Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2015-ல் தமிழகம் பேசியது!

Featured Replies

2015-ல் தமிழகம் பேசியது!

recap__2__2676062f.jpg
 

2015-க்கு விடைகொடுக்கும் நாள் நெருங்கிவிட்டது. எப்போதும் ஓராண்டின் சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்த்த தருணங்களையும் தேசிய அளவில் அதிகம் கவனம் ஈர்த்த முகங்களையும் தரும் ‘தி இந்து’இந்த ஆண்டு முதல் தமிழகம் அதிகம் பேசிய விஷயங்களையும் தர ஆரம்பிக்கிறது. தமிழகம் அதிகம் விவாதித்த உள்ளூர் விஷயங்கள் தனியாகவும் தேசிய, சர்வதேச விஷயங்கள் தனியாகவும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

கூடவே, இன்றைக்கு நம்முடைய உரையாடல் வெளியில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட சமூக வலைதளங்களில் இடம்பெற்ற நையாண்டிப் படங்களும் இடம்பெறுகின்றன. எனினும், இந்தப் பட்டியல் ஏதோ ஒரு முத்திரைபோல “இவைதான் முக்கியமானவை அல்லது கவனிக்கப்பட்டவை” எனும் தொனியில் வெளியிடப்படுபவை அல்ல. இப்பட்டியலில் இடம்பெறாத, அதேசமயம் இந்திய அளவில் பேசப்பட வேண்டிய தமிழக ஆளுமைகள், நிகழ்வுகளை நாம் அடுத்தடுத்த நாட்களில் வரும் பதிவுகளில் பார்க்கவிருக்கிறோம்.

இந்தப் பதிவுகள், பட்டியல்களையெல்லாம் தாண்டியும் முக்கியமான நிகழ்வுகள், விஷயங்கள், மனிதர்கள் நிச்சயம் இருக்கலாம். அப்படியான விஷயங்களையும் பொதுவெளியின் கவனத்துக்குக் கொண்டுவருவதில்தான் ஒரு ஊடகம் எதிர்கொள்ளும் உண்மையான சவால். அந்தச் சவாலுக்கு நாம் ஒவ்வொரு நாளும் முகங்கொடுக்கிறோம். இந்தத் தருணத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயங்களைத் தருகிறோம்.

பிரத்திகா யாஷினி | ஓர் கனவு!

yashni_2676040a.jpg

படம்: ஏ.எஃப்.பி

திருநங்கைகள் என்றாலே, பராரிகளாக, பாலியல் தொழிலாளர்களாக, பிச்சைக்காரர்களாகக் காட்டுவது சினிமாவின் மனோபாவம் மட்டும் அல்ல. பொதுச்சமூகமே தம்முடைய சகோதரப் பிரிவினரில் ஒரு பகுதியினரான அவர்களை எவ்விதக் குற்றவுணர்வும் இன்றி அந்த நிலைக்குத்தான் ஒதுக்கித் தள்ளி நிறுத்தியிருந்தது.

அன்பும் அரவணைப்பும் உரிய அங்கீகாரமும் ஊக்கமும் கொடுக்கப்பட்டால் அவர்கள் எந்த இடத்துக்கும் செல்வார்கள் என்பதற்கு பிரத்திகா யாஷினி ஒரு முன்னுதாரணம். காவல் உதவி ஆய்வாளர் கனவோடு விண்ணப்பித்தவரை அவருடைய பாலினத்தைச் சுட்டிக்காட்டி நிராகரித்தது காவல் துறை. பிரத்திகா யாஷினி விடவில்லை. நீதிமன்றம் சென்றார். சட்டப் போராட்டத்தில் வென்றார். தொடர்ந்து, எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு அனைத்திலும் வென்று ஆறு வருடப் போராட்டத்துக்குப் பின் ‘இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அலுவலர்’ஆக இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார்.

விளிம்புநிலையில் ஒதுங்கி நிற்கும் பல்லாயிரம் திருநங்கைகளுக்குத் தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறது அவர் கனவு. திருநங்கைகளின் எழுச்சிமிக்க புதிய அடையாளம் பிரத்திகா யாஷினி!

