Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்…? – ஜெரா

Featured Replies

இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்...? -  ஜெரா

போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுட பேரவலத்தை இனி வரும் நாட்களின் நினைவேந்துவோம்.

எனவே இந்த நாட்கள் கனதியானவையாக, தியாகக் கொந்தளிப்புள்ளவையாக இருக்கும். பொழுதுகள் வலிக்கும்.

“இண்டைக்குத்தான் அவர் செத்தார்… “

“இண்டைக்குத்தான் நான் காயப்பட்டனான்…”

“இண்டைக்குத்தான் ஆமியிட்ட சரணடைஞ்ச நாங்கள்.. .”

“இண்டைக்குத்தான் என்ர பிள்ளைய ஆமியிட்ட குடுத்தனான்…”

என நீளும் நினைவுப் பேச்சுக்களில் மாத்தளன் – புதுமாத்தளன், வலைஞன்மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இடங்களும் கட்டாயமாக இருக்கும்.

ஆனால் இந்நினைவுகள் நிலைத்துநிற்கக்கூடியவையல்ல. காலவோட்டத்தில், நினைவுமங்கும். காட்சிகள் மாறும். ஆட்சிகள் மாறமாற முள்ளிவாய்க்கால் வருடத்துக்கு ஒரு முறை மட்டும் தூரமாய் தெரியும். வரலாறு முழுதும் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் நினைவுநாட்களுக்கு நடந்தகதி முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் நடக்காமல் இருக்கும் என்பதில் எந்த நிச்சயிப்பும் இல்லைத்தானே..!ஏனெனில் தமிழர் மறதியால் கட்டுண்டவர்கள்.

ஆனால் எதையும் மறக்க முடியாமல், தம் உடலோடு போரின் குரூர விளைவுகளைச் சுமக்கும் குழந்தைகளிடம் அந்த வலி நிரந்தரமாகவே தங்கிவிட்டது. இறுதிப் போரின் போது காயமடைந்து, உடல் அவையங்களை இழந்த குழந்தைகளின் இன்றைய வாழ்க்கை எப்பிடியிருக்கிறது? அவர்களின் எதிர்காலம் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதைக் கண்டறிவதற்காகத் தான் இக்கட்டுரைத் தொடர் பிரசுரமாகின்றது.

வன்னியில் இருக்கின்ற ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து, அந்தக் கிராமத்துக்குள்ளும், 3 கிலோமீற்றர் சுற்றெல்லைக்குள், ஒரு பாடசாலையை மையப்படுத்தியே இப்பதிவுக்கான சிறார்களை சந்தித்தேன். நான் இப்பதிவுக்காக வரையறுத்துக்கொண்ட பகுதிக்குள் 5 சிறார்கள் இருக்கின்றனர். வன்னிக்கு பெருநிலம் என்றொரு பெயரும் உண்டு. அந்தப் பெருநிலத்தில் நான் தெரிவுசெய்த பரப்பு மிகச் சிறுநிலம் என்பதை நீங்களறிவீர்கள். அந்தச் சிறுநிலத்துக்குள்தான், போரின் மிகமோசமான வடுக்களோடு வாழும் 5 சிறார்கள்.

பரபரப்பான சாலையோரத்தில் இருக்கிறது அதிகாவின் (13 வயது சிறுமி- பெயர்மாற்றப்பட்டுள்ளது) வீடு . படலையை திறந்து உள்ளே கால் வைத்ததும், வலுக்கக்கூடிய சாய்வுதளம். வீட்டின் வாசலிலும் அதே போன்றதொரு சாய்வுதளம். அச்சாய்வுதளங்களே, அதிகா எவ்வாறான காயத்துக்குள்ளாகியிருக்கிறாள் என்பதை நமக்கு உணர்த்திவிடுகின்றன. அவள் ஒரு மாற்றத்திறனாளி.  போர் அவளை எழுந்து நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியாக்கிவிட்டது.

