Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாரை தப்பட்டை: காட்சிகளின் வன்முறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாரை தப்பட்டை: காட்சிகளின் வன்முறை

சுகுமாரன்

 

tharai-01.jpg

 

'சேது’ (1999)வைத் தவிர இயக்குநர் பாலாவின் எந்தப் படத்தையும் தனிப்படமாக எடுத்துக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட படத்தைப் பற்றி மட்டுமே பேசுவது சற்றுச் சிரமமானது.

அவரது சமீபத்திய படமான ‘தாரை தப்பட்டை’யும் பார்வையாளனுக்கு நேரும் இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டதல்ல. புதிய படத்தைப் பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. முந்தைய படங்களின் சாயல் புதிய படத்தை ரசிக்கவிடாத வகையில் நிழலாடுகின்றன. கதை அமைப்பு, காட்சி நகர்வு, கதாபாத்திரச் சித்திரிப்பு உட்படப் பல அம்சங்களிலும் பழைய ஏதேனும் படத்தை நினைவுறுத்துகின்றன. ‘தாரை தப்பட்டை’யிலும் இந்த சங்கடத்தைப் பார்வையாளன் உணர்கிறான்.

இதன் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பாலாவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே சகல ஊடகங்களிலும் பார்வையாளனை உசுப்பும் கைங்கர்யம் தொடங்கி விடுகிறது. ‘இதோ வரவிருக்கிறது உலகத் தரமான தமிழ் சினிமா’ என்ற எதிர்பார்ப்பு உருவாக்கப்படுகிறது. ஊடகச் சூழலும் திரையுலக வட்டாரங்களும் மட்டுமல்ல சீரிய இலக்கியவாதிகளும் இந்த எதிர்பார்ப்பை நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டி விடுகிறார்கள். இது முதல் காரணம். இரண்டாவது காரணத்தை பாலாவே உருவாக்குகிறாரோ என்று சந்தேகம் எழுகிறது. ஒரு படத்தை அறிவித்த பின்னர் அவர் மேற் கொள்ளும் உத்திகள் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்து கின்றன. படத்தில் நடிக்க விருப்பதாக முதலில் அறிவிக் கப்படும் நாயகன், நாயகியர் மாற்றப்படுகிறார்கள்; இசை அமைப்பாளர் மாற்றப்படுகிறார். உரையாடல் எழுதுபவர் மாற்றப்படுகிறார். தயாரிப்பாளர் மாற்றப்படு கிறார். கதை மாற்றப்படுகிறது. சமயங்களில் படமே கைவிடப் பட்டதாகச் சொல்லப்பட்டு மறு பிறப்பெடுக்கிறது. படம் தயாரிப்பு நிலையிலேயே நீண்ட காலம் இருக்கிறது. இவையெல்லாம் திரைப்பட ஆக்கத்தில் தவிர்க்க இயலாதவை. ஒருவேளை இந்தப் பின்னணி குறிப்பிட்ட படத்தின் சந்தை மதிப்பைக் கூட்டுவதாகவும் அமையலாம்; ரஜினிகாந்தின் வெகுஜன சினிமாவுக்கு அமைவதுபோல. ஆனால், பாலாவின் படங்களைப் பொறுத்தவரை இந்தப் பின்னணிகளே அதிகம் பேசப்படுகின்றன. ‘தமிழ்ச் சினிமாவின் போக்கைப் புரட்சிகரமாக மாற்றியவர்களில் ஒருவர்’ என்று புகழ் பெற்ற மலையாளக் கலைப்பட இயக்குநரான ஷாஜி. என்.கருணாலும் (56ஆவது தேசிய விருது நடுவர் அறிக்கை). ‘பாலாவிடமிருந்து கற்றுக்கொள்கிறேன்’ என்று இந்தித் திரையுலகில் மாற்று சினிமாவை உருவாக்குபவராகச் சொல்லப்படும் அனுராக் காஷ்யப்பாலும் போற்றப்படும் இயக்குநரான பாலாவுக்கு இந்தப் பின்னணிகள் எதிர்மறை விளைவையே ஏற்படுத்துகின்றன. வழக்கமாக இந்த எதிர்மறை விளைவு பாலாவை மட்டுமே விமர்சனத்துக்கு உள்ளாக்கும். இந்த முறை இந்திய சினிமாவின் ஆகப் பெரிய இசைக் கலைஞரான இளையராஜாவும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். அவரது இசையமைப்புடன் வெளிவந்த ஆயிரமாவது படம் அவருக்கு எந்த மதிப்பையும் கூட்டவில்லை.

