Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசைமாறிய திருமலையின் தலைவிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திசைமாறிய திருமலையின் தலைவிதி

-சி.இதயச்சந்திரன்-

தினச் செய்திகளை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஒரு கொதிநிலைப் பிரதேசமாக மாற்றமடைந்து வெடிப்பு நிலையிலுள்ளது திருகோணமலை. தமிழ் மன்னர்களும் பூனைக்கண் அந்நியரும் ஆண்ட வளமிக்க பூமி, ஆக்கிரமிப்புக் கரங்களுள் சிக்கி சின்னாபின்னமாகிறது.

கிழக்கில் அம்பாறை அபகரிக்கப்பட்டு, சேருவில பிரிக்கப்பட்டு மகாவலி ஆற்றுப் படுக்கையின் தமிழ் எல்லைக் கிராமங்கள் அகற்றப்பட்டு, தமிழின நிலச் சிதைவு சிறிலங்காவின் இறையாண்மைக்குள் நிகழ்த்தப்பட்டுவிட்டது. இதனை இப்படியே ஏற்றுக் கொண்டு அரசு தரும் சில்லறைகளை கையேந்தி வரவேற்கும் இழிநிலையை நியாயபூர்வமாக்க இன்னுமொரு கிழக்குத் தலைமை எமக்குத் தேவையா?

அரசோடு இணைந்துள்ள தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள் கிழக்கை முழுமையாக ஆக்கிரமிக்கும் பௌத்த மேலாதிக்கச் சிந்தனைக்கு வலுச்சேர்க்கப் போகிறது.

எம் விரல்களே எமது கண்ணைக் குத்தும் அவல நிலைமையை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிறுபான்மைக் கட்சிகள் இதுவரை ஆட்சி செய்த அரசாங்கங்களோடு இணைந்து செயற்பட்டாலும், தமிழ், முஸ்லிம் கிராமங்கள் சிங்கள மயமாவதைத் தடுக்க அவர்களால் இயலவில்லை.

அரச படையோடு இணைந்து செயற்படும் ஊர்காவல் படையினரின் வெறியாட்டத்தில் அழிந்த கிராமங்களும், உயிரிழந்த மக்களும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மிக அதிகம்.

இக்கிராம மக்களின் அழிவு, வடக்கிலிருந்து வந்தவர்களால்தானா ஏற்பட்டது? துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த கிராமங்களில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களை நிகழ்த்தியது விடுதலைப் புலிகளா?

முன்னைய காலங்களில் தமிழ், முஸ்லிம் நல்லுறவினை சீர்குலைத்த அதே உத்திகளை, சில துணைக் குழுக்களின் உதவியோடு தற்போது கிழக்கில் கையாள எத்தனிக்கப்படுவதை தெளிவாகப் புரிதல் அவசியம்.

செல்லரித்துப்போன பிரதேச வாதத்தை மறுபடியும் தூசிதட்டி கையிலெடுப்பதால் யாருக்கு நன்மையென்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டிய காலமிது.

தற்கால தமிழ் இளைஞர் சமூகமானது சாதி, மத, பிரதேச வேறுபாடுகளிற்கு அப்பால் ஒன்றிணைந்து, தமது தாயக விடியலிற்காகப் போராடும் இத்தருணத்தில் எம்மிடையே பிளவினை உருவாக்கும் எவ்வகையான செயற்பாடும் எம்மையே பலவீனமாக்கும்.

இந்நிலையில் தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் அடுத்து என்ன நடக்குமென்பதே பலராலும் கேட்கப்படும் கேள்வியாகவுள்ளது.

பெருந்தேசிய இன ஆக்கிரமிப்பினால் குரல்வளை நசுக்கப்படும் இப்பிரதேசத்தின் வரலாற்றினை மீட்டிப் பார்ப்பது ஏனைய வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களிற்கு பல புரிதல்களை வழங்கலாம்.

அரசின் பரீட்சார்த்தக் களமாகவும், சர்வதேச நாடுகளின் பொருளாதார, இராணுவ நலன்சார் மையமாகவும் திருகோணமலை இடம்பெறுவது குறித்து சற்று நோக்கலாம்.

அந்நிய வெளிநாட்டாரின் ஆட்சி இப்பிரதேசத்தில் எவ்வாறு செயற்பட்டதென்பதை பின்னோக்கிப் பார்த்தால் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசரின் வருகையோடு வரலாற்றை எடைபோடுவதே இலகுவானது.

