Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையிலும் டில்லியிலும் நடந்ததென்ன?:சு-ப-வீ வழங்கிய பிரத்தியேகப் பேட்டி.

Featured Replies

சென்னையிலும் டில்லியிலும் நடந்ததென்ன?:சு-ப-வீ வழங்கிய பிரத்தியேகப் பேட்டி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் ஆகிய ஐவரும் அண்மையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களையும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது ஷ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள 'அரச பயங்கரவாதம்' குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரையும் பிரதமரையும் சந்திப்பதற்குப் பகீரத முயற்சிகளை மேற்கொண்டும் கைகூடாமல் போனது. இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இப்போது இரண்டு தரப்பினரும் கைகுலுக்கிக் கொண்டுள்ளனர்.

தமிழக முல்வருடனும் இந்தியப் பிரதமருடனும் நிகழ்ந்துள்ள இந்தச் சந்திப்புகள் சாதாரண சம்பவங்களல்ல. ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பதிவாகியிருக்கும் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு. ராஜீவ் கொலை விவகாரம் தமிழக அரசியலில் இப்போதும் ஒரு பேசுபொருளாக, துருப்புச் சீட்டாக இருக்கிறது. இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீது விதித்துள்ள தடை இன்றளவும் நீடிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர்கள். விடுதலைப் புலிகளை ஈழத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டிருப்பவர்கள். இந்தப் பின்னணியில் இவர்களுடன் மாநில, மத்திய அரசுகள் நிகழ்த்தியிருக்கும் சந்திப்புகளை, விடுதலைப் புலிகள் தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ள ஆரம்பித்திருப்பதன் அறிகுறிகளாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தச் சந்திப்புகளுக்கு முன் முயற்சியாக இருந்ததோடு, சந்திப்புகளிலும் கூடவே இருந்து கலந்து கொண்டவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். இவர் பெரியாரின் கொள்கைகள் மீது தீவிர பற்றுக் கொண்டவர். தமிழ்த்தேசிய சிந்தனையாளர். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தமைக்காக 'பொடா' சட்டத்தின் கீழ் ஒன்றரை வருட காலம் சிறைவாழ்வை அனுபவித்தவர். முதல்வர் கலைஞருக்கு நெருக்கமானவர். திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை நிறுவி, அதன் அமைப்பாளராகச் செயற்பட்டு வருகிறார்.

பன்முக ஆளுமை கொண்ட பேராசிரியர் சுப.வீ. அவர்களை சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். ஒன்றரை மணி நேரம் நீண்ட இந்த நேர்காணல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழக முதல்வருடனும் பிரதமருடனும் நிகழ்த்திய சந்திப்புகளையொட்டி மையப்படுத்தி அமைந்தது.

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்ட சந்திப்புகள் எவ்வாறு சாத்தியமாகின என்பதை முதலில் சொல்லுங்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற தடவை தமிழகம் வந்திருந்தபோது, முதல்வரையும் பிரதமரையும் சந்திப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பதை நான் அறிந்தேன். ஆனால், குறிப்பாக யார் ஈடுபடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒருவர் செய்கிறபோது குறுக்கிடக்கூடாது என்பதால் நான் தலையிடவில்லை. கடைசியாக, அந்த முயற்சி முழுமை பெறவில்லை என்பதை அண்ணன் கொளத்தூர் மணி மூலம் தெரிந்து கொண்டேன். அதன் பிறகே, அந்த முயற்சியை நான் தொடரலாம் என்று எண்ணி மருத்துவர் ராமதாஸ் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர், `உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வாருங்கள், முயற்சி செய்யலாம்' என்றார். அப்போது மற்றைய உறுப்பினர்கள் கொழும்புக்குத் திரும்பிவிட, சிவாஜிலிங்கம் மட்டுமே சென்னையில் இருந்தார். அவரை ராமதாஸ் அவர்கள் சந்தித்தார்கள். ஆனால், ஒரேயொருவர் மட்டுமே இருந்ததினால் மற்றையவர்களும் கலந்து கொள்ள வசதியாக, `உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பிறகு முதல்வரிடம் சந்திப்புக்கான தேதியொன்றைக் கேட்கலாம்' என்று மருத்துவர் அவர்கள் சொன்னார்கள். உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பிறகு எதிர்பாராத ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தேர்தலில் ஏற்பட்ட கசப்புணர்வை ராமதாஸ் அவர்கள் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் வெளிப்படுத்தியிருந்தார். எனவே, அவர் முதலமைச்சரிடம் கேட்பதற்கு இனிமேலும் வாய்ப்பிருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