உண்மையில் இந்தப் பின்னணிகளைப் பற்றிப் பார்வையாளன் தெரிந்துகொள்ள எந்தத் தேவையுமில்லை. அவன் முன்னால் வைக்கப்பட வேண்டியது முழுமையாக்கப்பட்ட ஒரு திரைப்படமே. அதைப் பார்த்த பின்னரே தனது சுதந்திரமான விருப்பு வெறுப்புகளுக்கு அவன் வந்து சேர்கிறான். தனது ரசனைக்கும் புரிந்துகொள்ளலுக்கும் ஏற்ப அதைப் பற்றிய கருத்தை உருவாக்கிக்கொள்கிறான். மேற்சொன்ன காரணங்கள் விதிக்கும் முட்டுக்கட்டை மூலம் அவனால் சுயரசனை சார்ந்து படத்தைப் பார்க்க முடிவதில்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட அபிப்பிராயங்களுடனேயே பார்க்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதும் அலுப்படைகிறான். ‘இதுவும் வழக்கமான பாலா படம்’ என்ற விரக்தியூட்டும் முடிவுக்கு வருகிறான். ‘தாரை தப்பட்டை’ பற்றிய பெரும்பாலான கருத்துகளைப் பார்த்தால் இது புரியும். ஒரு படைப்பாக இந்தப் படம் எந்தப் புதிய அனுபவத்தையும் அளிக்கவில்லை.உருவாக்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

ஆனால் ‘தாரை தப்பட்டை’ படத்தின் மையமாக பாலா எடுத்துக்கொண்டிருக்கும் இழை உண்மையில் மிக நேர்த்தியான படமாகவும் ஒரு கலைஞனின் அக்கறையை வெளிப்படுத்தும் படமாகவும் உருப்பெற்றிருக்க முடியும். பாரம்பரியக் கலையை நம்பி வாழும் கலைஞர்கள் நவீன உலகின் சுரண்டல்களுக்கு எப்படிப் பலியாகிறார்கள் என்பதுதான் இந்தக் கதையின் மையம். ஆனால் மூன்றுக்கும் மேற்பட்ட கிளைக் கதைகளை ஒட்டவைத்து மையக் கதையைச் சிதைத்திருக்கிறார் பாலா.

பாரம்பரியக் கலைஞரான சாமிப்புலவர் வெகுஜன சமரசங்களுக்கு ஆட்படாமல் கலையைப் பேண விரும்புகிறார். தோல்வியடைந்து முழுநேரக் குடிகாரர் ஆகிறார். அவர் குளித்துக்கொண்டிருப்பதாக வரும் காட்சியைத் தவிர அவர் குடிக்காமலிருக்கும் காட்சி ஒன்றுகூட படத்தில் இல்லை. தந்தையும் வித்தை கற்றுக் கொடுத்த குருவுமான சாமிப்புலவரின் அணுகுமுறைக்கு மாறாக கலையில் ஜனரஞ்சகத்தன்மைக்கு இடம் கொடுக்கும் மகன் சன்னாசியின் அனுபவங்கள் இன்னொரு கிளைக் கதை. சன்னாசியை விரட்டி விரட்டிக் காதலிக்கும் சன்னாசி கலைக்குழுவின் நட்சத்திர ஆட்டக்காரியான சூறாவளியின் காதல் நிராகரிப்பும் அழிவும் மூன்றாவது கிளைக் கதை. மூன்று கதைகளில் எந்தக் கதையும் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை என்பதுதான் படத்தின் பெரும் குறை.

