Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியார் கூறிய சமதர்மம்.

Featured Replies

சமதர்மமும் வகுப்புரிமையும்

- வ.கீதா

1940களில் கம்யூனிசத் தோழர்களுடன் பொதுவுடமை குறித்து விவாதிக்கையில் பொதுவுடமை என்பது வேறு, சமதர்மம் என்பது வேறு என்றும், பொதுவுடமை என்பது கணக்கு சம்பந்தமுடையது- எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் - ஆனால் சமதர்மம் என்பதோ உரிமை தொடர்பானது என்றும் பெரியார் வாதிட்டார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரது நடத்தையும், மதிப்பும், உரிமையும் தீர்மானிக்கப்படும் மனுதர்ம சமுதாயத்தை சீர்திருத்த, மாற்றியமைக்க பொது அறமும் பொது உரிமையும் பேசும் சமதர்மம் தேவை என்றும் அவர் விளக்கினார்.

கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்த வகுப்புரிமை வழங்கப்படலுக்கு எதிரான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமானது பொது அறத்துக்கும் பொதுமை உணர்வுக்கும் எதிரானதாகவே அமைந்தது. தகுதி, திறமை ஆகியவற்றை பிறப்பு மட்டுமே தீர்மானிக்கிறது என்ற கருத்தைத் தான் போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களும் அவர்களை கிளர்ச்சியாளர்களாக காட்ட விரும்பிய தகவல் தொடர்பு சாதனங்களும் திரும்பத் திரும்பவும் வலியுறுத்தினர். இவர்களைப் பொறுத்தவரை பெரியாரோ அம்பேத்கரோ சாதித்த மாபெரும் அறிவுப் புரட்சியும் சமுதாயப்புரட்சியும் நடைபெறவேயில்லை. கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக நாடெங்கும் நடைபெற்று வந்துள்ள தலித் எழுச்சி வெறும் மாயை. அம்பேத்கர் கூறியது போல, இந்த சாதி இந்துக்களையும் பார்ப்பனர்களையும் பொறுத்தவரை தத்தம் சாதிகள்தான் மனிதவர்க்கமாக கருதப்படவேண்டியவை. இவர்கள் கோரும் ‘நீதி’யும் ‘சமத்துவமு’ம் சுய சாதிக்காரர்களுக்கு மட்டுமே உகந்த பண்புகள், இலட்சியங்கள். பெரியார் காண விரும்பிய பொதுஉரிமைக்கு இலாயக்கற்ற வர்களாக, சனநாயக வாழ்வுக்கு அருகதையற்றவர்களாகவே இவர்கள் தம்மைக் காட்டிக் கொண்டனர்.

வட மாநிலங்களில் அரங்கேறிய பிற்போக்குத்தனமான அரசியலையும் அதற்கு ஆதாரமாயிருந்த வருணக் கருத்தியலையும் நோக்கு நிலையையும் தென்மாநில அரசியல் பிரமுகர்களும் அறிவாளிகளும், குடிமைச் சமுதாய அமைப்புகளும் மிகச்சரியாகவே கண்டித்துள்ளன. குறிப்பாக வரலாற்று ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துடனும், திராவிட இயக்கத்துடனும் ஒத்துப்போகக் கூடியவர்களும், தலித் எழுச்சியை வரவேற்பவரும் இத்தகைய கண்டனத்தை மிக ஆணித்தரமாக முன்வைத்துள்ளனர்.

வகுப்புரிமை உத்திரவாதம் செய்யப்படுவதால், இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் எந்த தகுதியும் திறமையும் கெட்டுவிடவில்லை, மாறாக இவை சாதித்த அதிகார விரி வாக்கமும் உயர்க்கல்விப் பரவலாக்கமும் தென்மாநில சமுதாயங்களில் நல்ல, ஆக்கப் பூர்வமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன என்பதையும் பலர் சுட்டிக்காட்டி யுள்ளனர். திராவிட இயக்கத்தின் பொது உரிமைக் கொள்கை ஏதோவொரு வகையில் இன்றும்கூட உயிர்ப்புடன் உள்ளதை அண்மையில் வெளியிடப்பட்ட கோயில் அர்ச்சகர் தொடர்பான அரசாணை அறிவித்தது. கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்க பிறப்பு தடையாக இருக்காது, எந்த வகுப்பைச் சார்ந்தவரும் அர்ச்சகராகலாம் என்ற தி.மு.க அரசின் அறிவிப்பும் ஆணையும் வட மாநிலங்களைச் சேர்ந்த சனாதனவாதிகளுக்கும் தென்னிந்திய, குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும், சவாலாகவும் எச்சரிக்கையாகவும் அவர்களது உலகப் பார்வையை மறுக்கும் கொள்கையாகவும் பரிணமித்துள்ளது.