அதிகாவின் அம்மா,

“..அவா குளிக்கிறா. தானே குளிப்பா, தன்னைக் கவனிச்சிக்கொள்ளுவா..” என்று சொல்ல, “யார் பிள்ள வந்தது..” என்றபடி அதிகாவின் அம்மம்மா உரையாடலுக்குள் வந்துவிடுகின்றார். அறிமுகத்தை வாங்கிக்கொண்டு, நம் மீதான நம்பிக்கையை பெற்றபின் கதைக்கத் தொடங்கினார். அதிகாவின் அம்மம்மாவுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல் நடந்துகொண்டிருக்கையில்

அதிகாவின் அம்மா, அழத் தொடங்கியிருந்தார்.

அதிகாவின் அப்பப்பா தடியொன்றின் துணையுடன் எனக்கு முன் வந்தமர்ந்தார்.

அதிகாவின் தம்பிமார் யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி, அம்மம்மாவை பார்த்துக்கொண்டிருந்தனர்.

“..இப்ப ஏன் அழுறா.முடிஞ்சத நினைச்சி அழுது என்ன பிரயோசனம். அழாத. அவள் என்ன செய்யிறாள் எண்டு பார்..” தன் மகளின் கண்ணீர் நீளமாவதை என்னோடு பேசிக்கொண்டிருந்த அம்மாவும், அதிகாவின் அம்மம்மாவும் கொஞ்சமும் விரும்பவில்லை. பேச்சில் கண்டிப்பு தெரிந்தது. அதிகாவின் அம்மா உள்ளே செல்ல, அம்மா தொடர்ந்ததார்.

2009…..05 ஆம் மாசம் 04 ஆம் திகதிதான் அது நடந்தது.

மாத்தளன்…இல்ல இல்ல அம்பவன்பொக்கண…

காயப்படேக்க 6 வயசு. நேசரி படிச்சிக்கொண்டிருந்தவள். இங்கிலீஸ் மீடியம்.

புதுக்குடியிருப்பில ஒரே ஷெல்லடி.இருக்க முடியேல்ல. நடந்துதான் பொக்கணைக்குப் போனம். அதிகாவின்ர சித்தவீடு இருந்தது. வீடெண்டா ட்ரென்ட். பகல் பதிணொண்டர இருக்கும். வீட்டுக்குப் போனதும் ரீ தந்திச்சினம். அதிகாவின்ர அப்பா, கதிரையில இருந்து ரீ குடிச்சிக்கொண்டிருந்தார். அதிகாவும் தம்பியும் அப்பாவின்ர முழங்காலில கையை ஊண்டிக்கொண்டு ரெண்டுபக்கமும் இருந்தவ.

திடீரெண்டு வேப்பமரத்தில விழுந்து ஷெல் வெடிச்சது. அப்பாவின்ர மடியில இருந்த பெடியனிர முகமெல்லாம் ரத்தம். அவன பதறியடிச்சிக்கொண்டு தூக்கினா, நெத்தில காயம். பிறகு எங்க அதிகாவ காணேல்ல எண்டு பாத்தா, கீழ விழுந்து கிடக்கிறாள். அவளுக்கு முதுகில காயம்பட்டிட்டு. ரெண்டு பேரும் அழ, எல்லாரும் பிள்ளயள வச்சிக்கொண்டு, அழுறம்.

அதிகாவின்ர அப்பாவ கவனிக்கேல்ல. அவர் அப்பிடியே கதிரயில இருக்கிறார். பிறகு கொஞ்சத்தால தல சரிஞ்சது. வடிவா கிட்டப்போய் பாத்தன். அவருக்கு பீஸ் முன்னுக்கு பட்டு முதுகால போயிற்று. கதிரயில இருந்தபடியே இறந்திட்டார்.

உடன பக்கத்தில நிண்ட ஆக்காள் பிள்ளயள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிற்றினம். ஆஸ்பத்திரியெண்டா தெரியும்தானே. அங்கயும் பயம்தான். ஒரே ஷெல்லடிதானே. நாங்க மருமகனின்ர பொடியோட நிண்டிட்டம்.