கலையில் சமரசத்துக்கு ஒத்துக்கொள்ளாத சாமிப் புலவர் தனது ‘கலைத் திமி’ரின் விளைவாக வீட்டோடு முடங்கிக்கிடக்கிறார். அவரைப் பேட்டி காண வரும் தொலைக்காட்சியினரிடம் சகல வாத்திய விற்பன்னராகவே அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர்களது பதிவுக்கு தவில் வாசிக்கிறார். காட்சிப்படி அவரை தவில் கலைஞராகவே பார்வையாளன் உள்வாங்கிக்கொள்கிறான். ஆனால் பின் பகுதிக் காட்சி இந்த எண்ணத்தைக் குலைக்கிறது. தொழில் நசிந்து, கச்சேரிகள் கிடைக்காத நிலையில் குழுவினருக்காக இழவுக்குத் தப்படித்துப் பாடிய சன்னாசியைத் தூற்றுகிறார் சாமிப்புலவர். ‘நீ இப்ப உக்காந்து சாப்பிடறியே அது நான் போடற பிச்சை’ என்று சீறும் மகனுக்குத் தனது கலைத் திறமையை நிரூபிக்க சாஸ்திரீய பாணியில் விருத்தத்தில் தொடங்கி வாய்ப்பாட்டுப் பாடுகிறார். இடையில் யாழ் போன்ற நரம்புக் கருவியையும் மீட்டுகிறார். ஆனால் காட்சியின் தொடக்கத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் புலவர் வாசிக்க ஆயத்தமாவது காற்று வாத்தியத்தை. இசைக் கலைஞராக உருவாக்கப்பட்ட பாத்திரம் எல்லா வாத்தியக் கருவிகளையும் வாசிப்பவராகச் சித்தரிக்கப்படுவது அபத்தம். சரியாகச் சொன்னால் இசை பற்றிய அறியாமை. ஒவ்வொரு வாத்தியக் கருவிக்கும் அதற்கான பயிற்சிமுறைகளும் வாசிப்புமுறைகளும் உண்டு. ஆனால் சினிமாவுக்காக சகலகலா வல்லவராக ஒரு பாத்திரத்தை உருவாக்கும் இந்த அபத்தம் அந்தப் பாத்திரத்தையே கேலிக்குரியதாக்குகிறது. அதன் பின்னர் அந்தப் பாத்திரம் பங்கேற்கும் கதையில் பார்வையாளனுக்கு என்ன ஒட்டுதல் வரும்? இந்த ஒவ்வாமை அந்தக் கிளைக்கதையை அந்தரத்தில் தொங்க விடுகிறது.

சன்னாசி ஒரு கலைக் குழு நடத்துகிறான். அவனும் சகல வாத்திய விற்பன்னன். பாடகன். ஆட்டக்காரன். குழுவின் நட்சத்திர ஆட்டக்காரி சூறாவளி. குழுவில் உறுமி, பம்பை, தவில், பறை என்று எல்லா வாத்தியங்களும் இடம் பெறுகின்றன. இவ்வளவு வாத்தியங்கள் ஒன்றிணைந்த ஒரு குழு சாத்தியமா? அதுவும் மேளக்காரர்களின் நிகழ்ச்சியில் அமங்கல வாத்தியமாகக் குறைத்துச் சொல்லப்படும் பறை சேர்க்கப் படுமா? சேர்க்கப்படும் என்று வைத்துக்கொண்டாலும் இந்த வாத்திய இசைக்கு பெண் கலைஞர்கள் ஆடுவது என்ன மாதியான ஆட்டம்? எந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தது? இந்த அடிப்படையான கேள்விகள் கண்டு கொள்ளப்படாமல் சினிமாத்தனமான ஒரு இசைக் குழுவைக் காட்டி அதன் வீழ்ச்சியைப் பற்றிப் புலம்புவது பார்வையாளனிடம் எந்த உணர்வையும் ஏற்படுத்துவதில்லை. இப்படி ஒரு குழு சாத்தியம் என்று ஒப்புக்கொண்டாலும் காட்சிகளில் அவர்களது வாழ்க்கை சொல்லப்படவே இல்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் இந்தக் கிளைக் கதை இன்னும் வலுவானதாக இருந்திருக்கக் கூடும். அதற்கான சான்றுகள் கதை போக்கிலேயே இருக்கின்றன. கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது சன்னாசியின் கலைக் குழு. அழைத்தவர்களின் நோக்கம் கலை வளர்ப்பு அல்ல; ஆட்டக்காரப் பெண்களைத் துய்ப்பது என்பது தெரியவருகிறது. வெகுண்டெழுந்த சூறாவளியின் அதிரடித் தாக்குதலால் ஊர் திரும்பும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. அந்தக் கலைஞர்களுக்கு தங்களது ஆட்டத்தையும் வாசிப்பையும் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாத நிலையில் நிர்க்கதியாக திசை தெரியாத ஊரில் அலைகிறார்கள். கட்டுமான வேலைக்குப் போய் வேலை தெரியாத குழப்பத்தால் பட்டினிக்குத் தள்ளப்படுகிறார்கள். அங்கே ஒரு பெரும் அவலக் கதைக்கான களம் விரிந்து கிடக்கிறது. ஆனால் பாலா அதை மேம்போக்கவும் வேடிக்கையானதாகவுமே காட்சிப்படுத்துகிறார். சன்னாசி மீதான சூறாவளியின் காதலுக்கு அழுத்தம் கொடுக்க மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார். ‘ஒரு பன்னுக்கும் டீக்குமாடா காசில்லாமப் போச்சு. பசி தாங்க முடியல’ என்று புலம்பும் சன்னாசியின் பசியைத் தீர்ப்பதற்காக மட்டுமே கச்சை கட்டி ஆடிக் காசு திரட்டுகிறாள் சூறாவளி. ‘என் மாமன் பசியைத் தீக்கறதுக்கு அம்மணமாகக்கூட ஆடுவேன்’ என்று சூறாவளி சொல்லும் வசனமே இந்தக் கிளைக் கதையின் உச்சம்.