என்றாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே வென்றெடுக்கப்பட்ட சவால்களை நினைத்து பூரித்துப் போவதிலும், வட மாநிலத்தவரை காட்டிலும் முற்போக்கானவர்கள் என்று சொல்லிக் கொள்வதிலும் நிறைவடையாமல் வேறு சில விஷயங்களையொட்டிய விவாதங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது காலத்தின் தேவையாக உள்ளது. முதலாவதாக- தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்பது ஏறக்குறைய அனைவராலுமே ஏற்கப்படுகிறது. (பார்ப்பனர்களும் வேறு சனாதனசாதிகளும் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்குகளாக இருக்கலாம்.) ஆனால் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆதாரமான வகுப்புரிமை கொள்கை என்பது பேசப்படுகிறதா, விவாதிக்கப்படுகிறதா? பெரியாருக்கு ஆதர்சமாக விளங்கிய சமதர்மம் என்பதன் கருத்தியல் நுணுக்கங்களை நாம் இன்று முக்கியமானவையாக கருதுகிறோமா?

இரண்டாவதாக - இட ஒதுக்கீடு என்பது அரசு நிறுவனங்களை பொறுத்தவரை வேண்டுமானால் நிறைவேற்றப்பட்ட இலட்சியமாகயிருக்கலாம். ஆனால் குடிமைச் சமுதாயத் தளங்களில், அரசியல் வாழ்க்கையில், தனியார் துறையில் வகுப்புகளைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதிகளும் சமநிலையில் பங்கேற்கின்றனரா?

கடைசியாக-வகுப்புரிமை, இட ஒதுக்கீடு குறித்து ஆக்கப்பூர்வமான வகைகளில் வளர்த்தெடுக்க, அவற்றின் நலன்கள் பலரையும் சென்றடைய தமிழகத்தில் போதுமான கல்விசார் மாற்றங்களும் அறிவு தொடர்பான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளனவா?

சுயமரியாதை இயக்கம் தமிழ்ச் சமுதாயத்திலொரு புரட்சிகரமான சக்தியாக செயலாற்றிய காலகட்டத்தில் வகுப்புரிமை பெறுதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அடைதல் என்பனவற்றை தமது இயக்கம் சாதிக்க நினைத்த வரலாற்று மாற்றத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளாகவே பெரியார் அடையாளப்படுத்தினார். இவையே சமூக மாற்றத்தை உறுதிப்படுத்தும் என்றோ, இவை மட்டுமே சாதியழிப்பு இலட்சியவாதிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றோ அவரும் அவரது இயக்கத்தாரும் நினைக்கவில்லை. அதேசமயம் ‘வகுப்புரிமை’ என்பதன் தேவையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். வருணக் கொள்கையாலும் வருண- சாதி அரசியலாலும் கல்வியும் அரசியல் அதிகாரமும் மறுக்கப்பட்ட வகுப்பாருக்கு கல்வியுரிமையும் அரசியலுரிமையும் வழங்கப்பட்டாலொழிய இந்திய மண்ணில் சனநாயக முன்னேற்றமும் தேச ஒற்றுமையும் விடுதலையும் சாத்தியமில்லை என்பதில் அவர்கள் உறுதியாக நின்றனர். சமத்துவம், சமநீதி குறித்து பார்ப்பனர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வாய் வலிக்கப் பேசினாலும், அச்சொற்களுக்கு சம்பிரதாயமான பொருளைத்தான் அவர்கள் கொண்டிருந்தனர். அதாவது, சமத்துவம் என்பதை பண்புரீதியாக, வரலாற்றுரீதியாக விளங்கிக் கொள்வதற்குப் பதில் வெறும் அருவமான கருத்தியலாக, அவர்கள் தனிமனிதனின் விடுதலை வேட்கையை தணிக்கும் அறமாக மட்டுமே கொண்டனர்.

