Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா

Featured Replies

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா

 

 
கடந்த ஆண்டு நடந்த பனாமா சுதந்திர தின விழாவில் அந்த நாட்டு பாரம்பரிய உடையில் நடனமாடிய பெண்கள்.
கடந்த ஆண்டு நடந்த பனாமா சுதந்திர தின விழாவில் அந்த நாட்டு பாரம்பரிய உடையில் நடனமாடிய பெண்கள்.

பனாமா என்பது மரமா? மீன்களா? பட்டாம்பூச்சிகளா?

கால்வாயாலும் கசிந்த திடுக்கிடும் தகவல்களாலும் உலக தலைப்புச் செய்தி களில் தொடர்ந்து இடம் பிடித்த தேசத்தின் கதை.

‘பனாமா கால்வாய் தெரியும். மற்றபடி பனாமா என்று ஒரு நாடு இருக்கிறதா என்ன?’ என்று சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வருகிறது.

சமீபத்தில் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் தகவல்கள் கசிந்து உலகத் தலைவர்கள் உள்ளிட்ட பல வி.ஐ.பி.க்களை கிடுகிடுக்க வைத்தபோது ஒருவர் கேட்டார் ‘பனாமாவா? அது எங்கிருக்கிறது?’

பனாமா, அது அமைந்த இடம் காரண மாகவே தனிச்சிறப்பு பெற்ற ஒரு சிறிய நாடு.

பனாமா அமெரிக்க கண்டத்தில் இருக் கிறது. ‘வட அமெரிக்காவா? தென் அமெரிக்கா வா?’ என்று கேட்டால் இரண்டுக்கும் இடை யில் என்றுதான் பதில் சொல்ல வேண்டும். அதன் தென்பகுதியில் பசிபிக் பெருங்கடல், வடக்கு எல்லையாக கரீபியன் தீவுகள். மேற்கில் கோஸ்டா ரிகா. வடகிழக்கில் கொலம்பியா.

பனாமாவின் தலைநகரின் பெயரைச் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள லாம். பனாமா சிட்டி. பனாமா மக்கள் அனை வருக்குமே தெரிந்த மொழி என்று ஸ்பானிஷை சொல்லலாம். காரணம் அது ஸ்பெயினின் வசம் தொடர்ந்து இருந்து வந்த நாடு.

பனாமாவுக்கு ஏன் அந்தப் பெயர்? மூன்று காரணங்களை வெவ்வேறு தரப்பினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்குள்ள ஒருவகை மரத்துக்கு ‘பனாமா ட்ரீ’ என்று பெயர். எனவே நாட்டுக்கும் அந்தப் பெயர் வந்து விட்டது. இந்த மரத்தின் தாவரவியல் பெயரை அறிந்து கொண்டுதான் தீருவேன் என்றால் அது ஸ்டெர்குலியா அபெடாலா என்பதை உச்சரித்து உங்கள் நாக்குக்குக் கஷ்டம் கொடுக்கலா ம்.

இரண்டாவது காரணம் இது. உள் ளூர்வாசிகளின் மொழிகளில் ஒன்றில் பனாமா என்றால் ‘பல பட்டாம்பூச்சிகள்’ என்று அர்த்தம். வெளிநாட்டினர் இங்கு வந்து சேர்ந்தபோது அவர்கள் பல பட்டாம்பூச்சி களைக் கண்டார்கள். உள்ளுர் வார்த்தை யையே தேசத்தின் பெயராக வைத்து விட்டனர்.

மூன்றாவது காரணமும் சொல்லப்படு கிறது. அந்தப் பகுதியின் ஒரு கடற்கரைக்கு பனாமா என்று பெயர். அதனால் நாட்டுக்கும் அந்தப் பெயரை வைத்து விட்டார்கள் ஸ்பானியர்கள் என்கிறது ஓர் ஆராய்ச்சி. அந்தக் கடற்கரைக்கு ஏன் அந்தப் பெயர் என்று நீங்கள் தொடர்ந்து கேட்டால் இதோ பதில். அந்தப் பகுதியின் மொழியில் பனாமா என்றால் ‘எக்கச்சக்கமான மீன்’ என்று அர்த்தம்.

தொடக்கத்திலிருந்து பனாமாவில் இருந்து வந்த உள் ளூர்வாசிகள் குனா, சோகோ, குயாமி என்று பல இனங்களைச் சேர்ந்தவர்கள். 1502-ல் ரோடிர்கோ என்ற ஸ்பானியக் கடல்வழி கண்டுபிடிப்பாளர் பனாமாவைக் கண்டறிந்தார். ஒண்ட வந்த ஒட்டகம் கூடாரத்தையே தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது. 1519-ல் பனாமா உள்ளிட்ட அந்தப் பகுதிகள் ஸ்பெயின் வசம் வந்தது.

1821-ல் பனாமா ஸ்பெயினிட மிருந்து சுதந்திரம் பெற்றது. கிரான் கொலம்பியா கூட்டமைப்பின் ஒரு பகுதியானது.

அதென்ன கிரான் கொலம்பியா? கிரேட் கொலம்பியா என்பதை ஸ்பானிஷ் மொழியில் கிரான் கொலம்பியா என்பார்கள்.

இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப் போம்.

காலப்போக்கில் ஸ்பெயினின் ஆளு கைக்கு உட்பட்ட காலனி நாடுகள் ஒவ்வொன்றாக சுதந்திரம் பெற்றன. ஆனால் பனாமாவில் சுதந்திர தாகம் அவ்வளவு சீக்கிரம் எழுந்ததாகத் தெரியவில்லை. காரணம் பிற பகுதிகளின் சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பான தகவல்கள்கூட பனாமாவை மிகவும் மெதுவாகவே சேர்ந்தன. கடல் வழியாகவே தகவல் தொடர்பு வந்தாக வேண்டுமென்ற நிலை.

என்றாலும் பிற நாடுகள் தங்கள் சுதந்திரத்திற்கு பனாமாவை ஒரு பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டன. 1797-ல் வெனிசுலாவில் ஸ்பெயினுக்கு எதிரான புரட்சி இயக்கம் நடைபெற்றது. அப்போது அந்த நாட்டின் ராணுவத் தளபதி பிரான்சிஸ்கோ மிராண்டா என்பவர். பிரிட்டன் தங்கள் பகுதிக்கு சுதந்திரம் கொடுத்தால் பதிலுக்கு பனாமா பகுதியில் அவர்கள் கால்வாய் வெட்டுவதற்கு தாங்கள் ஆதரவு அளிப்போம் என்றார்.

சைமன் பொலிவர் 1819 ஆகஸ்ட் 7 அன்று புரட்சியில் வெற்றி பெற்றவுடன் கொலம்பியாவை ஆட்சி செய்த ஸ்பானிய வைஸ்ராய் பனாமாவுக்குச் சென்றார். 1821 வரை அங்கு ஆட்சி செய்தார். பின்னர் கர்னல் எட்வின் ஃபப்ரேகா என்பவரின் பொறுப்பில் பனாமா வந்தபோது, சுதந்திரப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.

பனாமாவின் தற்போதைய தலைநகரான பனாமா சிட்டி இதுகுறித்து ஆற அமர திட்டமிட்டது. ஆனால் அதற்குள் பனாமாவைச் சேர்ந்த மற்றொரு நகரமான லாஸ் சாண்டோஸ் தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவே அறிவித்து விட்டது. இதை அங்கீகரிக்கும் வகையில் பனாமா சிட்டியில் நவம்பர் 28, 1821 அன்று ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 28 பனாமாவின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-1/article8693396.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 2

 

 
பனாமாவில் ஸ்பெயின் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட தலைநகரம் சிதிலமடைந்து வருகிறது. பனாமா சிட்டி அருகேயுள்ள அந்த நகரில் 1519-ல் தேவாலயம் கட்டப்பட்டது. அங்கு தற்போது தேவாலய கோபுரமும் சில சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
பனாமாவில் ஸ்பெயின் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட தலைநகரம் சிதிலமடைந்து வருகிறது. பனாமா சிட்டி அருகேயுள்ள அந்த நகரில் 1519-ல் தேவாலயம் கட்டப்பட்டது. அங்கு தற்போது தேவாலய கோபுரமும் சில சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அமெரிக்க கண்டத்தின் வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு இடையே அமைந்த பனாமா ஒருவழியாக ஸ்பெயினின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டது. பிறகு?

ஸ்பெயினிலிருந்து பனாமா விடுபட்டது. என்றாலும் தனி நாடாகவில்லை.

பனாமா எப்படிச் செயல்படலாம்? மூன்று வழிமுறைகள் ஆராயப்பட்டன.