வெள்ள வதை | ஒரு பேரிடர்

rain_2676042a.jpg

தமிழகத்தின் தலைநகரம் நூறாண்டில் காணாத மழையை எதிர்கொண்டது. 1901 டிசம்பர் 10-ல் பதிவான 26.2 செ.மீ. மழையை மிஞ்சியது 2015 டிசம்பர் 1-ல் பதிவான 30 செ.மீ. மழை. இப்படியான நூறாண்டு மழை, இருநூறு ஆண்டு மழையை எதிர்கொள்வதற்கேற்ப நகரக் கட்டமைப்புகளை உருவாக்குவது வெளிநாடுகளில் சகஜம். ஆனால், இது இந்தியா. அதிலும் தமிழகம்! வானிலை ஆய்வு மைய அறிக்கைகள் முன்கூட்டியே எச்சரிக்கைகளை அனுப்பியபோதும் அதிகாரவர்க்கம் அலட்டிக்கொள்ளவில்லை.

பல சேதங்களை எதிர்கொண்டும் அரசு பாடம் கற்காததன் விளைவை சென்னை, கடலூர் மக்கள் அனுபவித்தார்கள். வெள்ளத்தில் சிக்கிய தீவுபோலானது தலைநகரம். 18 லட்சம் பேர் அகதிகளைப் போல அரசின் மையங்களில் அடைக்கலமானார்கள். மேலும் பல லட்சம் பேர் சொந்த ஊர் நோக்கி ஓடினார்கள். ஒட்டுமொத்த நகரவாசிகளையும் அகதிகளாகிவிடாமல் தங்கள் கைகளில் ஏந்தினார்கள் இந்த மழை விதைத்த மனிதத்தில் முளைத்த தன்னார்வலர்கள். குறைந்தது இன்னும் ஒரு நூறாண்டுக்கு மறக்க முடியாத பேரிடர் இது!

ஜெயகாந்தன் | ஒரு சகாப்தம்

jayakanthan_2676043a.jpg

தமிழ் எழுத்தாளனின் கம்பீர முகம் என்று கொண்டாடப்பட்டவர், 1934-ல் கடலூரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். கல்வித் தகுதி என்று பார்த்தால் ஐந்தாம் வகுப்புதான். எடுபிடி வேலையில் தொடங்கி பல வேலைகளையும் ஒரு சுற்று சுற்றியவர். ஆனால், ஜெயகாந்தன் எழுத ஆரம்பித்தபோது தமிழின் முகமே மாறியது. தான் நினைத்ததைப் பேசினார், எழுதினார், செய்தார்.

ஒரு படைப்பாளியின் ஞானச்செருக்கு எப்படியிருக்கும் என்று நவீனத் தமிழ்ச் சமூகத்துக்குத் தன் வாழ்க்கையையே பாடமாக்கினார். அவர் தீவிரமாக எழுதுவதை நிறுத்தி கால் நூற்றாண்டு கடந்தும், தமிழ்ச் சமூகம் சமகால எழுத்தாளர்களைவிடவும் உயரிய மதிப்பை அவருக்கு அளித்தது. “எழுதுகோல் என் தெய்வம்” என்று சொன்ன ஜெயகாந்தன் மறைந்தார். ஒரு சகாப்தம் முடிந்தது!

மனோரமா | ஓர் இழப்பு

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் என்ற பெருமையைக் கொண்ட மனோரமா இறந்த செய்தி வந்தபோது, அது ஒரு திரைக் கலைஞரின் மரணமாக அல்ல; சொந்தக் குடும்பத்தில் நேர்ந்த இழப்பாகவே பலரால் உணரப்பட்டது. மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என்று பெண்மையின் அத்தனை பரிமாணங்களிலும் என்னென்ன வேடங்கள் இருக்கின்றனவோ அத்தனையிலும் நடித்தவர் மனோரமா.

