Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியப் பொங்கல் விழா?

Featured Replies

தேசியப் பொங்கல் விழா?

தேசியப் பொங்கல் விழா? - நிலாந்தன்:-


அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம்  வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம்  இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து  உரையாடியும் உள்ளார்.  அவருடைய வருகையின் பின்  அந்த முகாமில் உள்ள சிறுவர்கள்  அவரை ‘மைத்திரி மாமா’ என்று அழைப்பதாக  இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டாளர் சொன்னார்.  மைத்திரி விஜயம் செய்த அந்த வீட்டின் குடும்பத் தலைவி  அவருடைய வருகை பற்றிக் கூறும்போது  அதை  ஏதோ கடவுளின் வருகை போல வர்ணித்ததாகவும் மேற்படி செயற்பாட்டாளர் சொன்னார்.  அவர் இந்த வழியால்தான் வந்தார். இங்கேதான் அமர்ந்தார் என்றெல்லாம் விபரிக்கும் பொழுது அந்த வருகையை ஒரு பெரிய பேறாகவே  அந்தப் பெண் கருதுவது போலத் தெரிகிறது என்றும் அந்த செயற்பாட்டாளர் சொன்னார்.  அந்த முகாமில் உரையாற்றிய மைத்திரி  ஆறு மாதங்களில் அவர்களுக்கு ஒரு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தார்.  அந்த முகாமும் உட்பட ஏனைய இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் உள்ள  தமிழ் மக்களில்  ஒரு பகுதியினர் அதை நம்பத் தொடங்கியிருப்பதாகவும் மேற்படி செயற்பாட்டாளர் சொன்னார்.


மைத்திரிபால சிறிசேன கடந்த கிறிஸ்மஸ் நாளன்றும்  யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை  கடற்தொழில் மற்றும் நீரியில் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் வடக்கிற்கு வந்துபோனார். நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் திருமதி சந்திரிகாவும் யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவில் கலந்துகொண்டாரகள். 


கடந்த சில மாதங்களாக அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதானிகள் பலரும்  வெளிநாட்டு ராஜதந்திரிகளும்  அடிக்கடி வடக்கிற்கு வந்து போகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை  வடக்கிற்கு வந்த கடற்தொழில் மற்றும் நீரியில் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர்  மன்னாரில் மீனவர்களின் படகுகளில் ஏறி  கடலில் பயணமும் செய்திருக்கிறார்.  இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.   அவர் கொடுத்த வாக்குறுதிகள் இதற்கு முன்பிருந்த எந்த ஓர் அரசியல்வாதியும் கொடுத்திருக்கக் கூடிய வாக்குறுதிகளை விடவும் உரமானவை என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.


 இவ்வாறாக ஆட்சி மாற்றத்தின் பின்னிருந்து குறிப்பாக புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னிருந்து அரசாங்கத்தின் பிரதானிகளில் யாராவது ஒரு சிலர் தமது பண்டிகை நாட்களை  வடக்கிலேயே கழிக்கிறார்கள். இதுதவிர முன்னைய காலங்களில் தென்னிலங்கை அரசியல்வாதிகள்  தமிழ் மக்களோடு  உறவாடியதை விடவும் அதிக நெருக்கமாக  அவர்கள்  உறவாடி வருகிறார்கள்.  கோணப்புலம்    இடம்பெயர்ந்தோர் முகாமில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் நம்புவது போல  தென்னிலங்கையில் இருந்து வரும் தலைவர்களின் வாக்குறுதிகளை  தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் எதிர்பார்ப்போடு கேட்கத்  தொடங்கிவிட்டார்கள்.  ஆட்சிமாற்றத்தின் பின்  எல்லாமும் மாறிவருவதாக ஒரு நம்பிக்கை  படிப்படியாகக் கட்டி எழுப்பப்படுகிறது. 

