Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதுமை - கோமகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாதுமை - கோமகன்

ராகவனின் சொந்த மண் கோண்டாவிலாக இருந்தது. அவன் அவனது மச்சாள் மகேஸ்வரியை கலியாணம் செய்து மாதுமை என்ற பெண் குழந்தைக்கும் அப்பாவாக இருந்தான் .நாட்டு நடப்புகள் அவனை சிப்பிலி ஆட்டின. ரெண்டு பக்கத்து சீருடைகளுக்கும் இடையில் அவனது உயிர் மங்காத்தா விளையாடியது .கோண்டாவில்  இந்து கலவன் பாடசாலையில் அதிபராக பேராய் புகழாய் ராஜகுமாரன் போல் இருந்த ராகவன், ஒருநாள் பல தேசங்கள் கடந்து நொந்த குமாரானாய் ஓர் இலையுதிர் காலமொன்றில் பாரிஸுக்கு என்றியானான். அவனுடன் படித்த குணாவின் அறையில் எட்டுடன் ஒன்பதானான். முப்பது மீற்ரர்  பரப்பளவை கொண்ட ரகுவின் அறையில் ராகவனுக்கு நிலத்திலேயே படுக்க இடம் கிடைத்தது. அந்த அறை ஒன்றும் பெரிய மாளிகை இல்லை. அந்த அறைக்குள்ளேயே குசினி இருந்தது. ஒரு காஸ் குக்கர், ஒரு பானை, ரெண்டு பெரிய சட்டிகள், தேத்தண்ணி போட ஒரு லெக்ரிக் கேத்தில், இவ்வளவும் தான் அந்த குசினியின் அசையாச் சொத்துக்கள். அறையின் ஓரத்தில் சின்ன மறைப்பு போட்டு ரொய்லெட் பிளஸ்  நிண்டு குளிக்கிற அறை இருந்தது. அந்த  ரொய்லெட்டில் யாரும் விட்டுவீதியாக ரொய்லெட் போக முடியாது. எட்டுப் பெடியளுக்கு முன்னால் அவதானமாகத்தான் போகவேண்டும். அனால் ராகவனுக்கு விட்டு வீதியாகத்தான்  ரொய்லெட் போகவேண்டும். ஆரம்பத்தில் அவனுக்கு பெரிய வெக்கமாக  இருந்தது.அறையில் சோறும் ஒரு இறைச்சிகறியும் ஒரு மரக்கறியும் தான் சாப்பாடு. இதை ரேர்ண் வைத்து அவர்கள்  சமைத்தார்கள். சோறு முடிந்தால் சோறை முடித்தவர் ரைஸ்குக்கறில் போடவேண்டும். விடுமுறை நாள்களில் இரவில் புட்டு அல்லது றொட்டி சமைக்கப்படும். இதுதான் குணாவின் அறை ரொட்டீன் ஆக இருந்தது .

பாரீசுக்கு  வந்த புதிதில் இருந்த பயமும் குழப்பமும் இப்பொழுது அவனுக்கு இல்லாமல் போய் விட்டது. பாரிஸின் பரிசுகெட்ட சீவியத்துக்கு அவன் அவனை பழகிக்கொண்டான். அவனின் அறை நண்பனான  ரகுதான் ஒருமுறை அவனை ஒப்றாவுக்கு வழக்கு எழுத தனக்கு தெரிஞ்ச மாசிலாமணியிடம்  கூட்டிக்கொண்டு போனான்  மாசிலாமணி அப்புக்காத்துக்கு மேல் அப்புக்காத்தாய் இருந்தார். புலிக்கும் அவருக்கும் ஜென்மத்து சனி போல் கிடந்தது. புலியை வைச்சு கேஸ் எழுதினால் தான் வழக்கு நிக்கும் எண்டு ஒரு தேற்றத்தை போட்டார். அதோடை தான் எழுதிறதுக்கு பக்கத்துக்கு 30 யூறோ தரவேணும் எண்டும் சொன்னார். ராகவனுக்கு மாசிலாமணியரின்  கதையும் எடுப்பு சாய்ப்பும் துண்டாக பிடிக்கவில்லை யோசிச்சு சொல்லுறதாக சொல்லிவிட்டு வந்துவிட்டான். இப்பிடி ராகவன் செய்தது ரகுவுக்கு சின்ன கடுப்பு இருந்தது ஏனெனில் அவனுக்கும் மாசிலாமணியருக்கும் ஓர் சின்ன டீல் இருந்தது. ராகவன் ஒப்றாவுக்கு தானே ஆங்கிலத்தில் தனது அகதி அந்தஸ்துக்  கோரிக்கையை எழுதி அனுப்பினான். ராகவன் தனது வழக்கை எழுதி அனுப்பிய நேரம்  பிரான்சின் தொண்டர் நிறுவனமான அக்சன் பாம் ஊழியர்கள் ஓர் எறிகணை தாக்குதலில் தாயகத்தில் உயிர் இழந்தார்கள். காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக உடனடியாக பிரான்ஸ் தனது நாட்டில் இருந்த கிட்டத்தட்ட ஆயிரம் தமிழ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்தை வழங்கி தான் பெரிய கருணை உள்ளம் கொண்டவன் என்று உலகத்துக்கு காட்டியது. இதனால் ராகவனுக்கு அவனது தபால் பெட்டியில் நிரந்தர வதிவிட உரிமை காட் வந்து விழுந்தது. ராகவனோ தனது ஆங்கிலப்புலமையால் தான் தனக்கு காட் கிடைத்தது என்று தனக்குத்தானே சுயஇன்பம் கண்டுகொண்டான். ராகவன் காட் கிடைத்த சந்தோசத்தில் பாரிஸின் புறநகர் பகுதி ஒன்றிற்குப் போய் அங்கு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ரெண்டு கோழிகளை பிடித்து அடித்து அறை நண்பர்களுக்கு விருந்து வைத்தான்.

