Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2015 - நிஜமும் நிழலும்: வாகை சூடிய திரைப்படங்கள்!

Featured Replies

2015 - நிஜமும் நிழலும்: வாகை சூடிய திரைப்படங்கள்!

 

 
 
  • காக்கா முட்டை
    காக்கா முட்டை
  • பாகுபலி
    பாகுபலி
  • தனி ஒருவன்
    தனி ஒருவன்

ஜனவரி 2ம் தேதி வெளியான ‘திரு.வி.க பூங்கா' உள்ளிட்ட 3 படங்களில் ஆரம்பித்து தற்போது வெளியாகியிருக்கும் ‘பசங்க 2' உள்ளிட்ட 3 படங்களோடு 2015-ல் மொத்தம் 204 படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமே லாபம் என சொல்லக்கூடிய படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன.

‘தங்கமகன்', ‘பசங்க 2' மற்றும் ‘பூலோகம்' ஆகிய படங்கள் தற்போதுதான் வெளியாகியிருக்கின்றன. ஆகையால் அப்படங்களின் வசூல் நிலவரங்கள் உள்ளிட்டவை இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

இந்த ஆண்டில் தொலைக்காட்சி உரிமம் என்பது தமிழ்த் திரையுலகின் முக்கியப் பிரச்சினையாக, தயாரிப்பாளர்களுக்குப் பெரிய தலைவலியாக இருந்தது. தொலைக்காட்சி உரிமம் விற்காமல் பல்வேறு படங்கள் முடங்கிக் கிடப்பது பெரிய இழப்பாக இருக்கிறது.

அனைத்துத் தரப்புக்கும் லாபம்

‘காக்கா முட்டை', ‘தனி ஒருவன்', ‘பாகுபலி', ‘காஞ்சனா 2', ‘மாயா', ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா', ‘டிமாண்டி காலனி', ‘கொம்பன்', ‘பாபநாசம்', ‘ரோமியோ ஜூலியட்', ‘டார்லிங்', ‘ஓ காதல் கண்மணி', ‘வேதாளம்' மற்றும் ‘ஈட்டி' ஆகிய படங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தன. பெரிதும் பாராட்டப்பட்ட ‘காக்கா முட்டை' சிறு முதலீட்டில் எடுக்கப்பட்டு, பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றது.

‘தனி ஒருவன்', ‘பாகுபலி', ‘காஞ்சனா 2' ஆகிய படங்களுக்குப் பெரும் ஆதரவு கிடைத்தது. அதில் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் ‘காஞ்சனா 2' தான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் அதிக மக்கள் பார்த்த படம் ‘காஞ்சனா 2' தான் என்கிறார்கள். அதற்கு அடுத்த நிலையில் ‘தனி ஒருவன்', ‘பாகுபலி' ஆகிய படங்கள் இடம் பிடித்திருக்கின்றன. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்துக்கு விமர்சகர்களிடையே பெரும் எதிர்ப்பு இருந்தாலும், மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தொடர்ச்சியாகப் பேய்ப் படங்கள் வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில், வித்தியாசமான முறையில் அமைந்த ‘மாயா', ‘டிமாண்டி காலனி' ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘ரோமியோ ஜூலியட்' மற்றும் ‘ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களின் இசைக்கும் படத்துக்கும் இளைஞர்கள் மத்தியில் வெற்றி கிடைத்தது. இவ்வருடத் தொடக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான ‘டார்லிங்' படம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தீபாவளிக்கு வெளியான ‘வேதாளம்' அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல லாபம் கொடுத்திருக்கிறது.

முதலீட்டுக்கு மோசமில்லை!

தொலைக்காட்சி உரிமம் என்பது ஒரு திரைப்படத்தின் வசூலில் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தொலைக்காட்சி உரிமத்தின் துணையோடு சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு முதலுக்கு மோசமில்லாதவையாக அமைந்தன.

‘ஐ', ‘அனேகன்', ‘மாரி', ‘காக்கி சட்டை', ‘36 வயதினிலே', ‘இனிமே இப்படித்தான்', ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க', ‘ஆம்பள' ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'ஐ' திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், தொடக்கக் கட்ட வரவேற்பு நீடிக்கவில்லை. தாமதமாக வெளியானதால் தயாரிப்பாளர் செலவு செய்த பணம் மட்டுமே கிடைத்தது என்கிறார்கள். சீனாவில் வெளியிட இருப்பதாகத் தயாரிப்பாளர் தெரிவித்தாலும், இன்னும் வெளியாகவில்லை. அங்கு வெளியிடப்பட்டால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிகிறது.

