Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிரை – கருவுற்ற பெண் நாவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
hkhk.jpg
 
 
முன் குறிப்புக்கள் 01
 
நாடுகடத்தப்பட்ட ஆரிய குழுமத்தினரான  விஜயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் இலங்கைக்கு வந்தபோது , இலங்கையில் இயக்கர் நாகர் முதலான தொல்குடிகள்  செழித்த இலங்கை நிலத்தில் வாழ்ந்துகொண்இருந்தனர். ஸ்பானியர்களும் பிரிடிஷ்காரர்களும் அமெரிக்க கண்டங்களின் தொல்குடிகளை  வலுக்குன்றச்செய்து தங்களுடைய குடியேற்றங்களை நிறுவ அவர்களிடம் ஆயுதங்களும் நரித்தந்திரமும் இருந்தன. நேரடியான போர் மூலம் அவர்களால் அது சாத்தியமானது .ஆனால் விஜயனுக்கு அது சாத்தியமில்லை. மிலேச்சத்தனம் காரணமாக நாடுகடத்தப்பட அவர்களிடம் வெறும் எழுநூறுபேரே காணப்பட்டனர். அவர்களால் நேரடியாக போர்செய்து இலங்கையில் ஒரு குடியேற்றத்தை பெறமுடியாது. 
 
 
download.jpgஎனவே விஜயன்  இலங்கையில் கண்ணுற்ற முதல் பெண்ணான குவேனியை வஞ்சித்து திருமணம் செய்தபின் மிக இலகுவாக இலங்கயின் ஆட்சியை தனக்கு கீழ் கொண்டுவந்தான். தேசத்தை கைக்கொள்ளதக்க பெண்களை அக்கால ஆதிக்குடிப்பெண்கள் கொண்டிருந்தனர். தாய்வழிச்சமூகத்தின் இருப்பு இலங்கையின்   வரலாற்று ஓட்டத்தில் அங்காங்கே முக்கியம் பெறுகின்றது. குறிப்பாக தென்னாசிய பெண்கள் ஐரோப்பியர் காலம் வரை (கி.பி 16 நூற்றாண்டு) தம் தாய்வழி சமூக உரித்தை ஆணுக்கு நிகராக பேணிவந்ததை இவ்வாறான வரலாற்று இடங்களின் மூலம்  அறிந்துகொள்ள முடிகின்றது.

 

                                    (2012 எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து)
 
 
 
 
 
 
 
முன்குறிப்பு  02
30 வருடகால இனப்போர் ஆயிரக்கணக்கான போய்களாலும் உண்மைகளாலும் விளங்கிக்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நிலத்தில் இருந்து பார்க்கும் ஒவ்வொரு தனிமனிடனுக்கும் போர் பற்றி வெவ்வேறான கருத்தாக்கங்கள் மனதினுள்ளும் அறிவினுள்ளும் கருக்கொண்ருக்கும். உண்மையின் அல்லது உண்மையின்மையின் இருப்பென்பது  நிலையற்ற ஓர்  மாறிலி என்றே கருகின்றேன் .

 

 
30 வருடமும்  ஒரு பெரும் கால மேடையில்  பொரும் போர் சார்ந்தவிடயங்களும் ஓர் நாடகத்தைப்போல நிகழ்த்தப்பட்டன.  நிகழ்த்துபவர்கள் தவிர ஏனையவர்கள் மேடையை சுற்றி வாழ்ந்தனர்.

 

 
(போரும் அதன் குழந்தையொன்றும் – கட்டுரையின் நறுக்கு)

 

 
ஆதிரை -01 சமூக அமைப்பினை முன் வைத்து.

காலணித்துவம் தென்னாசியாவின் பெண்மனத்தை ஆணின் பார்வையின் ஊடாக சிந்திக்கும் உணரும் ஓர் சார்பு நிலையினதாக பூரணமாக மாற்றிப்போட்டது,  குடும்பத்தில் தொடங்கும் சமூக கட்டுமானம் பெண்ணை ஆணின் சார்பானவளாக  மாற்றியது. தாய்வழிச்சமூக அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெண் நனவிலி மனம் ஆண்சார்பினை ஏற்றுக்கொண்டது ஆண் அதிகாரத்தின் சின்னமானான் , ஆண்மனம் புறவயமான சுதந்திரமான சிந்தனை, மிக்கதாய் மாறிக்கொண்டது , பெண் அகத்தினுள்ளே வாழ்ந்தாள் அவளுடைய உச்ச பட்சமான கரிசனை தன்னுடைய குடும்பம் பற்றியதும் , சுதந்திரமான ஆணை பெற்றேடுப்பதும் வளர்ப்பதும் பற்றியதுமாகவே இருந்தது. விவசாய முதலானவற்றை கண்டறிந்தவளும்  மிகப்பெரும் நிலத்தலைவியாக  இருந்த  தென்னாசிய  பெண்மனம் காலணித்துவத்தின் பின்னர் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டது , ஆதிப்பெண்ணின் உயர் தன்மை இறுதியாக தென்னாசிய குறிப்பாக இந்திய நிலத்திலேயே   எச்சங்களை கொண்டு நின்றது , உதாரணமாக இந்திய பெண் தெய்வங்கள் பற்றிய தொன்மங்களை பழைய  தாய்வழி சமூகத்தின் எச்சங்கள் எனலாம். இது இந்திய பண்பாட்டின் மிக செறிவான தாக்கத்தைகொண்ட இலங்கை நிலத்திற்கும் பொருந்தும்.

 

இலங்கையின் பெண் சமூக அமைப்பு என்பது பின் காலணித்துவத்தின் பின்னரும் இந்திய அளவில் ஆண்பார்வைக்குள் மறைந்து விடவில்லை என்றே கருதுகின்றேன். இலங்கை சமூக அமைப்பில் அதிலும் இலங்கை தமிழ்ச்சமூக அமைப்பில் பெண்கள் அகவயமான வாழ்வியலை மேற்கொண்டாலும் சமூக அமைப்பின் பெரும் தூண்களாகவே  ஆண்மனத்தினால் கருதப்படுகின்றது. குறிப்பாக  70 களின் பின்னர் எழுந்த விடுதலைப்போராட்டமும்  முரண்பாட்டுக்குள்ளே தினம் ஜீவித்த வாழ்க்கையும் குடும்பத்தலைவியும் ஆணுக்கு சமனாக இயங்க வேண்டிய கடப்பாட்டை உள்ளேற்றியது.

 

 
 
இதன் அடிப்படையிலேயே சயந்தன் ஆதிரையை  பெண் மனத்தில் அதிகம் காலூன்றி நின்று எழுதமுனைந்திருக்கிறார். நாவல் முழுவதும் எழும் போரின் , போராட்டத்தின்  பின்னணியில் இயங்கும்  குடும்பங்களினதும்  அவற்றின் தலைமுறைகளினதும் மாளாசோகமும் , கொண்டாட்டமும் இத்திமரத்துகாரி (காளி )யில் தொடங்கி ஆதிரை வரை பரந்து புரையோடுகின்றது. நாவல் முழுவதும் பெண்களிடமே காலம் இருக்கிறது , நாவலாசிரியரின் பிரதியை பெண்களே எழுதுகின்றனர்  மலையில் தொடங்கி காட்டில் இறங்கி குடாவில் திரும்பி  கடல் வரை பெண்களை தொடர்ந்தே எழுத்து செல்கின்றது.

 

 
நிற்க
 
நிலம் பற்றிய மூன்று குறிப்புக்கள்

 

 
மலை

 

 
சயந்தன் மலையகத்தில் கதையை தொடங்குகின்றார் , மலைய தமிழர்களின் வாழ்வின் பெருஞ்சோக் அத்தியாயங்கள் இன்ரு பரவலாக இலக்கிய மேடைக்கு எடுத்து வரப்பட்டாலும் இன்றும் அது “ஈழத்து இலக்கிய பரப்பில்” தனியான ஒன்றாக கருதப்படுகின்றது , இலங்கையின் 30 வருட போராட்டம் , அடக்கு முறை  , இனவாதம் என்பவற்றுக்கும்  மலையக மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாததை போலவும் அவர்களுடைய துன்பம் பிறிதானது என்பதும்   இலக்கியங்களின் பொது புத்தியாகவுள்ளது , ஆனால் இனப்பிரச்சினைக்கும் சரி மலையகமக்களின் பிரச்சினைக்கும் சரி அடக்குமுறையும் அரசும் தான் எதிர் தரப்பு என்பதே உண்மை . யாழ்ப்பாணத்தார் “தோட்டக்காட்டான்” “கள்ளத்தோணி” என்று  மோசமமான  சித்தரிப்பொன்றை அவர்கள் மீது வைத்திருக்கின்றார்கள் , குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மேட்டுக்குடி உயர் சைவ வேளாளர் என்று சொல்பவர்களின் நாவில் நான் பலமுறை இத்தகைய வார்த்தைகளை கண்டிருக்கின்றேன், வன்னிமக்களை காட்டார் என்பதும் (ஆனால் போரின் போது வன்னிக்கு ஓடி பதுங்கிகொண்டது நகை முரண்) மலையக மக்களை கள்ளதோணி என்பதும் யாழ்ப்பாண பொதுமனநிலையின் கறுப்பு பக்கங்கள் இதனை ஆசிரியர் தெளிவாக காட்டுகின்றார். யாழ்ப்பாண மக்கள்  பற்றிய எள்ளி நகையாடல் களில் ஆசிரியர் மிகதிறமாக இவற்றை முன் வைக்கின்றார்.
 