அவனுக்கு கார்ட் கிடைத்தாலும் ஒழுங்கான வேலைகள் கிடைக்கவில்லை. முதலில் சிறிய விளம்பர பேப்பர்கள் போடும் வேலை செய்தான். அவன் வேலை செய்த முதலாளி சொல்லாமல் கொள்ளாமல் கொம்பனியை இழுத்து மூடிவிட்டு ஓடியதால் அவனை ஓர் சீன உணவகம் தத்து எடுத்தது. அந்த உணவகத்தின் உரிமையாளர் ஜோன் மிஷேல், பிரான்ஸின் தெற்கு மூலையில் இருக்கும் பஸ்ரியா தீவின்  வடகோடியில் இருக்கும் செயிண்ட் பஃளோரண்ட்  (Saint-Florent ) கடற்கரையோரக் கிராமத்தை சேர்ந்தவர். அவரது மனைவி ஆன் மேரி வியட்நாமை சேர்ந்தவள். அவர்கள் பிரான்ஸின்  கிராமப்பக்கத்தை சேர்ந்தவர்கள் ஆகையால் பாரிஸின் நகரத்து பழக்கவழக்கங்கள் அவர்களிடம் ஒட்டவில்லை. ராகவனை தமது குடும்பத்தில் ஒருவனைப்போலவே பார்த்துக்கொண்டார்கள்.  அந்த உணவகத்தில்   ஒரு வியட்நாமியன் ஷெஃப் ஆக  இருந்தான். இவன் வியட் நாமியனுக்கு எடுபிடியாக இருந்தான்.

அந்த உணவகம் நாற்பது இருக்கைகளைக் கொண்டது.  ராகவனுக்கு ஒன்றைரை நாள் லீவுடன் தினமும் இரண்டு நேர வேலை. காலையில் "ரெஸ்ரோரண்ட்" க்கு வந்தால் ராகவனுக்கு, காலையில் வந்த சலாட்டுகளை தண்ணியில் கழுவவேண்டும். ஐஸ் பெட்டிகளில் வந்த மீனுகள் எல்லாத்தையும் செதில் இல்லாமல் செய்து தலை வெட்டி கிளீன் பண்ணி வைக்கவேண்டும். புரூட் சலாட் செய்யவேண்டும். வெங்காயம் உரிக்க வேண்டும். உருளைக்கிளங்கு சீவி கொடுக்க வேண்டும். றால்கள் கோது உடைத்து வைக்கவேண்டும் என்று  தலை முட்டிய  வேலைகள் இருக்கும். இவை எல்லாம் முடிய மத்தியானம் பன்னிரண்டு மணியாகி விடும். பின்னர் இரண்டு மணிவரை சேர்விஸ் நடக்கும். அப்பொழுது ராகவன் காலில் நாலு சில்லு பூட்டி கொண்டு நிற்பான். இரவும் இதே கதைதான். வேலை முடிந்து சாமம் பன்னிரண்டு மணிக்கு அறைக்குப் போகும் பொழுது ராகவன் எலும்புகள் எல்லாம் கழண்டுதான் போவான். மூவர் செய்கின்ற வேலையை ஒருவன் செய்வதால் வந்த வினை இது . ஆனால் ஜோன் மிஷேலின் பண்பாலும் நல்ல சம்பளத்தாலும் ராகவன் இவைகளை எல்லாம் தாங்கித் தரிக்க வேண்டியதாகி விட்டது.

