என் கால்கள் நிற்க வேண்டும். ஒரே குண்டில் என்னை நீ கொல்லவேண்டும்.’

‘நீ என் எதிரி. உன்னை எப்படி நான் கருணையுடன் பார்ப்பேன்?’

‘ஏன் முடியாது. நான் உன்னை என் மகன்போல பார்க்கிறேனே. போகப்போக உன் நடை பாவனை எல்லாம் என் மகனையே நினைவூட்டுகின்றன. அது சரி, உன் காதலியின் பெயர் என்ன சொன்னாய்?’

‘நான் சொல்லவில்லையே. என் பெயரே உனக்குத் தெரியாது. காதலி பெயரை எப்படிச் சொல்லியிருப்பேன்?’

‘சரி, உன் காதலியின் பெயரைச் சொல்.’

‘இன்னும் சில நிமிடங்களில் சாகப்போகிறாய். என் காதலியின் பெயரைத் தெரிந்து என்ன பிரயோசனம்? சரி பரவாயில்லை. உனக்கு ஒன்று சொல்லுவேன். என் பெயரை மாற்றிப்போட்டால் காதலியின் பெயர் வந்துவிடும். இந்தப் புதிரை உடைக்க முயற்சித்தபடியே நீ இறந்துபோகலாம்.. ஆ, விசை சரி வந்துவிட்டது.’

‘சரி, சரி மகனே. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. நான் உன்னை ‘மகனே’ என்று அழைக்கலாமா?’

‘அழை. அதனால் ஒரு மாற்றமும் வந்துவிடாது. நான் உன்னை அப்பா என்று அழைக்கவேண்டும் என எதிர்பார்க்காதே. சீக்கிரம். உன் கடைசி ஆசையைச் சொல்.’

‘என் கட்டுக்களை அவிழ்த்துவிடு. ஆ மிக்க நன்றி மகனே. நான் நிலத்திலே காலைப் பதித்து உன்னையே பார்த்து நிற்கிறேன். என் நெஞ்சைக் குறிவை. என்னையே பார். உன் புதிரை நினைத்தபடியே நான் இறந்துபோகிறேன். கொஞ்சம் கருணையோடு பார்.’

‘கருணையா?’

‘யோசித்துப் பார். நான் உனக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை. உன்னிடம் திருடினேனா? உன்னைக் காயப்படுத்தினேனா? உன் அம்மாவைத் தூற்றினேனா? உன் காதலியைக் கடத்தினேனா? நான் உன் எதிரியே அல்ல. உன் கண்களில் சிறிய அளவு கனிவைக் காட்டு.’

‘பேசாதே. போதும். என்னைக் கலங்க வைக்கிறாய். நேராக நில்.’

‘இது என்ன நீ இடக்கைக்காரனா? உனக்கு மகாபாரதம் தெரியுமா? அதிலே வரும் அர்ச்சுனன் சுத்தமான வீரன். பெரிய வில்வித்தைக்காரன். அவனைக் கண்ணன் ‘இடக்கைவீரா’ என்றுதான் அழைப்பான். உன்னைப் பார்த்தாலும் சுத்தவீரன் போலவே படுகிறது. இடக்கையால் உனக்கு சுட வரும்தானே?’

‘பேசாதே. பேசாதே. பேசாதே.’

‘ஏன் உன் கை நடுங்குகிறது. பதறாதே. என் கண்களைப் பார். துப்பாக்கியின் குறி எங்கேயெல்லாமோ அலைகிறது. என் நெஞ்சுக்கு நேராகப் பிடித்துச் சுடு. மறுபடி வேலை செய்யவில்லையா? விசையை இழு.’

‘ஆ பறிக்காதே! என் துப்பாக்கியை தா. துப்பாக்கியை தா. என்னைச் சுட்டுவிட்டாயே, அப்பா.’

‘முட்டாளே. என் மனைவியின் தலைமுடியை நான் வாரவேண்டும். நீ என் மகனா? செத்துப் போ. இது போர்,’’

 

http://www.kalachuvadu.com/issue-192/page39.asp

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி சரியாக்கிப் பாக்கியின்றி பழிவாங்கி விட்டது....!