முதல்வருடன் பேசுவதற்காக நவம்பர் 13 ஆம் தேதிக்கு ஒரு நேரம் வாங்கியிருந்தேன். அன்றைக்குப் பேசிக் கொண்டிருந்தபோதே இது பற்றி, `ஈழத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை வந்தபோது ஐயாவுக்கு சந்திக்க நேரமில்லாமல் போய்விட்டதோ?' என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். ஈழம் தொடர்பாகக் கடந்த காலங்களில் ஆட்சிக் கலைப்பு உட்பட பல கசப்பான அனுபவங்களைத் தி.மு.க. சந்தித்தது. மீண்டும் அது போன்ற தொல்லைகளில் நான் தன்னைச் சிக்க வைக்கப் பார்க்கிறேன் என்று அவர் கருதிவிடுவாரோ என்று பயந்தேன். எல்லாவற்றிலும் நான் தலையிடுவதாக அவர் நினைக்கக்கூடும் என்றும் தயங்கினேன். ஆனால் அவருடைய மறுமொழிகள் மிகவும் ஆதரவாக, இருந்தன. `அவர்களைப் பார்க்கிறதிலை எனக்கு எந்தத் தயக்கமும் இல்லையப்பா. அணுகினவர்கள் சரியாக அணுகவில்லை. அப்புறம் என்மேல் பழியைப் போடுகிறார்கள். நீயே அழைத்து வா, தாராளமாகப் பார்க்கிறேன்' என்றார்.

கொழும்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள அண்ணன் கொளத்தூர் மணி எல்லாவகையிலும் உதவினார். டிசம்பர் 20 ஆம் தேதி ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நானும் சென்று முதல்வரை அவரது மைலாப்பூர் இல்லத்தில் சந்தித்தோம். ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். சந்திப்பின் இறுதியில் முதல்வர் டெல்லியில் இருந்த அமைச்சர்கள் தயாநிதி மாறன் அவர்களுடனும், டி. ஆர். பாலு அவர்களுடனும் தொடர்பு கொண்டு, 'ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுப. வீ. யும் டெல்லி வருகிறார்கள். அவர்கள் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் வாங்குங்கள் என்று நம் எதிரிலேயே பேசினார். முதல்வர் எடுத்த உடனடி முயற்சியின் காரணமாக 22 ஆம் தேதியே பிரதமரைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது.

* இரண்டு சந்திப்புகளின்போதும் நீங்கள் உடனிருந்திருக்கிறீர்கள். உங்களது பார்வையில் சந்திப்புகள் எவ்வாறு அமைந்தன.

நட்பு ரீதியாகவும் மனநெகிழ்ச்சி உடையதாகவும் இருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில், ஈழத்தில் நடைபெறுகின்ற பேரவலங்களையும், அங்கு இருக்கக்கூடிய அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலைமைகளையும் ஒன்று விடாமல் எடுத்துச் சொன்னார்கள். அவற்றை இரண்டு பேருமே எந்தக் குறுக்கீடும் இல்லாமல் மிகுந்த பொறுமையோடும், பரிவோடும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முதல்வருடன் நிகழ்ந்த சந்திப்பில் விவாதம் எதுவும் நடைபெறவில்லை. `உங்கள் உணர்வுகளைக் புரிந்து கொள்கிறேன். கண்டிப்பாக உதவி செய்வேன். சோனியா அம்மையாரிடம் ஏற்கனவே சொல்லியுள்ளேன். இப்போது பிரதமரை மட்டும் பார்த்துவிட்டு வாருங்கள்.' என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்தார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் ஸ்டாலின் அவர்களும் கூடவே இருந்து எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நாங்கள் எதிர்பாராத விதமாக வாசலில் வந்து நின்று எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார். சந்திப்பின்போது பிரதமருடன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர்மேனன் அவர்களும் தேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் எம். கே. நாராயணன் அவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளைச் சொல்லி முடித்ததும் உரையாடல் நிகழ்ந்தது. அதில் பிரதமர், `வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார். அதைப் போலவே, இலங்கை தமிழ் மக்கள் பாதுகாப்போடும் சுயமரியாதையோடும் வாழவேண்டும் என்பதிலும், இந்தியா அக்கறையாக இருக்கிறது என்று சொன்னார்.