***************************************

ராகவன் பாரிஸ் வந்து இரண்டு குளிர் காலங்களைக் கண்டபொழுது கோண்டாவிலில் மாதுமைக்கு நான்கு வயது முடிந்து விட்டிருந்தது. அவள் ராகவனை படத்திலேயே கண்டு அப்பா என்று கூப்பிட்டாள். ஒருநாள்  கோண்டாவில் நெட்டிலிப்பாய் ஏரியா பலாலி றோட்டில் நடந்த தொடர் தாக்குதலால் அல்லோலகல்லோலப்பட்டது. கிபீர் கனதரம் குத்தி எழும்பியது. மகேஸ்வரியும் மாதுமையும் பங்கருக்குள் பாய்ந்தாலும், கன சனத்துக்கு கண் மூடிமுழிக்க முதல் செல் சிதறல்கள் பாய்ந்து பரலோகம் அனுப்பின. .பங்கருக்குள் இருந்த மகேஸ்வரியை மாதுமை கட்டிப்பிடித்திருந்தாலும் நன்றாக பயந்து போய் விட்டிருந்தாள்.அவளின் சின்ன கண்கள் பிதுங்கி வெளியே வரும் போல இருந்தன. சத்தங்கள் எல்லாம் ஓய்ந்த பின்னர் மகேஸ்வரி மாதுமையுடன் பங்கரை விட்டு  வெளியே வந்தாள் .பங்கரை சுற்றி  சில மீற்றருக்கு அப்பால் உள்ள இடங்கள் எல்லாமே மனித சிதறல்களாக இருந்தன. . மகேஸ்வரிக்கு தலை சுற்றியது. . இவைகளைப் பார்த்தகணமே மாதுமை வீரிட்டு அழுதாள். மகேஸ்வரி அவள் தலையை வேறுபக்கம் திருப்பியவாறே வீட்டுப்பக்கம் ஓடினாள். வீட்டு ஹோலின் நடுப்பக்கத்தில் செல் கோறி எடுத்து இருந்தது. சிவரெல்லாம் பாளம் பாளமாக வெடித்து இருந்தது. அந்தநாளில் இருந்து அவளின் மனம், மாதுமையும் தானும் எப்படிப்பட்டாவது ராகவனிடம் போய் சேர்ந்து விடவேண்டும் என்று முடிவு கட்டியது.

ஒவ்வரு வருட ஜூலை மாதத்து இறுதிக்கிழமையில் இருந்து ஜோன் மிஷேல் என்னதான் தலைபோகின்ற வியாபாரம் இருந்தாலும் அதை மூட்டை கட்டிவைத்து விட்டுக் கோடைகால விடுமுறையைக் கழிக்க தனது சொந்தக்கிராமமான செயிண்ட் பஃளோரண்ட் கிராமத்துக்கு அவர் மனைவி ஆன் மேரியுடன் சென்று விடுவது வழக்கம். அப்பொழுது உணவகத்தில் வேலைசெய்யும் எல்லோருக்குமே விடுமுறைதான். இப்படியான ஒரு ஜூலை மாதத்து அதிகாலையில் ராகவனின் நித்திரைக்கு உலை வைத்தது மகேஸ்வரியின் தொலைபேசி அழைப்பு .எடுத்த எடுப்பிலேயே மகேஸ்வரி அழத்தொடங்கி விட்டாள் .ராகவனுக்கு இருண்டது விடிஞ்சது தெரியவில்லை. அவளது அழுகையை அடக்கி என்ன விடயம் என்று அறிய அவன் அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருந்தது .ஒருவாறு மகேஸ்வரி நடந்த கதையெல்லாம் சொன்னாள் .தன்னையும் மாதுமையையும் எப்பிடியாவது கூப்பிடச்சொன்னாள். ராகவனுக்கு தலை சுற்றியது. ஒருபக்கம் மாதுமையின் எதிர்காலம். மறுபக்கம் ராகவன் இப்பொழுதான் நிமிர தொடங்கி இருக்கின்றான். அவனால் மகேஸ்வரியின் கண்ணீரையும் மீற முடியவில்லை. ஒருமாதத்திற்குள் தான் கூப்பிடுவதாக அவளுக்கு சொல்லி விட்டு போனை வைத்தான்.