பாராட்டுப் பெற்ற படங்கள்

‘ராஜதந்திரம்', ‘குற்றம் கடிதல்', ‘கிருமி', ‘குற்றம் கடிதல்' ஆகிய படங்களுக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘கிருமி' படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னும் விற்பனையாகவில்லை.

எதிர்பார்ப்பும் நஷ்டமும்

பெரிய அளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு, பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான சில படங்கள் மக்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்டு, தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தின. ‘என்னை அறிந்தால்’, ‘புலி', ‘பாயும் புலி', ‘10 எண்றதுக்குள்ளே', ‘மாஸ்', ‘எலி', ‘எனக்குள் ஒருவன்', ‘வலியவன்', ‘இஞ்சி இடுப்பழகி', ‘உத்தம வில்லன்', ‘புறம்போக்கு' ஆகியவை அந்த ரகத்தைச் சேர்ந்தவை. ‘எலி', ‘வலியவன்' உள்ளிட்ட சில படங்களின் தொலைக்காட்சி உரிமைகளைப் பெற இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

பேய்களின் ஆண்டு

இந்த ஆண்டில் அதிகமான பேய்ப் படங்கள் வெளியாயின. அவற்றில் பல படங்கள் ஒரே மாதிரியான கதைக்களத்தைக் கொண்டிருந்தன. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான சில படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு வெளியிட முடியாமல்போன பல பேய்ப் படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகக் காத்திருக்கின்றன.

வசூல் நாயகர்கள்

அஜித் மற்றும் ஜெயம் ரவி இருவரும் விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். ‘வேதாளம்', ‘தனி ஒருவன்' படங்கள் பெருமளவில் லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. ‘தனி ஒருவன்' வெளியான அன்று முதல் காட்சிக்குக் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அக்காட்சி முடிந்தவுடன் ‘படம் சூப்பர்' என்று அனைவரும் தெரிவிக்க, மாலைக் காட்சியில் இருந்து தொடர்ச்சியாக 10 முதல் 15 நாட்களுக்கு அரங்கு நிறைந்ததாக கூறுகிறார்கள் விநியோகஸ்தர்கள். பி, சி சென்டர்கள் எனக் கூறப்படும் பகுதிகளில் ‘வேதாளம்' நல்ல வசூலைச் சம்பாதித்துக் கொடுத்தது.

முக்கிய நிகழ்வுகள்

நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பின. சரத்குமார் அணி மற்றும் விஷால் அணியினர் மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள். தேர்தல் நடைபெற்ற அன்று சட்டசபைத் தேர்தல்போல அனைத்துத் தொலைக்காட்சிகளும் நேரலை ஒளிபரப்பு செய்து முக்கியத்துவம் அளித்தன. எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ‘ஆச்சி' மனோரமா இருவரின் மறைவு தமிழ்த் திரையுலகினர் மனங்களில் பெரும் துயரமாக அமைந்தது. சென்னை, கடலூர் ஆகிய பகுதிகள் மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது நடிகர்களில் சிலர் களத்தில் இறங்கிப் பணிபுரிந்து தங்கள் சமூக உணர்வை வெளிப்படுத்தினார்கள். ‘நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று ஒரு சில நடிகர்களைப் பார்த்து மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

வெள்ள பாதிப்பின் துயரத்திலிருந்து விடுபடுவதற்குள் சிம்பு, அநிருத் கூட்டு முயற்சியில் உருவானதாகச் சொல்லப்படும் ‘பீப்’ பாடல் குறித்த சர்ச்சை வெடித்தது. இருவர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. நிவாரணப் பணிகள் குறித்த நிகழ்ச்சிக்கு வந்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இது பற்றி நிருபர் ஒருவர் கேட்கப்போக, இளையராஜா கோபப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எப்படி இருக்கும் 2016?

புத்தாண்டின் முதல் தினத்திலேயே சில படங்கள் வெளியாக உள்ளன. இளையராஜா இசையமைக்கும் 1,000-வது படமான ‘தாரை தப்பட்டை’(இயக்குநர் பாலா இயக்கம்), சூர்யாவின் ‘24’, விஷாலின் ‘கதகளி’ ஆகிய படங்கள் உள்படப் பல படங்கள் வரிசையில் தயாராக இருக்கின்றன. தொலைக்காட்சி உரிமம், நடிகர்களின் சம்பளம், வரிச்சலுகை உள்ளிட்ட விஷயங்களை எவ்வளவு சீக்கிரம் பேசி முடிக்கிறார்களோ, அந்த அளவுக்குப் புத்தாண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டாக இருக்கும் என்கிறார்கள் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/2015-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8028808.ece?widget-art=four-all

  • தொடங்கியவர்

2015ன் வெற்றித் திரைப்படங்கள் ஒரு பார்வை!