ஆக்கிரமித்த போர்த்துக்கீசர், திருமலை நகரில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வர ஆலயத்தை அழித்தனர். 1656 ஆண்டுடன் இவர்களின் ஆட்சிக்காலமும் முடிவிற்கு வந்தது.

1782-83 வரை பிரெஞ்சுக்காரர் திருமலையைத் தக்க வைத்த வேளையில் ஆங்கிலேயருடன் ஏற்பட்ட மோதல் 1784 இல் சமாதான ஒப்பந்தமொன்றினை ஏற்படுத்தியது. அத்துடன் தற்காலிகமாக செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி திருமலையானது பிரித்தானியரின் கட்டுபாட்டினுள் கொண்டு வரப்பட்டு, 1795 இல் முழுமையாக பிரித்தானியாவின் கையில் ஆட்சி விழுந்தது.

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் 1803 ஆண்டு கூட்டப்பட்ட பிரெடெரிக் கோட்டையானது (குழசவ குசநனநசiஉம) இன்று வரையுள்ள வரலாற்று சான்றாக கோணேசர் ஆலய வாசற்கதவாகத் திகழ்கிறது.

இன்று, கோட்டை வாசலிலிருந்து ஆலயம் வரையுள்ள பாதையில் இருமருங்கிலும் இராணுவ முகாமும் அரசாங்க அதிபருக்கான காரியாலயமும் கச்சேரி நிர்வாகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 50 ஆண்டு காலமாகவே திருகோணமலை அரச அதிபராக சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிர்வாகத்தின் கீழுள்ள கச்சேரியின் நில அளவை காணிப் பிரிவுகளில் சிங்கள இனத்தவரே பிரதான உத்தியோகத்தர்களாக கடமை புரிந்தனர். இவர்களினூடாக, திட்டமிட்ட வகையில் கோயில் காணிகளும், தரிசு நிலங்களும், அரச காணிகளும் வெளிமாவட்டங்களான கந்தர, மாத்தளை தென்பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட சிங்களவர்களால் நிரப்பப்பட்டன.

திருகோணமலை இடப்பெயரிலுள்ள திருவிற்குப் பதிலாக 'திரி" என்கிற சொல்லே பொருத்தமானதாகவிருக்கும். திரி என்பது மூன்றைக் குறிக்கும் சொல்.

முக்கோண வடிவில் இடம்பெறும் மலைக்குன்றுகள் மூன்றையும் இணைத்து கோண வடிவினை உருவாக்குவதால் திரிகோணமலை என்கிற குறியீட்டுப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

கோணேசர் ஆலயமும், கடற்படைத் தளமும் கொட்டியாரத்தில் ஒட்டி நிற்கும் மலைப்பகுதியுமே இப் புள்ளிகளாகும்.

ஒட்டி நிற்கும் மலைப்பகுதியிலமைந்த கடற்படை தலைமைக் காரியலாயலயத்தில் மீதே அண்மையில் செறிவான எறிகணைத் தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டார்கள்.

உள்துறைமுகத்தை அண்டிய நிலப்பரப்பில் பிறிமா மா ஆலையும் டோக்கியோ சிமெந்து தொழிற்சாலையும் யப்பான் நாட்டு கொம்பனிகளின் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளன.

சீனன்குடாவில் பிரித்தானியாவால் நிர்மாணிக்கப்பட்ட எண்ணெய் சேகரிப்பிற்கான நிலத்தடிக் கிணறுகளை இந்தியா குத்தகைக்கு எடுத்துள்ளது. அரசுடன் செய்து கொண்ட அனல்மின் நிலையத்தை இதற்கு அருகாமையில் நிறுவவே இந்தியா விரும்புகிறது.

இந்நிலையில் பொருளாதார, இராணுவ கேந்திர முக்கியத்துவமிக்க இம்மண்ணில் ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னான மாற்றங்களைப் பார்க்கலாம். 1948 இல் பிரிட்டிசாரிடமிருந்து கைமாற்றம் செய்யப்பட்டு சுதந்திர தேசமாக பிரகடனம் செய்யப்பட்ட இலங்கையில், பதவியேற்றவுடன் 1320 சிங்களக் குடும்பங்களை குடியேற்றிய டி.எஸ்.சேனநாயக்க, பார்வதிபுரத்தை பதவியா ஆக்கினார்.

பார்வதிபுரம், பூர்வீகத் தமிழ் குடிகள் வாழ்ந்த கிராமம் 1949 இல் மேலும் 1,112 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. பிரதேசத்தின் வடபகுதியை துண்டிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.