பிறகு ஆஸ்பத்திரி போனாம். மகனுக்கு பிரச்சின இல்ல, மகளுக்கு இடுப்புக்கீழ சரிவராது எண்டுச்சினம். என்ர குழந்தையின்ர முகத்த என்னால பாக்கவே முடியேல்ல. அவளின்ர ஆசைகள், கனவுகள் எல்லாமே, நான் வச்சிருந்த ஆசைகள் எல்லாமே…..

வைராக்கியமிக்க அம்மம்மாவின் குரலும் தளர்ந்தது. குரூரமான அந்த நினைவை மீட்ட குற்றவுணர்ச்சி எனக்குள் ஏற்பட்டது.

“பத்தாம் திகதி கப்பல்ல திருகோணமலைக்கு ஏத்துச்சினம். கப்பல்லயும் படாதபாடு பட்டுத்தான் ஏறினம். அங்கயும் கப்பல்ல, கொண்டு போன பாக் எல்லாத்தையும் துலைச்சிட்டு நாங்கள் பட்ட கஷ்ரங்கள சொன்னால் இப்ப கதறவேணும்..”

திருகோணமலயில ஒன்றரை வருசம் இருந்தம். பிறகு வவுனியாவுக்கு மாத்துச்சினம். அங்கயிருந்து பம்பமடுவில வச்சி பராமரிச்சது. அங்கயிருந்து மருந்தெடுக்க கொழும்புக்கு அனுப்புவாங்கள். அது அம்புலன்ஸ்ல பெட்ல பிள்ளையின்ர உடம்பு தேய்பட்டு தேய்பட்டு, படுக்க புண் வந்திட்டு. உணர்வில்லதா இடம்தானே. யூரின், டொய்லெட் எல்லாம் போய்போய் அதுவும் பெருத்திட்டு. பிள்ள அதனால பட்ட கஸ்ரம் கொஞ்சநஞ்சமில்ல. கொழும்பு பெரிய ஆஸ்பத்திரிலயே மறிச்சிட்டினம். அங்க சரியா கவனிப்பும் இல்ல. எனக்கு சிங்களமும் தெரியாது. பிள்ள தாயிட்ட போகப்பேகுதெண்டு அழுது.

நான் விடாப்பிடியா நிண்டு வவுனியாக்கு கொண்டு வந்திட்டன்.

இப்பிடியே 3 வருசம் ஆஸ்பத்திரி வாழ்க்கதான்.

அதிகா பற்றி அம்மம்மா சொல்லிக்கொண்டிருக்கையில், அவளின் படிப்பு குறித்து அறியவும் விரும்புவீர்கள்.

”படிப்பெல்லாம்..”

3 ஆம் ஆண்டில இருந்துதான் பள்ளிக்கூடம் போகத் தொடங்கினவ. சுகமாகின பிறகு வவுனியா சிங்கள மகாவித்தியாலத்துக்குத்தான் இடம்பெயர்ந்த பிள்ளயள அனுப்பிச்சினம். அதிகாவையும் கூட்டிக்கொண்டு போனன். அதிபர் சொன்னார், பிள்ளைய இப்ப 1 ஆம் ஆண்டில சேர்த்தா ஷ்கொலர்ஸிப் எடுக்க ஏலாது. வயசுப்படி 3 ஆண்டிலயே சேர்ப்பம். பிள்ள படிக்க சிரமப்பட்டால், பிறகு யோசிப்பம் எண்டார். நாங்களும் சம்மதிச்சம்.

அவ்வள பிள்ளையளுக்குள்ளயும் அதிகா 3 ஆம் பிள்ளையா வந்திட்டாள். ஆச்சரியமா இருந்தது. முதலாம், ரெண்டாம் ஆண்டெல்லாம் ஆஸ்பத்திரியிலதான் அதிகா படிச்சவள். கொஞ்சம் சுகமா இருக்கேக்க, ஒண்டு, ரெண்டு. ஏ.பி.சி.டி, தமிழ் எழுத்துகள், தேவாரம் எல்லாம் சொல்லிக்குடுப்பன். அப்பிடியே மனப்பாடமா சொல்லுவாள். அது பிள்ளைக்கு பெரிய உதவியா இருந்திருக்கு.