சன்னாசி - சூறாவளி காதல்தான் மூன்றாவது கிளை. முதற் காட்சியிலிருந்தே படம் இந்தக் கிளைக் கதையை விரித்துச் செல்லத்தான் முயல்கிறது. இசைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பின்புலத்தில் ஒரு காதல் கதையைத்தான் பாலா சித்திரிக்கிறார். பட்டினிக்குத் தள்ளிவிடும் இந்தப் பாழாய்ப் போன கலை வாழ்க்கையிலிருந்து சூறாவளிக்குப் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கட்டும் என்று நம்பி தனது காதலைத் துறக்கிறான் சன்னாசி. அதுவரை மாமனைத் தவிர மற்றவர்க்கென்று வாழ்க்கைப் படேன் என்று வீம்பாக இருக்கும் சூறாவளி அரசாங்க வேலைபார்ப்பவன் என்று சொல்லும் கருப்பையாவை மணந்துகொள்கிறாள். பின்னர் சொந்தத் தாய்க்குத் தெரியாமல் மறைகிறாள். பெண் தரகனான கருப்பையாவின் பிடியில் சிக்கி அவல வாழ்க்கை வாழும் கதையை அவள் மூலமாகவே தெரிந்துகொள்கிறான் சன்னாசி. அந்த இழிநிலைக்குக் அவளை ஆளாக்கிய கருப்பையாவை வதம் செய்து பழி தீர்ப்பதில் அந்தக் கதையும் முடிகிறது.

இந்த மூன்றாவது கதைக்குள் மிக நுட்பமான ஒரு கதை இருப்பதை பாலா பொருட்படுத்தவில்லை என்பது விநோதம். பெண் வணிகத்துக்குள் தள்ளப்பட்ட சூறாவளியை இன்னொரு தேவைக்காகப் பயன்படுத்துகிறான் கருப்பையா. வாரிசு இல்லாத பணக்காரர் ஒருவருக்குப் பிள்ளை பெற்றுத் தரும் வாடகைத் தாயாக அவளை மாற்றுகிறான். பணக்காரரின் விந்தைத் தனது கருப்பையில் தாங்கிய சூறாவளி பிரசவத்தின்போது சாகடிக்கப்படுகிறாள். கலையை நம்பி வாழ்ந்த ஒரு பெண், செழிப்பாக இருந்த காலத்தில் வெறும் நுகர்பொருளாகப் பார்க்கப்பட்டாள். காமப் பசிக்கான சதைத் தீனியாகக் கருதப்பட்டாள். அதே பெண் இன்று அதி நவீன உயிரியல் தொழில் நுட்ப யுகத்தில் பிள்ளை பெறும் உயிர்ப் பாண்டமாகப் பார்க்கப்படுகிறாள். அவளது கலை வாழ்க்கை இதைத்தானா கொடுத்தது என்ற கேள்வியை இந்த இழை எழுப்புகிறது. அதைச் சொல்ல முனைந்திருந்தால் படம் வேறாக ஆகியிருக்க முடியும். சம காலச் சிக்கல் ஒன்றை விசாரிப்பதாக ஆகியிருக்கும். அதற்கு கலை சார்ந்த பொறுப்புணர்வும் பரிவும் அவசியம். அது தன்னிடம் இல்லை என்பதையே பாலா இந்தப் படத்தில் பகிரங்கப்படுத்துகிறார்.