இந்த அடிப்படையிலேயேதான் 1920கள் தொட்டே இட ஒதுக்கீட்டையும் வகுப்புரிமையையும் எதிர்த்தனர். தனிமனித சுதந்திரமும், சமத்துவமும் பாதிக்கப்படும் என்றனர். திறமைக்கு தகுந்த சன்மானம் கிடைக்காமல் போய்விடும் என்றனர், நீதி கெட்டுவிடும் என்றனர். இந்த மனநிலையை எதிர்கொள்ளும் முகமாக பெரியார் வகுப்புரிமை என்பதை வழங்குவதன் மூலம்தான் சாதிசமுதாயத்தின் மேல்-கீழ் வரிசை நிலையும் சமத்துவமின்மையும் சரிசெய்யப்படும் என்றார். உண்மையான சமத்துவமும் சமநீதியும் நிறுவப்பட வேண்டுமானால் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கூட்டு நலன்களும் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். அதேசமயம் இத்தகைய உரிமைகளுக்கு உகந்தவர்களாக பார்ப்பனரல்லாதவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சுயமரியாதையை வென்றெடுக்க வேண்டும், பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், பரஸ்பர தோழமையும், நம்பிக்கையும் பாராட்டப் பழகவேண்டும், தீண்டாமையை வேரறுக்க வேண்டும், பெண்ணடிமைத்தனத்தை நித்தம் நித்தம் வாழச் செய்யும் ஆண்மையையும் கற்பையும் விமர்சிக்க துணிய வேண்டும் என்று பல்வேறு தளங்களில் நிகழ வேண்டிய மாற்றங்களை விளக்கினார், இவை தொடர்பாக செயல்பட்டார். வகுப்புரிமை என்பது சமதர்மத்துக்கு ஒருவரை இட்டுச் செல்லவேண்டும் என்பதே அவரது வாதமாகயிருந்தது. எனவேதான் வகுப்புரிமை என்பதை ‘இட ஒதுக்கீடு’ என்று மட்டுமே விளங்கிக் கொள்ளாமல், சனநாயக வாழ்வுக்குரிய, அதன் முன்நிபந்தனையாக இருக்கவேண்டிய அறமாக பெரியார் பாவித்தார். வகுப்புரிமை தொடர்பான சொல்லாடல்களை அவர் மேலே குறிப்பிட்டுள்ள களங்களில் வளர்த்தெடுத்தும் அச்சொல்லாடல்களுக்கு சமுதாய வெகுமதியை பெற்றுத் தந்ததுமே இதற்கு சான்றுகளாகும்.

ஆனால் தற்கால தமிழகத்திலோ ‘வகுப்புரிமை’ என்பதன் விரிந்தப் பொருள் அருகிப்போய், இட ஒதுக்கீடு என்ற அரசியல் கொள்கையாகவும் திட்டமாகவுமே அது எஞ்சியுள்ளது. இதனால்தான் இட ஒதுக்கீடு கோரும் வகுப்பாரில் சிலர் - குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆதிக்க நிலையிலுள்ள முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் சிலர் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சலுகைகளாக அடையாளப் படுத்துகின்றனர். அம்மக்களுக்கு கிடைத்துள்ளவற்றில் கால்வாசி கூட தங்களுக்கு வாய்க்கவில்லை என்று எந்த ஆதாரமுமின்றி குற்றஞ் சாற்றுகின்றனர். தலித்களின் உரிமைகளைப் பாதுகாக்க இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் இவை மட்டுமின்றி சமுதாய, பண்பாட்டுத் தளங்களில் அம்மக்கள் கோரும் சமவுரிமைகளை - கோயில் தேரை இழுக்கும் உரிமை, கோயில் வழிபாட்டில் பங்கேற்கும் உரிமை போன்றவற்றை - வன்மத்துடன் மறுக்கின்றனர். சாதிய வெறுப்பைத் தூண்டும் கட்சிகளென எந்தவித குற்றவுணர்வுமின்றி ஏசுகின்றனர்.

