Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2009 சில நினைவு மீட்டல்கள்

Featured Replies

 

எமது இனத்தின் அர்பணிப்புக்கள் வீண்போன இரவு.....

இறுதியாக இயங்கிவந்த முள்ளிவாக்கால் வைத்தியசாலையும் இன்று இரவுடன் செயல் இழக்கின்றது..... டாக்ரா் வாமன் நினைவுகளிலிருந்து..

இன்று நடு இரவுடன் எங்கள் மருத்துவமனை செயல் முடங்கி விடப் போகிறது.
இன்று பகல் முடியுமானவர்களை மருத்துவமனையை விட்டு நகர்த்தியிருந்தோம்.
நான் என் சக மருத்துவப் போராளிகளோடு காயமுற்றவனாக ஒரு அறையில் இருக்கிறேன்!
கடமையில் இருந்தபோது நெஞ்சில் ரவை துளைத்து காயமுற்ற பெண் மரத்துவப் போராளி அருகே இருக்கிறாள். அவளுக்காக மருத்துவ மனை அருகே தொடர்ந்து வந்துகொண்டிருந்த அவளது அப்பா சில நாட்களின் முன்னர்தான் கொட்டிலில் வீழ்ந்த குண்டால் சிதறிச் செத்து உருக்குலைந்து வீழ்ந்திருந்தார். எனது அணியில் இருந்த அவளிடம் இந்தச் செய்தியைச் சொல்லும் துயரம் எனக்கு வாய்த்தது.
தனக்கு அப்பா வேண்டும் என்று என்னைக் கட்டித் தழுவிக் கதறியவளை என்னை அவளது தந்தையாக ஏற்குமாறு கெஞ்சியிருந்தேன். சிலநாளில் என்னுடைய காயங்களுக்கு சிகிச்சையளித்தவள்
இன்று என்னோடு காயமுற்றவளாய் உயிருக்காகப் போராடியபடி இருக்கின்றாள்.
பக்கத்தில் என்னுடைய மருத்துவக் கவனிப்பில் என்னோடு ஒன்றாகக் காயமுற்ற கேணல் கீர்த்தி ஒட்சிசன் செறிவாக்கி இயந்திரம் செயலிழக்கும் (ஒட்சிசனின்றி உயிர் காக்க முடியாத நெஞ்சதிர்வுக் காயம்) போது சாவதற்காக உயிரை இழுத்துக் கொண்டிருக்கின்றார்.
என் மருத்துவ வாழ்வனைத்தும் ஒன்றாக என்போல் ஒரு காலுடன் வந்த என் சக மருத்துவன் இசைவாணன் தனது மூன்று குழந்தைகளும் சிதறிப் பலியாகிவிட தனது நல்ல காலின் தொடை என்பு முறிவுடன் குப்பி கடிக்க அனுமதி கேட்டுக் கொண்டே இருக்கிறான். நாளை அவன் குப்பி கடிப்பான் என்று புரியாமல் பொறுக்கச் சொல்லிக் கேட்கிறேன்.
மூத்த மருத்துவப் போராளி லோலோ இரண்டாம் தடவையாக இன்று நடந்த வயிற்றறுவை சத்திர சிகிச்சை முயற்சி வெற்றியளிக்காததை புரியாமல் அரை மயக்கத்தில் கிடக்கின்றான்.
அதுவரை இருந்த இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் உயிர்வாழப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்து கூறி பாரிய வயிற்றுக்காய தையலோடு மருத்துவ மனையை விட்டு அழைத்துச் செல்லப் படுகின்றார்.
வைத்தியர் வரதராஜா தன் உயிர்மேல் எந்தப் பற்றுதலும் அற்றவராய் தான் காப்பெடுக்க வேண்டிய எண்ணமற்றவராய் வெளியில் நின்றார்.
அவரது இறுதி மருத்துவமனை மூன்றாவது முறை தாக்கப்பட்டு கொல்லப்பட்டோரின் உடல்கள் குவியலாய்க் கிடக்க செயலற்று நின்றார். எங்கள் மருத்துவமனையின் வாசல் வழியில் இரு பக்கமும் உடல்கள் வரம்பு போல அகற்றப்படாமல் கிடக்க
சத்திர சகிச்சையின் பின் எழமுடியாமல் கிடந்தவர்களுக்கு சேலைன் பதிதாக மாற்றிப் போட்டுவிட்டு நடு இரவில் வெளியேறினோம்.