இப்போது நிலவும் அசுவாசச் சூழலே ஒரு பெரிய பேறாகக் காட்டப்படுகிறது. இடைமாறு காலகட்ட நீதிக்கும் நல்லிணத்துக்குமாக  சிவில் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் உபகுழுவும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவும் அமைக்கப்படுகின்றன. இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளும் நிலைமாறுகாலகட்ட நீதிக்கான முன்னெடுப்புக்களும் அதிகம் பணம் புரளும் ஒரு துறையாக மாறக்கூடிய ஏது நிலைகள் தென்படுகின்றன.


சுமார் மூன்று தசாப்தங்களாக இடம்பெயர்ந்து வாழும் கோணப்புலம்  முகாம் மக்களில் ஒரு பகுதியினர் மட்டும்தான் புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எதிர்பார்ப்போடு பார்க்கிறார்கள் என்பதல்ல. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள  ஒரு பகுதி அரசியல்வாதிகள். புத்திஜீவிகள்  அரச அதிகாரகள், அரசசார்பற்ற  நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்றவர்களில் ஒரு பகுதியினரும்  இவ்வாறு   ஆட்சிமாற்றத்தை ஒருவித எதிர்பார்ப்போடு பார்ப்பது தெரிகிறது.


அதேசமயம்,ஆட்சி மாற்றம் வரையிலும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக மிகத் தீவிரமாகச் செயற்பட்ட சிங்கள புத்திஜீவிகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்றோர் ஆட்சி மாற்றத்தின் பின் ஒன்றில் அதன் பங்காளிகளாகிவிட்டார்கள்.

அல்லது  அதன் ரசிகர்களாகிவிட்டார்கள். ஆட்சிமாற்றத்திற்கு முன்புவரை  தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று செயற்பட்ட பலரும்  ஆட்சிமாற்றத்தையே அந்த நீதியாகக் கண்டு மயங்கி  அதன் பிரச்சாரர்களாகிவிட்டார்கள்.  சிங்கள இனவாதிகளின்   மத்தியில் தென்னிலங்கையில் தனித்து ஒலித்த ஒரே குரலாகக் காணப்பட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினவிடமும்  கூட இப்பொழுது மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.  மணோகணேசன்  புதிய அரசில் அமைச்சராகிவிட்டார்.   ஆட்சிமாற்றத்திற்கு முன்புவரை தமிழ் மக்கள் தொடர்பில் முற்போக்கான பாத்திரத்தை வகித்த பலரும் இப்பொழுது  இனங்களுக்கிடையிலான  நல்லிணக்கத்தைப் பற்றியும் தேசிய கலந்துரையாடலைப் பற்றியும்  சிந்திக்கவும்  செயற்படவும் தொடங்கிவிட்டார்கள்.


இது தொடர்பாக  தென்னிலங்கையைச் சேர்ந்த  ஒர் ஊடகவியலாளரிடம் கேட்டபோது அவர் சொன்னார் “ ஆட்சி மாற்றத்திற்கு முன்பு சிங்கள மக்கள் மத்தியில் முற்போக்காகத் தோன்றிய  ஒரு பகுதியினர்  இப்பொழுது  ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாகிவிட்டார்கள்.

  இன்னொரு பகுதியினர்  ஆட்சி மாற்றத்தின் கருவிகளாகிவிட்டார்கள். இன்னொரு பகுதியினர்  ஆட்சி மாற்றத்தின் பின்  அதிகரித்தவரும் சிவில் வெளிக்குள்  தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் எதையாவது செய்யலாமா என்று விசுவாசமாக முயற்சிக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் அவர்களை அறியாமலேயே  ஆட்சிமாற்றத்தின் கருவிகளாக மாறிவிட்டார்கள். இவை தவிர, நிலைமாறு காலகட்டநீதிக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் பெருமளவு நிதி இச்சிறிய தீவை நோக்கி உட்பாய்ச்சப்படும் ஒரு பின்னணியில்  அந்த  காசை தமது பைகளுக்குள் நிரப்பிக் கொள்வதற்காகவும் ஒரு பகுதியினர்  நிகழ்ச்சித்திட்டங்ளோடு புறப்பட்டுவிட்டார்கள்” என்று.