 

தனி ஒருவன் :

Thani%20oruvan.jpg



ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, டைரக்டர் ராஜா மூவருக்கும் இது ஒரு ஸ்டைலிஷ் கம் பேக். மிகச்சில படங்களில்தான் ஹீரோ கேரக்டரையும் தாண்டி வில்லன் கேரக்டர் அதிகம் பேசவும், விரும்பவும்படும். அந்த வரிசையில் ஸ்மார்ட் சித்தார்த் அபிமன்யூ இந்த வருட சென்சேஷன். சாதாரண நல்லவன் vs கெட்டவன் கதையில் பரபர திரைக்கதையின் மூலம் பம்பர் ஹிட் அடித்தார்கள். கதாப்பாத்திரங்களின் நேர்த்தி, சுபாவின் டயலாக்ஸ், ஆதியின் இசை, நயன்தாராவின் துறுதுறு நடிப்பு என ஏகப்பட்ட ப்ளஸ்கள்.

நானும் ரவுடி தான் :

NRD.jpg



இதை ஒரு லவ்லி ரொமாண்டிக் காமெடி ஹிட் என சொல்லலாம். விஜய் சேதுபதி எப்பவும் போல பட்டையை கெளப்ப, நயன்தாரா எப்போதும் இருப்பதை விட இன்னும் க்யூட் குட்டிப்பெண்ணாக அழகு சேர்க்க, பார்த்திபன் அதே அதார் உதார்களோடு வலம் வர, அனைவருமே போட்டிபோட்டு ரசிக்க வைத்தார்கள். படத்தில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் கிச்சுகிச்சு மூட்டின. விக்னேஷ் சிவன் அசால்ட்டாக சிக்ஸர் அடித்தார்.

காக்கா முட்டை

KaakaMuttai.jpg



உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா இந்த காக்கா முட்டை. பல சீரியஸான விஷயங்களை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல், உள்ளது உள்ளபடியே நம்முன் காட்சிப்படுத்தியும், நமக்கு மிக அருகிலேயே இருந்தும், நாம் கவனிக்க மறந்த கவனிக்க மறுத்த விஷயங்களாலும் கவனம் ஈர்த்தது. கதை மட்டுமா...? அதில் நடித்த கதாப்பாத்திரங்கள் அத்தனையும் கனக்கச்சிதம். இந்த படத்திற்காக அறிமுக இயக்குநர் மணிகண்டனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தார்கள் மக்கள்.

என்னை அறிந்தால்

Yennai%20Arinthaal%202.jpg



’தல’ அஜித்தின் மாஸ் இமேஜை உடைத்தெறிந்த ஒரு க்ளாசிக் ஹிட். போலீஸ் ஆஃபிஸராக, த்ரிஷாவின் காதலனாக, ஈஷாவின் அப்பாவாக என ’சத்யதேவ்’ ஒரு பக்கம் அப்ளாஸ் குவிக்க, அந்த பக்கம் அருண் விஜய் வில்லனாக அதகளம் செய்தார். கௌதம் மேனனின் மேஜிக் டைரக்‌ஷன் வொர்க் அவுட் ஆக, படம் ரிலீஸான முதல் நாள், தியேட்டரில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து, அருண் விஜய் மகிழ்ச்சியில் அழுதது நெகிழ்ச்சி க்ளைமேக்ஸ்.

வேதாளம்

vedhalam1.jpg



பழைய பழிவாங்கல் கதைதான் என்றாலும் பக்கா எண்டர்டெய்னராக வசூல் வேட்டையில் ஹிட் அடித்து, தல ரசிகர்களுக்கு ஹாட்ரிக் சந்தோஷத்தை கொடுத்தது வேதாளம். மாஸ் ரவுடி வேதாளத்தை விட பாசமான அண்ணன் கணேஷ் கவனம் ஈர்த்தார். லக்‌ஷ்மி மேனனும் தன் பங்குக்கு அழகு எக்ஸ்ப்ரெஷன்களால் அள்ள,  இந்த அண்ணன் – தங்கை உறவே படத்துக்கு பெரிய பலமாக அமைந்தது. தல ரசிகர்களுக்கு ஏற்றவாறு அனிருத்தும் இரண்டு அதிரடி பாடல்கள் கொடுக்க, இந்த தீபாவளியும் ‘தல’ தீபாவளி ஆனது.