சினிமாவில் நடிகைகளின் மவுசு கம்மி என்பதை நொறுக்கியவர். மன்னார்குடியில் 1937-ல் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த மனோரமா, மேடை நாடகங்களின் வழியே சினிமாவுக்கு நுழைந்தவர். மக்கள் மனதில் ‘ஆச்சி’யாக உறைந்தவர். அந்த அபூர்வ நட்சத்திரம் உதிர்ந்தது!

செம்மரமும் செந்நீரும் | ஒரு துயரம்

semmaram_2676044a.jpg

ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். மனித உரிமை ஆர்வலர்களும் உண்மைக் கண்டறியும் குழுக்களும் நடத்திய அடுத்தடுத்த விசாரணைகள், இது காவல் துறை திட்டமிட்டு நடத்திய போலி என்கவுன்டர் என்றன. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வழக்கம்போல அரசியல் நடத்தினார்கள்.

தமிழக முதல்வர் ஆந்திர முதல்வருக்குக் கடிதம் எழுதினார். மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ரத்தம் ஓடிய காட்டில் கடத்தலை ஒரு தொழிலாக நடத்தும் பெரும்புள்ளிகள் எவர் முகமும் கடைசி வரை வெளியே வரவில்லை. அப்பாவிகளின் அழுகுரல்கள் காற்றில் கரைந்தன.

மூடு டாஸ்மாக்கை மூடு! | ஒரு பாட்டு

kovan_2676045a.jpg

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’உருவாக்கியிருக்கும் கேடுகளை எழுதித் தீர்க்க முடியாது. சசிபெருமாள் தொடங்கி, மாணவி நந்தினி வரை எத்தனையோ போராளிகள், எவ்வளவோ போராட்டங்கள். பலனில்லை. கோவன் எடுத்த ஆயுதம் பாடல். ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ பெரிய அளவில் மக்களைப் போய்ச் சேர்ந்தது. அரசு தேசத் துரோக வழக்கில் நள்ளிரவில் கோவனைக் கைதுசெய்தபோது அதிர்ந்து நின்றது தமிழகம். இப்போது நீதிமன்றம் ஜாமீனில் கோவனை விடுவித்திருந்தாலும், தொடர்ந்து அவரைத் தொடர்கிறது காவல் துறை. கோவனின் பாடல் இப்போது மதுவின் எதிரிகள் பலருக்கும் செல்பேசி ரிங்டோன்!

மாதொருபாகன் | ஒரு புத்தகம்

bagan_2676046a.jpg

பெருமாள் முருகன் என்கிற எழுத்தாளரையே ‘கொன்றுவிட்டது’ அடிப்படைவாதம். ‘மாதொருபாகன்’நாவலுக்கு எழுந்த எதிர்ப்பு கடைசியில் அவரை ஊரைவிட்டு வெளியேறவைத்ததுடன், மனம் வெறுத்து “இனி எழுத மாட்டேன்” என்று அறிவிக்கவும் வைத்தது. ஆனால், 2015 சென்னைப் புத்தகக் காட்சியில் அதிகம் விற்ற புத்தகம் அதுதான். ‘சமன்வய் பாஷா சம்மான்’விருதும் வென்றது!

சகாயம் ஐஏஎஸ் | ஓர் எதிர்பார்ப்பு

ஓர் அரசு அதிகாரியை ‘அரசியலுக்கு வாருங்கள்!’ என்று அழைத்து மக்கள் நடத்திய போராட்டம் தமிழகத்தில் நடந்தது. ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகத்துக்குச் சொந்தக்காரரான சகாயம் ஐஏஎஸ், எந்தப் பதவியில் உட்கார்ந்தபோதும் கலக்கியவர். தன்னுடைய சொத்துக்கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்டவர். நேர்மையான ஊழியர் என்பதாலேயே 20 ஆண்டுகளில் 20 முறை பணிமாறுதல் கண்டவர் என்று பேசப்படுபவர்.

sagayam_2676054a.jpg

சர்வ பலமிக்க ‘பெப்சி’நிறுவன ஆலையையே பாட்டிலில் கிடந்த அழுக்குக்காக மூடவைத்தவர். பாலாற்று மணல் கொள்ளையர்களை உள்ளே தள்ளியவர். மதுரையில் சட்ட விரோத கனிமச் சுரங்கங்கள் ஆடிய கள்ளச்சூறையை அம்பலப்படுத்தியவர். கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநராக இருந்தபோது அதைத் தூக்கி நிறுத்தியவர். அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்திக்கு அப்பட்டமான குறியீடாகியிருக்கிறது சகாயத்தின் மீதான மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு!