‘சேது’ படத்தின் மூலம் பாலா தமிழ் சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். காட்சிகளில் வெளிப்படையான தன்மையை முன்வைத்தார். அதைப் பின் வந்த படங்களில் தொடரவும் செய்தார். அதிகம் கவனத்துக்குள்ளாகாத விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பின்புலமாக்கினார். அப்பட்டமான பழக்க வழக்கங்களைக் காட்சிப் படுத்தினார். (காலில் காயம்பட்ட சூறாவளி மாமன் சன்னாசியை கழிப்பறைக்கு தூக்கிச் செல்லவைக்கும் ‘தாரை தப்பட்டை’ காட்சி உதாரணம்), உரையாடல்களில் பச்சையான வழக்குகளை அப்படியே எடுத்துக்கொண்டார். ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளைச் சித்திரித்தார். சுருக்கமாகச் சொன்னால் ஒரு அப்பட்டமான சினிமா மொழியை உருவாக்கினார். ஒரு கலை என்ற நிலையில் இவையெல்லாம் சினிமாவில் இடம் பெறத் தகுந்தவைதாம்; இடம் பெற்றிருப்பவையும் கூட. ஆனால் பாலா தனது படங்களில் இந்தத் திரை மொழியை எந்த நுண்ணுணர்வுமில்லாமலே பயன்படுத்துகிறார். இவை தரும் பரபரப்புக்காகவும் பார்வையாளனிடம் ஏற்படுத்தும் அதிர்ச்சிக்காகவுமே இவற்றைக் கையாளுகிறார். இதை ஒரு சூத்திரமாகவே - ஃபார்முலாவாகவே - பயன்படுத்துகிறார். இந்த சூத்திரத்தை திரும்ப உபயோகிப்பதற்காகவே படங்களை எடுக்கிறார் என்பதைக் குற்றச்சாட்டாகவே முன்வைக்கலாம். ‘தாரை தப்பட்டை’ சமீபத்திய உதாரணம் மட்டுமே.

பாலாவின் எல்லாப் படங்களையும் அவரே உருவாக்கிய சூத்திரங்களை வைத்து மதிப்பிட முடியும். முதன்மைப் பாத்திரங்கள், நாயகனோ, நாயகியோ வன்முறையாகக் கொல்லப்படுவார்கள். தாரை தப்பட்டையில் நாயகி சூறாவளி, பிணவறைப் பணியாளனால் கொல்லப்படுகிறாள். பெண்கள் எதற்கும் வெளிப்படையாகப் பேசுபவர்களாக, துணிச்சல்காரிகளாக இருப்பார்கள்; சூறாவளி பிராவைக் காட்டி ‘எனக்கு இந்த சைஸ் சரியா இருக்குமா மாமா? நீதான் உத்துஉத்துப் பாக்கிறியே சைஸ் தெரியாது?’ என்று தயக்கமில்லாமல் கேட்கிறாள். சன்னாசியை அவமதிக்கிறவர்களைத் துவம்சம் செய்கிறாள். துணைப் பாத்திரங்கள் உடற்குறையோ மனக் குறையோ கொண்டவர்களாக இருப்பார்கள். ‘தாரை தப்பட்டை’யில் சன்னாசியுடன் இருக்கும் வாத்தியக் கலைஞர் உயரம் குன்றியவர். பழைய தமிழ் சினிமாப் பாடல்கள் பின்னணியாகவோ அசரீரியாகவோ ஒலிக்கும். இந்தப் படத்தில் அந்தச் சூத்திரம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தங்கப் பதுமைப் படத்தில் இடம் பெற்ற ‘ஆரம்பமாவது கண்ணுக்குள்ளே’ பாடலை சன்னாசி பாடுகிறான். வெகுஜனக் கலாச்சாரத்தைப் பகடி செய்யும் தமிழ் சினிமாப் பாடல்களின் தொகுப்பு ஒன்று இடம் பெறும். தாரை தப்பட்டையில் நடிகர் அமுதவாணன் எல்லாப் பிரபல பாடல்களையும் இரட்டை அர்த்தம் தொனிக்கப் பாடுகிறார். போலீஸ்காரர்கள் ஏளனமாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். ‘மொட்டையடிச்சு ஏன்யா அசிங்கப்படுத்துற?’ என்று இறக்கப்படும் போலீஸ்காரரை அடக்குகிறான் கருப்பையா. எல்லாப் படங்களும் குருதி கொப்பளிக்கும் வன்முறையில் முடியும். கருப்பையாவை இழுத்துப் போட்டுக் கொல்லுகிறான் சன்னாசி.