அடுத்ததாக தென் பகுதியிலுள்ள அல்லையில் 877 சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. வாழ்விட வசதிகள் வழங்கி, வாழ்வதற்கான சகல உதவிகளையும் அரசு வழங்கியது.

அண்மையில் புலிகளிற்கும், இராணுவத்திற்குமிடையே வெடித்த யுத்தத்தில் பரவலாகப் பேசப்பட்ட பிரதேசமே அல்லை, கந்தளாய் ஆகும்.

1948 இல் சிங்களவர் 5மூ ஆகவும் தமிழ் முஸ்லிம் 95மூ ஆகவுமிருந்த திருமலைப் பிரதேசத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் பின் 1953 இல் சிங்களவர் 15மூ ஆக வளர்ச்சியுற்றனர்.

தமிழ்த் தலைமைகள் நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்ந்து மொழியுரிமை பற்றிப் பேசிக் கொண்டிருக்க, 1957 இல் 612 குடும்பங்களைக் குடியேற்றிய அரசு முதலிக்குளம் என்ற தமிழர் பகுதியை மொர வேவா ஆக்கியது.

சிறீ அழிப்புப் போராட்டங்களும், கொடியிறக்கும் முயற்சிகளும் மேலோங்கி நின்ற வேளையில், திருமலை நகரை அண்டிய சூழலில் அபேயபுர என்கிற சிங்களக் குடியேற்றக் கிராமம் நிர்மாணிக்கப்பட்டது.

மரக்கறிச் சந்தையை ஒட்டி, நகரின் மத்தியில், தனியாக நிற்கும் மணிக்கூட்டுக் கோபுர உச்சியில், பறந்து கொண்டிருந்த சிங்கக் கொடியை இறக்க முயன்ற நடராசன் என்ற தமிழ் உணர்வாளன் சுட்டு வீழ்த்தப்பட்டதும் இக்காலத்தில்தான்.

1962 இல் முல்லைத்தீவை நோக்கிய கடல் வழித் தரைப்பாதையில் அமைந்துள்ள திரியாய் கிராமத்திற்கு அருகில் 72 சிங்கள குடும்பங்கள் அமர்த்தப்பட்டன.

1960 களின் ஆரம்ப கால கூட்டத்தில் திருமலைப் பட்டினமும் சூழலும் அமைந்த பகுதிகளில் திட்டமிட்ட இன உட்புகுதல் நிகழ்ந்தேறியது. 1963 இல், நகரிலிருந்து 1 1ஃ2 மைல் தூரத்தில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள உப்புவெளிக்கு மிக அண்மையில் சிறிமா புர என்கிற இன இடைச் செருகல் 133 சிங்கள குடும்பங்களால் நிரப்பப்பட்டது.

சிறிமா புரத்தோடு ஒட்டிய பகுதி ஜமாலியர் என்றழைக்கப்படும் முஸ்லிம்களின் வாழ்விடமாகும். சமாதானத்திற்கான போர் தொடுத்த சந்திரிகா பண்டாரநாயக்காவின் அம்மாவான சிறிமாவோவின் ஆட்சிக் காலத்திலேயே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் துரித கதியில் இடம்பெற்றன.

சிறிமாவோ ஆட்சிக் காலத்திலேயே சோசலிசம், சுயநிர்ணயம் பேசிய கம்யூனிஸ்டுக்களும் சமாஜவாதிகளும் ஆட்சியிலிருந்தனர். அதேபோன்று இன்றைய ஆட்சிக்கும் அதே சோசலிசக் குஞ்சுகளே முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். 1964 இல் சீனன்;குடா விமானப்படைத் தளத்தினை அண்டிய பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டது.

1968 இல் பெரியகுளம் என்கிற தமிழ் கிராமம் நாமல்வத்தையாகியது. 1971 ஆம் ஆண்டு திருகோணமலை குடிசனப் பரப்பலில் பெரும் மாற்ற மேற்பட்டு சிங்களவர் 31மூ ஆகவும், தமிழர் 37மூ ஆகவும், முஸ்லிம்கள் 29மூ ஆகவும் மாறினர். அத்துடன் மூதூரில் உள்ள கிளிவெட்டி என்கிற பிரதேசம் தெஹிவத்தயாக மாற்றப்பட்டது.

சிங்களக் குடியேற்றங்கள் வளர்ச்சியுற்றதும், பெயர் மாற்றம் செய்வதை தமது அடுத்தகட்ட நில ஆக்கிரமிப்பின் குறியீடாக அரசு கைக்கொண்டு அடையாளம் அழித்தலை முன்னெடுத்தது.