கடந்த ஆண்டின் பிற்கூறில்  யாழ்ப்பாணத்தில்  யாழ்.நூலகக் கேட்போர் கூடத்தில் ஒரு நூல் வெளியீட்டுவிழா இடம்பெற்றது. தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரிலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளரின்  சிங்கள நூலின் தமிழ் மொழியாக்கமே  அந்த நூல். 

ஒரு காலம் தென்னிலங்கையில் மிகப்பரந்த அளவில்  தனியார் கல்வி நிலையங்களை  நடாத்திய  அந்தப் படைப்பாளி பின்னாளில் ஓர் சமூக அரசியல் செயற்பாட்டாளராக  மாறினார் என்றும் கூறப்படுகிறது.  அவருடைய நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில்  யாழ்.நூலகத்திற்கு  சுமார் பத்தாயிரம் நூல்களை அன்பளிப்புச் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கென்று தென்னிலங்கையில் பகிரங்கமாக அறிவித்தல் விடுக்கப்பட்டு பத்தாயிரம் நூல்கள் சேகரிக்கப்பட்டனவாம். 

இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த  ஒரு தொழிற்சங்கவாதியிடம் நான் கேட்டேன் “இந்த நூல்களில் எத்தனை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உள்ளன?” என்று. அவர் சொன்னார் “பெரும்பாலானவை சிங்கள நூல்களே” என்று “அப்படி என்றால் ஒன்றில் அவற்றை மொழி பெயர்க்கவேண்டும். அல்லது நாங்கள் சிங்களம் படிக்க வேண்டும்.  இது எப்படி  இனங்களுக்கிடையிலான கலந்துரையாடலாக அமையும்?” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார். “யாழ் நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்புச் செய்யும் போது வாசகரை கவனத்தில் எடுத்திருந்திருக்க வேண்டும்” என்று.  இப்படித்தான் மாற்றத்தின் பின்னரான  தேசியக் கலந்துரையாடல்   பெரும்பாலும் முன்னெடுக்கப்படுகிறது.


இந்த இடத்தில்  சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும். ஆட்சி மாற்றத்தின் முன்பு மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் மைத்திரி சுகாதார அமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு சந்திப்பு அது.  அதில்   சுகாதார சேவைகளில்  தாய்மொழிப்  பிரயோகம் பற்றி கேள்வி கேட்கப்பட்டதாம். அப்பொழுது  மைத்திரி சொன்னவராம் “பெரும் தொகையாகக் காணப்படும் சிங்கள மக்களுக்கு தமிழைக் கற்பிப்பதைவிடவும் சிறிய தொகையாகக் காணப்படும் தமிழர்களுக்கு சிங்களத்தைக் கற்பிப்பது ஒப்பீட்டளவில் இலகுவானது” என்று. இதை இப்படி எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது  ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில் இனங்களுக்கிடையிலான உரையாடலை  ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்கொள்ளத் தேவையில்லை.  இனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் எனப்படுவது எந்த அடிப்படைகளில்  எந்த உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுகிறது? என்பதைத் தான் இக்கட்டுரை கேள்வி கேட்கிறது.