நன்றி் - Dr.வாமன்

 

 

எங்கள் எழுத்தின் முன்னோடிகளுள் ஒருவராகிய ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களது பதிவு இது. 

//ஆனால் அனைத்துமே நான் பிறந்த தாய்மண்ணுக்காக என்ற நெகிழ்வு நிறைவுதருகிறது. இது நான் தெரிவு செய்த பயணப்பாதை. பயணம் இலகுவானதாகவும் சொகுசாகவும் இருந்தபோது துதிபாடியாகவும் , பின்பு வசைபாடியாகவும் என்னை நான் ஒருபோதும் தாழ்த்திக்கொள்ள மாட்டேன். என் இலட்சிய எழுத்தின் சத்தியத்தைப் பேணுவேன்.// 

இந்த நேர்மைக்கு தலைதாழ்ந்த வணக்கம்..

................
மே 17. மறக்கமுடியாத இன்றைய நாள்.

2009 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதி நான் முற்றாக தனித்துப் போனேன். சுதந்திரபுரத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய என்னை தம்முடன் அரவணைத்து முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்த குடும்பம் ஒன்று இனி உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என உணர்த்திப் பிரிந்தனர்.

நான் ஓரளவுக்கு பிரபலமானவள். ஊடகங்களில் அறியப்பட்டவள் என்பதால் என்னால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எண்ணியிருக்கலாம் என இப்போது உணர்கிறேன். அது தவறுமில்லை. அன்று அவர்கள் என்னிடம் காட்டிய அன்பிற்கு என்றும் தலைவணங்குகின்றேன்.

பதினைந்தாம் திகதி இரவு முள்ளிவாய்க்காலில் ஆயுத சேமிப்பு கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்துக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் போராளிக் குடும்பம் ஒன்றுடன் ஒற்றையாய் தங்கியிருந்தேன்.

இனி என்ன சாவு நெருங்கிவிட்டது என்கின்ற நிலை. அதிகாலையில் வெடிப்பு சத்தங்கள் அமந்த நிலையில் அந்த குடும்பம் உண்டியல் சந்தியை நோக்கி புறப்பட்டது. நானும் தனித்துப் போய்விட்ட நிலையில் அவர்களுடன் புறப்பட்டேன். உரசுமாற்போல துப்பாக்கிச் சன்னங்கள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன.

காலை ந்ந்திக்கடல் அருகே நவம் அறிவுக்கூடப் போராளிகளுடன் நான் சேர்ந்துகொண்டேன். சமர்க்களங்கள் பலகண்டு விழுப்புண்கள் சுமந்தவர்கள் அவர்கள். என்னை அன்போடும் அக்கறையுடனும் பார்த்தார்கள். 2 அடி அகலமும் 4 அடி நீளமும் உயரம் குறைந்ததுமான பதுங்குகுழியில் குழந்தைகள் உட்பட்ட பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தோம்.

ந்ந்திக்கடல் அருகிலும் குண்டுகள் விழுந்து பனை வடலிகள் மற்றும் பற்றைகள் பற்றிஎரிய தொடங்கின. சாவு ஓலங்கள் கிலியை ஏற்படுத்தின. விறைத்துப்போய் மரணக்களையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். குழந்தைகள் கூட அழமுடியாமல் இறுகிக் கிடந்தன.

இரண்டு நாட்களாய் உணவோ தேனீரோ இல்லை. எனது பையில் நந்தினி தந்த சிறிதளவு சீனி இருந்தது. அதைக்கூட வாயிற்போடும் மனநிலை இருக்கவில்லை. மகனின் தவிப்பு மனதை வருத்தியது.

எங்களை சுற்றி ஒரே புகைமண்டலம். கூக்குரல்கள். இனி உயிர் தப்பமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை எனக்கு. மகனையும் துணைவரையும் பிரிந்து தொடர்பற்ற நிலையில் இனி உயிர்தப்பி என்ன செய்வது என்றும் இருந்தது.