நான் பேசுகிறபொழுது, `விடுதலைப் புலிகள் மீது போர் தொடுப்பதாகப் பாவனை செய்து கொண்டு, தமிழ் இனத்தின்மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்கள் என்ற முறையில் அதை நாங்கள் எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும் என்று கேட்டேன். இதற்குப் பிரதமர், `தமிழனாக மட்டுமல்ல, இந்தியனாக மட்டுமல்ல. ஒரு மனிதனாக எவராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு இனத்தை அழிப்பதை இந்தியாவும் பார்த்துக் கொண்டிருக்காது. அதே சமயம், இரண்டு பக்கங்களிலுமே வன்முறைகள் கூடாது என்று தான் கருதுகிறோம் என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு மிகச் சரியாகப் பதில் கொடுத்தார்கள். தமிழர்கள் வன்முறையில் விரும்பி ஈடுபடவில்லை. தற்காப்புக்காகவே ஆயுதம் எடுத்தவர்கள். போர் நிறுத்தத்தையும் முதலில் தன்னிச்சையாக அறிவித்தது புலிகள்தான். இப்போதும் அரசு யுத்தத்தை நிறுத்துமானால் புலிகள் உடனடியாக அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள். அவர்களை மட்டும் யுத்தத்தை நிறுத்தச் சொல்வது சரியாகாது என்று சொன்னார்கள். இந்தப் பதில்களைப் பிரதமர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

பிரதமர், உடனடியாக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், `ஷ்ரீலங்கா அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து முதலில் அப்பாவிமக்களைக் குண்டு வீசிக் கொலை செய்வதை நிறுத்தச் செய்யுங்கள். ஏ- 9 நெடுஞ்சாலையைத் திறக்க வையுங்கள்' என்று சொன்னார்கள். அத்தோடு, `இலங்கை அரசாங்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் ஏமாற்றம் அடைந்துள்ளது. அந்நிலையில் இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். இலங்கை அரசுடன் இவை தொடர்பாகப் பேசுவதாகப் பிரதமர் சொன்னார். 47 நிமிடங்கள் நிகழ்ந்த சந்திப்பின் முடிவில் பிரதமர் மீண்டும் வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

* ஈழத்தமிழர்களின் பிரச்சினையில் தீர்வுக்கு முட்டுக் கட்டையாக இந்திய அரச அதிகாரிகள் இருப்பதாக பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகளின் செயற்பாடுகள் எப்படி இருந்தன?

உரையாடலின் நடுவே பிரதமர், எம். கே. நாராயணன் அவர்களைப் பார்த்து, 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' எனக் கேட்டார். அதுவரை எதுவுமே பேசாமல் இருந்த நாராயணன் அவர்கள், `எல்லாம் சரிதான். ஆனால், புலிகளைப் பற்றிய மதிப்பீடு இங்கு அவ்வளவு உயர்ந்ததாக இல்லை' என்று தன் பேச்சை வழமைபோலவே ஆரம்பித்து, `புலிகள் ஒருபோதும் சமாதானத்துக்கு வந்துவிடக் கூடியவர்கள் அல்ல என்பதைச் சம்பந்தன் அவர்களே நன்றாக அறிவார்' என்று முடித்தார். சம்பந்தன் அவர்கள், அதனை உடனடியாகவே மறுத்தார். `அப்படி ஒரு அபிப்பிராயம் என்னிடம் இல்லை. புலிகள் சமாதானத்துக்கு வரமாட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை.' என்று சொன்னார். பிரதமர் இதனை ஆமோதிக்கவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. சிவசங்கர்மேனன் அவர்கள் கூட்டம் முடியும் வரையும் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. எங்களுடைய முகபாவங்களையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். கூட்டம் முடிந்த பிறகு அறைக்கு வெளியே எங்களைச் சந்தித்து, `விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் தமிழக அரசின் மூலம் ஒரு பாலமாகச் செயற்படுங்கள். நல்லவைகளைச் செய்ய நாங்கள் முயற்சிப்போம்' என்ற ஒரேயொரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் கூட்டத்தை முடித்துவிட்டுச் சொன்ன செய்தியென்பதால் இதனை அதிகாரபூர்வமான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது.