பிறகு 2013 இல் ஸ்கொலர்ஸிப்லயும் பாஸ் பண்ணிட்டாள். 184 மாக்ஸ்…!இப்ப எட்டாம் ஆண்டு படிக்கிறாள்.

இப்ப ஓட்டோவிலதான் பள்ளிக்கூடம் கொண்டு போறது. அம்மா காலம கூட்டிக்கொண்டு போய் விடுவா.

பள்ளிக்கூடத்தில இவைய நல்லா கவனிப்பினம். இவா லேட்டாதான் எழும்புவா. அதனால இவா 8 மணிக்குப் பிறகும் பள்ளிக்கூடம் போகலாம்.

ஓட்டோவ கண்டதும் வகுப்புப் பிள்ளயள் எல்லாரும் ஓடிவருவினம். ரீச்சராக்களும் நல்லா கவனிப்பினம். பெரிய கஸ்ரமில்ல. ஆனா எங்களுக்குத்தான், பிள்ளைய பாக்க..பாக்க, அவவின்ர எதிர்காலத்த நினைக்க நினைக்க…..!அதிகாவின் அம்மம்மா மிகுதியாக சொல்ல வந்ததை சொல்வதற்கு அவரிடம் வார்த்தையில்லை. கஸ்ரம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அம்மம்மா அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க, சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அதிகா என்னும் அழகிய சிறுமியை அவளின் தம்பி தள்ளிவருகின்றான்.

தொடுவது, பார்ப்பது, பேசுவது என புலன்களால் உணரக்கூடிய அனைத்துக்கும் வர்ணமிடித்துப் பார்க்கும் கண்களோடு அச்சிறுமி அங்கிருந்தவர்களை நோக்கினாள். எல்லோரும் அவளைப் பார்க்க வெட்கப்பட்டாள். யாரையும் பார்க்கமுடியாது திணறினாள். அதிக அவ்விடத்தில் வெளிப்படுத்திய கூச்சவுணர்வு சொன்ன செய்திகள் ஏராளம். அவள் அந்தக் கூச்சவுணர்வுக்கும் சந்தோசம் பூச சிரிக்க முயற்சித்தாள். இயலவில்லை. தோற்றாள். தோல்வியை மறைக்கவும் இயலவில்லை.

“..உள்ள போ போறன்..உள்ள போ போறன்..” என்றாள். சக்கரநாற்காலியை திருப்பிக்கொண்டாள். எங்கள் முகம் பார்க்கவும் விரும்பவில்லை. எங்களை விட்டு நகரவும் அதிகா விரும்பவில்லை. திரும்பி வாசலில் நின்றுகொண்டாள்.

அப்படி நின்றபடியே தன் பெயர் சொன்னாள். தனக்குப் பிடித்த ஆசிரியர்களைச் சொன்னாள். நண்பிகளை சொன்னாள். தனக்குப் பிடித்த கதை சொன்னாள். பாடல் பாடினாள். தன் ஆசைகள் அதிகம் சொன்னாள் அதிகா.

“நான் படிச்சி டொக்டரா வரவேணும்..” என்றாள். அதிகாவின் தம்பி சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு வீட்டின் உள்ளே போனான். அந்த வீட்டின் உட்புறம் இருளாய் இருந்தது. இருள் மங்கியிருந்த வீட்டின் சுவர்களில் கலர் சோக்கினால் கீறப்பட்ட பல்வேறு உருவங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அது அதிகாவினால் தீட்டப்பட்ட வர்ணங்களாக இருக்கக்கூடும்.

எங்கள் பிஞ்சுகளை போர் இப்படித்தான் தின்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு அதிகாவும் ஒரு சாட்சி.

http://tamilleader.com/

  • தொடங்கியவர்

இந்தச் சிறுமி நலன்புரிநிலையத்தில் வைத்துத்தான் சுடப்பட்டாள்

இந்தச் சிறுமி நலன்புரிநிலையத்தில் வைத்துத்தான் சுடப்பட்டாள்

அதிகாவுடனான உரையாடல் முடிந்ததும், அவளின் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த ஆயிசாவின் வீட்டுக்குப் பயணமானேன்.