ஒன்று, கொலம்பியாவின் ஒரு பகுதி யாகவே அது இருக்கலாம் (அப்போது கொலம்பியா என்பது பனாமா, வெனிசுலா ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது). இரண்டாவது, பெரு நாட்டுடன் இணைந்திருக்கலாம். மெக்ஸிகோவுடன் பனாமாவை இணைத்துவிடலாம் என்பது மூன்றாவது யோசனையாக இருந்தது (மொத்தத்தில் பனாமாவைத் தனி நாடாக விடுவதில் யாருக்கும் இஷ்டமில்லை. பனாமாவும் ஸ்பெயினிலிருந்து விடுபட்டதே என்ற எண்ணத்தில் இருந்தது).

இரண்டாவது கருத்தை முன்வைத்தவர் பனாமாவின் பிஷப்பாக இருந்தவர். இவரது பூர்வீகம் பெரு. அதனுடன் பனாமா இணைந்தால், பெருவின் வணிகம் மேம்படும் என்பதுதான் பிஷப்பின் நோக்கம் என்பது தெரியவர, பெருவோடு இணைக்கும் யோசனையை பனாமா மறுத்தது. மெக்சிகோவுடன் இணைப்பு என்பதும் ஒதுக்கப்பட்டது.

பனாமா கொலம்பியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று பெரும்பான்மையினர் முடிவெடுத்தனர். 1821-ல் இதற்கான அரசிய லமைப்புச் சட்டம் உருவானது. பனாமா, வெராகுவஸ் என்ற இரு மாகாணங்கள் பனாமாவில் செயல்படத் தொடங்கின.

கிரான் கொலம்பியா கூட்டமைப்பும் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கியது.

1826-ல் பனாமாவுக்கு ஒரு தனி கவுரவம் கிடைத்தது. ஸ்பெயினின் பிடியிலிருந்து விடுபட்ட நாடுகளின் மாநாடு ஒன்றை கொலம்பியத் தலைவர் பொலிவர் ஏற்பாடு செய்தார். அந்த மாநாடு பனாமாவில் நடக்கும் என்றார்.

சுதந்திரமும், நீதியும் இந்த நாடுகளில் நிலவ என்ன செய்ய வேண்டும் என்பதற் காகக் கூட்டப்பட்ட மாநாடு இது என்று கூறப்பட்டது. ஆனால் இதன் உண்மையான நோக்கம் மீண்டும் ஸ்பெயின் வசம் இந்த நாடுகள் சென்று விடாமல் எப்படித் தடுப்பது என்பதுதான்.

இந்தச் சூழலில் இந்த நாடுகளின் பாது காப்புக்கு பிரிட்டனை நாடினார் பொலிவர். அமெரிக்காவை இவர் ஏன் இதற்காகத் தேர்ந்தெடுக்கவில்லை? அப்படித் தேர்ந் தெடுத்தால் பிரிட்டனின் பகைமையை சம்பாதிக்க வேண்டியிருக்கும். தவிர அமெரிக் காவில் அப்போது அடிமை முறை அமலில் இருந்தது. ஆப்பிரிக்காவில் அடிமை வணி கத்தை நீக்க வேண்டும் என்ற பொலிவரின் போராட்டத்துக்கு அமெரிக்காவை அணுக்க மாக வைத்துக் கொள்ளுதல் சிக்கலைத் தரலாம்.

எனினும் இந்த மாநாட்டுக்கு அமெரிக்கா வுக்கும் அழைப்பு விடுத்தார் பொலிவர். அமெரிக்கா சில பார்வையாளர்களை அனுப்பலாம் என்றார்.

அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்ஸ் சில அமெரிக்கப் பிரதிநிதிகளை பனாமா மாநாட்டுக்கு அனுப்ப முடிவெடுத்தார். ‘‘பேச்சு வார்த்தைகளில் பங்கெடுத்துக் கொள் ளாதீர்கள். அந்த நாடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவுக்கு உண்டு என்று ஒத்துக் கொள்ளாதீர்கள். கடல்வழி வணிகத் தைப் பொறுத்தவரை அந்த நாடுகள் நடுநிலை யைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுங்கள்’’ என்றார். ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதை பல அமெரிக்கப்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவழியாக அவர்களை சம்மதிக்க வைத்தபோது காலம் கடந்து விட்டது. பிரிட்டன் மற்றும் ஹாலந்தில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஆனால் தங்களை அதிகாரபூர்வமற்ற பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டனர்.

அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த சில நாடுகள் இந்த மாநாட்டில் பங்கு கொண்டன. அவை மெக்ஸிகோ, கொலம்பியா, பெரு (கொலம்பியாவின் ஒரு பகுதியாகத்தான் பனாமா இருந்தது என்று நமக்குத் தெரியும்).

‘நாம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நம்மிடையே பிரச்சினைகள் உண்டானால் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும். நம்மிடையே ஸ்பெயினுக்கு ஆதரவாக யாராவது இருந்தால் அவர்களைக் கட்டம் கட்ட வேண்டும். எந்த உறுப்பினர் நாட்டின் ஆட்சி முறையும் மாறக் கூடாது. அப்படி மாறினால் அது உடனடியாக கூட்டமைப்பிலிருந்து நீக்கப்படும். அதன் பிறகு மீதமுள்ள அத்தனை உறுப்பினர் நாடுகளும் ஒரு சேர ஒத்துக் கொண்டால்தான் நீக்கப்பட்ட நாடு கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படும்’ என்று மாநாட்டில் தீர்மானங்கள் இயற்றப் பட்டன.

ஆனால் இந்தத் தீர்மானங்களுக்கு எழுத்துபூர்வமாகவும், நடைமுறையிலும் சம்மதித்தது கொலம்பியா மட்டும்தான். 1830-ல் பொலிவர் இறந்தார். இறப்பதற்கு முன் கிரான் கொலம்பியா நாடுகள் குறித்த தனது ஏமாற்றத்தை வெளிப்படுத் தினார்.

1830லிருந்து 1840 வரை கொலம்பியாவி லிருந்து பனாமாவைப் பிரிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் வெற்றி பெறவில்லை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-2/article8704934.ece

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 3

அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய் ரயில்வே பாதை.
அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய் ரயில்வே பாதை.

வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை பனாமாவுக்கு உண்டு. அங்கு சூரிய உதயத்தை பசிபிக் கடலில் பார்த்துவிட்டு, சூரிய அஸ்தமனத்தை அட்லாண்டிக் பெருங் கடலில் பார்க்கலாம். ஒரே நாளில் இந்த இரு பெரும் கடல்களிலும் நீந்தலாம். கொலம்பியாவின் ஒரு பகுதியாக இருந்த பனாமாவின் மீது அமெரிக்காவின் பார்வை வெகு அழுத்தமாகப் பதிந்ததற்குக் காரணம் உண்டு. ஏன்? பார்ப்போம்.

இன்றைய தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியிலுள்ள நாடுகளும் மத்திய அமெரிக்காவின் தெற்குப் பகுதி நாடுகளும் இணைந்த கூட்டமைப்பாக மாறியது கிரான் கொலம்பியா. 1819-ல் இருந்து 1830 வரை இந்தக் கூட்டமைப்பு சிதறாமல் இருந்தது.

இன்றைய கொலம்பியா, பனாமா, வெனிசுலா, ஈக்வேடர், வடக்கு பெரு, மேற்கு கயானா, பொலிவியா, வடமேற்கு பிரேஸில் ஆகியவை இதில் அடங்கிய நாடுகள் (எனினும் ஈக்வேடார் மற்றும் வெனிசுலாவின் சில பகுதிகள் மீது ஸ்பெயின் ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருந்தது). 1830-ல் கொலம்பியா தன்னை மேற்படி கூட்டமைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டபோது அதன் ஒரு பகுதியானது பனாமா.

பனாமாவின் மீது அமெரிக்காவின் (யு.எஸ்.ஸின்) பார்வை அழுத்தமாகவே படிந்தது. சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து நியூ யார்கிற்கு ஏதாவது பொருளைக் கப்பலில் அனுப்ப வேண்டுமென்றால் தென் அமெரிக்காவை

வலம் வந்துதான் செல்ல வேண்டியிருக்கும். பனாமா பகுதிக்கு அருகே ஒரு கால்வாய் வெட்டப்பட்டால் இதன் மூலம் சுமார் 8000 மைல் கப்பல் பயணத்தைக் குறைக்க முடியும். நேரம், பணம் இரண்டுமே எக்கச்சக்கமாக மிச்சமாகும்.