ராகவனுக்கு வருடாந்த விடுமுறை முடிந்து மீண்டும் வேலை தொடங்கி விட்டது . வேலைக்கு வந்த ராகவன் மிகவும் குழம்பிப் போய் இருந்தான். அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் அவனையறியாது பல தவறுகளை விட ஆரம்பித்தான். தூரத்தே இவைகளை அவதானித்த ஜோன் மிஷேலின் மனம்," இவனுக்கு என்ன நடந்தது ?" என்று எண்ணிக்கொண்டது.  இதை வளரவிடாது அவனிடம் பேசவேண்டும் என்று அவர் எண்ணிக்கொண்டார். அன்று வேலை முடிந்து ராகவன் குசினியை விட்டு வெளியே வரும் பொழுது ஜோன் மிஷேலின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது. அவனை தன்முன்னால் மேசையில்  இருக்கப்பண்ணிய ஜோன் மிஷேல், தனக்கு ஓர் பியரும், அவனுக்கு கபே எகஸ்பிறாசோவும் எடுத்துக்கொண்டு வந்து மேசையில் இருந்தார். ஆன் மேரியும் ஓர் தேநீரை எடுத்துக்கொண்டு அவருடன் இருந்தாள். ராகவன் என்னவோ ஏதோ என்று பயத்தில் குளிர்ந்து போய் இருந்தான். எடுத்த எடுப்பிலேயே ஜோன் மிஷேல், "உனக்கு என்ன நடந்தது ? நீ முன்பு போல் வேலை செய்கின்றாய் இல்லை. எதுவானாலும் என்னிடம் சொல்லு" என்று ராகவனைப் பார்த்துக் கேட்டார். அவனுக்கும் தனது மனப்பாரங்களை இறக்க ஓர் வடிகால் தேவைப்பட்டது. அவனும் மகேஸ்வரிக்கும், மாதுமைக்கும் நடந்த கதைகளை சொன்னான். இதனால் தான் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக தன்னிடம் கூப்பிட இருப்பதாக சொன்னான். அவனின் கதைகளை கேட்ட ஜோன் மிஷேல், "கவலைப்படாதே .ஏதாவது உதவிகள் வேண்டும் என்றால் என்னிடம் கேள்  நான் செய்கின்றேன்" என்று அவனது முதுகில் ஆதரவாகத் தட்டினார். அடுத்த நாள் காலை ராகவன் வேலைக்கு சென்ற பொழுது அவனிடம் ஆன் மேரி, மாதுமைக்கு ஊதா கலரில் பொப்பிக் கை வைத்த ஓர் சட்டையும், மிக்கி மௌவுஸ் படம் போட்ட ஓர் கைக்கடிகாரமும் கொடுத்து தான் தந்ததாக அவளுக்கு அனுப்பி விடச்சொன்னாள். ராகவனால் அழுகையை நிப்பாட்ட முடியவில்லை. 

குழப்பத்தில் இருந்த ராகவனை ரகு என்ன பிரச்சனையென்று நோண்டினான் . ராகவன் இருந்த குழப்ப மனநிலையில் எல்லாவற்றையும் ரகுவுக்கு சொன்னான். நாங்கள் எப்பவும் எமது பிரச்சனைகளை தொடர்ந்து காவும் வல்லமை இல்லாதவர்களாகத்தான் இருக்கின்றோம். உடனடியாக அதை வேறு ஒருவரின் தலையில் போட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் முனைப்பில் தான் இருக்கின்றோம். அதற்கு "மனப்பாரம் குறைகின்றது" என்று நொண்டி சமாதானம் சொல்லுகின்றோம். ஆனால் பிரச்சனை அப்படியேதான் எங்கள் மனதில் இருக்கின்றது. எங்கள் அந்தரங்கங்கள் தேவையில்லாது வேறு ஒருவருக்கு போகின்றதே என்று நாம் அறிவதில்லை. இப்படி செய்வதால் பலவேளை பிரச்சனைகளுக்கு தேவையில்லாத கிளைப்பிரச்சனைகள் வந்து சேர்வதை நாம் ஏனோ அறிவதில்லை. இதுபோலவே ராகவனின் செயலும் இருந்தது.
"மச்சான் உதுக்கே மண்டையை விடுறாய். உதெல்லாம் சிம்பிள் மாற்றார். நீ பொஃறின் மினிஸ்ரியாலை மகேஸ்வரியையும் மாதுமையையும்  கூப்பிட குறைச்சது ரெண்டு வரியம் போகும். அதுக்குள்ளை அங்கை அவை உயிரோடை இருப்பினமோ எண்டது தெரியாது. எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் ஆக்களை கூப்பிடிறவன் இருக்கிறான் கண்டியோ.ஆள் பேக்காய். ஒவ்வருமுறையும் புதுப்புது றூட்டாலை ஆக்களை கொண்டு வந்துவிடுவான். நாங்கள் நம்பி அவனை பிடிக்கலாம். முதல் அரைவாசி காசு குடுக்கவேணும். மிச்சம் அவை இங்கை வந்தால் பிறகு குடுக்கவேணும். உனக்கு ஒக்கே எண்டால் சொல்லு உடனை அவனோடை கதைப்பம்" என்று  ராகவனுக்கு புத்தி சொல்வதே ரகுவின் கடமையாக இப்பொழுது இருந்தது. ஏனெனில் மாசிலாமணியரில் இழந்த டீலை இந்த சந்தர்ப்பத்தில் ரகு இழக்க விரும்பவில்லை. குளம்பிய மனதில் இருந்த ராகவனுக்கு ரகு சொல்வதே சரி என்று பட்டது. தான் பிடித்த இருபதினாயிரம் யூறோ சீட்டை எடுத்து தனது குடும்பத்தைக் கூப்பிட முடிவு செய்தான். ஒருநாள் ரகுவுடன் சேர்ந்து ஏஜென்சியுடன் கதைத்தார்கள். ஏஜென்சிக்கு புதுறூட் போட வழிகிடைத்தது. ஒருமாதத்தில் அவனது குடும்பம் இங்கே நிற்பார்கள். என்று கற்பூரம் கொழுத்தி நூக்காத குறையாக ஏஜென்சி சொன்னான். 