சென்னை மெட்ரோ | ஒரு செல்ஃபி

டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை மற்றும் ஜெய்ப்பூரைத் தொடர்ந்து சென்னையிலும் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம், அதிமுக ஆட்சியில் முழு நிறைவைக் காணும் வரை பல்வேறு அரசியல் சங்கடங்களை எதிர்கொண்டது.

3_2676008a.jpg

எனினும், இறுதியில் ரயில்கள் இயக்கத்தைத் தொடக்கிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்கட்டமாக ஆலந்தூர் - கோயம்பேடு இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன. கட்டணம் (ரூ.10-ரூ.40) கொஞ்சம் அதிகம் என்று பேசிக்கொண்டாலும் மெட்ரோ ரயிலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவருகிறார்கள் சென்னைவாசிகள். மெட்ரோ ரயிலில் சுற்றம் சூழ எடுத்துக்கொண்டதே இந்த ஆண்டின் பெரும் செல்ஃபி!

முத்துக்குமாரசாமி | ஒரு கேள்வி

அரசுப் பணிக்குக் கனவு காணும் எவரும் லஞ்சம் - ஊழலில் மிதப்போம் என்ற எண்ணத்தோடு வருவதில்லை. ஆனால், மக்கள் சேவைக்கு எவ்வளவோ கனவுகளோடு வரும் பலரை அமைப்பின் ஊழல் சூறையாடிவிடுகிறது. சிலரோ விடுவதாக இல்லை. இறுதிவரை போராடுகிறார்கள்; தாங்கள் நம்பும் நேர்மைக்காக, விழுமியத்துக்காக, அறத்துக்காக. நெல்லையில் வேளாண் துறை உதவிச் செயற்பொறியாளராகப் பணியாற்றிய முத்துக்குமாரசாமி அப்படிப்பட்ட அரிதான மனிதர்களில் ஒருவர்.

4_2676007a.jpg

வேளாண் துறையின் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அரசியல் அழுத்தங்கள் வந்தபோது கடைசி வரை எதிர்த்து நின்றவர். அவருடைய மரணத்துக்கு நெருக்கடிகள் ஏற்படுத்திய மனஉளைச்சலே காரணம் என்று எழுந்த புகார்கள், அரசு ஊழியர்களைத் தாண்டிப் பொதுச் சமூகத்திலும் அதிர்வுகளை உண்டாக்கியது. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவியைக் காவு வாங்கியது. நேர்மையான அதிகாரிகளுக்கு இங்கே யார் பாதுகாப்பு எனும் கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது!

மணிகண்டன் | ஒரு நம்பிக்கை

5_2676006a.jpg

உசிலம்பட்டியிலிருந்து 2000-ல் கோடம்பாக்கம் வந்திறங்கிய மணிகண்டன், ஒரு ஸ்டில் போட்டோகிராபராக வர ஆசைப்பட்டவர். “நீ ஒளிப்பதிவாளர்கிட்ட உதவியாளரா போ” என்று ஒளிப்பதிவை நோக்கி அவர் திருப்பிவிடப்பட்டது ஒரு விபத்து. “மூணு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு படத்தை இயக்குவேன்னு கனவுகூடக் கண்டது கிடையாது” என்று சொல்லும் மணிகண்டன், ஒரு ஒளிப்பதிவாளராகவும் பெரிய படங்கள் செய்ததில்லை. ஆனால், மணிகண்டன் இயக்கி - ஒளிப்பதிவுசெய்த முதல் படமே விருதுகளையும் வசூலையும் அள்ளியது. பெருநகர எளிய மக்கள் வாழ்வையும் உணவு அரசியலையும் கலாபூர்வமாகக் கொடுத்த ‘காக்கா முட்டை’மணிகண்டன் தமிழ்த் திரையுலகின் புதிய நம்பிக்கை!