ஒரு போராளியுடன் பேசவே கூடாது , பேசினால் முதலுக்கே மோசமயிடும் , இவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார் , பட்டுட்டார்....!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில் மறையும் யானை: – அ.ராமசாமி

Dec. 17 2015

ஒன்றை இன்னொன்றாக ஆக்குவது உருவாக்குபவரது வேலை. எதை உருவாக்குகிறோம் என்ற உணர்வோடு தொடங்கினாலும் இன்னொன்றின் அடிப்படைக்கூறுகளின் மீது ஏற்படும் தற்காலிக விருப்பம் உருவாக்கியதை இன்னொன்றுபோலக் காட்டிவிடும். சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்து பார்த்தவர்கள் தான். நிதானமான ஒருநாளில் அல்லது கொண்டாட்ட மனநிலையில் தன் மகளை மகனாக ஆக்கிப் பார்க்க விரும்பும் அம்மா, அரைக்கால் சட்டையொன்றை அணிவித்து கையில் ஒரு தடியைக் கொடுத்து விரைப்பாக நடக்கச் சொல்வாள். அந்த நாளின் நினைவு மறையாத அந்தப் பெண் பின்னாளில் ஆண்களுக்கான வேலைகள் என நினைக்கும் காவல்துறை, ஓட்டுநர்கள் போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது நினைவுபடுத்துவதுண்டு.உண்மையில் அப்படியான வேலைகள் இல்லை. அதன் மறுதலையாக ஆண் பிள்ளைகளுக்கு பொட்டுவைத்துப் பெண்ணாக்கிப் பார்ப்பதுமுண்டு.

ஆக்கிப் பார்க்கும் வேலையை எழுத்தாளர்களும் செய்கிறார்கள். கதையைக் கவிதையாக்குவதும், நாடகத்தைக் கவிதையில் எழுதுவதும் அப்படி நடப்பதுதான். ஒன்றின் அடிப்படை அடையாளத்தை இன்னொன்றிற்குள் வைப்பதன் மூலம் அதனைச் செய்துவிட முடியும். கவிதையின் அடிப்படை வெளிப்பாட்டுக் கூறு ஒலி இடைவெளி. கவிதை மரபானாலும் புதுசானாலும் ஒருவித ஒலியிடைவெளியை – இசைரூபத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. அதேபோல கதையின் அடிப்படைக் கூறு சொல்லுதல். நாடகத்தின் அடிப்படைக்கூறு உரையாடல். சொல்லுதலை முதன்மையாகக் கொண்ட கதையில் உரையாடலை வெளிப்பாட்டுக் கருவியாக ஆக்குகின்ற போது நாடகக் கதையாகத் தோன்றுவதைத் தவிர்க்கமுடியாது. இந்தமாதக் காலச்சுவடில் வந்துள்ள அ.முத்துலிங்கத்தின் கதை அப்படி ஆகியிருக்கிறது.

சாதாரண உரையாடல், நாடகத்தின் உரையாடலாக மாற்றுவது இரண்டு கதாபாத்திரங்களின் முரண்பாட்டு நிலை தான். முரண்பாட்டு அடையாளம் நாடகத்தில் பலவிதமாக உருவாக்கப்படும். மேடையைப் பற்றிய விவரிப்பாகத் தரப்படும் [ ] அடைப்புக்குறி விவரணையேகூட அந்த முரண்பாட்டை உண்டாக்கிவிடும். தேர்ந்த நாடக ஆசிரியர்கள் நாடகத்தொடக்கத்தின் விவரணையில் அதைச் செய்திருப்பதை வாசித்திருக்கிறேன். அ.முத்துலிங்கமும் தேர்ந்த நாடக எழுத்தாளரைப் போல விவரணக்காட்சி ஒன்றைத் தருகிறார் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் அவரது கதைத் தலைப்பே முரண்பாட்டை முன்வைக்கும் வேலையைச் செய்கிறது பிறகு புரிந்தது. தலைப்பு: சிப்பாயும் போராளியும் ( காலச்சுவடு, டிசம்பர், 2015, பக்.39-45).