எமக்கு ஒரு பத்து மீற்றர் தள்ளி ஒரு செல் விழுந்து வெடித்தது. அக்கம் பக்கமெல்லாம் கூக்குரல். கட்டுப்போடுங்கோ என்ற போராளிக்குரல்கள். பதுங்குகுழியை விட்டு வெளியேறி ஓடியவர்களுடன் நானும் ஓடினேன். என்பின்னே பார்வைவலுவற்ற போராளி நிமலன் , பயப்பிடாதேங்கோ என எனக்கு ஆறுதல் சொல்லியபடி வந்தார்.

நவம் அறிவுக்கூட போராளியான காவலன் மாஸ்ரர் சில தினங்களுக்கு முன் காயப்பட்டிருக்கவேண்டும். கண்பார்வையையும் இழந்துவிட்டிருந்தார். காயங்களுடன் அவரும் அவரின் மனைவி பிள்ளைகளும் கூட பின்னால் வந்துகொண்டிருந்தனர். ( காவலன் மாஸ்ரர் இறந்துவிட்டதாக அறிந்தேன்).

என் தலையை உரசுமாற்போல வந்த சிறிய குண்டு ஒன்று முன்னால் விழுந்தது. ஆனால் வெடிக்கவில்லை. அதனால் தப்பினேன். எங்கே போவது என தெரியவில்லை. பொழுது மங்கும்வரை அங்கும் இங்குமாக அலைந்தேன். வழி நெடுகலும் இறந்த சிதைந்த உடல்கள். சிறிய பதுங்குகுழி ஒன்றில் இரத்தம் குளமாக நின்றது. நான்கைந்து தலைகள் மட்டும் தெரிந்தன.

முன்னர் இறந்தவர்களின் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசின. நான் அலைந்துகொண்டிருந்த நிலையில் மெல்லிய இருளில்
"ஆதியக்கா. ......"
என்று என் கைகளை பிடித்தாள் நவம்அறிவுக்கூட போராளி ஆசிரியை வித்தகி.
அந்த நெருக்கடியிலும் என்னை இழுத்துக்கொண்டு சென்று தனது அம்மாவிடம், " அம்மா ஆதியக்கா இனி உங்கட பொறுப்பு. உங்களுடனே கூட்டிச்செல்லுங்கள்......." என கூறிப்போய்விட்டார்.

இரவு முழுவதும் இராணுவத்தினரின் தாக்குதல்கள். நடப்பதும் கைவிடப்பட்ட பதுங்குகுழிக்குள் பதுங்குவதும் என இருந்தோம். மழைகாலம் என்பதால் வெற்றுக்கால்களில் சேறு காய்ந்து குத்தியது.
நிலமெங்கும் காயப்பட்டவர்கள். உயிரற்ற உடல்களே கண்ணிற்பட்டன. கண்ணீர்கூட இல்லை. அழுவதற்கும் எவரிடமும் தென்பில்லை.

பின்னர் வித்தகி குடும்பத்துடனேயே தங்கி இருந்து மே 17 காலை வட்டுவாகலூடாக இராணுவாக்கிரமிப்புக்குள் வந்தோம். கடலென கூடிய மக்களிடையே காயங்களுடன் எனக்கு தெரிந்த பலரும் இருந்தார்கள்.
இன்று அவர்களில் பலர் எங்கே எனத்தெரியாது.

மூன்று ஆண்டுகால பிரிவையும் துயரங்களையும் பல்வேறு நெருக்கடிகளையும் மன உளைச்சல்களையும் தாண்டி துணைவருடன் இணைந்துகொண்ட நான் இறக்கிவைக்கமுடியாத் துயரங்களுடன் இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உயிருள்ளவரை மறக்கமுடியாத வலிகள்.

ஆனால் அனைத்துமே நான்பிறந்த தாய்மண்ணுக்காக என்ற நெகிழ்வு நிறைவுதருகிறது. இது நான் தெரிவு செய்த பயணப்பாதை. பயணம் இலகுவானதாகவும் சொகுசாகவும் இருந்தபோது துதிபாடியாகவும் , பின்பு வசைபாடியாகவும் என்னை நான் ஒருபோதும் தாழ்த்திக்கொள்ள மாட்டேன். என் இலட்சிய எழுத்தின் சத்தியத்தை பேணுவேன். உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் வாழக்கற்றுத்தந்த என் தந்தைக்கு நான் நன்றி சொல்வேன். அவரே எனக்குள் நாட்டுப்பற்றை நாட்டியவர்.

இறுதிப்போர் எப்படி நடந்தது ? ஏன் இப்படி நசுக்கப்பட்டோம் ?கடைசிவரை என்ன நடந்ததென்பது எல்லோர்க்கும் தெரியும்.