******

பேசினோம், பேசினோம்!

pesinom_2_2676015a.jpg

 

குற்றமும் தண்டனையும்

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேமன். 257 பேர் சாவுக்கும் 700-க்கும் மேற்பட்டோர் வாழ்க்கைச் சிதைவுக்கும் காரணமான இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரி தாவுத் இப்ராஹிம். அவர் பிடிபடாத நிலையில், 21 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமன் மரணம் பெரும் விவாதத்தை உருவாக்கியது.

இந்திய மகளின் ஓலம்

இந்தியாவில் நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம், இந்தியச் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்கமே என்றது பிரிட்டன் திரைப்பட இயக்குநர் லெஸ்லி உட்வினின் ஆவணப்படமான ‘இந்தியாவின் மகள்’. நிர்பயாவை பலாத்காரம் செய்த குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் பேட்டியை முன்னிலைப்படுத்தியதைச் சுட்டிக்காட்டி, படத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. எனினும் சமூக வலைதளங்களில் படம் பறந்தது; பெரும் விவாதம் நிகழ்ந்தது!

மோடியின் துர்கனவு!

மோடி அலையை முடிவுக்குக் கொண்டுவந்தார் அர்விந்த் கேஜ்ரிவால். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆஆக பெற்ற 67/70 வெற்றி எதிர்க் கட்சிகளைக் கொண்டாட வைத்தது. ஒவ்வொரு மாதமும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏதாவது செய்திகளைத் தந்துகொண்டே இருக்கிறார் டெல்லி முதல்வர். இப்போது அவர் வைத்திருக்கும் குறி, மோடியின் ப்ரியசகா அருண் ஜேட்லிக்கு. விவாத நாயகன்!

யாரிடம் நீதி கேட்க!

2002-ல் மும்பை பாந்த்ராவில் குடிபோதையில் சென்ற சல்மான் கான் கார் - ஆமாம் கார்தான்; சல்மான் கான் அல்ல - மோதி நூருல்லா முகமது ஷரீப் பலியானார். நால்வர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, சல்மான் தப்பி ஓடினார். அவருடன் பயணித்த கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டில் கொடுத்த வாக்குமூலத்துக்குப் பின் அவர் வாழ்வே நிர்மூலமானது. இதெல்லாம் நீண்ட கதை. இந்த வழக்கில் இப்போது சல்மான் கான் நிரபராதி. நீதிமன்றம் விடுவித்துவிட்டது. சல்மான் கானை பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திய பாஜகதான் மஹாராஷ்டிரத்தை இப்போது ஆள்கிறது. கானை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் என்கிறது. நம்புவோம்!

பொதுஜன அதிபதி

ஒரு குடை, கோட், மீசை, வழுக்கைத் தலையோடு கூடிய ‘திருவாளர் பொதுஜனம்’ கதாபாத்திரத்தை அரசியல் நையாண்டிக்கான ஆயுதமாக மாற்றியவர் கேலிச்சித்திரக்காரர் ஆர்.கே. லக்ஷ்மண். இளம்பிராயத்தில் ஓவியக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டவர். பின்னர், 60 ஆண்டுகள் கேலிச்சித்திர உலகை ஆட்சி செய்தவர். ‘தி இந்து’ஆங்கில நாளிதழில் பணியைத் தொடங்கி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் முகங்களில் ஒன்றாக மாறியவர். இந்தியாவை ஆண்டவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அவர் மரணம் தமிழகத்துக்கும் இழப்பானது!

நிதி, நீதியா?