ஒரு இயக்குநராகவும் திரைக்கதையாளராகவும் பாலா வறியவர் என்பதையே இவை நிரூபிக்கின்றன. அவரிடம் திரைப்படமாக்கத்துக்கான மூலப் பொருட்களும் அதை வளர்த்தெடுப்பதற்கான கற்பனையும் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கிறது என்பதை இவை சொல்லாமல் சொல்லுகின்றன. திரும்பச் செய்தல் ஒருவகையில் கலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். உலகப் புகழ்பெற்ற இயக்குநர்கள் பலரும் வரையறுக்கப்பட்ட மூலப் பொருட்களிலிருந்து படைப்பை உருவாக்கியவர்கள்தாம். இரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் படங்களை உதாரணமாகச் சொல்லலாம். குழந்தைகளும் குழந்தைகள் சார்ந்த உலகமுமே அவரது படைப்புக்கான மூலம். ஆனால் ஒரு படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியைப்போலவோ, ஒரு ஷாட்டைப் போலவோ இன்னொரு படத்தில் காட்சியையோ ஷாட்டையோ பார்ப்பது அரிது. அண்டை மாநிலமான கேரளத்தின் புகழ்பெற்ற இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் படங் களிலும் இதே வரையறை உண்டு. அதே நாலுகட்டு வீடு, அதே நிலவிளக்கு, அதே கிண்டி, அதே சூழல். எனினும் இந்த சிக்கனமான மூலப்பொருள்களிலிருந்தே ஒவ்வொருமுறையும் புதிய கோணத்திலும் பார்வையிலும் படங்களை உருவாக்குகிறார். மிகக்குறைந்த மூலப் பொருள்களிலிருந்து அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு படமும் மாறுபட்டது. ஒன்றை விட ஒன்று புதுமையானது. அந்த மாறுதலையும் புதுமையையும் சாத்தியப்படுத்துவது அந்தத் திரைக் கலைஞரின் கற்பனையும், எடுத்துக்கொள்ளும் கதைப் பொருள்மீது அவர் காட்டும் உண்மையுணர்வும் தனது கதாபாத்திரங்கள் மீது அவர் வைக்கும் பரிவுமே. பாலாவின் படங்களை ஒரே படத்தின் நையப்புடைக்கப்பட்ட சக்கையாகப் பார்வையாளன் உணர்வது இந்த அம்சங்களின் பற்றாக்குறையால்தான்.

தனது பார்முலாவையே திரும்பச் செய்வதனால் பாலாவின் கற்பனை வறட்சி வெளிப்பட்டு விடுகிறது. கதைப் பொருள்மீது அவர் காட்டும் அசிரத்தை பார்வையாளனைத் தொந்தரவு செய்கிறது. ‘தாரை தப்பட்டை’யின் கதைக்களம் தஞ்சாவூர் என்று காட்டப்படுகிறது. பார்ப்பவர்கள் கவனிக்க மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் முதல் காட்சியே தஞ்சைப் பெரிய கோபுரத்தைக் காட்டுகிறது. இன்னும் அழுத்தமாகச் சொல்ல தஞ்சாவூர் என்று எழுத்தும் இடம் பெறுகிறது. அதையும் மறந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில் ‘சன்னாசி கலைக்குழு, படித்துறை, தஞ்சாவூர்’ என்றும் காட்டப்படுகிறது. சரி, ஆனால், இந்தக் களத்துக்குள் நிகழும் கதையில் அந்தக் களத்தின் மொழியோ பிற அடையாளங்களோ வருவதேயில்லை. சன்னாசி ‘கொண்டே போடுவேன்’ என்று மதுரை வழக்கில் சீறுகிறான். தஞ்சாவூர் என்று அழுத்தமாகச் சொல்லப்பட்ட களத்தின் ஒரு அடையாளம் கூடத் திரையில் இடம் பெறுவதில்லை. அப்படியென்றால் அந்த இடம் ஏன் வலியுறுத்திக் காட்டப்படுகிறது? கலைகள் தஞ்சாவூரில்தான் செழித்து வளர்ந்தது என்ற பொதுப் புத்தியின் பிரதிபலிப்பு அது.

tharai-02.jpg

 