மலையக மக்கள் இலக்கியத்திலோ , அரசியலிலோ தனித்து விட வேண்டியவர்கள் அல்லர் , உரிமைகள் கோரப்படும் போது தமிழ்ப்பரப்பு அவர்களின் தோள்களையும்  ஏற்றுக்கொள்ள வேண்டியது  கடமையாகும் என்பது சயந்தனின் தீர்க்கமான நிலைப்பாடு.

 

இந்தியராணுவம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கமலையை கொடுமைப்படுத்தும் போது வலியின் உச்சத்தில் அவ

 

“ஐய்யா நானும் இந்தியாவிலிருந்து வந்தவன் தான் ” என்று கதறுகின்றான். இந்திய இராணுவம் அவன் தலையைகொய்து எடுத்துபோகின்றது.

 

 
இவ்வாறு .

 

 
காடு

 

கதை காட்டிற்கு இறங்கிய பின்னர் தான் உருக்கொண்டாடுகின்றது , போராட்டத்தின் பின்னணியில்   பெண்களும் ஆண்களும் வாழ்வியலை மாற்றியமைக்கின்றனர். தொழில்கள் மாறுகின்றன, உறவுமுறைகள்  புரழ்கின்றன. மூன்று தலைமுறைக்கும் வெவ்வேறேனான வாழ்க்கை முறை , இயற்கையில் இருந்து மக்களை போர் பிரிக்கின்றது , தெய்வநம்பிக்கைகள் , இத்திமரமாக  பாறிவிழுகின்றன , காட்டின் மகன்கள் சோபையிழந்துபோகின்றனர். காடு சமநிலையை இழக்கின்றது எனினும் மனிதர்களை அது கைவிடுவதாக இல்லை , மயில்குஞ்சன் , சங்கிலி போன்ற மனிதர்கள் விடுதலைக்காக போராடுபவர்களை காட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர், காட்டை அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.காடு அவர்களை எடுத்துக்கொள்கின்றது. காட்டின் விளிம்பில்  போர் தொடங்குகின்றது , இளவர்சர்களும் இளவரசிகளும் போருக்கும் போகின்றனர், அவர்களிம் காதல் இருக்கிறது , காமம் இருக்கிறது கூடவே ஓர்மமும் கோபமும் காலத்திற்காக வந்து சேர்கின்றன , காட்டின் விளிம்புகள் அவர்களை உள்ளே இழுத்துகொள்கின்றது அவர்கள் காட்டுக்குள் நுழைய விளிம்பில் இருந்த மக்கள் கொஞ்சம் அசுவாசம் அடைகின்றனர் , அவர்களை பாதுகாக்க காட்டுக்குள் இளவரசர்களும் இளவரசிகளும் இருக்கின்றனர் , அவர்கள் அரசர்களை நம்புகின்றார்கள். எல்லோரும் நம்புகின்றார்கள்.

 

இடையில் தாய்குலத்தின் கண்ணீர் எழுகின்றது.
 
குடா

 

 
விடுதலை போராட்டத்தின் ராஜாக்களின் நகராகவும் , சிறிய நீர்ப்பரப்பால் துண்டிக்கப்படும் நிலமான யாழ் குடாநாட்டின் மனநிலை உடைய மக்களை சயந்தன் நன்கு உள்வாங்குகின்றார் , சாதியமைப்பு , சொத்து சேர்த்தல் முதலான இடங்களில் யாழின் உண்மை முகங்கள் பலதும் வெளியே எடுக்கப்படுகின்றன. கதையின் பல இடங்களை திருப்பிவிடும் நிலமாக யாழ் வன்னியுடன் அவ்வப்போது இணைகின்றது.

 

 
 
கரை

 

 
கரையில் எல்லோரும் நம்பிக்கையுடன் ஒன்று கூடுகின்றார்கள் , இளவர்சர்களும் இளவரசிகளும் வஞ்சிக்கப்படுகின்றார்கள். போர் தாண்டவமாடுகின்றது , நம்பிக்கையெல்லாம் கடலில் கரைகின்றது , மாபெரும் கனவு உடைந்து நொறுங்குகின்றது, ஒரு இனம் அதன் நிலத்தில் வஞ்சிக்கப்படுகின்றது.  கரையெல்லாம் ரத்தம் .  போர் முடிந்த பின் அல்லது முடிந்ததாக சொல்லப்பட்ட பின் எல்லாம் ஓலத்தில் நிலைக்கின்றது.

 

ஆண்களின் ஓலம் பெண்களின் குரலில் மறைந்து போகின்றது.

 

இனி

 

 
 
ef.jpg

 

 

ஆதிரை நாவல் விமர்சனம் இங்கே தொடங்குகின்றது

 

.

 

முன்பு குறிப்பிட்டதைப்போல் ஆதிரை போருக்கு பின்னால் இயங்கும் மூன்று தலைமுறையின், தாய்களின் கண்ணீரை தாங்கிநிற்கின்றது , அழகியல் பூர்வமான படிமங்களை ஆதிரை பெரும்பாலும் வெற்றிகரமாக உருவாக்கின்றது . மொழியமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணத்தை சில இடங்களில் காணலாம்.

 

சயந்தன் உண்மையின் பக்கத்தில் குற்ற உணர்வோடு நிற்கப்பார்கின்றார் , பிரபாகரன் சொன்ன

 

இயற்கை எனது நண்பன் ,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்  வரலாறு எனது வழிகாட்டி , என்பவை ஆரம்ப அத்தியாயங்களின் பெயர்களாய் அமைக்கின்றார். அதனைப்போல் ஓயாத அலைகள்  வெற்றி நிச்சயம் என்று பெரும் போர்களங்களின் பெயர்களும் ,

 

 
இங்கே குற்றம் என்பது கூட்டு பொறுப்பும் கூட , நம்முடைய பிணங்களை மீள் பரிசோதனை செய்யவேண்டும்தான் ஆனால் தியாகங்களை கொச்சைபடுத்தல் என்பது அறமன்று.

 

உண்மையினதும் , அறத்தினதும் , அன்பினதும் , கருணையினதும் மற்றும் நீதியினதும் அருகில் சென்று நின்று கொள்ளள் மட்டுமே உத்தமானது.

 

 
ஓஷோ வாழ் நாள் பூராகவும் காந்தியை விமர்சித்தவர் ,ஏராளம் கடிதம் காந்திக்கு எழுதிதள்ளினார் , காந்தி உருவாக்க நினைக்கும் இராம ராஜ்ஜியம் மீது கேள்வி கேட்டார் , காட்டமாக விமர்சித்தார் , எதிர்பிலே வாழ்ந்தார். ஆனால் காந்தி இறந்ததும் ஓஷோ குலுங்கி குலுங்கி அழுதாராம் .

 

 
நிற்க

 

 
நாவலில் ஒரு இடத்தில்
 

 

“போன கிழமை சந்திரா டீச்சரிட்ட படிச்சதெண்டு சயந்தன் எண்டு ஒருத்தன் வந்தவன் கதையெழுதுறவனாம்  ரீச்சர் எப்பிடி செத்தவா ? நீங்கள் எந்த பாதையால  மாத்தளனுக்கு போனீங்கள்  , ? இயக்க பெடியள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் ? அவங்கள்ள இப்பவும்  கோவம் இருக்கோ  எண்டெல்லாம் கேட்டு தன்ர ரெலிபோன்ல ரக்கோட் செய்தவன் ”

 

“ஏனாம் ?”

 

“தெரியேல்ல  சனம் உத்தரிச்சு அலஞ்ச நேரம் கள்ளத்தோணியில வெளிநாட்டுக்கு போனவங்கள் இப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு எல்லாரும் வந்து விடுப்பு கேக்கிறாங்கள்”

 

 
என்று வரும் .