**************************************

அல்ஜீரியாவின் வடமேற்கு மூலையில் இருந்த ஒறான் (Oran) மீன்பிடி கிராமத்தின்  மம்மல் பொழுதொன்றில் சிறியதும் இல்லாத பெரியதும் இல்லாத மீன்பிடி றோலர் ஒன்றில் முஸ்தபா, சுலைமான், இப்றாகிம் அபூபக்கர் ஆகியோர் அந்த றோலரை சரிபார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த றோலர் தாளக்கட்டு மாறாத கடல் அலைகழுக்கு நடனம் ஆடியவாறு மிதவைகள் போடப்பட்ட சீமந்து கரையுடன் முட்டுவதும் விலகுவதுமாக நடனம் ஆடிக்கொண்டு இருந்தது. முஸ்தபா றோலரின் தலமை ஓட்டியாக இருந்தான். சுலைமான் ரெக்னீசியனாக இருந்தான். அபூபக்கரும் இப்றாகீமும் உதவி ஓட்டிகளாக இருந்தார்கள். முஸ்தபா கொம்பாஸின் உதவியுடன் றோலர் போக இருக்கும் றூட்டைப் போட்டாலும் அவனது மனத்திரையில் வேறு றூட் ஒன்றும் ஓடிக்கொண்டிருந்தது. முஸ்தபாவின் கைகளுக்கு மத்தியதரைக்கடலின் சந்து பொந்துகள் எல்லாம்  அடிமையாக இருந்தது.  ரேடர்களுக்கும், கண்காணிப்பு படைகளுக்கும் முஸ்தபா கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவதில் வல்லவன். அந்த இறங்கு துறையின் வாயிலில் பஸ் ஒன்று ஐம்பது பேர் கொண்ட குழு ஒன்றை சத்தம் சந்தடியின்றி இறக்கி விட்டு நகர்ந்தது. அந்தக்குழுவில் ஈரானியர், சிரியர், பாக்கீஸ்தானியர் பங்களாதேசியர் என்று பல நாட்டவர்களுடன் மகேஸ்வரியும் மாதுமையும் இருந்தார்கள் . மாதுமைக்கு புதிய இடம் கடல் எல்லாம் சேர்த்து மிகவும் குஷியாக இருந்தாள். அவள் மகேஸ்வரியின் சொல்லுகேட்காமல் அங்கும் இங்குமாக பறந்து திரிந்தாள். மகேஸ்வரிக்கு மாதுமையை கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இப்படி குழப்படி செய்கின்ற மாதுமையுடன் எப்படி இந்த கப்பலில் இத்தாலிக்கு போகமுடியும்? என்பதே அவளின் கவலையாக இருந்தது. கொழும்பில் இருந்து ஏஜென்சி எயார்ப்போர்ட் செற்றிங் செய்து பிரச்சனை இல்லாமல் அல்ஜீரியாவுக்கு வந்து சேர்ந்தது நெட்டிலிப்பாய் பிள்ளையாரின் கருணை என்றே அவள் நம்பினாள். தொடர் பயணத்தினால் அவள் மெலிந்து போய் இருந்தாள். மகேஸ்வரி மாதுமையை கண்ணுக்குள் எண்ணை விட்டு சாப்பாட்டு விடயத்தில்  பார்த்துக்கொண்டாலும் மாதுமைக்கு அப்பாவை எப்பொழுது தான் பார்ப்பேன் என்ற கனவே இருந்தது .இதனால் அவள் சாப்பாடு சரியாக சாப்பிடாது சோர்ந்து போய் இருந்தாலும் அவளின் துடியாட்டம் குறைந்தபாடில்லை.