குன்றுகுழிகளாலும், கால் புதையும் மணலாலும் அவளின் வீட்டுக்கான ஒழுங்கை நிரம்பியிருந்தது. அவ்வொழுங்கை முடிவதற்கு நான்கைந்து வீடுகள் முன்னதாக, கழித்துவிடப்பட்ட தகரத்தால் ஆன படலையொன்றின் முன்னாள் ஆயிசா சக்கரநாற்காலியில் அமர்த்தப்பட்டிருக்கிறாள். அருகில் அவளுக்குத் துணையாக தம்பியொருவர் நிற்கிறார்.

இருவரும் புதினப் பார்வையுடன் என்னை நோக்கினர்.

என்ன செய்யிறீங்கள் றோட்டில?

“அம்மாக்கு அக்சிடென்ட். அப்பா ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போயிற்றார். பார்த்துக்கொண்டுநிக்கிறம்..” ஆயிசா சட்டென பதிலளித்தாள். அவளின் பார்வையில் குறும்புத்தனங்களும், அந்தக் குறும்புத்தனங்களை கைவிட்ட குழந்தையொன்றின் ஏராளமான ஏக்கங்களும் வழிந்தன.

வேற யார் நிக்கினம்?

“ஒருத்தரும் இல்ல. இவர் சித்தியின்ர மகன். என்னைப் பார்த்துக்கொள்றதுக்காக கூப்பிட்டு விட்டிட்டுப் போனவ. இப்ப வந்துடுவினம். நில்லுங்கோ..”
படிக்கிறீங்களா?

“ஓம். 8 ஆம் வகுப்பு படிக்கிறன்..”

அப்பா என்ன செய்யிறார்?

“கூலிக்குத்தான் போறவர்..”

அப்பா உழைக்கிற காசு காணுமா?

“அம்மாக்குத்தான் தெரியும்..”

என்னத்தில பள்ளிக்கூடம் போவீங்கள்?

“அம்மா இந்த சக்கரநாற்காலியில வச்சி தள்ளிக்கொண்டு போய் விடுறவா. பள்ளிக்கூடம் முடிய வந்து கூட்டிவருவா..”

இந்த மணலுக்குள்ளால, இவ்வளதூரம் கஸ்ரமில்லயா?

“அம்மா கஸ்ரம் எண்டு சொல்லேல்ல..”

எத்தின மணிக்கு பள்ளிக்கூடம் போவீங்கள்?

“ஏழு மணிக்கு..”

ஏன் அவ்வள நேரத்தோட?

“காலம நேரத்தோட போனா, முதல்நாள் எனக்கு விளங்காத பாடங்கள ரீச்சராக்கள் விளங்கப்படுத்திவிடுவினம். வகுப்பு நடந்தா அதில போய் இருப்பன்..”
பள்ளிக்கூடத்தில எல்லாரும் எப்பிடி?

“எல்லாரும் நல்லவியள். ரீச்சராக்கள் நல்லா கவனிப்பினம். எல்லா பிள்ளையளும் உதவிசெய்வினம். பள்ளிக்கூடம் சந்தோசமா இருக்கும். ஆனா இன்ரவெல் நேரம்தான் கவலையா இருக்கும். எல்லா பிள்ளையளும் விளையாடுவினம். கன்ரீன் போவினம். நான் வகுப்பில இருப்பன். இல்லாட்டி, வகுப்புப்பிள்ளையளிட்ட லைப்றரிக்கு கூட்டிப்போக கேட்டா, கூட்டிக்கொண்டு போய் விடுவினம். .”

ஏன் நீங்க உங்களோட படிக்கிற பிள்ளையளிட்ட காசு குடுத்துவிட்டு, கன்ரீன்ல ஏதும் வாங்கி சாப்பிடலாம்தானே..?

“எல்லா நாளும் அப்பாட்ட காசிருக்காது..”