நேருவின் கனவு அமைப்புகளில் ஒன்றான மத்திய திட்டக் குழுவை முடிவுக்குக் கொண்டுவந்தார் மோடி. மாற்றாக உருவாக்கப்பட்ட புது அமைப்பு நிதி ஆயோக். சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் கொள்கைகளை வகுப்பதும் கட்டுப்படுத்துவதும் இதன் பணி. நிதி ஒதுக்கும் அதிகாரம் கிடையாது. நிதிப் பகிர்வில் மாநிலங்களுக்குப் பங்கேற்பை அளிக்கவல்ல அமைப்பு இது என்று அரசு சொன்னாலும், மாநில அரசுகள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. தமிழகத்திலும் அதிகம் விவாதிக்கப்பட்டது.

சென்னை செல்லம்!

கபில் தேவுக்கு அப்புறம் என்று சொல்லலாமா? இதே வேகத்தில் போனால், கபிலையும்கூடத் தாண்டலாம் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த சென்னைப் பையன்தான் சமகாலத்தின் உலகின் நம்பர் 1 ஆல் ரவுண்டர். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 5 முறை தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 74 தொடர்களிலும் வீரேந்திர சேவாக் 39 தொடர்களிலும் செய்த இந்தச் சாதனையை அஸ்வின் 12 தொடர்களில் (32 டெஸ்ட்கள்) செய்திருக்கிறார் எனும் ஒரு குறிப்பு போதும் அஸ்வினின் சாதனைவீச்சைச் சொல்ல. நிறையப் பேசினார்கள் தமிழர்கள்.

டீபி, டீபி!

இரு பெரிய ஹிட்டுகள். ‘பிக்கு’, ‘பாஜிராவ் மஸ்தானி’. இரண்டும் இருவேறு தளங்கள். ‘தமாஷா’பெரிய அளவில் போகவில்லை. ஆனால், அவர் பேசப்பட்டார். பெண்கள் தங்கள் முடிவுகளைத் தாங்களே தீர்மானிக்கும் உரிமையை உரத்த குரலில் ‘மை சாய்ஸ்’குறும்படத்தில் அவர் பேசியது சமூக வலைதளங்களில் புயலாகச் சுழன்றடித்தது. தீபிகா படுகோன் பாலிவுட் அரசியாக இன்னும் முடிசூடவில்லை. ஆனாலும், அவர் என்ன செய்தாலும் அது செய்தி!

அடுத்து என்ன அமித்!

ஒரு பேச்சுக்கு, பிரதமர் மோடியை மகாராஜா என்று வைத்துக்கொள்வோமேயானால், அவரது படைத் தளபதி சந்தேகமில்லாமல் அமித் ஷாதான். கடந்த ஆண்டில் வானுயர உயர்ந்த தளபதி இந்த ஆண்டில் டெல்லி, பிஹார் தேர்தல்கள் பலத்த அடி வாங்கினார். தமிழகத்துக்குப் புதிய தேர்தல் வியூகம் ஒன்றைத் தளபதி வகுப்பார் என்றார்கள். காது கிழிந்தது. இப்போது தளபதி சத்தத்தைக் காணோம்!

வலது ரத்னம்!

வலதுசாரிகளின் நேரு என்று வாஜ்பாயைக் குறிப்பிடுபவர்கள் உண்டு. காங்கிரஸ் ஆதரவு இல்லாத பிரதமராகத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த முதல் பிரதமர். 1999-ல் லாகூருக்கு பஸ் பயணம் போன வாஜ்பாய், அமைதி மற்றும் பாதுகாப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் 2001-ல் ஆக்ரா மாநாட்டுக்கு அதிபர் பர்வேஸ் முஷாரஃபை அழைத்ததும் என்றும் நினைவில் இருக்கும். முன்னோடிக்கு உரிய மரியாதையைச் செய்தது பாஜக அரசு. ‘பாரத ரத்னா’வாஜ்பாயை மீண்டும் உரையாடல் வெளிக்குக் கொண்டுவந்தது.

http://tamil.thehindu.com/opinion/columns/2015%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article8044844.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.