அபூபக்கர் அவர்களை நோக்கி வந்து றோலரில் அவர்களை ஏறுமாறு சொன்னான் .இடம் பிடிப்பதில் எல்லா நாட்டவர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்கள் எல்லோருமே றோலரில் ஏறுவதற்குத்  தள்ளுமுள்ளுப்பட்டார்கள். அபூபக்கர் அவர்களை பேசி ஒழுங்கு படுத்தினான். இயலாதவர்களையும் பெண்கள் பிள்ளைகளையும் முதலில் ஏறவிட்டான். கப்பலில் ஏற கஸ்ரப்பட்ட மகேஸ்வரியை தூக்கி ஏற்றிவிட்டு, மாதுமையை தூக்கி அவளை கொஞ்சியவாறே அவளிடம் கொடுத்தான். முதன்முதலில் ஓர் அந்நியனின் கை தன்மேல் படுவது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் பயணங்களில் இதெல்லாம் பாக்க முடியாது என்று அவள் தனது மனதை தேற்றிக்கொண்டாள். எல்லோரும் ஏறி முடிய றோலர் தனது நிலையில் இருந்து சிறிது கடலுக்குள் தாண்டது. அப்பொழுது கடல் பகுதி நன்றாக இருண்டு இரவு பதினோரு மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. இரண்டு எஞ்சின்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்த சுலைமான் தனது பக்கம் சரி என்று முஸ்தபாவுக்கு வோக்கியினால் அறிவித்தான். கடல் நடமாட்டங்களை அவதானித்த அபூபக்கரும் இப்றாகீமும் ரூட் கிளியர் என்று சொன்னார்கள். "அல்லாஹு அக்பர்............"  என்றவாறே முஸ்தபா றோலரின் என்ஜினை ஸ்ராட் பண்ணினான் மற்றைய மூவரும் தரையில் விழுந்து தொழுதார்கள். அவர்களைப் பார்த்த மாதுமையும் எதோ விளையாட்டு என்று நினைத்து விட்டு அவர்களைப்போல தொழுது கைகளை விரித்தவாறு முழங்காலில் இருந்தாள். எதோச்சையாக திரும்பிய சுலைமான் மாதுமையின் செயலைப் பார்த்து சிரித்தான் .றோலர் ஒறான் (Oran) இறங்குதுறையில் இருந்து வடகிழக்குப் பக்கமாக இத்தாலியின் மர்சலா (Marsala) மீன்பிடி கிராமத்தை இலக்கு வைத்து மெதுவாக நகரத்தொடங்கியது. ஒறான் (Oran ) இறங்கு துறையை விட்டு வெளியே வந்த ரோலர் வேகமெடுத்தது. தூரத்தே ஒறான் மெல்லிய வெளிச்சப் பொட்டுகளுடன் (Oran) மெதுமெதுவாக மறைந்து கொண்டு வந்தது.

அன்று  கருநீலக்கடல் அமைதியாகவே காணப்பட்டது. மேலே வானம் குழப்பங்கள் இன்றி துடைத்து விட்டால் போல் இருந்தது. தென் மேற்குபக்கமாக கடலில் இருந்து தெளிந்த வானத்தின் நட்சத்திரப்படுக்கைகளுக்கு இடையில் முழு நிலவு எழுந்து கொண்டிருந்தது, முஸ்தபாவின் மனதில் அல்லா தன்பக்கமே இருக்கின்றார் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. றோலரின் அணியத்தில் அபூபக்கர் நின்று கொண்டு கடலைத் தன கண்களால் துளாவிக்கொண்டிருந்தான். எஞ்சின் அறைக்கு கிட்டவாக சுலைமான் நின்று கொண்டான். பின்பக்கமாக இப்றாகிம் நின்று கொண்டான். இந்த கடல் இருக்கின்றதே தரையைவிட பல விசித்திரங்களை தனது வயிற்றில் வைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாக அதன் மேலே ஊரும் மனிதர்களுக்கு நடித்துக்கொண்டிருக்கும். எப்பொழுது தனது மறுபக்கத்தைக் காட்டும் ? என்று எந்தப்பெரிய விண்ணாதி விண்ணனான கடலோடியினாலும் கண்டு பிடிக்க முடியாத அற்புதமான சுரங்கம். இதனால் தானோ கடலை எமது இலக்கியங்கள் பெண்ணுடன் ஒப்பிட்டார்கள் ? ஒருபக்கம் மனிதனை வாழ வைத்துக்கொண்டு மறுபக்கம் அவனை பழிவாங்கும் சாகசக்காரிதான் இந்தக்கடல். சிலவேளை அதன் கொடிய நாக்குகள் கரைகளில் தன்பாட்டில் இருந்த மனிதர்களையும் விட்டுவைத்ததில்லை. ஒன்றும் மிச்சம் விடாது அப்படியே வாரி அள்ளித் தன் வயிற்றுக்குள் போட்டுக்கொளும்.