உங்களுக்கு எத்தின நெருக்கமான நண்பர்கள்

“ஒராள்..”

யார்?

“அதிகா. (நேற்றைய பதிவில் வந்தவர்) அவரும் என்னப்போலத்தான். நிறைய நேரம் கதைப்பம். அவா ஓட்டோவில வருவா..”

உங்களுக்கு எப்பிடி காயப்பட்டதெண்டு அம்மா சொல்லியிருக்கிறவா?

“ஓம். எனக்குத் தெரியும். முள்ளிவாய்க்காலில இருந்து போய் அருணாச்சலம் காம்ப்ல இருந்தனாங்கள். பின்னேரம்போல ட்டென்ட் ஓரம் விளையாடிக்கொண்டிருந்தம். அந்த நேரம் பக்கத்து காம்ப்ல விறகு எடுக்க காட்டுக்கு போன ஆக்களுக்கும் ஆமிக்கும் சண்ட வந்திட்டு. ஆமி மேல் வெடி வச்சவன். அதில தான் ஒரு ரவுண்ஸ் வந்து எனக்கு பட்டிற்று..”

“..காயப்பட்ட உடன வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவ. பிறகு கொழும்புக்கு கொண்டு போனவ. அதுக்குப் பிறகு விசாரண நடந்தது. பிறகு விட்டிட்டினம்..”

என்ன விசாரணை?

“பொலிஸ், ஆமியெல்லாம் வந்து யார் சுட்டது எண்டு விசாரிச்சவ. பிறகு போயிற்றினம். ஒண்டும் சொல்லேல்ல..”

காயப்பட்டதுக்கு நட்ட ஈடு ஏதும் தந்தவையா?

“இல்ல..”

நட்டஈடு எண்டா என்ன எண்டு தெரியுமா?

“ஓம். பாதிக்கப்பட்ட ஆக்களுக்கு குடுக்கிறது. எனக்கு அப்பிடி ஒண்டும் தரேல்ல..”

பிறகு எப்பிடி படிச்சீங்கள்?

“காயப்படேக்க நான் நேசரிதான் படிச்சிக்கொண்டிருந்தன். பிறகு 2 ஆம் ஆண்டிலதான் சேர்த்தது. 2 வருசம் ஆஸ்பத்திரில இருந்தனான். அங்க நேர்ஸ் ஆக்கள் பாடம் சொல்லித்தந்தவ..”

இரவில எத்தின மணி வரைக்கும் படிப்பீங்கள்?

“10 மணி மட்டும்.பிறகு நித்திர வரும். அம்மா தூக்கி கிடத்திவிடுவா..”

வீட்டில என்ன வேலை செய்வீங்கள்?

“சயிக்கிள்ள இருந்தபடியே வீடுகூட்டுவன். மரக்கறி வெட்டி குடுப்பன். இவ்வளந்தான்..”

உங்கட இலட்சியம் என்ன எண்டு ரீச்சராக்கள் கேட்டா என்ன சொல்லுவீங்கள்

“டொக்டரா வரவேணும் எண்டு..”

அவளுக்கும் எனக்குமான 2 மணிநேர உரையாடல் இப்பிடித்தான் நிறைவுற்றது. அந்தச் சிறுமியின் கண்களில் படரும் வலி வார்த்தைகளில் இல்லை. அவளின் கண்ணில் கண்ணீர் இல்லை. அவள் பேசிய சொற்களில் ஆங்காங்கே இரத்தம் கசிவதை இதைப் படிக்கும்போது நீங்களறிவீர்கள். போர்தான் கொடுமையெனில், போருக்குப் பின்னரும் கொடுமை நிகழ்ந்தமைக்கு ஆயிசாவும் ஒரு சாட்சி. முள்ளிவாய்க்கால் அவலம் முள்ளிவாய்க்கால் நிலத்தோடு மட்டும் நிறைவடையவில்லை. அதன் பின்னரும் அப்பேரவலம் நீடிக்கிறது என்பதற்கும் அவளொரு சாட்சி.

 10

http://tamilleader.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.