பாபநாசம்

papanasam.jpg



மலையாள ‘த்ரிஷ்யத்தின்’ தமிழ் வெர்ஷனே பாபநாசம். ஆனால் த்ரிஷ்யத்தை பார்த்து சிலாகித்தவர்களும் பாபநாசத்தைப் பார்த்துவிட்டு நெகிழ்ந்ததில் இருக்கிறது ரீமேக்கின் நேர்த்தி. அழகு நெல்லைத் தமிழாலும் தனக்கே உரிய ஆளுமையாலும் படத்தை அலங்கரித்தார் கமல். க்ளைமேக்ஸில் மூவரும் உடைந்து போயிருக்க, கமல் பேசும் வசனங்கள் எபிக். ஆஷா சரத், கௌதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி என மற்ற கதாப்பாத்திங்களும் வலுவூட்ட,  அப்ளாஸ் அள்ளியது பாபநாசம்.

இன்று நேற்று நாளை

Indru-Netru-Naalai.jpg



தமிழில் அத்தி பூத்தாற் போல ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்; அதில் அதே தமிழ் மசாலா. கதையில் டைம் மிஷினை கொண்டுவந்தாகிவிட்டதே என இஷ்டத்துக்கு உதார் விடாமல் அடக்கமாகக் கையாண்டு ட்விஸ்ட் வைத்ததில் இருக்கிறது இயக்குநரின் வெற்றி. கலகல காமெடி வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். வித்தியாசமான முயற்சியில் சற்று மெனக்கெடல்களும்,  சுவாரஸ்யங்களும் இருந்ததால் கவனம் ஈர்த்தது.

டிமாண்டி காலனி

Demonte-Colony%202.png



காமெடி பேய்களைப் பார்த்து சிரித்துப் பழகியிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை வெலவெலத்துப் போக வைத்ததே டிமாண்டி காலனியின் சக்ஸஸ் சீக்ரெட். ஒரே அறை; நான்கே பேர்; திகில் இரவு; இவ்வளவுதான் படம். கேமரா ஆங்கிள்களையும், பின்னணி இசையையும் கொண்டே பார்வையாளர்களை கட்டிப்போட்டார்கள். தமிழ் சினிமாவின் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாமல் ஒரு த்ரில் அனுபவம் கொடுத்ததற்காகவே ஏகபோகமாகக் கொண்டாடினார்கள் படம் பார்த்தவர்கள்.

மாயா

Maya.jpg

தற்போது இருக்கும் பேய் பட ட்ரெண்டில் கொஞ்சம் பயமுறுத்தி விட்டாலே படம் ஹிட்டாகும் என்ற நிலமை இருக்க,  ஏகத்துக்கும் பல்ஸ் ஏற்றி ஹிட்டடித்தது மாயா. ஓவியர் ஆரி, கணவனைப் பிரிந்த நயன்தாரா என இரு கதைகளிலும் கச்சிதமாக பயணித்து, க்ளைமேக்ஸ் முடிச்சை அவிழ்ப்பது வரை சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டதில் பேய் ஹிட் அடித்தது.
 
காஞ்சனா 2

kanjana2.jpg

ராகவா லாரன்சின் பார்த்து சலித்த அதே பேய், அதே பழிவாங்கல், அதே பரிதாப ஃப்ளாஷ்பேக். அதே நம்பிக்கையோடு மக்களும் செல்ல, எதிர்பார்ப்பை கொஞ்சமும் சிதறடிக்காமல் லாரன்ஸ் அந்த ட்ராஸ்ஃபர்மேஷன் நடிப்பாலும், மற்றவர்கள் காமெடியாலும் மக்களை மகிழ்வித்து விட்டார்கள். முந்தைய இரண்டு பாகங்களையும் விட இது ரொம்பவே சுமார் என்றாலும் கலெக்‌ஷனுக்கு குறைவில்லை.