கடலுக்குள் அகன்ற வட்டவடிவான நிலாவைக் கண்ட மாதுமை றோலருக்குள் ஓடித்திரிந்தாள். சிறிது நேரத்துக்குள்ளாகவே அவள் எல்லோரது கவனத்தையும் பெற்றுவிட்டாள். றோலரின் பின்பக்கமாக டொல்பின்கள் நீச்சல் அடித்துக் கொண்டு வந்தன. நிலாவைக் கண்ட சந்தோசத்தில் அவையும் குஷியாகி கடலுக்குள் டைவ் அடித்துக்கொண்டிருந்தன. அவைகள்  டைவ் அடிக்கும் பொழுது அவற்றின் தோல்கள் நிலாவொளியில் மின்னின. டொல்பின்களை கண்ட மாதுமைக்கு தலைகால் தெரியவில்லை. ராகவனின் நினைவுகளில் மூழ்கியிருந்த மகேஸ்வரியை கூட்டி வந்து டொல்பின்களைக் காட்டினாள். ஆரம்பத்தில் மாதுமைக்காக அவைகளைப் பார்த்த மகேஸ்வரி இறுதியில் அவைகளின் கீ.......கீ ....... என்ற ஒலிகளாலும், அவற்றின் வரிசைக்கிரமமான நீச்சலாலும்  கவரப்பட்டாள்.

அவர்களுக்கு எல்லாமே சரியாக ஒத்துழைத்து. முஸ்தபாவின் வழிகாட்டலில் றோலர் இத்தாலியின் மர்சலா (Marsala) நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. தூரத்தே மேற்குத்திசையில் விடிவெள்ளி முளைத்து இருந்தது. அண்ணளவாக நேரம் அதிகாலை நான்கு மணியாக இருந்தது. றோலரில் இருந்த முக்கால்வாசிப்பேர் தூக்கத்தில் இருந்தார்கள். மாதுமை மகேஸ்வரியின் மடியில் ஓடிக்களைத்து படுத்திருந்தாள். மகேஸ்வரி கோழித்தூக்கத்தில் இருந்தாள். அலுத்துக் களைத்த முஸ்தபா அபூபக்கரிடம் பொறுப்பை கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் படுக்க கீழ்தளத்துக்கு வந்தான்.
சத்தம் சந்தடியில்லாது தென்மேற்கு மூலையில் செயிண்ட் புளோறண்ட்  பகுதிக்கு அருகே மெடிற்ரிறேனியன் கடற்பகுதியில் தாழமுக்கம் ஒன்று உருவாகி ஒறா பக்கமாக நகர்ந்து கொண்டிருந்தது. தெளிவாக இருந்த வானம் கருமை படரத்தொடங்கியது. இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த கடல் தனது அடுத்த பக்கத்தை காட்டத்தொடங்கியது. புயல் வேகமாக நகரத்தொடங்கியது. அலைகள் எம்பித்தாழ்ந்தன. சிறிதுநேரத்தில் மழைத்துளிகள் வேகமாக கடலைத் தொடத்தொடங்கின. இந்த கூத்துகள் நடந்தது தெரியாமல் றோலர் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. தூரத்தே மின்னலொன்று வெட்டி கிழித்து கடலுக்குள் இறங்கியது. அபூபக்கர் மின்னலைக் கண்டவுடன் றேடரில் றோலரின் நிலையை பார்த்தான். றோலர் மர்சலாவுக்கு 50 கடல் மைல் தூரத்தில் நின்றது. மீண்டும் வெட்டிக்கிழித்த மின்னலில் டொர்னாடோ ஒன்று வருவதை அவதானித்தான். சுலைமான், இப்ராகிம் அபூபக்கருக்கு கிட்ட வந்து விட்டார்கள். சுலைமானின் பேரனார் கடல் பிசாசு பற்றி செவிவழி கதைகளை அவனுக்கு சொல்லியிருக்கின்றார். இது கடல் பிசாசாக இருக்குமோ என்று சுலைமான் சந்தேகப்பட்டான். கடல் கொந்தளித்து அலைகள் தூக்கி அடித்தன. றோலரின் முன்பக்கத்தை அலைகள் முத்தமிட்டன. தண்ணீர் எங்கும் பரவி மீண்டும் கீழே கடலுக்குள் வடிந்தது. இதனால் அபூபக்கருக்கு முன்னே என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருந்தது. அவன் ஓர் குத்துமதிப்பில் சுக்கானை  பிடித்துக்கொண்டிருந்தான். றோலருக்குள் இருந்த எல்லோரும் நித்திரையால் முழித்து விட்டார்கள். இருந்தால் போல் றோலரின் எஞ்சின் இயங்க மறுத்து அடம் பிடித்தது. சுலைமான் நின்ற என்ஜினை முழிக்கப் பண்ண போராடிக்கொண்டிருந்தான். காற்றிலே சிக்கிய றோலர் திசைமாறத் தொடங்கியது.