-Thinakkural-

  • கருத்துக்கள உறவுகள்

இப்பேட்டியின் தொடர்ச்சி தினக்குரல் பத்திரிகையில் இருந்து

* இந்தச் சந்திப்புகளுக்கு ஏதேனும் முக்கியத்துவம் இருப்பதாக உணருகிறீர்களா?

இரண்டு வகையில் வரலாற்று முக்கியத்துவம் இருப்பதாகக் கருதுகின்றேன். 19 வருடங்களுக்குப் பிறகு ஈழத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்திய, அரசு அதிகாரபூர்வமாக அழைத்துப் பேசியிருக்கிறது என்பது ஒன்று. இன்னொன்று இவர்கள் மத்திய அரசோடு பேசுவதற்கான ஒழுங்குகளை ராஜீவ் கொலைக்குப் பிறகு தமிழக அரசு முன்னின்று செய்து கொடுத்திருப்பது. அதிலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி பொடா சிறையில் இருந்த எனக்குக் கௌரவம் தருவதுபோல, இந்தப் பணியில் முதல்வர் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். சந்திப்பு நிகழ்ந்த மறுநாள் டெல்லியின் புகழ் பெற்ற `The Asian Age' என்னும் பத்திரிகை `புலிகள் மீதான கொள்கையில் மாற்றம்' என்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. இதில் உண்மை இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் இதுகாலவரை இந்தியா காட்டிவந்த இறுக்கத்தில் ஒரு தளர்வு தெரிகிறது. சந்திப்புகளின் முக்கியத்துவத்தின் சாராம்சம் அதுதான். இதனை இலங்கை அரசுக்கு வெளிப்படுத்தும் விதமாகவே மாநில, மத்திய அரசுகள் இந்தச் சந்திப்புகளை நிகழ்த்தியுள்ளன.

* நீங்கள் பிரதமரைச் சந்தித்த அதே நாளில், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்னையில் ஊடகங்களைச் சந்தித்துள்ளார். அப்போது இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாது என்றும் இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சி வழமையான, ஒன்றுதான்' எனவும் தெரிவித்துள்ளார். இவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வேடிக்கையான முரண்பாடுகள்தான். இவற்றை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், டெல்லியில் தலைமையமைச்சரை ஈழத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தது என்பது அவர்களுடைய போராட்ட சூழலில் ஒரு கட்ட நகர்வு. இது அன்றைக்கு எடுத்த முடிவு. ஆனால் பிரணாப்முகர்ஜி அவர்கள் சென்னையில் நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் ஒரு வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் வழங்கிக் கொண்டிருக்கின்ற வழமையான செய்திகள். அரசின் கொள்கை முடிவுகளில் முழுமையான ஒரு மாற்றம் வருகின்ற வரையில் எந்த ஒரு வெளியுறவுத்துறை, அமைச்சரும் அதுவரையிருந்த அரசின் போக்கு எதுவோ அதைத்தான் சொல்லிக் கொண்டிருப்பார். எனவே இந்தப் பதிலுக்கு நாங்கள் முக்கியத்துவம் தரத் தேவையில்லை. ஆனால் பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்ததை சகித்துக் கொள்ள முடியாத, ஈழத் தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதுகின்ற தினமலர் போன்ற சில ஊடகங்கள் பிரணாப் முகர்ஜி அவர்களின் பதில்களை மிகுந்த முக்கியத்துவம் போல வெளியிட்டுள்ளன.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்படுவது, ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் கொண்டுள்ள உறவு என்ற அடிப்படையில் இன்று வரையில் நிகழ்ந்து வருகிறது. இது எமக்கு எதிரான நிலைப்பாடு என்றாலும் கூட அஞ்சத்தக்க மோசமான நிலை அல்ல. பிரணாப்முகர்ஜி அவர்கள் அதே நேர்காணலில் இலங்கைக்கு வெடி பொருட்கள் வழங்கப்படுவது தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த நேர்காணலுக்குச் சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவிலிருந்து வெடி பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தினூடாக அனுப்பி வைக்கப்பட்டது. இது தெரியவந்ததுமே தமிழகத்திலிருந்து பல தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்தனர். முதல்வர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. அந்தோனி அவர்களை நேரில் சந்தித்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். தமிழகம் கொடுத்த நெருக்கடிகள்தான் இனிமேல் ஆயுதங்களை அனுப்புவதில்லை என்ற முடிவுக்கு இந்திய அரசைத் தள்ளியது. இப்படி ஏனைய விடயங்களிலும் ஈழத்தமிழர்களுக்குச் சார்பான நிலையை எடுக்க வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

*ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சமீபத்திய முயற்சிகளுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினரின் எதிர்வினை எப்படி இருக்கிறது?

இதுவரையில் எதிர்நிலையில் எந்த எதிர்வினையும் வரவில்லை. செஞ் சோலைப் பிள்ளைகளுக்காக ஒரு பட்டினிப் போராட்டத்தை நடத்தியபோது காங்கிரஸ் கட்சித் தலைவர்களோடு தொலைபேசியில் பேசினேன். அப்போது நான் ஒரு செய்தியை அழுத்தமாகச் சொன்னேன். ஒரு சம்பவம் ஒரு நாட்டின் வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. முத்துத் துறைமுகத்தை ஜப்பானியர்கள் தாக்கியதும், ஹிரோஷிமா - நாகசாகியில் அமெரிக்கா குண்டு போட்டதும் இன்றைக்கு அமெரிக்கா - ஜப்பான் உறவுகளுக்கு இடையூறாக இல்லை. வெள்ளைக்கார அதிகாரிகளை நம் விடுதலைப் போராளிகள் சுட்டதும், நம் விடுதலைப் போராளிகளை அவர்கள் தூக்கில் ஏற்றியதும் இங்கிலாந்து - இந்தியா உறவுகளுக்கு இடையூறாக இல்லை. அதைப் போலவே, ராஜீவ் காந்தி கொலையால் உங்களுக்குக் காயங்கள் இருப்பதைப்போல, இங்கிருந்து போன அமைதிப்படையால் அவர்களுக்கும் ஆயிரங் காயங்கள் இருக்கின்றன. அவற்றைக் கணக்குப் பார்க்கும் நேரம் இதுவல்ல. மனிதநேய அடிப்படையில் வந்து மலரஞ்சலி செலுத்திவிட்டுப் போங்கள் என்று கேட்டேன். ஆனால் யாருமே வரவில்லை. இதை ஒரு குற்றமாக நான் பார்க்கவில்லை.

காங்கிரஸ் தோழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சோனியா காந்தி அம்மையார் எடுக்கிற முடிவை எதிரொலிக்கிறவர்களாக இருப்பார்களே தவிர, ஒரு புதிய கருத்தை உருவாக்கிவிட வேண்டுமென்றோ, தமிழ் மக்களுக்கு எதிராக இருக்க வேண்டுமென்றோ நினைக்க மாட்டார்கள். சோனியா அம்மையாரிடம் முதல்வர் அவர்கள் ஈழப்பிரச்சினை பற்றி எடுத்துச் சொல்லி ஒரு பரிவை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில் கூட முதல்வருக்கு சோனியா அம்மையார் எழுதிய கடிதத்தில் `தமிழினம் அழிக்கப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்று அழுத்தந் திருத்தமாகக் குறிப்பட்டுள்ளார். சோனியா அம்மையார் அப்படி ஒரு முடிவில் இருக்கிறபொழுது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இடையூறாக இருக்கமாட்டார்கள். இது வெறும் நம்பிக்கையாக மட்டும் போய்விடக்கூடாது என்பதால் அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசும் முடிவில் இருக்கிறேன்.