தலித்துகளின் உரிமைகள் மட்டுமல்ல ஏனைய வறிய சாதிகளின் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்படாத நிலையிலேயே உள்ளன. குறிப்பாக இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி கற்று சமூக அந்தஸ்து வாய்க்கப் பெற்று, இன்று தாமே கல்வி நிறுவனங்களை நிர்வகித்து நடத்தும் அளவுக்கு பொருளாதார பலமுடைய பலர் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வந்து விடக் கூடாது என்பதில் வெகு கவனமாக உள்ளனர். இதனால் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருள் வறியவர்களாக உள்ளவர்களின் கல்வி வாய்ப்புகளை மறுப்பவராகவும் உள்ளனர்.

வறுமையும் சாதி ஒடுக்குமுறையும் சந்திக்கும் புள்ளியை சரி வர அடையாளங் காண்பதற்கு இவர்களில் யாருமே தயாராக இல்லை. போகிறபோக்கில் சிலருக்கு உதவித் தொகைகளை அளித்து தமது ‘கடமை’யை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் அனைவரும் இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்றுள்ளனர் என்றும் சொல்லி விட முடியாது-1970களிலும் 1980களிலும் நடைபெற்ற வன்னியர் சங்க ஆர்ப்பாட்டங்களும் அவை முன்வைத்த கோரிக்கைகளுமே நமக்கு இதை உணர்த்தும். இதுபோக, வகுப்புரிமை என்பதன் விரிவான பொருள் வரம்பிடப்பட்டது போல, ‘வகுப்பு’ என்பதன் பொருளும், அடையாளமும் வரம்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகுப்பின் உரிமைகளை முன்நிறுத்திப் போராடிப் பயன்பெறுபவர்களில் முக்கால் வாசிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட வகுப்பிலுள்ள பெண்களின் கல்வித்தகுதி, சுதந்திரம் முதலியவற்றை கருத்தில் கொண்டு வகுப்புநலனோ உரிமையோ வரையறுக்கப்படுவதில்லை.

வகுப்புரிமை என்பதன் முழுப்பொருளையும் சமுதாய பயன்பாட்டுக்குரிய வகையில் புரிந்துணர்ந்து விளக்கி, விவாதித்து, காரியத்திலும் அதை காட்டிய பெரியாரைப் போலும், சுயமரியாதை இயக்கத்தைப் போலும் வெகு மக்கள் இயக்கமும் தலைமையும் தொடர்ந்து வாய்க்கப்பெறாத, கட்டியெழுப்பப்படாத நிலையில் வகுப்புரிமையின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? சமதர்மம் என்ற அறத்தின் அடிப்படையில் அல்லாமல் வெறும் கணக்குரீதியாக மட்டுமே வகுப்புரிமையை அணுகுவதென்பது பெரியார் சாதிக்க நினைத்த முழுப்புரட்சி, அதன் தேவை பற்றிய ஒருவித மறதிக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுமோ?

அடுத்து- இடஒதுக்கீடு என்பதை அரசு கொள்கைகள், திட்டங்கள், ஆணைகள் தொடர்பான விஷயமாக மட்டுமே காணும் பார்வையும் போக்கும் நம்மிடையே நிலை கொண்டுவிட்டன. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது குறித்து பேச, விவாதிக்க போதுமான அக்கறை கொண்டவர்கள் வெகு சிலராகவே உள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்களில் பல இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதுடன் தமது ‘சிறுபான்மை’ அடையாளத்தை முன்நிறுத்தி வகுப்புரிமை கொள்கையை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