 

 
இப்பிடியான இடங்களிலும் அத்தார் , சிவராசன் முதலான பாத்திரங்களின் நிலையிலும் அப்பாத்திரங்களின் மொழிதலிலும்  அடிக்கடி ஆசிரியரின் மரணத்தையும் மனத்தையும் காணமுடிகின்றது.

 

 
 
போரின் பின்னர் நடக்கும் அத்தனை அத்தியாயங்களும் 2000 களின் குழந்தைகளாக எமக்கு  முன்னே நிகழ்ந்தவை  நிகழ்ந்துகொண்டிருப்பவை , கடைசி 70 பக்கங்களை கண்ணீருடன் கடக்க வேண்டியுள்ளது ,

 

விபூசிகா போன்று போரின் மிச்ச அவலங்கள் பெண்குரலெடுத்து காணாமல் போன உறவுகளுக்கு ரோட்டில் கிடந்து அழும் காட்சிகளை இப்போது தரிசித்துகொண்டிருகிறோம் . எல்லோர் வீட்டிலும் போரின் ஏதோ ஒரு மிச்சம் கிடந்து அழுத்துகின்றது ஆத்மாவிற்கு நெருக்கமாக சென்று நெருடுகின்றது .
இது செவ்வியல் இலக்கியமாக , மகத்தான நாவலா என்பதற்கு 508 பக்கத்தில் கசியத்தொடங்கும் கண்ணீர் 664 ஆம் பக்கத்தில் ஆதிரை சயனைடை எடுக்கும் போது ஒரு நதியாக மாறிவிட்டதை மீறி நான் எதுவும் எழுதுதல் . சுயகொலையாகும்.

 

 
ஆதிரை  தமிழிலக்கிய பரப்பின் இன்னொரு பெரும் பாய்ச்சல் , தலைமுறைகளின் கொண்டாட்டம்  , இருப்பு , கண்ணீர் என்பவற்றின்  பிறிதொரு படியெடுப்பு.  இத்திமரக்காரி எனும் மிகப்பெரும் பெண் தொன்மத்தில் இருந்து ஆதிரைவரை ஒலிக்கும்  கூட்டு பெரும் பெண்குரல், ஆதிரை தனி ஒரு முழுமையான செய்தியை சொல்லு முடிக்கவில்லை , அது எச்சங்களை , அல்லது சூல்களை உருவாக்குகின்றது , ஆதிரை  ஒரு  கருவுற்ற பெண் நாவல் , இன்னும் பலதை உருவாக்கதக்க சூல்களை ஆதிரையெங்கும் காண்கின்றேன். இன்னும் ஆயிரக்கணக்கான உண்மைகள் இருக்கின்றன, நாம் மிகத்தொலைவிற்கு போகவில்லை கடந்தகாலம் மிக அருகில் கிடக்கின்றது , இன்னும் உத்தரித்து கிடக்கின்றது.  
 
வேதனையுறும் சமூகத்தின் அவலக்குரல் , கோபத்தின் சீற்றம் , அறத்தின் யுகக்கண்ணீர் , நீதியின் நெடுந்தாகம் ஆதிரையின் வழியே பெரும் சத்தமாய் , அவலக்குரலால் கோரப்படுகின்றது.

 

அதுவும் ஒரு பெரும் குரல் கூட்டம் பெண்குரலால் அழுத்தி ஒலிக்கின்றது ,

 

ஏன் ஆண்கள் யாரும் அவலத்தில் அழுவதில்லையா , அது கண்ணீரில்லையா?

 

ஆம் , ஆனால்

 

 
பெண்ணின் கண்ணீர் ஆத்மாவிற்கு மிக நெருக்கமானது .

 

 
-யதார்த்தன் -

 

 

Edited by கிருபன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதிரை விமர்சனக் குறிப்புக்கள்

 

தமிழ்கவி

 

ஆதிரை ஒரு காத்திரமான வரலாற்றைப் பதிவு செய்து கொண்டு நகர்கிறது.கடந்த காலம் நிகழ்காலம் எனபவற்றில் தீவிரமான போக்குக் காட்டி விரைகிறது தமிழர்களின் என்பதைவிட என்னுடைய ஆறிய புண்ணை மிக மோசமாக கீறிக் கிழித்துச் செல்கிறது. எதையெல்லாம் எமது சந்ததி மறக்கக் கூடாதோ அதையெல்லாம் கச்சிதமாகப் பதிவு செய்துவிட்டது. படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது தம்முடைய கதை என்பது புரியும் 1958ல் தொடங்குவதாக தொிந்தாலும் 1977ல் ஆரம்பிக்கிறது 2015வரை பரந்த ஒருகாலத்துடன் நிறைவடைகிறது. சிலபல குறிப்புகளுக்கு முன் இது மீண்டும் ஒரு முறிந்த பனை போலதோற்றமளிக்கிறது.அதனால்தான் பனையை அட்டையில் நட்டார்களோ அல்லது பனை இயல்பாகவே வந்து பொருந்தியதோ யானறியேன் . பாடுகளை தொங்கலிருந்து அனுபவித்தவள் என்பதால் என்னை கலக்கியடிக்க இதனால் முடியவில்லை எனினும் இது ஓர அவசியமான அவசரமான பதிவு ஆயிரம் அரசியல் பேச்சு வார்த்தைகளால் செய்ய முடியாததை.ஆதிரை செய்துவிடும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை . இதேகளத்தில் ஒதியமலைப் படுகொலைகளுடன் தொடங்கி ஓயாதஅலைகள் மூன்று வரை பதிவுசெய்யப்பட்ட“ உயிர்த்தெழுகை “நாடகம் நா. யோகேந்திர நாதன் எழுதியது புலிகளின் குரல் வானொலியில் தொடராக இரண்டுவருடங்களுக்குமேல் ஒலிபரப்பானது பாத்திரங்களின் பெயா்கள் வேறு சம்பவங்கள் ஒனறுதான் அந்த நாடகத்தில நான் ”குஞ்சாத்தை என்ற பாத்திரத்தில் நடித்து நடிகையாக வெளிப்பட்டேன். இந்த புத்தகம்பற்றி நிறையவெ எழுதவிரும்புகிறேன் சயந்தன் ஒரு அசகாயசூரன்தான்…

 