‘இந்தப் பகுதியில் ஒரு கால்வாய் வெட்டப்பட்டால், அது பசிபிக் கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்குமே; இதனால் அற்புதமான கடல்வழி ஒன்று கிடைக்குமே’ என்பதால் பல வல்லரசுகளுக்கு இந்தப் பகுதியின் மீது ஒரு கண். பெரும்சக்தி கொண்டு அந்நாளில் விளங்கிய பிரிட்டன் இப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு கால்வாயையும் வெட்டிக் கொண்டு அது தனக்கே சொந்தம் என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கொலம்பியாவுக்குத் தோன்றியது. அதனால் 1846-ல் யு.எஸ்.ஸுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி பனாமா பகுதியில் நடைபெறும் அனைத்து வணிகத்துக்கும் யு.எஸ்.பாதுகாப்பு அளிக்கும்.

1850-ல் இந்த நிலப்பரப்பில் ஒரு ரயில் பாதையை நிறுவ கொலம்பியா ஒத்துக் கொண்டது. நியூயார்க் வணிகர்களுக்கு இந்தப் பாதை காலப்போக்கில் பெரும் லாபம் தரும் என்பதால் அவர்கள் எண்பது லட்சம் டாலர் செலவில் ரயில் பாதையை நிறுவினார்கள்.

இந்த ரயில் பாதை தொடர்பாக பனாமா குடியரசு அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் பாதை கட்டப்படவிருக்கும் பனாமா கால்வாய்க்கு இணைகோடுபோலச் செல்லும். அட்லாண்டிக் கடலையும், பசிபிக் கடலையும் (மத்திய அமெரிக்கப் பகுதியில்) இணைக்கும். இந்த ரயில் தடம் 76.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதை நிர்வாகிக்க ‘’பனாமா கால்வாய் ரயில்வே கம்பெனி’’ என்ற அமைப்பு ஒன்று உருவானது. பனாமா கால்வாய் சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு உருவானபோது அதற்கான கட்டுமானத்துக்கு இந்த ரயில்வே தடம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அமெரிக்கா இந்த ரயில் பாதை உருவாவதில் மிக அதிக ஆர்வம் காட்டியதற்கு வேறொரு குறிப்பிட்ட காரணம் உண்டு. கால்வாய்க்கான திட்டம் தீட்டி அது உருவாகப் பலப்பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்குள் 1849-ல் கலிஃபோர்னியாவில் தங்கம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட, தங்க வேட்டை நடத்துபவர்கள் மிக அதிகமானார்கள். அமெரிக்காவின் பிற பகுதிகளிலிருந்து அங்கு வணிகர்கள் குவிந்தனர். லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா போன்ற பல பகுதிகளிலிருந்து அங்கு வந்தனர்.

இது தொடர்பான சட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்படாததால், பலரும் தங்கச் சுரங்கங்களை வெட்டி உரிமை கோரலாம் என்ற நிலை தொடக்கத்தில் அதிகமாகவே இருந்தது. இதைத் தொடர்ந்து கலிஃபோர்னியாவுக்கான போக்குவரத்தும் அதன் வணிகமும் பெருகின. இந்த நிலையில் பனாமா பகுதியில் உருவான ரயில் தடம் அமெரிக்காவுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

அடுத்ததாக பனாமா கால்வாய் தொடர்பான விஷயங்களைக் கூறி முடித்து விட்டு பனாமாவில் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற அரசியல் சம்பவங்களுக்கு வருவோம்.

இப்போதைய பனாமா கால்வாய் இருப்பது வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் மிகச் சிறிய பகுதியில். இப்போது பனாமா தனிநாடு என்றாலும் ஒரு காலத்தில் தென் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா நாட்டின் வடபகுதியாகவே இருந்து வந்தது என்று அறிந்தோம். அப்போது இந்தப் பகுதியைக் கடக்க வேண்டுமானால் படகின் மூலம், பிறகு கழுதைகளின் துணையுடன், அதற்குப் பிறகு கால்நடையாக என்றுதான் பயணம் செய்ய வேண்டும்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-3/article8709248.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 4

 

 
பனாமா கால்வாயில் பயணிக்கிறது ஒரு கப்பல். (கோப்பு படம்)
பனாமா கால்வாயில் பயணிக்கிறது ஒரு கப்பல். (கோப்பு படம்)

பனாமா பகுதியில் தொடக்கத்தில் ஒரு ரயில் பாதையை எழுப்புவதில் ஆர்வம் காட்டி அதைச் செயல்படுத்தியது அமெரிக்கா. பிறகு பனாமா கால்வாயை எழுப்பும் பணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இனி? ...

1878-ல் பனாமா பகுதியில் கால்வாயை நிறுவும் பணியை லூசியனட் நெப்போலியன் என்பவருக்கு கொலம்பியா வழங்கியது. அவர் அந்த உரிமையை வேறொரு நிறுவனத் துக்கு விற்றுவிட்டார். இந்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே சூயஸ் கால்வாயை உருவாக்கிய அனுபவம் இருந்தது (உலகிலேயே செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கால்வாய்களில் மிகப் பெரியது சூயஸ். அடுத்தது பனாமா).

இந்த இடத்தில் இன்னொன்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். கால்வாய் என்றதும் ஏதோ நடுவிலுள்ள கொஞ்சம் மண்ணை நீக்கி கடலின் இரு பகுதிகளையும் இணைப்பது என்பதல்ல. பனாமா கால்வாய் மிக பிரம்மாண்டமான ஒரு திட்டம். அதன் சில பகுதிகளில் கடல் மட்டத்துக்கு மேலே கூட பாதை உண்டு!

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமாபுரி சக்கரவர்த்தியான ஐந்தாம் சார்லஸ் கூட, பனாமா கால்வாய் குறித்து யோசித்து ஆய்வு ஒன்றை செய்யச் சொன்னார். ஆனால் அது நனவாகவில்லை.

பனாமா கால்வாய் ஒரு வழியாக 1882-ல் உருவாகத் தொடங்கியது. ஆனால் அது பாதி கட்டப்பட்ட நிலையிலேயே அதற்கான உரிமையைப் பெற்ற நிறுவனம் திவாலாகிவிட்டது.

சுமார் 580 லட்சம் கனமீட்டர் பூமி வெட்டப்பட்ட நிலையில், இதை அப்படியே ‘நியூ பனாமா கெனால் கம்பெனி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட மற்றொரு பிரான்ஸ் நிறுவனத்துக்கு விற்று விட்டது. இந்த நிறுவனம் ‘கால்வாயை உருவாக்குவது எங்கள் நோக்கமல்ல. மேலும் அதிக விலைக்கு யாருக்காவது விற்று லாபம் ஈட்டவே இந்த உரிமையை வாங்கினோம்’ என்பதைத் தன் செய்கை களால் உணர்த்தியது.

இந்த நிறுவனத்தின் தலைவர் பெர்டினாண்ட் ஸெஸெப்ஸ். எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய்கூட இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

ஆனால் பனாமா கால்வாயைப் பொருத்த வரை இவர் தீட்டிய திட்டங்கள் சரியில்லை என்கிறார்கள். நிறைய கட்டுமானச் சிக்கல்கள். தவிர கால்வாய் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கொள்ளை நோய்களால் கொத்துத் கொத்தாக மடிந்தனர்.

சூயஸ் கால்வாய் போலவே பனாமா கால்வாயும் முழுவதும் கடல் மட்டத்திலேயே இருக்குமாறு பெர்டினாண்ட் ஸெஸெப்ஸ் திட்டமிட்டார். ஆனால் இதற்காக கால்வாயைக் குடைவது என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது.

பின்னர் இந்தச் சிக்கலைத் தீர்க்க குஸ்டவ் ஈபில் என்பவரை வரவழைத்தார் பெர்டினான்ட் (பாரிஸிலுள்ள உலகப் புகழ் பெற்ற ஈபில் கோபுரத்தை வடிவமைத்தவர் இவர்தான்). ஆனால் விரைவிலேயே பெர்டினான்டின் நிறுவனம் திவாலானது. அந்த நிலையில் 26 கோடி டாலர்கள் பனாமா கால்வாய்க்காக செலவிடப்பட்டிருந்தன. 7 கோடி கன யார்டு அளவு கொண்ட மண் குடைந்தெடுக்கப்பட்டிருந்தது.

இது பிரான்சில் பெரும் புயலைக் கிளப்பியது. பெர்டினாண்ட், அவரது மகன் சார்லஸ், குஸ்டவ் ஈபில் ஆகியோர் ‘ஏமாற்றுதல் மற்றும் மோசமான நிர்வாகம்’ ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குஸ்டவ் ஈபில் தன் தொழிலிலிருந்து விலகிக் கொண்டார். தன் மீதி வாழ்நாளை அறிவியல் ஆராய்ச்சியில் செலவழித்தார். 1894-ல் பெர்டினாண்ட் இறந்துவிட்டார்.