டார்லிங்

darling.jpg



தெலுங்கு ’ப்ரேம கதா சித்திரத்தின்’ தமிழ் ரீமேக் தான் டார்லிங். கொஞ்சம் சுமாரான படமாக்கல்தான் என்றாலும், பேய் பட ட்ரெண்டிற்காகவே ஹிட் அடித்தது, பலம் ஆங்காங்கே வரும் கவுன்டர் காமெடிகளும் திகிலூட்டும் ஒளிப்பதிவும். பலவீனம் தெலுங்கு ஹீரோயின் அத்தனை மெனக்கெட்டு செய்த பேய் ரோலை தமிழில் வெறும் பேய் மேக்கப்போடு முடித்துக்கொண்டது.

காக்கி சட்டை

kaaki%20sattai.jpg



கமர்ஷியல் ஹிட்டடித்த காக்கி சட்டை, சிவகார்த்திகேயனுக்கு ஆக்‌ஷன் ப்ரோமோஷன் கொடுத்தது. காமெடி மட்டுமில்ல ஆக்‌ஷனும் செய்வோம் பாஸ் என சிவா களமிறங்கினாலும் ஓவர் பில்டப் கொடுத்து பல்பு வாங்காமல் அடக்கி வாசித்து ரசிக்க வைத்தார். உடல் உறுப்பு கடத்தல், வில்லனின் உலகளாவிய நெட்வொர்க், அதை முறியடிக்கும் ஹீரோ, சில செண்டிமெண்ட் சீன்கள், ‘அட’ சொல்ல வைக்கும் வியூகங்கள் என இரண்டரை மணி நேரம் எண்டர்டெய்ன் செய்ததில் காக்கி சட்டைக்கு சல்யூட் வைத்தார்கள் பார்வையாளர்கள்.

பாகுபலி

bahubali.jpg

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் முதல் அத்தியாயம். ஒரு ஊர்ல ஒரு ராஜா கதையை டிஜிட்டலில் செதுக்கியிருந்தார்கள். கண்களை உறுத்தாத நுணுக்கமான க்ராஃபிக்ஸ், எது நிஜம் எது டிஜிட்டல் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்ட வேலைப்பாடுகள். மகிழ்மதி அரண்மனை, தத்ரூபமான அருவிகள், போர்க்காட்சிகள் என விஷுவல் ட்ரீட் வைத்ததற்காகவே படம் கொண்டாடப்பட்டது. திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ராஜமௌலிக்கு நிச்சயமாக இது ஒரு ’மேக்னம் ஓபஸாக’ அமைந்திருக்கும்.

36 வயதினிலே

36%20vayathinile.jpg

மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர்யூ?’வின் தமிழ் வெர்ஷன். எல்லா இந்தியப் பெண்களுக்குமான பொதுவான கதைக்களம். அதில் ஜோதிகா அத்தனை பாந்தமாகப் பொருந்திப் போனார். காட்சிக்கு காட்சி ஒரு சாதாரண இல்லத்தரசியின் இயல்பைப் பிரதிபலித்த ஜோவுக்கு ஒரு ஸ்வீட் கம் பேக்.  திருமணமாகும் வரை எத்தனை திறமையான பெண்ணாக இருந்தாலும் கணவன், குழந்தை என்று ஆன பின் அத்தனையையும் மறந்து ஒரு கூட்டுக்குள் அடைந்துகொண்ட பெண் எப்படி தன்னைத் தானே மீட்டெடுக்கிறார் என்பதை அழுத்தமாக சொன்ன விதத்தில் ஆண்களுக்கும் பிடித்தமாகிப்போனாள் இந்த ராசாத்தி.

குற்றம் கடிதல்

kutram-kadithal.jpg

இன்னார் மேல்தான் தவறு என்று ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாத ஒரு பிரச்னை. அதை சுற்றி இயங்கும் இயல்பான எளிமையான மனிதர்கள். அவர்களில் எல்லாருக்கும் அவரவர் நியாயம். கடைசியில் இது ஒரு தரப்பினருடைய குற்றம் அல்ல; இந்த சமூகத்தின் குற்றம் என முகத்திலறைகிறது குற்றம் கடிதல். இந்த வருடத்தின் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற இப்படத்தில், ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவ்வளவு உணர்வுகளை நம்முள் கடத்திச் சென்றன. துணிச்சலான கதைக்களமும், சிறப்பான படமாக்கலும் இதை வெற்றிப்படமாக்கின. ஆரோக்கியமான சினிமா எடுக்கத் துடிக்கும் பலருக்கு உற்சாகமூட்டியது இதன் வெற்றி.

http://www.vikatan.com/news/rewind-2015/56684-2015s-blockbuster-movies.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.