ஆதிரை வன்னிப்பிரதேச பெயர்களில்கவனம் செலுத்தவில்லை வன்னி மக்கள் தமக்கிடையே உறவு சொல்லி அழைக்கும் பழக்கமுள்ளவா்கள் .மச்சாள் அம்மான் குஞ்சியப்பு ஆசையம்மா எனறவாறு மலையகத்தமிழரகளின் உரையாடல்கள் காத்திரமாக அமைக்கப்படவில்லை அங்கே செல்லமணி மலையகத்துப் பெயரில்லை பாத்திரமும் சூழலில் ஒட்டவில்லை உரையாடல்களில் டிப்ரஷன் டிசைன்.போன்ற வார்த்தைகள்ஒட்டவிலலை என்பதுட ன் மக்கள் யுத்தகளத் தமிழிலேயே உரையாடுவதுண்டு கீசிட்டுது காத்துப்போட்டுது ரெக்கி மற்றும்பல….சமபவங்களின் கோர்வை மிக நேர்த்தியாக செல்வதால் இவற்றை களத்தை கண்காணாத தொலைவில் ரசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம் இறுதியுத்த காலத்தில் செம்மலை அளம்பில் குமுழமுனை ஓட்டிசுட்டான் பேதான்ற இடங்களும் கிளிநொச்சியும் சமகாலத்தில் இடம் பெயர்ந்தவை சில இடங்களில் பிரதேசங்கள் மாறிநிற்கின்றன் ஆயினும் அது வழுவல்ல கண்டாவளையிலிருந்து புதுக்குடியிருப்பை அல்லது புதுக்குடியிருப்பு வீதியை பார்க்க முடியாது கண்டாவளையில்பேஸ இல்லை மக்களுக்குத்தான் செல் போட்டவன் எட்டேக்கர காணியில் காவல்காரர் சரி. அதே காலப்பகுதியில்தான் சுதந்திரபுரப் படுகொலை நடந்தது சுமார் நாற்பதுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எழுபது பேர்வரை காயமடைந்தும் போயினர். அவரகளும் பலர் தனிக்கல் தண்ணிமுறிப்பு பகுதியாலும் மலையகத்தாலும் வந்தவர்கள்தான்.ஒதியமலைப் படுகொலையை அடுத்து பெடியள் கொக்குத்தொடுவாய் சிங்களவரைத்தாக்க விசாரிக்க வந்தவன் பொன்னம்பலத்தாரை ப் பிடிச்சு விசாரிக்க அநதாள் என்ர அஞ்சுபிள்ளை சத்தியமா என்க்குத் தொியாதெண்ண…அப்ப கூப்பிடு அந்த அஞ்சு பிள்ளையளையும் எண்டுகேட்டான வேற வழியில்லாம் பிள்ளையள கூப்பிட்டுவிட அஞ்சு பொடியளை பிடிச்சுக் கொண்டுபோன ஆமி அஞ்சையும் சுட்டுப்போட்டான்.இதை நான் பிழை சொல்ல வேணுமெண்டதற்காக சொல்லவில்லை சயந்தன் கேட்டதாலதான் சொல்லுறன் இப்பிடி சின்ன சின்னப் பிழையள்தான் இருந்தாலு ம் முட்டையிலும் மயிர்பிடுங்கிற ஆள் நான் ஈழ நாதத்துக்கு காரசாரம் எழுத வெளிக்கிட்ட நாள்ள யிருந்து எல்லாத்திலும் பிழை பிடிக்கிறதை ஒரு கலையாச் செய்வன்…சயந்தன்ர எழுத்து நடைய உச்சேலாது வேற ஏதும் இன்னும் கண்டுபிடிச்சா சொல்லுறன் ஙா ஒருடத்தில அவர் என்னையும் மென்ஷன் பண்ணியிருக்கிறார் சூ….பேசிமுடிய பதின்மூண்டு பேர் வருறமாதிரி சைக் எனக்குப் புல்லரிச்சிட்டுது அப்பிடி வந்திருந்தா….ஏன்ராப்பா கடைசியில நடந்த கொடுமை…ஆக பாலகுமாரன் ஒருவர்தான் கம்பஸில மீற்றிங் வச்சு கடைசியாகேட்டார் ஒரு கேள்வி இனி என்ன எல்லாரும் என்னோட கைகோா்க்கலாமே எண்டார்..இருபத்தொன்பது போ் கை கோர்த்து வந்தவைஆதவன் றெஜி புஸ்பராசா கலைக்கோன் எல்லாம் அதுக்க வந்தவைதான. சரி விடுவம் பெரிய காப்பியம் எழுதயுக்க கொஞ்சம் வருணனை மிகைப்படுத்தல் இருக்கத்தான் வேணும் அது குற்றமல்ல ….எப்பிடிப் பாா்த்தாலும் தனிமனித முயற்சி தலையால கிடங்கு கிண்டினாலும் கிண்டுவனேயொழிய என்னால இவ்வளவு விவரம் அடக்கி எழுத ஏலாது அதில சயந்தனில கொஞ்சப் பொறாமையும்தான் போட்டி போடேலாது பொறாமைப்படுறதை ஆா் என்ன செய்யிறது..

 

ஆரம்பத்திலயே சிங்களவர் வெட்டுறாங்களாம் கொள்ளையடிக்கிறாங்களாம் எண்டு சிங்கமலையும் மற்றாக்களும் வெளிக்கிடக்க சயந்தன் சின்ப்பிள்ளையா இருந்திருக்கிறார் லெட்சுமணனை அங்கயே கைவிட்டிட்டு தொங்கல்ல போய் ஆதிரையை தொட்டிருக்கிறார் ஆதிரைகளை என்பதே சரி…. மன்னார்பகுதியிலிருந்த களமுனைவிடத்தல்தீவை வளைத்தபோதே பெருமளவு மகளிர் அணியினர் கைவிடப்பட்டனா் . இதேகளமுனையில்தான்ஜெயசிக்குறுய் சமரின்போது யாழ் செல்லும் படையணிதணிகைசெல்வி உட்பட மகளிர் குழு வொன்று முற்றாக சிதைந்தது அதில் தியாகமப்பா தன் குடும்பத்தின மூன்றாவது மாவீரரை அடைந்தார் களமுனைகளின் ஆள்பிடிப்பையும் பிரச்சாரத்தையும் சிறு பிள்ளைத்தனமாக வருணிக்கும் சயந்தனின் ஆதிரை களமுனையின் சாதனைகளைப் பதிவிட பின்நிற்பது போல ஒரு பிரமை தட்டுகிறது. இன்றைக்கும் சிங்கள அரசு நிராயுதபாணிகளான தலைவனை இழந்த போராளிகளைக்கூட விடுவிக்க அஞசுகிறது என்றால் அது அந்த அச்சத்தை தமிழர்களால் இன்னும் தக்க வைக்க முடிந்திருக்கிறது என்றால் எம்பா அதை எழுத பஞ்சிப்பட்டாய். அந்த ரெண்டொரு பெட்டையளத்தவிர மற்றவையப்பற்றி…..ஊகும் எனக்குப்புாியதபல விடயங்களுள் இதுவும் ஒன்று மற்றது சாகரன் நாமகள் காதல்….சாகரன் என்ன சொன்னான் …. ராணிக்கும் முத்துவுக்கும் இடையேயான கடைசி உரையாடலும் கருக்குமுள்ளுப்போல நெஞ்சுக்கை கிடந்து அறுக்குது….என்ரா ஏன்ரா எங்களை இப்பிடி படிச்ச நாவலுக்குப்பின்னால அலைய விட்டாய்…?

 

www.facebook.com/thamayanthy.ks/posts/875800999205287

http://sayanthan.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/

 

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1910511_10154522245324951_15967367563864

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘ஆதிரை’ துயரத்தை வலிந்து புனையும் பிரதியா?

Barack Obama

- சித்தாந்தன் சபாபதி

அண்மையில் சயந்தனின் ஆதிரை நாவல் குறித்த உரையாடல் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது. திறந்த உரையாடற் களமாக நிகழ்ந்த இந்நிகழ்வில் ஆதிரை நாவலின் அனுபவம் என்ற சாரத்தில் தமிழ்க் கவி உரையாடலை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் ‘சயந்தன் இந்த நாவலை ஏலவே எழுதி முடித்து தமிழினிக்கு அனுப்பியதாகவும், அதனை வாசித்து விட்டு பதிப்பாளார் வசந்தகுமார், நாவலில் துயரம் போதுமானதாக வரவில்லை. திருத்தி எழுதிவிட்டு தாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டதாகவும். அதனால் நாவல் பின்னர் இரண்டு மாதங்கள் தாமதித்தே அச்சிடப்பட்டதாகவும்’ தெரிவித்திருந்தார். மேலதிக தகவலாக ‘தமிழினி வசந்தகுமார், சோகம் படிந்த பிரதிகளையே விரும்புவதாகவும்’ குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய இந்த உரை உண்மையான பதிவாக இருந்தால், ஆதிரை மற்றும் தமிழ்க் கவியின் ஊழிக்காலம் ஆகிய நாவல்கள் வலிந்து துயரத்தை உருவாக்கிய நாவல்களாகவே கருத முடியும். ‘ஊழிக்காலம் பெரும்பாலும் உண்மைகளை அடைப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது’ என்ற நிலாந்தனின் கருத்து மீதும் சந்தேகத்தையே ஏற்படுத்தும்.

தமிழ் படைப்புச்சூழல் என்பது குறிப்பாக ஈழத்துப் படைப்புக்களை பதிப்பிக்கும் தமிழக பதிப்பகங்கள் இத்தகையதான ஒருவித மனநிலையைக் கொண்டிருக்கின்றனவா? ஏனெனில் யுத்தத்தின் பின்னான பெரும்பாலும் தமிழகப் பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட ஈழம் சார்ந்த படைப்புக்கள், துயர் படிந்த காலம் பற்றிய படைப்புக்களாகவே இருக்கின்றன.

ஒரு படைப்பாளி, பதிப்பகங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமையத்தான் தன் படைப்புக்களை எழுத வேண்டுமா? ஒரு பதிப்பாளர் படைப்பின் போக்குப்பற்றி தீர்மானிப்பதற்கான தகுதியாக, அவர் வெளியீட்டாளர் என்ற தகுதி மட்டும் போதுமானதா? அப்படியாயின் படைப்பாளியின் சுயம் என்பது என்ன?

ஈழத்தமிழரின் துயரத்தை வைத்து அரசியல் நடாத்தும் தமிழக அரசியல் வாதிகளுக்கும் ஈழத்து படைப்புக்கள் துயரத்தையே உள்ளீடாகக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் பதிப்பாளர்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்க முடியும்.