நீதி, நேர்மை, சுதந்திரம் குறித்து விடாது முழங்கி வரும் தகவல் தொடர்பு சாதனங்களில், குறிப்பாக ஆங்கிலமும் இந்தியும் புழங்கும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களில் 49% பேர் பார்ப்பனர்கள் என்ற திடுக்கிடும் தகவல், அண்மையில் வெளியிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றில் இடம் பெற்றிருந்தது. தமிழ்ப் பத்திரிகைத்துறை, தொலைக்காட்சி, தனியார் வானொலி, சினிமா ஆகியவற்றில் பணிபுரிவோரின் சமூகப் பின்னணி குறித்த தகவல்களை கண்டறிய முயற்சித்தால் சில முக்கியமான சமூக உண்மைகள் துலங்கும் என்பதில் சந்தேகமில்லை - குறிப்பாக தலித் மக்களும் பெண்களும் எந்தெந்த துறைகளில் எத்தகைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சாதி அடிப்படையில் பண்பாட்டு நடவடிக்கைகளை தரம் பிரிக்கக்கூடாது என்ற வாதம் தொடர்ந்து தமிழ்நாட்டு இலக்கியச் சூழலில் இடம் பெற்றுவருவதையும், ‘தலித் இலக்கியம்’ என்பதை புறக்கணிக்கவும் இயலாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அதனை ‘தனி’யொரு இயலாக தமிழ்ச்சூழல் ஆக்கியுள்ளதையும் தலித் எழுத்தாளர் அழகிய பெரியவன் ‘தலித் முரசி’ல் பதிவாகியிருந்த பேட்டி ஒன்றில்(மலையாள இதழொன்றுக்கு அளிக்கப்பட்ட பேட்டி இது) வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாகயிருக்கும். தலித் மக்களின் வாழ்வைப் பேசும் இலக்கியத்துக்குரிய மதிப்பை அளிப்பதற்குப் பதில், அவர்களது படைப்புரிமையை அங்கீகரிப்பது போல் பாவனை செய்து அதனை பொது இலக்கிய மரபுக்குள் கொண்டு வராது தனிவெளியில் ஒதுக்கும் சனாதன செயல்பாடுகள் (தலித் எழுத்தாளர்கள் தமது ஆளுமை, படைப்பாற்றல் ஆகியவற்றின் தனித்தன்மை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோருவது வரலாறு புரிந்துள்ள அநியாயங்களை சரி செய்யத்தான். இந்த தனித்தன்மையை அதற்குரிய சமுதாய நியாயத்துடன் அணுகாமல் அதனை போற்றுவதுபோல் போற்றி தனிமைப்படுத்தும் முயற்சிகள் விஷமத்தனமானவை.) இலக்கியம் பண்பாடு முதலான துறைகளில் இதுவரையில் ஒலிக்க அனுமதிக்கப்படாத குரல்கள் பேசவும் எழுதவும் உரிமை வழங்கப்பட வேண்டிய தன் தேவையை நாம் முழுமையாக உணர்ந்ததற்கான சான்றுகள் இல்லாததால்தான் பண்பாட்டுத் தளத்திலும் ஒதுக்கீடு தேவை என்று நாம் வாதிட வேண்டியுள்ளது.

பண்பாட்டுத்தளத்தில் மட்டுமின்றி, குடிமைச் சமுதாயத்திலும்-கல்வி அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள் போன்றவற்றிலும்-எல்லா வகுப்பாரும் சமஅளவில் பங்கேற்கக் கூடிய சூழல் தமிழகத்தில் இல்லை. குறிப்பிட்ட பகுதியின் வரலாறு, அப்பகுதியை சார்ந்த ஆதிக்க, உடைமை சாதிகள் முதலியன தான் ஒருவர் பொதுவாழ்வில், பணியில் பங்கேற்பதையும் செயல்படுவதையும் தீர்மானிக்கின்றன. தலித்துகளோ, ஏனைய வறிய பிரிவினரோ தத்தம் குறைகளை தீர்த்துக் கொள்ள சங்கங்கள் அமைப்பதை அனுமதித்தாலும் அனுமதிக்கும், இந்த ஆதிக்க சக்திகள், பொதுநலன் கருதியும் பொதுக் காரியங்களுக்கும் தலித்துகள் முன்நிற்பதையும் ஆர்வமாக அவற்றில் பங்கேற்பதையும் விரும்புவதில்லை. பொதுநலம், பொதுமை முதலியனவற்றுக்கு தாமே உத்திரவாதம், தாம்தான் பொது வாழ்க்கையில் பங்கேற்கத் தக்கவர், அதற்குரியவர், தமக்கு மட்டுமே அந்த உரிமையும் தகுதியும் உண்டு என்று இவை சிந்திக்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் சில பார்ப்பன அறிவாளிகள் தங்களை இப்படித்தான் பாவித்துக் கொண்டனர். தம்மையே மக்கள் பிரதிநிதிகளாக கருதிக் கொண்டனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. யாருக்காக யார் பேசுவது என்ற பிரச்னையின் முக்கியத்துவத்தை பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.

அரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்தவரை தலித்துகளுக்கும் அரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்த வரை தலித்துகளுக்கும் பெண்களுக்கும் ஒதுக்கீடு ஏற்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட கட்சியின் தலைமையிலோ, முடிவெடுக்கும் நிலையிலோ பெண்களும் சரி, தலித்துகளும் சரி மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இடம் பெற்றுள்ளனர். பெண்களுக்கு ஊராட்சி அமைப்புகளில் 33% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றதும், தமது குடும்பத்தவரை, தமக்கு விசுவாசமான தொழிலாளிகளை தேர்தலில் நிற்க வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்கள் வகுப்புரிமையை, இட ஒதுக்கீட்டை பெண்களுடன் ஏன் தத்தம் வகுப்பைச் சேர்ந்த பெண்களுடன் கூட பகிர்ந்து கொள்ள முன்வருவார்களா என்ற கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும். பெண்களுக்கு போய்ச்சேர வேண்டிய அதிகாரத்தை தட்டிப் பறிக்க ஆர்வமுள்ளவர்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அப்பெண்களுடன் பகிர்ந்துகொள்ள கண்டிப்பாக முன் வரப்போவதில்லை. ஷரத் யாதவ், முலாயம் சிங் போன்றவர்கள் 33% ஒதுக்கீட்டில் சாதி அடிப்படையிலான உள் ஒதுக்கீடு தேவை என்று முழங்குவார்கள், ஆனால் மண்டல் குழு பரிந்துரைத்த 27% இடஒதுக்கீட்டை பெண்களுக்கு பகிர்ந்தளிக்க மறுப்பார்கள்.

தலித்துகளுக்கும் இந்த கதிதான் வாய்த்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர்கள் தலித் மக்கள் அளித்த வாக்குகளினால்தான் வெற்றியடைந்தனரே தவிர அவர்களுடன் கூட்டணியில் இருந்த தலித் அல்லாத கட்சிகளின் பற்றாளர்களுடைய வாக்குகளினால் அல்ல. தலித்துகளைப் பயன்படுத்துவதில் தலித் அல்லாத கட்சியினர் காட்டும் ஆர்வம், தலித்துகளுடன் இணைந்து பணியாற்றும் அக்கறையாகவோ, அவர்களது உரிமைகளை அங்கீகரித்து அவற்றுக்காக போராடும் ஆற்றலாகவோ பரிணமிப்பதில்லை. தலித்துகளைப் பொறுத்தவரை அரசியல்துறையில் இட ஒதுக்கீடு இருந்தாலும், வகுப்புரிமை அவர்களுக்கு இல்லை, தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் தலித்துகளின் நலம், தேவைகள் ஆகியவற்றை பொதுநலத்துக்குரிய விஷயங்களாக மாற்றியமைக்க இயலாதபடிக்கு அவர்கள் தொடர்ந்து அரசியல் அந்நியர்களாகவே பாவிக்கப்படுகின்றனர்.

முடிவாக-கல்வித்துறையில், அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வாய்த்துள்ள தமிழ்ச் சூழலில் கல்வியின் தன்மை, உள்ளடக்கம் எத்தகையதாக உள்ளது? அரசு நிர்வாகம் மக்களுக்குரியதாக ஏன் இருப்பதில்லை? இட ஒதுக்கீட்டின் நற்பயன்களை நீடிக்கச் செய்யவும் அதன் தாக்கத்தை விரிவுபடுத்தவும் வேண்டுமானால் இக் கேள்விகளை ஆராய வேண்டியிருக்கும்.

ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்க வேண்டுமானால் அவர்களை வரவேற்று, அவர்களது தனிச்சிறப்பான தேவைகள், அவர்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறை ஆகியவற்றை அவதானித்து செயல்பட வேண்டிய பள்ளிச்சூழலும் ஆசிரியர்களும் நமக்குத் தேவை. ஆனால் தொடக்கக் கல்வியில் பாராதூரமான மாற்றங்கள் நிகழ்ந்தாலொழிய இது சாத்தியப்படப் போவதில்லை. அக்கல்வி வளர்ச்சிக்கான நிதியைப் பொறுத்தவரை உயர்க் கல்விக்கென ஒதுக்கப்படுவதைக் காட்டிலும் குறைவானதாகவே உள்ளது. மேலும் சமூக அறிவும், அக்கறையும், நீதியுணர்வுமுள்ள ஆசிரியர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பதும், சாதிக்காழ்ப்பும், மெத்தனமும் போதிய பயிற்சியும் பெறாதவர்கள் தொடக்க கல்விப்பணியில் அமர்த்தப்படுவதும் கல்வியைப் பெரும் பிரச்னையாக்கியுள்ளன. ஆசிரியர்களை ஆயத்தப்படும் பயிற்சி நிறுவனங்களுக்கும் போதிய சமூக அக்கறையும் புரிதலும் இருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்களின் சமுதாயப் பின்னணியை அறிந்துகொண்டு பக்குவமாகவும் கரிசனத்துடனும் ஆசிரியர் நடந்து கொள்ளத் தேவையான பயிற்சியும் கல்வியும் இந்நிறுவனங்களில் அளிக்கப்படுவதற்கான சான்றுகளில்லை. வியாபார நோக்குடன்தான் இவை நடத்தப்படுகின்றன என்பது கண்கூடு. இதனாலேயே பல மாணவர்கள் தொடர்ந்து படிக்கப் பிடிக்காதவராய் வீட்டிலேயே நின்று விடுகின்றனர், அல்லது வேலைக்குப் போய்விடுகின்றனர்.

அடுத்து, கல்வியின் குறிக்கோளை எடுத்துக் கொள்வோமேயானால், நெட்டுரு செய்வதே பிரதானமான திறமையாக கருதப்படுகிறது. அதாவது தகவல்களை சேமித்து வைத்து, வேண்டிய வேளையில் அவற்றை மாணவர்கள் உமிழ்வதையே கல்விநூல்கள் முக்கியமானதாக கருதுகின்றன. எனவே மாணவர்களின் இன்னபிற திறன்கள் மதிக்கப்படாததுடன், பின்தங்கிய மாணவர்களுக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் இத்தகைய கற்றல்முறை ஏற்படுத்தும் நிர்பந்தங்களும் பிரச்னைகளும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மேலும் இம்மாணவர்களுக்குள்ள செயல்திறன், அனுபவ அறிவு, அல்லது வேறு தனிச்சிறப்பான திறன்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் படித்து மீண்டு வரும் மாணவர்கள் வெகுசிலர் - இவர்களில் ஒரு சிலர்தான் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துபவராக வருகிறார். ஏனையோர் வாய்ப்பிழந்து பின்தங்கி விடுகின்றனர்.

கல்விநூல்களும் மாணவர்களின் வாழ்வியல் சூழலையும் தேடல்களையும் பிரதிபலிப்பதில்லை. தமிழ்ப்பாடத்தை எடுத்துக் கொள்வோம். இலக்கிய அறிவும், தமிழ்ப் பெருமையும் பேசும் பாடங்களே பாடநூல்களில் அதிகம் இடம் பெறுவது வழக்கம். பேச்சு மொழியையும், வழக்காறுகளையும், வளமான கற்பனையயும் தொலைத்த உரைநடைப் பாடங்களை மாணவர்கள் விரும்பிப் படிக்காததுடன், அவற்றை சுமையாகவும் எண்ணுகின்றனர். தமிழ்ச் செய்யுள் பகுதி இலக்கியமாக இருப்பதால் அதுவுமே தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு அந்நியமானதாக தோன்றுகிறது. எந்தவகையிலும் தமது வாழ்வனுபவங்களையும், சூழலையும், மொழிப் பயன்பாட்டையும் பிரதிபலிக்காத பாடங்களை குழந்தைகள் தமக்குரியவையாக கொள்வதற்குப் பதில், படிக்கவே பயப்படுகின்றனர். ஏதோவொரு குற்றவுணர்வுடன் தாய்மொழியைப் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.

வகுப்புரிமை கோரும் வகுப்பாரின் வாழ்வியல் விஷயங்களை தவிர்த்து தமிழ்ப் புலமையை மட்டுமே போற்றும் நூல்கள் எந்த விதத்திலும் குழந்தைகளின் அறிவையோ தன்னம்பிக்கையையோ வளர்க்கப் போவதில்லை. சூழலுக்கு பொருந்தாத கல்வி எல்லா நிலைகளிலும் இருப்பதாலும், பட்டறிவுக்கும் செயல் திறனுக்கும் உடலுழைப்புக்கும் இடங்கொடுக்காத ஏட்டுக்கல்வியே ‘கல்வி’ யாக கருதப்படுவதாலும் பின்தங்கிய வகுப்பாரின், தலித்துகளின் திறமைகளும் ஆற்றல்களும் முடக்கப்பட்டு விடுகின்றன.