அதே ஆண்டு புதிய பிரெஞ்சு நிறுவனம் உருவானது. திவாலான நிறுவனத்தைத் தனதாக்கிக் கொண்டு, பனாமா கால்வாய் திட்டத்தைத் தொடரத் தொடங்கியது. ஆனால் விரைவிலேயே இந்தக் கால்வாய் திட்டத்தை தான் கைவிட்டு விடுவதாக இந்த நிறுவனம் அறிவித்தது.

அமெரிக்கா, பனாமா கால்வாய் மீது ஈடுபாடு கொண்டிருந்தாலும் அது முதலில் நிகாரகுவா பகுதியின் வழியாக கால்வாய் உருவாக்குவதில் அதிக ஈடுபாடு காட்டியது. ஆனால் நிகாரகுவா பகுதி எரிமலைகள் நிரம்பியதாக இருந்தது தெரிய வந்ததும் பனாமா கால்வாயை ஏற்றுக் கொண்டது.

(இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு சீன நிறுவனம் ஒன்று நிகாரகுவா அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதும் இதன்படி அங்கு ஒரு கால்வாய் 40 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் என்பதும் சமீபத்திய தகவல்கள்).

பொருளாதார நோக்கத்துடன் ராணுவ கோணத்திலும் அமெரிக்காவுக்கு ‘பனாமா கால்வாய் கனவு’ அதிகமாகத் தொடங்கியது. அப்போது அதன் ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் அந்த பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து கால்வாய் கட்டும் உரிமையை வாங்கிக் கொள்ள சம்மதித்தார்.

பனாமா கால்வாய் உருவானதும் அதை மிக அதிகமாகப் பயன்படுத்தியது அமெரிக்கக் கப்பல்கள். அதற்கு அடுத்ததாக சீனா, சிலி, கொலம்பியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் பனாமா கால்வாயைப் பயன்படுத்திக் கொண்டன.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-4/article8713703.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 5

 

 
 
பனாமா கால்வாயைக் கடந்து செல்லும் கப்பல்.
பனாமா கால்வாயைக் கடந்து செல்லும் கப்பல்.

பனாமா கால்வாய் கட்டும் உரிமையை பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து அமெரிக்கா பெற்றது. இதைத் தொடர்ந்து ....

பனாமா ஒரு தனி நாடாக உருவாகவே ஒருவிதத்தில் பனாமா கால்வாய்தான் காரணம் என்பது சரித்திரத்தின் மறக்க முடியாத ஒரு பக்கம்.

பனாமா கால்வாயின் தொடக்ககால உருவாக்கத்தில் இன்னமும் கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் உண்டு.

பனாமா கால்வாய் குறித்து தொடக்கத்தில் அமெரிக்காவும், கொலம்பியாவும் கூடிப் பேசின. (அப்போது கொலம்பியாவின் ஒரு பகுதியாகத்தான் பனாமா இருந்தது). கால்வாயின் முழு உரிமையையுமே தாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறிய அமெரிக்கா, அதற்கு ஈடாக ஒரு கோடி டாலர் தருவதாகவும் பிறகு ஆண்டு தோறும் வாடகையாக இரண்டரை லட்சம் டாலர் தருவதாகவும் கூறியது. இந்தத் தொகை மிகக் குறைவானது என்று கருதிய கொலம்பியா இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால் பனாமாவிலுள்ள பல வணிகர்கள் இந்த வாய்ப்பை நழுவ விட்டால் சுருக்க மார்க்கக் கடல் வணிகம் என்பது கைக்கு எட்டாமலே போய்விடும் என்று பயந்தனர். தவிர தனக்கு இதில் கொழுத்த பணம் கிடைக்கும் என்பதால் நாம் முன்பு குறிப்பிட்ட பிரெஞ்சு நிறுவனமும் அவர்களைத் தூண்டி விட்டது.

இதன் விளைவாக 3.11.1903 அன்று பனாமாவில் பெரும்பான்மை மக்கள் கொலம்பியா அரசுக்கெதிராக பெரும் புரட்சியில் ஈடுபட்டதோடு பனாமாவை அன்று முதல் சுதந்திர நாடாகவும் அறிவித்தனர்.

கொலம்பியாவின் எதிர்ப்பை அவர்களால் அமெரிக்காவின் ஆதரவுடன் சமாளிக்க முடிந்தது.

கொலம்பியாவுக்கு எதிராக கொடி பிடித்தவர்களுக்காக பலவிதச் செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டது.. பனாமா ரயில்வே பாதையில் தனது ரயில் வண்டிகளை ஆங்காங்கே நிறுத்தி கொலம்பிய ராணுவத்தினரின் செயல்பாடுகளைத் தடுத்தது. தவிர தனது போர்க்கப்பலான நாஷ்விலே என்பதையும் அனுப்பி கொலம்பிய ராணுவத்தைத் தோற்கடித்தது.

இப்போது தனிநாடாக பனாமாவை அங்கீகரித்த அமெரிக்கா அதனுடன் மேலே குறிப்பிட்டபடியே ஒப்பந்தத்தில் ஈடுபட்டது.

1936-ல் வருட வாடகையை 430 லட்சமாக உயர்த்தியதைக் தவிர (இதற்குக் காரணம் அப்போது டாலரின் மதிப்பு குறைந்து வந்ததுதான்) வேறு எந்த மாறுதலும் செய்யாமல் பனாமா கால்வாயைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் யு.எஸ். வைத்திருந்தது.

பனாமா கால்வாயை ஒரு கப்பல் கடக்க எட்டிலிருந்து பத்து மணி நேரம் ஆகும். சில இடங்களில் கடல் மட்டத்தைவிட 85 அடி மேலேகூட இது அமைக்கப்பட்டிருக்கிறது. கப்பலின் கேப்டன்கள் தாங்களாகவே இந்தக் கால்வாயைக் கடக்க முடியாது. இதற்கென்றே தனிப் பயிற்சி பெற்ற ஒருவரைத்தான் பனாமா கால்வாய் நிர்வாகம் அனுமதிக்கும்.

பனாமா கால்வாய் திறக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அமெரிக்காவுக்கும், பனாமாவுக்குமிடையே முட்டல், மோதல்கள் தொடங்கின. பனாமா கால்வாயில் தங்களது கொடியைப் பறக்கவிட்டது அமெரிக்கா. கூடவே எங்கள் கொடியையும் பறக்க விடுவோம் என்று பனாமா கூறியதை அமெரிக்கா ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து அமெரிக்காவுடனான தனது தூதரகத் தொடர்பை தற்காலிகமாக வெட்டிக் கொண்டது பனாமா.

காலப்போக்கில், 1977-ல் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரும், பனாமா கால்வாயின் தலைவர் ஜெனரல் ஒமரும் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இதன்படி 1999-ல் பனாமா கால்வாயின் கட்டுப்பாடு முழுவதுமாக பனாமாவிடமே ஒப்படைக்கப்படும். ஆனால் தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்க ராணுவம் எப்போது வேண்டுமானாலும் பனாமா கால்வாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல அமெரிக்கத் தலைவர்களுக்கு இது பிடிக்கவில்லை. எதற்காக சிறிய நாடான பனாமாவுக்கு இவ்வளவு பெரிய சலுகையைக் கொடுக்க வேண்டும்?

ஆக மிகக்குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில்தான் அமெரிக்கப் நாடாளுமன்றம் இதை ஏற்றது. ஒப்பந்தம் கையெழுத்தானது.

(பின்னாளில் ஒரு மிகப்பெரும் சொத்தைஅமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் தொலைத்துவிட்டார் என்று குற்றம் சுமத்தினார் பிறகு அதிபரான ரொனால்டு ரீகன். அவர் சொத்து என்று குறிப்பிட்டது பனாமா கால்வாய் மீது கொண்ட உரிமைதான். ‘நாம் அந்தக் கால்வாயைக் கட்டினோம். நாம் அதற்காகச் செலவழித்தோம். எனவே அதை நாம்தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்).

டிசம்பர் 1999-ல் அமெரிக்காவிடமிருந்து பனாமாவுக்கு பனாமா கால்வாயின் அதிகாரம் மாற்றப்பட்டது.

2007-ல் மாபெரும் கப்பல்களையும் சிக்கலில்லாமல் பயணம் செய்யும் நோக்கத்தில் பனாமா கால்வாயின் அளவு அதிகரிக்கப்பட்டது. சில இடங்களில் மூன்று மடங்குகூட இந்த அதிகரிப்பு இருந்தது.

அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் வருட வாடகை இனி நின்றுவிடுமே என்று பனாமா கவலைப்படத் தேவையில்லை. 8.16 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் கால்வாயில் தினமும் 14000 கப்பல்கள் செல்வதால் ஆண்டுதோறும் எக்கச்சக்கமான டாலர்கள் வருமானம் இப்போதே வந்து கொண்டிருக்கிறதாம்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-5/article8717815.ece

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 6

 

 
பனாமா கால்வாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பனாமா முன்னாள் அதிபர் ஒமர் டொரிஜோஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர்.
பனாமா கால்வாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பனாமா முன்னாள் அதிபர் ஒமர் டொரிஜோஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர்.

பனாமா கால்வாய் தொடர்பாக அமெரிக்காவுக்கும் பனாமாவுக்கு மிடையே நிகழ்ந்த மோதல்களைக் கண்டோம். இப்போது பனாமாவை ஆட்சி செய்தவர்களில் சிலர் குறித்துப் பார்க்கலாம்.

பனாமாவின் சரித்திரத்தில் குறிக்கப்பட வேண்டிய ஒரு ராணுவத் தளபதி ஒமர் டொரிஜோஸ். 1929 பிப்ரவரி 13 அன்று பனாமாவிலுள்ள சாண்டியாகோ பகுதியில் பிறந்தவர். இவர் பனாமாவின் ராணுவத்தில் சேர்ந்து விரைவிலேயே அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1968-ல் பனாமாவை ஆட்சி செய்த அதிபர் அர்னுல்ஃபோ ஏரியஸ் என்பவரை ஆட்சியிலிருந்து கீழிறக்கிவிட்டு தான் ஆட்சியைக் கைப்பற்றினார் ஒமர் டொரிஜோஸ்.

1978 வரை தொடர்ந்த இவரது ஆட்சி ஒரு சர்வாதிகாரமாகவே இருந்தது. எனினும் 1977-ல் இவர் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது. அது பனாமா கால்வாயை மீண்டும் எப்போது, எப்படி பனாமாவிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பான ஒப்பந்தம்.

ராணுவ அதிகாரியாக இருந்து பலவந்தமாக ஆட்சியைக் கலைத்துவிட்டு ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஒமர் டோரிஜோஸ் அதிகாரபூர்வமான அதிபர் இல்லைதான். என்றாலும் அவர் 1968-ல் இருந்து 1981 வரை பனாமாவை ஆட்சி செய்தார்.

சர்வாதிகாரம்தான் என்றாலும் பல சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.

முக்கியமாக பனாமா கால்வாயின் மீது தன் நாட்டுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டினார். அமெரிக்காவும் இது தொடர்பாக இரு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. 1999-ம் ஆண்டுக்குப் பிறகு பனாமா கால்வாய் மீது உரிமை கிடையாது என்பதை எழுத்து வடிவில் அமெரிக்கா எழுதிக் கொடுத்தபோது பனாமாவின் பிரதிநிதி இவர்தான்.

ஒமர் டோரிஜோஸ் வேறொன்றுக்கும் புகழ் பெற்றவர். அவரது பேச்சுகள் புகழ் பெற்றவையாக அமைந்தன. ‘’அமெரிக்கா வுடனான பேச்சு வார்த்தைகளில் நாங்கள் நிற்போம் அல்லது இறப்போம். ஒருக்காலும் மண்டியிடமாட்டோம்’’, “முட்டாள்தனம்தான் மிக அபத்தமானது’’, “நான் கீழே விழுந்தால் தேசியக் கொடியை எடுத்து முத்தமிட்டபடி தொடர்ந்து நடப்பேன்’’. என்றார். பனாமா மக்கள் இதுபோன்ற முழக்கங்களில் புளகாங்கிதப்பட்டார்கள்.

இவர் பனாமா கால்வாய் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து விமர்சனங் களும் எழுந்தன. 1999 வரை அமெரிக்கா வுக்கு பனாமா கால்வாயின் மீது அதிகாரம் கொடுத்தது பற்றி குறைப்பட்டுக் கொண்டவர்கள் உண்டு. சிலர் பனாமா ஒப்பந்தம் ஏதோ அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதுபோல் இருக்கிறது என்றனர்.

இதுபற்றி ஒமர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ‘’மிகப்பெரிய பாதங்களைக் கொண்ட இளவரசி ஒருத்தி செருப்புக் கடைக்காரரிடம் வெளியிலிருந்து சிறியதாகவும் உட்புறத்தில் பெரியதாகவும் இருக்கும் ஷூக்கள் வேண்டும் என்றாளாம். அதுபோலத்தான் பனாமா கால்வாய் உடன்படிக்கையில் எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது’ என்றார்.

தனது 52-வது வயதில் விமான விபத்தொன்றில் அவர் இறந்தார். அவர் விமானம் திடீரென்று காணாமல் போனது! பல மணி நேரங்களுக்குப் பிறகுதான் சிதறிய விமானமும் ஒமர் டோரிஜோஸின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டன.

பனாமா துக்கம் அனுஷ்டித்தது. ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்தத் துக்கம் அதிகமாகவே இருந்தது. சர்வாதிகாரியாக இருந்தும் அவர் மதிக்கப்பட்டிருக்கிறார்.

(பின்னொரு காலகட்டத்தில் - அதாவது 2004-ல் இருந்து 2009 வரை- ஒமர் டோரிஜோஸின் மகன் மார்டின் டோரிஜோஸ் பனாமாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்).

இதில் பனாமாவின் தலைவராக இல்லாத வேறொருவரும் மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவர் ஜார்ஜ் லூசியா. இவர் ஆகஸ்ட் 1982-ல் இருந்து பனாமாவின் துணை அதிபராக இருந்தார். அதற்கு முன்பு அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்தார். 1976-ல் இருந்து 1981 வரை இவர் ஐ.நா.வில் பனாமாவின் நிரந்தரப் பிரதிநிதியாக விளங்கினார்.

பனாமாவில் பிறந்த இவர் பனாமா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த பிறகு, ஹார்வர்டு சட்டக் கல்லூரி, சிகாகோ சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தார். ஒரு கட்டத்தில் பனாமா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் விளங்கினார். பனாமா கால்வாய் உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இவர் சிறப்புத் தூதராகச் செயல்பட்டார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-6/article8720765.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 7

 
கடந்த 1989 டிம்பர் 23-ம் தேதி பனாமா தலைநகர் பனாமா சிட்டியில் கவச வாகனத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள்.
கடந்த 1989 டிம்பர் 23-ம் தேதி பனாமா தலைநகர் பனாமா சிட்டியில் கவச வாகனத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள்.

சர்வாதிகாரியாக விளங்கினாலும் ஒமர் டோரிஜோஸ் பனாமா கால்வாய் பனாமாவிடமே வந்து சேர்வதற்கான ஒப்பந்தத்தை போட்டதால் நன்மதிப்பைப் பெற்றார். சிறந்த பேச்சாளரான அவர் விமான விபத்தில் மறைந்தார். மானுவல் நொரீகாவும் பனாமா வரலாற்றில் ஒதுக்க முடியாதவர். அவர் குறித்து...

மானுவல் நொரீகா இவரும் ஒரு ராணுவத் தளபதிதான். வன்முறை மூலமாக பனாமாவில் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். ராணுவத் தளபதியாக இருந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகார மையத்துக்கு தன்னை மையப்படுத்திக் கொண்டார். 1989-ல் பனாமாவில் அதிபர் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் அந்தத் தேர்தலை ரத்து செய்தார் நொரீகா. தானாகவே ஒரு ஒப்புக்குச் சப்பாணி அரசை உருவாக்கி பின்னாலிருந்து அதை பொம்மலாட்டம்போல ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இவர் நேரடியாகவே ஆட்சியைப் பிடிக்க முயன்றபோது அமெரிக்கா பனாமாவைக் கைப்பற்றியது. ஜனவரி 1990-ல் நொரீகா சரணடைந்தார். இவரது பின்னணி சுவாரசியமானவை.

1950-களில் அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். பெருவில் ராணுவ அகாடமியில் மாணவராக இருந்து கொண்டே அமெரிக்க உளவுத் துறைக்குத் தகவல் அளித்துக் கொண்டிருந்தாராம்.

பிறகு ராணுவத் தளபதி ஒமர் டோரிஜோஸுக்கு அணுக்கம் ஆனார். விமான விபத்தொன்றில் ஒமர் டோரிஜோஸ் இறந்த பிறகு, நொரீகா பனாமாவின் அதிகாரத்தை மறைமுகமாகக் கைப்பற்றினார்.

அப்போது இது அமெரிக்காவுக்கு கசப்பாக இல்லை. ஏனென்றால் வேண்டிய தகவல்கள் அவர் மூலம் அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் அவர் மீது அமெரிக்க அரசுக்கு சந்தேகங்கள் எழத் தொடங்கின. பிற உளவு நிறுவனங்களுக்கும் இவர் தகவல் கொடுக்கிறாரோ? போதை தடுப்பு அமைப்புகளுடன் மிகவும் ஸ்நேகமாக இருக்கிறாரோ?