ஒரு படைப்பின் பிரதான தீர்மானிப்பாளர் படைப்பாளராகத்தான் இருக்க முடியும் என நான் நம்புகின்றேன். பெரும் பதிப்பகங்களின் ஆதரவுத் தளத்தில் நின்று கொண்டு அவற்றிடம் படைப்புப் பற்றியதான தீர்மானிக்கும் சக்தியை வழங்குவதை விட்டுஇ படைப்பாளர்கள் தமது சுயத்தை பேணுகின்ற வகையிலான மாற்றுப் படைப்புச் சூழலை உருவாக்க முடியாதிருப்பது படைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துயர நிலை என்றுதான் கூற வேண்டும்.

தமிழ்க் கவியின் ஊழிக்காலம் ஒரு அனுபவப் பதிவு மட்டுமே. அதனது காலவெளி மிகவும் குறுகியது. தன்னனுவங்களின் பதிவுகளுக்கிடையில் அவர் தான்சார்ந்த ஒரு கருத்துநிலையை கட்டமைக்க விளைகின்றார். அதனை ஒரு பொதுவான உண்மையென்றோ அல்லது அதைத்தான் உண்மை என்றோ கருதவேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் அது பொய்யும் புனைவும் நிரம்பிய பிரதியென்று நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அது தமிழ்க் கவியின் அரசியல், விருப்பு வெறுப்பு சார்ந்த பிரதி. அதை எழுதுவதற்கு அவருக்கு உரிமையுண்டு. அந்தப் பிரதியின் பலம் பலவீனங்களையும் உண்மை, பொய் பற்றியும் உரையாடுவதற்கும் வாசகநிலையிலும் உரிமையுண்டு. நிலாந்தனது உரையில் ‘பெரும்மாலும் மெய்த்தகவல்களை’ ஊழிக்காலம் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். ‘பெரும்பாலும்’ என்ற இந்த சொல்லாடலே இந்தப் பிரதி பற்றியதான வாசிப்பின் பரந்த வெளியைக் கோரிநிற்கின்றது.

ஆதிரை பரந்த கால விரிவினையுடையது. ஒரு நாவலுக்கான கட்டமைப்பினை சாத்தியமான வரையில் கொண்டிருக்கின்ற பிரதி. முப்பது வருட கால ஈழத்தமிழர் வாழ்க்கையின் அவலத்தை ஓரளவுக்கு பதிவு செய்திருக்கின்ற பிரதி. ஆயினும் ஆதிரையில் போதாமைகள் இருக்கின்றன. ஏலவே உதிரி உதிரியாக எழுதப்பட்ட படைப்புக்களின் பதிவுகளின் ஒரு கூட்டுருவான பிரதியாக அதிருக்கின்றது. ஆதிரையை வாசித்தல் என்பது கடந்த காலத்தை வாசித்தலாகி விடாது. நிலாந்தன் தனது உரையில் – காலத்தை பதிவு செய்யும் இத்தகைய பிரதிகள் கொண்டிருக்கின்ற போதாமைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். பேசப்படாத அல்லது பகிரப்படாத பக்கங்கள் ஈழப்போராட்டம் சார்ந்து இருக்கின்றமையினால் முழுமையான ஈழத்தமிழர் வரலாற்றை உள்ளடக்கிய பிரதி எப்போதும் சாத்தியமற்றது என்ற பொருள்பட உரையாடலின் போது கூறியிருந்தார். அவரது வாதத்திலும் உண்மை இருக்கின்றது.

ஒரு படைப்பாளி தனக்கிருக்கின்ற சுதந்திரத்தை எழுதுகின்ற போது மட்டுமே அனுபவிக்க முடிகின்றது. அதனை பிரசுரிக்கும் போது அல்லது பதிப்பிக்கும் போது, சுதந்திரத்தை இழக்க வேண்டி பெரும்பாலும் ஏற்படுகின்றது. தன் கருத்துநிலையை முழுமையான அர்த்தத்தில் பொதுப் பரப்புக்குக் கொண்டு வருவதிலுள்ள சிக்கல்கள் குறித்து நாம் பேசவேண்டியிருக்கின்றது. ‘இந்தச் சஞ்சிகையில் வரும் படைப்புக்களின் கருத்துக்களுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பு’ எனக் கூறிக்கொண்டு குறித்த படைப்புக்களை தங்களது விருப்பு வெறுப்புக்கமைய மாற்றும் சஞ்சிகைகள் ஈழத்தில் இருக்கின்றன. படைப்புக்களின் கருத்துக்களுக்கு தாம் பொறுப்பல்ல எனக் கூறிக்கொள்ளுபவர்கள் ஏன் படைப்பாளனின் கருத்துக்களைச் சிதைத்தும் அழித்தும் தம் விருப்புக்கமையச் செயற்படுகின்றனர்? தகுதியற்றது அல்லது தங்களின் கருத்துநிலையோடு ஒன்றி வர முடியாதுள்ளது அதனால் பிரசுரிக்க முடியாது என்று சொல்வதில் என்ன சிக்கல் இருக்கின்றது.

இவைகள் படைப்பாளிகள் தங்கள் உரிமைகளை இழக்கின்ற இடங்கள். இவற்றுக்கான மாற்று வெளிகளைக் கண்டடைய வேண்டிய தேவை இருக்கின்றது. பதிப்பகங்களிடம் இழந்து போகும் தனது உரிமைகளை படைப்பாளர்கள் மீட்டெடுப்பது எவ்வாறு? இது பற்றி உரையாடலை தமிழ் பொதுப்பரப்பில் நிகழ்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.

தற்போது ஈழத்தில் பதிப்புத்துறையை வளர்த்தெடுக்க வேண்டும் என பலரும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு பேசிக்கொண்டிருப்பவர்கள் இவை பற்றியும் கருத்திலெடுத்து உரையாட வேண்டும். பதிப்பு என்பது வெறும் புத்தகமாக்கும் முயற்சியல்ல. என்பதுதான் இதனது அடிப்படை.

ஆதிரை நாவலின் புத்தகமாக்கும் முயற்சி பற்றிய தமிழ்க்கவியின் உரை இந்த உரையாடலைத் தொடங்க காரணமாகியிருக்கின்றது. தமிழ்க் கவிக்கு நன்றிகள்.

 

http://www.nanilam.com/?p=8601

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதிரை: ஒரு முழுமையான பிரதி - அ.இரவி

ஆதிரை: ஒரு முழுமையான பிரதி
 

 

2011 நத்தார் தினங்களில் ஒன்று. ‘ஒருபேப்பர்’ வைத்த விருந்து ஒன்றில் சயந்தன் சொன்னார். “நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்.” நான் நினைத்தேன்: ‘அது இலேசான காரியமோ? சிறுபிள்ளை வேளாண்மை. வீடு வந்து சேர்ந்தாலும் உண்ண முடியாதது.’

பிறகு சயந்தன் சொன்னான். “அந்த நாவலுக்கு இயக்கம் என்று பெயர் வைத்திருக்கிறேன்.” மீண்டும் நான் நினைத்தேன்: ‘இது ஒரு பாஷன். ஷோபாசக்தி கொரில்லா என்று வைத்தார். இப்ப இவர் இயக்கம் என்கிறார்.’

அந்த விருந்து நன்றாக நடந்தது. நான் ‘நினைத்ததை’ ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டு சயந்தனுடன் மெல்லிய இருட்டுக்குள் நன்றாக அளவளாவினேன்.

ஒருசில மாதங்கள் கழிந்தன. ஒருபேப்பர் ஆசிரியர் கோபி தொலைபேசி எடுத்தார்.

“இரவியண்ணை, சயந்தனின் புத்தகம் சோக்காகத்தான் இருக்கு. நீங்கள் வாசிச்சியளோ..”

“எது..? இயக்கம் எண்ட புத்தகமோ..”

“அதுதான். ஆனால் ஆறாவடு என்ற பெயரோடு வந்திருக்கு. நீங்கள் கட்டாயம் வாசிக்கவேணும். அனுப்பி விடுறன்.”

எனக்குன் கோபியின் இரசனையில் சந்தேகமே இல்லை. படைப்பிலக்கியத்தில் அவ்வளவு பரிச்சயமில்லாதவர். அரசியல் கட்டுரை என்றால் அது வேறு. அம்புலிமாமாக் கதையைக் கூட அடுத்த மகாபாரதம் என்று எண்ணக்கூடியவர். அவர் ஆறாவடுவைப் புகழ்ந்தால் அது புரியக்கூடியதுதானே என்று விட்டுவிட்டேன். இரண்டொரு நாளில் ஆறாவடு வந்து சேர்ந்தது. ஒரு கிழமையின் பிறகு ‘கணிப்பிற்குரிய கதைஞன் வந்து சேர்ந்தான்’ என்று ‘ஆறாவடு’ குறித்து ஒரு இரசனைக் கட்டுரை எழுதினேன். ‘பொங்குதமிழ்’ இணையத்தில் அது வெளியாயிற்று.