வன்முறைக் காட்சிகள் பாலாவின் படங்களில் இடம்பெறுகின்றன. அநேகமாக எல்லாப் படங்களின் உச்சக்கட்ட காட்சிகளும் வன்முறையிலேயே முடிகின்றன. தான் எடுத்துக்கொள்ளும் கதைகள் இந்த அளவுக்கான வன்முறையை கோருகின்றனவா என்பது அவர் மட்டுமே பதில் சொல்லமுடிந்த கேள்வி! இந்த வன்முறைக் காட்சிகள் பார்வையாளனை வெருட்டுகின்றன. சமயங்களில் இவை வக்கிரமானவையாகவும் உணரப்படுகின்றன. இதற்குப் பதிலாக எதார்த்த வாழ்க்கையில் வன்முறை இல்லையா என்ற எதிர்க் கேள்வி கேட்கப்படுகிறது; இருக்கிறது. ஆனால் அது அப்படியே வெளிப்படுத்த ஒரு கலைஞன் தயங்குவான். ஏனெனில் படைப்பு அப்பட்டமாக சொல்வதல்ல, குறிப்பால் உணர்த்துவது; குறிப்பாகத் திரைப்படம். திரைப்படத்தின் எல்லா இயக்கங்களும் இயக்குனரால் சித்திரிக்கப்படுபவை. அவை உண்மைபோல தோன்றும் பொய் அல்லது பொய்யான நிஜம். சசிகுமாரும் சன்னாசி அல்ல. வரலட்சுமியும் சூறாவளி அல்ல. ஆனால் சசிகுமார், வரலட்சுமி என்ற நடிகர்கள் மூலமே சன்னாசியையும் சூறாவளியையும் நாம் பார்க்கிறோம். நடிகரும் கதாபாத்திரமும் வேறு என்பதையும் உணர்கிறோம். இந்தக் குறிப்பு உணர்த்தல்தான் சினிமாவை கலையாக்குகிறது. தான் உருவாக்கிய பாத்திரங்கள்மீது குறைந்தபட்ச அனுதாபமோ பரிவோ உள்ளப் படைப்பாளி அதைத்தான் செய்வான். கலைக்கு வன்முறையும் ஒரு பொருள்தான். ஆனால் வன்முறையே கலை அல்ல. பாலா இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்வதில்லை என்பதை அவரது படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தாரை தப்பட்டை அதை உறுதிப்படுத்துகிறது.

இந்த வன்முறையின் இன்னொரு தரப்பாக வக்கிரமான காட்சிகளும் இடம்பெறுகின்றன. விபச்சாரத்துக்கான அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் கருப்பையாவிடமிருந்து தப்பி விடுகிறார்கள். அவர்களைத் திரும்பப் பிடித்துவந்து தண்டிக்கிறான். அவர்கள் தனியாகத் தொழில் செய்துவிடக்கூடாது என்று அவர்களுக்கு மொட்டையடிக்கச் செய்கிறான். ஒரு பெண்ணுக்கு மொட்டையடிப்பதாக காட்டினாலேயே நம்மால் இதைப் புரிந்துகொள்ள முடியும். பாலா அந்த ஐந்து பெண்களுக்கும் முடி மழிப்பதை விஸ்தாரமாக காட்சிப்படுத்துகிறார். இது பாத்திரங்களின்மீதான வக்கிரம். கூடவே பார்வையாளனின் ரசனை மீதான அத்துமீறல். தமிழ் சினிமாவில் இரண்டு பூக்களை அருகருகே காட்டி மோதவிட்டாலேயே ‘முத்தம் குடுத்துக் கிட்டாங்க’ என்று புரிந்துகொள்ளும் எளிய ரசிகனுக்கும் இருக்கும் பார்வையேர்ப்புத் திறன்மீதான அத்துமீறல்.

இலக்கியவாதிகளின் பங்களிப்பைப் பாலா சில படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். தாரை தப்படையிலும் அப்படியொன்றைச் செய்து இருக்கிறார். ஆஸ்திரேலிய தூதர் முன்னிலையில் சாமிப்புலவர் பாடுகிறார். பாட்டைக்கேட்டு மனமுருகி கசிந்த அந்நியர், புலவரைப் பாராட்டுகிறார். ‘நீங்கள் பாடினது என்னவென்று தெரியாது, பாட்டின் மொழி தெரியாது, ஆனால் எனக்குள் கடவுள் இருப்பதை உங்கள் பாட்டின் மூலம் உணரமுடிந்தது என்கிறார்’. சாமிப்புலவர் பாடிய பாட்டின் வரி ‘என் உள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்’. ‘சரியாத்தான் புரிஞ்சுகிட்டான்னு சொல்லு’ என்று பெருமிதப்படுகிறார் புலவர். நான் ஜெயிச்சிட்டேன்டா மவனே என்று சன்னாசியிடம் சொல்லுகிறார். இந்தச் சம்பவம் தி. ஜானகிராமனின் புகழ்பெற்ற சிறுகதையான ‘செய்தி’ கதையின் மையம். அதை அலுங்காமல் அபகரித்திருக்கிறார் பாலா.