தமிழகத்தில் பார்ப்பனியம் தொடர்ந்து விமர்சனப் படுத்தப்பட்டாலும் அது சாதித்துள்ள வேலைப் பிரிவினையானது-உடலுழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான பிரிவினையானது-நவீன கல்வியுலகை தொடர்ந்து ஆட் கொண்டுள்ள நிலையில் வருண தருமத்தை வேரறுக்கும் கல்வித்திட்டம் வகுக்கப்பட வேண்டியதன் தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டியவராகிறோம். உழைப்பையும் உழைப்பாளியையும் கைவினைஞனையும், நவீன கல்விக்குள் கொண்டுவரத்தக்க கல்வி நமக்கு தேவை. இவர்களுக்கு வாய்த்துள்ள பட்டறிவை மேலும் செழுமைப்படுத்தும் நவீன அறிவியல் கல்வியையும் தத்துவக் கல்வியையும் வளர்த்தெடுப்பதற்கு பதில் பார்ப்பன ‘ஐ.ஐ.டி’களையும் சூத்திர-தலித் ‘ஐ.டி.ஐ’களையும் உருவாக்கி வருணக் கொள்கையை கட்டிக்காத்து வருகிறோம்.

இட ஒதுக்கீடு இருந்தும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் மற்றொரு துறை, அரசு நிர்வாகத்துறை, அரசதிகாரம் என்ற ஒன்றின் காரணமாக தமது குறிப்பிட்ட வர்க்கநலனை பாதுகாப்பதில் கவனமாக செயல்படும் இத்துறைக்குரிய அதிகாரத்தை மேலும் பரவலாக்குவதன் நோக்கம் சற்றே வேறு பட்டதாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதிகாரப் பகிர்தலை சாத்தியப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம் என்றாலும், அத்தகைய அதிகாரத்தைக் கொண்டு பொது உரிமையை, சமதர்மத்தை சாதிக்க வேண்டுமானால் அரசதிகாரத்தை சனநாயகப் படுத்துவது பற்றியும், அரசியல், குடிமைச் சமுதாயங்களின் கறாரான விமர்சனங்களுக்கு கட்டுப்பட்டு அவ்வதிகாரம் செயல்பட வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டும். கோயில் நுழைவு உரிமை குறித்து பெரியார் கூறியதை இங்கு நினைவு கொள்ளுதல் பொருந்தும். கோயில் பொதுயிடமாதலால் அதில் நுழைய அனைவருக்கும் உரிமையுண்டு என்பதில் தனக்கு மாற்று கருத்து கிடையாது, அதற்காக தான் போராடவும் தயார், ஆனால் கோயிலில் நுழைய உரிமை கிட்டிய பிறகு பக்தியையும் கடவுள் நம்பிக்கையையும் பக்தர்களின் விசுவாசத்தையும் மூடத்தனத்தையும்தான் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும், நுழைவுரிமை பெற்றவர்களையே இடித்துரைக்க வேண்டியிருக்கும் என்று பெரியார் பல சமயங்களில் கூறியுள்ளார். அதுபோல, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டப்பின் அரசதிகாரத்தை நோக்கிய விமர்சனப் பணியை மேற்கொள்வதன் மூலமே வகுப்புரிமையையும் சமதர்மத்தையும் நம்மால் உத்திரவாதம் செய்ய முடியும்.

http://www.keetru.com/visai/jul06/va_geetha.html

நாரதர் சார், நீங்கள் சமையலில் மட்டுமல்ல, அனைத்து விஷயங்களிலும் நீங்கள் தேர்ந்தவர்தான்.

  • தொடங்கியவர்

நாரதர் சார், நீங்கள் சமையலில் மட்டுமல்ல, அனைத்து விஷயங்களிலும் நீங்கள் தேர்ந்தவர்தான்.

உமது முற்பிறவியில என்னோட எதாவது கோவமோ?

வெண்ணிலாவிட்ட அனுமதி வாங்கியா அவவின்ர படத்தைப் போட்டிருக்கியள்?

இல்லாட்டி கலியாணம் கட்டினாப் பிறகு பேரை மாத்திப் போட்டியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே இனைப்புக்கு நன்றி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.