ஆதிரை: ஒரு முழுமையான பிரதி

அந்தக்கட்டுரையை இந்தக் கருத்துப்பட நிறைவு செய்திருந்தேன். ‘கணிப்பிற்குரிய கதைஞன்’ சயந்தன் என்பதனை அவரது அடுத்தடுத்த படைப்புக்களிற்தான் உறுதி செய்ய வேண்டும்.’

சரி, இவ்வாறுதாம் கேள்வி எழுகிறது. உறுதி செய்தாரா சயந்தன்? ‘ஒரு சொட்டுக் கண்ணீர்’ சிறுகதை அதை உறுதி செய்ய முயன்றது. ஆனால் அது சிறுகதை என்னும் கலை வடிவமாக இருந்தமையால் நிரூபிக்க முடியாமற் போயிற்று. இப்போது சயந்தன் ‘ஆதிரை’ என்னும் புதினத்தைத் தந்திருக்கிறார். 664 பக்கங்கள். அவ்வளவு பக்கங்களிலும் விரிந்த உலகம் பெரிது. அவ்வளவு பக்கங்களிலும் உலாவிய சுமார் இருபது கதை மாந்தர்களும் ‘கணிப்பிற்குரிய கதைஞர்தான் சயந்தன்’ என்று சொன்னார்களா.. ?

ஏறத்தாள 10 நாட்களில் சயந்தன் விபரித்த உலகில் என்னால் வாழ முடிந்ததா? அழுதேனா..? சிரித்தேனோ..? ‘ஆ’ என்று வியந்தேனா..? யாவற்றுக்குமான ரசனைக் குறிப்பையே நான் எழுத விளைவது..

1977 தமிழர் மீதான இனப்படுகொலையினால் மலையகத்திலிருந்து சிங்கமலை தன் மனைவி தங்கமையை மலையின் தேயிலைக் கொழுந்துகளுக்குத் தின்னக் கொடுத்துவிட்டு வல்லியாள், லெட்சுமணன் என்னும் இரு பாலகர்களுடன் வன்னிக்கு வருகிறான்.

அதுதான் ஆதிரையின் தொடக்கப்புள்ளி.

ஒரு சமூகம், நான்கைந்து குடும்பங்கள், சுமார் இருபது மானுடர்கள், தளம் என்று நான்கைந்து, பெரும் நிலப்பரப்பு, முப்பத்தைந்து வருட காலமான நீண்ட வெளி, வேட்டை, வேளாண்மை, தென்னைப் பயிர்ச்செய்கை, என்று பல்வேறான தொழில். விடுதலைப் போராளிகளின் இராணுவத் தாக்குதல்கள், சிங்கள இந்திய இராணுவ வன்முறை, இனப்படுகொலைகள், சுனாமி அனர்த்தம் என்று சுற்றிச்சுழன்று இடையறாது ஒலித்த ஒப்பாரிப்பாடல் முள்ளிவாய்க்கால் ஊழியில் அலறல்கள், கதறல்களாகி 2013 வரை ஓலமிடுகிறது. காற்று எங்கும் அதைக் கரைத்துவிடவில்லை. எந்த ஒரு தாய்மடியும் ஆறுதல் தரவில்லை. சுமார் முப்பத்தைந்து வருடங்களாக அப்பாடலுடன் அலைந்து உலைந்து அல்லல்பட்டுப் பயணிக்கிறோம்.

சாத்தியமற்ற ஒன்றைச் சயந்தன் ஆற்றியிருக்கிறார். இத்தகையதோர் புனைவு இவரினால் எப்படி இயன்றது? பாத்திர வார்ப்பு, புனைவு நுட்பம் யாவும் எங்கும் பிசிறு தட்டவில்லை. ஒரு பாத்திரமும் தன் உருவ அமைதியில் முரண்பட்டதல்ல. தன் வளர்ச்சியின் அடிப்படையில் தனக்குத்தான் முரண்பட்டது சந்திரா என்று உதாரணம் சொல்லப்புகுந்தேன். அல்ல.. அத்தனை பாத்திரங்களும் தம் வளர்முறைக்கு நியாயம் கற்பிக்கின்றன. நந்தன் ஆசிரியர் உட்பட.

புனைவு வழியில் இவ்வளவு சிறப்பான புதினம் ஈழத்துத்தமிழில் வந்ததில்லை. ஈழத்துப்படைப்புக்களில் பெரும்பாலானவற்றை வாசித்ததன் அடிப்படையில் சொல்கிறேன்.

இப்போது ‘புனைவு’ என்றால் என்ன என்பதை நான் விளங்கிய அளவில் சொல்லியாக வேண்டும். புனைவு என்பது ஓர் உணர்வை அல்லது பாத்திரத்தைத் தன்னுள் வாங்கி தான் அதுவாக நின்று வாசகர் மீது அந்த உணர்வைக் கடத்திக் கவியச் செய்வது. இதுவே நான் புரிந்த அளவில் புனைவு என்பேன்.

சுய அனுபவங்களைப் படைப்பாக்கல் ‘புனைவு’ என்று யாரும் சொன்னால் ஓம் என்று ஒப்புக்கொள்வேன். அதிலும் இந்த அனுபவங்களைச் சொல்லப்போகிறேன் என்ற தெரிவு, அந்தப்பருவம், சூழலுக்குரிய மனநிலை யாவற்றையும் அச்சொட்டான வடிவத்துள் கொண்டுவருதல் இவைதாம் புனைவின் பாற்படும்.

ஆனால் பிறர் அனுபவங்களைத் தன் அனுபவமாக உள்வாங்கும் படைப்பென்பது கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை போன்றது. இது அனுபவமும், கலை நேர்த்தியும், கற்பனை ஆற்றலும் கொண்ட ஒருவரால் மாத்திரமே சாத்தியமாகும். சும்மா கூடு விட்டுக் கூடு பாய்ந்துவிடமுடியாது. இப்போதும் நாம் மெச்சத்தகுந்த படைப்புக்கள் என விளிப்பது அது புனைவு வழிவந்த உச்சங்களையே..

ஆதிரை நம்முள் உலாவவிட்ட கதை மாந்தர்கள் வெறும் பெயர்கொண்டு மாத்திரம் பரிச்சயம் கொள்ளவில்லை. இதில் வருகின்ற சந்திரா எதனாலும் வன்முறை கண்ட சமயமெல்லாம் உரத்து ஏசியோ, மௌனமாகத் தன்னுள் குமைந்தோ தன் ஒவ்வாமையை வெளிப்படுத்துவாள். எப்போதும் அவளிடம் விடுதலைப்புலிகள் பற்றிய கடுமையான விமர்சனம் உண்டு. அவளது கணவன் அத்தார் விடுதலைப்புலிகளின் கடும் விசுவாசி. ஒருமுறை மாவீரர் நாளுக்குச் செல்ல முடியாதவாறு கடும் காய்ச்சல் அத்தாரைப் பீடித்தது. சாமம் போல அத்தார் ஓங்காளித்துச் சத்தியெடுத்துத் திரும்பியபோது மூன்று சுட்டி விளக்குகள் எரிந்தன. அவற்றைப்பார்த்தபடி சந்திரா இருந்தாள். அத்தாரை நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள். “இயக்கம் விடுற எல்லாப் பிழைகளையும் இந்தப்பிள்ளைகள் தங்கடை தியாகத்தால் வென்று விடுறாங்கள்” (பக்கம் 304)

இந்த இடத்தில் நான் உறைந்து போனேன். தொடரூந்தில் இருக்கிறேன் என்ற எந்த உணர்வுமில்லாமல் ‘ஆ..’ என்ற ஒலி என்னிலிருந்து வெளியேறியது. ஆதிரையினுள் இருந்து சந்திராவை உணர்ந்தவர்கள் யாரும் சந்திராவை வியப்பாக நோக்கார். அவள் அப்படித்தான் என்கின்ற விம்பத்தை சயந்தன் எம்முள் கட்டமைத்துவிட்டார். அதுவே புனைவு. எம்முள் இரத்தமும் சதையுமாக நுழைந்தவர்களில் சந்திரா ஒருத்தி. மேலும் பலர் உள்ளனர். அத்தார், சங்கிலி, மீனாட்சி, லெட்சுமணன், ராணி, வெள்ளையன், நாமகள், வினோதினி, மணிவண்ணன், மயில்குஞ்சன், மலரக்கா, நந்தன் சேர், சிங்கமலை என்று அவை நீள்கின்றன. அத்தனை பாத்திரங்களும் முதலிலிருந்து முடிவு வரை உறுத்தல் இல்லாதவாறு வளர்க்கப்பட்டிருந்தன. பாத்திரங்கள் ஒருபோதும் தத்துவம் பேசவில்லை. மனிதம் பேசுகிறது. அது பிரச்சாரமாக அல்ல. போகிற போக்கில் அப்பாத்திரங்களின் செயல், உச்சரிக்கும் வார்த்தைகள், மனிதத்தைப் பேசிவிடுகின்றன. இங்கு யாரும் தீயவர் அல்லர். பலவீனம் உள்ளவர்கள். சிங்களக் காடையர்கள், சிங்கள இராணுவம், இந்திய ராணுவம் என்கிற கொடியவர்கள் பாத்திரங்கள் ஆகவில்லை. கூட்டமாகத்தாம் நிற்கின்றன.