நொரீகாவின் அரசியல் எதிரியான தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது தலை தனியே துண்டிக்கப்பட்டிருந்தது. நொரீகா தனது கை மீறிச் செல்கிறார் என்று அமெரிக்கா கருதத் தொடங்கியது. நொரீகா சுயமான முடிவுகளை எடுப்பதை அமெரிக்கா ரசிக்கவில்லை.

1988-ல் அமெரிக்க நீதிமன்றம் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக நேரடியாகவே நொரீகாவின் மீது குற்றம் சுமத்தியது. 1989 தேர்தலில் நொரீகா செய்த தில்லுமுல்லுகளும் அலசப்பட்டன.

அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த ஒரு வீரர் பனாமாவில் கொல்லப்பட்டதும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (சீனியர்) பனாமாவின் மீது ஆக்கிரமிப்பு நடத்தினார்.

நொரீகா பனாமாவின் தலைநகரிலிருந்த வாடிகன் தூதரகத்தில் அடைக்கலம் புகுந் தார். அமெரிக்கா திகைத்தது. வித்தியாசமாக ஒரு செயலைச் செய்தது. அந்த தூதரகத்தின் வெளியில் தொடர்ந்து நாராசமான இசையை ஒலிக்கச் செய்தது. நொரீகா வெளிவந்தால் தான் இசை (ஓசை) நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1990 ஜனவரி 3 அன்று நொரீகா சரணடைந் தார். அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 17 வருடங்கள் சிறை தண்டனை. மியாமி சிறையில் அடைக்கப்பட்டார். நடுநடுவே வேறு பல வழக்குகளும் அவர் மீது பாய்ந்தன. பிரான்ஸ் அரசு தங்களிடம் நொரீகாவை ஒப்படைக்க வேண்டும் என்று கூற, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதை ஏற்றது. ஆனால் பாரிசில் அவர் மீது புதிதாக ஒரு வழக்கு போடப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்பாக ஏழு வருடங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. பின்பு பனாமா அரசின் கோரிக்கையை ஏற்று அவர் பனாமாவுக்கு அனுப்பப்பட, அங்கும் அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டார்.

பனாமாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் மிரேயா எலிசா மோஸ்கோசா என்பவர். 1999-ல் இருந்து 2004 வரை இவர் அதிபராக ஆட்சி செய்தார்.

எளிமையான குடும்பத்தில் பிறந்த இவரது வாழ்க்கை சாகசங்கள் நிரம்பியது. மும்முறை பனாமாவின் அதிபராக விளங்கிய அர்னுல்ஃபோ ஏரியஸ் என்பவரின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். பிறகு அர்னுல்ஃபோ ஏரியஸை தீவிரமாகப் பின் தொடர்ந்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் அவர் திருமணம் செய்து கொண்ட காலகட்டம் மகிழ்ச்சிகரமானதில்லை. ராணுவம் அரசைக் கைப்பற்ற, மறைவிடத்துக்கு ஓடினார் ஏரியஸ். அந்தக் காலகட்டத்தில்தான் அவரைத் திருமணம் செய்து கொண்டார் மோஸ்கோசா.

ஏரியஸ் மணவாழ்க்கை வாழ்ந்தது அமெரிக்காவிலுள்ள ஃப்ளோரிடாவின் மியாமி பகுதியில். அங்குதான் மோஸ்கோசோ அவரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது மணமகளுக்கு வயது 23. மணமகனுக்கு வயது 67. இந்தக் காலக்கட்டத்தில் அங்குள்ள ஒரு கல்லூரியில் ‘‘இன்டரியர் டிசைனிங்’’ கல்வியில் கற்றுத் தேர்ந்தார். 1988-ல் கணவர் இறந்த பிறகு அவரது காபி வணிகத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பிறகு அவர் கட்சியையும் தன் வசம் கொண்டு வந்தார்.

1994 பொதுத் தேர்தலில் நூலிழையில் தோற்றார். அதற்கு ஐந்து வருடங்களுக்குப் பின் நூலிழையைவிட சற்று அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் ஆனார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-7/article8727700.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 8

 

 
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுடன் பனாமா முன்னாள் அதிபர் மிரேயா எலிசா மோஸ்கோசா
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுடன் பனாமா முன்னாள் அதிபர் மிரேயா எலிசா மோஸ்கோசா

அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்த பனாமா நாட்டின் ராணுவத் தளபதி மானுவல் நொரீகா பின்னர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டதையும் பனாமாவின் முதல் பெண் அதிபரான மிரேயா எலிசா மோஸ்கோசா குறித்தும் பார்த்தோம். அவரது செயல்பாடுகள் இக்கட்டுரையில் தொடர்கின்றன.

மோஸ்கோசா அதிபர் ஆனவுடன் வேறு ஒரு விந்தையும் நிகழ்ந்தது. ஒரு நாட்டின் அதிபரின் மனைவியை ஃபர்ஸ்ட் லேடி என்று அழைப்பதுண்டு. ஆனால் முதல் முறையாக ஒரு பெண்மணி (மேஸ்கோசா) அதிபராகிவிட்டதால் யாரை அப்படி அழைப்பது. மோஸ்கோசாவின் அக்கா ரூபி என்பவர் இந்த அலங்காரப் பதவியை அலங்கரித்தார்!

டோரிஜாஸ் ஆட்சிக் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தப்பட்டி அமெரிக்காவின் பிடியிலிருந்து பனாமாவின் வசம் பனாமா கால்வாய் வந்து சேர்ந்தபோது மோஸ்கோசாதான் பனாமாவின் அதிபராக இருந்தார். அதே சமயம் அவர் ஆட்சியில் ஊழல்கள் தலைவிரித்து ஆடின. அவரது புகழ் பாதிக்கப்பட்டது.

மோஸ்கோசா பிரபல பிசினஸ் புள்ளியான ரிச்சர்ட் க்ரூபர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஒரு மகனையும் தத்து எடுத்தார்கள். ஆனால் சீக்கிரமே தம்பதிகளுக்கிடையே விவாகரத்தும் நடைபெற்றது.

மோஸ்கோசா பனாமா நாட்டின் அதிபரானபோது சட்டசபைக்கு மிக அதிக அதிகாரங்கள் இருந்தன. தனக்குத் தோன்றியபடியெல்லாம் மோஸ்கோசாவால் நிதியை செலவழிக்க முடியவில்லை.

அமெரிக்க ராணுவம் பனாமாவின் கடற்கரைப் பகுதிகளை பல விதங்களில் சீரழித்திருந்தது. தனது அணுகுண்டுகள், ரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை சோதித்துப் பார்க்கும் களமாக அந்தக் கடற்கரைகளைப் பயன்படுத்திக் கொண்டது. இதனால் மாசு படிந்து பலவித சுற்றுச் சூழல் பிரச்சினைகளை பனாமா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. யுரேனியம், ஈயம் என்று பல விபரீத உலோக மிச்சங்களை நீக்குவதற்குப் பெரும் செலவானது.

சர்வதேசக் குற்றங்களை நிகழ்த்த (முக்கியமாக வரி ஏய்ப்பு) பனாமாவைக் களனாகக் கொண்டிருந்தார்கள் பல வணிகர்கள். இதைக் குறைக்க முயற்சி எடுத்துக் கொண்டார் மோஸ்கோசா.

தவிர பல அரசியல் சூழல்களில் மோஸ்கோசா சிக்கிக் கொள்ள நேர்ந்தது. பெரு நாட்டில் உளவாளியாகச் செயல்பட்ட விளாடி மிரோ என்பவருக்குப் பனாமாவில் தஞ்சம் அளிக்க வேண்டியிருந்தது. அமெரிக்க அரசின் அழுத்தம்தான் காரணம்.

அதே சமயம் அவர் அரசியலில் ஊழல் அதிகமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1,46,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வெகுமதிகளை அவர் வழங்கியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. மக்கள் மீதான வரி விகிதம் அதிகமாகிக் கொண்டிருக்கும்போது எதற்காக இந்த வெகுமதிகள் என்று கேள்வி கேட்கப்பட்டன.

அடுத்த அதிபர் தேர்தலில் மோஸ்கோசா போட்டியிட முடியாத நிலை. காரணம் பனாமா அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் அடுத்தடுத்து இருமுறை அதிபராக இருக்க முடியாது.

இந்த நிலையில் தன் ஆட்சியின் கடைசி கட்டத்தில், கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒரு செயலைச் செய்துவிட்டு நகர்ந்தார் மோஸ்கோசா. அது என்ன என்பதைப் பார்ப்போம்.

கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ 2000ல் பனாமாவுக்கு விஜயம் செய்தார். அப்போது அவர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் மோஸ்கோசா.