இறுதியாக, எடுக்கப்பட்ட குடிசனத் தொகை மதிப்பீட்டில் 86,410 சிங்களவர்களும், 93,570 தமிழர்களும் 74,403 முஸ்லிம்களும் திருமலை மாவட்டத்தில் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை திருமலை, மூதூர் என்றிருந்த மாவட்ட தேர்தல் தொகுதியுள், புதிதாக சேருவில என்கிற தனிச் சிங்கள தொகுதியொன்றை உருவாக்கியது அரசு.

அரச மரங்கள் முளைத்த இடங்களையெல்லாம் சூழ, சிங்களக் குடியேற்றங்கள் அரசால் மேற்கொள்ளப்பட்டன.

இக்காலத்தில் அரச மரங்களை வெட்டி வீழ்த்துவதையே போராட்ட வெளிப்பாடாகக் சிலர் கொண்டார்கள். சரியான தலைமையற்ற நிலையில், சிறியளவான போராட்ட முனைப்புக்கள் சீக்கிரமே செயலிழந்து போயின.

இந்நிலையில் மண் விடுதலையை நோக்கி ஆயுதப் போராட்ட சக்தி திருமலையில் தோற்றம் பெற்றது. மூதூர் பகுதியில் அன்னலிங்கம் (ஐயா) குமார வடிவேல் திருமலையில் நகரில் மகேந்திரன் சொர்ணம், ரூபன், சார்ள்ஸ் அன்ரனி, புலேந்திரன், கோணேஸ் (அருணா) என்போர் ஆயுதப் போராட்டத் தளத்தினுள் தம்மை இணைத்துக் கொண்ட முதன்மைப் போராளிகளாவர்.

நகர்ப்புறச் சுற்றாடல் பகுதிகளான மட்கோ, அநுராதபுரச் சந்தி கோயில் காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு. இனக்கலவர நாட்களில் காவல்துறையின் துணையோடு வன்முறையில் ஈடுபட்டார்கள்.

நாட்டைப் பாதுகாக்கும் கருவிகளின் பாதுகாப்போடு முன்னெடுக்கப்பட்ட தமிழர்கள் மீதான வன்முறை வடிவங்கள் விரிவடைந்து, பல இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தில் பால் ஈர்த்தது.

இனரீதியான சிறு உரசல்கள் பெருந்தீயாக வெளிக்கிளப்பி, திருகோணமலை மாவட்டமே ஒரு மாரியம்மன் கோவில் மடை நிகழ்ச்சித் தளமாகிவிடும்.

மீன் சந்தைக்கு அருகிலுள்ள பேருந்து தரப்பு நிலையத்தில் வந்து இறங்கும் தமிழர்கள் வெட்டப்படுவதும், சிங்கள குடியேற்றப் பகுதிகளிலுள்ள பாதைகளில் மரக்குற்றியை போட்டு இடைமறித்து தமிழ்ப் பாதசாரிகளையும், பயணிகளையும் கொலை புரிவதுமான நிகழ்வுகள் கோணேசர் மலைப்பகுதியிலிருந்து உடுக்கடித்து வழிநடாத்தப்படும்.

நீண்ட காலமாகவே ஜனநாயக வாழ்வுரிமையற்று, அந்நியராக வாழ்ந்து வரும் திருமலைத் தமிழர், அரசின் திறந்த வெளிச் சிறைச்சாலையில் சிங்களக் காடையர்களாலும் இன மேலாதிக்க சக்திகளாலும் பெரும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய நிலையில், ஊரை விட்டு அம்மக்களை வெளியேற்றும் அழுத்தங்களை ஆயுதக் குழுக்களின் துணையோடு அரசு செயற்படுத்த முனைவது கேவலமானது.

வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்று சர்வதேசத்தின் பொருளாதார முற்றுகைக்குள் திருமலையை இறுக்கி, முதலீட்டாளர்கள் மூலமாவது புலிகளை அச்சுறுத்தலாமென ஸ்ரீலங்கா அரசு எதிர்பார்க்கிறது.

இருப்பினும் வல்லரசுகளின் கழுகுக் கண்களின் ஆக்கிரமிப்புப் பார்வையில் இமைசரியாத ஊடுருவல் எப்போதுமே திருமலை பிரதேசத்திலுள்ள இக்குன்றுகள் மீது உண்டு.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (07.01.07)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.