ஆதிரை நாவலின் அத்தனை பாத்திரங்களிலும் மனிதம் எப்படியோ வெளிப்பாடுகொண்டு நிற்கிறது. ஒரு போராளி மாவீரன் ஆகின்றான். அவனுக்கு ஈழச்சடங்கு செய்யப் பெற்றோர் இல்லை. இங்கிருந்த கிழவியொருத்தி வித்தாக வீழ்ந்து கிடக்கும் மாவீரனைப் பார்த்ததும் கூறுகிறாள். “என் ராசா.. என்னையப் பாரய்யா.. நானும் ஒனக்கு அம்மாதான்யா.. உறவுண்ணு கண்ணீர் வடிக்க உனக்கு யாருமில்லைன்னு கலங்கிடாத.. வருசா வருசம் நான் உனக்குத் திவசம் பண்ணுறேன்யா.” (பக் 305)

இவ்வாறான வார்த்தைகளை, சம்பவங்களை ஆதிரையில் காண்கிறபோது அதை எவ்வாறு நோக்குவதென்று தடுமாறுகின்றேன். இக்காட்சியை சயந்தன் நேரில் தரிசித்தாரா..? அல்லது புனைவின் பாற்பட்ட ஒன்றா..? நேரிற் கண்டதாயின் அதன் தெரிவும் புனைவின் பாற்பட்டதாயின் அச்சிந்தனையும் சயந்தனை மனிதத்தின் உச்சத்தில் ஏற்றி வைத்துவிடுகிறது.

இது மாத்திரம் சந்தர்ப்பமல்ல. 595ம் பக்கத்தில் ஓரிடம். நான் படித்த எந்த இலக்கியத்திலும் காணாத காட்சி அது. ராணி திருமணம் முடித்த இளம் வயதில் சிந்து என்ற மகளைக் கொடுத்துவிட்டுப் புருசன் காணாமற் போகின்றான். காலப்போக்கில் மணிவண்ணன் என்பவனுடன் ராணிக்குக் காதலும் உடல் ரீதியான உறவும் ஏற்பட்டுவிடுகிறது. முள்ளிவாய்க்கால் ஊழி நிகழ்கிற நேரம், மணிவண்ணன் உதடுகள் சற்றே விரிந்திருக்க புன்னகைப்பதுபோல அநாதரவாக இறந்து கிடக்கிறான். தன் மகள் சிந்துவுடன் வந்த ராணி அதைக் காண்கிறாள். சிந்து அருகில். ராணி உதடுகளைக் கடித்து அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஓர் அடி எடுத்து வைக்க முடியாமல் கால்கள் சோர்கின்றன. பெற்ற மகளைப் பார்க்க முடியவில்லை ராணியால். சிந்து தாயின் இரண்டு கன்னங்களையும் கைகளில் ஏந்தி கெஞ்சுவதைப்போன்ற கண்களைக் காண்கிறாள். சிந்து சொல்கிறாள். “நீங்கள் அழுது தீருங்கோ அம்மா” ராணி ஓவென்று வெடித்தாள். மணிவண்ணனின் காலடியில் புழுதிக்குள் விழுந்து புரண்டு அலறினாள்.

“ஓ” என்று கதறிவிட்டேன். நான் இருந்த தொடரூந்துப்பெட்டியில் எவருமில்லை. எனக்கு மேலும் வாசிப்பைத் தொடரமுடியவில்லை. இவ்வாறான புனைவு எப்படிச் சாத்தியமாயிற்று என்று திகைத்தபடி இருக்கின்றேன். ராணியின் மனநிலையையும் சிந்துவின் மனநிலையையும் எப்படி ஒருவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது..? உண்மை என்னவென்றால் ‘அது அவ்வாறுதான் இருக்கவேண்டும்’ என்று சயந்தன் விரும்பினார். அவரது அறம் அவருக்கு அதைத்தான் உரைத்தது. அதனாற்தான் மகத்தான படைப்பாளியாகவும் மானுடத்தை நேசித்தவனாயும் சயந்தனால் இருக்க முடிகிறது.

ஆதிரை ஈழ தேசச் சமூகத்தாரில் உள்ள அத்தனை வகை மாதிரிகளையும் அதன் குண இயல்பு குன்றிடாமல் பாத்திரங்களாகக் கொண்டுவருகிறது. பாத்திரங்களுக்கிடையிலான இணைவும் இயல்பும் எங்கும் விலகிப்போகவில்லை. அது தொழில்நுட்பத்தின் நேர்த்தி. ஆனால் புனைவு முனைப்புப்பெறாமல் அது சாத்தியமில்லை.

எந்த ஒரு மூன்றாம் உலக நாடுகளின் சமூகவியல் போலவே ஈழத்துத் தமிழ்ச் சமூகமும் பல முரண்பட்ட சமூக நிலைக் கருத்துக்களைக் கொண்டுள்ளன. சாதியமைப்பு, பிரதேசவாதம் அவற்றில் முக்கியமானவை. அவை பிரதான முரண்பாடுகள் அல்ல. தமிழ் சிங்கள இன உறவு குறித்த பிரதான முரண்பாட்டைப் பேசுகிற சமயம், இச்சிறுசிறு முரண்பாடுகளின் சித்திரம் வரையப்படுகிறது.

வெள்ளாம்பிள்ளை சந்திரா, தாழ்த்தப்பட்டவர் என அறியப்பட்ட அத்தாருடன் ‘ஓடி’ வன்னிக்கு வந்துவிடுகிறாள். அத்தார் தாழ்த்தப்பட்டவன் என்று சொன்னாலும் இறுதிவரை அவன் என்ன சாதியென்று சொல்லப்படவில்லை. இறந்தபிறகு ஓர் உரையாடலில் அது தெரிகிறது. முள்ளிவாய்க்காலில் அனாதையாகச் சிதைந்த உடலை ஒருவர் அடையாளம் காட்டுகிறார். “இந்த அம்பட்டக்கிழவனை எனக்குத் தெரியும் .அத்தார் எண்டு கூப்பிடுறவை. ஒரு வெள்ளாளப்பொம்பிளையைக் கட்டியிருந்தவர். ” (பக் 592)

பல்லாயிரக்கணக்கில் சாவு விரிந்த அந்த மணல் வெளியில் சவங்களிலும் சாதி சொல்லும் ஒருவன் காட்டப்படுகிறான். சாதி வெறியின் கோரமுகத்தை இப்படி வெளிப்படுத்த முடிந்தது.. சயந்தனின் புனைவு அங்கும் கட்டியம் கூறி நிற்கிறது.

பிரதேசவாதம் பேசப்படும் இடங்களும் இவ்வாறுதான். ஆனால் என் மேலான ஆச்சரியம் என்னவெனில் வகை மாதிரிப் பாத்திரங்கள் வந்து, புனைவுடன் பொருந்திப்போகிற அம்சம் என்பதே. பிரதான முரண்பாட்டைச் சிதைக்காத வண்ணம் அவ்வகை மாதிரிப் பாத்திரங்கள் இயங்குகின்றன.

சந்திரா அத்தார் என்கிற சாதிய முரண்பாடு மாத்திரமல்ல, முத்து என்கிற மலையாள வம்சாவளிப் பிள்ளைக்கும் வன்னியைச் சேர்ந்த வெள்ளையனுக்கும் ஏற்படும் திருமண உறவிலும் பிரதேசவாதம் தலை துாக்குகிறது. அவ்வாறே சாரகன் என்ற யாழ்ப்பாணிக்கும் நாமகள் என்ற வன்னிப் பெட்டைக்கும் இடையிலான காதலில் பிரதேசவாதம் முளைவிடுகிறது.