இனங்களுக்கிடையிலான உரையாடல் எனப்படுவது உன்னதமானதே. ஆனால் அது எந்த  அடிப்படையில் நிகழ வேண்டும்?. சுதந்திரமான சகஜீவிகளான இரண்டு இனங்களுக்கிடையிலேயே நல்லிணக்கம் எற்படமுடியும். தமிழ் மக்களும் சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான சகஜீவிகளாக வாழ்வதற்குத் தேவையான வேர்நிலை மாற்றங்களை செய்யாமல் மேலோட்டமாக இனங்களுக்கிடையில் உரையாடல்களை ஊக்குவிக்க முடியாது.  ஒருவர் தன்னை வெற்றிபெற்றவராகவும் மற்றவரை தோல்வியுற்றவராகவும் பார்க்கும் பொழுது அங்கே  உரையாடல் நிகழ முடியாது.  தமிழ் மக்களை  இச்சிறிய தீவில் சுதந்திரமான சகஜீவிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் அதன் சரியான பொருளில் உரையாடல்கள் நிகழ முடியும். எனவே,  அடிப்படைகளை மாற்றாமல்  மேலோட்டமாக  இனங்களுக்கிடையில் உரையாடலை  ஊக்குவிக்கும் போது அதை வேறு உள்நோக்கங்களைக் கொண்டதோ என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது. 


இந்த ஆண்டு  ஒரு புதிய அரசியல் யாப்புக்கான  யோசனைகளைக் குறித்து  தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்களோடு உரையாடப் போவதாக அரசாங்கமும் மேற்குநாடுகளும் கூறுகின்றன.  ஒரு புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டால் அதன் மீது  பொதுமக்களிடம் ஒப்பம் கோர வேண்டியும் வரலாம். அப்பொழுது தமிழ் வாக்குகள் மறுபடியும் பெறுமதி மிக்கவைகளாக மாறக் கூடும்.  எனவே ஒரு குறுகிய காலகட்டத்தி;ற்குள் மாற்றத்தின்பால் அவர்களை மையல் கொள்ள வைப்பதன் மூலம்  அரசாங்கம் எதை அடைய முற்படுகிறது?.


நேற்று முன்தினம்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றும் பொழுது அவரும் வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்.  பொங்கல் நாளன்று  பலாலி வீதி நீட்டுக்கும் படையினரும் பொலிசாரும் வரிசையாக நின்றார்கள்.  பலாலி வீதியில் இருந்த உள்நோக்கிச் செல்லும் ஒவ்வொரு உப வீதியை நோக்கியும் ஒரு படைச்சிப்பாய்  நிறுத்தி வைக்கப்பட்;டிருந்தார். ஒரு புறம் தேசிய பொங்கல்விழா என்ற பிரகடனம் செய்யப்படுகின்றது. இன்னொருபுறம் ஒரு பிரதான சாலை நீட்டுக்கும்  பாதுகாப்பு ஏற்பாடுகளை  பலப்படுத்த வேண்டியிருக்கிறது. கடந்த மாதம் நத்தார் கொண்டாட்டத்திற்காக அரசுத் தலைவர்  யாழ்ப்பாணம் வந்தபொழுதும் இதே போல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


ஒரு புறம் நம்பிக்கையீனத்தையும்  பயப்பிராந்தியையும் வெளிப்படுத்தும் விதத்திலான  பாதுகாப்பு ஏற்பாடுகள். இன்னொரு புறம் இனங்களுக்கிடையில் உரையாடலை ஏற்படுத்தப் போவதாகக் கூறி  பண்டிகைள் கொண்டாட்டங்கள்.அதற்கு அவர்கள் வைத்தி;ருக்கும் பெயர் நல்லாட்சி.
15.01.16

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127936/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை பதவியில் இருந்து இறக்கி மைத்திரி நல்லாட்சி அமைத்ததே தமிழ் மக்களுக்கான தீர்வு. மைத்திரி-ரணில் அரசின் கருவிகளாக இயங்கும் கூட்டமைப்பும் அதன் விசுவாசிகளும் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை மயங்கிய நிலையில் வைத்திருப்பதைத் தவிர வேறு ஒன்றும் உருப்படியாகச் செய்யப்போவதில்லை. இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வை அதிகரிக்க மைத்திரி சொன்னதுபோல் குறைந்தளவு சனத்தொகையாக உள்ள தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்றுக்கொள்வதுதான் நீண்டகாலத் தீர்வாக அமையும்<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.