”ராணுவவீரன் போராளியின் தலையில் குறிவைத்துக் கைத்துப்பாக்கியின் விசையை இழுத்தான். அது வெடிக்கவில்லை. பின்னுக்குக் கைகள் கட்டப்பட்ட நிலையில் போராளி முழங்கால் இட்டிருந்தான்”
என்று தொடங்கி நீண்டதொரு உரையாடலாய் விரிகிறது அ.முத்துலிங்கத்தின் கதை. அங்கிருந்து ஆரம்பிக்கும் உரையாடல் முதலில் எதிரி என்பதிலிருந்து நகர்ந்து இணக்கம் கொண்டவர்களாக மாறப்போகும் ஓர் உச்சநிலையை நோக்கி நகர்கிறது. அந்நகர்வின் பகுதியை மட்டும் இங்கே வாசிக்கலாம். 

’நீ என் எதிரி. உன்னை எப்படி நான் கருணையுடன் பார்ப்பேன்?’

‘ ஏன் முடியாது. நான் உன்னை என் மகன்போல பார்க்கிறேனே. போகப்போக உன் நடை, பாவனை எல்லாம் என் மகனையே நினைவூட்டுகின்றன. அதுசரி. உன் காதலியின் பெயர் என்ன சொன்னாய்?

‘நான் சொல்லவில்லையே, என் பெயரே உனக்குத் தெரியாது. காதலி பெயரை எப்படி சொல்லியிருப்பேன்’

‘சரி, உன் காதலியின் பெயரைச் சொல்’

‘ இன்னும் சில நிமிடங்களில் சாகப்போகிறாய். என் காதலியின் பெயரைத் தெரிந்து என்ன பிரயோசனம்? சரி பரவாயில்லை. உனக்கு ஒன்று சொல்வேன். என் பெயரை மாற்றிப்போட்டால் காதலியின் பெயர் வந்துவிடும். இந்தப் புதிரை உடைக்க முயற்சித்தபடியே நீ இறந்துபோகலாம்..ஆ.. விசை சரிவந்து விட்டது’.

’சரி. சரி மகனே. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. நான் உன்னை மகனே என்று அழைக்கலாமா?

‘ அழை. அதனால் ஒரு மாற்றமும் வந்துவிடாது. நான் உன்னை அப்பா என்று அழைக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதே. சீக்கிரம். உன் ஆசையைச் சொல்.

கதை மொத்தமும் உரையாடல் தான். ஒருவேலை போராளியின் அன்பான பேச்சில் மயங்கி, சிப்பாய்க்குள் இருக்கும் கருணைமனம் உயிர்பெற்றுவிடுமோ என நினைக்கும்போது எதிர்பார்ப்பைக் குலைத்து எதிர்முடிவு வைக்கிறார். முடிவு இப்படி இருக்கிறது:

‘ பேசாதே. பேசாதே. பேசாதே.’

‘ஏன் உன் கைநடுங்குகிறது. பதறாதே. என் கண்களைப் பார். துப்பாக்கியின் குறி எங்கேயெல்லாமோ அலைகிறது. என் நெஞ்சுக்கு நேராகப் பிடித்துச் சுடு. மறுபடி வேலை செய்யவில்லையா? விசையை இழு.

‘ ஆ. பறிக்காதே! என் துப்பாக்கியை தா. துப்பாக்கியைத் தா. என்னை சுட்டுவிட்டாயே அப்பா’

‘ முட்டாளே என் மனைவியின் தலைமுடியை நான் வாரவேண்டும். நீ என் மகனா? செத்துப் போ. இது போர்”

தொடக்கம், வளர்ச்சி, உச்சம், எதிர்நிலை முடிவு எனக் கச்சிதமாக அமையக்கூடிய ஓரங்க நாடகம். இப்போதுள்ள வடிவமே கூட இயக்குநருக்கு உதவும் ஒரு நிகழ்த்துப்பிரதியாகவே இருக்கிறது.
நாடக எழுத்துக்குத் தமிழ் இதழ்களில் அதிகம் இடமில்லை என்பதால் சிறுகதை என்று அனுப்பியிருக்கிறார் அ.முத்துலிங்கம் என்றே தோன்றுகிறது. சிறுகதை என்றால் வாசிப்பவர்கள் கூட நாடகம் என்றால் வாசிக்காமல் விலகிப்போய்விடுவார்கள் என்பதுதான் தமிழ் வாசிப்பு மனநிலை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நாடகங்களைத் தேடிப்படிக்கும் எனக்கு அ.முத்துலிங்கம் நாடகத்தைச் சிறுகதையாக ஆக்கியிருக்கிறார் என்றே தோன்றியது

 

http://malaigal.com/?p=7685

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.