* ஈழ ஆதரவு நிலைப்பாடு கொண்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகள், அமைப்புகள் தமது ஆதரவுச் செயற்பாடுகளைத் தனித்தனியாகவே மேற்கொண்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைப்பது குறித்து யோசித்திருக்கிறீர்களா?

எல்லோரும் ஒரே குடையின் கீழ் நின்றால் என்ன என்ற எண்ணம் எனக்குப் பல தருணங்களில் வந்திருக்கின்றதுதான். அதேசமயம், இதை நான் வேறொரு கோணத்திலும் பார்க்கிறேன். விருப்பம் என்பது வெறும் கற்பனாவாதமாகப் போய்விடக்கூடாது. ஈழவிடுதலையை ஏற்றுக் கொண்ட கட்சிகள், அமைப்புகளுக்கு இடையே தமிழக, இந்திய அரசியல் சார்ந்த மாறுபட்ட விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல ஈழ ஆதரவில்கூட நான் முந்தி, நீ முந்தி என்றோ, அல்லது அடுத்தவர் செய்வது போதாது என்றோ விமர்சனங்கள் இருக்கலாம். எனவே அனைவரையும் ஒருங்கிணைக்கின்ற நேரத்தில் இந்த விமர்சனங்களும் விரிசல்களும் வெளிப்பட்டு, ஒற்றுமையில் மட்டுமல்லாமல் ஈழ ஆதரவுக்கே அது கெடுதலாக அமைந்துவிடும். எனவே எல்லோரையும் இதற்கு ஆதரவாக மாற்றுவோம் என்பதுதான் முக்கியமே தவிர, ஒரே குடையின் கீழ் திரட்டுவது தேவைப்படுகின்ற ஒன்றல்ல. பிரிந்திருக்கின்ற எல்லாவற்றையும் பிளவுகளாக நினைக்க வேண்டியதில்லை. அவை கிளைகளாகவும் இருக்கலாம்தானே.

* ஈழத்தமிழர்கள் மீதான முதல்வரின் சமீபத்திய கரிசனைகளை, இதே நிலைப்பாட்டில் உள்ள வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களைப் பின்தள்ளுகின்ற அரசியல் எத்தனம் என்று சொல்லும் ஒரு விமர்சனமும் இருக்கிறது. இதில் உங்களின் கருத்து என்ன?

நான் முதலில் கூறியதைப்போல, தமிழ்நாட்டு அரசியல் காரணமாகவே முதல்வரின் முயற்சிகளும் அரசியலாகப் பார்க்கப்படுகிறது. எந்த ஒரு செயலும் அரசியல் இல்லாமல் இருக்கும் என்று நாங்கள் எண்ண வேண்டியதில்லை. அரசியல் இருப்பதால் அது பிழையும் இல்லை. ஆனால் முதல்வரின் கரிசனை வெறும் அரசியல், அவர் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இல்லாதவர் என்று சொல்லுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஐயா போன்ற தலைவர்களது ஈழ ஆதரவுப் பணிகளை எவ்வாறு குறைத்து மதிப்பிட முடியாதோ, அதேபோல முதல்வரின் ஆதரவும் குறைத்து மதிப்பட முடியாதது. 1956 ஆம் ஆண்டின் போதே, சேலத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்தவர் கலைஞர் அவர்கள். அப்பொழுது இலங்கையில் தனிச்சிங்களச் சட்டம் அறிவிக்கப்பட்டு, கலவரம் நடந்து கொண்டிருந்தது. தொடர்ந்தும் அவர் ஆதரவாகவே குரல் கொடுத்து வந்திருக்கிறார். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 1983 இல் வெலிக்கடைச் சிறையில் படுகொலைகள் நிகழ்ந்தபோது தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்திய அமைதிப்படை 1990 இல் திரும்ப வந்த போது அபி. வரவேற்கப் போகவில்லை. `என் தமிழ் மக்களைக் கொன்றுவிட்டு வருகின்ற இராணுவத்தை வரவேற்கப் போகமாட்டேன்' என மறுத்துவிட்டார். முதல்வராக இருந்து கொண்டு அவர் வரவேற்கப் போகாதது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. சமீபத்தில்கூட பத்திரிகையாளர்களின் கேள்வியொன்றுக்கு, `ஈழம் கிடைத்தால் நான் மகிழ்வேன் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். இப்போதும் என் நிலை அதுதான்' என்று பதில் கூறியிருக்கிறார். ஒரு முதல்வர் இதைவிட அழுத்தமான வேறு என்ன பதிலைச் சொல்லியிருக்க முடியும்?