இவ்வாறு பலவகை மாதிரிப்பாத்திரங்கள் அச்சொட்டாகப் பொருந்திப்போகின்ற அதே சமயம் ஒன்றுமே பிரதான கதைப்போக்கை இடையூறு செய்ததாகத் தெரியவில்லை. இவற்றினை வெறும் வார்த்தைகளால் கடந்துபோய்விடமுடியாது. ஒரு படைப்பாளி தன் புனைவுத்திறனை அதி உச்சத்தில் வைத்துப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

ஆதிரை பேசிய அரசியல் பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை. ஆயினும் சொல்லியே ஆகவேண்டிய சில விசயங்கள் உள்ளன. ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்பு இது. விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை் யாவற்றையும் அனுதாபத்துடன் நோக்குகிறது. விடுதலைப் போரில் சக பயணியாகக் கூட வருகிறார் சயந்தன். வழியில் எதிர்ப்படும் முட்களையும் கற்களையும் அப்புறப்படுத்திவிட்டு பாம்பு, தேள், மற்றும் விஷ ஐந்துக்களை நசுக்கிவிட்டு பற்றைகளை விலக்கி குறுக்கேயிருந்த கொப்புக்களைத் தறித்துப் பயணிக்கிறார் இப்புனைகதை ஆசிரியர். மானுடக்கூட்டத்திலிருந்து அவர் விலகிச்செல்லவில்லை. அவர்களில் ஒருவர். அத்துன்ப துயரங்களில் ஒன்றோடு ஒன்றானவர்.

மானுட தர்மத்தை விரோதிப்பவர் விடுதலைப்புலிகளிடம் மாத்திரம் குற்றம் கண்டனர். அல்லது விடுதலைப் புலிகளையும் சிங்கள அரச பயங்கரவாதத்தையும் சமப்படுத்தினர். விடுதலைப்புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியது, கட்டாய ஆட்சேர்ப்பு நிகழ்த்தியது, ஒருபடி மேலே போய் மக்களைக் கொன்றது என்பதை முதன்மைப்படுத்தி தம் நச்சு வார்த்தைகளை உமிழ்கின்றனர்.

ஆனால் விடுதலைப் புலிகள் மக்களுக்கு அரணாக நின்றதும், மக்களின் துன்ப துயரில் பங்குகொண்டதும், மக்களைக் கொன்றவனைக் கொன்றதும், மக்கள் தப்பியோட வழிகாட்டியதும், தாம் தவறி வீழ்ந்த இடத்தை ஒப்புக்கொண்டதும் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. தெரியவும் மாட்டாது. ஆதிரை புனைவு நிலையில் நின்று உலகிற்குக் கோடி காட்டியது.

ஆதிரை புதினத்தை கையில் துாக்கி உயரத்திலேயே பிடிக்கிறேன். முள்ளிவாய்க்கால் ஊழியைக் காட்சிப்படுத்திய அதன் திறன் கண்டு. அய்யோ என்ற குழறல்களும், சடலம் சடலமாகச் சரிந்து கிடப்பதுவும், பதுங்கு குழிக்குள் உணவு கிடையாக் கொடுமையும், சதைத் துண்டங்களும், கந்தக மணமும் என்று மாத்திரம் முள்ளிவாய்க்காலை காட்டவில்லை.

அந்த அவலங்களுக்கிடையில் ஓர் உயிர்ப்பு இருந்தது. அந்த வதைபடல்களுக்கு இடையிலும் ஒரு வாழ்வு இருந்தது. சூரியன் சுடர்ந்தான். சுட்டெரித்தான். ஆகாயத்தில் நிலவும் ஜொலித்தது. நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன. அதைச் சயந்தன் அழகாகப் புனைந்தார்.

ஒருத்திக்குத் திடீர்க் கல்யாணம் நடக்கின்றது. ஆனால் அது கல்யாணம் அல்ல. ஒரு தாலியை எடுத்துத் தன் தலையைத் தானே நுழைத்துக்கொள்கிறாள். அவளுக்கு உண்மையில் திருமணம் ஆகாமல் விடுகிறது.

“அம்மா செத்திட்டாவோ” என்று கேட்ட மகள் அடுத்த கணம் கேட்கிறாள். “கஞ்சி வடிச்சிட்டியளே.. குடிக்கலாமே..” (பக் 580) சாவைச் சாதாரணமாகக் கடந்து போவதும், சன்னக் கோதுகளை பேணியிற் குலுக்கிச் சிறார்கள் விளையாடுவதும் அந்த அவலத்திற்குள்ளும் உயிர்ப்பூ மலர்வதைக் காட்டுகிறது.

ஓர் இடம் வாசித்த பிறகு இரண்டு நாட்களுக்கு முழுமையாக ஆதிரையை வாசிக்க முடியவில்லை. ஷெல் கூவுகிற ஒரு நள்ளிரவு. அத்தாரும் சந்திராவும் பதுங்கு குழிக்கு வெளியே ஒருவர் கையை ஒருவர் பற்றியவாறு நித்திரை கொள்ள முயன்றனர். திடீரென்று ஒரு பேரொலி. ஒளிப்பிளம்பு. அத்தார் அவனை மூடியிருந்த மண் துகள்களையும் புகையும் உதறிக்கொண்டு எழுந்து “சந்திரா” என்று அலறினான். “சந்திரா இருக்கிறியா..” என்று கத்தினான். “போயிட்டியா..” மெல்ல முணுமுணுத்தான். ‘ஷெல்லடி கூடுதண்ண, வாங்கோ போவம்’ வெள்ளையன் அத்தாரின் கையைப்பற்றினான். “டேய் நாயே, ஒருக்காச் சொன்னா கேட்கமாட்டியா.. குடும்பத்திலை ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டும் நம்பி வந்தவளடா.. ஒரு அனாதையா விட்டுட்டு வரச்சொல்லுறியா..”

அத்தார் சந்திராவின் தலையைத் துாக்கி மடியிற் கிடத்தி “என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே..”

பிறகு உடல் சிதைந்து வலது கண் மட்டும் திறந்திருந்த ஒரு தலையைப் பார்த்து ஒருவன் அடையாளம் காட்டுகிறான். “இந்த அம்பட்டக்கிழவன்.............” (பக் 592)

(முள்ளிவாய்க்கால் ஊழியின் சித்திரம் தனித்த ஒரு புதினத்தை வேண்டி நிற்கிறது)

முள்ளிவாய்க்கால் ஊழிச்சித்திரத்தின் இறுதி வார்ப்பு இப்படியாக அமைந்தது. கையில் துப்பாக்கி வைத்திருக்கின்ற போராளி லெமன் பப் பிஸ்கற் சரையை இரு சிறு பிள்ளைகளிடம் கொடுக்கின்றான். அப்பொழுது முத்து கேட்கிறாள். “அப்ப உங்களுக்கு..” போராளி சொல்கிறான். “இனித் தீன் வீண்” (பக் 599)

சயந்தன் எழுதிய ஆதிரை என்னும் புதினத்தை பதினைந்து நாளில் தொடரூந்தில் போகவர வாசித்தேன். இரண்டுநாட்கள் வாசிப்பதை நிறுத்தினேன். பல சந்தர்ப்பங்களில் வாசிக்கவிடாமல் கண்ணீர் திரையிட்டது. திருப்பித் திருப்பி வாசித்தேன். பல சந்தர்ப்பங்களில் அச்சூழலில் நான் இல்லை. வேறோர் உலகத்தில் இருந்தேன். இடையிடை என்னை அறியாது ஆ என்று ஒலிக்குறி. இறங்கவேண்டிய இடத்தை அடிக்கடி தவறவிடப்பார்த்தேன், என்று அந்த நாட்கள் பதட்டத்தால் நிறைந்தது. காரணமில்லாமல் அடிக்கடி அழுதேன். இன்னமும் அடிக்கடி அழுவது ஓயவில்லை.

அப்படித்தான் வியப்பும் விலகவில்லை. எப்படி இந்தப் புனைவு சாத்தியமாயிற்று..? எந்தக் கை இதை எழுதியது? அரசியல், ஆக்கம், புனைவு எனும் சகல தளத்திலும் இதனை முதல் நுால் என்பேன்.

நம் காலத்தின் காவியத்தையும் அதைப்பாடியவனையும் பற்றி இதுவரை பறைந்தேன். 

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=1da47930-b66d-45bb-9da2-9195b162c0af

அ .ரவியிடம் இருந்து இதை விட வேறு எதை எதிர்பார்க்கமுடியும் .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.