பாலாவின் திறமை வெளிப்படுவது பெரும்பாலும் கதாபாத்திர வார்ப்பில்தான். சாதாரண மனிதர்களை அசாதாரணமானவர்களாகச் சித்திரிக்கிறார். ஆனால் அந்தப் பாத்திரங்கள் தர்க்கரீதியாக எந்த வளர்ச்சியையும் அடைவதில்லை. மாறாக, படைத்தவனை மீறி வீங்குகிறார்கள். தன் கைமீறி வீங்கும் இந்த பாத்திரங்களைப் பணியவைக்க பாலா ஒரே தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறார். அவர்களைக் கொன்று விடுகிறார். இந்த படத்தில் அப்படி கதிமோட்சம் பெறும் பாத்திரங்கள் சூறாவளியும் கருப்பையாவும் ஓரளவுக்கு சாமிப்புலவரும்.

தாரை தப்படை படத்தில் பாராட்ட தகுந்த அம்சங்களே இல்லையா? இருக்கின்றன. சூறாவளியாக வரும் வரலட்சுமியின் பாசாங்கு இல்லாத நடிப்பு. இன்றைய தமிழ் சினிமாவில் மிகத் தேர்ந்த நடிப்பு வாத்தியார் பாலாதான் என்பதை வரலட்சுமி உறுதிப்படுத்துகிறார். ‘போடா போடி’ என்ற அறிமுகப் படத்தில் பார்த்த வரலட்சுமியை நடிப்புச் சூறாவளியாக்கிய பெருமை பாலாவுக்கே உரியது. இரண்டாவது பாராட்டு ஒளிப்பதிவாளர் செழியனுக்கு. கதாபாத்திரங்களின் மனநிலையையும் சூழலையும் கவனத்தில் வைத்து மேற்கொண்டிருக்கும் நேர்த்தியான ஒளிப்பதிவு. ஆனால் அதே ஒளிப்பதிவாளர் ஆட்டக்காரப் பெண்களின் புட்டங்களை மேய்வதுபோல லோ ஆங்கிள் ஷாட்டுகளையும் எடுத்திருப்பது துரதிர்ஷ்டம் அல்லது இயக்குநரின் நிர்ப்பந்தம். ஆயிரம் படம் கண்ட இளையராஜாவும் பாராட்டுக்குரியவர். ஆனால் தனது ஆயிரமாவது பங்களிப்பைக் கொண்டாடிக்கொள்ளும் வகையிலான இசைக்கு தாரை தப்பட்டை இடம்கொடுக்கவில்லை என்பது சோகம். உச்சக்கட்ட சண்டைக்காட்சியில் இளையராஜாவின் இசைக்கோர்வை அபாரமானது. ஆனால் ரத்தக்களரியான காட்சிப்பிம்பங்கள், பார்வையாளர்களின் செவிகளை குருடாக்கிவிடுகின்றன. இளையராஜா இசையமைத்து இருக்கும் ஆயிரம் படங்களில் அவரது இசைக்கு பொலிவுகொடுத்த படங்களின் எண்ணிக்கை நூற்றுக்குள் மட்டுமே அடங்கும். அந்தப் பட்டியலில் தாரை தப்பட்டை இருக்காது என்பது அந்த மகாகலைஞனுக்கு நேர்ந்திருக்கும் துர் விதி.

http://www.kalachuvadu.com/issue-194/page44.asp

தாரை தப்பட்டை என்ற சினிமா ஒரு மனப்பிறழ்வு கொண்ட இயக்குநரின் சினிமா என்ற அளவில் தான் இப்படத்தினை வகைப்படுத்துகின்றேன். ஐ.எஸ் போன்ற அதி பயங்கரவாதிகள் கூட பாலாவிடம் இருந்து வன்முறை பாடம் படிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.