நாங்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் பொறுப்பில் இருக்கிற அவர் எங்களைப் போல எல்லா நேரங்களிலும், விரும்பிய எல்லாவற்றையும் பேசி விட முடியாது. அப்படிப் பேசவில்லை என்பதற்காக ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியது இல்லை. பிரதமரைச் சந்தித்து விட்டு சென்னை திரும்பிய நாங்கள் நன்றி தெரிவிப்பதற்காக மீண்டும் கலைஞர் அவர்களைச் சந்தித்தோம். அப்போதும்கூட, `ஈழத்தமிழர்களின் இன்னல்கள் தீர மத்தியஅரசுக்கு என்னால் ஆன அழுத்தங்களைக் கொடுப்பேன். தொடர்ந்தும் உங்களுக்கு உதவியாக இருப்பேன்' என்று உறுதியளித்திருக்கிறார். ஒரு மூத்தஅரசியல் வாதியின் வாக்குறுதி என்பதற்கும் அப்பால், ஒரு தந்தையின் பரிவு மிகுந்த வார்த்தைகளாகவே இவற்றை என்னால் உணர முடிகிறது.

*ஈழத்தமிழர்கள் அடைந்துவருகின்ற இன்னல்களுக்கான ஒரு தீர்வாக நீங்கள் எதனைக் குறிப்பிடுவீர்கள்?

தீர்வு எது என்பதைப் போராடும் ஈழ மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். தலைவர் பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தனியரசை நிறுவுவதைத் தவிர வேறுவழியில்லை என்று தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் சமாதானத்துக்கான சந்தர்ப்பங்களை மீண்டும்மீண்டும் வழங்கி பொறுமை காத்தபோதெல்லாம் இலங்கை அரசு ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எதனையும் முன் வைக்கவில்லை. மாறாக வேற்று நாடொன்றுடன் போர் புரிவது போலவே குண்டு வீசியும் பட்டினியில் தள்ளியும் தமிழர்களைக் கொன்று வருகிறார்கள். சிங்கள பேரினவாதத்தின் கடும் போக்குத்தான் தமிழீழம்தான் தீர்வு என்ற நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. நான் விடுதலைப்புலிகளின் போராட்டம் எல்லா வகையிலும் நியாயம் என்று கருதுகின்றவன். எனவே தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்மொழிவதை வழிமொழிபவனாகவே எப்போதும் நான் இருப்பேன்.

*இலங்கையின் இறையாண்மை, ஒருமைப்பாடு குறித்து தொடர்ந்து பேசிவரும் இந்தியாவிடம் இருந்து தமிழீழத்துக்கான ஆதரவையோ, அங்கீகாரத்தையோ பெற முடியும் என்று எதிர்பார்க்கலாமா?

இந்தியா, `இலங்கையின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் நேராத வகையில் தீர்வு காணப்படவேண்டுமென்று பேசி வருவதால்தான் இலங்கை அரசு துணிந்து தமிழ் இனத்தையே அழித்து வருகிறது. இதைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தபோது, ஈழத் தமிழர்களின் சட்ட பூர்வ உரிமைகள், அபலாஷைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறவரை இந்தியா இதனை வலியுறுத்திப் பேசக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.