எல்லோரும் தங்கள் தங்கள் கடவுளை கும்பிடத்தொடங்கினார்கள். மாதுமை வீரிட்டு அழத்தொடங்கினாள். றோலரின் பயங்கர ஆட்டத்தால் நித்திரை குலைந்த முஸ்தபா அபூபக்கரிடம் ஓடி வந்தான். அவனிடம் சுக்கானை வாங்கி றோலரை சரியான பாதைக்கு திருப்ப தொடங்கிய பொழுது சுக்கான் பெல்ட் அறுந்து போனது. அலைகள் றோலரை தூக்கித் தூக்கிப் போட்டன. றோலரை சுற்றி எங்கும் இருள் அப்பியிருந்தது. அதன் அருகே எங்கும் கப்பல்கள் வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. சுலைமான் வெளிச்ச வெடிகளை நாலுபக்கமும் கொழுத்தி எறிந்தான். முஸ்தபாவுக்கு நம்பிக்கையின் ஒளி குறையத்தொடங்கியது. அதை மற்றையவர்களுக்கு வெளிக்காட்டாது அவனது மூளை வேலைசெய்து கொண்டிருந்தது. றோலர் காற்றின் வேகத்தில் திசைமாறி செயிண்ட் புளோரண்ட் பக்கமாக நகரத்தொடங்கியது. திடீரென்று வந்த பெரிய அலையொன்று றோலரை உயரத்தூக்கி ஆழ்கடலின் கீழே நீட்டிக்கொண்டிருந்த இருந்த பாறை ஒன்றில் இறக்கியது. பாறை றோலரின் நடுப்பகுதியை சரியாக உடைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீர் பரவி றோலரின் முன்பக்கம் நீருக்குள் போகத்தொடங்கியது.

சிறிது நேரத்துக்குள் றோலரை கடல் முழுவதும் எடுத்துக்கொண்டது. எல்லோரிடமும் கடைசிநிமிட போராட்டம் இருந்தது. மகேஸ்வரி மாதுமையை ஒருகையால் பிடித்துக்கொண்டு கடலினுள் கால்களை அடித்தாள். குளிர் தண்ணியில் அவள் உடல் விறைக்கத்தொடங்கியது. அவளின் கண்களில் ராகவனின் முகமே வந்து போனது. அலையின் வேகத்தில் மாதுமை அவளின் கைகளில் இருந்து விடுபட்டு அலைகளில் அள்ளுப்படத்தொடங்கினாள். இப்பொழுது வெளிச்சம் கடலில் வரத்தொடங்கி விட்டது. பயணப்பொதிகளும் உடைந்த றோலரின் பகுதிகளும்தான்  கடலில் மிதந்து கொண்டிருந்தன. அன்று மீன்களுக்கு கொழுத்த வேட்டையாக இருந்தது. செக்கல் பொழுதில் கடற்கரையோரமாக ஜோன் மிஷேலும் ,மேரி ஆன் உம் மீன்வாடையுடன் கூடிய காற்றை ஆழமாக உள்ளெழுத்து விட்டவாறு வேகநடையில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது ,தூரத்தில் ஓர் சினஞ்சிறிய உருவம் தலை குப்பற கடல் அலைகளின் தாலாட்டில் கரைக்கும் அலைக்கும் இடையில் போக்குக் கட்டிக்கொண்டு கிடந்தது. அதன் மேலே கடல் பறவைகள் அவல ஒலி எழுப்பி சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. அந்த சிறிய உருவத்தை அவர்கள் அண்மித்த பொழுது அதன் உடலில் ஊதா கலர் பொப்பிக் கை வைத்த சட்டையும் , கையில் மிக்கி படம் போட்ட கைக்கடிகாரமும் இருந்தது. கைக்கடிகாரம் ஆறு மணியுடன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது .

யாவும் உண்மைகலந்த கற்பனை.

பிற்குறிப்பு :

ஒப்றா : அகதிகள் தஞ்சக் கோரிக்கையை விசாரணை செய்யும் நீதிமன்றம்.

ஜீவநதி 30 கார்த்திகை 2015 (இலங்கை)

http://koomagan.blogspot.fr/2015/12/blog-post_11.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.