கியூபா சீற்றம் கொண்டது. பனாமாவு டனான தனது தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொண்டது. வெனிசுலா அதிபர் தங்கள் பனாமா நாட்டுத் தூதரை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

மோஸ்கோசா அவசரமாக ஒரு விளக்கம் அளித்தார். “அடுத்து அதிபராக வருபவர் இந்த நால்வரையும் கியூபாவுக்கே அனுப்பி அங்கேயே அவர்களைப் படுகொலை செய்ய வாய்ப்பு உண்டு. அதனால்தான் மன்னிப்பு வழங்கினேன்’’ என்று அவர் கூறியது பிரச்சினைகளை அதிகமாக்கியது. மியாமியிலுள்ள கியூபா நாட்டவர் காஸ்ட்ரோவுக்கு எதிரானவர்கள் அவர்கள் நடுவே காஸ்ட்ரோவுக்குக் குறிவைத்த நால்வரும் ஹீரோக்களாகக் கருதப்பட்டார்கள். அவர்களின் மகிழ்ச்சியை மனதில் கொண்டே இந்தப் பொது மன்னிப்பு என்றார்.

பெண் அதிபரான மோஸ்கோசாவுக்குப் பிறகு 2014ல் மார்டின் டோரி ஜோஸ் அதிபர் ஆனார். இவர் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஒமர் டோரிஜோஸின் மகன். அந்த ஆண்டு பனாமா கால்வாய் மூலம் வருமானம் எக்கச்சக்கமாக இருந்தது. ஒரு பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது.

2007-ல் பனாமா கால்வாயை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கின. அதற்கு அடுத்த வருடமே பனாமா கால்வாய் ஊழியர்கள் (தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர்) தொழிலாளர்கள் மேம்பாடு குறித்து அரசை எதிர்த்தனர். காவல்துறை கட்டுமானப் பணியாளர்கள் மீது தடியடி நடத்தியது. நிலைமை மீறவே துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இதில் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் இறந்துவிட, நிலைமை மோசமானது. பிறகு ஒருவழியாக அமைதி திரும்பியது.

2008 டிசம்பரில் பனாமா கால்வாய் வழியாக ஒரு ரஷ்ய போர் கப்பல் பயணம் செய்தது. இதுவே ஒரு சரித்திர நிகழ்வு தான். காரணம் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதிலிருந்தே சோவியத் யூனியனின் கப்பல்களுக்கு பனாமா கால்வா யில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. (அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது). 2010 அக்டோபரில் சீன சரக்குக் கப்பல் ஒன்று பனாமா கால்வாயைக் கடந்தபோது அதுவும் வரலாற்றுப் பதிவானது. அந்தக் கால்வாயைக் கடந்த மில்லியனாவது கப்பல் அது.

(உலகம் உருளும்)

 

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-8/article8731573.ece

  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் பருகுகின்றோம்....!! tw_blush:

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 9

 

 
பனாமா சிட்டியின் இன்றைய தோற்றம்.
பனாமா சிட்டியின் இன்றைய தோற்றம்.

பெண் ஜனாதிபதி மோஸ்கோசாவின் ஆட்சி கடுமையான விமர்சனங் களுக்குள்ளாகியது. கியூபாவின் சீற்றத்தையும் சந்தித்தது. தற்போதைய பனாமா எப்படி? பார்ப்போம்.

மத்திய அமெரிக்காவில் உள்ள நகரங்களில் பலவித பண்பாடுகளும், கலாச்சாரங்களும் கொண்ட மனிதர்கள் வாழும் நகரமாக இருக்கிறது பனாமாவின் தலைநகரான பனாமா சிட்டி. வணிகத்திலும் தலைசிறந்து விளங்குகிறது.

போக்குவரத்து நெரிசல்? உண்டு. அப்படி ஒன்றும் நேர்மையாளர்கள் என்று சொல்லிவிட முடியாத டாக்ஸி ஓட்டுநர்கள் உண்டு. சூதாட்டக் கிடங்குகள் உண்டு. எனினும் சர்வதேச வங்கிக் கணக்குகளும், வணிகங்களும் பனாமாவில் முதுகெலும்பாக நிற்கின்றன. அருகிலுள்ள கடற்கரைகள், சுற்றுலாப் பயணிகளின் மனங்களைக் கொள்ளை கொள்கின்றன.

‘பையே நியூசியோ’ என்ற அருங்காட்சி யகம் பலர் மனதைக் கொள்ளை கொள் கிறது. பலவித தாவரங்களையும், நந்தவனங் களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது இது. இதை அற்புதமாக வடிவமைத்தவர் பிராங்க் கெரி என்பவர். உலகப் புகழ் பெற்ற இந்தக் கட்டிடக் கலைஞர்தான் ஸ்பெயினில் உள்ள பிரபல குகேஹேயின் அருங்காட்சியகத்தை உருவாக்கியவர்.

பசிபிக்கை ஒட்டிய முதல் ஐரோப்பியக் குடியேற்றம் பனாமாதான். சுமார் 150 ஆண்டுகளுக்கு ஸ்பெயினின் பிடியில் இருந்தபோது பெரு பகுதியில் காணப்பட்ட தங்கமும், வெள்ளியும் பனாமா மூலம்தான் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

1671-ல் கேப்டன் ஹென்றி மார்கன் என்பவர் பனாமா சிட்டி நகரத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தினார். இதன் காரண மாக தலைநகரின் பல செயல்பாடுகள் இன்று காஸ்கோ வியஜோ என அழைக்கப்படும் பகுதிக்கு இடம் மாறின. அதன் ஒரு பகுதிதான் பனாமா வியஜோ. இங்குள்ள சிதைந்த கட்டிடங்கள் சரித்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

இதில் உள்ள மிகப்பெரும் வளாகம் ஒன்று அரசாங்க கஜானா, வரி வசூல் அலுவலகம், சிறை, ஆளுநரின் வீடு அகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் பிறகு வந்த அரசுகள் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணரத் தவறின. ஒரு கட்டத்தில் இந்தக் கட்டிடங்களை குதிரை லாயமாகக்கூடப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

விதவிதமான பறவைக் கூட்டங்களை பனாமாவில் காண முடியும். யு.எஸ்., கனடா இரண்டு நாடுகளில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையைவிட அதிகப் பறவைகள் பனாமாவில் உண்டாம்!

பனாமா கால்வாயின் கீர்த்தி பெரியதுதான் என்றாலும் பனாமா ரயில் பாதைக்கும் சில தனிச்சிறப்புகள் உண்டு. மிகமிக அதிக செலவில் கட்டப்பட்ட ரயில் பாதை பனாமாவில் உள்ளதுதான். இதை உருவாக்க ஐந்து வருடங்கள் தேவைப்பட்டன. இதற்காக அந்தக் காலத்திலேயே 80 லட்சம் டாலர்கள் செலவிடப்பட்டன. இந்தக் கட்டுமானத்தின்போது 12,000 பேர் இறந்தனர். ஒரு காலகட்டத்தில் நியூயார்க் பங்குச் சந்தையில் மிக உச்சமான மதிப்பு பனாமா ரயில் நிறுவனத்தின் பங்குகளுக்குத்தான் இருந்தது.

‘பனாமா பேப்பர்ஸ்’ - சமீபத்தில் உலகையே அதிர வைத்த வார்த்தைகள் இவை.

உலகின் பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்று ‘மொஸா பொன்செகா’. இது பனாமா தேசத்தைச் சேர்ந்த நிறுவனம். 1986-ல் தொடங்கப்பட்டது. உலகெங்கும் இதற்கு 40-க்கும் அதிகமான அலுவலகங்கள் உண்டு. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளன. அப்படி என்னதான் செய்தது இந்த நிறுவனம்?

தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுவிஸ் வங்கிகள் வெளியிட முன் வந்ததில் பல பெரும் பணக்காரர்கள் ஆடிப் போய்விட்டனர். பஹாமாஸ், செஷல்ஸ், பனாமா போன்ற நாடுகளை நோக்கிப் படை எடுத்தனர் (அதாவது தங்கள் பெருந் தொகையை முதலீடு செய்தனர்). இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அங்கு வருமான வரி கிடையாது. இரண்டு கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும்.