முள்ளிவாய்க்காலில் வதைந்தவர்கள் , காயமுற்றவரகள் , உயிரிழந்தவர்கள், உறுப்பிழந்தவர்கள், காணாமற்போனவர்கள் , என்னைப்போல் உயிர்தப்பி இன்னமும் மனவதைப் படுவோர் எல்லோருக்குமாக இறைவனை இறைஞ்சுகிறேன். எமது அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து மகிழ்வாக வாழவேண்டும். அதற்காக உழைப்போம்.

நன்றி -ஆதிலட்சுமி சிவகுமார்

 

Source முகநூல் 

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள்.
புலியை எதிருங்கள் ஆதரியுங்கள் அது உங்கள் உங்கள் தனிப்பட்ட மனவெழுச்சியாகும்.
 ரஜனி/கமல் , விஜய்/அஜித் போன்று திரையில் பார்த்து பங்கு பிரித்து பார்த்து விசிலடிப்பது அல்ல எம் நிலமை.  

உங்களைப் போல அல்ல எங்களுக்கு.
இன்றைய நாளில் செத்த எல்லாரையும் நாங்கள் உயிரோடு கண் முன் கண்டவர்கள் ஏன் அவர்கள் செத்தார்கள் என்ற காரணம் தெரிந்தவர்கள்.
இன்றைய நாளில் புலி எதிர்ப்பு என்று நீங்கள் கேவலப்படுத்துவது புலிகளையல்ல உங்களோடு சகோதரமாக பழகும் ஒருவனது அண்ணனை/ தம்பியை /அக்காவை/ தங்கையை / சொந்தக்காரனை.

ஒவ்வொரு மனுசனிட்டை போயும் உனக்கு உயிர் குடுத்தது யார் எண்டால் அம்மா அப்பா என்றிட்டு போய்விடுவான் ஆனால் எங்களுக்கு உயிர் குடுத்ததோட அம்மா அப்பான்ர வேலை முடிஞ்சுது இண்டைக்கு நாங்கள் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் அவங்கள் குடுத்த உயிர் தான்.

எங்கோ ஒரு அரங்கில் இருந்து கொண்டு ஊடகங்களால் மட்டும் எங்களை பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு எம் நிலமை தெரிய வாய்ப்பில்லை தான் அதனால் உங்கள் மேல் எனக்கு கோபமும் இல்லை ஆனால் இந்தப்படத்துக்கு எனக்கு பதில் சொல்லுங்கள் இதில் இருப்பது மீசை அரும்ப முதலே என்னோடு கை கோர்த்து பள்ளி வந்தவனும் ஒன்றாய் படித்தவனும் ஒன்றாய் விளையாடியவனும் ஒன்றாய் தின்று ஒன்றாய் படுத்தவனுமே எனக்கு தெளிவாய் தெரியும் இதில் ஒருத்தனும் முஸ்லீமைக் கொல்ல ஆயுதம் தூக்கவில்லை ஏன் சிங்களவரைக் கூட கொல்ல வேண்டும் என்று ஆயுதம் தூக்கவில்லை. நான் தூக்காவிடில் தன் அக்காவையோ தங்கையையோ குலைத்துவிடுவார்கள் என்று தூக்கியவர்கள்.
யாராவது தன் அழிவுக்கருவியை தானே விரும்பித் தூக்குவானா? அது தெரிந்தும் ஏன் தூக்கினான் என்று ஒரு நிமிடமாவது யாராவது நினைத்துப் பார்த்தால் இந்த உணர்வு இடைவெளிகள் வராது.

இவர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தான் புலிகள் எனக்கு என் நிழலோடு வாழ்ந்த சகோதரர்கள், கண்ணால் கண்ட கடவுள்கள் ஏன் அதற்கு மேலே என்று தான் சொல்வேன்....

நன்றி மதிசுதா

முகநூல் வழி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை வாசித்து விட்டு  வெறுமனே லைக் செய்துவிட்டு போக என்னால் முடியவில்லை.
நெஞ்சில் அமிலம் நிறைய, நான் நம்பி வணங்கிய கோயில்கள்,கடவுள்களுக்கு வசையும் சாபமும் மட்டுமே என்னிடம்  எஞ்சி இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.