பனாமாவில் ‘பேரர் பங்குகள்’ (Bearer shares) கூட உண்டு. அதாவது இந்தப் பங்குகளுக்கான ஆவணங்களில் உரிமையாளர்களின் பெயரே எந்த இடத்திலும் குறிக்கப்பட்டிருக்காது. புனைப் பெயர்களிலும் பங்குகள் வாங்கத் தடை கிடையாது, செய்திகளில் அடிபடும் மொஸா பொன்செகாவை எடுத்துக் கொண்டால் அதன் உயர் அதிகாரிகளேகூட தங்களைப் பங்குதாரர்களாக (வாடிக்கையாளர்களுக்கு பதிலாக) ஆக்கிக் கொள்ள சம்மதிக்கிறார்கள். இதன் மூலம் தொகையை செலுத்துபவரின் பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

பல கொழுத்த பணக்காரர்களும், உச்சத்தில் உள்ள அரசியல்வாதிகளும் இதன் வாடிக்கையாளர்கள்.

ஏப்ரல் 2016-ல் இந்த வாடிக்கையாளர்கள் தொடர்பான சில நிதிப் பரிமாற்ற விவரங்கள் வெளியாயின. சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புதான் இவற்றை வெளியிட்டது. இது வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு.

பொன்செகா நிறுவனத்தில் சேமிக்கப்பட்ட தகவல்கள் அவை. அந்த விவரங்களும் இதில் இணைத்துப் பேசப்படும் பெயர்களும் அதிர்ச்சிகரமானவை. தங்கள் நாடுகளில் வரி ஏய்ப்புகளை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவை விளங்கின. சுமார் 150 அரசியல்வாதிகளின் தலைகள் இதில் உருண்டன. அவர்களில் ஒரு டஜன் பேர் பல்வேறு தேசங்களின் தலைவர்கள். இரண்டு பில்லியன் டாலர்களை இப்படி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-9/article8736363.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 10

 
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தால் பதவியை ராஜினாமா செய்த ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டூர் டேவிட்| படம்: ஏ.பி.
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தால் பதவியை ராஜினாமா செய்த ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டூர் டேவிட்| படம்: ஏ.பி.

பனாமா பேப்பர்ஸ் தகவல்கள் உண்டாககிய அதிர்வுகளின் பின்னணியைப் பார்த்தோம். அது தொடர்பான மேலும் பல அதிர்ச்சிகளும் உண்டு.

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் வெளியான சில பெயர்கள் பலரும் அறிந்தவை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இவர்களில் ஒருவர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இராக்கின் முன்னாள் துணை அதிபர் ஐயத் அல்லாவி, எகிப்தின் முன்னாள் அதிபரின் மகன் அலாம் முபாரக் என்று தொடங்கி உக்ரைன் அதிபர், ஐஸ்லாந்து பிரதமர் என்று பட்டியல் நீள்கிறது. லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி, கால்பந்து வீரர் மெஸ்ஸி ஆகிய பிரபலங்களும்கூட பனாமா பேப்பர்ஸ் தகவல்களில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஆண்டுக்கு இவ்வளவு தொகை என்று ஊதியம் பெற்றுக் கொண்டு தன் வாடிக்கையாளர்களின் சொத்துகளையும் நிதிகளையும் நிர்வகிக்கிறது பனாமாவில் உள்ள ஃபொன்செகா நிறுவனம். சுவிட்சர்லாந்து, சைப்ரஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் என்று பல இடங்களிலும் இது இயங்குகிறது.

பல பெயர்கள் வெளியாகியுள்ளன என்பதோடு தங்களுக்கு நெருங்கிய பினாமிகளின் பெயர்களிலும் இவர்களில் சிலர் செயல்படுகிறார்கள். சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்களாம். (இந்த சட்ட நிறுவனத்துக்கு மொத்தம் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கை யாளர்கள் உண்டு.) வாடிக்கையாளர் களிடமிருந்து கிடைக்கும் தொகையை உலகின் எந்தெந்த நாடுகளிலெல்லாம் எப்படி போட்டு வைத்தால் வரிகளிலிருந்து தப்பிக்கலாம் என்று ஆலோசனை அளிப் பதும் இந்த நிறுவனத்தின் முக்கிய வேலை.

2010-ல் விக்கி லீக்ஸ் வெளிப்படுத்திய தகவல்கள் அமெரிக்க அரசைக் கொந் தளிக்க வைத்தது. அமெரிக்க அரசு, அதன் ராணுவம், ஆயுதபேரங்கள் போன்ற பல ரகசியத் தகவல்கள் அப்போது வெளியாகி ஆட்சியில் இருப்பவர்களின் பிம்பங்கள் உடைந்தன. “இவ்வளவு ரகசியத் தகவல்கள் வெளியாகி இருக்கிறதே’’ என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்போது பனாமா பேப்பர்ஸ் அதைவிட அதிகமான தகவல்களை வெளிப்படுத்தி உள்ளன.

இந்த இடத்தில் சில கேள்விகள் எழலாம். வெளிநாடுகளில் முதலீடு செய்வதுதப்பா என்ன? முக்கியமாக வணிகர்களிடையே இது சகஜம்தானே! உள்நாட்டு கிரிமினல் களிடமிருந்து தங்கள் சேமிப்பை பாது காக்கும் விதத்தில்கூட இப்படிச் செய்ய லாமே. எங்கே வரி இல்லையோ அல்லது மிகக் குறைவோ அந்த நாடுகளில் முதலீடு செய்வதில் என்ன தவறு?

ஆனால் நடைமுறையில் பார்த்தால் இப்படிப்பட்ட நியாயமான காரணங்களுக் காக முதலீடு செய்வதைவிட, ஊழலில் பெற்ற பணத்தையும் கணக்கு காட்ட முடியாத பிற வகைகளில் பெற்ற தொகை யையும்தான் இப்படி முதலீடு செய்கிறார் கள். அதாவது சொந்த நாட்டின் வருமான வரி அதிகாரிகளுக்குத் தெரியாமல் வெளிநாட்டுக்குச் செல்கிறது இந்தப் பணம். அதற்கு ஒருவிதத்தில் இடைத்தரகர்போல ஃபொன்செகா போன்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன. “எங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை நாங்கள் வெளியிட மாட்டோம். இது நியாயமான நிலைப்பாடுதான்’’ என்கிறது இந்த நிறுவனம். பின் எப்படி இவ்வளவு விவரங்கள் கசிந்தன? ஏதோ உள்குத்து வேலை நடந்துள்ளது. 1970-ல் இருந்து 2015 வரை உள்ள சில முக்கிய ஆவணங்கள்தான் கசிந்துள்ளன.

அரசியல் பிரபலங்கள், திரைப்படப் புள்ளிகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் தங்கள் கணக்கில் வராத சொத்து களை பனாமாவில் பதுக்கி வைத்ததும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததும் தகவல் களாக வெளியேறின.

இந்தியர்களின் பெயர்களும் நிறைய உள்ளன. சுமார் 500 பேர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் தலைவர் குஷன் பால்சிங், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, டெல்லியைச் சேர்ந்த லோக் சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கேஜ்ரிவால் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.

இப்போது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் சிலரது பெயர்களும் அடிபடுவதால் பரபரப்பு கூடியிருக்கிறது. ஐஸ்லாந்துப் பிரதமர் சிக்மண்ட் டேவிட் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உண்டானது.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தன் பங்கிற்கு விளக்கமளித்தார். அவரது தந்தைக்கு சட்ட விரோதமான வெளிநாட்டுப் பண முதலீடு இருந்ததாம். பஹாமாஸ் நாட்டின் ஒரு நிதி நிறுவனத்தில் அவர்கள் குடும்பம் 5000 பங்குகள் வாங்கி வைத்திருந்ததாம். “ஆனால் பிரதமராகப் பதவியேற்கும் முன்பே எனது பங்குகளை விற்றுவிட்டேன்’’ என்கிறார் கேமரூன்.

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு நிபுணர் குழு ஒன்றை இந்திய நிதி அமைச்சர் அமைத்தார். இதில் நிதிப் புலனாய்வுப் பிரிவு, ரிசர்வ் வங்கி, வரி ஆராய்ச்சிப் பிரிவு போன்ற அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மேல் விவரங்களும், விளைவுகளும் இனிதான் வெளியாக வேண்டும்.

பனாமா பேப்பர்ஸில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் பின்னரும் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் செய்துள்ள வரி ஏய்ப்புகள் வெளியாகியுள்ளன.

ஆக பனாமா என்ற நாட்டின் பெயர் உலகின் அத்தனை நாடுகளிலும் இந்த விதத்தில் எதிரொலிக்கிறது. பனாமா அரசு பதைபதைப்புடன் “சட்டத்திற்குப் புறம்பான வழியில் எந்த நாட்டில் செயல்படவும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்த விஷயத்தில் பிற நாடுகளுடன் ஒத்துழைப்போம்’’ என்று கூறியிருக்கிறது.

(அடுத்து இந்தியரைத் தலைவராகக் கொண்டிருந்த நாடு)

http://tamil.thehindu.com/world/பதற்றத்தில்-ஆழ்த்திய-பனாமா-10/article8740981.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.